Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்தாயகத்தை அபரிக்க வடகிழக்கில் தீவரமாகும் காடழிப்பு-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்தாயகத்தை அபரிக்க வடகிழக்கில் தீவரமாகும் காடழிப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:

09 டிசம்பர் 2015
தமிழர்தாயகத்தை அபரிக்க வடகிழக்கில் தீவரமாகும் காடழிப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகள் இப்போது மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. அண்மைய காலத்தில் 16ஆயிரத்து 500 ஏக்கர் காட்டுப் பகுதி குடியிருப்பாக மாறியிருப்பதாக சுற்றாடல் பாதுகாப்பு ஒன்றியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்தக் காடழிப்பின் நோக்கம் எதற்கானது என்பதையும் அது தடுத்து நிறுத்தப்படாமல் இருப்பது எதற்கானது என்பதையும் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.


இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுற்றாடல்துறை சார்ந்த அமைச்சை பெறுப்பில் வைத்திருக்கிறார். இந்த வருடம் நடைபெற்ற சுற்றாடல் தினத்தில் பேசிய இலங்கை ஜனாதிபதி சுற்றாடலை அழிக்க எவருக்கும் அதிகாரமில்லை என்று தெரிவித்திருந்தார். அது மாத்திரமல்ல புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காடுகள் இன்றில்லை என்றும் வட கிழக்கில் மாத்திரமே 20 சதவீத காடுகள் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


யுத்தம் நடந்த வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதனை மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்குப் பகுதியிலே காடழிப்பு தீவிரமாகியுள்ளது. சில அரசியல்வாதிகள் வலிந்த குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக வனப்பும் இயற்கை முக்கியத்துவமும்கொண்ட மிக முக்கியமான காடுகளை அழிக்கின்றனர்.


வடகிழக்கு எல்லைகளில் காடுகள் அழிக்கப்பட்டு வலிந்த குடியேற்றங்களை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. வடகிழக்கு தமிழர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தமிழர் தாயகத்தை சுற்றி வளைக்கும் நோக்கில் தமிழர் தாயகத்தை பிளவுபடுத்தும் நோக்கில் என மேற்கண்ட மூன்று காரணங்களுக்காக இந்த காடழிப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வலிந்த குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மாபெரும் இடப்பெயர்வுகளை சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி இடப்பெயர்வுகள் மக்கள் வாழ்ந்த நிலப் பகுதிகளை விட்டு அவர்களை முழுமையாக வெளியேற்றியிருந்தன. அக் காலப் பகுதிகளில் ஈழ மக்கள் காடுகளுக்குள்ளேயே தஞ்சம் புகுந்தனர். காடுகளை அழித்தும் காடுகளுக்குள் குடில்களை அமைத்து தங்கினர்.


பின்னர் கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னரும் யாழ்ப்பாண மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்னரும் குறிப்பாக 2002 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் அழிக்கப்பட்ட இடங்களில் காடுகள் மீண்டும் வளர்க்கப்பட்டன. அந்த இடங்களை விட்டு மக்கள் வெளியேறி தமது சொந்த இடங்களுக்குச் சென்றபோது காடுகள் தமது இடங்களில் தாமாக வளர்ந்தன. யுத்தத்திற்கும் பேரழிவிற்கும் முகம் கொடுத்த ஈழத் தமிழ் மண்ணில் இவ்வாறுதான் காடுகள் வளர்க்கப்பட்டன.


இலங்கைத் தீவிலேயே காடுகள் நிறைந்த மாகாணம் வடக்கே. இங்குதான் செறிந்த இயற்கை வனப்பு மிக்க காடுகள் உள்ளன. மாகாணத்தின் 49வீதமான நிலப்பரப்பு காடுகளாக உள்ளன. தொடர்ச்சியான யுத்தத்தை சந்தித்த வடகிழக்கில் காடு வளர்க்கும் பல திட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்ற நிர்வாக அமைப்பை நிறுவி காடழித்தலை தடுத்து காடுகளை வளர்க்கும் நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டனர். அதன் காரணமாக வடகிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பகுதியில் காடுகள் எஞ்சின.


வடகிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்காது படைகள் அபகரித்த பகுதிகளிலேயே காடுகள் அழிக்கப்பட்டன. அன்றைக்கு புலிகள் இயக்கம் வளர்த்த பல காடுகள் இன்று அழிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் அரசியல்வாதிகளும் இராணுவத்தினரும் காடுகளை அழிப்பதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  விடுதலைப் புலிகள் காடுகளை அரண்களாக்கி தமது முகாங்களை அமைத்திருந்தனர். ஆனால் இலங்கை இராணுவத்தினரோ வடக்கில் உள்ள பல வனப்பு மிகுந்த காடுகள் அழிக்கப்பட்டு பாரிய இராணுவமுகாங்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.


