Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரை விமர்சனம்: பாபநாசம்

Featured Replies

papanasam_2462823f.jpg
 

பக்தர்கள் பாவத்தைத் தலைமுழுகத் தாமிரபரணியைத் தேடிவரும் ஊர் பாபநாசம். அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார் சுயம்புலிங்கம் (கமல்). கேபிள் டி.வி தொழில் செய்கிறார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நடைமுறை அறிவு மிக்கவர்.

சினிமாவின் மீதான அவரது அதீத மான காதல் அவருக்குப் பல விஷ யங்களைச் சொல்லிக்கொடுத்திருக் கிறது. மனைவி ராணி (கவுதமி), மகள்கள் செல்வி (நிவேதா தாமஸ்), மீனா (எஸ்தர் அனில்) ஆகியோர்தான் அவரது உலகம். நிலையான தொழில், திகட்டத் திகட்ட அன்பு என்று அமைதி யாக நகரும் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பயந்து நடுங் கியபடி அழுதுகொண்டிருக்கும் மனைவி, குழந்தைகளைப் பார்த்து அதிர்ந்து போகிறார். நடந்த விபரீதத்தை போலீஸிடம் தெரிவித்தால் தனது குடும்பம் நாசமாகப் போய்விடும் என்று அஞ்சும் அவர், அதில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறார். நடந்த சம்பவம் என்ன? அதிலிருந்து மனைவி, பிள்ளை களைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி என்ன? போலீஸால் அவர்களை நெருங்க முடிந்ததா?

மிக எளிய கதைக் கரு கொண்ட ஒரு திரைப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றிவிடும் ஜாலத்தைச் செய்துவிடுகிறது கச்சிதமான திரைக்கதை. தொடக்கத்தில் சுயம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தின் அறிமுகம், காவல் நிலையம், தேநீர்க் கடை எனப் படம் மெதுவாக நகர, பார்வையாளர்கள் முணு முணுக்கிறார்கள். வீட்டில் நடக்கும் அந்த விபரீதத்துக்குப் பிறகு கதை வேகமெடுக்கிறது. அதன் பிறகு எந்த இடத்திலும் சிறு தொய்வுகூட இல்லை.

திரைக்கதையை அழுத்தமாகத் தாங் கிப் பிடிப்பது, நிறைய திரைப்படங்களைப் பார்த்து நடைமுறை அறிவை வளர்த் துக்கொண்டிருக்கும் சுயம்புலிங்கத்தின் குணாதிசயம். வாழ்க்கையில் எதிர்கொள் ளும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாம் பார்த்த/பார்க்கும் சினிமாக் காட்சி களிலிருந்து முன்னுதாரணமாகப் பெற முயல்வது சாத்தியமற்றது. ஆனால் தான் பார்த்த திரைப்படங்களிலிருந்து சுயம்பு லிங்கம் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்வது நம்பகத்தன்மையோடு வெளிப் படுகிறது. காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவ சுயம்பு எடுக்கும் முயற்சி கள் வியக்கவைக்கின்றன. முதலில் ஏமாறும் காவல்துறை பிறகு உஷாராகி அவரது திட்டத்தை ஊடுருவி உண்மையை அறி வதும் அதே அளவு நம்பகத்தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் பதைபதைக்க வைக்கிறது. ஆசுவாசமும் அச்சமும் மாறிமாறி வந்து பார்வையாளர்களைக் கட்டிப்போடுகின்றன. அந்தக் குடும்பம் தப்பிக்க வேண்டுமே என்னும் தவிப்பை ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஏற் படுத்துவதே இயக்குநரின் வெற்றி. கிளை மாக்ஸ் திருப்பம் சபாஷ்போட வைக்கிறது. சுயம்புலிங்கமும் கொல்லப்பட்ட இளைஞ ரின் பெற்றோரும் கடைசியில் சந்திக்கும் இடம் நெகிழ வைக்கிறது.

சுயம்புலிங்கம், தன் மகனைக் காணாத நிலையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தாவது அவனுக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு சராசரித் தாயின் தவிப்புடன் கலங்கி நிற்கும் பெண் காவல் அதிகாரி கீதா, தனிப்பட்ட காரணத்துக்காக சுயம்பு லிங்கத்துடன் மோதும் காவலர் பெருமாள் ஆகிய மூன்று கதாபாத்திரங்களும் திரைக்கதையின் முக்கியத் தூண்கள். இந்தக் கதாபாத்திரங்களை அவரவர் நிலையில் வலுவாக வார்த்த இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் படைப்பாளுமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கமல் எனும் நட்சத்திரம் சுயம்புலிங்கம் எனும் சாமானிய மனிதனாகப் பார்வையாள ருக்குத் தெரியக் காரணம், அவரது பாத்திரப் படைப்பு.

புத்திசாலி சாமானியனாக, அலட்டல் இல்லாத அதே நேரம் தனது முத்திரை களைத் தவறவிடாத நடிப்பை வழங்கி யிருக்கிறார் கமல்.

கவுதமியின் நடிப்பையும் குறைசொல்ல முடியாது. போலீஸ் ஐ.ஜி. கீதா பிரபாகராக நடித்திருக்கும் ஆஷா சரத்தின் நடிப்பு இரு வேறுபட்ட உணர்ச்சி நிலைகளில் நின்று ஜாலங்கள் செய்கிறது. நான்கு பேர் முன்னிலையில் புத்திசாலித்தனமும் கண்டிப்பும் மிக்க காவல் அதிகாரியாக கம்பீரம் காட்டுவதிலும், தனி அறையில் ஒரு தாயாக, “நம்ம பையனுக்கு என்ன ஆச்சுங்க?” என்று கணவன் தோளில் சரிந்து அழுவதிலும் பார்வையாளர்கள் மனதைக் கொள்ளைகொள்கிறார். கையேந்துவதையும் கை நீட்டுவதையுமே தொழிலாக வைத்திருக்கும் போலீஸாக கலாபவன் மணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவர்கிறார்.

சுஜித் வாசுதேவின் இயல்பான ஒளிப் பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்துக்குக் கைகொடுத்திருக்கின்றன. பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

நெல்லை மாவட்ட வாழ்க்கையின் அம்சங்களைத் திரைக்கதையில் இணைக் கப் பங்காற்றியிருக்கும் சுகா, காட்சிக்கு ஏற்ற விதத்தில் அங்கதமும் கூர்மை யும் விவரணைகளும் நிறைந்த வசனங் களை எழுதியிருக்கும் ஜெய மோகன் ஆகியோரும் பாராட்டுக்குரிய வர்கள். படத்தின் நிகழ்வுகளை முன் பின்னாகக் காட்டி த்ரில்லர் உணர்வைக் கூட்டியிருக்கிறது அயூப் கானின் படத் தொகுப்பு. தொடக்கக் காட்சிகளில் சற்றே சலிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைக் குறைத்திருக்கலாம்.

