Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாய்களுக்கு ஸ்பெஷல் சரணாலயம்!

 
 
masala_2825497f.jpg
 

கோஸ்டரிகாவில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் இதமான பருவநிலை இங்கே நிலவுகிறது. ஆதரவற்ற 900 நாய்கள் பராமரிக்கப்படுகின்றன. ஏராளமான கலப்பின நாய்களும் புதிதாகப் பிறக்கின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இந்த நாய்களின் சரணாலயத்தை நடத்தி வருகிறது. நாய்கள் மீது அன்பு கொண்டவர்கள், இங்கே வந்து நாய்களுடன் நேரத்தைச் செலவிடலாம். விருப்பமான நாய்களைத் தத்தெடுத்துக்கொள்ளலாம். நாய்களுக்குச் சத்தான உணவுகள் அளிக்கப்படுகின்றன. நாய்களைக் குளிக்க வைத்து, முறையாகப் பராமரிக்கிறார்கள். பகல் முழுவதும் நாய்கள் பசுமையான குன்றில் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன.

’’இந்தச் சரணாலயத்தை நல்ல உள்ளங்களின் நன்கொடையால் நடத்தி வருகிறோம். கோஸ்ட ரிகாவில் மட்டுமே 10 லட்சம் நாய்கள் ஆதரவற்று அலைகின்றன. அவற்றில் ஆயிரம் நாய்களை மட்டுமே எங்களால் இங்கு பராமரிக்க முடிகிறது. பல மணி நேரங்களைச் செலவிட்டு, நாய்களைப் பராமரிக்கிறோம். 600 வகை நாய்கள் இங்கே இருக்கின்றன. நோஞ்சான் நாய்களை ஆரோக்கியமான நாய்களாக மாற்றி தத்து கொடுத்துவிடுகிறோம். இதற்காக மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு நாயை மட்டும் வளர்த்தீர்கள் என்றால் மன உளைச்சல் குறையும், வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்’’ என்கிறார் இந்தச் சரணாலயத்தை நடத்தி வரும் செர்ஜியோ.

நாய்களுக்கு ஸ்பெஷல் சரணாலயம்

சில்வியா எல்பா மிக அழகான திருமண ஆடை ஒன்றை உருவாக்கியிருக் கிறார். ஆனால் அந்த ஆடையை யாராலும் அணிய இயலாது. இது கேக்கால் உருவாக்கப்பட்ட ஆடை. கேக் என்றே நம்ப முடியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சில்வியா.

‘நானும் இலின்காவும் சேர்ந்து ஒரு போட்டிக்காக இந்த கேக்கை உருவாக்கியிருக்கிறோம். 300 மணி நேரங்களைச் செலவிட்டிருக் கிறோம். 70 கிலோ எடை. 170 செ.மீ. உயரம். இதில் 12 ஆயிரம் வேஃபர் தாள்கள், 35 கிலோ க்ரீம்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். உலகிலேயே சாப்பிடக்கூடிய ஆடை இது ஒன்றுதான்! லண்டனில் நடைபெறும் சர்வதேச கேக் கண்காட்சியில் இது இடம்பெற்றுள்ளது. இந்த ஆடையை அணிய முடியாதுதான். ஆனால் திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் சுவைக்க முடியும் என்கிறார் சில்வியா.

சுவைக்கக்கூடிய ஆடை!

ஹாங்காங்கில் ரெயின்போ சாண்ட்விச் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிறது. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே 4 வண்ணங்களும் சுவைகளும் கொண்ட சீஸ் வைக்கப்பட்டிருக்கிறது. சூடாகச் சாப்பிடும்போது சீஸ் உருகி, கண்களைக் கவர்கிறது. நாவில் நீர் சுரக்க வைக்கிறது. சுவையும் பிரமாதமாக இருக்கிறது. புகைப்படம் எடுப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் வண்ணம் குறித்த கவலை இல்லை. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்கள் ரெயின்போ சாண்ட்விச்சை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மயக்கும் ரெயின்போ சாண்ட்விச்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8513044.ece?homepage=true&relartwiz=true

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: சுற்றுச்சூழலுக்கு உற்ற நண்பன் ’சைக்கிள் கார்!’

 
car_2826765h.jpg
 

ஸ்வீடனைச் சேர்ந்த டிசைனர் மைகேல் கெஜெல்மன், மிகச் சிறிய காரை உருவாக்கியிருக்கிறார். வெளியில் கார் போல இருந்தாலும், உள்ளே எலக்ட்ரிக் சைக்கி ளின் பாகங்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. இதை ‘பாட்ரைட் பைசக்கிள் கார்’ என்று அழைக்கிறார் மைக்கேல்.

‘‘நான் சைக்கிள் பயணத்தை அதிகம் விரும்புவேன். ஆனால் ஸ்வீடன் வானிலை, சைக்கிளில் செல்வதற்கு வசதியாக இருக்காது. அதனால்தான் நானே இந்த 4 சக்கர சைக்கிளை உருவாக்கினேன். மழை, வெயில், பனி என எந்தப் பருவ நிலையும் இந்த சைக்கிள் காரைப் பாதிப்பதில்லை. தினமும் இந்த வண்டியில்தான் பயணம் செய்கிறேன். அவ்வளவு வசதியாக இருக்கிறது இந்த சைக்கிள் கார். சாதாரண எலக்ட்ரிக் சைக்கிளின் பாகங்களைத்தான் பொருத்தியிருக்கிறேன். தண்ணீர் உள்ளே செல்லாது. பனிச் சாலையிலும் சளைக்காமல் செல்லும் டயர்கள். பயணத்தை இனிமையாக்கும் மென்மையான இருக்கை. 70 கிலோ எடையும் 145 செ.மீ. உயரமும் கொண்ட சைக்கிள் கார் பார்ப்பதற்குப் பிரமாதமாக இருக்காது. குழந்தைகள் வண்டியைப் பெரியவர்கள் ஓட்டுவது போலத் தோன்றும். ஆனால் மிகவும் செலவு குறைந்த வண்டி. சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது. 250 வாட் எலக்ட்ரிக் மோட்டார், 60 கி.மீ. தூரத்துக்குப் பயணம் செய்யும் ஆற்றலை வழங்கு கிறது. மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் இந்த காரில் பயணம் செய்ய முடியும். இந்த வண்டிக்கு அங்கீகாரம் கிடைப்பதுதான் சிக்கலாக இருக்கிறது. இது காரும் இல்லை. சைக்கிளும் இல்லை. விரைவில் அங்கீகாரம் கிடைத்தவுடன், இதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய இருக்கிறேன். சுற்றுச்சூழலை முக்கியமாகக் கருதினால் சைக்கிள் காரை எல்லோரும் வாங்குவார்கள். உலகம் முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்’’ என்கிறார் மைக்கேல்.

சுற்றுச்சூழலுக்கு உற்ற நண்பன் ’சைக்கிள் கார்!’

ந்தோனேஷியாவில் வசிக்கும் டோரஜா மக்கள், இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில், ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவை நடத்துகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தங்கள் உறவினர்களின் கல்லறைகளைத் தோண்டுகிறார்கள். மட்கிப் போன உடல்களை வெளியே எடுக்கிறார்கள். சுத்தம் செய்கிறார் கள். நவீன ஆடைகளை அணிவிக்கிறார்கள். அவரவர் விருப்பத் துக்கு ஏற்ப, கூலிங் க்ளாஸ், ஆபரணங்கள், தொப்பி போன்றவற்றை அணிவித்து அழகு பார்க்கிறார்கள். கிராமம் முழுவதும் இந்த எலும்புக்கூடுகளை எடுத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். மீண்டும் புதுத் துணி களில் சுற்றி, உடலை நன்றாகக் கட்டி, கல்லறையில் வைத்து விடுகிறார்கள். ‘’டோரஜா மக்களின் மிகப் பழங்காலப் பழக்கங்களில் இதுவும் ஒன்று. நம் அன்புக்குரிய முன்னோர்களின் இறந்த உடல்களைப் பராமரிப்பின்றி, அப்படியே கல்லறையில் வைத்திருப்பது அவர்களுக்குச் செய்யும் அவமரியாதை. மனிதர்கள் இருந்தாலும் இறந்தாலும் ஒரே மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்பதற் காகவே இந்தத் திருவிழாவை நடத்தி வருகிறோம்’’ என்கிறார் ஒரு கிராமவாசி. ‘‘இந்தப் பிரத்யேக விழாவைப் பற்றி அறிந்துகொள்வதற் காகவே நான் சென்றேன். இறந்த உடல்களை எடுத்து, தோள்களில் சுமந்து, சுத்தம் செய்யும் பணிகளை ஆண்களும் பெண்களும் சிறிதும் முகம் சுளிக்காமல் செய் கிறார்கள். கோரமான காட்சியாக இருந்தாலும் குழந்தைகள் கூட பயமின்றி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த மனிதர்கள் முன்னோர்கள் மீது செலுத்தும் அன்பும் மரியாதையும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நவீன காலத்திலும் இந்த விழாவைக் கொண்டாடுவது இன்னொரு ஆச்சரியம்’’ என்கிறார் புகைப்படக்காரர் மோரிசன்.

டோரஜா மக்களின் மரியாதையை என்னவென்று சொல்வது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8515991.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: பணக்காரர்கள் உண்ணும் கோழி!

 
 
masala_2445576f.jpg
 

வியட்நாமில் டாங் டாவோ என்ற அரிய வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவை மிகவும் பிரபலமானவை. மிக முக்கியமான நிகழ்ச்சிகளிலும் வசதியானவர்களின் இல்லங்களில் மட்டுமே இந்தக் கோழிகளை வைத்து உணவு தயாரிக்கிறார்கள். சாதாரண கோழிகளை விட உருவத்தில் இவை மிகவும் பெரியவை.

இவற்றின் கால்கள் தடிமனாகவும் சதை முடிச்சுகளுடனும் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தாலும் கோழியின் சுவை அட்டகாசமாக இருக்கிறது என்கிறார்கள். ஒரு கிலோ டாங் டாவோ கோழி 1000 முதல் 1200 ரூபாய் வரை வியட்நாமில் உள்ள மிகச் பணக்கார உணவு விடுதிகளில் மட்டுமே டாங் டாவோ இறைச்சி கிடைக்கிறது. டாங் டாவோ கோழிகள் பிரத்யேகப் பண்ணைகளில், தனித் தனிக் கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன.

டாங் நய் மாகாணத்தில் வு டுவான் என்பவரின் பண்ணையில் 400 ஜோடி கோழிகள் இருக்கின்றன. தினமும் நகரில் உள்ள முக்கிய உணவு விடுதிகளுக்காக 12 கோழிகள் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. டாங் டாவோ கோழிகளுக்குத் தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை. நல்ல வருமானம் கிடைக்கும் தொழில் என்றாலும், இந்தக் கோழிகளைப் பராமரிப்பது கடினம் என்பதால் மக்கள் வளர்க்க விரும்புவதில்லை.

வித்தியாசமான இனம்தான் டாங் டாவோ…

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பதிப்பாளர், புதுமையான விதத்தில் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சூழலியலைப் புரிந்துகொள்ளவும் மரம் வளர்ப்பைக் கண் முன்னால் பார்க்கும்படியும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். மரம் பற்றிய தகவல்களுடன் விதைகளும் புத்தகத்தில் வைத்து, தைக்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைகள் படித்து முடித்த பிறகு, தாங்களே மண்ணைத் தோண்டி, இந்தப் புத்தகத்தைப் புதைத்து, தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். சில நாட்களில் புத்தகத்தில் இருந்து துளிர் எட்டிப் பார்க்கும். தொடர்ந்து பராமரித்தால் மரத்தின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்துக்கொள்ள முடியும். 8 முதல் 12 வயதுடைய குழந்தைகள் படிக்கும் விதத்தில் ‘மரம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், உலகிலேயே முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.

மரத்திலிருந்து காகிதம்… காகிதத்திலிருந்து மரம்!

மட்டில்டா பூனை இணைய தளங்களில் ஏராளமான ஆதரவை பெற்று வருகிறது. சாதாரண பூனையின் கண்களை விட மட்டில்டாவின் கண்கள் மிக மிகப் பெரிதாக இருக்கின்றன. வேற்றுக்கிரகவாசிகளின் கண்கள் போன்று பிரம்மாண்டமாக இருக்கின்றன. இத்தனை பெரிய கண்கள் இருந்தும் மட்டில்டாவால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

பிறக்கும்போது சாதாரணமாக இருந்த மட்டில்டா, ஓராண்டுக்குள் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டது. மருத்துவம் செய்து முடித்தபோது, மட்டில்டாவின் கண்கள் பெரிதாகிவிட்டன. இது மரபணு குறைபாட்டால் ஏற்பட்ட பிரச்சினை. கண்களில் இருந்த லென்ஸ் நகர்ந்துவிட்டதால், பார்க்கும் திறனை இழந்துவிட்டது என்கிறார்கள் மருத்துவர்கள். மட்டில்டாவின் கண் அறுவை சிகிச்சைக்காக ஏராளமான நன்கொடைகள் குவிந்துள்ளன. மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால், கவனமாகவும் மெதுவாகவும் ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள்.

