Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா? நிலாந்தன்:-

Featured Replies

தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின்  எல்லையோரக்  கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன.


ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக  ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு  கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம்பேருடைய கவனத்தை ஈர்க்காமல் அமைதியாக முடிந்து போயிற்று.


அவருடைய இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அது  அண்மைத் தசாப்தங்களில் அங்கு நடந்த  இறுதி நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும்; வேறுபட்டுக் காணப்பட்டது. கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும்  வேறுபட்டு நிற்கும் எல்லாத் தரப்புக்களும்; பங்குபற்றிய ஓர் இறுதி நிகழ்வு அது.  எல்லாக் கட்சிக்காரர்களும், செயற்பாட்டாளர்களும் அந்த நிகழ்வில்  போற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று டேவிட் ஐயாவின் வாழ்க்கை முழுவதிலும் இருந்திருக்கிறது.  பெருமளவில் அரசியல் பிரமுகர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட அந்நிகழ்வில்  மிகக்குறைந்தளவு பொது ஜனங்களே பங்குபற்றியிருக்கிறார்கள்.  இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களின் பின் நடந்த மற்றொரு இறுதி நிகழ்வில்  ஒப்பீட்டளவில் கூடுதலான பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். அதுவும் ஒரு செயற்பாட்டாளரின் இறுதிக் நிகழ்வுதான். தமிழ் ஐயா என்று அழைக்கப்படும் கிளிநொச்சியை  மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வு அது. அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அதில் பொதுமக்கள் கூடுதலாகக் கலந்துகொண்டார்கள். ஆனால் டேவிட் ஐயா கிளிநொச்சியில் வசித்திருக்கிறார் என்பது அவர் இறந்தபொழுதே பலருக்கும் தெரியவந்தது.


தனது நாடு திரும்புதலை அவர் பிரசித்தப்படுத்த விரும்பவில்லைப் போலும்.   கிளிநொச்சியில் உள்ள குருகுலத்தை ஸ்தாபித்த  மகா ஆழுமைகளில் ஒன்று  நான்கு மாதங்களாக தங்கள் மத்தியில் சந்தடியின்றி வாழ்ந்து மறைந்திருக்கிறது என்பதை அந்த மக்களுக்கு  யார்  எடுத்துக் கூறுவது?


அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட எல்லா அரசியல்வாதிகளை விடவும்  அவர் அதிகம் ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார். அதிகம் அர்ப்பணித்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்புக்களுக்குப் பரிசாக எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்யவில்லை. சொத்து எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. யாரோடும் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இப்படிப் பார்;த்தால் அவருடைய அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றிய  எல்லா அரசியல்வாதிகளை விடவும் அவர் உயர்ந்து நிற்கிறார்.  அரசியல் வாதிகளுக்கும் செயற்பாட்டாழுமைகளுக்கும் அவர் ஓர் அரிதான முன்னுதாரணம். குறிப்பாக ஜனவரி 08 இற்குப் பின் தமிழ் சிவில் வெளியை செயற்பாட்டு இயக்கங்கள் எவ்வாறு கையாளலாம் என்று சிந்திக்கப்படும் ஓர் அரசியல் சூழலில் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் அவரிடமிருந்து குறிப்பாக இரண்டு முக்கிய  முன்னுதாரணங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.


01. ஒரு மெய்யான சத்தியாக்கிரகி எப்படி மெய்யாகவே ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டி வந்தது?  என்பது.


02.ஒரு செயற்பாட்டு இயக்கம்  ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தொடர்புறுவதால் வரக் கூடிய பின்விளைவுகள் பற்றியது.  
இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.


தமிழ் மிதவாதிகள் அடிக்கடி கூறுகிறார்கள் சத்தியாக்கிரகத்தில் ஏற்பட்ட தோல்வியே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணம் என்று. அது ஒரு முழு உண்மை அல்ல என்பது ஏற்கனவே எனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.  அகிம்சை என்பது  சாகப் பயந்தவர்களின் ஆயுதம் அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் வாழ்க்கை முறையாகும். காந்தியைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கைமுறையாக இருந்தது. அதனால்தான் அவர்  “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத் தக்கதாக இருந்தது.  ஆனால் எமது மிதவாதிகளைப் பொறுத்தவரை அகிம்சை எனப்படுவது  ஒரு வாழ்க்கை முறையாக இருக்கவில்லை. அது ஒரு போராட்ட உத்தியாகத்தான் காணப்பட்டது.  கடந்த ஆறாண்டுகால அனுபவமும் அத்தகையதே. அதாவது சாகப் பயந்தவர்களின்  போராட்ட உத்தியாகவே  சத்தியாக்கிரகம் கையாளப்பட்டு வருகிறது.


  இத்தகைய ஒரு பின்னணியில்  ஈழத்தமிழர்கள் மத்தியில் அகிம்சையை ஒரு வாழ்க்கை முறையாக  வாழ்ந்து காட்டிய ஆளுமைகள் மிக அரிதாகவே தோன்றியிருக்கிறார்கள். டேவிட் ஐயா அத்தகைய ஒருவர். மற்றொருவர் மு. தளையசிங்கம்.  டேவிட் ஐயா ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளார்.  தளையசிங்கம் ஓர் ஆன்மீக மற்றும்  சமூக அரசியல் செயற்பாட்டாளர். இருவரும்  சத்தியாகிரகத்தை  தமது நடைமுறை வாழ்வில் விசுவாசமாகக் கடைப்பிடிக்க முற்பட்டார்கள். டேவிட் ஐயா  காந்தியம் என்ற பெயரிலேயே  அமைப்பினை உருவாக்கினார்.  தளையசிங்கம் பூரண சர்வவோதயம் என்ற ஒரு அமைப்பைக் கட்டி எழுப்ப முற்பட்டார். காந்திய இயக்கம்  அதன் ஆரம்பக் கட்டங்களில் வெளியிட்ட ஒரு அரிதான சிறிய நூலை அதன் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் பின்னாளில் புளொட் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவருமாகிய ஒருவர் வைத்திருந்தார். . GANDHIYAM : VAVUNIYA-SRILANKA என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட  அந்நூலில்  காந்திய இயக்கத்தின் குறிக்கோள்களும் செயற்திட்டங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த பண்ணைகளுக்கூடாக காந்திய விழுமியங்களை கட்டி எழுப்புவதே  டேவிட் ஐயா, மற்றும் மருத்துவர் ராஜசுந்தரம்  ஆகியோரின்  அடிப்படை இலக்குகளாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது.  


வாகன வசதிகள் குறைந்த அந்நாட்களில்  டேவிட் ஐயா கென் பாம் டொலர் பாம் போன்ற பகுதிகளை நோக்கி  கிட்டத்தட்ட  பதினைந்து மைல்களுக்கு மேலாக  நடந்து சென்று பணிபுரிந்ததாக காந்தியச் செயற்பாட்டாளரகள் கூறுகிறார்கள்.