அதிகாரத்துடன் மோத நிர்ப்பந்திக் கப்பட்ட ஒரு சாமானியனின் போராட்டத் தைப் புத்திசாலித்தனமாகவும் விறுவிறுப் பாகவும் காட்டுகிறது ‘பாபநாசம்’. குடும்பப் பின்னணி கொண்ட கதை களில், த்ரில்லர் உணர்வை அதன் முழு வீச்சுடன் கையாண்ட திரைப்படங்கள் குறைவு. மலையாள ‘த்ரிஷ்ய’த்தின் மறுஆக்கமான ‘பாபநாசம்’ அப்படிப்பட்ட ஒரு படம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-பாபநாசம்/article7388816.ece?widget-art=four-all

மிகவும் நல்ல படம் திருஷ்யம் பார்க்காவிடில் .

  • கருத்துக்கள உறவுகள்

பாபநாசம் – பூவுடன் சேர்ந்து மணக்கும் நார் / பி.ஆர் . மகாதேவன்

 

images (14)

 

தமிழ் வாழ்க்கைக்கு அந்நியமான கதை நிகழ்வுகள், கதை மாந்தர்கள், கதாநாயக மோகம், வாழ்க்கை குறித்த தட்டையான பார்வை, போலி மற்றும் மிகை உணர்வுகள், சமூக அக்கறையின்மை, காட்சி மொழியில் பலவீனம் என தமிழ் படங்களின் வழக்கமான குறைகள் எதுவும் இல்லாமல் வந்திருக்கும் படம்… மூலப்படமான மலையாள த்ருஷ்யத்துக்கு 90% உண்மையான படம்… கமல் நடித்திருந்தும் (நடிக்க மட்டுமே செய்திருப்பதால்) ரசிக்கத் தகுந்த முறையில் வந்திருக்கும் படம்.


சட்டப்படி தவறு… தர்மப்படி சரி… இந்த முரண்தான் படம்.
கொலையும் சரியே கொல்லப்படவேண்டியவனைக் கொல்லும் பட்சத்தில்…
ஒரு எளிய நடுத்தர வர்க்க, கிராமத்துக் குடும்பம், தமது அன்பான கூட்டைச் சிதைக்க வந்த ஒருவனைக் கொன்றுவிட்டு, அதற்கான தண்டனையைப் பெறாமல் எப்படித் தப்புகிறது என்பதுதான் கதை.
மலையாளத்தில் முதலில் எடுக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டு தமிழையும் வந்தடைந்திருக்கிறது.
தமிழில் திரைப்படங்கள் எடுக்கப்படத் தொடங்கப்பட்ட காலத்தில் மதராஸ் பெரிய பட்டணம் என்பதால் பெரு வணிகர்களின் செல்வாக்கு இங்கு அதிகம் இருந்தது. அவர்கள் பெரிய ஸ்டூடியோக்களைக் கட்டிவைத்து படம் எடுப்பதை ஒரு புதிய வர்த்தகமாக ஆரம்பித்தனர். பெரிய ஸ்டூடியோக்கள் என்றால் பெரிய செட்டுகள்… ஏராளமான நடிகர்கள் என எல்லாமே பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டன. புராணக்கதைகளுக்கு அந்த பிரமாண்டம் தேவையாக இருந்தது என்றாலும் யதார்த்த சமூகக் கதைகளும் அந்த மிகை, பிரமாண்டத்தைக் கைவிடமுடியாமல் அந்த திசையிலேயே நகர்ந்தன.

இதனால் தமிழ் படங்கள் தமிழ் யதார்த்த வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டுப் போயின. மலையாளத்தில் பெரு வணிகர்கள் இருந்திருக்கவில்லை. அங்கு பிரமாண்ட ஸ்டூடியோக்கள் இருந்திருக்கவில்லை. எனவே, அங்கு படங்கள் யதார்த்தமான களங்களில் எடுக்கப்பட்டதால் கதைகளும் கதை மாந்தர்களுமே யதர்த்தத்துக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தனர். எனவே அதன் அடுத்த தலைமுறைப் படங்களும் அந்த திசையிலேயே நகர்ந்து கேரள மண்ணோடு நெருங்கிய பிணைப்பு கொண்டவையாக இருந்துவருகின்றன.

 

இந்தப் படத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. மலையாளத்தில் அந்தச் சமூக வாழ்க்கைக்கு நெருங்கிய வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழுக்கு வந்தபோதும் தமிழ் வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாள மற்றும் தமிழ் பட இயக்குநரான ஜித்து ஜோசப்பின் முக்கிய சாதனையாகவே இதைச் சொல்லவேண்டும். கேரள மோகன்லாலை வைத்து எடுத்த நல்ல படத்தை அதே தரத்தில் தமிழ் கமலை வைத்தும் எடுத்திருப்பது பெரிய சாதனைதான்.
***
மலையாளத்தில் நாயகனின் குடும்பம் கிறிஸ்தவப் பின்னணி கொண்டது. தமிழில் இந்து நாடார் குடும்பம். மலையாளத்தில் ஹீரோ வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்துகொண்டே நடப்பார். தமிழில் நாயகன் செருப்பை வாசலில் கழட்டி வைத்துவிட்டு நுழைவார். மலையாளத்தில் பொது வழக்கு மொழி… தமிழில் நெல்லை (பிள்ளைமார்) வட்டார மொழி.
மலையாளத்தைவிட தமிழில் காட்சி மொழிரீதியாக சிற்சில மேம்படுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. கல் குவாரியில் முழ்கடிக்கப்பட்ட கார் நீருக்குள் இருந்து எடுக்கப்படும் காட்சி மலையாள மூலத்தில் இல்லை. தமிழில் அது காட்சிபூர்வமாக பவர்ஃபுல்லாக வந்துள்ளது. அதுபோல் படத்தில் மகனைப் பறிகொடுத்த காவல்துறை ஐ.ஜியான பெண் அதிகாரிக்கு நாயகன் சொன்ன பொய்கள் புரிய ஆரம்பிக்கும் காட்சியில் வானுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்ததுபோல் லோ ஆங்கிளில் அவரைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அது பல உண்மைகளைப் பார்வையாளர்களுக்கு அழுத்தமாகக் காட்டிவிடும்.

இதுவும் மலையாளத்தில் மென்மையாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதைவிட முக்கியமாக, காவல்துறையினரின் அடி தாங்க முடியாமல் கடைசி மகள் பிணம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சொல்லிக் காட்டிவிடுவார். ஊரே கூடி நிற்க அந்த இடத்தை தோண்டி எடுப்பார்கள். அந்த பரபரப்பான நிமிடங்களின் இறுதிக் காட்சியில் மோகன்லாலின் நடிப்பு மிகவும் பலவீனமாகவே இருக்கும். கமலோ சஸ்பென்ஸ் உடையும் அந்தக் காட்சியில் காவல் துறையினரை ஆக்ரோஷமாக ஒரு பார்வை பார்ப்பார்.

