Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மச்சு பிச்சு என்னும் கனவு நகரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மச்சு பிச்சு என்னும் கனவு நகரம்

 

(Machu Pichchu, Peru)

பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது.

1.jpg

மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மித்தபோது இந்த நகரில் எப்படி விமானத்தை தரையிறக்கப் போகின்றார்களோ என்கின்ற சிறு அச்சம் வந்திருந்தது. எனெனில் அந்தளவிற்கு நிறைய மலைகள் உடைய சமதரையற்ற நிலப்பகுதி அது. மேலும் கடல்மட்டத்திலிருந்து 3000 மீற்றர்களுக்கு மேலே இருக்கின்றது. தலையிடி/தலைச்சுற்றல் இன்றி இந்த நகரின் காலநிலையை அவ்வளவு எளிதில் எல்லோராலும் உள்வாங்கிக்கொள்ளவும் முடியாது.

 

மச்சு பிச்சுவிற்குப் போவதென்பதை பலர் மாதக்கணக்காய்த் திட்டமிடுவார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காய்த் தயார் செய்துவிட்டுத்தான் பெருவிற்குள்ளேயே கால் வைப்பார்கள். நான் அப்படியில்லாது வருவது வரட்டுமென பெருவிற்குப் போய் மச்சு பிச்சுவிற்கான திட்டத்தைப் போடுவோமெனப் போயிருந்தேன். மச்சு பிச்சுவிற்குள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களே நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. மொன்ரானா அல்லது ஹயானா பிச்சு போன்ற அருகருகிலிருக்கும் மலைகளிலிருந்து மச்சு பிச்சுவின் அழகைப் பருகவேண்டுமென்றால் அதற்கும் தனியே நுழைவுச்சீட்டுக்கள் எடுக்கவேண்டும். ஹயானா பிச்சுவில் ஏறுவதற்கு இருநூறு பேர் மட்டுமே ஒரு நாளில் அனுமதிக்கப்படுவார்கள்.

நான் பெருவிற்குள் இறங்கிய முதல்வாரம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சில தினங்கள் மச்சு பிச்சுவிற்கான பயணமும் தடைபட்டிருந்ததென அங்கே தற்செயலாய் சந்தித்த ஒரு நியூசிலாந்துத் தம்பதியினர் சொல்ல, இவ்வளவு தூரம் வந்துவிட்டதன் பின் என் கனவு நிறைவேறாதோ என்ற கலக்கமும் வந்தது. அதிஷ்டவசமாக நான் செல்வதற்கு நினைத்த நாளில் மச்சு பிச்சுவிற்கான வாசல்கள் மீண்டும் திறந்துவிட்டிருந்தன.
 

குஸ்கோவிலிருந்து முதலில் ரெயினில் மச்சு பிச்சுவிற்குப் போகலாம் அல்லது இன்காக்களின் இன்னொரு நகரான ஒலாண்டேதம்பேயில் இருந்தும் ரெயின் எடுத்தும் மச்சு பிச்சுப் போகலாம். நான் ஒலாண்டேதம்பே சென்று அங்கிருந்து ரெயின் எடுத்து மச்சு பிச்சுவை அடைந்தேன்.

ஒலாண்டேதம்பேயும் ஒரு பிரசித்தி பெற்ற இன்காக்களின் நகர். இன்னும் இன்காக்களின் கட்டட அமைப்புக்களின் எச்சங்களைப் பார்க்கலாம். எங்கு பார்க்கினும் மலைகள் சூழ்ந்த நகரில் அந்த நகரில் மூன்று நாட்கள் நின்றதும், அந்தவேளை நகரில் நிகழ்ந்த முக்கிய கலாசார விழாவினைக் கண்டு களிக்க முடிந்ததும் மச்சுபிச்சுவிற்கான என் பயணங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

