Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருக்குலைகிறதா உக்ரைன்?

Featured Replies

உருக்குலைகிறதா உக்ரைன்?1

 
 
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தை நினைவுகூரும் வகையில் தலைநகர் கீவில் அமைக்கப்பட்டுள்ள சிறுமியின் சிலை.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தை நினைவுகூரும் வகையில் தலைநகர் கீவில் அமைக்கப்பட்டுள்ள சிறுமியின் சிலை.

உக்ரைன் -ரஷ்யா மோதல் செய்திகளைப் படித்து விட்டு உலக வரைபடத்தில் இந்த இரண்டு நாடுகளையும் பார்ப்பவர்களுக்குப் பெரும் வியப்பு காத்திருக்கும்.

சோவியத் யூனியன் பிளவு பட்ட பிறகும் ரஷ்யா மிக பிரம் மாண்டமாக இன்னமும் தன் பரப் பளவில் பரந்து விரிந்துதான் இருக்கிறது. அதன் மேற்குப் பகுதி யில், கிழக்கு ஐரோப்பாவில் ஒரு தவளைபோல சிறுத்திருக்கிறது உக்ரைன். கருங்கடலைத் தன் தென் எல்லையாகக் கொண்ட நாடு உக்ரைன்.

முன்பு சோவியத் யூனியன் இணைந்திருந்தபோது அதில் இருந்த நாடுகளில் ரஷ்யாவும் உண்டு, உக்ரைனும் உண்டு. ஆனால் இன்று இந்த இரண்டும் எதிர் துருவங்களாகிவிட்டன.

உக்ரைன் தனக்குள்ளேயே பிளவுபட்டிருக்கிறது. எல்லைக் கோடுகளால் அல்ல. வேறு பல விஷயங்களில். மொழிக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு.

உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்களில் பலரும் உக்ரைனியன் எனும் மொழியைப் பேசுபவர்கள். இவர்கள் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் உறுப்பினராவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர் களில் பலரும் ரஷ்ய மொழியைப் பேசுபவர்கள். ரஷ்யா ஓர் அசைக்க முடியாத கூட்டாளியாக உக்ரை னுக்கு அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள். ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் உறுப்பின ராக வேண்டாம் என எண்ணுகிறார் கள். ரஷ்யா அதில் உறுப்பினராக முடியாது என்பது முக்கிய காரணம்.

இப்படி இரண்டுபட்டுக் கிடப் பதால் உள்ளூரில் பல கலவரங்கள் நடைபெறுகின்றன.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடுகளின் மீதெல்லாம் உக்ரைன் ராணுவம் குண்டு வீசுகிறது என்கின்றனர் ரஷ்யப் புரட்சியாளர்கள். இதை உக்ரைன் மறுக்கிறது. அதேசமயம் ரஷ்ய புரட்சியாளர்களின் செயல்பாடு தங்கள் ராணுவத்தை இயங்க வைத்துவிடும் அபாயத்துக்கு வழி வகுக்கும் என்றும் எச்சரிக்கிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் உண்டான மோதல் பிரிவினைக்குப் பிறகு உண்டானதா? அல்லது அதற்கும் முன்பாகவா? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென்றால் சோவியத் உருவான கதையையும் அது பிளவுபட்ட பின்னணியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

முதலில் சோவியத் யூனியன் உருவான விதத்தை அறிந்து கொள்வோம்.

தொடக்கத்தில் அந்த நிலப் பகுதி ரஷ்யப் பேரரசாகத்தான் இருந்தது. மிகவும் பரந்து பட்டி ருந்தது. பத்தொன்பதாம் நூற்றண் டின் தொடக்கத்தில் சீனா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றுக்கு அடுத்ததான பெரிய சாம்ராஜ்யம் ரஷ்ய பேரரசுதான். மன்னர்கள் ஆண்ட பகுதியாகத்தான் இருந்தது.

1905ல் ரஷ்யப் புரட்சி நடந்த பிறகு அங்கு முழுமையான முடியாட்சி என்பது அரசியல் சட்ட முடியாட்சியாக (constitutional monarchy) மாறியது. ஆனாலும் கூட மன்னர் அரசியலில் பலம் மிகுந்தவராகத்தான் இருந்தார். 1917-ல் நடைபெற்ற பிப்ரவரி புரட்சி, மன்னராட்சியை முற்றிலு மாக ஒழித்தது.

ரஷ்ய பேரரசில் அன்று இருந்த நாடுகள் இணைந்து ஒரே நாடாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. யூனியன் ஆஃப் சோவியத் சோஷலிஸ்ட் ரிபப் ளிக்ஸ் என்று தங்களது ஒற்று மையை ஒரே பெயரில் காட்டிக் கொண்டன. அதன் சுருக்கம்தான் சோவியத் யூனியன்.

மன்னராட்சி களையப்பட்டு சோவியத் யூனியன் உருவான தற்கு லெனின் தலைமையில் அமைந்த புரட்சிப் படை முக்கி யக் காரணம். சோவியத் யூனியன் என்று ஆனவுடன் அங்கு கம்யூனிஸ அரசு அமைந்தது.

சோவியத் யூனியனின் மிகப் பெரிய நாடு ரஷ்யா என்பதால் எதிர்பார்த்தபடி (ரஷ்யாவில் அமைந்த) மாஸ்கோதான் சோவியத் யூனியனின் தலைநக ரானது. பரப்பளவைப் பொறுத்த வரை, சோவியத் யூனியனில் (ரஷ்யாவில் பாதி கூட இல்லாத) கஜகஸ்தானுக்கு இரண்டாம் இடம்.

