Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாலாவ ஆயுத களஞ்சியசாலை: தானாக வெடித்ததா? திட்டமிடப்பட்ட வெடிப்பா?

Featured Replies

சாலாவ ஆயுத களஞ்சியசாலை: தானாக வெடித்ததா? திட்டமிடப்பட்ட வெடிப்பா?
 

article_1465447648-camp.jpg

-மேனகா மூக்காண்டி

பல்குழல் பீரங்கிகள்;, மோட்டார் குண்டுகள், ஆட்லறிகள், வான் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களைக் கேட்டு, பதுங்கு குழிகளில் மக்கள் பதுங்கிய காலமொன்று, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முந்திய மூன்று தசாப்தக்காலத்தில் இருந்தது. அவ்வாறான நிலைமையை, தெற்கைச் சேர்ந்த மக்கள் முதன்முறையாக எதிர்நோக்கிய சம்பவமொன்று, கடந்த ஞாயிறன்று (05) இடம்பெற்றது.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்ற கோஷம், இதுவரை காலமும், வடக்கிலிருந்தே ஒலித்துக்கொண்டிருந்தது. முதன்முறையாக இந்தக் கோஷமும், தெற்கிலிருந்து கேட்கத் தொடங்கியுள்ளது. 'தனக்கு வந்தால் தெரியும், தலைவலியும் காய்ச்சலும் ' என்ற பழமொழிக்கிணங்க, வடக்கு - கிழக்கு மக்கள் எதிர்நோக்கிய இன்னல்களை, தெற்கைச் சேர்ந்தவர்களும் அனுபவித்து, எம்மக்களின் துயரின் அகோரத்தை உணரும் வாய்ப்பை, அன்றைய சம்பவம் வழங்கியதென்றே கூறவேண்டும்.

அதற்காக, மக்கள் எதிர்நோக்கிய துயரத்தை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. இழப்பு என்பது எவருக்கும் பொதுவானதே. அது, வடக்குக்கும் சரி, தெற்குக்கும் சரி எல்லா மக்களுக்கும் பொதுவானதே. அதனை உணராமல், இதுவரை காலமும் சில இனவாதிகள் முன்னெடுத்துவந்த நடவடிக்கைகளால் இன்னமும் பாதிக்கப்பட்டு வருவது எம்மக்களே. அவிசாவளை, கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5.45 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டது.

இந்தத் தீ, அம்முகாமிலிருந்த ஆயுதக் களஞ்சியசாலையில் பரவியதை அடுத்து, அங்கிருந்த துப்பாக்கி ரவைகள், ஆட்லறிகள், மோட்டார் குண்டுகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் என்பன வெடித்துச் சிதறியதுடன், அவை பல கிலோமீற்றர்கள் தொலைவுக்கு  தூக்கியெறியப்பட்டு, வீடுகள், கடைகள் மற்றும் வைத்தியசாலை என்பவற்றை சேதப்படுத்தின. குறித்த முகாமிலிருந்து பாரிய சத்தங்களுடன் புகைமண்டலமொன்று வெளியேறியதை அடுத்து, அப்பிரதேசத்தை அண்மித்த மக்கள் அனைவரும், தங்களது இருப்பிடங்களை விட்டுவிட்டு ஓட்டமெடுக்கத் தொடங்கினர். வெடிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்தே, அப்பிரதேசத்தை அண்மித்த, சுமார் 5 கிலோமீற்றர் தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வெளியேறுமாறு பொலிஸாரும் இராணுவத்தினரும் அறிவித்துள்ளனர். அவ்வறிவிப்பு விடப்படுவதற்கு முன்னரே, அப்பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவான மக்கள், ஏற்கெனவே வெளியேறியிருந்தனர்.

