Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015

 

yutham

 

முழுமையான நூல் ஆங்கிலத்தில் உள்ளது: http://assets.gfbv.ch/downloads/stoptorture_report_sri_lanka.pdf

 

“சித்திரவதைக்குள்ளாகி வலியின் அதிஉச்சியிலும் அதன் கொலைக் கரங்களின் பிடியிலும் இருந்து உயிருடன் தப்பிப்பிழைத்தவர்கள், தமக்கு ஏற்பட்ட இக்கதிபோல் இனியும் எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையில் எங்கள் மீது தாராளமாக நம்பிக்கை வைத்துத் தமக்கு ஏற்பட்ட மிகக்கொடூரமான அனுபவங்களை எம்முடன் பகிந்து கொண்ட மனிதர்களுக்கு சமர்ப்பணம்” என்று மேலே சொல்லப்பட்ட இவ்வாய்வறிக்கை காணிக்கையாக்கப்படிருகின்றது. வெளிநாடுகளில் வாழும் முகமறியாத பலர் பாதிப்புக்களுக்கு உள்ளான இந்த மனிதர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்துள்ளனர். உணவாதாரம் வழங்கியும், குழந்தைகளைப் பொறுப்பெடுத்தும், மொழிபெயர்த்தும், தடுப்புமுகாம்களில் இருந்தபோது வந்து பார்த்தும், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்றோரைத் தேடித்தந்தும் மானம் மறைக்கவும் குளிரைப் போக்கவும் ஆடைகள் தந்தும் இன்னும் சொல்லப் போனால் வெறுமையின் எல்லையில் சூனியத்தின் குழப்பத்தில் இவர்கள் தவித்தபோது தொலைபேசி அழைப்பின் மறுமுனையில் இருந்து தேற்றியும் (பக்கம் 8) என்று பலவாறு உதவிகள் புரிந்தோரை இவ்வாய்வறிக்கை இனங்காட்டுகின்றது. இந்த ஆய்வறிக்கை ஏற்கனவே வெளியாகிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடான ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ என்ற அறிக்கையினை பெருமளவில் ஒத்திருக்கின்றது.

 

அடுத்தடுத்த கொடிய இச் சம்பவங்களை வாசிப்பதில் ஏற்படும் சிக்கல் என்னவென்றால் இச் சம்பவங்கள் ஒத்திசைவான சொல்லமைவுகளைக் கொண்டே விளக்க வேண்டியிருப்பதுதான். கைது, சித்திரவதை, பயங்கரமான பாலியல் கொடுமைகள், விடுவிக்கக் கோரப்படும் கப்பம், இலஞ்சம் போன்ற ஒத்திசைவான இவ்வகைச் சொல்லமைவுகள் இலங்கையரசின் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் யாவும் பலவாறு திட்டங்கள் தீட்டி நடைபெறுகின்றன என்பதையும் இந் நடவடிக்கைகள் பலத்த நிறுவனங்களாகத் தொழிற்படுகின்றன என்பதையும் காட்டும் அறிகுறிகள் என்பதோடு தடுத்துச் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு மத்தியில் கொடூரமான பயங்கரங்களை விதைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உள்நோக்கமும் கொண்டவை என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. (பக்கம் 16). சகிக்க முடியாத வெறுப்பும் கொதிப்பும், தவிர்த்துவிட வேண்டும் என்ற உணர்வும் இவற்றை வாசிக்கும் போது ஏற்படும் மற்றும் சில அகவுணர்ர்சிகள். உண்மையில் இந்த உணர்ச்சிகளின் பாதிப்பில் நாம் சோர்வடைந்து விடுவோம். இவ்வாய்வறிக்கையினை வாசிப்பதென்பதும் அதில் வருகின்ற சம்பவங்களைச் சகிப்புடன் ஜீரணித்துக்கொள்வதென்பதும் என்னால் முடியாத காரியம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சிலவேளை நான் இலகுவில் உணர்வுகளால் பாதிக்கப்படும் எழுபது வயதைத் தாண்டியவன் என்பதும் இதன் காரணமாக இருக்கலாம்.

