Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு புத்தகங்கள்

Featured Replies

suha.jpg

மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர்.  தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது  மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும்  ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும்

 

இரண்டு புத்தகங்கள்            

மலையாள மூலம் : அசோகன் செருவில்   தமிழில் : சுகானா

 

மறுநாள் இரவு தான் கொள்ளையிடத் திட்டமிட்டிருந்த வீட்டை வெறுமனே பார்வையிட அவன் சென்றிருந்தான்.

வயதான ஒரு அம்மாச்சியும் தாத்தாவும்மட்டுமே  அந்த வீட்டிலிருந்தனர். காலிங் பெல்லடித்த பிறகும் இரண்டு நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது. சாப்பாட்டிற்குப் பிறகான மதியஉறக்கத்திலிருந்தனர் இருவரும்.

அம்மாச்சிதான் முதலில் எழுந்து, மிகப் பொறுமையாக வந்து, கதவைத்திறந்தாள். பூத்துபோன கண்களை மேலும் சுருக்கி அவனை உற்று நோக்கினாள்.அவளுக்கு அவனை யாரெனப் புரியவில்லை.

“அம்மாச்சி… என்னைத் தெரியுதா?” உள்ளே நுழைந்து இருக்கையிலமர்ந்தான்.இயல்பாக மேஜை மேலிருந்த பத்திரிகையை எடுத்து வெறுமனே புரட்டிக்கொண்டிருந்தான்.

அம்மாச்சிக்கு இன்னமும் அவனை அடையாளம் தெரியவில்லை. முட்டிமீதுகைகளை ஊன்றி, குனிந்து நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தலைமுழுக்க நரைத்து பஞ்சு போல ஆகிவிட்டிருந்தது. தூய்மையான இரண்டுமுலைகளும் வயிற்றைத் தொடுவது அவளுடைய மேல்சட்டை வழியேதெளிவாகத் தெரிந்தது. கைகள் சுருங்கி, மிகவும் மெலிந்திருந்தன. தோடுகளின்எடையைப் பொறுக்கமுடியாமல் காதுகள் வலிந்து பிதுங்கிக் கொண்டிருந்தன.ஒரு தோடு எப்படியும் ஒரு சவரனாவது தேறும்.

அம்மாச்சிக்கு திடீரெனப் புரிந்துவிட்டது போல தன் சுருங்கிப்போனஆள்காட்டி விரலை உயர்த்திச் சொன்னாள்.

“திருச்சபையிலிருந்து பாதிரியார் அனுப்பினாரா”

“ம்” கோணலாகச் சிரித்தான்.

சட்டென அம்மாச்சியின் முகம் வாடியது. கண்கள் நிறைந்தன. உதடுகள்துடிக்கத் துடிக்க கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

“நான் இப்பதான் நெனச்சுட்டே இருந்தேன். பாதிரியார் ஆளனுப்புவார்னு. நான்திருச்சபைக்குப் போயி மூணு வாரமாயிடுசிச்சு” அவள் தன் மேல்சட்டையைஇழுத்து மூக்கு சிந்தினாள்.

“என்னால ஒரு அடி கூட எடுத்து வெக்க முடியல. கொஞ்சமாச்சும் நடக்கமுடிஞ்சா, நான் போய் வராம இருப்பேனா?”

“அதெல்லாம் பரவால்ல அம்மாச்சி… உங்களுக்கு வயசாயிடுச்சு, நடக்கமுடியலன்னு, எல்லாரையும் விட அவருக்கு நல்லாவே தெரியும்…” அவன்தேற்றினான்.

“ஒரு பாவமன்னிப்பு கூட கேக்க முடியலையே” அம்மாச்சி மறுபடியும்தேம்பினாள்.

