Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறைக்கைதிகளும் யாழ்.உண்ணாவிரதமும்

Featured Replies

647_content_politics_h1.jpg

647_content_politics_h2.jpg

647_content_politics_h3.jpg

கடந்த  12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நாட்டின் பதினான்கு சிறைச்சாலைகளில்  இருநூறுக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்துவருகிறார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த இந்த அரசியல் கைதிகளின் சரியான  எண்ணிக்கையைக் கூட அரசாங்கம் தெரிவிப்பதாக இல்லை. பொது அமைப்புகள் குறிப்பிட்ட, அரசியல் கட்சிகள் சேகரித்த கைதிகள் பற்றிய தகவல்கள் மூலமே தண்டனை வழங்கப்பட்ட 50 சிறைக் கைதிகளுடன் சேர்த்து  216  பேர் இருந்துவருவதாக  அறிய முடிகிறது.

இவற்றைவிடவும் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் பற்றிய தகவல் உரிய முறையில் வெளியிடப்படாமலும் பலர் இரகசிய தடுப்பு முகாம்களில்  இருந்துவருவதாகவும் நம்பப்படுகிறது.  சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோரில்  15 வருடங்கள்  10, 8, 5, 3  வருடங்கள்  என்ற கணக்கில் அரசியல் கைதிகள் இருந்து வருகிறார்கள். அவசரகாலச் சட்ட விதிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டே இவ்வரசியல் கைதிகள் நீண்ட காலச் சிறைத் தடுப்பில் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறான அரசியல் கைதிகளில் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையினரைத் தவிர ஏனையோர் வடக்கு, கிழக்கு, மலையகம் , கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளாவர். அதனால்  சிறைச்சாலைகளில் இத்தமிழ் அரசியல் கைதிகள் இன அடிப்படையிலான பாகுபாடுகளுக்கும் பேரினவாத வக்கிரங்களுக்கும் முகம் கொடுத்தே தமது சிறை வாழ்க்கையைக் கழித்துவருகிறார்கள். தமது பெற்றோரை, மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து வாழும் அவர்கள் சிறை என்ற துன்பக் கடலில் மிதந்துவரும் செய்திகள் வாழ்க்கை மீது வெறுப்பையே கொண்டு வரக் கூடியனவாகும்.  

இவர்கள் இவ்வாறு சிறைகளில்  விடுதலையின்றி உடல், உள , உளைச்சல்களுக்கும் மனச் சிதைவுகளுக்கும் உள்ளாகிவரும் அதேவேளை சிறைகளுக்கு வெளியே அவர்களின் உறவுகள் சொல்ல முடியாத வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்து நடைப் பிண வாழ்வு வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் அழுகை ஓலங்களும் கண்ணீர்ப் பெருக்கும் நின்றபாடில்லை. மகிந்த ஆட்சியில் மட்டுமன்றி அதற்கு முன்பிருந்தும் நீண்ட காலமாகச் சிறைகளில் இந்த அரசியல் கைதிகள் இருந்துவருகிறார்கள். கடந்த  12 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் பல்வேறுபட்ட போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பில்  14 ஆம் திகதி புதன்கிழமை சமவுரிமை இயக்கம் கோட்டைப்  புகையிரத நிலையம் முன்பாக  கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியது. அதில் கலந்து கொள்வதற்கு மன்னார் ,யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, மாத்தளை, கொழும்பு பிரதேசங்களில் இருந்து சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள், உறவினர்கள் எனப் பெருமளவானோர் வந்திருந்தனர். அவர்கள் கதறி  அழுத சோகக் காட்சிகளும் விட்ட கண்ணீரும் கல்மனம் கொண்டோரையும் கரையச் செய்வதாகக் காணப்பட்டன.  

வயது முதிர்ந்த ஒரு தாய் தானும் தனது கணவனும் வயோதிபத்தாலும்  வருவாய் இன்றியும் இருந்து வருவதுடன் தமது ஒரே மகன் பத்து  வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஊடகங்களின் முன்னால் அழுது புலம்பிய படி கூறினார்.  மாத்தளையில் இருந்து வருகை தந்த தாய்மார்களில் இளம் பெண் ஒருவர் கூறுகையில் தாங்கள் திருமணம் செய்து, தான் எட்டுமாதக் கர்ப்பிணியாக இருந்த போது தனது கணவனைச் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றதாகவும் இப்போது  தனது குழந்தைக்கு ஏழு வயதாகிவிட்டதாகக் கூறி அழுவதையும் வருவாயின்றிக்  கஷ்டப்படுவதாகக கூறியதையும் பார்த்து  எல்லோருடைய கண்களும் கலங்கச் செய்தன.