A1

 

நானே இதனை வாசிக்காது, வாசிப்பதில் அக்கறை அற்று இருப்பின், இச் சம்பவங்களின் கொடுமைகளை நேரடியாக, இரத்தமும் தசையுமாக அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன். சகித்துக்கொள்ள முடியாத கொடூரங்களைச் சகித்தே ஆக வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்ட்டார்கள் அல்லவா! நேரடிச் சாட்சிகளையும் அவர்தம் உற்றார் உறவினர்களையும் இந்தச் “சொர்க்கபுரித் தீவில்” பாதுகாத்துக்கொள்வதற்காக இவர்களை இலகுவில் அடையாளங் காணக்கூடியவாறான தகவல்கள் இவ்வறிக்கையிற் தவிர்க்கப்பட்டு உள்ளன. (அடிக்கடி சித்திரவதைக்குள்ளான பலருக்கு தாம் எங்கே கொண்டு செல்லப்பட்டோம், எங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்தோம் என்ற எந்தத் தகவல்களும் தெரியாது. கொண்டு வரப்படும்போதும் அல்லது அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படும்போதும் இவர்களது கண்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டே இருந்திருக்கின்றன.) ஆளடையாளங்கள் இவ்வாறு தவிர்க்கப்பட்டதனால் இந்த ஆய்வறிக்கை மிகவும் நுண்மையானதாகவும் அதேவேளை கண்டிப்பாக மறைக்க வேண்டியவற்றை மறைத்தும் எழுதப்பட்டிருகின்றது.

 

போருக்குப் பிந்திய சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட 180 பேரது நேரடிப் பாதிப்புக்களை ”மிகுந்த அக்கறையுடனும் பாரிய அவதானத்துடனும் மற்றும் பல குறுக்காய்வுகள்” மூலமும் ஆராய்ந்ததன் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது(பக்கம் 6). இந்த அறிக்கையில் சாட்சியமளிக்கின்ற பாதிக்கப்படவர்கள் சர்வதேச போர்க்குற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய விசாரணைகளில் பரந்த அனுபவம் மிக்க நிபுணர்களால் நேரடியாக விசாரிக்கப்பட்டார்கள் என்றும் இவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது. இந் நிபுணர்கள் பாதிக்கப்படவர்களிடமிருந்து நேரடியாக வாக்கு மூலங்களாகக் கேட்டறிந்துள்ளனர். அத்தோடு சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்ட சர்வதேசப்பரப்பில் அறியப்பட்ட உலக மருத்துவர்கள் மற்றும் உளநல நிபுணர்களின் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகள் இந்த நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன (பக்கம் 12). மிக அண்மையில், ஜூலை 2015 இல் நடந்த சம்பவம் ஒன்றும் இங்கே உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதில் விபரிக்கப்படுகின்ற பாலியல் வன்புணர்வு மிகக் கொடுமையான வலிதருவது. (முள்ளுக் கம்பியை குழாய் ஒன்றுக்குள் விட்டு அக்குழாயினை மலவாசலுக்குள் திணித்தபின், முள்ளுக் கம்பியை உள்ளிருக்க விட்டு, அக்குழாயினை வெளியே இழுத்து விடுத்தல்) இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவரது நேரடிச் சாட்சியத்தை, அவரைப் பரிசீலித்தபின் வழங்கப்பட்டிருக்கும் மருத்துவ நிபுணத்துவ அறிக்கையும் இதனை உறுதிப்படுத்துகின்றது. (பக்கம் 32).
”அவர்கள் கால் இஞ்சி தடிப்பான கூரான முனைகொண்ட வயர் ஒன்றை எனது ஆண்குறிக்குள் செலுத்தினார்கள். நான் வலியால் அலறித்துடித்தேன்”(பக்கம் 98).