“நேத்து ராத்திரி லேசா கண்ண மூடினப்போ கடவுள் என் முன்னாடி வந்தாரு.என் கட்டில் மேல தோ… இப்டி உக்காந்துட்டிருந்தாரு. அப்றம், “என்ன மரியம்மா…பணம் வந்ததும் பாவமன்னிப்பு, குர்பான, கும்பசாரம் எல்லாம் வேணாம்னுமுடிவு பண்ணிட்டியா…?’ன்னு கேக்கறாரு இங்க என்னடான்னா எழுந்து நிக்க கூடமுடியல. வாதம் வேற உசுர வாங்குது. ரெண்டு நாள் முன்னால தான்எருமைக்கால் சூப்பு குடிச்சேன். ஒரு பிரயோஜனமும் இல்ல. எலும்புல கரகரன்னுவலிக்குது. இப்பல்லாம் கட்டில்லயே உட்காந்து தான் ஜெபம் பண்றேன்.இனிமேலாவது என்னக் கூட்டிட்டு போகக் கூடாதா..?” இரண்டு கைகளையும்மேலே தூக்கி கண்மூடினாள்.

“போக வேண்டிய நேரம் வந்தா அவரே கூப்டுவாரு அம்மாச்சி.கவலப்படாதீங்க. அவருக்குத் தெரியாம ஒரு எலகூட அசையாது. கண்ணீர்விடுறவங்க பாக்கியவான்கள். அவங்களுக்கு என்னக்காவது ஒருநாள் நிம்மதிகெடக்கும்…”

அம்மாச்சி சோபாவில் அவனருகில் உட்கார்ந்தாள். வேட்டி நுனியால்கண்ணையும் மூக்கையும் நன்றாகத் துடைத்தாள். மெலிதாக ஏதோ ராகத்தில்முணுமுணுப்பதுபோலப் பாடினாள்.

“பரிசுத்த ஆத்மாவே…

நீ புறப்பட்டு வரணுமே

என் இதயத்தில்…”

உடனே அவள் சோபாவிலிருந்து இறங்கி, தரையில் முட்டி போட்டு,

“பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே…

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக

உம்முடைய ராஜ்யம் வருவதாக…” என மனமுருக வேண்டினாள்.

ஜெபத்தின் சத்தத்தில் உள்ளே உறக்கத்திலிருந்த தாத்தாவும் எழுந்துவிட்டார்.

“யாரு…?”

அம்மாச்சி “உஷ்” என அனிச்சையாக வாய்மீது விரல் வைத்தாள். அவனிடம்அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினாள்.

“அவர்கிட்ட இதெல்லாம் சொல்லாத. அந்தாளு ஒரு மாதிரி. கடவுள் பயமேஇல்லாதவள். தேவாலயத்துக்குப் போறதோ, பிரார்த்தனையோ ஒண்ணுகூடக்கெடயாது. செத்தாகூட தேவாலயத்துக்குள்ள வைக்கக் கூடாதுன்னு பாதிரியார்கிட்ட சொல்லணும். அப்படியே கெடந்து புழு புடிக்கட்டும். அப்படியாவது கடவுள்பழி தீத்துக்கட்டும்” மெதுவாக எழுந்து அங்கிருந்து நகர்ந்தாள்.

தூக்கத்திலிருந்து எழுந்து கைலியை அப்படியே சுருட்டிப் பிடித்திருந்தவாறுதாத்தா உள்ளேயிருந்து வந்தார். முகம் இரத்தம் சுண்டிப்போய் வெளிறியிருந்தது.தலையில் அங்கங்கு நரைமுடிகள். ஒவ்வொரு காலையும் மெதுவாகத்தான்வைக்கிறார். காலில் நீர் கோர்த்திருக்கிறது.

“யாரு..?”

அவர் அவனை நினைவில் கொண்டுவர முயன்றார். அவன் சிரித்துக்கொண்டே பவ்யமாக எழுந்தான். அவருடைய உதடுகளும் லேசாக விரிந்தன.

“உக்காரு… உக்காரு…”

சட்டென ஏதோ ஞாபகம் வந்ததுபோல ஆர்ப்பரித்துச் சிரித்தார். உடலும்வயிறும் ஒருமுறை குலுங்கியது.