மட்டில்டா விரைவில் குணமாகட்டும்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/article7336485.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: ’கடல்குதிரை வில்லா!’

 
 
masala_2399308f.jpg
 

கேரளத்திலும் ஸ்ரீநகரிலும் படகு வீடுகளைப் பார்த்திருப்போம். ஆனால் பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடம்பர படகு வீட்டை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் படுக்கையறை தண்ணீருக்குள் இருக்கிறது.

முதல் தளத்தில் நீச்சல் குளம். மேல்தளத்தில் சமையலறை. வீட்டுக்கு வெளியே செயற்கை பவளப்பாறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடி வீட்டுக்குள் படுத்துக்கொண்டே தண்ணீருக்குள் நீந்திச் செல்லும் மீன்கள், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களை ரசிக்கலாம். ’கடல்குதிரை வில்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இதுபோன்று இன்னும் 40 வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.

இயற்கை வளம் மிகுந்த இடத்தையும் மாசுபடுத்த முடிவு செஞ்சாச்சா….

சீனாவின் ஷாங்காய் பகுதியில் வசிக்கிறார் கு ஜி. இவர் ஒரு பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் வேலை செய்து வருகிறார். இளம் வயது ஆசிரியர். மாணவர்களிடம் மிகவும் நட்பாகப் பழகக்கூடியவர். இவருடன் மாணவர்கள் வெளியே செல்வது வழக்கம். அப்படிப் போகும்போது ஒரு சில மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு வருவார்கள். மாணவன் ஒருவன் ஆசிரியருக்குக் குடை பிடிக்கிறான் என்ற செய்தி புகைப் படத்துடன் இணையதளங்களில் வேகமாகப் பரவியது.

பலரும் கு ஜிக்குக் கண்டனம் தெரிவித்தனர். செய்தியையும் புகைப்படத்தை யும் பார்த்து அதிர்ந்து போனார் கு ஜி. பள்ளியிலும் அவர் மீது விசாரணை நடைபெற்றது. இறுதியில் கு ஜி மீது எந்தக் குற்றமும் இல்லை, ஒரு சில ஆர்வக் கோளாறு மாணவர்கள் தாங்களாகக் குடைபிடித்தார்கள் என்று தெரியவந்தது. இணையத்தின் மோசமான பக்கத்தைக் கண்ட கு ஜி அதிர்ச்சியில் இருக்கிறார்.

அடப்பாவமே…

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரமனி துருவசுலா என்ற மருத்துவர், தம்பதியருக்கு இடையேயான பிரச்சினைகளை மிக எளிதான வழியில் தீர்த்து வைக்கிறார். மனோதத்துவ மருத்துவரான ரமனியிடம் ஏராளமானவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி கேட்கிறார்கள். அவர்களிடம் குறைகளைக் கேட்ட பிறகு, Ikea மரச்சாமன்கள் விற்கும் கடையில் மேஜை, அலமாரி போன்ற ஏதோ ஒரு பொருளை வாங்கி, வீட்டில் வைக்கச் சொல்கிறார். Ikea நிறுவனத்தில் மேஜைகளாகவோ, அலமாரிகளாகவோ பொருட்கள் வருவதில்லை. தனித்தனிப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, சிறிய அட்டைப் பெட்டியில் போட்டுக் கொடுத்து விடுவார்கள்.

வீட்டில் அவற்றைப் பிரித்து, நாமே இணைத்து மேஜையையோ, அலமாரியையோ உருவாக்க வேண்டும். இதைத் தனியாளாகச் செய்ய முடியாது. கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக்கும்போது தம்பதியரிடம் ஒற்றுமை, பொறுமை, அன்பு எல்லாம் உருவாகி விடுகிறது. அடுத்த தடவை மருத்துவரைச் சந்திக்கும்போது மிக அன்பான தம்பதியராக மாறிவிடுகிறார்கள். அடுத்து வரும் ஒன்றிரண்டு சந்திப்புகளில் அவர்களின் பிரச்சினைகளை முழுமையாகச் சரி செய்துவிடுகிறார் ரமனி.

அடடா! மருந்து, மாத்திரை இல்லாமல் நல்ல டெக்னிக்கா இருக்கே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/article7184069.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: நீண்ட ஆயுள் வாழ!

 
masala_2829224f.jpg
 

கிரேக்க தீவுகளில் ஒன்று இகேரியா. இங்கே நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலேயே அங்குள்ள மனிதர்களின் ஆயுட் காலம்தான் அதிகமாக இருக்கிறது. அங்கே வசிக்கும் 3 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். மற்றவர்கள் நூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட ஆயுள் மட்டுமல்ல, மிக ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். புற்றுநோய், மாரடைப்பு, மன அழுத்தம், டிமென்சியா போன்ற நோய்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக இகேரியா மக்களின் ஆரோக்கிய ரகசியத்தை அறிந்துகொள்ள பலரும் முயன்று வருகிறார்கள். ஆரோக்கியமான உணவு, மதியம் சிறிது தூக்கம், மகிழ்ச்சி ஆகியவைதான் அவர்களின் ஆரோக்கிய ரகசியம் என்று முடிவுக்கும் வந்திருக்கிறார்கள்.

மத்தியத் தரைக்கடலுக்கு கிழக்கே அமைந்திருக்கும் இகேரியா தீவில், அறிவியல் பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. டாக்டர் கிறிஸ்டினா, ‘‘இவர்கள் சாப்பிடும் காட்டு பீன்ஸில் சிவப்பு ஒயினில் இருப்பதை விட 10 மடங்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கின்றன. உருளைக்கிழங்குகளையும் ஆட்டுப் பாலையும் அதிக அளவில் எடுத்துக்கொள்கிறார்கள். இறைச்சியை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. அதேபோல வெள்ளைச் சர்க்கரையும் சேர்த்துக் கொள்வதில்லை. காபியைத் தவிர்த்து, மூலிகை தேநீரை அதிகம் பருகுகிறார்கள். இவர்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து குறைவான கலோரிகளே கிடைக்கின்றன. மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவதால் மாரடைப்பு அபாயம் குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார்.

எழுத்தாளர் டான் பட்னர், ‘‘நான் பல ஆண்டுகள் இகேரியாவில் தங்கி, ஆய்வு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் 79 வயது வரை வாழக்கூடிய ஒருவர், இகேரியாவில் 92 வயது வரை வாழ முடியும். நீண்ட ஆயுளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார்கள். இகேரியாவைச் சேர்ந்த கோஸ்டாஸ் ஸ்பான்சாஸ், அல்பேனிய போரில் தன் காலை இழந்தார். பிறகு இகேரியாவில் வசித்து வருகிறார். 2013-ம் ஆண்டு நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பழக்கவழக்கம், ஆரோக்கியமான உணவு என்று பல விஷயங்கள் இவர்களின் நீண்ட ஆயுளில் அடங்கியிருக்கின்றன’’ என்கிறார்.

இகேரியர்களைப் பின்பற்றினால் நீண்ட ஆயுள் வாழலாம்!

ஜெர்மனில் ‘பியர் யோகா’ அல்லது ‘போகா’ என்ற கலை இளைஞர்களிடம் பரவி வருகிறது. யோகாவை பியர் பாட்டிலுடன் செய்வதற்குப் பெயர்தான் போகா. பாட்டிலைத் தலை மீது வைத்துக்கொள்ளலாம், கைகளில் பிடித்துக்கொள்ளலாம், தேவையானால் குடிக்கவும் செய்யலாம். ஆனால் யோகா செய்துகொண்டே, இவற்றையும் செய்ய வேண்டும். இந்த போகாவை உருவாக்கியவர் ஜுலா. ‘‘பப்களில் இளைஞர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க முயன்றேன்.

ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு ஏற்றார்போல பியர் பாட்டில் யோகாவை உருவாக்கினேன். இப்போது பலரும் ஆர்வத்துடன் வருகிறார்கள்’’ என்கிறார் ஜுலா. ‘‘உடற்பயிற்சியின்போது ஆல்கஹால் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. தசைகள் கட்டுப்படாது. பொறுமை இருக்காது. ஆல்கஹாலில் இருந்து வெளிவர இதுபோன்ற பயிற்சிகள் உதவ வேண்டுமே தவிர, அவற்றை ஊக்குவிக்கக் கூடாது. உயிருக்கே ஆபத்து வரலாம்’’ என்று எச்சரிக்கிறார் மருத்துவர் இன்கோ ஃப்போபோயிஸ்.

புதுமை என்ற பெயரில் உயிருடன் விளையாடலாமா ஜுலா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/article8523428.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பார்வையற்ற கால்பந்து வீரர்!

 
maslaa_2830383f.jpg
 

கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் தன்னுடைய சாத்தியமில்லாத கனவைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்! பார்வை இழந்த ஜேக் ஓல்சன், கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்! ஜேக் பிறக்கும்போதே ரெட்டினாபிளாஸ்டோமா என்ற அரிய வகை புற்றுநோய் இடது கண்ணைத் தாக்கிவிட்டது. பிறந்த 8 மாதங்களில் அறுவை சிகிச்சை மூலம் இடது கண்ணை அகற்றிவிட்டனர். புற்றுநோய் வலது கண்களுக்குப் பரவாமலிருக்க, பல முறை கீமோ தெரபி அளித்தனர். ஆனாலும் 12 வயதில் ஜேக், தன்னுடைய வலது கண்ணையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.

‘‘கால்பந்து பயிற்சி மைதானத்துக்குச் சென்று எல்லாவற்றையும் காதால் கேட்டுக்கொண்டிருப்பேன். வீரர்கள் ஒவ்வொருவரும் என் நண்பர்களானார்கள். கால்பந்து மீட்டிங், பயிற்சி, பந்தயம், விருந்து என்று அவர்களுடனேயே என்னை அழைத்துச் சென்றார்கள். என்னுடைய ஆர்வத்தையும் கால்பந்து பற்றிய என் அறிவையும் பார்த்தவர்கள், கவுரவ உறுப்பினராக அணியில் சேர்த்துக்கொண்டனர். நானும் விளையாட ஆரம்பித்தேன். என் வாழ்க்கையில் அற்புதம் நிகழ ஆரம்பித்தது. பள்ளி கால்பந்து அணியில் இடம்பெற்றேன். என் புலன்களைக் குவித்து, விளையாட்டைக் கணித்து, ஆடி வந்தேன். 2012-ம் ஆண்டு பயிற்சியாளர் சக் பீட்டர்சன், அடுத்த சீசனில் தன்னுடைய அணியில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணம்.

கடுமையாகப் பயிற்சி செய்தேன். ஜேக் நம் அணியின் சொத்து என்று அறிமுகம் செய்து வைத்தார் பீட்டர்சன். அணியில் உள்ள அத்தனை வீரர்களும் என்னைச் சக வீரனாக மதித்தனர், ஊக்குவித்தனர், உதவி செய்தனர். அடுத்து பல்கலைக்கழக அணியிலும் இடம்பெற்றேன். வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களும் சவால்களும்தான் உங்களை உறுதியானவனாக மாற்றும். வாழ்க்கையில் அனைத்தும் சரியாக அமையாவிட்டாலும்கூட சோர்ந்துவிடக்கூடாது. சற்றும் மனம் தளராமல் எப்படி மீண்டு வருவது என்று யோசிப்பதில்தான் நம் வாழ்க்கையின் அர்த்தமே அடங்கியிருக்கிறது. கடினம்தான், ஆனாலும் போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது’’ என்கிறார் ஜேக் ஓல்சன்.

பார்வையற்ற கால்பந்து வீரர் ஜேக் ஓல்சனுக்கு ஒரு பூங்கொத்து!

ஜார்ஜியாவில் வசிக்கும் 22 வயது அலெக்ஸ் ருயிஸ், மாயோ மெக்ஸிகன் க்ரில் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு வாடிக்கையாளர் தனக்குக் கைகள் இல்லாததால், சாப்பிடுவதற்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். அலெக்ஸும் உதவ சம்மதித்தார். அவரே உணவை எடுத்து வந்து, ஒவ்வொரு ஸ்பூனாக ஊட்டினார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதில் அளித்தார். அந்த மனிதர் சாப்பிட்டு முடிக்க அரை மணி நேரமானது. அருகில் இருந்த வாடிக்கையாளர்கள் இந்தக் காட்சியை, கேமராவில் பிடித்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். சக ஊழியர்கள் அலெக்ஸைப் பாராட்டினார்கள். ‘‘ஒருவருக்கு உதவும்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை நோக்கிச் சென்றுவிட்டார் அலெக்ஸ்.