 

images (1)

விபரிக்கவே முடியாத வலியும் வேதனையும் பாதிக்கப்பட்டவரை உண்மையில் முற்றிலுமாகச் சிதைத்துவிடுகின்றது: ”நான் பேரவமானத்தில் எனது தலையக் குனிந்தபடி திரும்பிச் சென்றுகொண்டிருக்கும்போது இராணுவத்தினரும் ஏனையவர்களும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டும் இழிவாக, மோசமாகக் கேலியடித்துக்கொண்டும் நின்றனர். வலியில் துடித்தபடி நான் மண்டபத்திற்கு திரும்பி நடந்தபோது எனது நகர்வு நீண்டுகொண்டே சென்றது. எனது மேற்சட்டையின் இரண்டு பொத்தான்களை மட்டுமே என்னால் ஒருவாறு பூட்டிக்கொள்ள முடிந்தது…எனது பாவாடை முற்றிலும் இரத்தத்தில் ஊறியிருந்தது.” (பக்கம் 31).


இவ்வகை உபாதைகள் ஒருபோதும் கடந்த காலத்தில் நடப்பதில்லை என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். பாதிப்புக்குள்ளானவர்கள் ஒருபோதும் முழுமையாகக் குணமடைவதில்லை என்றும் பாதிப்பின் உபாதைகள் அவர்களது வாழ்வின் எஞ்சிய இறுதிவரை தொடர்ந்து வருவது என்றும் உளவியல் நிபுணர்களும் சமூக-சேவையாளர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.


படையினரால் நடத்தப்படும் வன்புணர்வுகள் அதற்குப் பலியாக்கப்படுவரை மிகப்பெரிய விகாரமான வக்கிரங்களினூடு சிறுமைப்படுத்தியும் இழிவு செய்து அவமானப்படுத்தியும் நடைபெறுவது எதற்காக? பலியாக்கப்படுபவர் அவமதிக்கப்படுவதென்பது அவரது மரணதிற்கு அப்பாலும் தொடர்வது. யூலிய சீசர் நாடகத்தின் இரண்டாவது அங்கத்தின் முதற் காட்சியில் வருகின்ற “ஆத்திரத்தில் கொன்று பழிதீர்த்து (வன்மம்) தீர் அதன் பின்னர்” என்ற வாசகங்கள் மனதில் வருகின்றன.

 

“இறந்த உடலங்களை அவர்கள் உதைத்தார்கள், ஏறி உழக்கி அவற்றின் மீது நடந்தார்கள்[…] நிர்வாணமாகக் கிடந்த ஒருபெண்பிள்ளையின் பெண்குறிக்குள் தடியொன்று ஏற்றப்பட்டிருப்பதைக்கண்டேன். சிப்பாய் ஒருவன் அத்தடியினை ஆட்டி வெளியே இழுத்து மீண்டும் அத் தடியினை அப் பெண்ணின் பெண்குறிக்குள் ஏற்றினான்”. (பக்கம் 49). “இறந்து கிடக்கும் உடல்களை சிறு தடிகளினால் சிதைத்தும், கற்களைச் சிறிய கத்திகளைக் கொண்டு உடல்களின் பெண்குறிக்குள் அவர்கள் திணித்தும் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்” (பக்கம் 50).


கோர்டன் வைஸ் அவர்கள் எழுதிய “கூண்டு” என்ற நூலைப் பற்றி சண்டே லீடர் பத்திரிகையின் 2011 ஜூன் 12 ஆம் திகதி வெளியீட்டில் நான் எழுதிய விமர்சனத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருந்தேன். அதில் ற்றெப்பிளிங்கா என்ற இடத்தில் இருந்த நாசிகளின் வதைமுகாமிற்குப் பொறுப்பாக இருந்த பிரான்ஸ் ஸ்டங்கல் என்ற நாசி ஒருவன் சொல்வதைப் பார்க்கலாம். அவன் விளக்குகின்றான்: (Gitta Sereny அவர்களின் “Into that Darkness” என்ற நூலைப் பார்க்கவும்) ”சிறுமைப்படுத்துவதும் இழிவு செய்து அவமானப்படுத்துவதும் மிகவும் இன்றியமையாத செயற்கூறுகள். “இல்லாவிடின் அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களும் அதற்காக மிகமோசமான காட்டுமிராண்டித் தனங்களை, கொடூரங்களை நிறைவேற்றுபவர்களும் மனிதவிரோத ஈனச்செயல்களைச் செய்வதில் பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்வார்கள்” (சர்வன்)