இவ்வாறு ஒவ்வொரு தாய்மாரும்   மனைவிமாரும் சகோதரிகளும் கூறிய சோகக் கதைகள் புகையிரத நிலையம் முன்பாகத் துன்பம் நிறைந்தவைகளாக வெளிவந்து கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.  இவ்வாறு சிறைகளில் உடல், உளத் துன்பங்களும் வெளியே அவர்களது உறவுகளின் துயரங்களும் நீண்டு செல்ல, ஆட்சி மாற்றத்தின் மூலம் பதவிக்கு வந்த மைத்திரி  ரணில் அரசாங்கம்  முன்னைய ஆட்சியினர்  போன்று செவிமடுக்காதும் உரிய நடவடிக்கையில் ஈடுபடாமலும் இருந்து வருகிறார்கள்.

புதிய நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகள் எவரும்  இல்லை என்று பழைய ஆட்சியினரின்  மொழியிலேயே  கருத்துக் கூறியுள்ளார். தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்று இல்லை எனக் கூறி வரும் பேரினவாதிகளுக்கு அதன் சார்பாக எழுந்த போராட்டம், யுத்தத்தால்  சிறை சென்றவர்களை எப்படி அரசியல் கைதிகள் என்று குறிப்பிட நாக்கு இடம்கொடுக்கும்? எனவே   இன்றைய ஆட்சியினரும்  அதன் தலைவர்களும் முன்னையவர்கள் போன்ற பேரினவாத நிலைப்பாட்டாளர்களேயாவர்.  நல்லிணக்கம், நல்லாட்சி, சமாதானம் என்பன போன்ற முழக்கங்கள் வெறும் போலியானவை என்பதையே சிறைக் கைதி களின் விடுதலை விடயத்தில் காட்டப்படும் பேரினவாத நிலைப்பாடு எடுத்துக் காட்டுகிறது.

பதவிக்கு வருமுன்பே வாக்குறுதிகள் பலமாக ஒலிக்கும். ஆனால்,   பதவியும் அதிகாரமும் கிடைத்த பின்பு கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்து விடும். தமது உள்ளார்ந்த  ரீதியில் வரைந்த நிகழ்ச்சி நிரலே முன்னெடுக்கப்படும். அந்த நிகழ்ச்சி நிரலில்  தமிழ் அரசியல்  கைதிகளின் விடுதலை என்பது இல்லை என்பதையே புதிய ஆட்சியாளர்களான  மைத்திரி, ரணில் ஆட்சியினர் எடுத்துக்காட்டி வருகின்றனர்.  இவ்வாறு நீண்ட காலத் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி தெற்கின் இடதுசாரிக் கட்சிகள், பொது அமைப்புகள்   தொடர்ந்து  குரல்கொடுத்து அவர்களின் விடுதலைக்குப் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளன. அத்தகையோரது நடவடிக்கையின் வெளிப்பாடாகவே அண்மையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்தற்கான  தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அனைத்து அரசியல் கைதிகளினதும்  குறிப்பாகத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவை தெற்கிலே இடதுசாரி, முற்போக்கு , ஜனநாயக சக்திகளாலும் பொது அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருவனவாகும்.  ஆனால்,  இப்படி ஒரு பரந்துபட்ட முன் முயற்சி வடக்கு, கிழக்கிலே பரந்த அடிப்படையில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இது ஏன் என்றே தமிழ் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படுகிறது. ஒவ் வொருவரும் தனித் தவில் வாசித்துத் தத்தமது அரசியல் செல்வாக்கைத் தாழ விடாது காட்டிக் கொள்ளவே முயலுகிறார்கள். ஆனால், இன விடுதலைக்கான போராட்டச் சூழலில் கைதாக்கப்பட்டே இன்றைய தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலச் சிறை வாழ்வுக்குள் தள்ளப்பட்டனர் என்பதை இன உணர்வின் உன்னதம் பற்றி பேசி வாக்குப் பெட்டி அரசியல் நடத்துவோர் கண்டு கொள்வதில்லை.