“மைதின்குஞ்சு அனுப்பியிருப்பான் இல்லையா? கட்சி செயலாளர்மைதின்குஞ்சு”

“ஆமா…”

“அவன்கிட்ட சொல்லு. நான் இங்கதான் இருக்கேன். இன்னும் சாகலசெவப்புக்கொடியும், மலர்வளையமும் தூக்கிட்டு வர்றதுக்கு இன்னும் கொஞ்சநாள் இருக்கு” தாத்தா மறுபடியும் சிரித்தார்.

“நான் இப்போல்லாம் கட்சி கூட்டத்துக்கு வரது இல்லைன்னு ஒரே புகாராவாசிக்கிறாங்களா..? என்னைப்பத்தி அந்த மீசமாதவன் என்ன சொல்றான்…?குலத்துரோகி… பூர்ஷ்வான்னு சொல்லுவான்”

அவன் சிரித்துகொண்டே அவரை சமாதானப்படுத்தினான்.

“அப்டில்லாம் இல்ல. உங்களால இப்ப நடக்க முடியலன்னு எல்லாருக்கும்தெரியும். உங்களோட அந்த கால சேவைகளே கட்சிக்குப் பெரிய சொத்து…”

தாத்தா அவனைத் துச்சமாகப் பார்த்தார்.

“அந்த கால சேவைகள்… அதெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? அத வச்சுகட்சிய முன்னுக்குக் கொண்டுவர முடியுமா..? முன்னுக்கு வரணும்னா இப்பவேல செய்யணும். ஓரடி அசைய முடிஞ்சாக்கூட நான் அந்த இடுக்கான படியேறிஅங்க வரமாட்டேனா…?”

“ம்… அதெல்லாருக்கும் தெரியும்”

“வேண்டாம்பா… வேணாம். யாரோட அனுதாபமும் எனக்கு வேணாம்.அனுதாபத்தால கட்சி முன்னேறாதுன்னு ஒரு தடவ கங்காதரன் என்கிட்டசொல்லிருக்கார். எந்த கங்காதரன்னு நெனக்கிறே…? பி. கங்காதரன். அப்றம்அவரு கட்சி மாறி போயிட்டாரு. அதான் சொல்றேனே… கட்சிக்கு முன்னாலயாருமே பெருசில்ல”

தாத்தா காலை மேஜைமீது ஏற்றிவைத்தார். நீர் கோர்த்து சில இடங்களில்பழுக்க ஆரம்பித்திருந்தது. கால் முழுக்க திட்டுத்திட்டாக கறுமை படர்த்திருந்தது.அசைக்கும் போதெல்லாம் வலிப்பதை அவர் முகம் உணர்த்தியது.

“பரியாரம் கேசுல என்ன மடக்கிப் புடிச்சு லாக்கப்புல வச்சிருந்தப்போ மூணுதடவ மயக்கம் போட்டு விழுந்துட்டேன். நல்லா அடிச்சு முடிச்சதும் மயக்கம்தெளிய மொகத்துல தண்ணி ஊத்துவாங்க. மறுபடியும் அடிப்பானுங்க. அப்பகூடநான் அழல. ஆனா நேத்து அழுதுட்டேன்” ஒரு நிமிடம் நிறுத்தி, அவன் முகம்பார்த்துக் கேட்டார்.

“நீ வாலிபர் சங்கத்துலயா இருக்கே…?”

“ஆமா…”

“உன் வெள்ளச்சட்ட கொஞ்சம் கூட கசங்கவே இல்லியேடா”

அவன் லேசாக பம்மினான்.