நிலத்தை பாதுகாப்பதற்கும் நிலத்தை அழிப்பதற்கும் இடையிலான பேராட்டத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் மிகவும் தெளிவான வேறுபாடு இருக்கிறது. இலங்கை அரச படைகள் தமிழர் நிலத்தில் காடழிப்பை தங்குதடையற்ற முறையில் தமது தேவைக்கும் ஆக்கிரமிப்புக்கும் அந்த நோக்கத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் விரிவாக மேற்கொண்டுள்ளனர். அவர்களின் நோக்கம் தமிழர் தாயகத்தை அபகரிப்பதும் தமது ஆக்கிரமிப்பை நிலைபெறச் செய்வதுமே.


முறிகண்டிப் பகுதியில் இயற்கை வனப்பு மிக்க காடுகள் பல நூறு ஏக்கரை அழித்து இலங்கை இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். ஏ-9 வீதியால் முறிகண்டியை கடந்து செல்லும் ஒருவர் எத்தனை தெருக்கள் காடழித்து உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் எத்தனை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதனையும் அவதானிக்கலாம். இதை பார்த்து இயற்கையின் முக்கியத்துவம் அறியும் எந்த மனிதரும் அதிர்ச்சியடைவார்.

வன்னி மாவட்டதில் உள்ள எல்லா இடங்களிலும் மிகவும் பரந்த காடுகள் அழிக்கப்பட்டு இராணுவமுகாங்களும் காவலரண்களும் இராணுவ வர்த்தக நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் வளர்த்த தேக்கம் காடுகள் இன்று இராணுவ முகாமாக்கப்பட்டுள்ளன. அவை அழிக்கப்பட்டே முகாங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.


வடக்கில் தமிழ் பேசும் அரசியல்வாதியொருவர் காடழித்து வலிந்த குடியேற்றங்களை மேற்கொள்வதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றுடன் தொடர்புடைய சில நிலப் பகுதிகளிலும் காடழிப்பில் ஈடுபட்டு வலிந்த குடியேற்றத்தில் ஈடுபடும் நடவடிக்கை முல்லைத்தீவில் நடைபெறுகிறது. முல்லைத்தீவு முள்ளியவளையின் வன்னிமேடு என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலேயே காடழிப்பு இடம்பெறுகிறது.


முல்லைத்தீவு காடழிப்பு தொடர்பில் அண்மையில் வடக்கு மாகாண சபையில் விவாதம் நடைபெற்றது. முள்ளியவளைப் பகுதியில் மாத்திரம் 600 ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளது. வடக்கில் நடைபெறும் காடழிப்பு தொடர்பில் வடக்கு முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டது. ஆனாலும் காடழிப்பு நிறுத்தப்படாமல் நடைபெறுகிறது. அத்துடன் வனத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே காடழிப்புக்கு உடந்தையாக இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ருபவதி கேதீஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.


முல்லைத்தீவில் நடைபெறும் காடழிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அரச அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். வலிந்த குடியேற்றவாசிகள் தமக்கு பின்னால் உள்ள அரசியல்வாதிகளை காட்டி அதிகாரிகளை எச்சரிக்கின்றார்கள். முல்லைத்தீவைப் பொறுத்தவரையில் அது இருமுனை போரை சந்திக்கிறது. பெரும்பான்மையினத்தவர்களும் சிறுபான்மையினத்தவர்களாலும் அதன் காடுகள் அழிக்கப்படுகின்றன. 
வன்னியில் கடந்த காலங்களைப் போலன்றி சமீப காலங்களில் வறட்சியும் வெம்மையும் அதிகரித்துள்ளது. அத்துடன் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கும் இயற்கை சீற்றங்களும் அதிகரித்துள்ளன. இவை காடுகள் போன்ற இயற்கை சமனிலைகளை குழப்புவதனாலும் ஏற்படலாம் என அனுபவமுள்ளோர் கூறுகின்றனர். அத்துடன் கோடை காலங்களில் வறட்சி நோய்களால் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன. வடக்கின் அண்மைய காலத்தில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு இத்தகைய உடனடி விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இடம்பெயர்ந்த எவரும் மீள்குடியேற்றம் செய்யப்படுவதை மறுக்க இயலாது. அது அவர்களின் குடி உரிமை. தம் வாழ் நிலத்திற்குப் போரடிவரும் தமிழர்கள் அந்த உரிமையை ஒருபோதும் மறுக்க மாட்டார்கள். அத்துடன் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடும் ஈழத் தமிழர்கள் யாராக இருந்தாலும் நிலத்தை ஆக்கிரமித்து குடிப்பரம்பலை திட்டமிட்டு சிதைப்பதை ஏற்றுக்கொள்ளவும் இயலாது. அத்துடன் தமிழர் மண்ணில் காடுகளை அழித்து இயற்கையை சீரழித்து அவைகளின் வரலாற்று – பண்பாட்டு முக்கியத்துவத்தை இல்லாமல் செய்யும் அந்த திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது.