கிட்டத்தட்ட 45000 பேர்களையாவது  இவ்வாறு  எல்லைப்புறங்களிலும் வவுனியா மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலும் காந்தியம் குடியேற்றியது என்று கூறப்படுகிறது.  திருமலையில் உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பின்நாட்களில் அகற்றப்பட்டுவிட்டன. மட்டக்களப்பில் சில குடியிருப்புக்கள் மிஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் குறிப்பிடத்தக்களவு குடியிருப்புக்கள் தப்பிப்பிழைத்துள்ளன.  


1977 இல் நிகழ்ந்த இன வன்முறையின் விளைவாக தமிழ்ப்பகுதிகளை நோக்கி வந்த மக்களை  குடியமர்த்தும் நோக்கத்தோடு ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்பட்டதாக   மேற்சொன்ன நூலில் கூறப்பட்டுள்ளது.  அப்படிப் பார்த்தால் காந்தியம் உருவாக்கிய  ஒருங்கிணைந்த பண்ணைகளில் அநேகமானவை  இன வன்முறையின் விளைவுகளே எனலாம்.  அவை ஒருங்கிணைந்த பண்ணை வடிவிலான குடியேற்றங்கள் மட்டுமல்ல.  அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு எதிரான  ஒருவித தற்காப்புக் கவசங்களும்தான்.   


நாட்டின் பல்லினத் தன்மையை உறுதி செய்வதற்காகவே அரசின் ஆதரவுடனான குடியேற்றங்கள் செய்யப்படுவதாக தென்னிலங்கையில் இருப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள். இலங்கை தீவின் எல்லா மாவட்டங்களையும் பல்லினத் தன்மைமிக்கவைகளாக உருவாக்க  வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டிருக்கிறது.  ஆகப்பிந்திய கணக்கெடுப்புக்களின்படி இப்பொழுது இலங்கைததீவின் எல்லா மாவட்டங்களுமே பல்லினத்தன்மை மிக்கவைகளாக ஆக்கப்பட்டுவிட்டன.


ஆனால் மெய்யான பொருளில்  பல்லினத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தை ஸ்தாபிப்பது என்பது  ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்தே  தொடங்குகிறது.  ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை கரைப்பதில் இருந்து அல்ல.  அரசாங்கத்தால் திட்டமிட்டுச் செய்யப்படும் குடியேற்றங்கள் ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவமான இருப்பை  நீர்த்துப் போகச் செய்து  கரைத்துவிடும் உள்நோக்கம் உடையவை. நிச்சயமாக அது பல்லினத்தன்மை மிக்க ஒரு சமூகத்தை உருவாக்காது. மாறாக அது எல்லாவற்றையும் ஒன்றாகக் கரைத்துவிடும் அதாவது  பெரிய இனத்துள் சிறிய இனத்தை  கரைத்தழித்துவிடும் உள்நோக்கம் உடையது.


காந்தியம் கட்டி எழுப்பிய ஒருங்கிணைந்த பண்ணைகள்  மேற்சொன்ன  அரசின் உதவியுடனான குடியேற்றங்களுக்கு எதிரான  ஒருவித தற்காப்புப் பொறிமுறைதான்.  இவ்வாறு  காந்திய விழுமியங்களுக்கூடாகச் சிந்தித்த டேவிட்ரும் ராஜசுந்தரமும் எப்படி ஆயுதப் போராட்டத்தின் ஆதரவாளர்கள் ஆயினர்?  அவர்கள் மட்டுமல்ல.  மு. தளையசிங்கம் அணியினரும் கூட பின்னாளில் ஆயுதப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகவே மாறினர். ஆயின்  ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மெய்யான சத்தியாக்கிரகிகள் ஏன்  ஒரு கட்டத்திற்குப் பின்  அதற்கு முற்றிலும் மாறான ஒரு வழிமுறையை தெரிந்தெடுத்தார்கள்?.  அவர்கள்  தமது  நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை.  போராட்ட வழிமுறைகளைத்தான் மாற்றிக் கொண்டார்கள். ஆனால்  தமிழ் மிதவாதிகளில் எத்தனைபேர் அவ்வாறான  ஒரு இறந்தகாலத்தைக் கொண்டிருக்கிறார்கள்? காந்தி சொன்னது போல “எனது வாழ்க்கையே எனது செய்தி” என்று கூறத்தக்க எத்தனை மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.?   இது முதலாவது. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் டேவிட் ஐயாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியது.


இரண்டாவது தமிழ் செயற்பாட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
1998 ஆம் ஆண்டு  ஜெயசிக்குறு படைநடைவடிக்கையின் போது வவுனியாவில்  பாலமோட்டைக் கிராமத்திற்கு ஊடாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். அப்பொழுது  மூத்த அசியல்  செயற்பாட்டாளர் ஒருவர்   பாலமோட்டையில் இருந்த காந்தியப் பண்ணையைக் சுட்டிக்காட்டி பின்வருமாறு சொன்னார். “காந்திய இயக்கத்தை அதன் போக்கிலேயே விட்டிருக்கலாம்.  ஆயுதப் போராளிகள்  அதற்குள் நுழைந்திருக்கக் கூடாது. காந்தியமும் அதற்கு இடம்விட்டிருக்கக் கூடாது.  இப்பொழுது  அந்த இயக்கமும் இல்லை. காந்தியப் பண்ணைகளும் இல்லை.  ஆனால் ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்படாது விட்டிருந்திருந்தால்  காந்தியப் பண்ணைகள்   தனித்துவமான ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்திருக்கும்|| என்று.

இது தொடர்பில் காந்தியச் செயற்பாடுகளோடு அதிகம் தொடர்புபட்டிருந்த புளொட் இயக்க உறுப்பினர்கள் சிலரோடு உரையாடினேன். அவர்களிடம் இருந்து பெற்ற   தகவல்களின் அடிப்படையிலும் டேவிட் ஐயா ‘எழுநா’ இதழுக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையிலும் ஒரு தொகுதி தகவல்களைத் திரட்டமுடிந்தது. ஆனால் அவை முடிந்த முடிவுகள் அல்ல. காந்திய இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் புளொட் இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. எனவே இதில் சம்பந்தப்பட்ட இந்த  இரண்டு இயக்கங்களையும் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகப் பேசும்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் ஒரு  வரலாறே ஒப்பீட்டளவில் முழுமையானதாக இருக்க முடியும்.