 இன உணர்வு என்பது வெறும் சோடாக் காற்று போன்றதே அன்றி  மனித உணர்வை மதிக்கும் மனித நேயம் போன்றதல்ல. குறுகிய  மன உணர்வுகளைத் தூண்டி சுய இலாபங்களுக்காக மனிதரை உசுப்பி விட அதனால்  முடியுமே  தவிர ,மனிதரை மனிதர் நேசிக்கும் பண்பை இன உணர்வானது வளர்க்கமாட்டாது. இதற்குரிய உதாரணங்களை கைதிகள் விடுதலையில் தமிழர்  தரப்பில் காட்டப்பட்டு வரும் போலியானதும்  போட்டித்தனம் மிக்கதுமான உண்ணாவிர தங்கள் மூலம் காண முடியும். தமிழர் தரப்பில் போட்டி, பொறாமை ,பதவி, அதிகாரம்  என்பனவற்றுக்கு குறைவே இல்லை.   கடந்த திங்கட்கிழமை சிறைகளில்  அரசியல் கைதிகள் உண்ணா விரதத்தை  ஆரம்பித்தனர். அவர்களது விடுதலையில் அக்கறை காட்டிய அனைத்துத் தரப்பினரும் அந்த உண்ணாவிரதத்தை ஆதரித்துக் கொண்டனர். இதில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் நீண்ட காலத் தடுப்புக்குள்ளாகிச் சிறைகளில் இருந்து வரும் அரசியல் கைதிகளை விடுவிக்க எடுக்க வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கைகள் ஏழு வகை  நிலைப்பாட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டி முன்வைத்த விடயங்கள் பெருமளவிற்கு நடைமுறைப்படுத்தல்களுக்கு ஏற்றவைகளாகவே சட்டத்துறை சார்ந்தவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதலமைச்சர் நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் நீண்ட அனுபவமுடையவர்  அத்துடன் அவற்றில் ஒரு நேர்மையைக் கடைப்பிடித்தவர்  என்றும் புகழுரைகளுக்கு ஆளாகியவர். எனவே, மைத்திரி, ரணில் அரசாங்கம்  நெஞ்சத்திற்கு நேர்மையாக அணுகி அரசியல் கைதிகளை விடுவிக்க முன்வந்தால்  முதலமைச்சரின் ஏழு பரிந்துரைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.  ஆனால்,   இன்றைய நல்லாட்சியானது  அவ்வாறு  எடுத்துக் கொள்ளும் நிலையில்  உள்ளதா என்பதை இன்னமும் உரசிப் பார்க்க வேண்டியே உள்ளது.

 இவ்வாறு  முதலமைச்சரின் கடிதத்தையும்  அதில் குறிப்பிட்டவற்றையும் உள்வாங்க முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வரும் முதலமைச்சருக்கு எதிரான அணியினர் விட்டோமா பார் எனக் களத்தில் இறங்கினர். அவைத் தலைவர் சி.வி. கே. சிவஞானம் தலைமையிலான சில மாகாண சபை உறுப்பினர்கள் சேர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் திடீரென நல்லூர்  கந்தசாமி கோவில் முன்பாக ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அங்கு சிறையில் இருப்போரது உறவுகளோ அல்லது  பொது மக்களோ இல்லை . மாகாண சபை  உறுப்பினர்களும்  எதிர்க் கட்சித் தலைவர் உட்பட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பத்து, பன்னிரண்டு பேர் வரை மட்டுமே கலந்து கொண்டனர்.  திடீர் தோசை, திடீர்  இட்லி போல சினிமாப் பாணி உண்ணா விரதம் இடம்பெற்றது. அதாவது காலை உணவை முடித்து விட்டு காலை  8.30 மணிக்கு வந்து இருக்க ஆரம்பித்தவர்கள் மதியம்  12.30 மணிக்கு மதியவேளை  உணவுக்காக வந்த வாகனங்களில் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். இதனை மறைக்க அடையாள உண்ணாவிரதம் என்று கூறி   ஊடகங்களுக்கு காட்சி கொடுத்துக்  கருத்துகளையும் கூறிச் சென்றனர். இத்தகைய மாகாண சபைக் கனவான்களின் அடையாள உண்ணா விரதக் கூத்து சிறையில் உணர்வுபூர்வமாகவே தமது விடுதலைக்காக உண்ணா விரதமிருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளைக் கொச்சைப்படுத்துவதாகவே காணப்பட்டது. தமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி அல்லது அதற்கு ஆதரவு கொடுத்த குற்றச்சாட்டில் நீண்ட காலமாகச் சிறையிருந்து வரும் அச்சிறைக் கைதிகளுக்காக வடக்கின் முப்பது மாகாண உறுப்பினர்களான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முதலமைச்சரின்  தலைமையில் குறைந்தது ஒரு நாள் உண்ணாவிரதத்தைத் தானும் ஐக்கியப்பட்டு முன்னெடுக்கத் தயாராக இல்லை.