 

சக மனித உயிரொன்றின் மனிதத்துவத்தையும் மனித மதிப்பினையும் தன்னிடத்தில் இருந்து அழித்துத்துடைத்துக் கொள்ளாத ஒருவனால் இவ்வாறான மிகக் கொடுமையான காட்டுமிராண்டித்தனங்களை நிறைவேற்றமுடியாது. இழிநிலைக்குச் சிறுமைப்படுத்திவிடுவதால் மனித இறைமை பற்றிய பொதுப்புத்தியில் பகிரப்பட்ட எல்லாவகை அறங்களும் அகற்றப்பட்டு விடுவதோடு மிருகவெறியாட்டம் அனுமதி பெற்றதாகி விடுவதுமல்லாமல் இன்னும் அது பாராட்டப் பெறுவதுமாகி விடுகின்றது.


சக மனிதர்களோடு வாழவேண்டுமானால், அதற்குமுன் அவனோ அவளோ தன்னுடன் தானே வாழ்ந்தாக வேண்டும், தான் வார்த்த தன் சுய-விம்பத்துடன் தான் வாழ்ந்தாக வேண்டும், எப்படியோ தனிமனிதனொருவன் தன் செயல்களின்/நடத்தைகளின் நியாயம் பற்றித் தன்னகத்தே ஏதோவொரு சமாதானம் செய்துகொள்ளத்தான் வேண்டும், தன்னால் கட்டவிழ்த்து விடப்பட்ட, விடப்படுகின்ற கொடூரங்களைச் சரியென நியாயப்படுத்த வேண்டும். எனவே இழிவு செய்வதாலும் சிறுமைப்படுத்துவதாலும் அந்த நியாயப்பாடு அவனுக்குக் கிடைத்து விடுகின்றது. இழிவு செய்வதும் சிறுமைப்படுத்துவதும் தருகின்ற பெறுபேறு அது. இன்னும் சொல்லப்போனால் பரிதாபத்துக்குரிய, கையறுநிலையில் தவிக்கின்ற, மரண பயத்தாலும் மற்றும் வலியாலும் ஓலமிடும் தனிமனிதர்களின் எல்லாவகை மனித இறைமைகளும் தடயங்கள் எதுவுமற்று தூக்கிவீசப்பட்டு, இழிவின் அதிஎல்லையில் அம்மனிதம் விடப்படுகின்றபோது அவன் தன் கொடுஞ்செயலுக்கான காரணத்தை, நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறான். இது ஒரு பயங்கரச் சுழற்சி வட்டம். செயல்களின் விளைவுகளை நியாயப்படுத்துகின்ற சுழற்சி வட்டம். நியாயம் என்பது மீண்டும் செயல்களை, செயல்களின் விளைவுகளை ஊக்குவிக்கின்றது. இவ்வாறான மிருகத்தனங்கள் செய்வது வேறும் சில, அரசியல்சார் பரிமாணங்களையும் கொண்டிருக்கின்றது. “எப்படி உன்னைச் சித்திரவதை செய்தோம் என்று உன் இனத்திற்கு நீ போய்ச் சொல், அப்பொழுது தான் அவர்களில் எவருக்கும் விடுதலைப் புலியாய் இருக்கும் எண்ணம் ஒருபோதும் கனவிலும்கூட வரமாட்டாது.” (பக்கம் 84) என்கிற இறுமாப்பும் மறுபுறத்தில் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் சொல்லிவிடக்கூடாது என்று பாதிப்படைந்த இதே நபர் அவர்களால் எச்சரிக்கப்படுவதும் நடைபெறுகின்றது. ”தமிழ்ப் பெண்களுக்கு நான் ஒன்றே ஒன்றைத் தான் சொல்லவிரும்புகின்றேன். நீங்கள் போராட்டம் என்று ஒருபோதும் எழுந்து விடாதீர்கள் என்பதே அது என்று அவள் கூறினாள்” (அதே பக்கம்)

 