டேவிட் ஐயா கூறுகிறார். புளொட் இயக்கத்தைச் சேர்ந்த  சந்ததியாருக்கும் தனக்கும் இடையிலிருந்த  தனிப்பட்ட உறவு காரணமாகவே  காந்தியத்துக்கும்  புளொட்டுக்கும் இடையே  நெருக்கம் உண்டாகியது என்று. ஆனால் டேவிட் ஐயாவை விடவும் மருத்துவர் ராஜசுந்தரமே புளொட் இயக்கத்தோடு அதிகம் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. டேவிட் ஐயா  அதிகபட்சம் திட்டமிடல் பணிகளையே மேற்கொண்டதாகவும் மருத்துவர் ராஜசுந்தரம்தான் அதிகபட்சம்  பண்ணைகளில் களத்திலிறங்கி வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது.  


தமிழ் மிதவாதிகளிடம் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் குறிப்பாக இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்கள் காந்தியத்தில் தொண்டர்களாக இணைந்தார்கள்.  இவர்களில் பலர் சந்ததியாரின் தொடர்பு காரணமாக பின்னாளில் புளொட்டில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.  புளொட் இயக்கத்தைச்; சேர்ந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட “புதியபாதை” என்ற பத்திரிகையை காந்தியத் தொண்டர்கள் விநியோகித்திருக்கிறார்கள். சுந்தரம் பிந்நாளில் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுந்தரம் கொல்லப்பட்டதை அடுத்து காந்தியத்துக்கும் புளொட்டுக்கும் இடையிலான உறவு ஓரளவுக்கு வெளியரங்கமாகியது என்று ஒரு மூத்த புளொட் உறுப்பினர் சொன்னார்.


ஆனால், தமது இயக்கத்தில் வினைத்திறன்மிக்க தொண்டர்களாக உள்ள பலரும் புளொட் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது டேவிட்டுக்கும் ராஜசுந்தரத்துக்கும்  நன்கு தெரிந்திருந்தது என்று நம்ப இடமுண்டு.  இக்கட்டுரைக்காக நான் சந்தித்த  மூத்த புளொட்  உறுப்பினர் ஒருவரிடம் கேட்டேன். காந்தியத்தில் புளொட் சம்பந்தப்பட்டிராவிட்டால்  காந்தியம் எப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்கும்?என்று.  அவர் சொன்னார் - “காந்தியத்தின்  வினைத்திறன்மிக்க தொண்டர்களாக இருந்தவர்களில் பலர்  எமது இயக்கத்தோடு தொடர்புடையவர்கள்தான். அவர்கள் இல்லை என்றால் காந்தியம் அப்படி ஒரு வளர்ச்சியைப் பெற்றிருக்காது. தவிர எமது இயக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்காவிட்டாலும் அரசாங்கம் காந்தியத்தை நீண்ட காலத்துக்கு அனுமதித்திருக்காது” என்று.


சிறையுடைப்பில் தப்பிச் சென்ற பின் இந்தியாவில் டேவிட் ஐயா புளொட் இயக்கத்தின் தலைமைத்துவத்தோடு முரண்படத் தொடங்கினார்.  ஒரு கட்டத்தில்  புளொட் இயக்கத்தில் இருந்து  பிரிந்து  சென்ற தீப்பொறி அணியோடு  அவர் சேர்ந்து இயங்கத் தொடங்கினார்.  அதன் பின் புளொட் இயக்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட உதவிகள் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய  போதும் அந்த இயக்கத்திற்கு அறிவித்திருக்கவில்லை. ஆனால் அவருடைய இறுதி நிகழ்வை அந்த இயக்கமே ஒழுங்கு செய்தது.


ஒரு செயற்பாட்டு இயக்கத்தின் ஒழுக்கத்திற்கும் ஆயுதப் போராட்ட ஒழுக்கத்திற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு குறிப்பாக மக்கள் மயப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு இயக்கமானது ஆயுதப் போராட்ட இயக்கத்தோடு நேரடியாக தொடர்புறுகையில்  அந்த ஆயுதப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அந்த செயற்பாட்டு இயக்கத்தின்  போக்கையும் தீர்மானிக்கின்றன.  அந்த ஆயுதப் போராட்டம்  தோற்கடிக்கப்படுமாக இருந்தால் அந்த செயற்பாட்டு  இயக்கமும் தோற்கடிக்கப்படுகிறது.


ஈழத்தமிழ் வரலாற்றில் காந்தியம் இயக்கத்தைப் போலவே மற்றொரு உதாரணமும் உண்டு. யாழ். பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு எழுந்த பொங்தமிழ் என்று அழைக்கப்படும் ஒரு பேரரங்கச் செயற்பாடு அது.  இலங்கைத்தீவின் வரலாற்றிலேயே  முன்னுதாரணமற்ற ஒரு பேரரங்கச் செயற்பாடு அது.  முதலிரு பொங்குதமிழ் நிகழ்வுகளும் ஒப்பீட்டளவில் சுயாதீனமானவை என்று கூறப்படுகின்றது. ஆனால் அதன் பின் நிகழ்ந்தவை   ஆயுதப் போராட்டத்தின் அதிகரித்த  செல்வாக்குக்கு உட்பட்டுவிட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளிலும் பொங்குதமிழை ஒத்த ஒரு பேரரங்க நிகழ்வை  பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு  உருவாக்க முடியாமல் போயிற்று.  ஒரு செயற்பாட்டு இயக்கமானது  ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புறுகையில்  அதன்  தனித்துவம் மிக்க அடிப்படை ஒழுக்கத்தை இழக்காமல் இருப்பது அவசியம்.  இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் போது அந்த செயற்பாட்டு இயக்கமும் பின்தள்ளப்பட்டுவிடும்.


தமிழ் சிவில் இயக்கங்கள்  டேவிட் ஐயாவின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.


ஆயுதப்போராட்டம் கருக்கொண்ட அதே தசாப்தகாலப்பகுதியில் உருவாகிய ஒரு மகத்தான செயற்பாட்டியக்கம் இடையிலேயே தடைசெய்யப்பட்டடு விட்டது. இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளான பின்னரும் அப்படியொரு செயற்பாட்டியக்கத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. ஜனவரி எட்டுக்குப் பின் அதிகரித்து வரும் தமிழ் சிவில் வெளியை வெற்றிகரமாகக் கையாளத்தக்க செயற்பட்டியக்கங்கள் எதையும் அரங்கில் காணமுடியவில்லை. தமிழ்மக்கள் செயலுக்குப் போகாமல் கூடுதலாகக் கதைத்துக்கொண்டிருக்கிறார்களா? இறந்தகாலத்திலிருந்து எதையுமே விரைவாகக் கற்றுத்தேற மாட்டார்களா?
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124994/language/ta-IN/article.aspx

 

Edited by நியானி
மூலம் இணைக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

நிதர்சனமான கட்டுரை .