சோவியத்தில் `அனைவரும் சமம்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ அரசு அமைந்தது. இதன் விளைவாக பல அடிப்படை மாற்றங்கள் அங்கு நிகழ்ந்தன. யாரும் தனிப்பட்ட சொத்துக்களை வைத்திருக்க முடியாது. எல்லாமே அரசினுடை யது. உழைப்பாளர் குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கிடைத்தது. (‘சோவியத்’ என்றாலே உழைப்பா ளர் குழு என்றுதான் பொருள்).

இந்த நிலையில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நடுவே பிளவு ஏற்பட்டது.

இப்போது மேற்கு உக்ரைனில் உக்ரைனிய மொழி பேசுபவர் களும், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுபவர்களும் அதிகமாக உள்ளனர் என்று குறிப்பிட்டிருந் தோம். ஒரு காலத்தில் கிழக்கு உக் ரைனிலும், உக்ரைனிய மொழி பேசும் மக்கள்தான் நிறைந்திருந் தனர்.சோவியத் யூனியனை ஸ்டாலின் ஆண்டபோது நடை பெற்ற நிகழ்ச்சி இது.

1932-ல் உக்ரைன் பகுதியில் ஒரு பெரும் பஞ்சம் உண்டானது. (அப்போது சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஸ்டாலின்தான் இந்தப் பஞ்சத்தைச் செயற்கை யாக உண்டாக்கினார் என்பவர் களும் உண்டு). இந்தப் பஞ்சத்தின் காரணமாக சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர். அந்தப் பகுதியில் கோடிக்கணக்கான ரஷ்யர்களை கொண்டு வந்தார் ஸ்டாலின்.

மேற்கு உக்ரைன் அப்போது போலந்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக அங்கு ரஷ்யர்களைக் குவிக்க முடியவில்லை.

ஸ்டாலின் இப்படி எக்கச்சக்க மான ரஷ்யர்களை கிழக்கு உக் ரைனில் குவித்ததற்கு ஒரு வஞ்சகப் பின்னணி உண்டு.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/உருக்குலைகிறதா-உக்ரைன்-1/article6842094.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாறுகள் ஒருபுறமிருக்க........

உக்ரைன் ஐரோப்பாவின் வளம் மிக்க பூமியில் ஒன்று. சண்டை சச்சரவுகளுக்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம் :innocent:

  • தொடங்கியவர்

உருக்குலையுமா உக்ரைன்?- 2

 
 
உக்ரைனின் நிகோலாவ் என்ற இடத்தில் உள்ள கோதுமை வயலில் அறுவடை செய்யும் இயந்திரம். படம்: புளூம்பெர்க்
உக்ரைனின் நிகோலாவ் என்ற இடத்தில் உள்ள கோதுமை வயலில் அறுவடை செய்யும் இயந்திரம். படம்: புளூம்பெர்க்

ரஷ்யப் புரட்சியின்போது (அதாவது சோவியத் யூனியன் உருவாகும் கால கட்டத்திலேயே) உக்ரைன் பகுதியினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று போராடினர். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக விளங்க தங்களுக்கு சம்மதமில்லையென்று கூறினர். ஆனால் சோவியத் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பிரம் மாண்ட செம்படைக்கு முன் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு உக்ரைனியர் எம்மாத்திரம்? அடக்கு முறையில் துவண்டனர். இணைப்பில் சேர ஒத்துக் கொண்டனர்.

உலகின் போக்கை தீர்மானிக் கவல்ல ஒரு சூப்பர் பவரின் பகுதியாக இருப்பது நல்லது தானே. பிறகு எதற்காக உக்ரைன் மக்கள் சோவியத் யூனியனிலிருந்து விடுபட விரும்பினார்கள்? இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர்கள் கலாச்சாரப் பின்னணி ரஷ்யப் பகுதியிலிருந்து மிக மிக வேறுபட்டிருந்தது.

தொன்று தொட்டு உக்ரைனில் விவசாயம் கொழித்தது. பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் கொண்டிருந்த பகுதி அது. ரஷ்யாவைவிட தொன்மையான பகுதி தங்களுடையது என்பதிலும் அவர்களுக்கு நிறைய கர்வம்.

உக்ரைன் மக்கள் மனதில் சுதந்திர தாகம் நீறுபூத்த நெருப் பாகவே இருந்ததை உணர்ந்த ஸ்டாலினுக்கு ஒரு பெரும் கவலை உண்டானது. எப்படியாவது சோவியத்திலிருந்து உக்ரைன் பிரிந்து விடுமோ? அப்படிப் பிரிந்தால் வேறு பல பகுதிகளும் பிரிந்துவிட வாய்ப்பு உண்டே!

கவலைப்பட்ட ஸ்டாலின் திட்டங்கள் தீட்டினார். உக்ரை னிலுள்ள விவசாயத் தொழிலை ரஷ்யா கபளீகரம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன.

சோவியத் யூனியனின் ஒவ்வொரு பகுதிக்கும் ‘இந்த கால கட்டத்துக்குள் இந்த அளவு விளைச்சல் அதிகரிக்கவேண்டும்’ என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உக்ரைனில் விவசாய விளைச்சல் அதிகம்தான். ஆனால் அந்தப் பகுதிக்கான இலக்கு மிகமிக அதிக அளவில் நிச்சயிக்கப்பட்டது. தவிர யாரும் விளைச்சலைப் பதுக்கி வைக்கக் கூடாது என்று காரணம் காட்டி சோவியத் ராணுவ வீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டார்கள்.