ஆடு புலி ஆட்டத்தில் ஆடு வென்று புலியை மிரட்டும் இடம். அந்த ஒரு காட்சி மோகன்லாலை கமல் மிஞ்சும் இடமும் கூட. மலையாளத்திலும் அந்தக் காட்சி அப்படித்தான் இடம்பெற்றிருக்க வேண்டும். நிச்சயம் அது கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்க் காட்சிதான். மலையாளப் பட உலகினரின் கதாநாயக எதிர் மனநிலை அந்தக் காட்சியை அப்படி யோசிக்கவிடாமல் செய்துவிட்டிருந்தது. தமிழில் கதாநாயகனை உயர்த்திக் காட்டித்தான் பழக்கம் என்பதால், கமல் செய்த அந்த மாற்றம் த்ருஷத்தைவிட அந்தப் புள்ளியில் பாபநாசத்தை முன்னிலை பெறச் செய்துவிடுகிறது. வெல்டன் கமல் (if it is your improvisation).
மலையாளத்தில் திருஷ்யம் என்ற தலைப்புக்குப் பொருத்தமான காரணம் சொல்லப்படுகிறது. தமிழில் நாயகன் தனது குடும்பம் செய்த பாபத்தை நாசம் செய்ய விரும்புவதாகச் சொல்லி தலைப்புக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழில் சொல்லப்பட்ட காரணத்தைவிட மலையாளத் தலைப்புக்கான காரணமே கூடுதல் இசைவுடன் இருக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் மலையாளத்தில் மோகன்லால், தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும்போது அழவெல்லாம் மாட்டார். ஐ.ஜி.யின் மகன் கொல்லப்பட்டது தொடர்பாக வேதனை இருக்கும். ஆனால், தனது குடும்பத்தைச் சிதைக்க வந்தவனைத் தாங்கள் கொன்றது சரிதான் என்ற உணர்வே பிரதானமாக இருக்கும். தமிழில் கமல் அந்தக் காட்சியில் துக்கம் தாங்காமல் அழுதுவிடுவார். இந்த மாற்றம் ஒருவகையில் புரிந்துகொள்ள முடிந்ததுதான்.

மலையாளிகள் அறிவுபூர்வமாக சிந்திக்கக் கூடியவர்கள். தமிழர்கள் இதயபூர்வமாக சிந்திக்கக்கூடியவர்கள். எனவே, இரண்டு பேரும் அவரவருடைய பார்வையாளர்களை மனதில் கொண்டு அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்கள். ஆனால், ”ஒருவேளை தனது மகள் ஐ.ஜி.யின் மகனால் கொல்லப்பட்டிருந்தால் ஐ.ஜி. தன் மகனைக் காப்பாற்றத்தானே முயற்சிசெய்வார்… ஒவ்வொரு மனிதரையும் அவருக்கான சுய நலம் தானே வழி நடத்துகின்றன… எனவே நமது குழந்தைகளைக் காப்பாற்ற நாம் கொலை செய்ததும் கொலையை மறைத்ததும் தவறே இல்லை’ என்று முந்தைய காட்சியில் நியாயபடுத்தியதைத் தமிழில் வேறுவகையில் கொண்டு சென்றிருக்கவேண்டும்.

ஏனென்றால், மலையாள நாயகனுக்கு தனது செயல் சார்ந்து எந்த குற்ற உணர்வும் கிடையாது. தமிழ் நாயகனோ அடுத்த காட்சியில் உடைந்து அழப்போகிறான். அப்படியானால், இந்தக் காட்சியிலும் அது சார்ந்தே ஏதேனும் சொல்லியிருக்கவேண்டும்.

குழந்தைகளுக்குப் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி வளர்த்திருந்தேன்… நானே பொய் சொல்லச் சொல்லும்படி ஆகிவிட்டதே என்று சொல்லி தமிழ் நாயகன் அழுவான். ஆனால், இந்தப் பொய்க்கும் வேறு ஆதாயம் சார்ந்த பொய்களுக்கும் இடையில் நிறையவே வேறுபாடு உண்டு. அதுமட்டுமல்லாமல் அவன் தன் குழந்தைகளுக்கு அரிச்சந்திரன் போல் முன்னுதாரணமாக நடந்துகொண்டிருக்கிறான் என்று எந்தக் காட்சியிலும் காட்டியிருக்கவில்லை.

வீட்டில் தேவையற்று எரியும் விளக்குகளை அணைப்பவனாக, உடைந்த மூக்குக் கண்ணாடியை கம்பி கட்டிப் பயன்படுத்துபவனாக, அதிகக் கூலி கொடுக்க மனமின்றித் தோட்ட வேலையைத் தானே செய்பவனாக என படு சிக்கனமாக நடந்துகொள்பவனாகவே காட்டியிருப்பர்கள். பொய் சொல்லக்கூடாது என்று குழந்தைகளிடம் எந்த ஒரு காட்சியிலும் சொல்லியிருக்கமாட்டான். எனவே அந்த மிகை லட்சியவாத வசனம் நிரடலாகவே இருக்கிறது.
மலையாளத்தில் ஒரு காட்சியில் காவலருடன் சிறிய மனஸ்தாபம் வரும்போது நாயகன் எதிர்த்து சண்டை போடுவான். நான் எதற்காக காவலருக்கு பயப்படவேண்டும்… சட்டத்துக்குப் புறம்பாக எந்த காரியமும் இதுவரை தான் செய்ததில்லை என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வான். ஆனால், விதியோ அதே நபர் ஒரு கொலையையே மறைக்கும்படிச் செய்துவிடும்.

இதில் இருக்கும் வாழ்க்கை குறித்த நுட்பமான விமர்சனம் தமிழில் வந்திருக்கவில்லை… அதே சண்டைக் காட்சியில் மலையாளத்தில் இருந்து மாற்றிப் பேசவேண்டும் என்பதற்காக அந்த காவலர் ஒரு பொறுப்பான அதிகாரியாக நடந்துகொள்ளவில்லையே என்று நாயகன் சீறுகிறார்.
இதுபோல் தமிழில் மலையாளத்தில் இருந்து மாறுபடுத்திக் காட்டியாகவேண்டும் என்று செய்த வேறு சில விஷயங்கள் படத்தின் கனத்தைக் குறைத்து விட்டிருக்கின்றன.
முதலாவதாக, வட்டார மொழி. ஒரு கதாபாத்திரம் எந்த ஊரைச் சேர்ந்ததாக எந்த சாதியை எந்த வர்க்கத்தைச் சேர்ந்ததாக இருக்கிறதோ அதற்குரிய பேச்சு வழக்கு இடம்பெறுவது சரிதான். ஆனால், தமிழகம் (இந்தியா முழுவதும்) போல் பலதரப்பட்ட பேச்சு வழக்குகள் இருக்கும் நிலையில் அதைக் கொஞ்சம் பொதுமைப்படுத்தித் தருவதுதான் நல்லது.