சனி டேவிட் ஐயாவின் நினைவுஅஞ்சலி நிகழ்விற்கு சென்றிருந்தேன் .ஐயாவால் எதுவித அரசியலும் அற்று தமிழ் நாட்டில் அவரிடம் கட்டிட கலை படித்த ஒரு பெண்ணே அதை ஏற்பாடு செய்திருந்தார் .

அந்த பெண்ணின் தயார் பேசும்போது சொன்னார் தனது மகள் கனடா வந்து படித்துமுடித்தபின் டேவிட் ஐயா கொடுத்த ஒரு ஐந்து வசனம் கொண்ட கடிதம் ஒன்று தான் நல்லதொரு நிறுவனத்தில் வேலை எடுக்கும் நிலைக்கு கொண்டு  வந்து விட்டது என்று .அந்த பெண்ணின் கணவன் பிள்ளைகளும் அங்கு பேசினார்கள் அவ்வளவிற்கு டேவிட் ஐயா அவர்கள் மனங்களில் பதிந்துவிட்டார் .

எழுபதுகளில் காந்தியத்தில் பங்காற்றிய சில தொண்டர்களும் பேசியது பல அரிய புதிய விடயங்களை அறிய கூடியதாக இருந்தது .குறிப்பாக காடுகளுக்க்குள் மாதிரி கிராமத்தின் மொடல் அமைத்து தமிழர் எல்லை கிராமங்களில் இது போன்ற மாதிரி கிராமங்களை அமைத்தால் சிங்கள குடியேற்றங்களை தடுக்கலாம் என்பதுதான் அவர் திட்டம்.

அதைவிட திருகோணமலையில் பல்கலைகழகம் அதன் வரைபடம் கூட  எப்படி இருக்கவேண்டும் என்று வரைந்துவைத்திருக்கின்றார்.

அரசியலற்று அவருடன் வேலை செய்தவர்கள் டாக்டர் ராஜசுந்தரதையும் சந்ததியாரையும் வரிக்கு வரி புகழ்ந்தார்கள் .சுந்தரம் ,பாலமோட்டை சிவம் ,உமா இவர்கள் அங்கு வந்து போனதையும் குறிப்பிட்டு சோசலிச தமிழ் ஈழம் என்ற நிலைபாட்டில் ஐயாவும் மாறியிருந்தார் என்பதையும் ஒருவர் சொன்னார் .

வழக்கம் போல இழவு வீட்டிலும் ஆதாயம் தேடும் கோஸ்டிகள்  இங்கும் வந்து ஆதாயம் தேடினார்கள் .இவர்களை நாம் இனம் கண்டு புறம் தள்ளும் வரை எமது அனைத்து செயற்பாடுகளும் ஒரு வியாபர நோக்கிலே தான் நடந்துகொண்டிருக்கும் .

ஆனால் இன்று வரை அவர்களே எம்மை ஆண்டுகொண்டு இருக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
 
மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்…? என் முன்னால் நிற்கும் கேள்வி.
இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள்.
நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்லமுடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது வாழ்வில் இருந்துவிட்டுச் சென்றவர். அவர் வாழ்வையும் பணிகளையும் உணர்வு நிலைக்கு அப்பால் நின்று பார்ப்பது எமக்கு அவசியம்.
ஐம்பதுகளில் உலகின் மிகசிறந்த பல்கலைக்கழகமென கருதப்பட்ட அவுஸ்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றவர். அதன் பின்பு இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர்.
அதன்பின்பு கென்யாவில் சிலகாலம் தொழில் புரிந்தவர்.
ஐம்பதிற்கு பின்பே ஐரோப்பா வட அமெரிக்கா தவிர்ந்த உலகத்தின் மற்றைய நாடுகளில் நகர்மயமாக்கம் நடந்தது. இந்தக்காலகட்டத்தில் டேவிட்ஐயா எவ்வளவு முக்கியமான மனிதராக இருந்தார்…?
 