இத்தனை கொடிய பேயாட்டத்தின் மொத்த வடிவமாக இந்த அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த, முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கோதபாய ராஜபக்ஷ அவர்களையே சரியோ பிழையோ இனங்கண்டுள்ளது. சித்திரவதை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றை ஊக்குவித்து இக்கொடுமைகளைப் புரிகின்ற கொடியவர்களுக்கு சட்ட விலக்களித்துப் பாதுகாப்பு வழங்கி வந்தது இவன் என்றே குற்றஞ்சாட்டுகின்றது. ”தங்களால் கொடுமைப்படுத்தப்படுபவர்களுக்கு முன்னால் தங்களது தோற்றத்தை, அடையாளங்களை மறைக்க வேண்டிய தேவை இந்தச் சூத்திதாரிகளுக்கு ஏற்பட்டதில்லை.” (பக்கம் 40) ”நாங்கள் ஒருபோதும் எங்கள் முகத்தை மறைக்கவில்லை. எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. எங்களை அடையாளம் காட்டினாலோ அல்லது எதிர்காலத்தில் எங்கள் செயல்களுக்கு நீதிமன்றம் செல்லவேண்டும் என்ற பயமோ எங்களுக்கு இல்லை.” ( பக்கம் 63)

 

images 

தனியாகப் படைதரப்பினர் மட்டுமே சித்திரவதைகளையும், பாலியல் வன்கொடுமைகளையும் திமிருடன் பயமின்றிச் செய்யமுடியும். ஆனால் அவற்றுக்கும் அப்பால் அதாவது பாலியல் மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பணவேட்கையும் இலஞ்சம் கறக்கும் மூர்க்கமும் மிக முக்கியமாக இருக்கின்றது என்று இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இராணுவம், கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆட்கடத்தல் பேர்வழிகளோடு கூட்டுச் சேர்ந்து இயங்குகின்றனர் என்றும், இவர்கள் பாதிக்கப்பட்ட ஒருவரை நாட்டை விட்டு வெளியேற விடுவதற்கு உறவினர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை பணயப் தொகையாகவும், இலஞ்சமாகவும் பெறுகின்றனர் (பக்கம் 46) என்றும் இவ் அறிக்கை குறிப்பிடுகின்றது.


அதிகாரம் என்பது இறுதி இலக்கினை அடைவதற்கான ஒரு வழிமுறை என்பது சிலவேளைகளில் நல்லதாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆனால் இந்த அறிக்கையில் வருகின்ற குற்றச்செயல்களின் அடிப்படையாக இருப்பது எதுவென்று பார்த்தால், அதிகாரமே கருவியாகவும் அதுவே இலக்காகவும் இருவாறாகவும் தொழிற்படுகின்றது. அதிகாரத்தின் நிமித்தமே அதிகாரம்! பலவீனமானவர்களை அடித்து நொருக்கவும் அதிகாரம், இழிவுபடுத்தவும் அதிகாரம், சித்திரவதை செய்யவும் அதிகாரம், வண்புணர்ச்சி செய்யவும் அதிகாரம், பணம் சூறையாடவும் அதிகாரம்.

 

போரின் முடிவினைப் பற்றிய பாரபட்சமற்ற விசாரணை நடைபெறாதன் விளைவாகச் சமாதானம் நிலவுகின்ற (என்று சொல்லப்படுகின்ற) காலத்திலும் மனித உரிமை மீறல்கள் சம்பவித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றினையே இவ்வறிக்கையும் பரிந்துரை செய்கின்றது. போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கு சட்டப்பாதுகாப்பும் குற்றஞ்சுமத்தாத விலக்களிப்பும்(immunity) பாதுகாப்புப் படையினர் ”மனிதவிரோதக் கொடுங் குற்றச்செயல்களைத் தொடர்ந்து புரிவதை ஊக்குவிக்கின்றது” (பக்கம் 9). 8ம்திகதி ஜனவரி 2015 இல் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ய்ப்பட்டுள்ளார். ஆனால் துயரம் என்னவென்றால் திட்டமிட்ட ஒழுங்கமைவிலும் பரந்தளவிலும் நடைபெறும் மனிதவிரோதக் குற்றங்கள் மட்டும் நிற்கவில்லை (அதே பக்கம்). சித்திரவதையும் பாலியல் வன்கொடுமைகளும் குறைவில்லாமலும் எவ்வித தங்குதடையுமின்றியும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அரசால் வழங்கப்படுகின்ற சட்டப்பாதுகாப்பும் குற்றஞ் சுமத்தாத விலக்களிப்பும்(immunity) தமது செயல்களுக்கான நிறை அங்கீகாரமாகவே பாதுகாப்புப் படையினர் புரிந்துகொள்கின்றனர். நீண்டகால அரசியல் வாதிகளையும், இராணுவ உயர் அதிகாரிகளையும் விசாரணைக்கு இழுத்துவிடும் என்பதாலோ என்னவோ இவற்றுக்கெதிராக நியாயம் கோரிய போராட்டங்களைத் தென்னிலங்கையிலும் காணமுடியவில்லை (பக்கம்11).

