Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்

நிர்மானுசன் பாலசுந்தரம்

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்
 

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு

சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒற்றையாட்சியை மையப்படுத்திய சிறிலங்காவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை, 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' தோற்றத்திற்கும் அதன் வழிவந்த தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைகளுக்கும் வித்திட்டது.

1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை, பௌத்த மதத்துக்கு அதிமுக்கியத்துவம், சிங்களம் மட்டுமே அரசகரும மொழி போன்ற விடயங்களுக்கு சிங்கள பௌத்த மேலாதிக்க மனப்பாங்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதனால், 1972ம் ஆண்டு அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளிலிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஏனெனில், குறித்த நகர்வானது, தமிழ் மொழியை, தமிழர்களின் இறைமையை, சுதந்திரத்தை, கௌரவத்தை பேராபத்துக்குள் தள்ளுவதோடு, இலங்கைத் தீவில் வழக்கத்திலுள்ள பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களையும், இனக்குழுமங்களையும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இதனை எதிர்கொள்ளும் முகமாக, தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் ஆகிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கின. இதுவே, 1975ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக மாற்றம் பெற்றது.

தமிழர் தேசத்தின் இறைமையை நிலைநிறுத்தி, தமிழர்களின் மரபுவழித் தாயகத்தையும், பண்பாட்டையும் பாதுகாத்து, தமது நிலப்பரப்பில் தம்மைத் தாமே ஆட்சிசெய்து, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனித்துவமான தேசமாக மிளிரும் சுதந்திர வேட்கையோடு, 14 மே 1976 அன்று, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டது. தமிழர்களின் சுதந்திரத்தையும் இறைமையையும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தும் பொருட்டு சிறிலங்காவின் 1972 அரசியலமைப்பை 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிராகரித்தது.   

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வந்த தந்தை செல்வாவே, இறுதியில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கு அடித்தளமிட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

இணைந்து வாழமுடியாது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்

அழகிய இலங்கைத் தீவில் வாழும் இனங்கள் அனைத்தும் ஐக்கியமாக ஆனந்தமாக வாழ வேண்டும் என முதலில் சிந்தித்து செயற்பட்டவர்கள் தமிழ்த் தலைவர்கள். ஆனால், காலத்திற்கு காலம் அந்த முயற்சிகளை சிங்களத் தலைவர்கள் பலவீனப்படுத்தினார்கள். அவற்றில் முக்கியமான சம்பவங்கள் சில கீழே.

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்

இந்து-பௌத்த கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான ஒரு நிதியம் சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களால் 1890 அளவில் தொடங்கப்பட்டது. இருப்பினும், பௌத்த தலைவர்களிடம் காணப்பட்ட பௌத்த மேலாதிக்கப் போக்கு, இந்துக்களுடன் இணைந்து பௌத்த கல்லூரிகளை அமைக்கும் சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களின் திட்டத்துக்கு முரணாக விளங்கியது. பௌத்த மேலாதிக்க மனப்பாங்கு சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களின் 'இரு மத கூட்டுக் கனவை' கலைத்தது. இதன் வெளிப்பாடே, யாழ்ப்பாணத்தில் இராமநாதன் கல்லூரி மற்றும் பரமேஸ்வராக் கல்லூரி போன்றவை தோற்றம்பெற வழிவகுத்தது.   

பல்லினத்தன்மை கொண்ட ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை ஆரம்பித்து, அதற்காக முதன்முதலாக பணியாற்றியவர்கள் தமிழர்கள். இதன் அடிப்படையிலேயே 11 டிசம்பர் 1919 இலங்கை தேசிய கொங்கிரஸ் (Ceylon National Congress) சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆயினும், பல்லினங்களைக் கொண்ட ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்வுவதற்கு சிங்களத்தின் மகாவம்ச மனப்பாங்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. பல்லின அடையாளங்களை அங்கீகரிக்காத சிங்கள மேலாதிக்க சிந்தனை, தமிழர்கள் தமது தனித்துவ அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற சிந்திப்புக்கு வித்திட்டது எனலாம். இதன் அங்கமாக, இலங்கை தேசிய கொங்கிரஸிலிருந்து வெளியேறிய சேர்.பொன்.அருணாச்சலம் அவர்கள் தமிழர் மகாசபையை உருவாக்கினார். 

6 செம்டெம்பர் 1946ல் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் எஸ்.நடேசன் மற்றும் வீ.குமாரசுவாமி போன்ற தமிழ்த் தலைவர்களும் ஆரம்ப உறுப்பினர்களாக திகழ்ந்தனர். ஆயினும், 1955 களனியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில், தனிச் சிங்கள சட்டத்துக்கு ஆதரவான சிங்களத் தலைவர்களின் சிங்கள மொழி மேலாதிக்க நிலைப்பாடு, பல தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது.