ஒலாண்டேதம்பேயிலிருந்து உள்ளூர் மக்களுக்கென தனிப்பட்ட ரெயினும், பிற நாட்டிலிருந்து வருபவர்க்கென இன்னொரு ரெயினும் புறப்படுகின்றது. உள்ளூர் மக்களுடன் அவர்களின் ரெயினில் போகவே எனக்கு விருப்பம் இருந்தபோதும் அதில் செல்ல அந்நியர்களுக்கு அனுமதியில்லை. பெரு ரெயில் அல்லது இன்கா ரெயில் என்கின்ற சேவைகளில் ஒன்றில் பிறநாட்டவர்கள் போகலாம். கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலம் எடுக்கும் ரெயின் சிறு கிராமங்களையும் மலைகளையும் காடுகளையும் ஆறுகளையும் ஊடறுத்துச் செல்கின்றன. முன்னே தெரியும் மலைகள் பச்சையாய்த் தெரிய, பின்னாலிருக்கும் மலைகளை முகில்களும் பனியும் மூடியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பது அற்புதமானது. நதியொன்றும் விடாது எங்களோடு தொடர்ந்து மச்சு பிச்சுவரை வந்துகொண்டிருந்தது.

ரெயின் மச்சுபிச்சு அடிவாரத்திற்கு அப்பால் நகர்வதில்லை. பின்னர் பஸ்செடுத்து -30 நிமிடங்கள்- மச்சுபிச்சு அமைந்திருக்கும் மலைக்குச் செல்லவேண்டும். மலையேறியும் போகலாம். ஆனால் நிறைய நேரமெடுக்கும். மச்சுபிச்சுவின் நுழைவாயிலை அடைந்ததும் நிறைய வழிகாட்டிகள் நிற்பார்கள். விருப்பமெனில் அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களைக் கூட்டிச் செல்லலாம்.

மச்சு பிச்சுவின் முக்கிய பகுதிகளைப் போய்ப் பார்க்க முன்னர், மலையில் ஏறுவதற்குத் தயாராகினேன். எனெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மலையில் ஏறவேண்டும். இல்லாவிட்டால் அனுமதியிருக்காது. ஹயானா பிச்சுவிற்கு அனுமதிச் சீட்டு வாங்க முடியாது போனததால் மொன்ரானா மலையினுள் ஏறததொடங்கினேன்.

2.jpg

அடிக்கடி மலையேற்றம் செய்யாவிட்டால் ஏறுவதற்கு கடினமான மலை இது. சிறுபாதைகள்/ செங்குத்தான சரிவுகள் உடைய சற்று ஆபத்தான பாதையும் கூட. மூச்சு இழுத்து கஷ்டப்பட்டு ஏறியபோதும் வழிநெடுகிலும் காட்சிகள் அழகாயிருந்தது. சிலர் இடைநடுவிலேயே இயலாதென திரும்பி விட்டிருந்தனர். நான் உச்சிக்குப்போனபோது 360 பார்வைக்கோணம் உள்ள இடத்தை நேரம் சென்றுவிட்டதென்று மூடிவிட்டிருந்தனர். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு ஏறி வந்திருக்கின்றோம், 10 நிமிடங்கள்தானே பிந்திவந்தோம் என என்னைப் போன்ற நான்கைந்து பேர் 'அனுமதிக்க மாட்டீர்களா?' எனக்கேட்டபோதும் அவர்கள் அந்தப் பார்வைக் கோணத்தை எமக்காகத் திறந்துவிடவில்லை. உடனே திரும்பி நடக்கவும் சொல்லிவிட்டார்கள். எனெனில் நாங்கள் கீழே இறங்கியவுடன் பாதையை முற்றுமுழுதாக மூடி விடவும் வேண்டும். இவ்வளவு உயரம் ஏறிவந்துவிட்டு உடனே திரும்பி இறங்க முடியாது என அங்கேயே அமர்ந்து 'உள்ளே அனுமதிக்கும் போராட்டத்தை' நாங்கள் எல்லோரும் நடத்தினோம். இறுதியில் வழமைபோல அவர்களிடம் தோற்று இறங்கி நடக்கத்தொடங்கினோம். கூடவே ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த குடும்பம் ஒன்று பேச்சுத் துணைக்கு வந்தததால் இறங்கி வருவது அவ்வளவு களைப்பாய்த் தெரியவில்லை.

