Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினம் (சிறுகதை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினம் - (சிறுகதை) - முருகபூபதி

 
  .                                     
        " கழுத்தில்  சயனைற்  குப்பி, கரத்தில்  ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன்,  இப்போது எதுவுமே  இல்லாமல்  காற்றுப்போல்  அலைகிறான்."
                                                          
Coffin.jpg
சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத்  தயாராகிறது.
இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட  அழகிய காருக்குப்பின்னால்  தத்தம்  கார்களில் அணிவகுத்து வருவார்கள்.
மயானத்திற்குச்சென்றபின்னர்,   எரிவாயுவில்  என்னை சாம்பலாக்கிவிடுவார்கள். செம்மணியிலும்  கோம்பயன் மணலிலும் மரக்குற்றிகளும் விறகுகளும் மண்ணெண்ணையும்  செய்யும் கைங்கரியத்தை கண்ணுக்குப்புலப்படாத  வாயு  இந்த நாட்டில் என்னை  தகனமாக்கப்போகிறது.
நாட்டுக்கு  நாடு  இந்த  அக்கினி  சங்கமத்தில்தான் எத்தனை வேறுபாடு...?
காராளசிங்கம்,  மருமகனிடமும்  மரணச்சடங்கிற்கு வந்தவர்களிடமும் சொன்னதையே  மீண்டும்  மீண்டும் அலுப்புத்தட்டாமல்,  வாய் ஓயாமல்  சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வாறு  சொல்வதில் பெருமிதமும்  காண்கிறார்.




காராளசிங்கம்  இந்த  மாநிலத்தின் பெருமைக்குரிய பிரமுகர்தான். இங்கிருக்கும் சில தமிழ் அமைப்புகளின் ஸ்தாபகர். இங்கு புலம்பெயர்ந்து  வந்த  சிலருக்கு  அவர்தான் ( God Father) ஞானத்தந்தை.
" முந்தநாள்தான்.... நான்தான் ஐஸே.... இவரைக்கூட்டி  வந்தனான். என்ர பழைய  சிநேகிதன்.  ஊரில்  வாத்தியாராக  இருந்தவர். மகனை களத்திற்கு  அனுப்பி  தியாகியாக்கியவர். முந்தநாள்  என்ர  மகன்ட வீட்டில  'டின்னர்'  எடுத்தவர். பாரும்  ஐஸே... இதுதான் விதி. சும்மா சொல்லப்படாது... வாத்தியாருக்கு  நல்ல  சாவு. இங்கனைக்க நேர்சிங் ஹோம்  வழிய  இருந்து கஷ்டப்படாமல்  டப்பென்று போய்விட்டார்.   சாவதற்கு  முந்தி மகள் மருமகன் பேரப்பிள்ளைகளை இங்க வந்து பார்த்திட்டார்.  இங்க வந்துதான் சாகவேண்டுமென்று விதி. பாவம்.   ஊரிலயெண்டால்  இதைப்போல பல மடங்கு சனம் வந்திருக்கும்.  எத்தனைபேரை  படிப்பிச்சார்  தெரியுமே.....?"
மருமகன்  கிருத்தியப்பணிகளை  கவனிக்க  உள்ளே  வந்துவிட காராளசிங்கம்   மற்றவர்களிடம்  தொடர்ந்துகொண்டிருக்கிறார்.




" முந்தநாள்.... நான்தான்  ஐஸே..."
அவருக்குப்பக்கத்துணையாக  மேலும்  சிலர் சுடலை ஞானம் பேசுகிறார்கள்.
" இங்க  வந்தவர்.... ஒரு மெடிக்கல்  செக்கப்  செய்திருக்கலாம்" ஒருவர் சொல்கிறார்.
" என்ர  மகன்  சொன்னவன்  ஐஸே...தன்ர கிளினிக்குக்கு வரச்சொன்னவன்" காராளசிங்கத்தின்  ஒரு மகன் டொக்டர்.