அவர்கள் உக்ரைனிலுள்ள பெரும் விவசாயிகளின் வீடுகளில் நுழைந்து தானியங்கள் பதுக்கப் பட்டிருக்கிறதா என்று சோதனை செய்வதுபோல அவர்கள் தொடர்பான பல விவரங்களை சேகரித்து சோவியத் அதிகாரிகளுக்கு அளித்தார்கள்.

இதற்கு அடுத்த கட்டமாக உக்ரைனிலுள்ள பணக்கார விவசாயிகள் மெல்ல மெல்ல சைபீரியாவுக்குக் கடத்தப்பட்டனர். (சோவியத்தின் ஒரு பகுதியான சைபிரியா கடுங்குளிர் பிரதேசம். தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை அங்கு அனுப்பும் பழக்கத்தை சோவியத் யூனியன் வழக்கமாகவே கொண்டிருந்தது - அந்தமானுக்கு அனுப்பப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுக்கு வருகிறார்களா?).

உக்ரைன் எல்லைப் பகுதிகள் ராணுவத்தினால் சூழப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள விளை நிலங்கள் விளைச்சல் இல்லாமல் போயின. கடும் பஞ்சம் உக்ரைனில் நிலவத் தொடங்கியது. உக்ரைன் மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கத் தொடங்கினர். இந்த நிலையை ‘இனப் படுகொலை’ என்று வர்ணிக்கும் சரித்திர ஆர்வலர்கள் உண்டு.

சோவியத் யூனியன் உழைப்பாளிகளின் சொர்க்கம் என்ற இமேஜ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த அராஜகம் எப்படியோ வெளியில் கசிய அது வெளி உலகுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சோவியத் யூனியன் அரசு அவசர அவசரமாக ‘உக்ரைனில் யாரும் பசியால் இறக்கவில்லை. நோய்களால்தான் இறந்தனர்’ என்று சாதித்தது.

இது பழங்கதை. என்றாலும் இதன் தாக்கத்தை மறக்க முடியவில்லை எஞ்சிய உக்ரைன் மக்களாலும் அவர்களது வாரிசுகளாலும். ரஷ்யர்களுடன் அவர்களால் நல்லுறவு கொள்ள முடியவில்லை.

இரண்டாம் உலகப் போரின்போது உக்ரைனியர்களில் ஒரு பகுதி ஜெர்மனிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவும் செயல் பட்டனர்.

ஸ்டாலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. குருஷேவ் ரஷ்ய அதிபரானார். இவர் உக்ரைன் எல்லைப் பகுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் ஸ்டாலின் உக்ரைனுக்கு எதிராக செய்த சதியில் இவரும் பங்கு கொண்டார். என்றாலும் உலகப் போரின்போதும் அதற்குப் பிறகு தனது ஆட்சியிலும் உக்ரைனில் உண்டான பாதிப்புகளைக் களைய முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில்தான் காலப் போக்கில் அடுத்த முக்கிய மாறுதல் ஏற்பட்டது.

உலகில் தன் முத்திரையை மிக அழுத்தமாகவே பதித்தது சோவியத் யூனியன். ஆனால் 1991-ல் அதன் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் சோவியத் யூனியன் கலைக்கப்படுவதாக அறிவித்தார். எதனால் இப்படி கலைக்கப்பட வேண்டும்? கொஞ்சம் எளிமையாகவே அதைப் புரிந்து கொள்வோமே.

சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா. சோவியத் யூனியன் என்பது இத்தனை நாடுகளும் அமைந்த ஒரே நாடாக இருந்தது.

இப்படிப்பட்ட சோவியத் யூனியன் உடைகிறது என்ற செய்தி மற்ற நாடுகளுக்குப் பெரும் வியப்பை அளித்தது. அமெரிக்கா இந்தத் தகவலைக் கொண்டாடித் தீர்த்தது. மற்றொரு சூப்பர் சக்தி முடிவுக்கு வந்தது என்றும், தனது உலகத் தலைமை உறுதியாக்கப்பட்டது என்றும் அமெரிக்கா மகிழ்ந்தது.

சோவியத் யூனியன் எதனால் உடைய வேண்டும் என்பதற்கு எளிதான ஒரே விடை கிடையாது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/உருக்குலையுமா-உக்ரைன்-2/article6851870.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உருக்குலைகிறதா உக்ரைன்?- 3

 
 
கோர்பஷேவ்
கோர்பஷேவ்

கம்யூனிஸத்தை மிக அதிக அளவில் சோவியத் ஆட்சி அறிமுகப்படுத்தியபோது ரஷ்யர்கள் அல்லாத பல இனங்களைச் சேர்ந்தவர்கள் அந்த நாட்டில் பாதிக்கும்மேல் வசித்தனர். அவர்கள் தங்கள் இனங்கள் ரஷ்யர்களுக்கு கீழாக எண்ணப் படுவதை விரும்பவில்லை.

அடுத்த மிக முக்கிய காரணம் சோவியத் யூனியனின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடன் அது நேரடியாக வும், மறைமுகமாகவும் புரிந்து கொண்டிருந்த யுத்தங்கள்.

1985-ல் கோர்பஷேவ் பதவி யேற்றபோதே உடனடியாக சீர் திருத்தங்களைச் செய்யவில்லை யானால் சோவியத் பிளவுபடும் என்பதை உணர்ந்தார். “க்ளாஸ் நாஸ்ட்’’ (Glasnost) என்ற கொள் கையை அறிமுகப்படுத்தினார். இது சோவியத் யூனியன் மக்களுக் குப் பேச்சுரிமையை அளித்தது. மற்றொருபுறம் `பெரெஸ்ட் ரோய்கா’’ (Perestroika) என்ற பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

ஆனால் புதிய பேச்சுரிமை, ஆட்சிக்கு எதிரான கருத்துகளை பீறிட்டெழ வைத்தது. பொருளா தாரக் கொள்கையோ உடனடி பலனைத் தரவில்லை. சோவியத் மக்கள் கோர்பசேவ் அரசை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினர்.