“எனக்கு என்னன்ன நோய்லாம் இருக்குன்னு எனக்கே தெரியல. டாக்டருங்கஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா சொல்வாங்க. என் பிரச்சனையே என்னாலநடக்க முடியலையேங்கறது தான். ஒரு அடி எடுத்துவெக்கிறதுக்குள்ள உயிர்போவுது. அதனால எந்த கூட்டத்துக்கும் வரல. ஊர்வலத்துக்கும் வரமுடியல”சிறிய மௌனத்துக்குப் பிறகு,

“ஆனா முந்தாநேத்து வரைக்கும் நான் வாசிச்சுட்டுதான் இருந்தேன்.இ.எம்.எஸ். பலராமன் எழுதிதை படிக்க காலையில டீ குடிச்சுட்டு நம்ப கட்சிப்பத்திரிகையை எடுத்துப் பாத்தேன். கண்ணு பூத்து போயிருச்சு. கண்ணையும்கண்ணாடியையும் தொடச்சுட்டு மறுபடியும் பாத்தேன். ஒரு எழுத்து கூடதெரியல. அப்பதான் அழுதேன்”

தாத்தா பேசுவதை நிறுத்தி, தன் முகத்தைக் கைகளால் மறைக்க முயன்றார்.கண்ணீர் வழிந்தது. கட்டுப்படுத்த முடியாமல் அவர் தேம்பித்தேம்பி அழுதார்.

“என்ன தாத்தா நீங்க… சின்னக் கொழந்த மாதிரி” அவன் எழுந்து தோளில்கைவைத்து ஆறுதல்படுத்தினான். அதற்குப் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.கண்கள் மூடி எதையோ நினைத்துக் கொண்டிருந்தார்.

“தம்பி… இங்க வாப்பா…” உள்ளிருந்து அம்மாச்சியின் குரல் கேட்டது.

சாப்பாட்டு மேஜையில் பிளாஸ்க்கிலிருந்து ஒரு கப் டீயை ஊற்றிவைத்துஅம்மாச்சி அவனுக்காகக் காத்திருந்தாள். தட்டில் அச்சு முறுக்கும், தேன் குழலும்எடுத்து வைத்தாள்.

“இத சாப்பிடு. அந்தக் கெழவன்கிட்ட என்ன பேச்சு? யாரு வந்தாலும்தொண்டயத் தொறந்துடுவான். வெக்கம், மானம் இல்லாத மனுஷன்”

அவன் டீ குடித்தான். அச்சு முறுக்கு மொறுமொறுவென சுவையாக இருந்தது.தேன் குழலில் எள் சேர்த்திருந்தார்கள். இதெல்லாம் அவன் சிறுவயதில்தான்சாப்பிட்டிருக்கிறான். ஆசையாக எடுத்துத் தின்றான்.

“இப்போல்லாம் காலைல மட்டுந்தான் சமையல். விடிய காலைல ஒருபொண்ணு வருவா. பெருக்கி, பாத்திரம் கழுவி, சமைச்சு, டீ வச்சுட்டுப்போயிடுவா. அப்றம் நானும் இந்தாளும் மட்டும்தான். வேளாவேளைக்கிஎதையாவது சாப்ட்டு படுத்திருவோம். சாவற நேரத்துல பாலூத்தக் கூட ஒருமனுஷன் கெடயாது”

டீ குடித்துவிட்டு அவன் எழுந்தான்.

“ஏம்பா… போதுமா? பசிக்கலயா…?”

“போதும் அம்மாச்சி…”

அம்மாச்சி சுற்று முற்றும் பார்த்துவிட்டு மேல்சட்டையினுள் ஒளித்துவைத்திருந்த புத்தகத்தை வெளியே எடுத்தாள்.

“நீ இத ஃபாதர்கிட்ட குடுத்துரு. இனிமே என்னால இதவச்சு ஒண்ணும் பண்ணமுடியாது. இங்கயிருந்தா அந்தாளு எடைக்குப் போட்ருவாரு. என் சார்பாதேவாலயத்துலயே இருக்கட்டும்”

புத்தகத்தை வாங்கிக்கொண்டு வரவேற்பறைக்கு நகர்ந்தான்.