ஆஹா! உதவுவதில் எத்தனை மகிழ்ச்சி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/article8527490.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அரை நூற்றாண்டுக்குப் பிறகு அட்டகாசமான சந்திப்பு!

 
 
masala_2831674f.jpg
 

வியட்நாம் போரில் பங்கேற்ற டென்னிஸ், டாம், பாப் ஃபால்க், பாப் டிவெனிஸியா ஆகிய 4 முன்னாள் ராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள். 50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு இதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப் புகைப்படத்தில் இருப்பது போலவே நால்வரும் நின்று, மீண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

“போருக்கு முதல் நாள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது எடுத்த புகைப்படம் இது. அதற்குப் பிறகு 11 ஆண்டுகள் வியட்நாம் காடுகளில் கடுமையான வாழ்க்கை. தினமும் 20 மைல் தூரம் காட்டுக்குள் நடக்க வேண்டும். நிலத்தைத் தோண்டி, அதற்குள் உறங்க வேண்டும். இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு நாங்கள் நால்வரும் சந்திக்கவே இல்லை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

போரில் இருந்து திரும்பிய பிறகு நாங்கள் நால்வரும் கட்டிட வேலை, வீட்டுக் காவல், வங்கி என்று பல வேலைகளுக்குச் சென்றுவிட்டோம். திருமணம் செய்து, குழந்தை குடும்பம் என்று வாழ்ந்து முடித்துவிட்டோம். 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இணையத்தின் மூலம் ஒவ்வொருவராக மீண்டும் அறிமுகம் ஆனோம். நேரில் சந்திக்க 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைஞர்களாக சந்தித்த நாங்கள், 70 வயதுகளில் முதியவர்களாகச் சந்தித்திருக்கிறோம். போருக்கு முன்னால் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படத்தை மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறு உருவாக்கம் செய்ய முடியும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. ஆனால் நடந்திருக்கிறது’’ என்கிறார் டாம்.

அரை நூற்றாண்டுக்குப் பிறகு அட்டகாசமான சந்திப்பு!

சீனாவின் பெய்ஜிங் நகரில், நாய்கள், பூனைகள், சேவல்கள், முயல், ஆமை, வாத்துகள், கொரில்லா ஆகிய விலங்குகளுக்கான கல்லறை ஒன்று 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், அவை இறந்துபோன பிறகும் கூட மறக்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்கள் செல்லப் பிராணியை நினைத்துப் போற்றுவதற்காகவே வைபு என்ற இந்தக் கல்லறை உருவாக்கப்பட்டிருக்கிறது. 1 சதுர மீட்டர் நிலம் 21,300 ரூபாய். இதைப் பராமரிப்பதற்கு ஆண்டுக்கு 530 ரூபாய் கட்டணம். அவரவர் இடத்தில் விருப்பப்படி கல்லறையைக் கட்டிக்கொள்ளலாம்.

செல்லப் பிராணியின் நினைவு நாள், பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களில் கல்லறைக்கு வந்து செல்லப் பிராணிக்கு விருப்பமான உணவுகளை படைக்கிறார்கள். துணிகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களை வைத்துவிட்டுச் செல்கிறார்கள். யாங், அவரது மனைவி ஸாங் ஃபான் இருவரும் வாரம் தோறும் இந்தக் கல்லறைக்கு வருகிறார்கள். “எங்களின் மூத்தக் குழந்தை பிக் பேபி என்று அழைக்கப்பட்ட பூனையின் கல்லறை இங்கு உள்ளது. பூனைக்குப் பிடித்த உணவுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் கொண்டு வந்து வைக்கிறோம். கல்லறையில் சுற்றி வரும் பூனைகள் இந்த உணவுகளை உண்டுவிடுகின்றன. எங்கள் பிக் பேபியே வந்து சாப்பிடுவதாக நினைத்து, மகிழ்கிறோம்” என்கிறார் ஸாங் ஃபான்.

செல்லப் பிராணிகளுக்கு கல்லறை கட்டி அன்பு செலுத்தும் ஈர நெஞ்சங்கள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8531396.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: குப்பை கொட்டுவதற்குக் கட்டணம்

 
 
masala_2833318f.jpg
 

உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் அதிக அளவில் வீணாகி வருகின்றன. இந்தப் பிரச்சினையைச் சரி செய்வதற்கு தென்கொரிய அரசு ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. பணத்தைச் செலுத்திவிட்டுதான், உணவுப் பொருட்களைக் குப்பையில் கொட்ட வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு கிலோ உணவு குப்பையில் கொட்டுகிறோமோ, அவற்றுக்கு ஏற்றவாறு கட்டணத்தைச் செலுத்தவேண்டும். இதற்காகத் தனித் தனி நவீன குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 3 வழிகளில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடண்டிஃபிகேஷன் கார்டை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருமுறை குப்பைக் கொட்டும்போதும், கார்டைத் தேய்க்க வேண்டும்.

குப்பைத் தொட்டி திறக்கும், எடையைக் காட்டும். மாத இறுதியில் மொத்த பணத்தையும் செலுத்திவிட வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தக் குப்பைத் தொட்டியில் 60 வீடுகளின் உணவுக் கழிவுகளைக் கொட்ட முடியும். இரண்டாவது முறை, பணம் கட்டி குப்பைகளுக்கான பைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பையிலும் எவ்வளவு எடை வரைக்கும் குப்பைகளைக் கொட்ட முடியும் என்று எழுதப்பட்டிருக்கும். 10 லிட்டர் குப்பைகளுக்கான பைகளின் விலை 66 ரூபாய். இந்தப் பைகளை ஒரு தொட்டியில் தனியாகப் போட வேண்டும். மூன்றாவது முறை, பார் கோடு ஸ்டிக்கர்களை வாங்கி பையில் ஒட்டி, உணவுக் கழிவுகளைப் போட்டு மட்கும் குப்பைகளுக்கான தொட்டியில் கொட்ட வேண்டும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் 3 விதமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக உணவுகளை வீணாக்குபவர்கள் அதிக அளவில் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் உணவுப் பொருட்கள் வீணாவது கணிசமாகக் குறைந்து வருகிறது. தென்கொரியாவில் 28 சதவீத உணவுப் பொருட்கள் வீணாகிக்கொண்டிருந்தன. சிறிய உணவகங்களில் 68 சதவீத உணவுகள் வீணாகின. 2008-ம் ஆண்டு 5.1 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீணாகின, 2014-ம் ஆண்டு 4.82 மில்லியன் டன் உணவுப் பொருட்களாகக் குறைந்துள்ளன.

குப்பை கொட்டுவதற்குக் கட்டணம்… நல்ல திட்டம்!

ஜெர்மன் நகரங்களில் எத்தனையோ போக்குவரத்து சிக்னல்கள் வைக்கப்பட்டிருந்தும் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. ‘’என்ன எச்சரிக்கை வைத்தாலும் மக்கள் நிமிர்ந்து பார்த்தால்தானே? எல்லோரும் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு குனிந்தபடியே செல்கின்றனர். சாலை, வாகனங்கள், மனிதர்கள் என்று எதையும் கவனிப்பதில்லை. வாகனங்கள், ட்ராம் வண்டிகள் மீது அடிக்கடி மோதி, விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்காக எச்சரிக்கும் விதத்தில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பொருத்தினோம். எச்சரிக்கைகள் கொடுத்துக்கொண்டே இருந்தோம். யாரும் அவற்றை எல்லாம் கவனிக்கவில்லை. இவர்களுக்காகவே ஸ்மார்ட் போனில் போக்குவரத்து விதிகளைச் சொல்லும் எச்சரிக்கைகளை அப்ளிகேஷனாக உருவாக்கிவிட்டோம். அருகில் வாகனங்கள் வந்தால், போனில் எச்சரிக்கை வந்து நகர்ந்து சென்றுவிடலாம். இதற்கு ‘ஸ்மாம்பீஸ்’ என்று பெயர்’’ என்கிறார் ஒரு போக்குவரத்து அதிகாரி.

ம்... ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்டது உலகம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8536250.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலக்கியம் படிக்க!

 
 
masala_2834739f.jpg
 

போரால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில், குழந்தைகள் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளி ஆசிரியர் சைக்கிளில் சுற்றி வருகிறார். சாபேர் ஹுசைனி ஆப்கானிஸ்தானின் பாமியன் பகுதியில் வசித்து வருகிறார். தன்னுடைய சைக்கிளில் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு நகரும் நூலகமாக கிராமங்களுக்குச் சென்று வருகிறார்.

‘‘6 மாதங்களுக்கு முன்பு எனக்கு இந்த யோசனை வந்தது. என் இலக்கிய நண்பர்களிடம் பேசினேன். வெளிநாடுகளில் வாழும் நண்பர்களிடம் நன்கொடை திரட்டினேன். குழந்தைகளுக்கான 200 புத்தகங்கள் வாங்கினேன். பாமியன் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் வார இறுதி நாட்களில் பயணம் செய்வேன். இன்று என்னுடன் 20 தன்னார்வலர்கள் சேர்ந்துவிட்டனர். 6 ஆயிரம் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. பெரும்பாலான புத்தகங்கள் ஈரானில் இருந்து வாங்கப்பட்டவை. சைக்கிள் எளியவர்களின் வாகனம். எங்களால் கார் வைத்துக்கொண்டு செல்ல இயலாது.

தலிபான்கள் சைக்கிளில் சென்று குண்டு வெடிப்பை நிகழ்த்துவார்கள். வன்முறையின் அடையாளமான இந்த சைக்கிளை அறிவின் அடையாளமாக மாற்ற விரும்பினேன். அதனால்தான் சைக்கிளில் செல்கிறோம். சற்று வளர்ந்த குழந்தைகள் என்பதால் எழுத, படிக்கத் தெரிகிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற புத்தகங்களைக் கொடுக்கிறோம். ஒரு கிராமத்தில் புத்தகங்கள் கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் செல்வோம். படித்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, புதிய புத்தகங்களை வழங்குவோம். நான் புத்தகங்கள் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை.

அமைதி, சகிப்புத்தன்மை, போதைப் பொருட்களின் தீமை போன்றவற்றைப் பற்றிப் பேசுவேன். இந்த வேலையை நிறுத்தும்படி எனக்குச் சில மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியராக இருக்கும் என் மனைவியிடம், என்னைத் தாலிபன்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயமுறுத்துகிறார்கள். போர் நடந்த நாட்டில் வாழும் குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பார்கள். வன்முறை, மரணம் எல்லாம் சாதாரணமாகப் பார்த்திருப்பார்கள். இந்தப் புத்தகங்கள் அவர்களின் மனநிலையை மாற்றியிருக்கின்றன’’ என்கிறார் சாபேர் ஹுசைனி.

நீங்கள் செய்துவரும் சேவை மிகப் பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கும் ஹுசைனி!

வாழைப்பழத்தை வைத்து இப்படி ஒரு தொழிலை இதுவரை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். டெக்சாஸில் வசிக்கும் டேவோன்ட் வில்சன், வாழைப் பழங்களின் மீது படம் வரைந்து, மீசை, தாடியைக்கூட ஒட்டி வைத்துவிடுகிறார். அலங்கரிக்கப்பட்ட ஒரு வாழைப்பழத்தின் விலை 650 ரூபாய்.

‘‘நான் மருத்துவமனையில் வேலை செய்து வந்தேன். அடிக்கடி ஏதாவது வரைந்துகொண்டே இருப்பேன். ஒருமுறை வாழைப்பழத்தின் மீது வரைந்தேன். அதைப் பார்த்து அனைவரும் பாராட்டினர். இதையே தொழிலாகச் செய்ய முடிவெடுத்தேன். எல்லோரும் சிரித்தனர். என் திட்டப்படி விரைவில் இந்தத் தொழில் மூலம் 65 லட்சம் ரூபாய் சம்பாதித்துவிடுவேன். மார்கர் பேனா, ஒட்டு தாடி, மீசை, வாழைப்பழங்கள்தான் முதலீடு. ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் வருகின்றன. ஒரு நாளைக்கு 75 வாழைப்பழங்களில் படம் வரைவேன். பழத்தை பிளாஸ்டிக் தாளில் சுற்றி, உரிய இடங்களுக்கு அனுப்பி விடுவேன்’’ என்கிறார் வில்சன்.