சோவியத் யூனியனின் பிளவு அதன் எல்லைப் பகுதிகளிலிருந்து தொடங்கியது.

எஸ்டோனியா அரசு தன்னாட்சியை விரும்பியது. அடுத்தடுத்து லிதுவேனியா, லாட்வியா, உக்ரைன் போன்ற பகுதிகளும் சுதந்திரம் கேட்கத் தொடங்கின. ஆங்காங்கே சிறிய அளவில் புரட்சிகள் வெடித்தன. மத்திய ஆட்சி இந்த இயக்கங் களால் பலவீனம் அடைந்தது. குடியரசுகளின் ஒத்துழைப்பு கேள்விக்குறியானது.

தீவிர கம்யூனிஸ்ட்கள் கோர்பஷேவ் மீது கடும் கோபம் கொண்டனர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால்தான் இந்த நிலை என்ற ஆத்திரத்தில் அவர்கள் கோர்பஷேவைக் கடத்தினர். பின்பு அவர்கள் அரசு தொலைக் காட்சியில் தோன்றி “கோர்பஷேவ் உடல் நலம் இழந்துவிட்டார். அவரால் இனி ஆட்சி செய்ய முடியாது’’ என்றனர்.

சோவியத் மக்களுக்கு பலத்த அதிர்ச்சி. பல நகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. ராணுவத்தின் உதவியும் கிடைக் காத நிலையில் தீவிர கம்யூ னிஸ்ட்கள் தாங்களாகவே கட்டாயமாகப் பறித்த ஆட்சியை விட்டு நீங்க நேர்ந்தது. கோர்பஷேவ் ஆட்சியில் `ஒப்படைக்கப்பட்டார்’.

எனினும் 1991 டிசம்பர் 25 அன்று அவர் ராஜினாமா செய்ய, அடுத்த ஆண்டு தொடக்கத்தி லேயே சோவியத் யூனியன் என்ற பெயர் உலக வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது. “சுதந்திரக் குடியரசு களின் காமன்வெல்த்’’ என்ற புதிய பொது பெயர் சூட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலும் சுதந்திர நாடுகள்தான். சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டன. உக்ரைன் தனி நாடாகியது.

சோவியத் யூனியன் பிரிந்த பிறகு உண்டான சில விளைவுகள் மிக முக்கியமானது. சர்வதேச சட்டங்களின்படி சோவியத் யூனியனின் வாரிசாக ரஷ்யாதான் கருதப்படும். இதற்கு மிக ஆழமான அர்த்தங்கள் உண்டு. இதற்குமுன் ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் கொண்டதாக விளங்கியது சோவியத் யூனியன். பிளவுக்குப் பின் (சோவியத் நாடுகளில்) ரஷ்யாவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் தொடரும்.

அதுமட்டுமல்ல சோவியத் யூனியனிடம் இருந்த அத்தனை அணு ஆயுதங்களும் ரஷ்யா வுக்குதான். உக்ரைனும் தன்னிடமிருந்த அணு ஆயுதங் களை 1994-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.

சோவியத் யூனியன் பிளவு பட்டவுடன் பதினைந்து தனித்தனி சுதந்திர நாடுகள் உருவாயின. அவை அர்மேனியா, அஜெர்பை ஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிரை ஜிஸ்தான், லட்வியா, லிது வேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் உக்ரைன்.

பிளவுக்குப் பிறகும் இந்த நாடுகளில் பலவும் ஒன்றோ டொன்று பொருளாதார இணைப் பில் உள்ளன. சிலவற்றில் ஜன நாயகமும், சிலவற்றில் சர்வாதி காரமும் நடக்கிறது.

வேறொரு விதத்திலும் ரஷ்யா ஸ்பெஷல்தான். அதன் எல்லைக்குள் இப்போதுகூட சில சின்னச்சின்ன முன்னாள் குடியரசுகள் உள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவை ரஷ்யக் கூட்டமைப்பு என்று குறிப்பிடு கிறார்கள்.

ஏற்கெனவே கூறிய வரலாற்றுக் காரணங்களினால் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. அதேசமயம் உக்ரை னுக்குள்ளேயே இது தொடர்பாக வேறுபாடுகள் ஒலிக்கத் தொடங்கின.

மேற்கு உக்ரைனில் உள்ளவர் கள் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக விரும்புகிறார்கள். இதனால் பொருளாதார வாய்ப்பு கள் அவர்களுக்கு அதிகமாகும். அதைவிட முக்கியமாக தேவைப் படும்போது பிற நாடுகளில் குடியேறும் வாய்ப்பும் அவர் களுக்கு அதிகமாகும். உக்ரைன் இரண்டாகப் பிளவுபட்டாலும் இவர்களுக்குச் சந்தோஷம்தான். இதையெல்லாம் ரஷ்யா கைகட்டி வேடிக்கை பார்க்குமா?

அமெரிக்காவுக்கும், ரஷ்யா வுக்குமான பனிப்போர் முடிந்து விட்டது என்று நினைத்தவர் களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத் திருக்கிறது உக்ரைன் விவகாரம். பனிப்போரையும் தாண்டி கொஞ்சம் வெளிப்படையாகவே மோதத் தொடங்கியுள்ளன அமெரிக்காவும், ரஷ்யாவும்.