" இங்கே வியர்க்கிறதும்  இல்லை. நாங்கள் நடக்கிறதுக்கும் பஞ்சிப்படுறோம்.  பால்,   பாண் வாங்கிறதுக்கும்  காரைத்தான் எடுக்கிறோம்"
" டென்ஷன்  ஐஸே...டென்ஷன்.   கடிதம் வருதோ இல்லையோ,  பில்லுகள்  வந்துகொண்டே  இருக்கும்.  ஒன்று  முடிய  மற்றது. ஒன்றைக்கட்டிப்போட்டு  வந்தால்,  மற்றது தபால் பெட்டியிக்க காத்துக்கொண்டிருக்கும்.
"பிள்ளைகள்  அடுத்த  தலையிடி... சொல்லுக்கேட்குதுகள் இல்லை. சோதினை  வருது  படி எண்டால்,  " நாங்கதானே  எழுதப்போறோம். ஏன்... டென்ஷனாகிறீங்கள்...?" எண்டு கேட்குதுகள்" என்றார்  ஒரு  குடும்பஸ்தர்.
" எனக்கு இப்ப அந்த டென்ஷன் இல்லை ஜஸே... என்ர  நாலும் படிப்பில் கரைசேர்ந்திட்டுதுகள்.  மூத்த  மூன்று   மகன்மாரும்  முடித்து பேரப்பிள்ளைகளையும்  தந்திட்டாங்கள். அடுத்தது - கடைக்குட்டி.  டிகிரி முடித்து  வேலை  தேடுறான். " காராளசிங்கம் பெருமையுடன் சொல்கிறார்.
" தனக்கு  நான்கு  சிங்கக்குட்டிகள்" என்று  அன்று  இரவு  அவர் மகன் வீட்டில்  இரவு  விருந்து தொடங்கு  முன்புசொன்னவர்.
நானோ,  எனக்கிருந்த  ஒரே வாரிசான மகன் கபிலனை மணலாற்றில் பறிகொடுத்து பரிதவிச்சுப்போனன்.
 தியாகிகள்  தினத்தின்போது  என்னை மேடைக்கு அழைத்து தியாக தீபம்  ஏற்றவைத்தவர்தான் காராளசிங்கம்.
ஏனென்றா  கேட்கிறீர்கள்...?
நானும்   தியாகிகள்  குடும்பத்தைச்சேர்ந்தவன்தான். என் மகன் களத்தில்  மடிந்து வித்தாகிப்போனவன்.
மணலாற்றில்  மகனை இழந்து  ஒருவருடம்  பூர்த்தியாகுமுன்பே ராஜேஸை - என்மனைவி  ராஜேஸ்வரியையும்  புற்றுநோய்க்கு பறிகொடுத்துவிட்டேன்.   இரண்டு   இழப்புகளின்போதும்  இங்கிருந்த மகள்  சுகிர்தாவுக்கு  வரமுடியவில்லை.
மகன்  வித்தானதால் புதையுண்டான். மனைவி இறந்ததனால் தகனமானால்.  இங்கு  இனி நானும்  தகனமாகப்போகின்றேன்.
மகன் வித்தான காலத்தில்  சுகிர்தா நிறைமாதக்கர்ப்பிணி. மனைவி தகனமானபோது  சுகிர்தா வரமுடியாத நிலையில்  மண்ணில் போர் உச்சம்.
மகளும்  மருமகனும்  என்னை ஸ்பொன்ஸர் செய்து அழைத்து இங்கு வந்துசேர்வதற்கு   இரண்டுவருடங்களாகிவிட்டன.
இனி எனது ஓய்வூதியம் எம்மை  ஆண்ட அரசுக்குத்தான்.   மகன் கபிலன்  கனவு  கண்ட  ஆண்டபரம்பரை  அரசு  கனவாகவே  அவனுடன்  மடிந்துவிட்டது   எனக்கும்  கவலைதான்.