4 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாத ஓர் ஓவியத்துக்கு இத்தனை விலையா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article8540849.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மண் இன்றி, சூரிய வெளிச்சம் இன்றி ஒரு தோட்டம்!

 
china_2835976f.jpg
 

சீனாவின் ஃபுஸொவ் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது அன்பிங் பாலம். 12-ம் நூற்றாண்டில் மிகப் பெரிய கற்களால் இந்தப் பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 2 கி.மீ. நீளத்துக்கு மிக நீண்ட பாலம். 1905-ம் ஆண்டு வரை சீனாவின் மிக நீளமான பாலமாக அன்பிங் இருந்தது. 1138-ம் ஆண்டிலிருந்து 1151-ம் ஆண்டு வரை இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. படகு வடிவில் உள்ள 331 உத்திரங்கள் மீது பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய உத்திரம் 25 டன் எடை கொண்டது. பாலத்தின் இரு பக்கங்களிலும் 22 மீட்டர் உயரத்துக்கு ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பார்த்தால் பாலம் முழுவதையும் காண முடியும். பாலத்தில் ஆங்காங்கே 5 கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நடந்து வருகிறவர்கள் களைப்பாறுவதற்கும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதற்கும் இவை உதவின. தற்போது ஒரே ஒரு கூடாரம் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறது. வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 8 நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. சீனாவின் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்பதால், பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நம்ம நாட்டில் பாலம் கட்டுகிறவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்…

ல்லோருக்கும் தோட்டத்தில் நாமே காய்களை விளைவித்து, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் நெருக்கடியான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தோட்டம் போடு வதற்கு வசதி இல்லை. பால்கனி இருப்பவர்கள் மாடித் தோட்டம் போடலாம். பால்கனியும் இல்லாமல் மிகச் சிறிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக. ஜப்பானிய நிறுவனமான சி எஸ்டெக், வீட்டுக்குள் செடிகளை வளர்ப்பதற்கு ஃபூப் என்ற கருவியை உருவாக்கியிருக்கிறது. இதற்கென்று தனியாகப் பெரிய அளவுக்கு இட வசதி தேவை இல்லை. சூரிய வெளிச்சமும் தேவை இல்லை. மிகச் சிறிய ஹைட்ரோபோனிக் விவசாயக் கருவியை வீட்டில் வைக்க வேண்டும். மண் தேவை இல்லை. நீர் மூலமே இந்தச் செடிகள் வளர்கின்றன. கருவிக்குள் சின்னச் சின்ன பிளாஸ்டிக் கிண்ணங்கள் இருக்கின்றன. இவற்றில் சிறிய ஸ்பாஞ்ச் வைக்கப்பட்டிருக்கும். இதில் விதைகளை வைத்து விட வேண்டும். ஸ்பான்ஞ்சுக்குள் தண்ணீர் விழும். பல வகையான கீரைகளை வளர்த்தால் மண்ணில் வளர்ப்பதை விட வேகமாக வளரும். மரத்தால் செய்யப்பட்டு, கண்ணாடியால் மூடப்பட்டிருக்கிறது ஃபூப். பட்டன்களோ, ஸ்விட்ச்களோ கிடையாது. தட்பவெப்பம், ஈரப்பதம், வெளிச்சம், தண்ணீர் அளவுகள் போன்றவை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்ஸ் வழியாக ஃபூப்புக்கு வந்துவிடும். ஸ்மார்ட்போனில் இருந்து இண்டோர் கார்டன் அலர்ட் வந்துகொண்டே இருக்கும். செடி பறிக்கக்கூடிய அளவில் தயாரானதும் தகவல் வரும். ஃபூபைத் திறந்து, பூச்சிகள் அரிக்காத, உரங்கள் இல்லாத பசுமையான கீரைகளைப் பறித்துக்கொள்ளலாம்.

‘‘செப்டம்பர் மாதம்தான் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கிறது ஃபூப். ஆனால் இப்போதே ஆர்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஒரு ஃபூப் 24 ஆயிரம் ரூபாய்’’ என்கிறார் சி எஸ்டெக் அதிகாரி.

மண் இன்றி, சூரிய வெளிச்சம் இன்றி ஒரு தோட்டம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8543877.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: சைக்கிள் காதல்!

 
 
masala_2444406f.jpg
 

பிரிட்டனில் வசிக்கும் 47 வயது அன்னா ரெஃபலும் 55 வயது லீ அட்கின்சனும் 8 ஆண்டு கால நண்பர்கள். இருவருக்கும் சைக்கிளில் பயணம் செய்வது என்றால் மிகவும் விருப்பமான விஷயம். சைக்கிளிங் க்ளப்பில்தான் இருவரும் சந்தித்தனர். வார இறுதியில் சேர்ந்தே சைக்கிள் பயணம் செய்வார்கள். நட்பு காதலாக மாறியது. 1400 மைல் தூரம் நீண்ட சைக்கிள் பயணத்தைத் திட்டமிட்டு, அந்தப் பயணத்துக்கு நடுவே திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள்.

தினமும் 6 மணி நேரத்தில் 60 முதல் 85 மைல்கள் பயணம் செய்கிறார்கள். பிறகு ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தினரும் வந்திருந்தனர். திருமண விருந்து முடிந்தவுடன், திருமண உடையோடு சைக்கிளில் கிளம்பிவிட்டனர்.

இவர்களது இந்த நீண்ட பயணம் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்னாவின் அப்பா இதய நோயால் இறந்து போனார், லீயின் அம்மா புற்றுநோயால் இறந்து போனார். அதனால் இதய நோயாளிகள், புற்றுநோயாளிகளுக்கு இந்த நிதி வழங்கப்பட இருக்கிறது.

சைக்கிள் பயணமும் வாழ்க்கை பயணமும் வெற்றி பெறட்டும்!

பிரிட்டனின் நார்தாம்டன் நகர் டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்படுகிறது. தினமும் மாலையில் ஆடு, மாடு, கோழி இறைச்சிகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, முட்டி மோதி, சண்டையிட்டுக்கொண்டு பொருட்களை அள்ளுகிறார்கள் மக்கள்.

பிரிட்டன் சூப்பர் மார்கெட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை நடைபெற்றதில்லை என்பதால் பார்ப்பவர்கள் அதிர்ந்து போகிறார்கள். 21-ம் நூற்றாண்டு பிரிட்டனா, இல்லை ஆப்பிரிக்காவில் உள்ள ஓர் அகதி முகாமா என்று சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள். நார்தாம்டன் நகரில் வறுமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.

அதனால் விலை குறைவாகக் கிடைக்கும் பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் போட்டி நிலவுகிறது. இந்தச் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் பரப்பப்பட்டதால் பிரிட்டனின் மதிப்பு குறைந்துவிட்டது என்று பெரும்பாலானோர் வருந்துகிறார்கள். அதனால் விலை குறைப்பு பொருட்களை இன்னும் எப்படி முறைப்படுத்தி, வழங்குவது என்று டெஸ்கோ நிறுவனம் யோசித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தால் மதிப்பு குறையவில்லை, மக்களை வறுமையில் வைத்திருப்பதில்தான் மதிப்பு குறைகிறது…

சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் வசிக்கிறார் 47 வயது லி லி ஜுவான். கடந்த 19 ஆண்டுகளில் கைவிடப்பட்ட 72 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஒருகாலத்தில் ஆடை தயாரிப்பு நிறுவனம், இரும்புச் சுரங்கம் என்று இரண்டு வழிகளில் வருமானம் வந்துகொண்டிருந்தது. நோயுற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார் லி.

குழந்தைகளின் செலவுகளுக்காக யாரிடமும் உதவி கேட்டதில்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய இரும்புச் சுரங்கம் மூடப்பட்டது. ஆடை நிறுவனத்திலும் போதிய வருமானம் இல்லை. அதனால் சொத்துகளை விற்று, குழந்தைகளைப் பராமரித்து வந்தார் லி. திடீரென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் லி. மருத்துவச் செலவு அதிகமானது.

அந்தப் பணம் குழந்தைகளுக்குப் பயன்படட்டும் என்று 7 நாட்களுடன் மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டார். வருமானம் குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருக்கிறது. கடன் வாங்கிச் சமாளித்தார். கோடீஸ்வரராக இருந்த லி, தற்போது 2 கோடி ரூபாய் கடனாளியாக மாறிவிட்டார். லியின் மகன் அம்மாவின் நடவடிக்கை பிடிக்காமல் பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டான். லியின் நிலையை அறிந்த நண்பர்கள், தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகிறார்கள். எந்தப் பிரச்சினை வந்தாலும் குழந்தைகளை மட்டும் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் லி.

அபூர்வ மனுஷி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7332657.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஜெல்லி கடற்கரை!

 
 
masala_2442772f.jpg
 

பிரிட்டன் கடற்கரைகளில் ஏராளமான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் மணல் பரப்பு முழுவதும் பரவியிருந்த காட்சி, ஒரு திரைப்படத்தில் வருவதைப் போன்று இருக்கிறது. மனிதர்களுக்குத் தீங்குவிளைவிக்கலாம் என்பதால் ஜெல்லிமீன்களை யாரும் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பருவநிலை மாறுபாடா, கடலில் ரசாயனம் கலப்பா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சூழலியல் சீர்கேட்டால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

அமெரிக்காவின் மிவாகீ பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார் மார்க் குபின். தன்னுடைய மாடியில் பெரிய எழுத்துகளில் ‘வெல்கம் டூ க்ளீவ்லாண்ட்’ என்று பெயிண்ட் மூலம் எழுதி வைத்திருக்கிறார். அவரது மாடி வழியாகச் சிறிய விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்து செல்கின்றன. அவர்கள் க்ளீவ்லாண்ட் என்ற பெயரைப் படித்தவுடன், தவறாக வந்துவிட்டோமோ என்று நினைக்கிறார்கள்.

அல்லது க்ளீவ்லாண்ட் வந்துவிட்டதாக இறங்கிவிடுகிறார்கள். ’’1978ம் ஆண்டு என் உதவியாளர் மாடியில்தான் உணவருந்துவார். அப்பொழுது அடிக்கடி விமானங்கள் தாழ்வாகப் பறந்துகொண்டிருக்கும். வெல்கம் டூ மிவாகீ என்று எழுதினால் என்ன என்று அவர் கேட்டார். அந்த யோசனையைக் கொஞ்சம் மாற்றி, க்ளீவ்லாண்ட் என்று எழுதிவிட்டேன். இது விளையாட்டுக்காக நான் செய்த காரியம். அது இவ்வளவு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை” என்கிறார் மார்க்.

எதில் விளையாடறதுன்னு ஓர் அளவில்லையா மார்க்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/article7328895.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: கிளிகள் குடியேறிய நாடு!

 
 
masala_2838225f.jpg
 

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் காட்டுக் கிளிகள் ஏராளமாக வசித்து வருகின்றன. பச்சை உடலும் நீல வாலும் கொண்ட 12 அங்குலப் பறவைகள். இந்தக் கிளிகளின் தாயகம் அர்ஜெண்டினா. வெப்பப் பகுதிகளில் வாழக்கூடியவை. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுக் கிளிகள் எப்படியோ புரூக்ளினுக்கு வந்துவிட்டன. அளவுக்கு அதிகமான குளிரைச் சமாளித்து, உயிர் பிழைத்து, இனப் பெருக்கம் செய்து, 40 ஆண்டுகளில் கணிசமாகப் பெருகிவிட்டன!

அழகான காட்டுக் கிளிகள் புரூக்ளினுக்கு எப்படி வந்தன என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. நியூயார்க்குக்கு வந்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானபோது, அதிலிருந்து காட்டுக் கிளிகள் வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலரோ, 1970-ம் ஆண்டுகளில் செல்லப் பிராணிகளை அதிக அளவில் வளர்த்து வந்தனர். அப்படி வளர்க்கப்பட்ட கிளிகள் எப்படியோ வெளியேறி, பல்கிப் பெருகி, இன்று பெரும் காலனியாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள். டெலிபோன் கம்பங்கள், பூங்காக்கள், டிரான்ஸ்ஃபார்மர் பெட்டிகள் போன்ற கதகதப்பான இடங்களில் காட்டுக் கிளிகள் கூடுகளைக் கட்டியிருக்கின்றன. ஒவ்வொரு காலனியிலும் 40 முதல் 50 கிளிகள் கூட்டமாக வசிக்கின்றன. காட்டுக் கிளிகளைப் பற்றி ஆராய்வதற்காக ஒவ்வொரு மாதமும் புரூக்ளின் கல்லூரியில் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. கிளிகள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் மாணவர்கள்.