மாலை 5.45 மணிக்கு ஏற்பட்ட தீ, முகாமிலிருந்த ஆயுதக் களஞ்சியசாலையில் பரவியதை அடுத்து, அங்கிருந்த சில ஆயுதங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. பின்னர், அங்கிருந்த பாதாள ஆயுதக் கிடங்கையும் அந்தத் தீ ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பாரிய ஆயுதங்களும் வெடிப்புக்குள்ளாகி, தூக்கியெறியப்பட்டுள்ளன. இந்த பாதாள ஆயுதக்கிடங்கானது, மாலை 6.30 மணியளவிலேயே வெடிக்கத் தொடங்கியுள்ளதென்று தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் இருப்பது, இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியசாலையாகும். இதுவே, இராணுவத்தினரின் பிரதான ஆயுதப் பரிமாற்று நிலையமாகவும் இதுவரை காலமும் இருந்துவந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளில் அதாவது, ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே, மேற்படி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு - அவிசாவளை ஹைலெவல் வீதியில், கொழும்பு தலைநகரிலிருந்து 35 கிலோமீற்றர் தூரத்திலேயே இம்முகாம் அமையப்பெற்றது. பொதுமக்கள் குடியிருக்கும் பிரதேசத்தில் இவ்வாறான ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நிறுவுவது, அப்பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், அதனால் அம்முகாமை, அங்கிருந்து அகற்றி, மக்கள் நடமாட்டமற்ற வேறொரு இடத்தில் நிறுவுமாறு, அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தினேஸ் குணவர்தன மற்றும் பந்துல குணவர்தன ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அப்போதைய அரசாங்கத்துக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர். இருப்பினும், அவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே, மேற்படி முகாம் நிர்மாணிக்கப்பட்டு, பிரதான ஆயுத களஞ்சியசாலையும் அங்கு நிறுவப்பட்டது.

யுத்தம் நிலவிய காலப்பகுதியில், அப்போதைய அரசாங்கங்களால், மேற்படி முகாம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு வந்தது. அதற்கு வழங்கக்கூடிய அனைத்துவித பாதுகாப்புகளும் உரிய முறையில் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், அம்முகாமிலிருந்த ஆயுதங்களை படிப்படையாக வேறு இடங்களுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அங்கிருந்த குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும், வேயங்கொடை இராணுவ முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் மேலும் சிலவற்றை, பயிற்சிகளுக்காக தியத்தலாவை மற்றும் மாதுறுஓயா போன்ற முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய ரவைகள், ஆட்லறிகள், மோட்டார் குண்டுகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் என்பவற்றை, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது, ஓயாமடு, ரம்பேவ போன்ற பிரதேசங்களில் பிரதான ஆயுதக் களஞ்சியசாலைகளை அமைத்து, அங்கு களஞ்சியப்படுத்தி வைக்க திட்டமிடப்பட்டப் போதிலும், அவரது ஆட்சிக்காலம் முடிவடையும் வரையில் அம்முயற்சி நிறைவேறவில்லை. தன்னுடைய ஆட்சியின் போது, சாலாவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அது தொடர்பில் கவனிக்கத் தவறிவிட்டதென்றும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மஹிந்தரால் தெரிவிக்கப்பட்ட அந்தக் கருத்து தொடர்பில், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்ட போது, 'அப்படியொரு விசயம் சம்பந்தமா என்னிடம் எந்தவொரு ஆவணமும் வரயில்லை ஹெட்டியாரச்சி, அப்படி அந்த முகாமை இடமாற்றுவது சம்பந்தமா எனக்கு யாராவது சொல்லியிருந்தாக்கூட, அதுக்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பேன் தானே. இல்லைனா, உங்களுக்காவது அந்த வேலையை ஒப்படைச்சிருப்பன் தானே' என்று சொன்னாராம். ஆக மொத்தத்தில், மஹிந்தவின் முகாம் அகற்றல் தொடர்பான தீர்மானம், மஹிந்தவுக்கு மாத்திரமே தெரிந்திருக்கிறது போலும்.

எவ்வாறாயினும், குறித்த முகாமில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, அம்முகாமுக்குள் சென்று சோதனைகளை நடத்த, உரிய தரப்பினருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. முகாம் பூமிக்குள் இருந்த அனைத்துக் கட்டடங்களும் தீயில் எரிந்து சாம்பராகியிருந்தன. அங்கிருந்த நீர்த்தாங்கி மாத்திரமே, இருந்த மாதிரியே, இன்னமும் தோற்றமளிக்கிறது. இந்த வெடிப்புச் சம்பவத்தால், ஏற்பட்ட இழப்பு தொடர்பான சரியான தகவல்களை இதுவரையில் வழங்க முடியவில்லை என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அது ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என அண்ணளவாகக் கூறமுடியும் என சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், அந்தளவுக்கு இழப்பு ஏற்படும் வகையிலான ஆயுதங்கள் அங்கு காணப்படவில்லை என்றே பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவத்தின் மேற்குப் பிரிவுக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, '2016ஆம் ஆண்டின் இறுதியில், சாலாவ இராணுவ முகாமை அங்கிருந்து அகற்றவே தீர்மானித்திருந்தோம். அதனால், அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பவற்றை படிப்படையாக, வேறு இடங்களுக்கு கொண்டுசென்றுள்ளோம். அதனால், மேற்படி வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது, அந்த முகாம் களஞ்சியசாலையில், 10 சதவீதமான ஆயுதங்களே காணப்பட்டன. 10 சதவீதம் என்பது, மிகக் குறைந்த தொகை ஆயுதங்களேயாகும்' என்றார்.