ஆனால்,  இதே முப்பது மாகாண சபை உறுப்பினர்கள் நான் முந்தி நீ முந்தி  என மிக அவசரமாக ஆர்வத்தோடு கையெழுத்திட்டு தமக்கு சொகுசு வாகனங்கள் பெறுவதற்கான  பேமிட் தரும்படி கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர் அவர்களை எவ்வாறு  தமிழ் மக்கள்  புரிந்து கொள்ள முடியும்? அதேவேளை உண்ணாவிரதம் இருந்துவரும் சிறைக் கைதிகளை நேரில் சென்று சந்தித்த நீதி அமைச்சர் விஜயதாச  ராஜபக்ஷ  குழுவினர்  மேற்படி விடயத்தைக் கையாள இவ்வருட இறுதி வரை  அவகாசம் தேவை எனக் கேட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று கூறிய நீதியமைச்சர் இப்போது  கால  அவகாசம் கேட்பது விடயத்தை இழுத்தடிக்கும் உள்நோக்குடனேயாகும். மேற்படி கோரிக்கையை உண்ணாவிரத சிறைக் கைதிகள் முற்றாக நிராகரித்துள்ளனர். இது போன்றே  முன்னைய ஆட்சியினரும் கூறி வந்தனரே தவிர எமது விடுதலைக்கு  எதனையும் செய்யவில்லை என்று கூறிக் கொண்டனர் என்றே அறிய முடிகிறது.

எனவே  ஜனாதிபதி  தமக்கு உரிய உறுதிமொழி  தர வேண்டும்  எனக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். நீதி அமைச்சரின் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்  ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் உடனிருந்தனர். இவர்களின் கருத்து நிலைபற்றி இப் பத்தி எழுதப்படும் வேளை அறிந்து கொள்ள முடியவில்லை.  எனவே சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வரும் தமது விடுதலைக்கான உண்ணாவிரதப் போராட்டமானது தமிழர்  தரப்பில் இணக்க அரசியலில் இறங்கி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு புதியதோர் சவாலை ஏற்படுத்தியுள்ளது. பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சம்பந்தன் தலைமையிலான இணக்க அரசியல் குழுவினருக்குப் பெரும் தலைவலியாகவே சிறைக் கைதிகள் விவகாரம் காணப்படுகிறது. எவ்வாறாயினும் இணக்க அரசியலுக்குப் பங்கம் ஏற்படுவதை  சம்பந்தன், சுமந்திரன், மாவை சோனாதிராஜா தலைமை ஏற்கமாட்டாது. வழமை போன்று சிறைக் கைதிகளின் விடுதலை விடயத்தில் இழுத்தடிப்பு இடம்பெறவைப்பதில் இணக்க அரசியல் முன் செல்லும் என்றே நம்ப இடமுண்டு. 

 http://www.thinakkural.lk/article.php?article/jxqltjaulc18284496bf24af43032jxqde7fab6f046bf4923da8de6cmdxp#sthash.3VoLcNcB.dpuf

 

.. காலைச்சாப்பாடு முடித்து ... மதியச்சாப்பாட்டுக்கு முன்னம் ... பகுதி நேரமாக சிறையில் அடைக்கப்பட்டோருக்கு உண்ணாவிரதமிருந்த ... தமிழ்தேசிய தூண்கள் சிவிகே அன்ட் கோவிற்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கருணாநிதி ....இதே விளையாட்டு (ராஜபக்ஷ சொல்லிவிட்டார் யுத்த நிறுத்தம் என்று )
இன்று எங்களது சிங்கங்கள் ....இதே விளையாட்டு (அடையாள உண்ணாவிரதம் )
எங்கடை மக்கள் புத்திசாலிகள் சரியான ஆட்களை தான் தெரிந்தெடுத்திருக்கினம் ....
 

இவர்களாவது ஏதோ போனார்கள், அனால் கஜே கஜே கோஸ்டி எங்கே போனார்கள்?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.