 

மார்ச் 2014 இல் எமது அறிக்கையில் காணப்பட்ட கண்டுபிடிப்புக்களும் மற்றும் சர்வதேசச் சுயாதீன அமைப்புக்கள், நபர்களின் அறிக்கைகளில் கண்ட மேலும் பல கண்டுபிடிப்புக்களும் மற்றும் ஆதாரங்களும் வெளிக்கொண்டு வரப்பட்ட போதுங்கூட விசாரணை நாடாத்த, மனித உரிமை மீறல்களைத் தடுக்க, தண்டனை வழங்க அல்லது தமிழர்கள் மீது திட்டமிட்ட ஒழுங்கமைவிலும் பரந்தளவிலும் நடைபெறும் சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த ராஜபக்ஷ அரசாங்கமோ அன்றி சிறிசேன அரசாங்கமோ எதுவித முன்னேற்றகரமான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை (பக்கம் 22). பாதுகாப்புப் படையினரால் அரசின் அனுசரணையுடன் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களும், கடத்தல்களும், சித்திரவதைகளும், அச்சுறுத்திப் பணம் கறக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்துவிட்டன. (பக்கம் 25)


தமிழர் ஒருவரின் குடும்பத்தில் அவரது தந்தையார் மட்டுமே இலங்கையில் கடைசியாக எஞ்சியிருந்தார். ஆனால் அத் தமிழர் வெளிநாடுகளின் பல வெகுஜன ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்ததன் காரணமாக அவரது தந்தையார் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டார். அத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் அவர் மரணமாகி விட்டார் (பக்கம் 23). சர்வதேச அளவில் சாட்சிகளை மௌனமாக்கிவிடுவதன் மூலம் இழைப்படுகின்ற குற்றச்செயல்கள் மறைக்கப்படுகின்றன. அதேவேளை சட்டப்பாதுகாப்பும் குற்றஞ்சுமத்தாத விலக்களிப்பும் (immunity) இவர்களைப் பாதுகாப்பதுடன் மேலும் சித்திரவதைகள் செய்வதற்கும், பாலியல் வன்புணர்வுகள் புரிவதற்கும், அச்சுறுத்தியோ கடத்தியோ கப்பம் பெறுவதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு அனுமதிச் சீட்டினை வழங்கி நிற்கின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல் முறைகளும் உலகளாவிய ரீதியில் சாட்சிகளை, பாதிப்புற்றவர்களை மௌனமாக்கிவிடுவதில் நிறைந்த பலன்தரும் உத்திகளாகும். இதன்மூலம் தொடர்ந்தும் இழைப்படுகின்ற குற்றச்செயல்கள் மறைக்கப்படுகின்றன. அதேவேளை மிக நீண்டகாலமாக நிலவிவரும் குற்றஞ்செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி வரும் கலாசாரமும் இலங்கையில் தங்குதடையின்றிப் தொடந்தும் வளர்ந்துவருகின்றது (பக்கம் 26).

 

அக்டொன் பிரபு (1834-1902)அவர்களின் கூற்று ஒன்று உள்ளது. அதிகாரத்தினைக் கையகப்படுத்தி அதனைத் தம் சகலவற்றுக்குமான கருவியாக்குபவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”அதிகாரம் ஊழல்கள் புரிவதற்கு வழிவகுக்கும். அதிகார உச்சம் அதாவது எதேச்சாதிகாரம் ஒட்டுமொத்த ஊழலையே கொண்டுவந்துவிடும்” என்பார்.