அன்றைக்கு  வீட்டோடு  இருந்திருக்கலாம். பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சிக்குலாவிக்கொண்டிருந்திருக்கலாம். எனக்கு  மாரடைப்பு வந்திருக்காது.  அன்று  வீட்டோடு  இருந்திருந்தால், மருமகனுக்கு இந்த எதிர்பாராத  வீண்  செலவு  வந்திருக்காது.   இங்கே மகள் வீட்டு முற்றத்தில்  இத்தனைபேர் கால் கடுக்க நிற்கவேண்டி வந்திருக்காது. வீதியோரமாக   இத்தனை  கார்கள்  அணிவகுத்து  நின்றிருக்காது.
நல்ல  மருமகன். முகம் கோணாமல்,  சேமிப்பிலிருந்தும்,  மாஸ்டர் - விஸா கடன் அட்டைகளிலிருந்தும்  எடுத்துச்செலவு  செய்கிறார். பாவம்  மருமகன்.   என்னால் கரைந்துபோகும்  செலவுகளை ஈடுகட்டுவதற்கு  வரும்  நாட்களில் இரண்டு வேலைகளுக்கு செல்லலாம்.   பகுதி நேர வேலைகள்  தேடலாம்.   இயந்திரமாக ஓடி ஓடி உழைக்கலாம்.
மருமகனின்  சிநேகிதன்   ஒருவனின் பிள்ளையின்  பிறந்த தினக்கொண்டாட்டத்தில்தான்,   நீண்ட காலத்திற்குப்பின்பு காராளசிங்கத்தை  சந்தித்தேன்.
போர்க்கால  இடப்பெயர்வின்  அவலம்  எனது  முகத்தில்  எவ்வாறு படிந்திருக்கிறதோ   தெரியவில்லை. ஆனால், புலப்பெயர்வின்  அவலம் எவ்வாறிருந்தபோதும்  குளுமையும்  செழுமையும் காராளசிங்கத்தின் முகத்தில்   ஆரோக்கியமான   செம்மையை  பதிந்திருக்கிறது.
தூரத்தில்   நின்றவாறே   என்னை  உற்றுநோக்கி   அடையாளம் கண்டுகொண்ட   அவரே  கைகுலுக்கி   அணைத்தார்.   அவரது இடதுகரம்   எனது   தோளைப்பற்றியிருக்க, வலது கரத்தில் மதுக்கிண்ணம்.
" வாத்தியார்.... உங்களுக்கு  பழக்கம்  இல்லை  என்ன...?"
" ஞாபகம்  இருந்தால்  சரி" என்றேன்.
" என்ன.... அப்படிச்சொல்லிட்டீர்.... அந்த நாள் ஞாபகங்களை மறக்கத்தான் முடியுமே...? அவை வசந்த காலங்கள். ஏதோ வந்திட்டோம்.   இந்தக்குளிருக்கை  உளையவேண்டியிருக்கு.  இதில கொஞ்சம்  எடுத்தால்தான்  இதமான  தூக்கம்  வரும்."
ஊரில்  பங்கருக்குள்ளே  கழிந்த  உறக்கமில்லாத   ராத்திரிகள்  எனது நினைவுக்கு  வந்தன.