 

 


 

மச்சு பிச்சுவை அன்றைய காலத்தில் இன்காக்கள் எப்படிப் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என்பதை அனுபவிக்க வேண்டுமானால் இன்கா வழித்தடங்கள் (Inca Trails) ஊடாக நான்கைந்து நாட்கள் நடந்து போய்ப் பார்க்கலாம். ஆனால் தனியே போக அனுமதியில்லை. குழுக்களாய்த்தான் சேர்ந்தே போகவேண்டும். இன்கா வழித்தடங்களினூடாகப் போவதென்றால் பல மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்யாவேண்டும், இல்லாவிட்டால் இடம் கிடைப்பது அரிது. இரவுகளில் கூடாரங்கள் அடித்து தங்கவேண்டும். மிகுந்த சுவாரசியமான பயணம் அதுவென மச்சுபிச்சுவில் சந்தித்த ஒரு பிரேசிலிய இணை கூறினார்கள். வழியெங்கும் இயற்கையின் அதிசயங்களையும், பல்வேறு விலங்குகள்/நகர்வனபனவற்றையும் பார்த்து வந்ததை அவர்கள் விபரித்தபோது நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன் என்ற உணர்வே வந்தது.



5.jpg


மச்சுபிச்சு, 1450 ஆண்டளவில் இன்கா அரசனொருவனால் நிர்மாணிக்கப்பட்டதாய் நம்பப்படுகின்றது. பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் வந்து இன்காவினரையும் அவர்களின் கலாசாரங்களையும் கொடூரமாய் அழித்தபோதும் மச்சுபிச்சு அதிலிருந்து தப்பியதென்பது ஓர் அதிசயமென்றே சொல்லவேண்டும். ஸ்பானியர்களின் கண்களுக்கு மட்டுமின்றி, இன்காவினரின் செழிப்புமிக்க வாய்மொழிப் பாடல்களில் கூட மச்சு பிச்சு பல நூற்றாண்டுகளாய் இல்லாதிருந்தது ஏனென்பதும் இன்னமும் மர்மாகவே இருக்கின்றது. பதினாறாம் நூற்றாண்டில் நடந்த ஸ்பானியர்களின் படையெடுப்புடன் வரலாற்றின் தடங்களில் இருந்து இல்லாமற்போன மச்சுபிச்சு மீண்டும் 1911ல் கண்டுபிடிக்கப்படுகின்றது.

இன்றும் கூட மச்சுபிச்சு எதற்காய் அமைக்கப்பட்டதென்று மர்மமாகவே இருக்கின்றது. புனிதமான வழிபாட்டுக்காய் அமைக்கப்பட்டிருக்கலாமென்று ஒருசாராரும், விவசாயத்தின் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாமென்று இன்னொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இன்றும் கூட மலைகளாலும் பெருங்காடுகளாலும் சூழப்பட்டு இருக்கும் ஓரிடத்தில் இவ்வளவு நுட்பமான ஒரு நகரை அமைத்திருப்பது என்பது அதிசயமாய்த்தானிருக்கிறது. மச்சுபிச்சுயின் உள்கட்டுமானம், இரண்டு பகுதிகளாகத் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒருபகுதி வசிப்பதற்கெனவும், இன்னொரு பகுதி விவசாயம் செய்வதற்குமென வகுக்கப்பட்டிருக்கின்றது. விவசாயத்திற்கென நீர் வழங்கல் முறை நவீன தொழில்நுட்பத்திற்கு சவால் விடும் முறையில் அவ்வளவு கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

மச்சு பிச்சுவில் உயர் வர்க்கம் வாழ்வதற்கென வசதியான வீடுகளும், சாதாரணர்கள் வாழ்வதற்கு எளிய வீடுகளும் அமைக்கப்பட்டிருப்பதை இப்போதும் காணமுடியும். அதேபோன்று சூரிய வழிபாடுகள் நடந்தற்குரிய தடங்களையும் தெளிவாய்க் காணமுடியும். சில இடங்களில் விலங்குகள்/மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகின்றது.