கிரிமியா என்ற உக்ரைன் பகுதி தங்களுக்கானது என்கிறது ரஷ்யா. எனினும் கிரிமியா யாருக்குச் சொந்தம் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்யாவோடு போரிட வாய்ப்பில்லை என்று தோன்று கிறது - குறைந்தது வெளிப் படையாக.

அமெரிக்கா எதற்கு உக்ரைன் விஷயத்தில் இவ்வளவு குரல் கொடுக்க வேண்டும்? ஏதோ ஒரு சிறிய நாடு தொடர்பான பிரச்னை இது என்று அமெரிக்காவால் விடமுடியவில்லை.

ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது. தவிர ஆர்க்டிக், பசிபிக், ஈரான் என்று பல கோணங்களில் உக்ரைன் பிரச்னையை அணுகுகிறது அமெரிக்கா.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/உருக்குலைகிறதா-உக்ரைன்-3/article6855659.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உருக்குலையுமா உக்ரைன்?- 4

 
 
கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததையொட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள். கோப்புப்படம்: ஏஎப்பி
கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததையொட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள். கோப்புப்படம்: ஏஎப்பி

1991 கிறிஸ்துமஸ் தினம் அன்று கோர்பஷேவ் ராஜினாமா செய்தார். ‘‘சோவியத் யூனியன் பிளவுபடுவது ஒரு மிகப் பெரும் துயர நிகழ்வு’’ என்றார்.

ஜனவரி 1992ல் சோவியத் குடியரசு பதினைந்து நாடுகளா கியது. உக்ரைன் அதில் ஒன்று.

தற்போதைய ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின் ரஷ்யாவை நன்கு அறிந்தவர். அதன் குறிக்கோள்களை வடிவமைத்ததில் அவருக்கும் பங்கு உண்டு. (சோவியத் யூனியனின் அதிபராக 2000லிருந்து 2008 வரை இருந்தவர்தான் அவர்).

அவரால் சோவியத் யூனியன் சிதறுண்டதை ஏற்க முடியவில்லை. பிரிந்த நாடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பது இப்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை. என்றாலும் முடிந்த வரை முயற்சிக்கிறார் புதின். முடிந்தவரை என்றால்? பிரிந்த நாடுகளின் கொஞ்சூண்டு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தாலே அதில் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறார். உக்ரைன் ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு.

உக்ரைனில் ரஷ்யாவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்று கிரிமியாவைச் சொல்லலாம். கிரிமியா உக்ரைனின் ஒரு பகுதிதான். டாரிக் தீபகற்பம் என்றும் அழைக்கப்படுகிறது. கருங்கடலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்தபோது கிரிமியா உக்ரைனின் பகுதிதான் என்பதை ரஷ்யாவும் ஒப்புக் கொண்டிருந்தது.

கிரிமியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற குடியரசு. அதற்கென்று தனிப்பட்ட நாடாளுமன்றம் உண்டு. உக்ரைனில் இருந்தாலும் கிரிமியா தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பது ரஷ்யாவின் எண்ணம்.

1991க்குப் பிறகு ரஷ்யாவின் எல்லைக்கோடுகள் குறித்து பலவித விமர்சனங்கள் அந்த நாட்டில் கிளம் பின. அவற்றில் மிக வலுவானது கிரிமியா தொடர்பானவைதான்.

உக்ரைன் தனி நாடாக ரஷ்யா அனுமதித்திருக்கக் கூடாது என்றனர் பலர். காரணம் நவீன ரஷ்யாவின் பிறப்பிடம் கீவ் பகுதிதான். (அதாவது உக்ரைனின் தலைநகர்). அதைவிட முக்கியமாக கிரிமியாவை ரஷ்யா விட்டுக் கொடுத்தது (அதாவது இழந்தது) அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி.

பல ரஷ்யர்களின் மனதில் உணர்வுபூர்வமாக இடம் பிடித்த ஒரு பகுதி கிரிமியா. கிரிமியப் போர் இங்குதான் நடந்தது. தவிர கிரிமியாவில் மிக அதிகம் வசிப்பவர்கள் ரஷ்யர்கள்தான், உக்ரைனியர்கள் அல்ல.

கிரிமியாவை தங்கள் மணிமகுடமாகவே நினைத்த ரஷ்யர்கள் உண்டு. அவர்கள் உக்ரைனின் பகுதியாக கிரிமியா மாறியதில் மிகவும் விசனப்பட்டார்கள்.

கிரிமியாவுக்கு தனி நாடாளுமன்றம் மட்டுமல்ல, ஒரு தனிப் பிரதமரும் உண்டு. ஆனால் இந்தப் பிரதமரை நியமிப்பதில் உக்ரைன் அரசின் அனுமதி அவசியம். ஆனால் கிரிமிய எம்.பி.க்கள் இணைந்து செர்ஜி அக்சயனோவ் என்பவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். இவர் ரஷ்ய ஆதரவாளர். கிரிமியா ரஷ்யாவுடன் சேர வேண்டும் என நினைப்பவர். இவர்தான் கிரிமியாவில் இது குறித்து பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.

மார்ச் 16, 2014 அன்று ஒரு பொது வாக்கெடுப்பு கிரிமியாவில் நடைபெற்றது. வாக்குச் சீட்டில் இரண்டே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டுமா? அல்லது அது உக்ரைனின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டுமா?

வாக்களித்தவர்களில் 95 சதவிகி தத்தினர் ரஷ்யாவுடன் சேருவதற்கு ஆதரவளித்திருந்தனர். கிரிமியா மக்களின் எண்ணத்தை மதிப்பதாக புதின் அறிவித்தார். ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் இந்தப் பொது வாக்கெடுப்பு சட்டமீறல் என்றன.