புறாவை விடச் சிறியது, குருவியை விடப் பெரியது. கிளிகளிலேயே இந்தக் காட்டுக் கிளிகள்தான் கட்டிடங்களில் கூடுகளைக் கட்டுகின்றன. சில கூடுகள் சிறிய கார் அளவுக்கு இருக்கும். லட்சக் கணக்கான குச்சிகளைக் கொண்டு நிறைய கிளிகள் சேர்ந்து இந்தக் கூட்டை உருவாக்குகின்றன. இதுதான் உணவு என்று இல்லாமல், கிடைக்கும் அனைத்தையும் இவை சாப்பிட்டுப் பழகியிருக்கின்றன. அதே போல எத்தகைய சூழ்நிலையையும் ஏற்றுக்கொண்டு, அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றன. இவற்றுக்கு குளிர் மட்டுமின்றி, ஆபத்தான இடங்களில் கூடுகளை அமைத்தல், பல்வேறு கழுகு இனங்கள், மனிதர்களும் முக்கிய எதிரிகளாக உள்ளன.

மனிதர்கள் மட்டுமின்றி கிளிகளும் குடியேறிய நாடு அமெரிக்கா!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசன் பார்டர்ஸ் ஓவியர். இறந்த விலங்குகளின் மண்டை ஓடுகள், எலும்புகளின் மீது வரைகிறார். இந்த ஓவியங்களைப் பல நூறு டாலர்களுக்கு விற்பனையும் செய்கிறார்.

‘‘நான் விலங்குகளின் எலும்புகளை சிறிய வயதில் இருந்தே சேகரித்து வருகிறேன். ஓவியக் கல்லூரியில் படித்த பிறகுதான், இந்த ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். பாலைவனத்துக்குச் செல்லும்போது ஒரு விலங்கின் தலை கிடைத்தது. அதை எடுத்து சுத்தம் செய்தேன். 4 வருடங்களுக்குப் பிறகு, மெகஹந்தி வரைவது போல வரைய ஆரம்பித்தேன். பலரும் வித்தியாசமாக இருப் பதாகச் சொன்னார்கள். என்னுடைய ஓவியங்களைப் பார்த்து மக்களே எலும்புகளையும் மண்டையோடுகளையும் தேடி வந்து கொடுக் கிறார்கள். இயற்கையாக மரணம் அடைந்த விலங்குகளின் மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மட்டுமே சட்டப்படி அனுமதி பெற்று, என் ஓவியங்களுக்குப் பயன்படுத்தி வருகிறேன்’’ என்கிறார் ஜேசன்.

எல்லோரும் விரும்ப இயலாத ஓவியம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/article8550906.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பாதி குளத்திலும் பாதி நிலத்திலும் இருக்கும் வீடு!

 
masala_2839409f.jpg
 

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பால் பிலிப்ஸ் வித்தியாசமான வீட்டைக் கட்டியிருக்கிறார். பாதி வீடு நிலத்திலும், பாதி வீடு குளத்திலும் இருக்குமாறு கட்டியிருக்கிறார். ‘‘மீன் பிடிப்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு. வீட்டுக்குள் அமர்ந்துகொண்டே மீன் பிடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. ஒருமுறை ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, என்னை மீன் பிடிக்க விடாமல் தடுத்தனர். அதனால் சொந்தமாக ஒரு குளம் உருவாக்கி, மீன் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நிலத்தை வாங்கி, 2014-ம் ஆண்டு வேலையை ஆரம்பித்தேன். 1850 சதுர அடியில் வீட்டைக் கட்டி முடித்தேன்.

பாதி குளத்திலும் பாதி நிலத்திலும் இருக்கும் வீடு விரைவில் பிரபலமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செய்தி வந்தவுடன் உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது. என் வீட்டிலிருந்து குளத்தில் இறங்கி மீன் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குள் தரையில் இருக்கும் ஒரு கதவைத் திறந்தால் கீழே குளம். வசதியாக அமர்ந்துகொண்டு வெயில், மழை பற்றிக் கவலைப்படாமல் மீன் பிடிக்கலாம். தினமும் ஏராளமான மீன்களைப் பிடித்து வருகிறேன்’’ என்கிறார் பிலிப்ஸ்.

நிலத்தில் பாதி, குளத்தில் மீதி!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வசிக்கும் மேரி பெல் ரோச், மேபெல் பாவெல் என்ற இரட்டையர்கள் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள்! சகோதரிகள் இருவரையும் ‘வாலெஸ் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். பிறந்ததில் இருந்து இதுவரை இருவரும் தனித்தனியாக வசித்ததே இல்லை. அதாவது நூறு ஆண்டுகளையும் ஒன்றாகவே கழித்திருக்கிறார்கள்.

‘‘நாங்கள் இருவரும் உருவத்தில் மட்டுமல்ல, ஒரே மாதிரி ஆடைகளை அணிந்துகொள்வோம். தலை அலங்காரம் செய்துகொள்வோம். எங்கள் வீட்டில் மிகுந்த பொருளாதார நெருக்கடி. ஆனாலும் கல்லூரியில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்குப் பிடித்த பாடத்தை மட்டுமே வகுப்பில் இருந்து கவனிப்பேன். அதே போல மேபெல் அவளுக்குப் பிடித்த பாடத்தைக் கவனிப்பாள். இருவரின் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சாதுரியமாகத் தப்பித்துக்கொள்வோம். எங்கள் இருவருக்குமே ஆசிரியர் பணி மீது ஆர்வம் இருந்தது. பள்ளி ஆசிரியராக வேலை செய்தோம். சின்ன வயதில் இருந்தே நண்பர்களான இருவரைத் திருமணம் செய்துகொண்டோம். இரண்டாம் உலகப் போருக்குக் எங்கள் கணவர்கள் சென்றார்கள். தேவாலயத்தில் இருந்தபோது பியர்ல் ஹார்பரில் குண்டு வெடித்தது அறிந்து அதிர்ந்து போனோம்.

போருக்குப் பிறகு கணவர்கள் பத்திரமாகத் திரும்பினர். மோட்டார் சைக்கிள்களில் சுற்றுவதே எங்களின் முக்கியமான பொழுதுபோக்கு. காலம் சென்றது. கணவர்கள் இறந்து போனார்கள். நானும் மேபெலும் எங்கள் பூர்விக வீட்டுக்குக் குடி வந்தோம். தினமும் 30 நிமிடங்கள் நடப்போம். இன்றும் ஆடை, அலங்காரம் எல்லாம் ஒரே மாதிரிதான் செய்துகொள்கிறோம். சிகரெட், மது தொட்டதில்லை. மற்றபடி எங்களின் நீண்ட ஆயுளுக்கு எங்களின் மரபணுக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் அம்மா 97 வயது வரை வாழ்ந்தார். நாங்கள் நூறைக் கடந்துவிட்டோம். ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எங்கள் வாழ்க்கை முடிந்தால் சந்தோஷம்’’ என்கிறார் மேரி.

செஞ்சுரியைத் தாண்டிய இரட்டையர்கள் வாழ்க!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article8554685.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: போட்டோ ரியலிஸ்டிக் ஓவியங்கள்!

 
 
masala_2840676f.jpg
 

இந்தப் படத்தைப் பார்த் தால், மிக நேர்த்தி யாக எடுக்கப்பட்டிருக் கும் புகைப்படம் போலத் தெரி கிறது. ஆனால் இது கேமரா வால் பிடிக்கப்பட்ட படம் அல்ல, பென்சிலால் வரையப் பட்ட ஓவியம்! இத்தாலிய ஓவியர் ஃப்ளாவியோ அபெல் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார். “நான் சின்ன வயதில் பொழுதுபோக்காகத்தான் வரைய ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட வயதில் ஓவியத்தை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் எண்ணம் வந்தது. அதில் என்னை எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள முடியும் என்று யோசித்தேன். ஓவியம் என்று தெரியாத அளவுக்கு புகைப்படம் போல வரைய பயிற்சி செய்தேன். நான் வரையும்போது பார்ப்பவர்கள் மட்டுமே இதை ஓவியம் என்று நம்புவார்கள். மனிதர்களின் கண்கள், தோல், முடி போன்றவற்றில் அத்தனை துல்லியம் இருப்பதால் இவை நிஜமான மனிதர்களின் கண்கள் போல காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தையும் வரைய 20 மணியில் இருந்து 150 மணி நேரம் வரை ஆகின்றன. அளவுக்கு அதிகமான பொறுமையும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே இந்த ஓவியம் தீட்டுவது சாத்தியம். ஆன்லைனில் என் ஓவியங்களைப் பார்ப்பவர்கள் அதை ஓவியம் என்று நம்ப மறுக்கிறார்கள். அதனால் நான் வரைவதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறேன்” என்கிறார் ஃப்ளாவியோ அபெல்.

சூப்பர் போட்டோ ரியலிஸ்டிக் ஓவியங்கள்!

தைவானைச் சேர்ந்த நியு பா பா உணவு விடுதியில் உலகிலேயே மிக விலை உயர்ந்த மாட்டு இறைச்சி நூடுல் சூப் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அந்த நூடுல் சூப்பை ருசித்துப் பார்த்தால், விலை ஒன்றும் அவ்வளவு அதிகமாகத் தோன்றாது என்கிறார் செஃப் வாங் காங் யுவான். ஒரு கிண்ணம் சூப்பின் விலை 20 ஆயிரம் ரூபாய். “விலையைக் கேட்டதும் எல்லோரும் இதில் தங்கபஸ்பம், வைரக்கற்கள் கலக்கப்பட்டிருக்கின்றனவா என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்ட எந்த விஷயமும் இந்த சூப்பில் இல்லை. அன்றாடம் சாப்பிடக்கூடிய பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. நான் 26 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, மிகச் சிறந்த சூப்பைக் கண்டுபிடித்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் 40 வயதில் உலகின் மிகச் சிறந்த நூடுல் சூப்பை உருவாக்குவதாகத்தான் இருந்தது. அதை என் வாழ்நாளில் செய்து முடிக்க முடிந்ததில் எனக்கு திருப்தி. என்னுடைய சூப்பின் விலை அதிகமாக இருப்பதற்கு 6 காரணங்கள் உள்ளன. தரமான மாட்டு இறைச்சி, வெட்டும் முறை, பதப்படுத்தும் நுட்பம், சூப் நுட்பம், தரமான நூடுல், குறைவான தயாரிப்பு ஆகியவைதான். மாட்டு இறைச்சியை ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேஸில் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். புது நுட்பத்தில் மிக மெதுவாக 3 நாட்கள் வேக வைக்கிறோம். அதைப் பதப்படுத்துகிறோம்.

வெட்டப்பட்ட இறைச்சி, சூப் கிண்ணத்துக்கு வர ஒரு வாரம் ஆகும். 6 விதமான சுவைகளில் சூப்களை பரிமாறுகிறோம். இங்கே வரும் வாடிக்கையாளர்கள் சூப்பின் விலையைக் கேட்டு திகைக்கிறார்கள். சூப்பின் மகிமையை எடுத்துச் சொன்ன பிறகு வாங்கி, சுவைக்கிறார்கள். கிளம்பும்போது மகிழ்ச்சியோடு சூப்பின் விலையை விட அதிகமாக பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். சுவையைக் கூட்ட உடலுக்குத் தீங்கான எதையும் இந்த சூப்பில் நான் சேர்ப்பதில்லை. எல்லோராலும் இந்த சூப்பை வாங்கி, சுவைக்க முடியாது. அதனால் 400 ரூபாய்க்கும் எங்கள் உணவகத்தில் சூப் கிடைக்கிறது” என்கிறார் செஃப் வாங் காங்.

அமிர்தமாகவே இருந்தாலும் இவ்வளவு விலை கொடுக்க முடியாது வாங் காங்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8560215.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கைப்பிடி கிருமிகளை அழிக்கும் கருவி

 
masala1_2441599f.jpg
 

ஹாங்காங்கைச் சேர்ந்த 17 வயது சன் மிங் வாங்கும் 18 வயது கிங் போங் லியும் பள்ளி மாணவர்கள். இவர்கள் இருவரும் கதவு கைப்பிடிகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பள்ளி, அலுவலகம், கடைகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் ஏராளமான மக்கள் வந்து, செல்கிறார்கள். ஒவ்வொரு முறை கதவுகளின் கைப்பிடிகளைப் பிடிக்கும்போதும் லட்சக்கணக்கான கிருமிகள் கைப்பிடிகளில் ஒட்டிக்கொள்கின்றன.

இதன் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவும் அபாயம் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது சன் மிங், கிங் போங் கண்டுபிடிப்பு. டைட்டானியம் டையாக்ஸைடு அற்புதமான பாக்டீரியா கொல்லி. இதைத் தூளாக மாற்றி, கதவு கைப்பிடிகளின் மேல் பூசி விடுகிறார்கள். கைப்பிடியில் ஒரு எல்இடி விளக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது.

கைப்பிடியைத் தொடும்போது விளக்கு எரிகிறது. விளக்கில் இருந்து கிடைக்கும் புற ஊதாக் கதிர்கள், டைட்டானியம் டையாக்ஸைடு மீது படும்போது கிருமிகள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும்போதும், மூடும்போதும் விளக்கு எரியும், கிருமிகள் கொல்லப்படும். இந்தக் கைப்பிடி தயாரிக்க 840 ரூபாய் செலவாகிறது.