இந்த அறிக்கையினை வாசிக்கின்றபோது பாதிப்புக்குள்ளான தமிழர்கள்- பெண்கள், ஆண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது தெளிவாகத் தெரியவருகின்றது. எல்லாவகைப் பொது அறங்களும் மற்றும் மனிதத்துவமும் அற்றுப்போன பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது பிரயோகிக்கும் முற்றுமுழுதான அதிகாரத் திமிரை இந்த அறிக்கையினை வாசிக்கின்றபோது என்னால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அவர்கள் தங்களையிட்டு வெட்கப்படவேண்டியவர்கள். உண்மையில் தாம் சார்ந்து, தாம் உரிமை பாராட்டும் தம் மதம் சார்ந்து, இவர்களுக்குத்தான் நாம் சேவையாற்றுகின்றோம் என்ற தம் மக்கள் சார்ந்து, தங்களைப் பெருமையுடன் அடையாளப்படுத்தும் தம் கலாசாரம் சார்ந்து இவர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டியவர்கள்.

 

ஆர்ச் பிஷப் டெஸ்முண்ட் டூட்டூ அவர்கள் சொல்வார்கள்: ”அடக்குமுறை நிகழ்கின்றபோது நாம் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிடின், விளைவு நாம் அடக்குமுறையாளர்களின் பக்கமே சார்ந்துவிடுகின்றோம்”. இதனையே ஊழல் போன்றவற்றுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எவரொருவர் ஊழல்மலிந்த நிலைகளில் இருந்து ஆகக் குறைந்தது, தன்னை விடுவித்துக் கொள்ளவில்லையோ அல்லது மௌனியாக இருக்கின்றாரோ, அவரும் அதே ஊழல் நிலையின் அங்கத்தினர் ஆகிவிடுவார். உண்மையில் இவ்வகை ஊழல் நிலைமைகளின் போது நாம் அதில் இருந்து விலகியிருப்பதும் நாமும் அதுவாகிவிடாமலிருப்பதும் மிகக் கடினமானது அல்லது சாத்தியமே அற்றது.

தப்பிப்பிழைத்திருத்தல் என்பது வாழ்வின் வெற்றி என்றோ அன்றி முன்னேற்றம் என்றோ சொல்லிவிடமுடியாது. மாறாக ஊழல் நிலைமைகளில் சில மட்டங்களில் அந் நிலைமைக்கு ஏற்ப பங்காளியாகிவிடுவதற்குத் தான் மக்களும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.


ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஒருவகையிற் கையறு நிலையில், நம்பிக்கையிழந்து வாழ்வதுமட்டுமில்லாமல், பலவழிகளில் அவர்களும் ஊழல்மலிந்தவர்களாக மாறிவிடும் ஆபத்திலுமிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக: தமிழர்களின் பெரிய வலைப்பின்னல் ஒன்று பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் தரும் அமைப்பாகச் செயற்படுகின்றது(பக்கம் 48). யாழ்ப்பாணத்தில் இவ்வாறான தகவலாளி ஒருவர் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் (பக்கம் 106). ”இயக்கத்திற்கு இளைஞர்களைத் திரட்டி அவர்களைப் போராட்டக் களத்திற்கு அனுப்பி, அவர்களைக் குண்டுகளுக்கு இரையாகிப்போக வைத்துவிட்டு, எம்மை அழித்துவரும் பாதுகாப்புப்படையினருடன் இன்று வெறும் காசுக்காக இணைந்து செயற்படுவது மிகப்பெரிய காட்டிக்கொடுப்பாகவே நான் பார்க்கிறேன்” ( அதே பக்கம்).