18 டிசம்பர் 1935ல் லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, காராளசிங்கம், நாகலிங்கம் மற்றும் சிற்றம்பலம் போன்ற தமிழ் தலைவர்கள் அதில் அங்கம் வகித்திருந்தார். ஆயினும், லங்கா சமசமாஜக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 1966ல் நடாத்திய மேதின பேரணியில், தமிழர்களின் உணர்வை, உணவை, பண்பாட்டை இழிவுபடுத்துவது போல் எழுப்பிய 'தோசை, மசாலா வடை எங்களுக்கு வேண்டாம்' என்ற கோசம் பல்பண்பாடுகளின் கூட்டாக இலங்கை கட்டியெழுப்பப்படலாம் என்ற கனவை கலைத்தது.

இன்றும் இடதுசாரி சிந்தனையை கொண்டதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணி (Janatha Vimukthi Peramuna- J.V.P -ஜே.வி.பி) அடிப்டையில் ஓர் இனவாதக்கட்சி. இவர்களுக்கும் பிரதான அரசியல் கட்சிகளுக்கும், ஏனைய சிங்கள இடதுசாரி கட்சிகளுக்கும் இடையில் பாரிய கொள்கை வேறுபாடில்லை என்பதை எடுத்துக்காட்டும் சம்பவம், வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சரியாக பதினொரு வருடங்களுக்கு முன்னர், அதாவது 14 மே 1965ல் இடம்பெற்றது. இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைவராக நா.சண்முகதாசன் அவர்கள் விளங்கினார். இந்தக் கட்சியில் பெருமளவான சிங்களவர்கள் அங்கம் வகித்ததோடு, இளைஞர் அணியின் தலைவராக ரோகண விஜேயவீர செயற்பட்டார். ஒரு கட்டத்தில், தமிழர் ஒருவரை தலைவராகக் கொண்டு தாம் செயற்படமுடியாது எனக் கூறிய ரோகண விஜேயவீர, இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியை, கட்சியிலிருந்து பிரித்தெடுத்து, சிங்களவர்களை மட்டும் கொண்ட கட்சியை 14 மே 1965ல் உருவாக்கினார். அந்தக் கட்சியே இன்று ஜே.வி.பி என அறியப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆகும்.

பல் மொழி, பல் பண்பாடு, பல்லின மத அடையாளங்களைக் கொண்டவர்கள் கூட்டிணைந்து வாழலாம் என்ற தமிழ்த் தலைவர்களின் சிந்தனையை, நம்பிக்கையை, முயற்சிகளை சிதைத்தவர்கள் சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட சிங்களத் தலைவர்களே என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளே மேற்காணப்படுபவை. இத்தகைய நிகழ்வுகள், தமிழர் தேசம் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு தூபமிட்டது.

அவதாரங்களும் மௌனங்களும்

'1972ம் ஆண்டு அரசியலமைப்பு' தமிழர் தேசத்தில் சமகாலத்தில் இரு குழந்தைகள் அவதரிப்பதற்கு காரணமாக அமைந்தது. அந்த இரு குழந்தைகளினதும் கருவும் அது சார்ந்த இலக்கும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தது. ஆனால், அதனை அடைவதற்கான அணுகுமுறைகள் மாறுபட்டது.  