எழுத்தில் வட்டார வழக்கு எந்த அளவுக்கு நம்பகத்தன்மையையும் சுவாரசியத்தையும் ஊட்டுகிறதோ அந்த அளவுக்கு திரைப்படங்களில் இருப்பதில்லை. இதற்கு இரண்டு முக்கிய முக்கிய காரணங்கள் உண்டு. முதலவது நடிகர் என்று திட்டவட்டமான நபர் படத்தில் வருகிறார். அவருக்கு அவருடைய சாதி சார்ந்த பேச்சு வழக்கும், பொது வழக்கும்தான் பெரிதும் பொருந்தும். வேறு சாதி வழக்கை அவர் என்னதான் கற்றுக் கொண்டு பேசினாலும் அந்த சாதியைச் சார்ந்த ஒருவர் பேசுவதுபோல் இயல்பாக ஒருபோதும் இருக்காது. இது அடிப்படைக் குறைபாடு. இரண்டாவது காரணம் தமிழில் வட்டார வழக்கைப் பேசும் நடிகர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொள்வதில்லை. மற்ற படங்களைவிட இந்தப் படத்தில் பேச்சு மொழி பரவாயில்லை என்றாலும் இந்தப் படத்துக்கு அதுவும் பின்னடைவாகவே இருக்கிறது.
கமல், கவுதமி போன்றோர் திருநெல்வேலி பாஷை பேசுவது துளியும் ஒட்டாமல் இருக்கிறது. அதிலும் கவுதமியின் தளர்வான பேச்சு நடை மிகவும் நிரடலாக இருக்கிறது. நடிப்பால் மட்டுமல்லாமல் உடம்பாலும் மோகன்லாலுக்கு சவால்விடும் மீனா மலையாளத்தில் அற்புதமாக நடித்ததில் பத்து சதவிகிதம் கூட தமிழில் கவுதமியால் தர முடிந்திருக்கவில்லை.

 

வட்டார மொழி அவர் வரும் காட்சிகளை மேலும் அலுப்படைய வைக்கின்றன (குடும்பப் படம் என்பதைக் கமல் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்போல.. குடும்பத்தினர் பார்க்கும் படம்… குடும்பத்தினர் நடிக்கும் படமல்ல கமல் சார்).
கலாபவன் மணியின் ஒரிஜினல் குரலைக் கேட்டுப் பழகியவர்களுக்கு இந்த தமிழ் டப்பிங் குரல் நிச்சயம் பெரிய ஏமாற்றத்தையே தரும். இவையெல்லாம் கூடப் பரவாயில்லை… மலையாளத்தில் சித்திக் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஆனந்த் மகாதேவன் நடித்திருக்கிறார். அவருடைய உடல் மொழி, முகபாவங்கள் ஓகே. ஆனால், வசன உச்சரிப்பு மிகவும் எரிச்சலடைய வைக்கிறது.

 

அதிலும் படத்தின் உயிர் துடிப்பான க்ளைமாக்ஸ் காட்சியில் சித்திக் தன் கம்பீரமும் நெகிழ்ச்சியும் கலந்த குரலில் தனது மகனுக்கு என்ன ஆனது என்று கேட்கும் அந்தக் காட்சி தமிழில் ஆனந்த் மகாதேவனுடைய மிக அந்நியமான பேச்சு மொழியினால் படுமோசமான உணர்வையே ஏற்படுத்துகிறது. மலையாளப் படத்தையும் பார்த்தவன் என்பதால், அவர் எப்போது பேசி முடிப்பார்.. கமல் எப்போது பேச ஆரம்பிப்பார் என்று ஏங்க வைத்துவிட்டார்…(கமலின் திட்டமிட்ட தந்திரமோ என்னவோ) மலையாளத்தில் இரு பக்கமும் சமமான வலுவுடன் விரிந்து பறந்த அந்தக் காட்சி தமிழில் ஒற்றைச் சிறகுடன் நொண்டும் பறவையாக முடங்கிவிட்டது.

download (5)

 

உண்மையில் நடிகர் ராஜேஷ் போல் கம்பீரமான குரலை உடைய ஒருவர் நடித்திருக்க வேண்டிய வேடம் அது.
ஜெயமோகனின் வசனங்கள் படத்தோடு ஒன்றும் இடங்களும் உண்டு. துருத்திக் கொண்டு நிற்கும் இடங்களும் உண்டு. கசாப்பு கடை கட்டறதை ஆடு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று நாளைய பழமொழிகளை இன்றே சொல்லும் ஜெயமோகன் அதை இன்னும் கொஞ்சம் காட்சிக்கும் பொருத்தமாக (யானை வாழ்ற காட்டுலதான் எறும்பும் வாழுது என்பதுபோல்) எழுதுவது நல்லது. காவல் நிலையம் என்பது கசாப்பு கடை அல்ல… இந்த வசனம் சொல்லப்படும் சிறுவன் அப்பாவி. அவனுக்கு காவல் நிலையத்தாலோ காவல் துறையாலோ எந்த பாதிப்பும் கிடையாது.

 