அவராலும், டொக்டர் இராஜசுந்தரத்தாலும் உருவாக்கப்பட்;ட காந்தீயம் அமைப்பு அக்காலத்தில் வெளிநாட்டு தமிழர்களின், ஆதரவு பெறப்பட்ட முதலாவது தன்னார்வ நிறுவனம். அவர்கள் இருவரும் தமது காந்தீயம் ஊடாக காணியற்ற மலையக மக்களுக்கு காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு முன்வந்த பணி சாதாரண முயற்சியல்ல.
இலங்கைத் தமிழர் அரசியல் முக்கியமாக மூன்று தரப்பினால் உருவாகியது.
( 1) அதிகாரத்தில் ஆசையுள்ளவர்கள் சாகும் வரையும் கதிரையில் இருப்பவர்கள்.
( 2)பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள்.
(3) மற்றவர்கள் முக்கியமாக இளைஞர்கள், உணர்வு மேலிட்டு உயிரையும் உறுப்புகளையும் காவுகொடுத்தவர்கள்.
இப்படிப்பட்ட இடத்திற்கு டேவிட்ஐயா தான் உருவாக்கிய காந்தீயத்தையும் தன்னையும் பலியிட்டதன் மூலம் அவரது அறிவு, படிப்பு எல்லாம் அவரைக் கைவிட்டது.
பலநாடுகளில் போராட்ட இயக்கங்களில் இருந்து விரக்தி அடைந்தவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் போராட்ட இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்களை நிறுவி அதன்மூலம் பணம் வசூல் பண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். இதற்கு உதாரணங்கள் விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகம்(TRO) மற்றும் தமிழர் மருத்துவ நிலையம்(TAMED) என சில அமைப்புகளை அவுஸ்திரேலியாவில் வைத்திருந்தார்கள். ஆனால் காந்தீயம் போன்ற நேர்மையான தன்னார்வுத்தொண்டு நிறுவனத்தை போராளிகள் அமைப்பாக மாற்றியதில் டேவிட்ஐயாவுக்கு முக்கிய பங்குண்டு.
இங்கே நாம் சொல்ல விரும்பும் விடயம் ஒன்றுள்ளது. அதாவது தமிழர்களில் பலதுறைகளில் நிபுணத்துவமும், திறமையும் உள்ள பலர் அநியாயத்துக்கு நல்லவர்களாகவும், அதேநேரத்தில் அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு டேவிட் ஐயா உதாரணமாகத் திகழ்ந்தார்.
எனது நண்பர் ஒருவர் பொறியியலாளர். அடிக்கடி என்னுடன் டேவிட் ஐயாவைப் பற்றி பேசுவார். மெல்பன் பல்கலைக்கழகத்தில் தாம் இருவரும் ஒன்றாக படித்ததாகவும் சொல்வார். அப்பொழுது நான் அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்பேன். ஈழ விடுதலைப்போராட்டம் என்ற கனவின் சிறையில் தனது செட்டையை மாட்டிக்கொண்டு தொடர்ந்தும் பல துன்பங்களை அனுபவித்த மனிதர் அவர். ஆனால் அவரது அரசியலில் எந்த நம்பிக்கையும் எனக்கிருக்கவில்லை.
இந்த பொறியியலாளர் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வட-கிழக்குக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு நியாயம் கிடைக்காத விடுதலைப் போராட்டம் என்ற எனது அரசியலில் ஒத்துபோவார்.
2005 ஆம் ஆண்டளவில் முன்னர் மெல்பனில் டேவிட் ஐய்யர்வுடன் படித்த அந்த நண்பர், கடிதமொன்றை எனக்குக் காட்டினார். அந்தக் கடிதம் அவருக்கு அவரோடு படித்த டேவிட் ஐயா எழுதியது.
அதைப் படித்தபோது, அதில் இருந்த ஒரு வசனம் என்னைச் சிந்திக்க வைத்தது.
‘தமிழர்கள் எல்லோரும் தற்பொழுது தம்பி பிரபாகரனது இளந்தோள்களில் எல்லா பாரத்தையும் திணித்துள்ளோம். அவனால் இதை தனியே சுமக்க முடியாது. வெளிநாட்டுத்தமிழர்கள் இந்தப்பாரத்தை குறைத்து உதவவேண்டும்” என்பது அந்த வாக்கியம்.
இதைப் பார்த்ததும், பின்னர் அவரைப்பற்றிய நேர்முகத்தை வாசித்தபின்பும் பலமுறை நான் சந்தித்திருக்கும் டேவிட் ஐயாவை நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் – எழுதுவதற்கு சந்தர்ப்பம் வரவில்லை.
அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் டொக்டர் சிவநாதன்.
மட்டக்களப்பு சிறையில் இருந்து தமிழ்ப் போராளி இயக்கத்தினர் சிறையுடைத்து வெளியேறியபோது அவர்களில் டேவிட் ஐயாவும் ஒருவர். இந்தச் சிறையுடைப்பிற்கு இரண்டு இயக்கங்கள் அதாவது, தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) மற்றும் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (EPRLF) என்பன உரிமை கோரி துண்டுப்பிரசுரம் விநியோகித்தன. இவர்கள் தப்பி வந்தபோது கிழக்கு மாகாணத்தின் வாகரைப்பிரதேசத்தில் அரசாங்க மருத்துவராக இருந்த டாக்டர் சிவநாதன் தப்பியவர்களுக்காக உதவி செய்ததால் இலங்கையை விட்டு பின்னர் வெளியேறியவர். இப்படி ஒன்றாகத் தப்பியவர்கள் பின்பு தங்களது இயக்க வள்ளங்களில் பிரிந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர்.
எனது நண்பர் டொக்டர் சிவநாதன் வந்த வள்ளம் புளட் எனும் தமிழ்ஈழமக்கள் விடுதலைக்கழகத்தை சேர்ந்ததால் அவர்களுடன் பின்பு தேனி பிரதேசத்தில் அவர்கள் அமைத்த முகாமில் சிலகாலம் தங்கியிருந்தார். டேவிட் ஐயா மீது வாரப்பாடாக இருந்தவர் டொக்டர் சிவநாதன்
சிவநாதன் புளட் இயக்கத்தில் இருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டாலும் தனிப்பட்ட ரீதியில் அவர்களுடன் பழகுவார். அவரை தமிழர் மருத்துவ நிதியத்தின்(MUST) பொருளாளராக பிரேரித்தவர் அக்காலத்தில் வாசுதேவா. அவரே அதேபோல் டொக்டர் இராஜசுந்தரத்தின் மனைவியான சாந்தியக்காவை தமிழர் மருத்துவ நிதியத்தின் உபதலைவராக்கியவர். சாந்தியக்கா எந்த இயக்கங்களுடனும் தொடர்புபடாமல் சென்னை எக்மூர் பொலிஸ் வைத்தியசாலையில் வேலை செய்தபடி அந்த அமைப்பின் உதவித் தலைவராக இருந்தார்.
இந்தக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் டொக்டர் சிவநாதனுக்கு வரும். அந்தப் தகவல்கள் குறித்து தனது தலையில் அடித்தபடி ‘இவங்களைத் திருத்த இயலாது’ என்று வேதனையுடன் எனக்குச் சொல்வார்.
தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOT) உள்மோதலில் பலர் கொல்லப்படுவதாகவும் காணாமல் போய்விடுவதாகவும் அதன் செயலதிபரான உமாமகேஸ்வரனது தலைமை பிடிக்காது இயக்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும் பலர் வந்து வந்து அவரிடம் சொல்வதும் அதை அவர் என்னிடம் திருப்பிச்சொல்லிவிட்டு உமா மகேஸ்வரனை திட்டுவார்.
ஒரு நாள் நடுப்பகலான நேரம். நானும் சிவநாதனும் வேலை செய்து கொண்டிருந்தபோது எங்களது சூளைமேடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு சந்ததியாரும் டேவிட் ஐயாவும் வந்தார்கள். ஏற்கனவே பலமுறை அறிமுகமானவர்கள். அவர்கள் மிகவும் கலவரமடைந்திருந்தார்கள்.
அன்று சந்ததியார் பேசியதைக் கேட்டபடி இருந்தேன். நான் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச்சுக்கள் இயக்கத்தில் நடக்கும் உட்கொலைகளைப் பற்றியும் உமாமகேஸ்வரனது சர்வாதிகாரமான போக்கையும் பற்றியதாக இருந்தது.
இதில் சந்ததியார் மிகவும் நேர்மையான மனிதர் எனக்கேள்விப்பட்டதால் அவர் மீது மதிப்பு இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம்(PLOT) , இந்திய அயலுறவுக்கொள்கையின் தவறான செயற்பாட்டை சுட்டிக்காட்டி, சந்ததியார் வங்கம் தந்த பாடம் என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். அந்தக் கைநூல் தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் இந்திய விரோதப்போக்கை எடுத்துக்காட்டியதாக பலரால் சொல்லப்பட்டது. எனக்கும் அந்த கருத்தியல் கசப்பாக இருந்தது. இந்தியாவை விரோதித்து இலங்கைத் தமிழர் எந்த முன்னேற்றமும் அடைந்துவிட முடியாது என்பது எனது அறிவுக்கு அக்காலத்தில் புரிந்திருந்தது.
