Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!”

Featured Replies

“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!”

எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து

 

110p1.jpg

ட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வைகோவுடன் நடத்தும் முதல் சந்திப்பு இது. செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. காரணம், எட்டு ஆண்டுகளாக நடந்த அரசு விரோத வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. கறுப்பு சால்வையைச் சரிசெய்துகொண்டே கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

‘‘எட்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?”

‘‘பாலகங்காதர திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற புகழ்வாய்ந்த தலைவர்கள் மீது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது எந்தப் பிரிவுகளில் வழக்கு போட்டார்களோ, அதே பிரிவுகளில் என் மீது கலைஞர் கருணாநிதி போட்ட வழக்கு இது.  இந்த வழக்கில் சுதந்திர இந்தியாவில் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, முதன்முதலில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முதல் எம்.பி-யும் நான்தான். `அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கும்போல் இருக்கிறது' என்று, என் மனதை அதற்குத் தயார்படுத்தி வைத்திருந்தேன். இது நியாயமற்ற வழக்கு என உணர்ந்ததால், நீதிமன்றம் என்னை விடுதலை செய்துவிட்டது. எனக்கு சிறை தண்டனை தரப்பட்டிருந்தால், எங்கள் தோழர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இந்த விடுதலைகூட எனக்குச் சின்ன ஏமாற்றம்தான். எந்தத் தண்டனையும் என்னையும் எனது உறுதியையும் குலைத்துவிடாது. இந்தத் தீர்ப்பு எனக்கு விடுதலை தந்த தீர்ப்பு மட்டும் அல்ல; ஈழத் தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கிடைத்துள்ள தீர்ப்பு!”

‘‘மொத்தம் 52 ஆண்டுகால அரசியல் பொதுவாழ்வு.அதில் 22 ஆண்டுகள் ம.தி.மு.க பொதுச்செயலாளர்... இந்த அரசியல் பயணம், உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?’’

‘‘என் மீது கொலைப்பழி சுமத்திய 1993-ம் ஆண்டு, நான் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். ‘ஏன் அரசியலுக்கு வந்தேன்?’ என்றே வருத்தப்பட்டேன். இந்த 22 ஆண்டு அரசியலில், சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துள்ளேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சிறையில் இருந்து வெளியே வந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது.  அந்த ஆண்டு நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். நான் எம்.பி-யாக இல்லாமல் போய்விட்டேன். ஆனாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கை 17 தடவைப் போய்ப் பார்த்து, ‘இலங்கைக்கு,  ராணுவத்தை அனுப்ப வேண்டாம்; ஆயுதம் கொடுக்க வேண்டாம்’ எனக் கெஞ்சினேன். இதுவே நான் எம்.பி-யாக இருந்திருந்தால், டெல்லியில் அனைத்து தலைவர்களையும் சந்தித்திருக்கலாம்; நாடாளுமன்ற விவாதங்களில் பேசியிருக்கலாம். காங்கிரஸ் அரசின் துரோகச் செயலை வெளிக்கொண்டுவந்து, ராணுவ நடவடிக்கையைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என நிறைய முறை வருத்தப் பட்டிருக்கிறேன்.

என்னை பொடாவில்  சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடனேயே 2006-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தேனே... அதுவும் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கைதான். அதனால்தான் என் மீதான நம்பகத்தன்மை பொதுவெளியில் நொறுங்கி தரைமட்டமானது. அதன் பிறகு, 2011-ம் ஆண்டில்  நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு ஸீட், ஏழு ஸீட் எனச் சொல்லி 12 ஸீட்டுக்கு வந்தபோது, நாங்கள் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என முடிவெடுத்தோம். அப்போது ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் ஏழு இடங்களில், ‘ உங்கள் அன்புக்குரிய சகோதரி’ எனக் குறிப்பிட்டிருந்தார். வேறு யாருக்கும் அவர் இப்படிக் கடிதம் எழுதியது கிடையாது. 

இத்தகைய தவறான முடிவுகள் எடுத்தாலும், அது அரசியல்ரீதியாக பல விமர்சனங்களைக் கொடுத்தாலும் எனது போராட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு வாழ்ந்துவந்தேன். அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என இடைவிடாத போராட்டங்கள் நடத்திவந்தேன். இப்போதும் மக்கள் பிரச்னைகளை முன்வைத்தே அரசியல் செய்துவருகிறேன். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மத்தியில் ஒருவன் கட்சி நடத்துவதே சாதனைதானே! மக்களுக்காகப் போராட ம.தி.மு.க இருக்கிறது என்ற பெயரை வாங்கியிருக்கிறோம்.”