அது பொதுவாகச் சொல்லப்பட்ட வசனமும் இல்லை. ஏனென்றால், மக்கள் ஆடுகளும் அல்ல. மக்கள் அனைவருமே திருடர்களாக இருந்தால்தான் ஒரு காவல் நிலையம் அவர்களைக் காலி செய்யும் கசாப்பு கடை என்பது பொருந்தும். எனவே அந்த வசனம் கேட்க நன்றாக இருந்தாலும் காட்சிக்குப் பொருத்தமாக இல்லை. வடிவுக்கரசி, கொல்லங்குடி கருப்பாயி வகையினர் அடித்துவிடும் பழமொழிகூட இதைவிட மேலாக இருக்கும். அதுபோல், பிறந்ததே தியேட்டரில்தான்… சினிமாதான் மூச்சு… சுயம்பாகவே வளர்ந்த லிங்கம் என்பதுபோன்ற அதீத மிகை வசனங்களைத் தவிர்க்க முடிந்தால் நல்லது.
***
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது தர்க்க ரீதியான கேள்விகள் கேட்கக்கூடாது என்று சொல்வதுண்டு. குறிப்பாகத் தமிழகத்தில்.. விஷயம் வேறொன்றும் இல்லை. தமிழ் பார்வையாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அறிவுபூர்வமான சாதனைகளிலோ சவால்களிலோ நம்பிக்கை இல்லை. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இது முழுக்க முழுக்க தர்க்கபூர்வமான கேள்வி பதில்களால் ஆன படம். காவல் துறையின் விசாரணை முழுவதும் தர்க்கபூர்வமான புத்திசாலித்தனமான கேள்விகளால் ஆனது. நாயகனின் நகர்வுகள் அந்தக் கேள்விகளின் பிடியில் இருந்து அதைவிட அதி தர்க்கபூர்வமாகச் சிந்தித்துத் தப்பும் நோக்கில் அமைந்திருக்கிறது. திரைக்கதை ஆசிரியர் எழுப்பியிருக்கும் கேள்வி முடிச்சுகளும் அதற்கு அவர் தந்திருக்கும் பதில்களுமே தமிழ் மனதைப் பொறுத்தவரை வெகு கூடுதலானவை. பல நுண்ணீய முடிச்சுகள் போடப்பட்டதும் தெரியாது. அது அவிழ்க்கப்பட்டதும் தெரிந்திருக்காது. எனவே, அதிலும் கேள்விகள் என்றால் அலறிவிடுவார்கள். ஆனாலும் சில கேள்விகள் கேட்கப்பட்டுத்தானே ஆகவேண்டும்.
தமிழ் படங்களைப் பார்த்து கேட்கப்படும் தர்க்கபூர்வமான கேள்விகள் எல்லாம் 10-15 மதிப்பெண் பெற்ற மாணவனைப் பார்த்து பாஸ் மார்க் ஏன் வாங்கவில்லை என்ற அக்கறையில் கேட்கப்படுபவை. மலையாளப் படங்களைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்விகள் ஃப்ர்ஸ்ட் கிளாஸ் (60) மதிப்பெண் பெற்றவனைப் பார்த்து ஏன் 70-80 மதிப்பெண் பெறவில்லை என்று கேட்பதைப் போன்றது. தமிழ் பார்வையாளர்களுக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் மதிப்பெண்ணே கோல்டு மெடல் என்பதால் அவனையுமா விமர்சிக்கிறாய் என்று மிரளத்தான் செய்வார்கள். ஆனால், தேர்வுகள் நூறு மதிப்பெண்ணுக்கு அல்லவா நடக்கின்றன. ஒரு நல்லாசிரியர் தன் மாணவன் நூற்றுக்கு நூறு இல்லாவிட்டாலும் 90 களுக்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும் என்றுதானே விரும்புவார். அப்படியாக இந்தப் படத்தில் இருக்கும் தர்க்கப் பிழைகளை அந்தக் கோணத்திலேயே சுட்டிக் காட்டுகிறேன். கொஞ்சம் மேலே வாருங்கள் தமிழ் பார்வையாளர்களே…
விரிவாகப் பார்ப்போம்.
ஒரு கொலையைச் செய்துவிட்டு அதில் இருந்து தப்ப வேண்டுமென்றால், அந்தக் கொலை நடந்த நேரத்தில் நாம் வேறொரு இடத்தில் இருந்ததாகச் சில சாட்சிகளைக் (ஆதாரங்களைக்) காட்டவேண்டும். சட்டத்துக்கு சாட்சிகள்தான் முக்கியம்.
ஆகஸ்ட் 2-ம் தேதி இரவில் கொலை நடக்கிறது. அந்தக் கொலையை மறைக்க விரும்பும் நாயகன், தன் குடும்பத்துடன் 2 மற்றும் 3-ம் தேதியில் வேறொரு ஊரில் இருந்ததாக நாடகமாடுகிறார். அதை எப்படி காவல்துறையை நம்பவைக்கிறார் என்பதுதான் கதை.
இரண்டாம் தேதியும் 3-ம் தேதியும் என்னவெல்லாம் செய்ததாகச் சொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறார். இரண்டாம் தேதி காலையில் குடும்பத்துடன் பக்கத்து ஊரில் நடந்த தியானத்துக்கு பேரூந்தில் போனோம். மாலை வரை அங்கு இருந்தோம். மாலையில் ஒரு லாட்ஜில் தங்கினோம். மறுநாள் காலையில் பத்து மணி வாக்கில் அறையைக் காலி செய்துவிட்டு ஷாப்பிங் செய்தோம். ஹோட்டலுக்குப் போய் பிரியாணி சாப்பிட்டோம்… மதிய சினிமா பார்த்தோம். 3ம் தேதி ஞாயிறன்று மாலையில் அரசுப் பேருந்தில் வீடு திரும்பினோம் என்று ஒரு கட்டுக்கதையை உருவாக்குகிறார்.
3-ம் தேதி காலையிலேயே கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்துவிட்டதால் மூன்றாம் தேதிக்கான ஆதாரங்களை எல்லாம் அன்றே பெற்றுக்கொண்டுவிடுகிறார்.

 
இரண்டாம் தேதியும் 3-ம் தேதியும் என்னவெல்லாம் செய்ததாகத் சொல்ல விரும்பினாரோ அதையெல்லாம் 4ம் தேதியும் 5-ம் தேதியும் செய்கிறார். அந்த விஷயங்களை எல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு த்ருஷ்யங்களாக (காட்சிகளாக) மனதில் பதியவைக்கிறார். பஸ் கண்டக்டர், லாட்ஜ் மேனேஜர், சினிமா ஆப்பரேட்டர் என பலருடனும் வலிந்து பேசி தன்னையும் தன் குடும்பத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளும்படிச் செய்கிறார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் அனைவரையும் சென்று மறுபடியும் சந்தித்து தன்னையும் தன் குடும்பத்தையும் சந்தித்தது திங்கள் செவ்வாயில் அல்ல.. சனி ஞாயிறில் என்று பொய்யான தகவலைத் தருகிறார். அவர்களுக்கு அவரைப் பார்த்த திருஷ்யம் மட்டுமே நினைவிருக்கிறது. தேதி நினைவில்லை. எனவே, நாயகன் சொல்வதையே நம்பிவிடுகிறார்கள்.
காவல் துறை அழைத்து விசாரிக்கும்போது மனதில் அழுத்தமாகப் பதிந்த திருஷ்யங்களை உறுதியாகவும் தேதி குறித்த தகவலை நாயகன் மாற்றிச் சொன்னது போலவேயும் சொல்கிறார்கள். அப்படியாக சனி ஞாயிறில் அதாவது கொலை நடந்த நாளில் வேறு ஊரில் இருந்ததாக நாயகன் சொன்னதைப் பொய் என்று காவல் துறையால் நிரூபிக்க முடியாமல் போய்விடுகிறது.
இப்போது இந்த இடங்களுக்குப் போனதற்கான ஆதாரங்கள் தேவை… இந்த இடங்களில் இவர்களைப் பார்த்ததற்கான ஆதாரங்களும் தேவை. இரண்டையும் திரைக்கதை ஆசிரியர் படு சாமர்த்தியமாக உருவாக்கித் தருகிறார்.
முதலில் ஆதாரங்கள்.

 

இரண்டாம் தேதியன்று காலையில் பக்கத்து ஊருக்கு குடும்பத்துடன் பேருந்தில் போனதற்கான ஆதாரமாக எதைத் தருவது..?
இது சாத்தியமே இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரிசை எண் கொண்ட டிக்கெட் கட்டுகளையே பயன்படுத்துவார்கள். எனவே, 2-ம் தேதி பயணம் மெற்கொண்டதற்கான டிக்கெட் கிடைக்க வழியில்லை. இந்த முடிச்சுக்கு என்ன பதில்?
அந்தப் பேருந்து நடத்துனர் நாயகனின் நண்பர் என்பதால் டிக்கெட் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று திரைக்கதை எழுதப்படுகிறது. இது தர்க்கபூர்வமாக சரியாக இருக்க முடியுமா? முடியும். நடத்துனர் நினைத்தால் ஒருவருக்கு (ஒரு குடும்பத்துக்கு) டிக்கெட் கொடுக்காமலேயே அழைத்துச் செல்ல முடியும்தானே. போதாத குறையாக அந்த நடத்துனர்தான் அந்த தனியார் பேருந்தின் முதலாளி என்று சொன்னதன் மூலம் அந்தக் காட்சியை கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்குகிறார் திரைக்கதை ஆசிரியர்.
அடுத்ததாக, கூட்டு தியானத்தில் பங்கெடுத்ததற்கான சாட்சி.
அங்கு பதிவேட்டில் பெயர் பதிவு செய்து கொள்ளப்படும். அதில் நாயகன் நைஸாக தனது குடும்பத்தின் பெயரை எழுதிச் சேர்க்க முடியும். ஆனால், இது கொஞ்சம் கடினமான வேலை எனவே, திரைக்கதையை வேறு வகையாகக் கொண்டுசெல்கிறார்.
அந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் போது சொன்ன கதையை நாயகனும் அவனுடைய குடும்பத்தினரும் ஒரு வரி பிசகாமல் சொல்கிறார்கள்.
அந்த பிரசங்கி அதை வேறு எங்கும் அதற்கு முன்புவரை சொன்னதே இல்லையா..?