தொடர்ச்சியாக அவர்களின் உள்கட்சி மோதல்களைப் பற்றிப் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த என்னை அவர்களும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக சந்ததியாரிடம் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்றேன்.
சந்ததியார் ‘ஆம் கேளுங்கள் ’ என்றார்.
‘நீங்கள்தான் உமாமகேஸ்வரனோடு மிக நெருங்கிப் பழகிய மனிதர். அதுவுமல்லாது உமாவை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தவர். பலகால நட்பும் பழக்கமுமுடைய உங்களுக்கு அக்காலத்தில் உமாவின் சர்வாதிகாரத்தன்மை புரியவில்லையா? ’
சந்ததியார் சிறிது நேரம் யோசித்துவிட்டு ‘உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது’ எனக்கூறிவிட்டு எழுந்து போகும்போது ‘உங்களை மீண்டும் சந்திப்பேனா என்பது தெரியாது’ என சொல்லிவிட்டு டேவிட் ஐயாவுடன் வெளியேறினார்.
அந்த வார்த்தை என்னை கதிகலங்க வைத்தது. மக்கள் விடுதலை கழக இயக்கத்தில்(PLOT) நேர்மையான மனிதன்; என சிவநாதன் சந்ததியார் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
சிலநாட்களின் பின் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன்
இரவு நேரத்தில் சந்ததியாரைத் தேடிச்சென்ற தமிழ் மக்கள் விடுதலைக் கழக கோஷ்டியினர், சந்ததியார் என நினைத்து டேவிட் ஐயாவை ஒரு சாக்கில் கட்டி தூக்கிச்சென்றனர். பின்னர் தாம் தூக்கியது டேவிட் ஐயா இல்லையென என அறிந்ததும் சென்னையில், அண்ணாநகர் அருகே உள்ள மயனமொன்றின் அருகில் அவரை விட்டுச் சென்றனர்.
டேவிட்ஐயாவால் கொலைகார முகுந்தனும்(உமா மகேஸவரன்) கூட்டாளி வாசுவும் (மட்டக்கிழப்பைச் சேரந்த வாசுதேவா)என பிரபலமான கட்டுரை எழுதப்பட்டது.அக்காலத்தில; அவரது துணிவை நாங்கள் எல்லோரும் பாராட்டினோம் ஒருவிதத்தில் உமாவின் சரிவிற்கும அவரது இந்தக்கட்டுரை உதவியது.
அதன் பின்பு கிட்டத்தட்ட உமா மகேஸ்வரன்குழுவால் வர இருந்த சாவை பல வருடங்கள் ஏமாற்றி 30 வருடங்கள் அவர் வாழ்ந்திருக்கிறார். அந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்பு சில நாட்களில் சந்தியார் காணாமல்போனது செய்தியாகியது.
தமிழ் மக்கள் விடுதலைக்கழகம், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை தரக்கூடியதாக முற்போக்கு கொள்கைகளும் ,வெளித்தொடர்புகளும் கொண்டு போராட்ட இயக்கமாக ஆரம்பத்தில் இருந்தது . ஒரு காலத்தில் 6000 இற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட இளைஞர்கள் இருந்தனர்.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி(EPRLF) மற்றும் தமிழ்ஈழ விடுதலை(TELO) இயக்கத்தை அழித்தும் ஈழ புரட்சிகர (EROS)இயக்கத்தை தங்களுடன் சேர்த்தும், அழித்த விடுதலைப்புலிகளுக்கு, அதிக வேலை வைக்காமல் தன்னைத்தானாக அழித்த இயக்கமாக தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்(PLOT)இருந்தது.
87 ஜூலை மாதம் நான் இந்தியாவை விட்டு வெளியேறும்போது எனது இலங்கை பாஸ்போட்டில் இருந்த இந்திய விசா காலாவதியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரியின் மூலமாக விசாவை புதுப்பித்தேன். அக்காலத்தில் இந்திய மண்ணில் ஈழ இயக்கங்கள் செய்த உட்கொலைகளின் பட்டியல் ஒன்றை அந்த அதிகாரி தம்வசம் வைத்திருந்தார். அதில் 250 இற்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து உமா மகேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) முன்னணியில் இருந்தது. விடுதலைப்புலிகள்(LTTE) 32 கொலைகளையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(TELO) 18 கொலைகளையும் செய்திருந்தன. ஈழமக்கள் விடுதலை இயக்கமும் (EROS)ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் (EPRLF) செய்த கொலைகள் பற்றிய பட்டியல் அவரிடம் இல்லை.
ஆனால, விசாவை புதுப்பித்து நான் வெளியேற இருந்த கால எல்லையில் 4 பேரை ஈழவிடுதலை இயக்கம் (EROS)மதுரையில் கொலை செய்ததாக தகவல் வந்தது. இந்தப் பட்டியலும் அந்த அதிகாரியிடம் இருந்தது. இதை விட பல கொலைகள் அவர்களிடம் போகாது இருக்கவும் சாத்தியம் உள்ளது…? மேலும் அந்தப் பட்டியலின் காலம் 87 நடுப்பகுதியாகும். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடந்த காலப்பகுதியாகும்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வெளியேறிய பின்பாக டேவிட் ஐயாவை மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சந்தித்தேன். அவரோடு பேசியதில் தெரியவந்த விடயம் அவர் தமிழர் தரப்பு பிரிவினையை மிகவும் பலமாக ஆதரிக்கும் மனிதராகவும் சிங்கள எதிர்ப்பில் மிகவும் உறுதியானவராகவும் இருந்தார்.
அவரது சிங்கள எதிர்ப்பு, இன எதிர்ப்பாகத்தான் தெரிந்தது. அதனாலேதான் அவரால் பின்னாட்களில் விடுதலைப்புலிகளில் நம்பிக்கை வைக்க முடிந்தது.
டேவிட் ஐயா கிறிஸ்தவராக இருந்தாலும், அவரது வாழ்க்கை இந்து சமயத்து சாமிகள்போல் இருந்தது. திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமல்ல, உடைவிடயத்திலும் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிச்சயமாக சப்பாத்து அணிந்திருப்பார். ஆனால் இந்தியாவில் அவரை செருப்புடன் நான் கண்டதில்லை. டொக்டர் சிவநாதன் ‘ஐயா தழிழீழம் கண்டபின்புதான் செருப்பு அணிவார் ” என்று சொல்லி சிரிப்பார் . அதில் எவ்வளவு உண்மை – பொய் இருக்கிறது என்பது தெரியாது.
ஓரு ஈழப் பிரிவினைவாதியாக தன்னை ஒறுத்து முனிவராக நடந்தார். ஆனால் அவரது பிடிவாதத்தில் பல பிற்போக்கான தன்மைகள்தான் தெரிந்தன. ஆரம்பத்தில் காந்தீயம் என்ற அழகான குழந்தையை பெற்று அதை பொறுப்பாக அவர் வளர்க்கவில்லை. ஆயத இயகத்தினரிடம் அதனைக்காவு கொடுத்தார். ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனையும் பின்பு பிற்காலத்தில் பிரபாகரனையும் நம்பினார். புலிகள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
கடைசிவரையும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுவரும் என ஒரு யோகிபோல் அதேநேரத்தில் பிடிவாதமான குழந்தையாகவும் தன்னை சுற்றி கற்பனைகளால் சுவர் எழுப்பியபடி வாழ்ந்த மனிதர்.
ஈழப் போராட்டத்தில் ஏதோ வகையில் பங்கு கொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவரும் வெல்லாத அந்தப் போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாகரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்.
ஆனால், டேவிட் ஐயா எவ்வளவு மனச்சுமையுடன் தனது இறுதிநாட்களை கழித்திருப்பார் என்பதை எண்ணித்தான் என்னால் அவரை நினைவு கூரமுடியும்.
நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா       http://www.tamilmurasuaustralia.com/2015/10/blog-post_19.html#more
 