1960917_835479546544201_7947940786270548173_o

அறமிழந்து நிற்கும் மக்களிடம் மரபார்ந்த அறங்களை எதிர்பார்ப்பது கடினமானது தான். முற்று முழுதாகக் குவிந்திருக்கும் அதிகாரம், அது சட்டம், நீதிபரிபாலனம் என்பவற்றுக்கும் அப்பாலான அதிகாரம், ஓர் பேயரச அதிகாரம். மனித விழுமியங்களற்ற காடுமிராண்டித்தனமான அதிகாரம், அந்த எதேச்சாதிகாரம் எவ்வாறு தொழிற்படுமெனில், அதனைக் கையகப்படுதி வைத்திருப்பவர்களை மட்டுமல்ல அதிகாரமே முற்றிலும் அற்ற அதனால் நசுக்கப்படுகின்றவர்களையுங்கூட அது அடிமையாக்கிவிடும். அதன் சீரழிவில் அவர்களையும் தள்ளி இணைத்துவிடும்.

 

முடிவாக, இந்த அறிக்கையின் 44 ஆவது பக்கதில் காணப்படுகின்ற வாசகங்கள்: போய் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் சாட்சிகள் இன்னமும் இலங்கையில் இருந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் பஞ்சத்திலும் பசியிலும் அனுபவப்பட்டவர்கள், குண்டுவீச்சிலும், செல்லடியிலும் மரணத்துள் வாழ்ந்து உயிர்களைத் தக்கவைத்துக் கொண்டவர்கள், தொடர்ந்த இடப்பெயர்வுகளில் வாழ்வைத் தொலைத்தவர்கள், உடல், உளம் காயமடைந்தவர்கள், தங்கள் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள், எல்லாப் பொருண்மையும் இழந்த ஏதிலிகள், 2009 இல் போரின் இறுதி நாட்களில் எண்ணிப்பார்க்கவே முடியாத கொடிய பேரதிர்ச்சிகளைக் கண்டு மனம் பேதலித்தவர்கள், மேலும் போருக்குப்பின்னர் காரணமற்றுப் புனர்வாழ்வு முகாம்களில் பலவருடங்களாக அடைக்கப்பட்டுக் கிடந்தவர்கள், மிகக்கொடூரமான சித்திரவதைகள் பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், குடும்ப அங்கத்தவர் ஒருவருக்காகத் தண்டனைகளை அனுபவித்தவர்கள். இப்படியாக. இவர்கள் அனுபவித்துவரும் நீண்ட கால இன்னல்கள் எ|ண்ணிப்பார்க்கவே முடியாதவை. இன்னும் எல்லாவகை இன்னல்களுக்கும் அப்பால் அவர்கள் தமக்கு நடந்தனவற்றைத் துணிவுடன் எழுந்து சாட்சியமளிப்பது கைகூப்பி வரவேற்கப்படவேண்டியது. இலங்கையில் வாழும் தமது குடும்பத்தினருக்கும் மற்றும் மிக நெருங்கியவர்களுக்கும் இன்னும் பாதுகாப்பு எதுவுமே இல்லாத தமக்கும் ஆபத்துக்கள் வந்து உயிரை மாய்க்கலாம் என்று தெரிந்தும் இவர்கள் சாட்சியமளித்திருக்கின்றனர் என்பதை நாம் எப்போதும் நம் மனதிருத்தவேண்டும்.

 

இந்த அறிக்கைக்கு “நிறுத்து” என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. காரணமின்றி எதேச்சையாகக் கைது செய்வதையும், சித்திரவதைகளையும் வன்புணர்வுகளையும் நிறுத்தி, மனிதநேயத்தையும், மானுடத்தையும் நோக்கிய விண்ணப்பமாகவும் நான் இதனை நோக்குகின்றேன். நிறுத்துவது மட்டுமல்லாது கவனக் குவிப்பினையும் வேண்டி நிற்கின்றது இந்த அறிக்கை.


”இந்தப் பாதையில் நடந்து போகின்ற அனைத்து வெகு ஜனங்களே , இவை குறித்து உங்களுக்கு கவலை உண்டாகவில்லையா? (புலம்பல் 1:12)

 

00000000000000000000

 

http://eathuvarai.net/?p=5052

 

 

Edited by கிருபன்

வாசிக்கவே கடினமாக உள்ளது. நன்றி கிருபன் பதிவிற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.