வெல்டன் பாய்ஸ்!

பிரிட்டனில் 12 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், சாக்லெட்டுகள் இதய நோய்களைத் தடுப்பதாகத் தெரியவந்துள்ளது. தினமும் சிறிதளவு டார்க் சாக்லெட் அல்லது மில்க் சாக்லெட் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்களும் பக்கவாதமும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

12 ஆண்டுகள், 21 ஆயிரம் பிரிட்டன் மக்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் சாக்லெட் சாப்பிட்டவர்களிடம் இதய நோய்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்காக அளவுக்கு அதிகமான சாக்லெட்டுகளைச் சாப்பிட்டால் கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிற பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். அளவோடு சாக்லெட் எடுத்துக்கொள்பவர்களுக்கு நல்லது என்கிறார்கள்.

அட! இனிப்பான செய்தி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/article7325154.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: பெரிய்ய்ய குடும்பம்!

 
 
masala_2441600f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் நோயல், சூ ராட்ஃபோர்ட் தம்பதியர் 17வது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்திலேயே மிகப் பெரிய குடும்பம் இவர்களுடையதுதான். 43 வயது நோயலும் 39 வயது சூவும் குழந்தையிலிருந்தே நண்பர்கள். மிக இளம் வயதில் திருமணம் செய்துகொண்டனர்.

13 வயதில் சூ முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். “மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் இருவருக்குமான அன்பும் காதலும் 17 குழந்தைகள் வரை கொண்டு வந்துவிட்டது’’ என்கிறார் சூ.

நோயலும் சூவும் கடின உழைப்பாளிகள். சொந்தமாக பேக்கரி தொழில் செய்து வருகிறார்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை. முதல் மகனுக்கு 26 வயதாகிறது. வளர்ந்த குழந்தைகள் தொழிலில் உதவி செய்கிறார்கள்.

ஒருநாளைக்கு 2 கூடை ஆப்பிள், ஒரு கூடை வாழைப்பழம், ஒரு கூடை ஆரஞ்சு, 8.5 லிட்டர் பால் இந்தக் குடும்பத்துக்குத் தேவைப்படுகின்றன. ஒருநாளைக்கு 12 தடவை துணி துவைக்க வேண்டியிருக்கிறது. ஓர் ஆண்டுக்கு குழந்தைகளுக்கு மட்டும் 30 லட்சம் ரூபாய் செலவாகிறது.

பூமியில் மக்கள் தொகை அதிகரிக்கக் காரணமானவர்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். சிலரோ, அடுத்த குழந்தை எப்பொழுது என்று கிண்டல் செய்கிறார்கள். எல்லோரின் கேள்விகளையும் பார்வைகளையும் சமாளித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் நோயல், சூ குடும்பத்தினர்.

என்ன சொல்ல…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article7325146.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: மரத்தில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

 
 
singam_2845119f.jpg
 

டான்சானியாவில் உள்ள மன்யரா தேசியப் பூங்காவில் புகைப்படங்கள் எடுப்பதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 33 வயது கினா சென்றார். ‘‘ஏரி அருகே மரங்கள் நிறைய இருந்தன. அங்கே பெரிய சிங்கக் கூட்டம். பெரும்பாலும் பெண் சிங்கங்கள்தான். மகிழ்ச்சியாக அனைத்தும் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் படம் பிடிப்பதற்காக அங்கேயே நெடு நேரம் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சிங்கங்கள் ஒரு பெரிய மரத்தில் ஏறின. பல கிளைகளில் படுத்து, ஓய்வெடுக்க ஆரம்பித்தன. பொதுவாக சிங்கங்களுக்குப் பெரிய மரங்களில் ஏறும் வழக்கம் இல்லை. குட்டையான பட்டுப்போன மரங்களில் ஏறுவதுண்டு. இந்த அரியக் காட்சியைப் படம் பிடித்துத் தள்ளிவிட்டேன். கம்பீரமான விலங்குகள் கால்களையும் வாலையும் தொங்கப்போட்டுக்கொண்டு தூங்கிய காட்சி அத்தனை அழகாக இருந்தது! அடுத்தடுத்து 3 நாட்கள் சென்றபோதும் சிங்கங்களின் தரிசனம் இப்படியே கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி!’’ என்கிறார் கினா.

மரத்தில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

சீனாவில் வசிக்கும் 24 வயது டெங் மெய், இளம் தொழிலதிபர். இவரது தொழில் துணி அலமாரிகளைச் சுத்தம் செய்து, அடுக்கிக் கொடுப்பதுதான். இவர் Obsessive Compulsive Disorder என்ற மனம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர். இப்படிப்பட்டவர்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்துகொண்டே இருந்தல் என்று செய்த வேலையையே செய்துகொண்டிருப்பார்கள். ஒரு ஃபேஷன் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வாடிக்கையாளர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் விருப்பப்பட்டால், துணி அலமாரியைச் சுத்தம் செய்து தருவதாகச் சொன்னார் டெங் மெய். அவருடைய வேலை நேர்த்தியைப் பார்த்தவர்கள், இதையே முழு நேரத் தொழிலாகச் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார்கள். ‘’எனக்கும் அந்த யோசனை நல்லதாகப்பட்டது. என் குறைபாட்டால், என் வீட்டிலேயே திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்துகொண்டிருப்பதைவிட, ஒவ்வொரு வீட்டிலும் இந்த வேலையைச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். குறைபாட்டை பணம் பெறும் வழியாக மாற்றியது போலவும் இருக்கும் என்று முடிவுசெய்தேன். வேலையை விட்டுவிட்டு, அலமாரியைச் சுத்தம் செய்து தரும் தொழிலை ஆரம்பித்தேன். எல்லோரும் இதெல்லாம் ஒரு தொழிலா என்று ஆச்சரியப்பட்டனர். ஏற்கெனவே எனக்குச் சில வாடிக்கையாளர்கள் இருந்ததால், அவர்கள் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். ஓராண்டில் 100 நிரந்தர வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட்டேன். இவர்கள் எனக்குத் தொடர்ந்து, வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து விடுவார்கள். சுத்தம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டேன். அதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று உரை நிகழ்த்துகிறேன். என் வாழ்க்கை மிக நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய குறைபாட்டையே முதலீடாக வைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டேன்’’ என்கிறார் டெங் மெய்.

எல்லோரும் டெங் மெய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8572755.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மொத்தம் 31 விரல்கள்!

 
 
masala_2847300f.jpg
 

சில மனிதர்களுக்கு ஒன்றிரண்டு விரல்கள் அதிகமாக இருப்பதுண்டு. ஹாங் காங்கில் வசிக்கும் ஸொவ் செங்லினின் மகன் பிறக்கும்போதே அளவுக்கு அதிகமான விரல்களுடன் பிறந்தான். கால்களில் 16 விரல்களும் கைகளில் 15 விரல்களும் இருக்கின்றன. தொழிற்சாலையில் வேலை செய்யும் ஸொவ், ‘‘என் மகனுக்கு மொத்தம் 31 விரல்கள் இருக்கின்றன! ஒன்றிரண்டு விரல்கள் என்றால் சமாளித்துவிடலாம், பெரிய பிரச்சினை வராது. மருத்துவர்களைச் சந்தித்தோம். 6-வது மாதத்தில் இருந்து 12-வது மாதத்துக்குள் குழந்தைக்குத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். இதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும். தொழிற்சாலையில் வேலை செய்யும் எங்களால் எப்படிப் பணத்தைக் கொடுக்க முடியும்? அறக்கட்டளைகளிடம் நன்கொடை பெற்றுதான், ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் செய்ய முடிவு எடுத்திருக்கிறேன்’’ என்கிறார் ஸொவ்.

இத்தனை விரல்களா!

சீனாவைச் சேர்ந்த புத்த துறவி ஃபு ஹோவ் 2012-ம் ஆண்டு இறந்து போனார். அவர் புத்த மதத்துக்கு அரும்பணியாற்றியவர். அவரது உடல் உட்கார்ந்த நிலையில் சமாதியில் வைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சமாதியில் இருந்து மம்மியாக மாறிய துறவியை வெளியில் எடுத்தனர். அவரது உடலில் தங்க முலாம் பூசப்பட்டது. தங்க உடலை புனிதத்துவம் மிக்க இடத்தில் வைத்துவிட்டனர். ஃபு ஹோவ் 13 வயதில் புத்த மதத்தைத் தழுவினார். தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு, தன் உடலைப் பாதுகாக்கும்படி கோரிக்கை வைத்தார். இறந்த பிறகு, உடலைப் பதப்படுத்தும் நிபுணர்கள் வந்தனர். உடலைச் சுத்தம் செய்து, ஒரு பெரிய ஜாடிக்குள் வைத்துவிட்டனர். ஜனவரி மாதம் புனிதச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஜாடி திறக்கப்பட்டது. உடலில் உள்ள தோல் மட்டுமே காய்ந்திருந்தது. மற்றபடி உடல் நல்ல நிலையில் இருந்தது. கண்ணாடிக் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் தங்க நிறத் துறவி உடல் டோங்டன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

கோல்டன் மம்மி!

தென்னாப்பிரிக்காவில் யானைகள் சஃபாரியைப் பார்வையிடுவதற்காகச் சென்றார் தாமஸ் சான். அருகில் வந்த ஆப்பிரிக்க யானை ஒன்று, புகைப்படங்கள் எடுப்பதற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தது. விதவிதமாகத் தும்பிக்கையைத் தூக்கி அழகு காட்டியது. ‘‘எங்களால் இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. நாங்கள் கேமராவை தயார் செய்யும் வரை பொறுமையாகக் காத்திருந்தது. தும்பிக்கையால் எங்கள் தலை மீது வருடியது. நான் செல்ஃபி எடுத்துக்கொண்டேன். ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைப் போல அவ்வளவு சாதுவானவை அல்ல. அதனால் அருகில் வந்தபோது கொஞ்சம் பயமாக இருந்தது. யானையோ எதையும் கண்டுகொள்ளாமல், மனிதர்களைப் போலச் சிறிது நேரம் புகைப்படங்களுக்கு ஒத்துழைப்பு அளித்ததை என்னால் மறக்கவே முடியாது’’ என்கிறார் தாமஸ் சான்.

யானையும் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டுதோ!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-31-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8579252.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மலைக் குகை வீடு

 
masala_2440568f.jpg
 

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கிறார் 57 வயது ஸு வென்யி. கடந்த 10 ஆண்டுகளாக மலையைக் குடைந்து, உருவாக்கிய வீட்டில் வசித்து வருகிறார். மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவுடன் மலைப்பகுதிக்கு வந்துவிட்டார். 13 அடி அகலமும் 100 அடி ஆழமும் உள்ள ஒரு குகையை 6 ஆண்டுகளில் வெட்டி முடித்தார்.

தூங்கும் அறை, சமையலறை கொண்ட சிறிய குடியிருப்பாக மாற்றினார். சுவர்களில் அலமாரிகளை உருவாக்கி, பொருட்களை வைத்துக்கொண்டார். பைன், சைப்ரஸ் மரங்களை வளர்த்து வருகிறார். சுத்தமான காற்று, தானே விளைவிக்கும் உணவுப் பொருட்கள், நிம்மதியான வாழ்க்கை என்று மிகவும் மகிழ்ச்சியான மனிதராக வாழ்வதாகச் சொல்கிறார் ஸு. குகையின் வாயிலுக்கு மட்டும் ஒரு கதவு அமைத்திருக்கிறார்.

நிம்மதியாக வாழ்ந்தால் சரி…

பிரிட்டனில் வசிக்கும் 103 வயது ஜார்ஜ் கிர்பியும் 91 வயது டோரீன் லக்கியும் திருமணம் செய்துகொண்டனர். உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஜோடி இவர்கள்தான்! முன்னாள் குத்துச் சண்டை வீரரான ஜார்ஜ் சக்கர நாற்காலியில் வந்து டோரீனைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் 27 ஆண்டுகள் நட்பாக இருந்திருக்கிறார்கள்.

கடந்த காதலர் தினத்தன்று ஜார்ஜ் திருமணம் செய்துகொள்ளும் யோசனையை டோரீனிடம் தெரிவித்தார். அவரும் உடனே சம்மதித்தார். இருவருக்கும் 7 குழந்தைகள், 15 பேரக் குழந்தைகள், 7 கொள்ளுப்பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் சந்தோஷமாக இந்தத் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

’’இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாகத் தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏற்கெனவே அம்மா, அப்பாவாக ஏற்றுக்கொண்டு விட்டோம்’’ என்கிறார்கள் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் திருமணம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது. திருமணத்துக்கு வந்தவர்களிடம் பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக நன்கொடை அளிக்கச் சொல்லிவிட்டார்கள். நன்கொடைகள் அனைத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்குச் செல்ல இருக்கின்றன.