Edited by putthan

"டேவிட் ஐயா ஒரு கவசம்" முருகேசு சந்திரகுமார்

"டேவிட் ஐயா ஒரு கவசம்"  முருகேசு சந்திரகுமார்:-

 

தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவதில் தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்துடன் இயங்கியவர் டேவிட் ஐயா. அவர் அன்று போட்ட விதையின் பயனைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 1970 களிலேயே தமிழ்ப்பிரதேசங்களின் எல்லைப்பகுதிகளில் மலையகத்தமிழர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன் மூலம் காணியில்லாத மலையக மக்களுக்குக் காணி கிடைப்பதற்கும் தமிழ்ப்பிரதேசங்களில் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவும் கூடிய ஒரு நிலையை டேவிட் ஐயா ஏற்படுத்தினார். இதனால்தான் வவுனியா,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. கூடுதலான தமிழர் பிரதிநிதித்துவமும் பேணப்படுகிறது. எல்லையைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வடபகுதித்தமிழர்கள் அந்த எல்லைப்புறங்களை நோக்கி நகரத்தயாராக இருக்கவில்லை. ஆனால், டேவிட் ஐயா சாத்தியப்படக்கூடிய வழிகளைப்பற்றியே சிந்தித்தார். நடைமுறைக்குப் பொருத்தமான – தம்மால் செய்யக்கூடிய திட்டங்களையே போட்டார். தாம் உருவாக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். தாங்கள் நேசிக்கின்ற மக்களை நல்ல நிலைக்குக் கொண்டு  வரவேண்டும் என்று அதற்காகத் தம்மை அர்ப்பணித்து உழைத்தார்.
 
இதையெல்லாம்  உணர்ந்து கொள்ளும் நிலையில் அன்று மட்டுமல்ல இன்றைய தமிழ் அரசியல்வாதிகளிலும் எவரும் இல்லை. இதுதான் எங்களுடைய சோகமாகும். பாதிக்கப்பட்ட மக்களின் நலனும் தமிழர் பலமும் சீராக இருக்க வேண்டும் எனச் சிந்தித்து அன்றே டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் முன்னின்று தீர்க்கதரிசனமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் அரசியல் ரீதியாக மிகுந்த செல்வாக்கோடிருந்தவர்கள் இதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. இந்த நிலை பேணப்பட வேண்டும் என்று இதற்காகச் செயற்படவும் இல்லை.
 
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் காந்தியத்தினால் உருவாக்கப்பட்டவை. அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர்களுடைய கல்விக்காகவும் காந்தியம் உழைத்திருக்கிறது. நெடுங்கேணிப் பிரதேசத்தில் டொலர் பாம், கென்பாம் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும்  காந்தியத்தின் செயற்பாட்டு எல்லை விரிவாக்கம் பெற்றிருந்தது. கிளிநொச்சியில் உள்ள குருகுலமும் அங்கே உள்ள ஊற்றுப்புலம் கிராமமும் காந்தியத்தின் விளைச்சல்தான். இதைப்போல கிழக்கு மாகாணத்திலும் காந்தியம் தன்னுடைய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்துக்கு வெளியே உருவாகி, மிகத்திறனாகச் செயற்பட்டு வரலாற்றுப்பதிவை உருவாக்கிய அமைப்பு என்ற வகையில் காந்தியத்திற்கு முதன்மையான இடமுண்டு. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் பண்ணாமல் அவர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் வேரோடி வாழ வேண்டும் என்பதற்காகவும் அது செயற்பட்டிருக்கிறது. இதுதான் டேவிட் ஐயாவின் நோக்கு நிலையும் காந்தியத்தின் இலட்சியமுமாகும். இன்று டேவிட் ஐயாவை மதிப்பவர்களும் போற்றுகின்றவர்களும் இந்த உண்மைநிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்குச் செய்கின்ற மரியாதை. அதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.  
 
தான் வகித்த உயர் பதவியையும் விட்டு விட்டு, தனக்குக் கிடைத்திருந்த உயரிய வாய்ப்புகள் வசதிகளையும் தியாகம் செய்து விட்டு ஏழை மக்களுக்காகத் தொண்டு செய்ய வந்தவர் டேவிட் ஐயா. டேவிட் ஐயாவைப்போலவே வசதி, வாய்ப்புகளைக் கொண்டிருந்தவர் டொக்ரர் ராஜசுந்தரமும். ஆனால், இவர்கள் இருவரும் தங்களுக்கு முன்னே உள்ள சமூக யதார்த்தத்தைக் கவனத்திற் கொண்டு, மக்களின் தேவைகளை உணர்ந்து தீர்க்கதரிசனமாகத் திட்டங்களை மேற்கொண்டவர்கள். எந்த வகையான அரசியற் பின்புலமும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமலே 1970 களில் காந்தியத்தை தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் மக்களின் மீதான உண்மையான நேசிப்பையும் கொண்டே உருவாக்கி வளர்த்தவர்கள். இவர்களுடைய வழி நடத்தலில் செயற்பட்ட பலர் நல்ல ஆளுமைகளாக இருந்தவர்கள் இப்பொழுதும் பல கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  
 
டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் ஒருவருக்கொருவராக இணை நின்று செயற்பட்டனர். வவுனியாவில் இவர்கள் காலடியும் வியர்வையும் பட்ட கிராமங்கள் இன்று இதற்குச் சிறந்த உதாரணம். இன்று காந்திய இயக்கத்தின் இயங்கு விசை இல்லையென்றாலும் காந்தியத்தின் அடையாளம் வலுவாகத்தான் உள்ளது. ஐந்து ஆண்டுகள்தான் தீவிரமாகச் செயற்பட்ட ஒரு அமைப்பு காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து இன்றும் பேசப்படுகிறது, நினைவு கூரப்படுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். இந்தத் திரும்பிப்பார்த்தல், இந்த மீளாய்வு இன்று அவசியம். அதுதான் எங்களை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு உதவும்.
 