அந்த  பிறந்ததினக்கொண்டாட்டத்தில், பிறந்த தினத்திற்குரிய அக்குழந்தை   உறக்கத்திற்காக   அழுதது. வாழ்த்த வந்தவர்கள் வெட்டிய  கேக்  உண்டபின்னர், ஊர்ப்புதினம் பேசிக்கொண்டிருந்தார்கள்.   இராப்போசனம்   தொடங்கும்  வரையில், கட்லட்டையும்   ரோல்ஸ்ஸையும்  மிக்ஷரையும்  குளிர்பானத்தையும் சமிபாடாக்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒதுக்குப்புறமான  அறையொன்றில்  ஆண்கள்  சிலர்  மதுப்புட்டிகள், கண்ணாடிக்கிண்ணங்கள்  சகிதம்  ஊர் - உலக  அரசியல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மணலாற்றில்  மகன் மடிந்தது, பின்னர் மனைவி இறந்தது, ஊர் விட்டு ஊர்  இடம்பெயர்ந்தது,   குடியிருந்த  வீடு பாதுகாப்பு வலயத்திற்குள் பாழடைந்துபோனது,  இங்கிருக்கும்  மகள்   தொடர்புகொள்ள பட்ட அவஸ்தைகள்,  யாவும்  சொன்னபோது   காராளசிங்கம்  மீண்டும் தோளை   இறுக்கமாகப்பற்றி   ஆறுதல்   சொன்னார்.
எனது மருமகனிடம் முகவரி பெற்று, ஒருநாள் மனைவியுடனும் தனது இளைய மகனுடனும் வந்து பழைய  நட்பை மேலும்  புதுப்பித்துக்கொண்டார்.
" ஒரு  நாளைக்கு  எங்கட  வீட்டுப்பக்கம்  வாரும்  வாத்தியார்." என அழைத்தார்   காராளசிங்கம்.
நான்  ஊரில்  பார்த்த  தொழிலை  வைத்து,  இங்கும்  என்னை  அவர் வாத்தியார்  என்றே  செல்லமாக  அழைத்தார்.
காராளசிங்கத்தாரை  நான் எப்படி அழைப்பது...? அவரும் மனைவியும் போர்  உக்கிரமடையும்  முன்பே  புறப்பட்டவர்கள்.  பல ஆண்டுகளாகிவிட்டன.
இங்கே, பல  அமைப்புகளின்  ஸ்தாபகராகவும்  தமிழர்கள்  மத்தியில் ஒரு  பிரமுகராகவும்  அறியப்படும்  அவரை  நான் ' தலைவரே' என்று அழைத்திருக்கலாம்தான்.   ஆனால்,  நான்  ஏனோ  அவரை  அப்படி அழைக்கவில்லை.
அவர்  இங்கு  வாரத்தில்  ஒரு  வீட்டில்  இருப்பவர்.  கூட்டங்கள், விழாக்கள்,  சந்திப்புகள்  என்று  அவருக்கு  பல  சோலிகள்.  வார விடுமுறைநாட்களிலும்   எங்காவது   அலைந்துகொண்டிருப்பார். என்னை   அவரிடம்   அழைத்துச்செல்வதற்கு   எனது  மருமகனுக்கு பொருத்தமான  நேரம்   அமையவில்லை.
அவருடைய  வீட்டு  முகவரி   கேட்டறிந்திருந்தாலும் ,  ரயிலில்  போய் அலைந்து   இடம்தெரியாமல்   தடுமாறிப்போய்விடுவேன் என்று மகளும்   என்னை  அங்கு  தனியே   அனுப்புவதற்கு  தயங்கினாள்.
தியாகிகள்  தினவிழாவன்று  இரவுதான்  அவர்  வீட்டுக்கு - இல்லை அவரது    மூத்த   மகன்  வீட்டுக்கு  போவதற்கு  சந்தர்ப்பம்  கிடைத்தது. அதுவும்  அவரின்   வற்புறுத்தலினால்   நேர்ந்த   சந்தர்ப்பம்.
எனது   மருமகனுக்கு - அவர் வேலைசெய்யும் தொழிற்சாலையில் உடன்  பணியாற்றும்  ஒருவரின்  மகளின்  திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்தமையால்,   காராளசிங்கம்  தியாகிகள்  தின விழாவுக்கு மகள் வீட்டுப்பாதையால் செல்லும் ஒரு பெடியனுக்கு தகவல்  சொல்லி  என்னையும்  அவனுடன்  வரச்செய்திருந்தார்.