‘‘இவ்வளவு அரசியல் அனுபவம்கொண்ட நீங்கள், முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது சரி என நினைக்கிறீர்களா?”

‘‘ `விஜயகாந்த்தை நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகச் சொன்னதால், உங்கள் இமேஜ் போய்விட்டதே’ எனச் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பத்து ஆண்டுகள் கழித்து, 2015-ம் ஆண்டில் கலைஞர் எனக்கு போன் செய்தார். பேரன் அருள்நிதிக்குத் திருமணம் வைத்திருப்பதாகவும் அதற்கு வரவேண்டும் என்றும் சொன்னார்.  ‘சிலதெல்லாம் நாமாக வரவழைத்துக் கொள்வது தானே...’ என்று பேசும்போது அவர் சொன்னார். அந்த வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள். அதன் பிறகு அருள்நிதியின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க ஸ்டாலின், தமிழரசு ஆகிய இருவரும் வந்தார்கள். எட்டு மாவட்டச் செயலாளர்களுடன் வாசலில் நின்று பொன்னாடை போத்தி வரவேற்றேன். அந்தத் திருமணத்துக்குப் போன எனக்கு உரிய மரியாதை தரவில்லை. ஸ்டாலின் மேடையில் பேசும்போதும் அவமரியாதை தொடர்ந்தது. ஆனால், நான்  பேசும்போது ஸ்டாலினை மரியாதையோடுதான் பேசினேன். 23 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் ஸ்டாலின் மனநிலை மாறவில்லை என்ற எண்ணம் அந்தத் திருமண வீட்டில்தான் எனக்கு ஏற்பட்டது.

திருப்பூரில் உள்ள எங்கள் தொழிற்சங்க இடத்தை, தி.மு.க ஆட்சியில்தான் அபகரித்துக் கொண்டார்கள். அந்த வழக்கில் நீதிமன்றம் ம.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தீர்ப்பு சொன்ன பிறகும் தி.மு.க-வினர் அப்பீலுக்குப் போனார்கள். இந்த விஷயத்தை நான் கலைஞருக்குச் சொல்லி அனுப்பினேன். அந்த ஆவணங்களையும் அவருக்குக் கொடுத்து அனுப்பினேன். அவரும்  ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். ‘அப்பீல் போக வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் எங்கள் கட்சியில் இருக்கும் சிலரை ஸ்டாலின் தொடர்புகொண்டு, ‘ தி.மு.க கூட்டணிக்கு ம.தி.மு.க-வைக் கொண்டுவந்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் நீங்கள் வந்துவிடுங்கள். உங்களுக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார். உள்மனதில் ஸ்டாலினுக்கு நம் மீது நல்லெண்ணம் இல்லை. ஆகவே ம.தி.மு.க-வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் அந்த முடிவை எடுத்தேன்.

மக்கள் கூட்டு இயக்கம் நடத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜனும் ஜி.ராமகிருஷ்ணனும் வந்தார்கள். திருமாவளவனும் பேசினார். `வெற்றி பெற முடியுமா?' எனக் கேட்டேன். `போராடி பார்ப்போம்' என்றார்கள். `அ.தி.மு.க - தி.மு.க-வுக்கு மாற்று அணியை உண்டாக்குவோம்' என்றார்கள். திருமாவளவன்தான் முதன்முதலில் மூன்றாவது அணி குறித்து என்னிடம் பேசினார். அப்போது விஜயகாந்த் அவர்கள் தி.மு.க-வுடன்தான் போகப்போகிறார் என்ற செய்தி, பலமாக அடிப்பட்டது. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் `விஜயகாந்த் வந்தால் நாம் வெற்றி பெற முடியும்’ என்றார்கள். `முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால்தான் கூட்டணிக்கு வருவோம்’ என்று விஜயகாந்த் சொன்னார். நாம் வெற்றிபெறவேண்டும் என்றால், இதுதான் சரி என நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால், விஜயகாந்த் பெயரை முன்மொழிந்தது தவறுதான்.”

110p2.jpg

‘‘மக்கள்நலக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பினீர்களா?”