நான் மச்சுபிச்சு சென்றதற்கு முதல்நாள் மழை தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்ததாகவும், இடங்களை நிதானமாகப் பார்க்கவோ, மலையில் ஏறமுடியவோ இல்லையெனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக நான் போனபோது மச்சுபிச்சுவில் நன்றாக வெயில் காய்ந்துகொண்டிருந்தது. மலையேறல் கூட மிகுந்த தாகத்துடனேயே நிகழ்ந்தது. எனினும் மாலையானபோது மழை எங்கிருந்து ஒளிந்து வந்ததென அறியமுடியாது பெரும்பாட்டமாய் பொழியத்தொடங்கியது. ஒரேநாளில் வெவ்வேறான இரண்டு காலநிலைகளை மச்சுபிச்சுவில் அனுபவிப்பது என்பது கூட ஒருவகையான ஆசிர்வாதமெனத்தான் சொல்லவேண்டும்.


3.jpg

இப்போதிருக்கும் மச்சுபிச்சுவும் அதன் அழகிய சுற்றுப்புறங்களும் இப்படியே தொடர்ந்து இருக்குமெனவும் சொல்லமுடியாது. ஒவ்வொரு வருடமும் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தனியார் நிறுவனங்களும் இவ்வாறான சுற்றுலாப் பயணிகளுக்குச் சொகுசான வசதிகளைச் செய்வதற்கென மச்சுபிச்சுவை அண்மித்து கட்டங்களையும் அமைக்கவும், காடுகளை அழிக்கவும் தொடங்கி விட்டிருக்கின்றனர். காலம் என்பதும் இன்னொரு பெரும் விடயமாக மச்சுபிச்சுவின் மீது கவிழ்ந்து அதன் அழகை மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கி இருக்கின்றது. இவ்வாறுதான் உலகின் புதிய அதிசயங்களில் ஒன்றாக மச்சுபிச்சுவைப் போல மெக்ஸிக்கோவில் இருக்கும் ஸெசென் இட்ஸாவிற்கு (Chetzen Itza)போனபோதும் நிகழ்ந்தது. சில காலங்களுக்கு முன்வரை அந்த பிரமிட்டில் ஏறிப்பார்ப்பது எல்லோருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அது அழிவை நோக்கிச் செல்வதால் எவருக்கும் ஏறிச்செல்வதற்கு அனுமதியில்லை. வெளியில் நின்றே அதைச் சுற்றிப் பார்க்க முடியும்.



 

மச்சு பிச்சுவே ஒரு மலையிலிருக்கின்றதென்றால், குஸ்கோ நகரம் அதைவிட இன்னும் கடல்மட்டத்திலிருந்து 3400 மீற்றர் உயரத்திலிருக்கின்றது. ஆகவே நிறையப்பேருக்கு உயரங்காரணமாய் தலையிடி, தலைப்பாரம் போன்றவை சாதாரணமாகவே வந்துவிடும். குஸ்கோ நகரே ஸ்பானியர்களால் கடைசியாகக் கைப்பற்றப்பட்ட நகரம். இங்கேதான் இன்கா மக்கள் மிகுந்த வலிமையுடனும் பெரும் எண்ணிகையுடனும் இருந்தவர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாய் ஸ்பானியர்களுடன் பல்வேறு வழிகளில் அவர்கள் சண்டைபிடித்திருக்கின்றனர்.