ஒரு அணுகுமுறையின் அடிப்படையில், அமைதி வழியில், தமக்கான வாழ்வை தாமே நிர்ணயிப்பதற்கு தமிழர்கள் முயன்றார்கள். இணைந்து வாழ்வதற்கு இசைந்து வராத சிங்கள தேசம், தமிழர் தேசம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கும் தடைக்கல்லாக மாறியது. தமிழர்களின் சேர்ந்து வாழ்வதற்கான முன்னெடுப்புகளோ, அமைதி வழியிலான போராட்டங்களோ, தமிழின அழிப்பின் அங்கமான அடையாள அழிப்பையோ, சித்தாந்த சிதைப்பையோ தடுத்து நிறுத்தவில்லை. அத்துடன், சிங்கள தேசத்தின் தமிழர்களுக்கு எதிரான அநீதியும், அடக்குமுறையும், இனஅழிப்பும் தொடர்ந்தது. சிங்கள தேசத்தின் ஆட்சிகளும் காட்சிகளும் மாறின. ஆயினும், தமிழர்களுக்கு எதிரான உரிமை மறுப்பும், இன அழிப்பும் தொடர்ந்தது. இத்தகைய நிலை தொடர்வதை தடுத்து நிறுத்த முடியாத சூழலில், தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிய தந்தை செல்வா மௌனமானார். இதன்பின்னர், தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும், இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும் வரை அஞ்சாது போரிடும்படியும் தமிழ் தேசிய இனத்துக்கு, குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தலைவர்கள் தடுமாறவும் தடம் மாறவும் தொடங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றது. காலப்போக்கில் தடம் மாறிய அரசியற் தலைவர்களைப் போலவே, ஆயுதம் ஏந்திப் போராடிய சில தமிழ் அமைப்புகளும் தடுமாறி இலக்கையும் மாற்றின. சிலர் அமைதியாகினார்கள். சிலர் அமைதியாக்கப்பட்டார்கள். விமர்சனங்களுக்கு அப்பால், ஆரம்பம் தொடக்கம் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவிக்கும் வரை, தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்கு அமைவாக தமிழீழத் தனியரசு அமைப்பதற்கான போராட்டத்தை விட்டுக்கொடுப்பின்றி தொடர்ந்தார்கள்.  

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய நடைமுறை அரசு செயற்திறன் மிக்கதாக இருக்கும் வரை, சிங்கள குடியேற்றங்களின் பரவுதலை தடுத்தது. சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியது.

ஒரு தேசத்தின் இருப்பை வெளிப்படுத்தும், மொழி, நிலம், பண்பாடு, வரலாறு, அடையாளங்கள் போன்றவை பேணிப் பாதுகாக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு, தமிழர்கள் ஒரு தேசம் என்ற கோட்பாட்டிலும் பார்க்க, மகிந்த ராஜபக்ச அவர்கள் தீவிரப்படுத்திய, சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் 'ஒரே நாடு, ஒரே தேசம்' என்ற கோட்பாடு வலுவடையத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முகமாக, 19 மே 2009 அன்று சிறிலங்கா நாடாளுமன்றில் மகிந்த உரையாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்று சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் ஆற்றப்பட்ட அவ்வுரையில், 'இது எங்கள் நாடு. இது எங்கள் தாய் நாடு. நாங்கள் ஒரு தாயின் பிள்ளைகள் போல இந்த நாட்டில் வாழவேண்டும். தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என்றோ, பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனம் என்றோ இனி இந்த நாட்டில் யாரும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரே தேசமாக, 182 அரசர்கள் 2500 ஆண்டுகளாக ஆண்ட இந்த நாட்டை தொடர்ந்தும் ஓரே தேசமாக நிர்வகிப்பேன் என்ற தொனியில் மகிந்தவின் உரையமைந்திருந்தது.  இது, தமிழர்களது தனித்துவத்தை மட்டுமல்ல இலங்கைத் தீவின் பல்லினத்தன்மை மறுக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டியது. 

இதன் பிற்பாடு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 60ஆவது ஆண்டு விழா அலரி மாளிகையில் செப்டெம்பர் 2011 இடம்பெற்றபோது, அங்கு உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, இலங்கை என்பது ஒரு தேசம். இது பிளபுபடுவதற்கு எந்தக்கட்டத்திலும் அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறி, தமிழர்களுக்கென்று ஒரு தேசம் மலர்வதை மறுதலித்தார். 

தற்போது மகிந்தவின் ஆட்சியும் இல்லை. அவரது நிர்வாகமும் இல்லை. ஆனால், மகிந்த எதனை முன்மொழிந்தாரோ, மகிந்த எதனைப் பலப்படுத்தவும் பாதுகாக்கவும் முற்பட்டாரோ, அதனையே மைத்திரி-ரணில் அரசாங்கமும் வெவ்வேறு வடிவங்களில், பல்வேறு அணுகுமுறைகள் ஊடாக அமுல்படுத்தி வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேசம்' என்ற இனவழிப்பின் அங்கமான பொதுமைப்படுத்தல் ஊடாக, அடையாள அழிப்பு மிக நுட்பமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவ சோதனைச் சாவடியில் தொடங்கி சிறிலங்கா கிரிக்கெட் வரை வியாபித்துள்ளது.