கிரிமியா மக்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவுடன் தங்களை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு அதே வேகத்தில் ரஷ்யாவுடன் மார்ச், 2014-ல் இணைந்தும் விட்டார்கள். ரஷ்யா நாடாளுமன்றத்தில் கிரிமியா தன் நாட்டோடு சேர்ந்து விட்டதாக தீர்மானம் கொண்டு வந்துவிட்டது.

போதாக்குறைக்கு உக்ரைனி லுள்ள டோன்பாஸ் என்ற பகுதியும் ‘இனி நாங்கள் உக்ரைனின் பகுதியல்ல. சுயாட்சி பெற்று விட்டோம்’ என்று கூறிவிட்டது. தங்களுக்கென்று ஒரு தனிக் கொடியையும் உருவாக்கிக் கொண்டு விட்டது. இங்கும் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பவர்கள் என்பது முக்கியமான தகவல்.

இதற்குள் ரஷ்ய ஆதரவு கிரிமியா பிரதமரை உக்ரைன் பதவியிறக்கம் செய்தது. உடனே துப்பாக்கி வீரர்கள் பலரும் கிரிமியாவை ஆக்ரமிக்கக் தொடங்கினர்.

ஆயிரக்கணக்கான ராணுவத் தினர் கிரிமியாவைத் தன் கட்டுப் பாடில் வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் எங்கள் ராணுவத்தினர் அல்ல என்கிறது ரஷ்யா. ஆனால் அவர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கிரிமிய ராணுவத்தினர் அவர்கள். தவிர ரஷ்ய ராணுவத்தினரும் அங்கு ஊடுருவத் தொடங்கி விட்டனர்.

சர்வதேச சட்டப்படி கிரிமிய மக்களின் முடிவு சரியானதுதான் என்கிறார் புதின்.

புதினுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் அனுமதி அளித்துவிட்டது. எதற்கு? தேவைப்பட்டால் ரஷ்ய ராணுவத்தை கிரிமியாவுக்கு மட்டுமல்ல, மொத்த உக்ரைனுக்குமே அனுப்பலாம் என்பதற்கான அனுமதி.

ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் கிரிமியாவை ரஷ்யா தன் வசம் கொண்டுவந்ததை எதிர்த்து ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/உருக்குலையுமா-உக்ரைன்-4/article6859981.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உருக்குலைகிறதா உக்ரைன்?- 5

உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் எரிந்து சாம்பலாகிய மலேசிய விமானம்.

உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் எரிந்து சாம்பலாகிய மலேசிய விமானம்.

ரஷ்யா-உக்ரைன் நாடுகளின் போராட்டத்தில் வேறொரு விபரீதமும் சென்ற ஆண்டு நடைபெற்றுவிட்டது.

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணமாகிக் கொண்டிருந்தது ஒரு போயிங் 777 விமானம். கிழக்கு உக்ரைன் பகுதியில் அது பறந்தபோது சுட்டு வீழ்த்தப் பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் இறந்தனர்.

ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 22,000 மீட்டர் உயரம் வரை இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாம் இந்த ஏவுகணை. மேற்படி விமானம் பத்தாயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டி ருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது.

சுட்டது யார்? உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு புரட்சியாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டு கின்றனர். ‘‘உக்ரைன் எல்லையில் தான் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் ராணுவம்தான் இதற்குக் காரணம்’’ என்கிறார்கள் ரஷ்ய ஆதரவு புரட்சியாளர்கள்.

மலேசிய விமானம் சென்ற அதே பாதையில்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற விமானமும் பறந்துள்ளது. அதற்கு வைக்கப்பட்ட குறியில்தான் மலேசிய விமானம் சிக்கிவிட்டது என்றும் தகவல் பரவியது. (புதின் சென்ற விமானம் அந்தப் பகுதியில் சற்று தாமதமாகக் கடந்துள்ளது என்பதும், இரண்டு விமானங்களும் வெளியில் ஒரேவித வண்ணம் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கவை).

ஆனால் ‘’உக்ரைன் விமானத் தைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு இங்குள்ள ரஷ்ய ஆதரவுக்காரர்கள்தான் மேற்படி விமானத்தை வீழ்த்தியிருக்கி றார்கள். எனவே ரஷ்யாதான் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்கிறது உக்ரைன் அரசு.

அமெரிக்கா ரஷ்யா மீது சந்தேகப்படுகிறது. ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணையான எஸ்.ஏ.-11 அல்லது எஸ்.ஏ.-20 மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றது. தவிர சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரஷ்ய ராணு வமும் இருந்ததால், சந்தேகம் பெரிதாகிறது என்றது.

இறந்தவர்களில் ரஷ்யர்களோ, உக்ரைனியரோ எவருமில்லை. மிகப் பெரும்பாலானவர்கள் (189 பேர்) நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். 44 மலேசியர்களும், 27 ஆஸ்திரேலியர்களும் உயிரிழந் துள்ளனர். (சஞ்ஜித்சிங் என்ற இந்திய விமானப் பணியாளர் ஒருவரும் இதில் இறந்தார்).

விமானத்தை வீழ்த்தியது தொழில்நுட்பத் திறன் வாய்ந்த ரஷ்யக் குழுவினர்தான் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு, விசாரணைக் குழு ஒன்றை சம்பவ இடத்துக்கு அனுப்பியது. விமானம் விழுந்தது கிராபோவா எனும் கிராமத்தில். அங்கு சென்று ஆராய்ச்சிகள் செய்தனர்.

ரஷ்யாவும், பிரிவினைவாதப் புரட்சியாளர்களும் மீட்புப் படையினரை விமானம் வீழ்த்தப்பட்ட இடத்துக்கு அருகே செல்வதைத் தடுத்தனர் என்கிறது உக்ரைன். இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் அது வெளியிட்டுள்ளது.