மண்டபம்  நிறைந்திருந்தது.
மக்கள்   வரிசையாக  அணிவகுத்து  தியாகிகளின்  படங்களுக்கு  மலர் அஞ்சலி   செலுத்தினார்கள்.    அந்த   ஜனத்திரளுக்குள்ளும் காராளசிங்கத்தார்   என்னை  கண்டுபிடித்துவிட்டார்.
அருகே  அழைத்து  மேடைக்கு  முன்பாக  ஆசனம்  காண்பித்து,  அமரச்செய்தார்.  மலர்  அஞ்சலியைத்தொடர்ந்து  தியாக  தீபம் ஏற்றும் நிகழ்ச்சி  நடந்தது.  தியாகிகள் குடும்பத்தினர்  தீபம்  ஏற்ற தயாரானபோது,    என்னையும்  அவர்   மேடைக்கு அழைத்தார். அங்கு  நின்ற  சிலருக்கு  என்னை  அறிமுகப்படுத்தினார்.
கெமராக்கள்  மின்னின.  வீடியோ  கெமரா,  டிஜிட்டல்  கெமராக்கள் சகிதம் சில  இளைஞர்கள்  சபையை  மறைத்தபோது,  அவர்களை மண்டபத்தின்  வலப்புறம் -  இடப்புறம்  சென்று  பதிவுசெய்யுமாறு ஒலிவாங்கியில்  அவர்  கேட்டுக்கொண்டார்.
அந்த  பதிவுகளில்  நான்  தீபம்  ஏற்றும்  காட்சியும் இடம்பெற்றிருக்கலாம்.  நான்  பார்க்கவில்லை.  பார்ப்பதற்கு  முன்னரே   கண்களை   மூடிவிட்டேன்   அல்லவா.
இடைவேளையின்போது  மகன்  கபிலனின்  படத்தையும்  தேடினேன். கண்ணில்   தென்படவில்லை.   ஆயிரம்  ஆயிரமாக வித்தாகிப்போனவர்கள்  அனைவரினதும்   படங்களையும்  சேகரித்து காட்சிக்கு  வைப்பது  சிரமசாத்தியமானது.  முன்னரே தெரிந்திருப்பின்,  கபிலன்  ஓ.எல். பரீட்சைக்காக  அடையாள அட்டைக்கு  எடுத்திருந்த   படப்பிரதியை   இவர்களிடம் கொடுத்திருக்கலாம். 
அது  ஒன்றுதான்  அவனது  நினைவுக்கு  எஞ்சியிருப்பது.  பார்ஸில் பத்திரமாக இருக்கிறது.
மகள்  வீட்டில்  அதனைப்பெருப்பித்து  கண்ணாடிச்சட்டமிட்டு  சுவரில் மாட்டியிருக்கலாம்.  மருமகன்  அதனை  விரும்பவில்லை.  இங்கு வளரும்  அவர் குழந்தைகளுக்கு  பின்னர்  காரணம் சொல்லவேண்டியிருக்கும்  என்ற  தயக்கம்போலும். 
என் பேரக்குழந்தைகளாவது  அந்தத்துயரம் தெரியாமல் இங்கே வளரட்டும்.
நான் இறந்துவிட்டமையால்.... இனி  எனது  பேர்ஸை  எடுத்துப்பார்க்கும் மகளும்   மருமகனும்  மகன்  கபிலனின்  படத்தைப்பார்க்கலாம். பாஸ்போர்டில்  இருக்கும்  எனது படத்தை பெருப்பித்து வீட்டுச்சுவரில் மாட்டலாம்.  அருகில்   கபிலனின் படமும் இருந்தால் நல்லது. ஏற்கனவே  மனைவி  ராஜேஸ்வரியின்  படம்  மகள்  வீட்டு  சுவாமி அறையில்  இருக்கிறது.