1974 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை தீவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றிய பேராளர்களுக்கு, தந்தை செல்வா மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தேசத்தின் இனவழிப்பு தொடர்பாக அந்த மனுவிலே குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கள தலைவர்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. அது, இரு இனங்கள், இரு மொழி, பல மதங்களை கொண்ட இலங்கைத் தீவை, ஒரு இனம் - சிங்கள இனம், ஒரு மொழி -சிங்கள மொழி மற்றும் பௌத்தம் மட்டும் கொண்ட ஒரு தேசமாக மாற்றியமைப்பது எனக் குறித்த மனுவிலே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலை அல்லது இதனையும் விட மோசமான நிலைதான் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னும் தொடர்கிறது. தமிழின அழிப்பையும், தமிழர்களுக்கான உரிமை மறுப்பையும் தொடரும் சிங்கள தேசம், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  

இந்த நிலையிலேயே, சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஒற்றையாட்சியை மையப்படுத்திய 1972 அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, தமிழர்களுடைய சுதந்திரமும் இறைமையும் நெருக்கடிக்குள்ளானதால், அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து தமிழ்த் தலைவர்கள் வெளிநடப்புச் செய்தார்கள். மக்கள் நலனை மையப்படுத்திய கொள்கையின் அடிப்படையிலே தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்கள். அது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரசவத்திற்கு வழியமைத்தது. 

அமைதிவழியில் போராடியவர்களால் சாதிக்க முடியாமல் போனாலும் ஒரு வழித்தடத்தை உருவாக்கினார்கள். வெற்றிபெற முடியாவிட்டாலும் நாற்பது வருடங்களாக பிரவகிக்கக்கூடிய சுதந்திரச் சுடரை பற்றவைத்து விட்டுச் சென்றார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு செயல் வடிவம் கொடுக்க ஆயுதரீதியில் போராடியவர்களோ தாம் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக வாழ்ந்தார்கள். ஒரு வரலாற்றை எழுதிவிட்டு தமது வாழ்வை அர்ப்பணித்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலுப்படுத்தும் சிதைக்க கடினமான சித்தாந்தத்தை விதைத்து விட்டு வீழ்ந்தார்கள்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நாற்பதாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள சமகாலத்திலேயே, சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு உருவாக்கமும் இடம்பெற்று வருகிறது. இனக்குழும மோதுகை தோற்றம்பெற காரணமாக இருந்த எந்தப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு இதுவரை காணப்படவில்லை. அல்லது இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்ற இதயசுத்தியைக் கூட சிங்கள தேசம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. மாறாக, பன்னெடுங்காலமாக தொடரும் தமிழின அழிப்பு செயற்திட்டங்களை நாசூக்கான முறையில் நகர்த்திக்கொண்டு போகிறது. சிங்கள தேசம் நீதியை, நியாயமான அரசியல் தீர்வை 2016ல் மட்டுமல்ல இன்னும் நாற்பது வருடங்களிலும் தமிழர் தேசத்திற்க்கு வழங்கப் போவதில்லை என்பதை மாறுபடாத அவர்களின் நோக்கமும் புதுவடிவமெடுத்துவரும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.   

இதேவேளை, வட்டுக்கோட்டை தீர்மானம் செயல்வடிவம் எடுத்து வெற்றிபெறுவதற்கான உள்ளக, வெளியக சூழல்கள் தற்போது இல்லாமல் விட்டாலும், எப்போதும் இல்லையென்று கூறமுடியாது. அத்துடன், அதற்கான தேவை முன்னரைவிடவும் அதிகரித்து காணப்படுகிறது.

மாற்றங்களை உண்டுபண்ணுபவர்களாக நாங்கள் மாறாத வரை, எங்களுக்கான மாற்றங்கள் உருவாகப்போவதில்லை. ஆகவே, மாற்றங்களுக்கான மாற்றங்கள் எங்கள் ஒவ்வொருவருடைய மனநிலையிலிருந்தும், செயற்பாட்டிலிருந்தும் ஊற்றெடுக்கட்டும்.

ஏனெனில், நாங்கள் உருவாக்கும் மாற்றங்களே எமக்கான காலங்களை உருவாக்கும். அத்தகைய காலங்களாலேயே, எமது மக்களுக்கான வாழ்வையும், அவர்களுக்கான எதிர்காலத்தையும் நிர்ணயிக்க முடியும். 

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=36ca1cc2-c068-44b7-8ae0-791f0611b2cc

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இந்த தீர்மானமெல்லாம்...இதெல்லாம் பழசு என்று சம் சொல்லிட்டரெல்ல...பிறகு நீங்க இதுக்குப்போய்....இந்த தீர்மான நேரமே அய்யா விசிலடிச்சன்  வயது.....இப்ப அனுபவம் வந்திட்டுது..காசும் வந்திட்டுது....கிட்டடியிலை மோடியையும் சந்திச்சிட்டார்.....நீங்கள் அவரை குழப்ப வேண்டாம்..

Edited by alvayan
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.