'சில வேளைகளில், ஏனைய 90 சதவீதமான ஆயுதங்களும் அம்முகாமில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தால், ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவு மிகப்பெரியது. ஆனால், அவ்வாறானதொரு அழிவு ஏற்படாதிருக்கும் வகையில், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை அதிர்ஷ்டவசமாகும். மேற்படி முகாமில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும், உலகத் தரத்திலேயே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அதனாலேயே, அங்கிருந்த ஆயுதங்கள் வெடிப்புக்குள்ளானதால் ஏற்பட்ட இழப்புக்களின் அளவும் குறிப்பிடத்தக்களவில் காணப்பட்டது. எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவது வழமை. இலங்கையைப் பொறுத்தரையில், இது முதல் தடவையல்ல. முகாமுக்குள் தீ ஏற்படக் காரணம் என்ன என்பது தொடர்பில், இதுவரையில் கண்டறியப்படவில்லை. மின் ஒழுக்கு அல்லது மின்னல் தாக்கத்தினால் கூட, தீப்பற்றியிருக்கக்கூடும். சம்பவத்தின் போது, முகாமுக்குள் எவரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்த வீரர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தார்' என்றும் சுதந்த ரணசிங்க கூறினார்.

எது எவ்வாறாயினும், குறித்த முகாமில் வெடிப்புச் சம்பவம் ஏற்படும் போது 600 முதல் 900க்கு இடைப்பட்ட தொகைப் படையினர் அங்கு நிலைகொண்டிருந்ததாகவும், தீ பரவும் போதே, அவர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 19 பெண் வீராங்கனைகள் இருந்ததாகவும் அவர்களே முதலில் வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரியவருகிறது. எனினும், விபத்தின் போது, அங்கு எத்தனைப் படையினர் இருந்தனர் என்பது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிடவில்லை.

இது இவ்வாறிருக்க, விபத்துச் சம்பவம் இடம்பெற்ற தினத்திலும், அதற்கு முந்தைய தினங்களிலும், இவ்வாறான தீ விபத்தொன்று ஏற்பட்டால், அங்கிருந்து தப்புவது எப்படி, தீயைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற பயிற்சியொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பயிற்சியின் போது தவறுதலாக ஏற்பட்ட வெடிப்பொன்றே, இப்பாரிய விபத்துக்கு வித்திட்டது என்றும் தகவல்கள் தெரியவருகின்றன. இந்த தகவல் உண்மை என்ற வகையிலேயே, செவ்வாயன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, பாதுகாப்புச் செயலாளரால் சமிக்ஞையொன்று வழங்கப்பட்டது.  

குறித்த முகாமில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும், உலகத்தரத்தில், சிறந்த தொழில்நுட்பத்துக்கமைவாகவே சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளன. உண்மையில், அங்கு 100 சதவீதமளவான ஆயுதங்களும் இருந்திருந்தால், அவை தொடர்ந்து மூன்று தினங்கள் வெடித்திருக்கும். அதனால், நினைத்துக்கூட பார்க்க முடியாதளவில் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதே உண்மை. யார் செய்த புண்ணியமோ அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தின் போது, பனாகொட இராணுவ முகாமில் அமைந்திருந்த ஆயுத களஞ்சியசாலை, கொஸ்கமவில் அமைந்துள்ள சாலாவ முகாமுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அவருடைய ஆட்சிக்கு பின்னர், ஆட்சியமைத்த மஹிந்தவின் காலத்தின்போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அந்த களஞ்சியசாலையிலிருந்த பாரிய ஆயுதங்களை மாதுருஓயா முகாமுக்கு மாற்றியதுடன், சாலாவ முகாமின் பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது. யுத்தம் நிலவிய காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும், 25 ஆயிரம் தொன் ஆயுதங்கள், மேற்படி களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய கூறியுள்ளார். அதன் பின்னரே, அவற்றில் பலவற்றை வேறு முகாம்களுக்கு கொண்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்தரின் ஆட்சிக் காலத்தின் போது, இராணுவத்தின் ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்த தெரிவு செய்யப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓயாமடு மற்றும் ரம்பேவயின் பளுகஸ்வௌ  ஆகிய பிரதேசங்கள் இரண்டும், மக்கள் நடமாட்டமற்ற, கால்நடை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான பண்ணைக் காணிகளாகும். அங்கு முகாம்களை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட போது தான், ஆட்சி கவிழ்ந்து, நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற்றுள்ளது.  