மேற்படி விமானப் படுகொலை யில் இறந்தவர்களில் மிக அதிகமானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பாக நெதர்லாந்து அதிபர் மார்க் ரூட்டுக்கு புதின் இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “இது மிக மிக சோகமான சம்பவம். உக்ரைன் விவகாரத்தில் விரைவாக அமைதித் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.

மலேசிய விமானம் சுடப்பட்டது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டு மென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய தயாரிப்பான எஸ்ஏ-11 ரக ஏவுகணை மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டு மென்று கூறும் அமெரிக்கா, இது போன்ற ஏவுகணையை உக்ரைனி லுள்ள புரட்சியாளர்கள் மட்டுமே தனியாக இயக்கியிருக்க முடியாது என்றும் இதற்கு தொழில்நுட்ப ஆற்றல் கொண்டவர்கள் உதவி செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது ஏவுகணையை இயக்க ரஷ்ய ராணுவம் நிச்சயம் உதவியிருக்க வேண்டும் என அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதில் வேறொரு முக்கியமான விஷயமும் கலந்திருக்கிறது. இருபதாவது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் (விமான விபரீதம் நடைபெற்ற) சில நாட்களில் தொடங்கவிருந்தது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகர் பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தனர்.

இந்த மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த விமானம் மலேசியாவின் கோலாலம்பூர் வந்தவுடன், அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் இவர்கள் மெல்போர்ன் செல்லவிருந்தனர். இந்நிலையில் கிழக்கு உக்ரைன் தாக்குதலுக்கு இலக்காகி இறந்து விட்டனர். மாநாட்டுக்கும் தாக்குதலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பதும் அலசப்படுகிறது.

முன்பெல்லாம் எதிரிகளைத் தாக்கினார்கள். பிறகு எதிரி நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்களையும் தாக்கினார்கள். இப்போது இரு நாடுகளிலும் வசிக்காத அப்பாவிகளான பிற நாட்டினர் மீது வான்வழித் தாக்குதல் நடக்கிறது என்றால் அது உச்சத்தின் கொடூரம்.

இதெல்லாம் போக, ரஷ்ய அதிபரின் வேறொரு செயல்பாடு உக்ரைனை அதிக அளவில் கொதிக்க வைத்திருக்கிறது.

விளாடிமிர் புதின் சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றி இருக்கிறார். அதை ரூஸ்வெல்ட், சர்ச்சில், டிகாலே போன்றவர்களின் உரை போன்றது என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார் புதினின் முக்கியப் பிரசாரகர். புதினின் பேச்சு அரசியல் பார்வை யாளர்களின் இமைகளுக்கு மேற்பு றம் உள்ள இரு பகுதிகளையும் உயர்த்த வைத்துள்ளது.

(இன்னும் வரும்)

http://tamil.thehindu.com/world/உருக்குலைகிறதா-உக்ரைன்-5/article6864479.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உருக்குலைகிறதா உக்ரைன்?- 6

 
 
புதின்
புதின்

தனது உரையில் கிரிமியா ஒரு புனிதத்தலம் என்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். அதாவது ஜெருசலேம் நகர அளவுக்கு அவருக்கு அது புனிதமானதாம். தான் ஞானஸ்நானம் பெற்றது கிரிமியாவில்தான் என்பதை வேறு நினைவுகூர்ந்திருக்கிறார்.

பல ரஷ்யர்களுக்கு புதினின் ஞானஸ்நான விஷயமே தெரியாது. கிரிமியா தீபகற்பம் மதக் காரணங்களால் அறியப்பட்ட தில்லை.

‘’உண்மையில் உக்ரைனில் நாம் காட்டும் ஈடுபாட்டுக்கும், அமெரிக்கா நமக்கு விதித்திருக்கும் பொருளாதாரத் தடைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. எப்படியாவது நம்மை பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் எண்ணம்.

உக்ரைன் இல்லா விட்டால் வேறு ஏதாவது காரணத் தைக் காட்டியிருக்கும்’’ என்றும் அந்த உரையில் கூறியிருக்கிறார்.

ரூபிளின் (ரஷ்ய நாணயம்) மதிப்பு வீழ்ந்து கொண்டிருப் பதுதான் ரஷ்ய மக்களின் முக்கியக் கவலையாக இருக்கிறது. ‘’உக்ரைன் கிடக்கட்டும். விலை வாசியைக் குறையுங்கள்’’ என்கி றார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் உக்ரை னில் ரஷ்ய ராணுவம் நுழைந்தது சரிதான் என்று கூறும் மக்களின் சதவீதம் (கடந்த பத்து மாதங்களில்) 74-ல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது. தங்கள் நாடு உலக அரங்கில் தனிமைப் படுத்தப்படுவதாக வருத்தப்படுகி| றார்கள்.

இந்த தனிமைப்படுத்துதல் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்று விருப்பப்படு கிறார்கள் உக்ரைனிய ஆட்சி யாளர்கள். ‘’பிரான்ஸ் தனது போர்க் கப்பல்களை ரஷ்யாவிற்கு விற்கக் கூடாது. டாலர், யூரோ, ஸ்டெர்லிங் ஆகியவற்றிலிருந்து ரஷ்ய நாணயம் தனிமைப் படுத்தப்பட வேண்டும். அதாவது ரஷ்ய நாணயத்தை பிற நாடுகள் ஏற்கக் கூடாது’’ என்று அவர்கள் கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.