“சட்டக்குள்ள ஒளிச்சு வை. அந்தாருக்குத் தெரிஞ்சுடும். அப்றம்தேவையில்லாம ஏதாவது கத்தும். சீக்கிரம்…”

வரவேற்பறையில் தாத்தா கண்ணாடியைக் கண்ணோடு சேர்த்துப் பிடித்துஎதையோ வாசிக்க முயன்று கொண்டிருந்தார். அரைவட்டம் போல வளைந்துஉட்கார்ந்திருந்தார். அவன் அருகில் சென்றவுடன் தன் முயற்சியிலிருந்து பின்வாங்கினார்.

“அவகூட உனக்கென்ன பேச்சு? எந்த நேரமும் சோகமாவே இருப்பா. இப்பவளஞ்சு நடக்கிறதப் பாத்தியா? அவ மண்டையில களிமண்ணு தான் இருக்கு.ஒண்டிக்கழுத”

அவன் சிரித்துக் கொண்டே நின்றான். தன் கையிலிருந்த புத்தகத்தைத் தாத்தாஅவனிடம் நீட்டினார்.

“பிரபாகரன் நாயரு 30 வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட குடுத்தாரு.தெனமும் படுக்கறதுக்கு முன்ன ரெண்டுபக்கமாச்சும் வாசிப்பேன். இனிமே இதவச்சு என்ன பண்றது..? நீ மைதின்குஞ்சு கிட்ட குடுத்துரு. யாராவது படிக்கட்டும்”அவன் அதையும் வாங்கிக் கொண்டான்.

ஒரு ஆட்டோவில் நகரத்திற்குத் திரும்பினான். நகர எல்லையிலுள்ள பாரில்நுழைந்தான். சுமை தூக்குபவர்களும், கூலித் தொழிலாளிகளும் மட்டுமேகுடிக்கும் இடம் அது. மேஜைமீது பிளாஸ்டிக் டம்ளர்களும் கடித்துப் போட்டஎலும்புத் துண்டுகளும் சிதறிக்கிடந்தன. தரையில் யார் யாரோவாந்தியெடுத்திருந்தனர். ஆட்களைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

இருட்டும் வரை அங்கேயே குடித்தான். குடித்துக் குடித்து சோர்ந்து,வேர்த்துவிட்டிருந்தது. கடைசிச்சொட்டு மதுவையும் குடித்தபிறகு பெருமூச்சுவிட்டான்.

“கடவுளே…”

நகரத்தின் நட்சத்திர உணவகம் ஒன்றில் தான் தங்கியிருந்தான்.விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விசாலமாக இருந்தது அவனுடைய அறை.லேசான குளிரும், வாசனையும் பரவிக் கிடந்தன.

அன்றிரவு அவனோடு படுக்க, வந்திருந்த பெண் அங்கே ஒரு மூலையில்நின்று கொண்டிருந்தாள். சேலையை அவிழ்த்து ஒழுங்காக மடித்து கட்டிலின்மூலையில் வைத்தாள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மெலிந்து வதங்கியிருந்தாள்.அடிக்கடி இருமினாள். ஜாக்கெட்டிற்கு மேல் தோளெலும்புகள் விகாரமாகப்புடைத்திருந்தன ரோஸ்கலர் பாவடைக்குள் வெறும் இடுப்பெலும்புகள் மட்டும். “இவளா பழைய கிங் சர்க்கஸில் வரும் ராணி..?’ அவன் மனது கேட்டுக்கொண்டது.

“என்ன இப்டி பாக்கற? என் கோலத்த தானே. அப்றம் ஏன் இன்னமும் இந்தமாதிரி எடத்துக்கு என்ன கூட்டிட்டு வராங்க? சிட்டீல புதுசா எவ்ளோபொண்ணுங்க இருக்குதுங்க. பழைய கபராக்காரங்க எல்லாரும் ஒண்ணாதான்தங்கியிருக்காங்க. அவங்கள்ல யாரையாவது கூப்ட வேண்டியது தானே…?”

அவன் சிரித்தான். அவள் கட்டிலில் அவனுக்கு நெருக்கமாக உட்கார்ந்துஅவனுடைய தோளில் தன் முகம் பதித்தாள்.