இப்போது சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துவழியும் சதுக்கத்திலேயே (Plaza De Armas) இன்காவினது இறுதி அரசன் ஸ்பானியர்களால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார். மியூசியம் ஒன்றிரண்டை கிடைத்த சந்தர்ப்பத்தில் பார்த்தபோது, ஸ்பானியர்கள் இன்கா மக்களைப் பிடித்து சித்திரவதை செய்த முறைகள் நாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை. ஒரு சித்திரத்தில் ஒருவரை கை, கால் என நான்கு பக்கங்களும் கயிற்றால் கட்டி ஒவ்வொரு திசையிலிருந்து குதிரையால் இழுத்துத் தண்டணை கொடுத்திருப்பதாய்க் காட்சிப்படுத்தியிருப்பார்கள். வெற்றி மிகுந்த சரித்திரம் எனச் சொல்லப்பட்ட அனைத்தின் பின்னாலும் எஞ்சியிருப்பவை கண்ணீரும் குருதியும் தானல்லவா?




4.jpg

ஏற்கனவே உயரத்தில் அமைந்திருக்கும் நகரில் இன்னும் உயரமான ஒரு மலையில் இந்த வெள்ளை இயேசு காட்சியளிக்கின்றார். 26 அடி உயரமான சிலை எனச் சொல்லப்படுகின்றது. இந்த இயேசு பிரேசிலிருக்கும் பிரபல்யமான ' Christ the Redeemer' சிலையை மாடலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உயரமான வெள்ளை யேசு அமைக்கப்பட்ட வரலாறுதான் சுவாரசியமானது. இது இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது, அடைக்கலந்தேடி வந்த பாலஸ்தீனியர்களால், தமக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றிக்கடனாய் அவர்கள் பெரு மக்களுக்காய் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

பயணங்களில் நாம் பார்க்கும் இடங்களை விட சந்திக்கும் அனுபவங்களே பிறகு ஆறுதலாக இருந்து அசைபோடும்போது முக்கியமானதாக ஆகிவிடுகின்றன. மேலும் மச்சு பிச்சு போன்ற மிகப் பிரசித்திபெற்ற இடத்தை புகைப்படங்களாலும், காணொளிகளாலும் பார்த்தபிறகு நேரில் பார்க்கும்போது அவ்வளவு பெரிய மனவெழுச்சியைத் தராமல் கூடப்போகலாம். எனினும் மச்சு பிச்சுவிற்குச் செல்லும்போது ஒவ்வொருவரின் அனுபவங்களும் தனித்துவமாக இருக்கவே செய்யும். அவ்வாறான தனித்த அனுபவங்களும், இன்காக்களின் பெரும் சரித்திரத்தின் சிதைவுகளை எங்கும் காணக்கூடிய குஸ்கோ, ஒலியாண்டேதம்பே போன்ற நகரங்களில் நின்று தரிசித்த காட்சிகளுமே நீண்ட காலத்திற்கு மனதிற்குள் சேகரமாய்த் தங்கும் போலத் தோன்றுகின்றது.

(‘அம்ருதா’ மாசி இதழிலும், சுருங்கிய வடிவம் இந்தவார (மாசி, 17) ‘தீபம்’ பத்திரிகையிலும் வெளிவந்தது)

http://djthamilan.blogspot.co.uk/2016/04/blog-post_49.html

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி...கிருபன்!

எனது மகள் இந்த வருஷ ஆரம்பத்தில் போய் வந்தாள்!

மச்சு பிச்சுவைப் பற்றி நிறைய அறிய முடிந்தது!

மனிதப் பலிபீடங்கள் சிலவற்றைக் கண்டதாக அவள் கூறிய ஞாபகம்!

ஏதாவது புத்தகம் வாங்கி விபரமாக வாசிக்க ஆசை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. புங்கை அண்ணா. உங்கள் மகளுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது!