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகையொன்று காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் கண்டறிவதற்காக, இவ்வாரத்தில், சாலாவ முகாமிலுள்ள ஆயுதங்களை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருந்த போதே, மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனாலேயே, இராணுவத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றுக்கு, என்றுமில்லாதவாறான பொலிஸ் குற்றப்புலனாய்வு விசாரணையொன்றை நடத்த இம்முறை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவல்கள் உண்மையாயின், மேற்படி வெடிப்புச் சம்பவமானது, திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டதாகவே கணிப்பிடப்படுகிறது.  

சாலாவ வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த இராணுவ புலனாய்வுப் பிரிவினரை, அவ்விசாரணையிலிருந்து அரசாங்கம் நீக்கியுள்ளது. இதற்குக் காரணம், மேற்படி சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைக்கும் நோக்கமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆட்லறிகள் போன்ற மிகப் பயங்கரமான ஆயுதங்களே இதன்போது வெடித்துள்ளன. இதனால், அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பனவும் நூற்றுக்கணக்கில் அழிவடைந்துள்ளன. அத்துடன், அப்பிரதேசங்களினது மக்கள் வாழ்க்கை முறையும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றமைக்கான சரியான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இதனை தனிச் சம்பவமாக கணிப்பிட முடியாது.  20 வருடங்களுக்கும் மேற்படி ஆயுதங்கள், மேற்படி முகாமில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. மேற்படி வெடிப்புச் சம்பவத்தின் போது இழக்கப்பட்ட ஆயுதங்கள், கொஞ்சநஞ்சமல்ல. அந்த இழப்பை, ரூபாயினால் மாத்திரம் கணிப்பிடவும் முடியாது. எதிரியொருவர், இவ்வாறான களஞ்சியசாலையொன்றைக் கைப்பற்றினால், அக்களஞ்சியசாலையை அழித்தொழிக்கும் முறைகள், எந்தவொரு முகாமிலும் கையாளப்படும்.

சாலாவ முகாமிலும் அவ்வாறானதொரு சம்பவம்தான் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வியும் தற்போது வலுப்பெற்றுள்ளது. அவ்வாறு இல்லையாயின், சாலாவ களஞ்சியசாலைக்கு ஏற்பட்ட நிலைமை, நாட்டில் வேறு பிரதேசங்களிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலைகளுக்கும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அத்துடன், இது தொடர்பான உண்மைகளை, அரசாங்கமோ பாதுகாப்புத் தரப்பினரோ வெகு விரைவில் வெளியிட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதேவேளை, இவ்வாறான முகாமொன்றுக்கு இரவு - பகல் பாராது, எந்நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறையேனும், சோதனைகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். காலாவதியான ரவைகளை, வேறு இடங்களுக்கு கொண்டுசென்று அழித்திருக்க வேண்டும். மின் ஒழுக்கினால் தீப்பற்றக்கூடிய அபாயம் இருப்பின், அதிலிருந்து பாதுகாக்க, வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான நடைமுறைகளில் சிக்கல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் கண்டறிய வேண்டியது, உரிய அதிகாரிகளதும் விசாரணைக் குழுக்களினதும் பொறுப்பாகும்.

மேலும், 'சாலாவ முகாமில் ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள படை முகாம்களையும் கனிசமானளவில் அகற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கைக்கிணங்க, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைக்கப்பெற்றுள்ள படை முகாம்களை, அம்மக்களின் பாதுகாப்பு கருதி, அங்கிருந்து அகற்றுவதே காலத்துக்கேற்ற நடவடிக்கையாகும். வடக்கு - கிழக்கில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும், மக்கள் வாழாத சூனியப் பிரதேசங்களில் படை முகாம்களை அமைப்பதே சாலச்சிறந்ததாகும். இதனை, இனிவரும் காலங்களிலாவது அரசாங்கங்கள் உணர்ந்து செயற்படுமாயின், சாலாவ முகாமில் ஏற்பட்டதைப்போன்ற அழிவினை, இனிவரும் காலங்களிலேனும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

- See more at: http://www.tamilmirror.lk/174285/ச-ல-வ-ஆய-த-களஞ-ச-யச-ல-த-ன-க-வ-ட-த-தத-த-ட-டம-டப-பட-ட-வ-ட-ப-ப-#sthash.bJipr40R.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.