மே 25 அன்று நடைபெற்ற உக்ரைன் தேர்தலில் பெட்ரோ போரோஷென்கோ என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ‘’நான் ஆட்சிக்கு வந்தால் உக்ரைன் ஒன்றிணைந்து உறுதி யாக இருக்கும். கலவரங்களை அடக்குவேன்’’ என்று தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தார். ஆனால் கலவரம் தொடர்கிறது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடுகளின் மீதெல் லாம் (அரசுக்கெதிரான கிளர்ச்சி யாளர்கள் அதிகம் உள்ள பகுதி) உக்ரைன் அரசு குண்டுகளை எறிகிறது என்கின்றனர் ரஷ்யப் புரட்சியாளர்கள். இதை உக்ரைன் மறுக்கிறது. அதேசமயம் ரஷ்யப் புரட்சியாளர்களின் செயல்பாடு ராணுவத்தை இயங்க வைத்து விடும் அபாயத்துக்கு அடிகோலு கிறது என்றும் கூறுகிறது.

உக்ரைனுக்குத் தொடர்ந்து எரிவாயுவை அளித்துக் கொண்டி ருந்த ரஷ்யா அதன் விலையை 80 சதவீதம் உயர்த்தியது. தவிர தனக்கு ஏற்கனவே உக்ரைன் தரவேண்டிய ஏராளமான பாக்கித் தொகையை உடனே செலுத்தியாக வேண்டும் என்கிறது ரஷ்யா. இல்லையென்றால் எரிவாயு அனுப்புவதை நிறுத்தி விடுமாம்.

எரிவாயு இறக்குமதிக்காக உக்ரைன் ரஷ்யாவுக்கு அளிக்க வேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு தெரியுமா? 195 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம்! ரஷ்யா மேலும் இரண்டு நிபந்தனை களையும் விதித்துள்ளது. இனி முன்வைப்புத் தொகையை உக்ரைன் செலுத்தினால் மட்டுமே மீண்டும் எரிவாயு விநியோகம் செய் யப்படும்.

உக்ரைன் வழியாகச் செல்லும் குழாய்களின் மூலம் இனி ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ரஷ்யாவின் பிற வாடிக்கை யாளர்களுக்கும் எரிவாயு விநியோ கம் செய்யப்படும்.

அது மட்டுமல்ல, துருக்கி கிரீஸ் எல்லைப் பகுதி வழியாக ஒரு மிக நீண்ட பைப்லைனை உருவாக்கப் போகிறதாம். இதன்வழியாகத்தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்படுமாம். மூன்று வருடங்களில் உருவாகும் இதன் நோக்கம் உக்ரைனைத் தவிர்ப்பதுதான்.

ரஷ்யா உக்ரைன் மோதலில் நேட்டோ அமைப்பின் (North Atlantic Treaty Organisation) பங்கும் வெகுவாக அலசப்படுகிறது. 2008-ல் இந்த அமைப்பு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் தாங்கள் உறுப்பினர்களாக அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதன் பிறகு ரஷ்யா, உக்ரைனுக்கிடையே கொஞ்சம் நல்லுறவு மலர்ந்ததுபோல இருந்தது.

ஆனால் 2008-ல் ஜார்ஜியாவை ஆக்ரமித்தது ரஷ்யா. அதற்கு அடுத்த ஆண்டே உக்ரைனை ரஷ்யா எச்சரித்தது ‘‘அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளுடன் எந்தவித ராணுவப் பயிற்சியையும் மேற்கொள்ளக் கூடாது’’ என்றது.

சென்ற ஆண்டு இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் உக்ரைனுக்குப் பல விதங்களில் உதவுவது என்று தீர்மானித் திருக்கிறார்கள். நேட்டோ உறுப்பினர்களில் அமெரிக்காவும் உண்டு.

இப்படி உதவ முன்வந்ததற்கு ரஷ்யாவுடனான பழைய பகை மையும் ஒரு காரணம் என்றா லும் உக்ரைனின் வெளிப்படை யான வேண்டுகோளும் ஒரு காரணம். உக்ரைன் அரசு ‘’நேட்டோ மட்டும்தான் எங்களை இப்போது காக்கக் கூடிய அமைப்பு’’ என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

ஆனால் நேட்டோ உடன்படிக்கையின்படி அதன் உறுப்பினர் நாடுகள் மட்டுமே ஒருவருக்கொருவர் உதவ முடியும். உக்ரைன் நேட்டோவின் உறுப்பினர் அல்ல.

இதனால் நேட்டோ அதிகாரிகள் ‘’நாங்கள் ஓர் அமைப்பாக எந்த ராணுவ உதவியையும் உக்ரைனுக்குச் செய்ய மாட்டோம்’’ என்கிறார்கள்.

ஆனால் நேட்டோவின் உறுப்பினர் நாடுகள் அப்படி ராணுவ உதவி செய்வதைப் பற்றி அவர்கள் கருத்து கூற மாட்டார்களாம். அதாவது ‘நீ அவனை அடிக்கக்கூடாது. ஆனால் அப்படி அடித்தால் நான் கண்டுக்கவே மாட்டேன்’ என்கிற கொள்கை.

உக்ரைனைச் சுற்றி ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலவித ஆயுதங்களோடு சூழ்ந்துள்ளனர். போதாக்குறைக்கு உக்ரைனுக்குள் ராணுவ சீருடையின்றி ரஷ்யா என்ற பெயர் பொறிக்கப்படாத போர்த் தளவாடங்களுடனும் ரஷ்ய வீரர்கள் ஊடுருவி உள்ளனர்.

தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை.

http://tamil.thehindu.com/world/உருக்குலைகிறதா-உக்ரைன்-6/article6868503.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.