‘‘இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வரும் என நான் நினைத்தேன். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. ஊடகங்களும் எங்களை ஆதரிக்கவில்லை. மாறாக, எங்கள் மீது எதிர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்தியது. நான் 1,500 கோடி ரூபாய் வாங்கிட்டேன் எனப் பழி சொன்னார்கள். நான் வாழ்க்கையிலேயே இரண்டாவது முறையாக மனதளவில் துன்பப்பட்டேன். இரண்டு கட்சிகளையும் நான் கடுமையாக விமர்சித்தேன். ஆனாலும் `பணம் வாங்கிவிட்டேன்' என என் மீது பழி விழுந்தது.”

‘‘ஓர் அரசியல் கட்சித் தலைவரான நீங்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டாமா?”

‘‘கோவில்பட்டி தொகுதியில் நான் நின்றிருந்தால் அங்கு கலவரம் ஏற்பட்டிருக்கும். இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டு காசு கொடுத்தார்கள்.என்னிடம் காசு கொடுக்க வழி இல்லை. முடிவு என்ன ஆகும்? நான் தோல்வி அடைந்திருப்பேன். அது எனக்கு நன்றாகவே தெரியும்!”

‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார். கருணாநிதிக்கும் உடல் நலம் இல்லை. இந்த நிலையில்  தமிழகத்தின் அரசியல் எப்படி  இருப்பதாகக் கருதுகிறீர்கள்?”

‘‘முதலமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அ.தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வும் அ.தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தி.மு.க-வினர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் வாய்ப்பு உள்ளது என்ற வதந்திகள் வெளியே உலவுகின்றன.

தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள் சிலர் இன்னும் `நான்கு, ஐந்து மாதங்களில் நாம் ஆட்சிக்கு வரலாம்' எனப் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அது நடக்காது. இந்த ஆட்சி கவிழாது!”

‘‘காவிரி போன்ற பொதுப் பிரச்னைகளுக்காக தி.மு.க-வுடன் ஒருங்கிணைந்து செயல்படலாமே?”

‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு, அதே கட்சிகளில் இருந்தே ஆட்களை இழுப்பது மோசமான செயல் அல்லவா? சிங்கபெருமாள்கோவிலில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் ‘ம.தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ. போன்ற கட்சியில் இருந்தே ஆட்களைக் கொண்டு வந்துள்ளோம்’ எனப் பேசியுள்ளார்கள். ஸ்டாலின் அந்தக் கூட்டத்தில் ‘ம.தி.மு.க அகதியாக அலைகிறது’ எனப் பேசினார். இவ்வளவு செய்துவிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எப்படிக் கூட்டுவீர்கள்? எரிகிற வீட்டில் பிடுங்குகிற கதையாக அல்லவா இது இருக்கிறது! இவர்கள் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தலாம்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவாலயத்தில்தான் நடத்துவார்களா... அது முறையா?”

``மக்கள்நலக் கூட்டணி, இடைத்தேர்தலை ஏன்  புறக்கணிக்கிறது?''

``இந்தத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியின் ஆதரவு யாருக்கும் கிடையாது. கடந்தகால இடைத்தேர்தல்களை தி.மு.க., அ.தி.மு.க  போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளன. அப்போது அவர்கள் யாருக்கும் ஆதரவு  கொடுக்கவில்லை. அதுபோலவே இந்தத் தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.''

‘‘ஸ்டாலின் கையில் தி.மு.க செல்லாமல் இருந்திருந்தால், தி.மு.க பக்கம் நீங்கள் சென்றிருப்பீர்களா?”

‘‘29 ஆண்டுகள் கலைஞருடன் இருந்தவன் நான். ஆனால், என் மீது கொலைப்பழி சுமத்தும்போது ஒரு நொடிகூட அவர் சிந்திக்கவில்லையே. அவன் நிலை என்ன ஆகும் என அவர் நினைத்துப் பார்த்தாரா? குமணனைப் பற்றி எல்லாம் எழுதியவர்தானே கலைஞர்! அவருக்கு என்னைப் பற்றி தெரிய வேண்டாமா? அவர் மீது ஒரு தூசுகூடப் படாத அளவுக்குக் கவசமாக இருந்த வைகோ மீது கொலைப்பழி சுமத்தினாரே? `என் தம்பி வைகோவால் என் உயிர் போகும் என்றால், அது மிகப்பெரிய பாக்கியம்’ எனச் சொல்லியிருந்தால், உலகத் தலைவராக அவர் போற்றபட்டிருப்பாரே! நான் அந்தக் கட்சியில் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. உழைப்பு, போராட்டம் தவிர எதையும் நான் அறிந்தது கிடையாது. ஆனால், என் மீது ஜென்மப் பழியைச் சுமத்தியது கலைஞர்தானே! ஸ்டாலின் என்ன செய்வார் பாவம்?”


‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? நீங்கள் அவரை மருத்துவமனையில் பார்த்தீர்களா?’’

‘‘முதலமைச்சரை அக்டோபர் 8-ம் தேதி  பார்க்க அப்போலோ மருத்துவமனைக்குப் போனேன். நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரையும் அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை அழைத்துச் சென்றார்கள். ஜெயலலிதா இருக்கும் அறைக்குப் பக்கத்து அறையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘அம்மா பெட்டர் ஆகிட்டு வர்றாங்க’ என அவர்கள் சொன்னார்கள். அதன் பிறகு, அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி அறை அருகே உள்ள பார்வையாளர்கள் அறைக்குச் சென்றோம். முதலமைச்சரின் ஹெல்த் விஷயமான மெடிக்கல் கான்ஃபிரன்ஸ் உள்ளே நடந்துகொண்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் கழித்து டாக்டர்கள் எல்லாம் வெளியே வந்தார்கள். ரிச்சர்டு பெயில் என்கிற லண்டன் டாக்டரைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் தலை அசைத்தேன். அவர் என் அருகில் வந்துவிட்டார். அவரும் `முதலமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' எனச் சொன்னார். `செயற்கை சுவாசத்தை அவ்வப்போது எடுத்துவிட்டு, இயற்கை சுவாசத்துக்கு முயற்சிசெய்கிறார்கள்' எனச் சொல்கிறார்கள். ஜெயலலிதா, உடல்நலம் சரியாகி வருவார் என நம்புகிறேன்.’’


110p3.jpg

‘‘சமீபத்தில் நீங்கள் பார்த்த திரைப்படம் எது?”
“ ‘தி ரெவனென்ட்’!”

“என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?”
‘‘ ஏகலைவன் எழுதிய `மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா சந்திப்பும்' ”

‘‘இப்போது உங்கள் பொழுதுபோக்கு என்ன?”
‘‘பழைய சினிமா பாடல்களைக் கேட்பது.”

‘‘ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களைப் பயன்படுத்துகிறீ்ர்களா?”
“பயன்படுத்தத் தெரியும். ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனது உதவியாளர்கள் பார்த்துச் சொல்வதைக் கேட்டுக்கொள்வேன்!''

‘‘கருணாநிதியைப் பற்றி..?
‘‘எழுத்தாளர், மிகச்சிறந்த பேச்சாளர். நாம் சொல்லும் வார்த்தையை நமக்கே நகைச்சுவையோடு திருப்பிச் சொல்லும் ஆற்றல் அவரிடம் மட்டுமே உண்டு. சிறந்த ராஜதந்திரி.”

http://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இவருக்கும், ஸ்டாலினுக்குமான பிரச்சினையில் விளைந்ததுதான் மக்கள் நலக் கூட்டணி.. இதை நம்பி ஏமாந்த அப்பாவி வாக்காளர்கள்தான் பாவம்.. :unsure:

53 minutes ago, இசைக்கலைஞன் said:

ஆக, இவருக்கும், ஸ்டாலினுக்குமான பிரச்சினையில் விளைந்ததுதான் மக்கள் நலக் கூட்டணி.. இதை நம்பி ஏமாந்த அப்பாவி வாக்காளர்கள்தான் பாவம்.. :unsure:

இசை, வாக்காளர்கள் எங்கே ஏமாந்தார்கள்? வாக்காளர்கள் அல்லவா இவர்களை ஏமாற்றி அநேகமான இடங்களில் கட்டுப் பணத்தினையும் இழக்க வைத்தார்கள்..... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

இசை, வாக்காளர்கள் எங்கே ஏமாந்தார்கள்? வாக்காளர்கள் அல்லவா இவர்களை ஏமாற்றி அநேகமான இடங்களில் கட்டுப் பணத்தினையும் இழக்க வைத்தார்கள்..... tw_blush:

உண்மைதான் நிழலி.. ஆனால் எனது வகுப்புத் தோழர்கள் சிலர் மக்கள்நலக் கூட்டணியின்பால் நின்றார்கள். இப்போது கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். அவர்களையே குறிப்பிட்டேன்.. ஆனால் அந்த ஒரு சிலர் "மக்கள்" அல்லர் என்பது உண்மைதான்.. :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.