இல்லை என்று கதாசிரியர் சொல்கிறார்.
வேறு யாரேனும் பேசியதைக் கேட்டு அந்தக் கதையைச் சொல்லியிருக்க முடியாதா… என்ற தரக்கபூர்வமான கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கும் பதில் சொல்கிறார் திரைக்கதை ஆசிரியர். அதாவது பிரசங்கத்தை நேரில் கேட்ட ஒருவரால்தான் வரி பிசகாமல் சொல்ல முடியும். அவர்கள் அப்படித் துல்லியமாகச் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் அன்று பிரார்த்தனைக்கு நிச்சயம் வந்திருப்பார்கள் என்று சொல்கிறார்.
இது எப்படி சாத்தியமாகிறது?
அந்த பிரார்த்தனையின் போது நடத்திய பிரசங்கத்தை அந்த சுவாமிஜி சி.டி.யாகப் போட்டு விற்றிருக்கிறார். அதை நாயகன் நான்காம் தேதியன்று போன போது பார்த்து வேறு பெயரில் வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்படியாக அவர்களுக்கு இரண்டாம் தேதியன்று பிரார்த்தனையின் போது சொன்ன கதை தெரியவந்திருக்கிறது.
இதுவும் நம்ப முடிந்த பதில்தான்.
மலையாளத்தில் இந்த கூட்டு தியானம் நடந்தது சனிக்கிழமையன்று என்று வருகிறது. நாயகனும் அவனுடைய குடும்பத்தினரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவ தியானத்துக்கு மட்டும்தானே போக முடியும். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிறுதான் விசேஷ தினம். எனவே, சனியும் ஞாயிறும் நிகழ்ச்சி நடக்கிறதென்றால் கூட்டுப் பிரார்த்தனை என்பது ஞாயிறன்று நடக்கத்தான் வாய்ப்பு அதிகம். அன்றுதானே பலரும் எளிதில் பங்கெடுக்கவும் முடியும்.

மலையாளப் படத்தில் சனிக்கிழமையில் கூட்டுப் பிரார்த்தனை நடந்ததாகச் சொன்னது லேசாக இடறத்தான் செய்கிறது. தமிழில் அந்தக் குழப்பமே இல்லை. தமிழ் கதாநாயகன் இந்து நாடார். இந்துக்களால் எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் கூட்டுப் பிரார்த்தனை நடத்த முடியுமே.
அடுத்ததாக, இரண்டாம் தேதியன்று லாட்ஜில் தங்கியதற்கான ஆதாரம்.
நான்காம் தேதியன்று குடும்பத்துடன் சென்றவர், ஒரு லாட்ஜுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். லாட்ஜ் வரவேற்பறைப் பணியாளர் அறை மேலே இருப்பதாகச் சொல்கிறார். நாயகன் லேசாக செயற்கையாக இருமுகிறார். அதாவது அந்த வரவேற்பறைப் பணியாளரை அங்கிருந்து அகற்றினால்தான் ரிஜிஸ்டரில் 2-ம் தேதிக்கான பக்கத்தில் தன் பெயரை எழுதி பொய் சாட்சியைத் தயாரிக்க முடியும். இதை மனைவியிடம் முன்பே நாயகன் சொல்லியிருப்பார். அது பார்வையாளர்களாகிய நமக்குக் காட்டப்பட்டிருக்காது. நாயகன் லேசாக இருமியதும் அறை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தால்தான் தங்க முடியும் என்று மனைவி சொல்வார். உடனே அந்த வரவேற்பறைப் பணியாளர் அவர்களை அழைத்துக் கொண்டு மேலே செல்வார்.

 

அவர் திரும்பி வருவதற்குள் நாயகன் ரெஜிஸ்தரில் இரண்டாம் தேதிக்கான பக்கத்தில் தனது பெயரை எழுதிச் சேர்த்துவிடுவார்.
இந்தக் காட்சியில் ஒரு தர்க்கப் பிழை இருக்கிறது. பொதுவாக எந்த லாட்ஜிலும் வரவேற்பறைப் பணியாளர் நீங்கலாக ரூம் பாய், வாட்ச் மேன் என வேறு பணியாளர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்று அறையைக் காண்பிப்பார்கள். லாட்ஜ் வரவேற்பறைப் பணியாளார் எக்காரணம் கொண்டும் அந்த இடத்தைவிட்டு நகர மாட்டார். ஏனென்றால், பல அறைகளின் சாவிகள் அங்குதான் இருக்கும். பதிவேடுகள் அங்குதான் இருக்கும். கல்லாவும் கூட அங்குதான் இருக்கும். எனவே அவர் ரூம் பாயையோ அவர் இல்லையென்றால் செக்யூரிட்டியையோதான் அறையக் காட்டித் தரும்படிச் சொல்லி அனுப்புவார். எனவே அவரை அங்கிருந்து அகற்றுவது அத்தனை எளிது அல்ல. அவரை அகற்றாமல் ரெஜிஸ்டரில் தேதியை மாற்றி எழுதவும் முடியாது.
பெரிய சிக்கல்தான். ஆனால், திரைக்கதை ஆசிரியர் இந்த இடத்தில் மூளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டார். மலையாளத்திலேயே இது இப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தநிலையில் தமிழுக்குக் கேட்கவே வேண்டாம். அதோ பாரு வெள்ளைக்காக்கா என்று சொல்லியபடியே நாயகன் வேறு பக்கத்தில் எழுதிவிட்டார் என்று காட்டினால்கூட தமிழ் அரங்குகளில் க்ளாப்ஸ் பறக்கும் (தமிழண்டா..!).

அடுத்ததாக, மூன்றாம் தேதி மதியம் டவுன் ஹோட்டலில் சாப்பிட்டது, மதியம் சினிமா பார்த்தது, மாலையில் அரசுப் பேருந்தில் திரும்பி வந்தது இவற்றுக்கான ஆதாரம் தேவை.
இந்த இடத்தில்தான் திரைக்கதை ஆசிரியர் தனது மூளையை அதிகமும் பயன்படுத்துகிறார்.
கொலை செய்யப்பட்ட விவரம் நாயகனுக்கு மூன்றாம் தேதி அதிகாலையில் தெரியவருகிறது. கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் என்பதால் இரவில் அவர் கடையிலேயே தங்கிவிடுவது வழக்கம். கொலை நடந்த அன்றும் அப்படித்தான் தங்கி அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்திருப்பார். விஷயம் தெரிந்ததும் உடனே அவர் பார்த்த திரைபடங்களில் இருந்து பல யோசனைகள் அவருக்கு தோன்றும். அதன்படியே பக்கத்து டவுனுக்கு அன்றே போய் ஹோட்டலில் நான்கு பேர் சாப்பிட்டதுபோல் பில் வாங்கிக் கொள்வார்.