வாழ்க பல்லாண்டு!

கம்பளிப்பூச்சிகளில் ஒரு வகை டைனாஸ்டர் டாரியஸ். எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கூட்டுப்புழு பருவத்தில் தங்கள் கூட்டை பாம்பின் உருவத்தைப் போல மாற்றிக்கொள்கின்றன. கூட்டுப்புழுப் பருவத்தில் அவற்றால் சண்டையிடவோ, தப்பிக்கவோ முடியாது. இந்தப் பருவத்தில்தான் கம்பளிப் பூச்சி, வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் அடையும்.

தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டாரியஸ், கூட்டை பாம்பின் உருவத்தைப் போல அமைத்துவிடுகிறது. எதிரிகள் அருகில் வந்தால், கூட்டைச் சற்றுச் சுருக்கி, விரிக்கும். பாம்புதான் நகர்கிறது என்று பயந்து எதிரிகள் ஓடி விடுகின்றன. கூட்டின் முன்பாதி மட்டும் பாம்பு போலவும் பின்பாதி கூடுபோலவும் அமைந்திருக்கின்றன. சில நாட்களில் இந்தக் கூடுகளில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் பறந்து சென்றுவிடுகின்றன.

இயற்கை கொடுத்த தகவமைப்பு…

லண்டனில் வசிக்கும் மேரி டல்க்லெய்ஷ், காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நின்றுகொண்டே வேலை செய்கிறார். 2009-ம் ஆண்டு எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டார். அன்று முதல் தினமும் நின்றுகொண்டே வேலை செய்து வருகிறார். இடையில் சிறிது நேரம் மட்டுமே உட்கார்ந்து, கால்களுக்கு ஓய்வளிக்கிறார்.

வீட்டு வேலை, அலுவலக வேலை, டிவி பார்ப்பது என்று அத்தனை வேலைகளையும் பொழுதுபோக்குகளையும் நின்றபடியே செய்கிறார். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போது இருதயப் பிரச்சினைகள், சில புற்றுநோய்கள், டைப் 2 சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுகின்றன. பெண்கள் நின்றுகொண்டே அதிக நேரம் வேலை பார்ப்பதால்தான் இருதயம் தொடர்பான நோய்கள் அவர்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை என்கிறார் பேராசிரியர் கெவின் ஃபெண்டன்.

வாரத்துக்கு 80 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்வது நல்லது என்பதால், பிரிட்டன் அலுவலகங்களில் உயரத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் கூடிய மேஜைகளை வாங்குகிறார்கள். உட்கார்ந்தும் வேலை செய்யலாம், நின்றுகொண்டும் வேலை செய்யலாம். ஆரோக்கியமானது என்பதால் பலரும் நின்றுகொண்டே வேலைகளைச் செய்ய விரும்புகிறார்கள்.

அடடே! நாமும் செய்து பார்க்கலாமே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/article7321379.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: மலைப் பெண்கள்!

 
masala_2848463f.jpg
 

மலை ஏற்றம் செய்பவர்கள் அதற்குரிய ஆடைகளை அணிந்து கொண்டுதான் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால் பொலிவியாவைச் சேர்ந்த பெண்கள், தென்அமெரிக்காவின் உயர்ந்த மலைகளில் வண்ணமயமான பாரம்பரிய உடைகளில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். பாவாடை, மேல் சட்டை, போர்த்தப்பட்ட கம்பளி, தலைக்குச் சிறிய ஹெல்மெட். பனியில் கால் ஊன்றிச் செல்வதற்கு வசதியாக கம்பிகள் பொருத்தப்பட்ட ஷுக்கள். கொக்கியுடன் கூடிய கயிறு, கம்பு, முதுகில் அத்தியாவசியமான பொருட்கள் கொண்ட ஒரு பை போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஆபத்தான பனி மலைகளில் பயணம் செய்கிறார்கள்.

இந்தப் பெண்கள் ஆண்டிஸ் மலையடிவாரத்தில் வசிக்கும் பழங்குடியினர். சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை செய்வதுதான் இங்குள்ள ஆண்களின் பணி. சுமை தூக்குவது, சமையல் செய்து கொடுப்பது பெண்களின் பணி. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் லிடியா தன் கணவரிடம், ‘’மலை எவ்வளவு உயரம் இருக்கும்? அதன் உச்சியை அடைந்தவுடன் எப்படி உணர்வீர்கள்? அங்கே என்ன இருக்கிறது?’’ என்று கேட்டார். உனக்கு விருப்பம் இருந்தால் நீயே மலையேறி, தெரிந்துகொள் என்றார் கணவர். லிடியாவின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. 15 பழங்குடிப் பெண்களை ஒருங்கிணைத்தார். தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார்.

42 முதல் 50 வயது வரை உள்ள நடுத்தர வயது பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ஆர்வம் இருந்தது. பனியை உடைத்துச் செல்லவும் மலையில் எளிதாக ஏறவும் சில கருவிகள், ஷூக்கள் வாங்கினர். பனிபடர்ந்த 19,974 அடி உயரமுடைய ஹுயானா போடோஸி மலையில் ஏற ஆரம்பித்தனர். உறைய வைக்கும் குளிர், ஆபத்தான பாதைகள். வயது முதுமையால் வரும் பிரச்சினைகள் அனைத்தையும் சமாளித்து, வெற்றிகரமாக மலை உச்சியை அடைந்தனர். 19,700 அடிகளுக்கு மேலே இருக்கும் 8 மலைகளையும் ஏறிவிட வேண்டும் என்று உறுதி பூண்டனர்.

பாரினகோடா, பாமராப், இல்லிமனி என்று 3 மலைகளில் ஏறி முடித்தனர். அகோன்ககுவா 22,841 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த மலை. அதிலும் ஏறி, பொலிவிய நாட்டுக் கொடியைப் பறக்க விட்டனர். 8 மலைகளையும் முடித்த பிறகு, உலகின் அதிக உயரம் கொண்ட எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே தங்களின் இப்போதைய லட்சியம் என்கிறார்கள் இந்தச் சாதனைப் பெண்கள்.

50 வயதிலும் சாதித்த பெண்களுக்கு வாழ்த்துகள்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிம், வாஹ் டுஸ்ஸி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ’’5 குழந்தைகள்… 50 கை விரல்கள், 50 கால் விரல்கள், 5 இதயங்கள்… என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எங்களுக்கு ஏற்கெனவே 2 மகள்கள் இருக்கிறார்கள். கிம்முக்கு முதல் திருமணம் மூலம் 1 மகன் இருக்கிறான். இந்தப் பிரசவத்தில் ஒரு மகனும் 4 மகள்களும் பிறந்திருக்கிறார்கள். 5 குழந்தைகளைப் பராமரிப்பது மிக மிகக் கடினமான விஷயம். ஒரு நாளைக்கு 8 தடவை துணிகளை மாற்ற வேண்டும். ஒரு வாரத்துக்கு 350 துணிகளைத் துவைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கூட சும்மா இருந்துவிட முடியாது. 24 மணி நேரமும் குழந்தைகள் வேலை வாங்குகிறார்கள். ஆனாலும் எனக்குக் கஷ்டமாக இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட நானும் குழந்தைகளும் இடம்பிடித்துவிட்டோம்’’ என்கிறார் வாஹ் டுஸ்ஸி.

ஆஹா! அழகான 5 மலர்கள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8584207.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ‘சூரியக் குழந்தைகள்'!

 
 
masala_2849644f.jpg
 

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள் சோயிப் அஹ்மது (13), அப்துல் ரஷீத் (9) சகோதரர்கள். பிறந்ததில் இருந்தே பகலில் இயல்பாக இருக்கும் இவர்கள், மாலையில் சூரியன் மறைய ஆரம்பித்தவுடன் அப்படியே முடங்கிப் போய்விடுகிறார்கள். இரவெல்லாம் சிறு அசைவும் இன்றி, பேசவோ, நடக்கவோ, கண் விழிக்கவோ முடியாமல் ஜடப் பொருட்களைப் போல கிடக்கிறார்கள். “எங்கள் மகன்கள் சூரியனில் இருந்து சக்தியைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்கிறார் இவர்களது அப்பா முகம்மது ஹாசிம்.

ஆனால் இதை மருத்துவர்கள் ஏற்கவில்லை. இவர்களை இருட்டான அறையில் பகல் முழுவதும் வைத்தபோது சாதாரணமாகத்தான் இருந்தனர். அதேபோல மழைக் காலங்களில் சூரியன் வராதபோதும் இயல்பாகத்தான் இருக்கின்றனர். பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்த்தும், இந்த மர்ம நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. “நானும் என் கணவரும் ரத்த உறவுகள். எங்களுக்கு 4 குழந்தைகள். இதில் சோயிப், ரஷீத் இருவருக்கும் இந்த நோய் இருக்கிறது. மூன்றாவது குழந்தைக்கு இல்லை. 1 வயதான கடைசிக் குழந்தையும் தற்போது இந்தப் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டான்” என்கிறார் சோயிப்பின் அம்மா. மருத்துவப் பேராசிரியரான ஜாவித் அக்ரம் இந்த இருவருக்கும் உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் சோயிப்பும் ரஷீத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் முறையாக இரவில் இருவரும் நடந்திருக்கிறார்கள்! “விரைவில் நாங்கள் குணமாகி விடுவோம். நான் ஆசிரியராக வேண்டும் என விரும்புகிறேன். ரஷீத் இஸ்லாமிய அறிஞராக வேண்டும் என்று விரும்புகிறான்’’ என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறான் சோயிப்.

‘சூரியக் குழந்தைகள்' விரைவில் குணமாகட்டும்…

சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களுக்காகவே கேஎஃப்சி, சாப்பிடக்கூடிய நகப் பூச்சை உருவாக்கியிருக்கிறது.

‘ஒரிஜினல்’ பழுப்பு வண்ணத்திலும் ‘ஹாட் அண்ட் ஸ்பைசி’ சிவப்பு வண்ணத்திலும் காணப்படுகிறது. இந்த நகப்பூச்சைப் பூசிக்கொண்டு, விரல்களை வாயில் வைத்தால் கோழி இறைச்சியின் சுவை கிடைக்கும். உடலுக்கும் தீங்கு இல்லை. ஹாங் காங் கேஎஃப்சி கடைகளில் இந்த நகப்பூச்சு விற்பனைக்கு வந்துள்ளது. “எங்கள் கடைகளில் இந்தக் கோழி நகப்பூச்சு அழகான பாட்டில்களில் கிடைக்கின்றன. ஒருமுறை இதை நகத்தில் பூசிக்கொண்டு வாயில் வைத்தால், விடவே மாட்டீர்கள்! அத்தனை சுவை” என்கிறார் உரிமையாளர் ஜான் கோய். சுத்தம் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் இந்தக் காலத்தில், சுவைக்கக்கூடிய இந்த நகப்பூச்சை பலரும் விரும்பவில்லை.

இப்படி எல்லாம் எங்கிருந்துதான் யோசனை வருமோ!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8589233.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: குடிபோதையில் அநியாயமா ஓர் உயிர் போயிருச்சே...

 
butterfly_2438601f.jpg
 

மெக்ஸிகோவைச் சேர்ந்த கலைஞர் கிறிஸ்டியம் ராமோஸ். பாடம் செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளில் உலகப் புகழ் பெற்ற ஓவியங்களைத் தீட்டி வருகிறார். ஒரு பக்க இறக்கையில் வரைந்து முடிப்பதற்கே 56 மணி நேரங்கள் ஆகிவிடும். அதிக உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓவியங்கள் இவை. உருப்பெருக்கும் கண்ணாடியை வைத்துக்கொண்டு, ஓவியங்களை உருவாக்கி வருகிறார் ராமோஸ். ’’சின்ன வயதிலேயே வண்ணத்துப்பூச்சிகளின் அழகும் வண்ணங்களும் என்னை ஈர்க்க ஆரம்பித்துவிட்டன. வளர்ந்த பிறகு வண்ணத்துப்பூச்சிகளிலேயே ஓவியங்களைத் தீட்டுவேன் என்று நான் நினைத்ததில்லை. என்னுடைய விசிறிகள் பாடம் செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். உலகிலேயே வண்ணத்துப்பூச்சிகளின் மீது ஓவியம் வரையும் ஒரே கலைஞன் நான்தான். இதற்காக ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கிறேன். உலக சாதனைகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறேன்’’ என்கிறார் ராமோஸ்.

வண்ணத்துப்பூச்சியே அழகான ஓவியம்தான்! அதற்குள் இன்னொரு ஓவியமா!