கிழக்கு மாகாணத்த்தில் சுதந்திரத்திற்குப் பின்னர் காடழிப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வடக்கிலிருந்து கிழக்கை துண்டாடும் நோக்கில் பல முனைகளில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பெரும்பாலான பகுதிகள் அபகரிக்கப்பட்டு காடழிக்கப்பட்டு புதிய பெயர்கள் சூட்டப்பட்டு சிங்களக் கிராமங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் அண்மையில் பிபிசிக்குக் கூறியிருந்தார். தொடர்ச்சியாக இந்த சட்டவிரோத செயல் தொடர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைகளில் மாத்திரம் பொலநறுவை மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் குடியேறிய பெரும்பான்மையினத்தவர்கள் 6500 ஏக்கர் நிலப்பகுதியில் காடழிப்புச் செய்து நிலத்தை அபகரித்துக் கொண்டுள்ளதை கிழக்கு மாகாண  வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தென்மாகாண பெரும்பான்மையின மக்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் இவ்வாறு தொடர்ந்து காடழிப்பில் ஈடுபட்டு பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றத்தில் ஈடுபடுகின்றனர்.


இது சட்டவிரோத செயல் என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது சட்டவிரோதமானது என்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ள போதும் காலம் காலமாக தொடரும் காடழிப்புக்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.  


மட்டக்களப்பு மாவட்டம் காடழிப்பினால் கடுமையான எதிர் விளைவுகளை சந்தித்த வண்ணமுள்ளன. கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பில் ஊர் மனைகளுக்குள் நுழையும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரையும் மக்களையும் யானைகள் அழித்து வருகின்றன. இதனால் மக்கள் ஊர்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யானைகள் வாழும் இயற்கை காடுகளை அழிப்பதனால்தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன.


காடழிப்பு அந்த மண்ணின் பூர்வீக மக்களை இவ்வாறு இடம்பெயரும் அழிக்கும் விளைவுகளை தூண்டுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 25 வீத வனப்பகுதியை பாதுகாப்பதிலேயே அந்த மாவட்டத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. அத்துடன் காடழிப்பு போன்றவற்றால் மாவட்டத்தில் மழை வெள்ள அழிவுகுள், நீர்த்தட்டுப்பாடு, கடுமையான வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு இயற்கை சமனிலை குழப்பங்கள் காரணமாக இருக்கலாம் என்றே சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.  


மட்டக்களப்பு காடுகளை  பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இலங்கை ஜனாதிபதிக்கு மாகாண விவசாய அமைச்சர் எடுத்துரைத்துள்ளதாக கூறுகிறார். காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக கிழக்கிலும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களித்துள்ளபோதும் அங்கு காடுகளை பாதுகாக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் திட்டமும் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்பது சிந்திக்கத்தக்கது.


வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை மாவட்டங்களில் 17 வன பாதுகாப்பு நிலையங்களில் காடழிப்பு நடைபெறுவதாக  கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு ஒன்றியம்  கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தற்போதும் தொடர்கிறது என்றே கூறுகிறது. தனது காலத்தில் இயற்கையை அழிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார் மைத்திரி. அப்படி என்றால் வடக்கு கிழக்கில் காடுகளை அழிப்பவர்களை இலங்கை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஏன் தடுத்து நிறுத்தவில்லை?  


தமிழர் பகுதிகளில் உள்ள காடுகள் இன சுத்திகரிப்பு நோக்கிலும் அதற்கான நில அபகரிப்பு நோக்கிலும் குடிப்பரம்பலை சீர்குலைந்து அரசியல் தாக்கத்தை உருவாக்கும் நோக்கிலும் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தில் பாதுகாக்கப்பட்டு  வந்த  நிலங்களும் காடுகளும் தற்போது இயற்கைக்கு மாறாக அழிக்கப்பட்டு  வலிந்த குடியேற்றங்களுக்குப் பயன்படுகின்றன. இவைகள் ஆட்சி மாறியபோதும் காடழிப்புக்களில் மாற்றம் இல்லை. இவைகளினால் வடகிழக்கு பூர்வீக மக்களே பெரும் விளைவுகளை – அழிவுகளை எதிர்காலத்தில் முகம்கொள்ள நேரிடும். எனவே இதனை தடுத்து நிறுத்தும் வகையில் வடகிழக்கு வனங்களை பாதுகாக்கும் தீர்வும் நடவடிக்கையும் நிரந்தரமாகவும் விரைவாகவும் காணப்படவேண்டும்.  


கடந்த கால ஆட்சியில் காடழிக்க அனுமதி வழங்கப்பட்டது என்றும் அதனை தடுத்து நிறுத்துவதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ஆட்சி மாறி பல விடயங்களில் மாற்றங்கள் செய்தபோதும் ஏன் இந்தக் காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை? வடகிழக்கு வனங்களை பாதுகாக்கும் உரிமை வடகிழக்கு மாகாண சபைகளிடம் இல்லை. வடகிழக்கில் தீவிரமாக காடழிப்பு நடைபெறுவது அரசியல் நோக்கங்களுக்கானது என்பதனால் அந்த காடழிப்பை தடுத்து நிறுத்த அரசியல் நவடிக்கைகளே தேவை. வடகிழக்கு வனங்களை பாதுகாக்கும் உரிமை அம் மாகாணங்களிடம் இருக்க வேண்டும். 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126700/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.