மேட்னி ஷோவுக்கும் நான்கு பேர் போனதுபோல் நான்கு டிக்கெட் வாங்கி வைத்துக் கொள்வார். மாலை வீடு திரும்பும்போது பேருந்திலும் நான்கு டிக்கெட்கள் வாங்கி வைத்துக் கொள்வார். ஆக மூன்றாம் தேதியன்று நான்கு பேரும் பக்கத்து டவுனில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்களை புத்திசாலித்தனமாக வாங்கி வைத்துக்கொண்டுவிடுகிறார்.
இதனிடையில் கொல்லப்பட்டவன் வந்த மஞ்சள் நிற மாருதி காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் காட்சி வருகிறது.
கொலைசெய்யப்பட்ட இடத்தில் இருந்து கார் சாவி கிடைத்ததும் காரும் பக்கத்தில்தான் இருக்கும் என்று தேடிச் செல்கிறார். அதன்படியே கார் அவருடைய வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி நிறுத்தப்பட்டிருக்கிறது. மெதுவாக அங்கு செல்பவர் காரை நைசாக எடுத்துக்கொண்டு புறப்படுகையில் காரின் அலாரம் வீல் வீல் என்று அலறுகிறது. துரதிஷ்டவசமாக சற்று தள்ளி இருந்த இன்னொரு வீட்டில் பாஸ்போர்ட் பரிசோதனைக்காக வந்திருந்த காவலர் அவனைப் பார்த்துவிடுவார்.
அதற்குப் பிந்தைய திரைப்படத்தின் விறுவிறுப்புக்கு இந்தக் காட்சிதான் ஆதாரம்..
ஆனால், இங்கு ஒரு சிறு பிழை இருக்கிறது. காவல்துறையே விழிபிதுங்கும் அளவுக்குத் தர்க்கபூர்வமாகத் திட்டமிடும் நாயகன், அந்த காரை பகலில் எடுத்தால் யாரேனும் பார்த்துவிடுவார்களே என்று ஏன் யோசிக்கவில்லை. இரவில் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்துவதுதானே புத்திசாலித்தனம். ஒருவேளை நாள் முழுவதும் அந்த கார் அங்கு இருந்தால் அதை யாரேனும் பார்த்துவிட்டால் பின்னர் விசாரணை என்று வரும்போது நாயகன் வீட்டுக்கு அருகில்தான் கார் நின்று கொண்டிருந்தது என்ற விஷயம் பிரச்னைக்கு வழிவகுத்துவிடும் என்று உடனே அப்புறப்படுத்த முயன்றதாகக் காட்டியிருக்கிறாரா. ஆனால், நீண்ட நேரம் நம் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கார் நின்றதைப் பார்த்து ஒருவர் சொல்வதால் வரும் பிரச்னையைவிட அந்தக் காரை பகலில் நாமே அப்புறப்படுத்த முயற்சி செய்யும்போது யாரேனும் பார்த்துவிட்டால் வரும் பிரச்னை அதிகமாக இருக்கும்.அதி சமர்த்தனான நாயகன் நிச்சயம் அதைத் தவிர்க்க முயன்றிருக்கவேண்டும்.

 

ஒன்று இரவு வரும் வரை காத்திருந்திருக்கவேண்டும். அல்லது, கொலை நடந்த இரவிலேயே அவன் வீடு திரும்பியிருக்கவேண்டும். ஏற்கெனவே பிட் படம் பார்த்ததும் மூடு கிளம்பி நள்ளிரவில் வீடு திரும்பும் பழக்கம் உடையவன் தான் நாயகன். அன்றும் அப்படித் திரும்பியதாகக் காட்டியிருக்கலாம். பிணத்தை அவனும் சேர்ந்தே மறைத்ததாகவும் காரை அப்போதே கல் குவாரியில் தள்ளிவிட்டதாகவும் காட்டியிருக்கலாம். இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர் தற்செயலாக நாயகனை மஞ்சள் மாருதியில் செல்வதைப் பார்த்திருக்கலாம். அல்லது வேறு ஏதோ வழியில் அவருக்கு சந்தேகம் வந்திருக்கலாம் என்று காட்டியிருக்கலாம்.
அதுபோல் கடைசிக் காட்சியில் பிணத்தை எங்கு புதைத்திருக்கிறார் என்பதைக் காட்டும் இண்டர் கட் காட்சிகளின் தொடக்கம் மலையாளப் படத்தைவிட தமிழ் படத்தில் அருமையாக லேசாக மாற்றப்பட்டிருக்கிறது. விசாரணை செய்யும் காவலர் ஷூ காலால் தரையில் தட்டுகிறார். அப்படியே காட்சி கட் செய்யப்பட்டு நாயகன் பிணத்தைப் புதைத்துவிட்டு தனது காலைத் தட்டிக் கொள்ளும் காட்சி வருகிறது. காவலர் உட்கார்ந்திருக்கும் இடத்துக்குக் கீழேதான் அந்தப் பிணத்தை நாயகன் புதைத்திருக்கிறான் என்பதை ஒரு வார்த்தைக்கூட இல்லாமல் காட்சி ரீதியாகவே காட்டியவிதம் நிச்சயம் பாராட்டத்தக்கதுதான்.
ஆனால், பழைய காவல் நிலையம், டீக்கடை என பரபரப்பாக இருக்கும் ஒரு இடத்துக்கு அருகில் கட்டப்படும் புதிய காவல் நிலையத்தில் இரவு என்றாலும் ஒரு பிணத்தை யாருக்கும் தெரியாமல் தனி ஒருவரால் புதைக்க முடியுமா..? கொல்லப்பட்டவனின் பிணத்தை வீட்டில் இருந்து காவல் நிலையத்துக்கு ஜீப்பில் கொண்டுவந்த போதே தெரிந்திருக்குமே.
அதுபோல், படத்தின் பிரதான அம்சமான ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட விதம். படத்தில் நாயகனின் மகள் பள்ளியில் இருந்து ஒரு கேம்புக்குப் போகிறாள். அங்கு பாத்ரூமில் குளிக்கும்போது வில்லன் அவளை செல்போனில் படம் எடுத்துவிடுகிறான். அதை வைத்து அவளைத் தன்னுடன் படுக்க வரும்படி அழைக்கும்போதுதான் அவள் அவனை மண்டையில் அடித்துக் கொண்டுவிடுகிறாள்.

 

 

 

 

மலையாளத்தில் அந்தப் பெண் இரும்பு கம்பியை எடுத்து பின்னந்தலையில் ஓங்கி அடித்துவிடுகிறார். தமிழில் தலையில் அடிக்க முயற்சி செய்யாமல் அவனுடைய கையில் இருக்கும் செல்போனை அடிக்கத்தான் முயற்சி செய்கிறாள். அது தலையில் பட்டுவிடுகிறது. அதைப் பின்னால் ஒரு வசனமாகச் சொல்லிக் காட்டவும் செய்வார். இந்த மாற்றம் ஏற்கத் தகுந்ததுதான். ஆனால், தமிழிலும் சரி மலையாளத்திலும் சரி… உயிர் போகும் அளவுக்கான அடி தலையில் பட்ட பிறகும் ஒரு சொட்டு ரத்தம் கூட வெளியில் வரவில்லை என்று காட்டியிருப்பது கொஞ்சம் சினிமாத்தனமானதுதான்.