“இப்பல்லாம் நானும் ரெடியாயி ராப்பகலா நடந்துகிட்டேதான் இருக்கேன்.ஒருத்தன்கூட திரும்பிப் பாக்க மாட்டேங்கறான். நடந்து நடந்து பசியிலஎங்கயாவது விழுந்து கெடப்பேன். விடியகாலைல எவனாவது வந்து கூப்டுவான்.எதாவது பொந்துக்கோ, இருட்டுக்கோ கூட்டிட்டுப் போவானுங்க”

அவன் அவளைச் சேர்த்தணைத்தான். எலும்புகள் புடைத்து நிற்கும் முதுகைவருடினான்.

“நீ ஏன் இங்க கஷ்டப்படறே? நான்தான் உனக்கு ஒரு வீடு வாங்கித்தரேன்னுசொல்றேன்ல?”

“என்ன யாரும் காப்பாத்த வேணாம். நான் இப்டியே நடந்து நடந்து ஒருநாள்எங்கயாவது விழுந்து செத்துடுவேன். அது தான் நிம்மதி” தேம்பி அழுதாள்.

பின் முகத்தைத் துடைத்துக்கொண்டு அவனை இறுக அணைத்து காதைத் தன்நாக்கால் தடவினாள்.

“எனக்கு மல்லிப்பூ வாங்கலியா…?”

அவன் எழுந்து மேஜைமீது வைத்திருந்த இரண்டு புத்தகங்களை எடுத்துநீட்டினான்.

ஒன்று பைன்டிங் செய்யப்பட்டு மிகவும் நைந்து போயிருந்தது. அட்டையில்‘பரிசுத்த வேதாகமம், புதிய ஏற்பாடு’ என அச்சிடப்பட்டிருந்தது. மற்றொன்றுநியூஸ்பிரிண்ட்டில் வெளிவந்த சின்ன புத்தகம். ஸ்டாபிளர்கள்துருபிடித்திருந்தன. ‘மார்க்ஸ், ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’

“இந்தா… இத நீயே வெச்சுக்கோ”

அவள் சத்தமாகச் சிரித்தாள்.

“நான் என்ன ஏதாவது பரீட்சைக்காப் படிக்கிறேன்?”

அவன் அன்று பகல் நடந்ததையெல்லாம் தெளிவாகச் சொன்னான். அவள்கண்கள் நிறைந்து வழிந்தன.

“நாளைக்கு ராத்திரி அதுங்கள கொன்னுடுவல்ல…?”

அவனிடம் பதிலேதும் இல்லை. விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தான்.அவளின் கண்ணீர் அவனுடைய மார்பில் பட்டுத் தெறித்தன.

***

http://www.sramakrishnan.com/?p=5025

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ராத்திரித்தான் தெரியும் வேதாகமோ கம்யூனிசமோ அவனை மாற்றியிருக்கா என்று...! அதையும் கடந்து அந்த இரு வயதான ஜீவன்களையும் அவன் பரலோகம் அனுப்பினால் அது அவனின் கருணையினால் மட்டுமே...!!

நல்ல கதை நன்றி ஆதவன்...!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஆதவன்...!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி ஆதவன்...!

Sommersmileys

வணக்கம்.... நிலாமதி அக்கா.
உங்களை... இங்கு  கண்டது மிக்க மகிழ்ச்சி அக்கா. smilie_water_031.gif

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

நாளைக்கு ராத்திரித்தான் தெரியும் வேதாகமோ கம்யூனிசமோ அவனை மாற்றியிருக்கா என்று...! அதையும் கடந்து அந்த இரு வயதான ஜீவன்களையும் அவன் பரலோகம் அனுப்பினால் அது அவனின் கருணையினால் மட்டுமே...!!

நல்ல கதை நன்றி ஆதவன்...!

ஒ கதையை இபடியும் புரிந்து கொள்ளலாமோ?இணைப்பிற்க்கு நன்றிகள் ஆதவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.