நான் புதிய தொழில்நுட்பக் கருவி  VR gadget ஐப் பாவித்து இப்படியான இடங்களைப் பார்க்கலாம் என்றுள்ளேன் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Temple of the Sun or Torreon

800px-Machupicchu_intihuatana.JPG

 

Inti Watana is believed to have been designed as an astronomic clock or calendar by the Incas

800px-Intihuatana_Solar_Clock.jpg

Interior of an Inca building, featuring trapezoidal windows

1024px-124_-_Machu_Picchu_-_Juin_2009.jp

Funerary Stone in upper cemetery

1024px-Funerary_Stone_in_Machu_Picchu.jp

1920px-104_-_Machu_Picchu_-_Juin_2009.jp

1920px-95_-_Machu_Picchu_-_Juin_2009.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இன்கா வம்ச 7 ஆவது மனனால் கட்டபட்டது தான் இந்த மாச்சு பிச்சு.

இந்த மாச்சு பிச்சு இன்காக்களின் கோடைக்கால வாசஸ்தலமாக இருந்தது.

15ம் நூறாண்டில், ஸ்பானிய பிரான்சிஸ்கோ பிசாறியோ இன்னோர் கடலோடி அமாருவுடன் சேர்ந்து புதிய உலகைக் காண, தங்கம் தோண்ட கிளம்பினார். தென் அமரிக்கா போய்ச் சேர்ந்தார்.

அப்போது இன்கா வம்சத்தினுள் ஒரு வாரிசு சண்டை காரணமாக தமக்குள் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருத்து தப்பி வந்த 3 இன்கா இளஞர்கள் பிசாறியோவை சந்தித்தார்கள்.

அவர்கள் மூலம் இன்கா ஆட்சியாளர்களிடம் பெரும் தங்கம் உள்ளது எனபதனையும், அந்த ஆட்சியாளர்கள் தமது கடவுள், வெள்ளையாக, வெள்ளை தாடியுடன், வெள்ளைக் குதிரையில் வரக்  கூடியவர் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் என்று அறிந்து கொண்டனர்.

வெறும் 19 பேருடன் பிசாறியோ வெள்ளை தாடியுடன், வெள்ளைக் குதிரையில் வந்து, பெரும் பலம் கொண்டிருந்த அரசரை மடக்கி, அறை நிறைந்த தங்கத்தினைப் இறை காணிக்கையாக பெற்று, அரசன் மூலமாக, வஞ்சகமாக அரசாட்சியையும், அருள் பொழியும் அந்த இறைவனுக்கு கொடுக்க வைத்து, அரசனானதும் அந்த அரசனை, கழுத்தினை நெரித்து கொலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தான்.

விரைவாக, அவனுக்கும், அமரோவுக்கும் பிரச்னை வர, அமாரோ கொல்லப்பட்டான்.

ஸ்பெயினில் வறிய குடும்பத்தில் இருந்து வந்த பிசாறியோ போலன்றி, அமாரோ வசதியான குடுப்பதில் இருந்து வந்தவர். அமாரோ, பிசாறியோவினால் கொல்லப் பட்டதனை, மானப் பிரச்சனையாக எடுத்த, அவனது குடும்பம், இரகசியமாக ஆக்களை அனுப்பி, பிசாறியோவை போட்டுத் தள்ளியது.

ஆக கடவுள் என்ற பெயரில் செய்த பெரும் நம்பிக்கை துரோகத்தினால் கிடைத்த சாபத்தினாலே, இருவரும் அழிந்தார்கள் என்று சொல்லலப் படுகின்றது.

பிசாறியோ ஒரு போதுமே மச்சுப் பிச்சு போக வில்லை.

1902ம் ஆண்டு ஒரு அமெரிகரினாலேயே இந்த மச்சுப் பிச்சு கண்டு பிடிக்கப் பட்டது.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைப்பைப் பார்த்து விட்டு யாரோ எழுதிய புத்தகம் என்று நினைத்து விட்டேன்.இணைப்பிற்கு நன்றி கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.