 

சில விபத்துகளில் தலையில் உள் காயம் பட்டு இறப்பது உண்டு. ரத்தம் வெளியே வராமலும் இருக்கும். ஆனால், அங்கெல்லாம் மரணம் உடனே நடந்துவிடாது. மருத்துவமனைக்குக் கொண்டு என்று சில மணிநேரங்கள் கழிந்த பிறகே நடக்கும். உடனே மரணம் சம்பவிக்க வேண்டுமென்றால் அடி அந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும். அப்படி பலமாக அடி விழுந்தால் ரத்தம் நிச்சயம் வெளியே வந்துவிடும். இங்கு மரணம் உடனே சம்பவிக்கிறது. ரத்தம் மட்டும் வரவில்லை.
பள்ளியில் படிக்கும் மகளைஉடைய எனது உறவினர் ஒருவர் படத்தைப் பார்த்த உடனேயே பள்ளிக்குப் போன் போட்டு, எங்கள் குழந்தைகளை கேம்புக்கு அனுப்பும்போது இப்படியான அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் சொன்ன பதில்: இப்படி ஒரு சம்பவம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். நாங்கள் எங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பள்ளிகளில் தங்க வைப்போம். ஆண் மாணவர்களுக்கான குளியலறை வேறு இடத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கான குளியலறை வேறு இடத்தில் இருக்கும். லாட்ஜ் போன்ற இடங்களில் தங்க வைத்தால், பெண்களின் குளியலறைக்கு அருகில் எப்போதும் ஆசிரியர் ஒருவரை நிற்க வைத்திருப்போம். எனவே எந்த ஆணும் அங்கு ரகசியமாக நுழைந்து செல் போனை எல்லாம் வைக்கமுடியாது. பயப்படாதீர்கள் என்றார்.

 

இது குறித்துச் சொல்ல எனக்கு எதுவும் இல்லை. நடக்கவாய்ப்பில்லை; ஆனால், நடக்க முடியும்.அதிக திரைப்படங்களைப் பார்த்தவன் என்ற வகையில் நாயகன் இன்னும் கூடுதலாகப் போலீஸுக்குத் தண்ணி காட்டியிருக்கலாம். அந்த காரின் நம்பர் பிளேடையும் காரின் நிறத்தையும் மாற்றி அதன் பிறகு குவாரிக் குளத்துக்குள் தள்ளிவிட்டிருக்கலாம். மேலும் குவாரிக் குளம் என்பது செயற்கையான குளம். கோடையில் சில நாள் வெப்பத்தைக் கூடத் தாங்காமல் வற்றிவிடும். எனவே அதைவிட ப் பாதுகாப்பான இடமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும். இதை காவல்துறை உடைக்கும் விதம் இன்னும் விறுவிறுப்பாக வந்திருக்கும்.

 

கொல்லப்பட்டவனின் சிம் கார்டு கிடைக்கிறது. அதை ஒரு போனில் போட்டு அந்த போனை நேஷனல் பெர்மிட் உள்ள லாரியில் போடுகிறான் நாயகன். காவல் துறையினர் அந்த செல்போனை டிரேஸ் செய்யும்போது அது மாநிலம் விட்டு மாநிலம் போய்க்கொண்டே இருக்கிறது. குழம்பிப் போகிறார்கள். இது நல்ல யோசனைதான். ஆனால், இதற்கு பதிலாக, அந்த செல்போனை வைத்து இன்னும் கொஞ்சம் விளையாடியிருக்கலாம். அந்த செல் போனில் இருந்து பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கலாம்.

 

செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதால் தானே அவன் காணாமல் போய்விட்டான் என்ன ஆயிற்றோ என்று பதறுகிறார்கள். நாயகன் தினமும் வெவ்வேறு டவுனுக்குப் போய் பெற்றோருக்கு பொய்யான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பிக்கொண்டே இருந்திருக்கலாம். கடைசியில் தற்கொலை செய்துகொள்ள்ப் போகிறேன் என்று கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு சிம்கார்டையே சிதைத்துவிட்டிருக்கலாம். கேஸ் வேறு திசையிலேயே போய்க் கொண்டிருந்திருக்கும். இதை உடைத்து காவல்துறை நாயகனின் குடும்பத்தை எப்படி நெருங்குகிறது என்பது படத்துக்குக் கூடுதல் சுவாரசியத்தைத் தந்திருக்கும். இதற்காக படத்தின் மெதுவான ஆரம்பக் காட்சிகள் பலவற்றை நீக்கியும் இருக்கலாம். அந்தக் காட்சிகளுக்கு வேறொரு தேவை இருக்கிறது என்ற நிலையிலும்.
கிறிஸ்தவ குடும்பத்தைத் தமிழுக்காக இந்து நாடார் குடும்பமாக மாற்றிக் கொண்டதற்குப் பிராயச்சித்தமாக வேறொரு காட்சியை நான் சேர்த்திருப்பேன். தமிழ் நாயகன், செய்த தவறுக்கு வருந்தக்கூடியவன். பாபத்தை நாசம் செய்ய குளத்தில் குளிக்கத் தயாராக இருப்பவன். அவனை நான் பாவ மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன். என் படத்தில் நீதிமன்றக் காட்சி இடம்பெறும். நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்படுவன் நேராக அங்கிருந்து ஒரு தேவாலயத்துக்குச் செல்வான். சட்டப்படி நாங்கள் தப்பித்துவிட்டோம். ஆனால், மனசாட்சி உறுத்துகிறது. உண்மையை உங்கள் முன் சொல்லி மன்னிப்பு கேட்கிறோம்.

 

இந்து கோவில்களில் இறைவன் முன்பாக மனதுக்குள் மன்னிப்பு கேட்க முடியும்தான். ஆனால், வாய்விட்டுக் கேட்டால்தான் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அதற்கான வசதி கிறிஸ்தவ மதத்தில்தான் இருக்கிறது என்று சொல்லி சுயம்புலிங்கத்தை பாப மன்னிப்பு கேட்கச் செய்திருப்பேன். ஐ.ஜி. குடும்பத்தை கிறிஸ்தவ குடும்பமாகவும் காட்டியிருப்பேன். ஆடுகளுக்குச் செய்த தவறுக்கு மேய்ப்பரிடம் மன்னிப்பு கேட்பது பொருத்தமாகவும் இருக்கும் அல்லவா. அல்லது குறைந்தபட்சம் பாபநாசம் கோவில் குளத்தில் குடும்பத்துடன் தலைமுழுகி பாவத்தைப் போக்கிக் கொள்வதாகவாவது ஒரு காட்சியை வைத்திருப்பேன். படத்தின் க்ளைமாக்ஸ் ஒருவகையான பாப விமோசன – பாம மன்னிப்புக் காட்சிதான் ஆனால், தமிழனுமான எனக்குக் கொஞ்சம் கூடுதல் டிராமா தேவை.

 

••••••••••

 

http://malaigal.com/?p=6944

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.