பனாமா நாட்டின் பனாமா நகரில் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தரம் மிக்க சாலைகளை உருவாக்குவதற்காக ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்டி ஓட்டிகள் சாலைகளில் குழிகளைக் கண்டவுடன் அந்தக் கருவியை அங்கே வைத்துவிட வேண்டும். அந்த வழியே செல்லும் வாகனங்கள் கருவியின் மீது ஒவ்வொரு முறை ஏறும்போதும் செய்தி ட்விட்டர் கணக்கில் பதிவாகிவிடும். ட்வீட்களைப் படிக்கும் அரசாங்க அதிகாரிகள், குறிப்பிட்ட இடத்துக்கு ஆட்களை அனுப்பி சாலையை உடனடியாகச் சரி செய்துவிடுகின்றனர். லத்தீன் அமெரிக்காவின் துபாய் என்று அழைக்கும் விதத்தில் பொருளாதாரத்திலும் நகர அமைப்பிலும் முன்னேற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது பனாமா. ட்விட்டர் மூலம் சாலைகளைச் செப்பனிடும் பணிக்கு மக்களிடம் ஏராளமான வரவேற்பு இருக்கிறது.

ஆஹா! தமிழ்நாட்டுக்கு இதைக் கொண்டுவந்தால் நல்லா இருக்குமே!

பிரிட்டனைச் சேர்ந்த 28 வயது பீட்டர் போகர் முன்னாள் ராணுவ வீரர். ஆப்கானிஸ்தான் சண்டையில் அவரது வலது காலை இழந்துவிட்டார். ’’முதலில் அதிர்ச்சியாக இருந்தது. என்னை விட மோசமான பாதிப்புகளை உடைய மனிதர்களைப் பார்த்ததும் என் இழப்பு பெரியதாகத் தோன்றவில்லை. அட்லாண்டிக் தீவுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி, என்னைத் தேற்றிக்கொண்டேன். அங்குதான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. க்ரீன்லாந்து பனிப்பிரதேசங்களில் பயணம் செய்யும் சாகசக் குழுவுடன் சேர்ந்துகொண்டேன்’’ என்கிறார் பீட்டர். மோசமான வானிலை, நடப்பது கடினம் என்ற எச்சரிக்கைகளைக் கண்டு பயப்படாமல் கிளம்பிய பீட்டர், உறைந்த பனிப்பகுதிகளில் 372 மைல்கள் நடந்து, குறிப்பிட்ட இலக்கை அடைந்தார். உலகிலேயே இந்தச் சாதனை செய்த முதல் மாற்றுத்திறனாளி பீட்டர்தான்! குழந்தைகளின் கல்வி, அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்கும் காரணங்களும் இந்தப் பயணத்தின் பின்னால் இருக்கின்றன.

ரியல் ஹீரோ!

சீனாவில் வசிக்கும் 31 வயது லியான், பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தொலைபேசி நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தன்னுடைய குடியிருப்புக்குச் சென்றார். அங்கே 77 வயது மூதாட்டி ஒருவர் இருந்தார். அவரைக் கண்டவுடன் யார், என்ன என்று விசாரிக்காமல் தாக்க ஆரம்பித்துவிட்டார். அந்த மூதாட்டி எவ்வளவோ சொல்லியும் கூட தாக்குதலை நிறுத்தவில்லை. மயங்கிச் சரிந்தார் அந்த மூதாட்டி. அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். மூதாட்டியை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. லியானைக் கைது செய்து விசாரித்தபோது, அவருடைய வீட்டுக்குள் யாரோ திருட வந்துவிட்டார்கள் என்று நினைத்து அடித்ததாகச் சொன்னார். உண்மையில் வீடு மாறி சென்றது லியான்தான். விசாரணை நடைபெற்று வருகிறது.

குடிபோதையில் அநியாயமா ஓர் உயிர் போயிருச்சே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87/article7315043.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: மனித உராங்குட்டான்கள்!

 
 
masala_2437659f.jpg
 

இந்தோனேஷியாவில் விலங்குகள் மீட்பு மையத்தில் 80 உராங்குட்டான்கள் வசித்து வருகின்றன. இவை அனைத்தும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. அதனால் இவற்றுக்குக் காடுகளில் வாழ்வதற்கான திறனை வளர்ப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தங்கும் இடத்தை விட்டுச் சற்றுத் தள்ளி பயிற்சி மையம் இருக்கிறது. தினமும் காலையில் பயிற்சி மையத்துக்கு உராங்குட்டான்களை அழைத்துச் செல்கிறார்கள். மனிதர்களால் வளர்க்கப்பட்ட உராங்குட்டான்கள் நீண்ட நேரம் நடக்க விரும்புவதில்லை. அதனால் ஒரு சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, பயிற்சி மையத்தில் விடுகிறார்கள். பயிற்சி முடிந்தவுடன் மீண்டும் வண்டியில் ஏறி தங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுகின்றன உராங்குட்டான்கள்.

ஒரு வண்டியில் எத்தனை உராங்குட்டான்கள்…

குவின்ஸ்லாந்தின் தென்கிழக்கு கடலில் இரவு நேரங்களில் நீர்ச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் வீரர்கள். பகல் நேரங்களில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் கடலில் விளையாடுவதாலும் குளிப்பதாலும், விளையாட்டு வீரர்களுக்குப் போதிய அலைகள் கிடைப்பதில்லை. அதனால் கடந்த ஓராண்டு காலமாக இரவு நேரங்களில் விளையாடி வருகிறார்கள்.

இரவு நேரங்களில் சுறாக்களின் வருகையும் அதிகம் இருப்பதில்லை என்பதால் வசதியாக இருக்கிறது என்கிறார்கள். 50 முதல் 100 விளையாட்டு வீரர்கள் இருளில், ஆர்ப்பரிக்கும் அலைகளில் பயமின்றி விளையாடி வருவதை லூயி மோரி என்ற புகைப்படக்காரர் அற்புதமாகப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

தைரியமான வீரர்கள்தான்!

ஸ்வீடனில் பர்கோஸ் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில் எல் கோலாசோ என்ற குழந்தைகள் மீது தாவிச் செல்லும் விழா நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த விழாவில் 1 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளைச் சாலையில் படுக்க வைக்கிறார்கள். சிறிய மெத்தைகளில் வாயில் ரப்பருடன் குழந்தைகள் படுத்திருக்கிறார்கள்.

மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆடை அணிந்த சாத்தான் மனிதர்கள் குழந்தைகளைத் தாவிச் செல்கிறார்கள். இப்படிச் செய்வதால் குழந்தைகள் நோய்களின்றி, ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. கி.பி.1620ம் ஆண்டில் இருந்து குழந்தைகளைச் சாத்தான்கள் தாண்டிச் செல்லும் விழா நடைபெற்று வருகிறது.

விநோத நம்பிக்கைகள்…

உயர் தொழில்நுட்பத்தை உடைக்கும் அளவுக்குத் திறமை பெற்றவர்களாக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வேலை தற்போது காத்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த செல்போன் நிறுவனம் ஒன்று, செல்போன் உடைக்கும் பணிக்கு ஆட்களைக் கேட்டிருக்கிறது. பகுதி நேரமாகச் செய்யும் இந்தப் பணிக்கு 36 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக வழங்குகிறது.

இந்தப் பணிக்கு வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும், கணினிப் பயன்பாடும் அறிந்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் செல்போன்களைப் பரிசோதித்து, அதைப் பற்றிய குறிப்புகளை எழுதிவிட்டு, கீழே போட்டு உடைக்க வேண்டும். பார்க்க எளிதாகத் தோன்றினாலும் மிகவும் அலுப்பூட்டக்கூடிய வேலை இது என்கிறார்கள்.

அதனால்தான் இவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க போல…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7312407.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: பசுமை இல்லங்களான தீவு கிராமம்

 
 
masala_2435010f.jpg
 

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் ஷெங்சி தீவுகள் இருக்கின்றன. கடற்கரை ஓரம் இருந்த தீவு கிராமம் ஒன்றில் சில காலத்துக்கு முன்பு வரை மனிதர்கள் வசித்து வந்தனர். அவர்களின் ஒரே தொழில் மீன் பிடிப்பதுதான். இங்கே பிடிக்கப்பட்ட மீன்களை வேறு இடங்களுக்குச் சென்று விற்பனை செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது.

போதுமான வருமானமும் கிடைக்கவில்லை. கிராமத்தினர் அனைவரும் வேறு இடங்களை நோக்கிச் சென்றுவிட்டனர். அவர்களின் பூட்டிய வீடுகள், இப்பொழுது இயற்கை அன்னையால் அரவணைக்கப்பட்டு, பசுமை இல்லங்களாக மாறிவிட்டன! அந்தப் பகுதிக்கு வருகிறவர்கள் கொடிகளால் போர்த்தப்பட்ட வீடுகளின் அழகில் மெய்மறந்து போகிறார்கள்.

ஆஹா! அட்டகாசம்!

கசகஸ்தானில் வசிக்கிறார் 20 வயது அயன் ஸாடேமோவ். அவருக்கு 17 வயதில் ஒரு காதலி இருக்கிறார். கல்லூரி நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகிக்கொண்டிருந்தவர், பயத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிட்டார். அயன் தன் காதலிக்கு எவ்வளவோ தைரியம் சொல்லிப் பார்த்தார். தன்னம்பிக்கை அளித்தார். ஒன்றும் அவரைத் திடப்படுத்தவில்லை. காதலிக்காகத் தான் தேர்வு எழுத முடிவு செய்தார். விக் வாங்கி மாட்டிக்கொண்டார். மீசையை எடுத்துவிட்டு, மேக்அப் போட்டுக்கொண்டார். காதலியின் உடைகளை வாங்கி மாட்டிக்கொண்டார். யாரும் கண்டுபிடிக்காத அளவுக்கு ஒரு பெண்ணாக மாறியிருந்தார் அயன்.

தேர்வு அறையில் இருந்த ஆசிரியருக்கு அயன் மீது சந்தேகம் வந்தது. அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார். குரலை மாற்றிக்கொண்டு பதில் அளித்தாலும் அது ஆண் குரல் என்று காட்டிக் கொடுத்துவிட்டது. உடனே அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ‘’வேறு ஒரு பெண் பரீட்சை எழுத வந்திருப்பதாகத்தான் நினைத்தேன். ஒரு ஆண் இப்படி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை’’ என்று அதிர்ச்சியில் கூறினார் ஆசிரியர்.

அயனுக்கு 1.25 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. விஷயம் வெளியில் தெரிந்தது. அயன் பற்றி எதிர்மறையான கருத்துகள் பரவுவதற்கு பதில் நேர்மறையான கருத்துகள் பரவிவிட்டன. ’’காதலன் என்றால் அயன் போல இருக்க வேண்டும். எத்தனை அன்பான மனிதன்!’’ என்று இளம் பெண்கள் கூறிவருகின்றனர்.

ஐயோ… இதையெல்லாம் என்னன்னு சொல்றது?

பிரேஸிலில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதனால் ரியோ டி ஜெனிரோவில் வசித்த நூறு குடும்பங்களை வேறோர் இடத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். அங்கே ஒலிம்பிக் சிட்டி என்ற பெயரில் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். வீடு மாற்றம் எடிலெஸாவுக்குப் பிடிக்கவில்லை. கணவர் லூயி ஜெரால்டோவிடம் இதுகுறித்து அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

ஒரே வீட்டில் வசித்தாலும் ஒருவர் பயன்படுத்திய அறையை இன்னொருவர் பயன்படுத்தாமல் இருந்தனர். ஒருநாள் சண்டையில் லூயி தன் பகுதியில் இருந்த தண்ணீர்க் குழாயை மூடிவிட்டுச் சென்றுவிட்டார். தண்ணீர் இன்றி தவித்தார் எடிலெஸா. மறுவாரம் லூயி அலுவலகம் சென்று திரும்பி வந்தபோது அதிர்ந்து போனார். அவரது மாடி வீடு பாதியாக இடிக்கப்பட்டிருந்தது. வீட்டைச் சரிப் பாதியாக இடித்து, அந்த இடத்தை இன்னொருவருக்கு விற்றுவிட்டுச் சென்றுவிட்டார் எடிலெஸா.

“மீதி இருக்கும் காலத்தையாவது நிம்மதியாகக் கழிக்க விரும்புகிறேன்’’ என்று தனி வீட்டில் வசித்து வருகிறார் எடிலெஸா. அதிர்ந்துபோன லூயி, என்ன செய்வது என்று தெரியாமல் இடிந்த வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். விரைவில் வேறு வீட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் குழந்தைகள்.

பெரியவர்கள் சண்டையில் குழந்தைகள்தான் கஷ்டப்படுகிறார்கள்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/article7305079.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.