காந்திய இயக்கத்தின் பணிகள் ஐந்து ஆண்டுகள் அளவில்தான் தீவிரமாக இருந்தாலும் பரந்த அளவில் இருந்தன. நீண்ட கால நோக்கு நிலையில் இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தி இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுடைய பணிகளையே முதன்மையாகச் செய்ய வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும் என்றிருந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே காந்தியம் பெரிய அறிமுகத்தைப் பெற்றது. அன்றைய நிலையில் அதற்கு உலக அளவில் இருந்த சில தொண்டர் அமைப்புகளும் தமிழ் மக்களும் ஆதரவளிக்க முன்வந்திருந்தனர். அதற்குப் பிறகு அது புளொட்டுடன் தொடர்புபட்டது. ஆயுதப்போராட்ட அமைப்புடன் காந்திய இயக்கமென்ற மக்கள் அமைப்பு – காந்திய வழியிலான அமைப்பு இணைந்து செயற்பட்டமையானது ஒரு புதுமையே. இந்தப் புதுமையின் நன்மைகள் புளொட்டுக்கு – அதாவது ஆயுதப்போராட்ட அமைப்புக்கு அனுகூலமாக இருந்தன.  புளொட் மக்கள் மத்தியில் செல்வாக்கைப்  பெறுவதற்கும் காந்தியத்தினரின் அனுபவங்களைப் புளொட் அமைப்புப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தத் தொடர்புகள் உதவியாக இருந்தன. ஆனால், புளொட்டுடன் தொடர்புபட்டதனால் ஆயுதப் போராட்டத்துக்கு அரச தரப்பு வைத்த குறியில் காந்தியத்தின் செயற்பாடுகள் விரைவில் முடக்கம் கண்டன. டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் சிறைவரை செல்ல நேர்ந்தது. ஆனால், அவர்கள் புளொட்டுடன் தொடர்பு படாமல் இருந்திருந்தாலும் தமிழ்ப்பிரதேசங்களின் மீது அன்று மேற்கொள்ளப்பட்ட அரச ஒடுக்குமுறையானது காந்தியத்தைச் செயல்படாமல் முடக்கியே இருக்கும். அத்தோடு எப்படியாவது டேவிட் ஐயாவும் ராஜசுந்தரம் டொக்ரரும் கைது செய்யப்பட்டேயிருப்பர் என்று சொல்லப்படுவதை மறுக்கவும் முடியாது.
 
டேவிட் ஐயா, ராஜசுந்தரம் ஆகியோரின் கைதுகளுடன் காந்தியமும் முடங்கிப் போனது. ஆனாலும் அது உருவாக்கிய சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் அமைதியான முறையில் உள்ளடங்கி இயங்கிக்கொண்டிருந்தனர். காந்தியத்தின் நினைவுகள் மாறாமல் ஒரு தணிந்த நிழலைப்போல எங்கும் படர்ந்திருந்தன. இன்னும் அந்த நிழல் படர்ந்தேயிருக்கிறது.
 
ஐந்து ஆண்டுகள் செயற்பட்ட அமைப்பு ஒன்று இன்றும் பேசக்கூடியதாக இருக்கிறதாக உள்ளது என்றால், அதன் வினைத்திறனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
அந்த இயக்கத்துடன் மாணவப் பருவத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அப்பொழுது டேவிட் ஐயாவைப்பற்றியும் அவருடைய பணிகளைப் பற்றியும் ஆழமாகவும் விரிவாகவும் அறிந்திருக்கவில்லை. என்றாலும் அவர்களுடைய பணிகள் முக்கியமானவை என்ற ஒரு புரிந்துணர்வு இருந்தது. வவுனியாவில் காந்தியம்  மிகப் பிரபலமான ஒரு அமைப்பாக இருந்தது. காந்தியத்துடன் பலரும் சேர்ந்து பணியாற்றினார்கள்.
 
டேவிட் ஐயா அன்று உருவாக்கிய எல்லைக் கிராமங்கள்தான் இன்று எல்லை பாதுகாப்புக் கிராமங்களாகியுள்ளன. இதை டேவிட் ஐயாவும் டொக்ரர் ராஜசுந்தரமும் காந்தியத்தின் மூலமாகச் சாத்தியப்படுத்திய அளவுக்கு இதற்கு முன்னும் சரி, பிறகும் சரி தமிழ் அரசியல் கட்சிகள் எதுவும் செய்யவில்லை.
 
தொண்ணூறு வயதிலும் ஒருவர் அரசுக்கு எதிராகப் பார்க்கப்படுகிறார் என்றால், அந்த வயதிலும் அரசைக் கண்டு அவர் அச்சப்பட வேண்டியிருக்கிறது  என்றால், அதன் பின்னே என்ன இருக்கிறது என்று பார்ப்பது அவசியம். டேவிற் ஐயா மரணிக்கும்போது அவருக்கு வயது தொண்ணூறுக்கு மேல். அந்த வயதிலும் அவர் ஒரு தலைமறைவுப் போராளியாகத்தான் வாழ்ந்தார். தலைமறைவு நிலையிலேயே அவருடைய மரணமும் நிகழ்ந்திருக்கிறது. இது ஏன்?
 
என்னுடைய புரிதலுக்கு உட்பட்டவரையில் இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களில் கூட இத்தனை வயதில், டேவிற் ஐயாவைப்போல தலைமறைவு நிலையில் இருந்ததும் இறந்ததும் இல்லை என்று எண்ணுகிறேன். ஒரு சிறந்த கல்வியாளர், கட்டிடக் கலையின் துறைசார் நிபுணர், மனிதநேயப்பண்பாளர், அகதிகளை அகதிகளாக வைத்திருக்காமல் அவர்கள் வேரோடி வாழும் மக்களாக வேண்டும் என்று விரும்பியவர், தானே அகதியாகி, இரவல் தாய்நாட்டில் நீண்டகாலம் வாழவேண்டியிருந்ததுதான் வருத்தத்தைத் தருவது. ஆனாலும் இறுதியில் அவர் தன்னுடைய சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்ததும் அந்த மண்ணிலேயே சங்கமமானதும் ஓர் ஆறுதல். இது பிற தேசங்களில் இருந்து தாய் மண்ணை நேசிப்போருக்காக டேவிட் ஐயா சொல்லிச் சென்ற மகத்தான சேதியாகும்.
 
தன்னுடைய சிந்தனையாலும் செயற்பாட்டினாலும் தான் சார்ந்த மக்களுக்குக் கவசமாகத் திகழ்ந்த ஒரு முன்னோடியை நாங்கள் இழந்திருக்கிறோம். இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமானால், அவருடைய சிந்தனையிலிருந்தும் செயற்பாட்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வதும் பெற்றுக்கொள்வதுமேயாகும்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125208/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் ஐயாவுக்கு உண்மையிலேயே மரியாதை செலுத்த விரும்புவோர் அவரது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.