நீடித்த  ஈழப்போரில்  தியாகிகளாக  மடிந்து  வித்தாகிப்போன  அந்த இளம்  துளிர்களின்  படங்களைப்பார்த்தபோது  விம்மி  வந்த கண்ணீரை   அடக்குவதற்கு   சிரமப்பட்டேன்.
புரிந்துணர்வு  - சமாதான காலம் என்று இரண்டு தரப்பும்  மக்களை பேய்க்காட்டி...   பேய்க்காட்டி....  தம்  தரப்புகளை  பலப்படுத்தி இறுதியில்    மக்களைத்தான்  பலவீனமாக்கிவிட்டார்கள்.
நாசமாய்ப்போன  புரிந்துணர்வு  எப்போதோ  வந்திருக்கலாம்.  இங்கே இப்படி  பலர்  படமாகியிருந்திருக்கமாட்டார்கள்.  புதைகுழிகளும் குறைந்திருக்கும்.
மகன்  கபிலனும் வாழ்ந்திருப்பான்.
பேரழிவுக்குப்பின்னர்தான்  சுடலைஞானம்  வரும்போலும்.
தியாகிகள்  தின விழா  முடிந்ததும்,  என்னை  காரில்  அழைத்துவந்த அந்தப்பெடியனைத்தேடினேன். அவன் அந்த மண்டபத்தில் கதிரைகள் அடுக்கும்  வேலையில்  மும்முரமாக  இருந்தான்.
காராளசிங்கம்  அருகில்  வந்து, " வாத்தியார் வந்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் வருடா வருடம்  நடத்திற  விழா. சனத்தைப்பார்த்தியளே....? இரண்டாயிரம்  தாண்டியிருக்கும்.   என்ர   பேச்சு  எப்படி   இருந்தது...? நான்  எழுதிவைச்சுத்தான் பேசிறனான்.   இங்கத்தைய வெள்ளையளும்  வாரதினால  இங்கிலீஷ்லயும்  பேசச்சொன்னவையள்.   அதுதான்   சில   நிமிடங்கள்  கூடுதலாக எடுத்துப்போட்டன்.   எழுதிப்பேசிறதில  சில  நன்மைகள்  இருக்கு வாத்தியார்.   அதுதான்  டைமிங்.  இதைத்தான்  மற்றவயளுக்கும் சொல்றனான்.   நாங்கள்  எதனையும்  டைமுக்குத்  தொடங்கி டைமுக்கு   முடிக்கவேணும்.   என்ன... நான்  சொல்றது  சரிதானே...?"
' பிறந்த  நாள்  கொண்டாட்டங்கள்  விதிவிலக்கானவையா...? ' என்று அவரிடம்  கேட்க  நினைத்தேன்.  ஆனால்,  ஏனோ  கேட்கவில்லை.
" அந்தப்பெடியனுக்கு   ஒருக்கால்  சொல்றீங்களா...?  நான்  வீட்டை போகவேணும்." என்றேன்.
" இல்லை... வாத்தியார்.   அவன்  பெடியனுக்கு  இங்கே  நிறைய  வேலை இருக்கு.   எல்லாம்  அடுக்குப்பண்ணி,  மண்டபத்தையும் சுத்தப்படுத்திக்கொடுக்கவேண்டும்.   நீங்கள்  எங்களோடு  வரலாம். காரில்   இடமிருக்கு.   இன்றைக்கு  எங்கட  மூத்த  மகன்  வீட்டை உங்களுக்கு   டின்னர்.   பிறகு  மகன்  உங்களை கொண்டுபோய்விடுவான்." என்றார்  காராளசிங்கத்தார்.
அவரது  அழைப்பைத்தட்ட  முடியவில்லை.  அவரும்  வாக்குத்தவறாமல்   அழைத்துச்சென்றார்.
அவருடைய  மூத்த  மகனின்  வீட்டுக்குச்செல்லும்போதுதான் அவருக்கு   இங்கே  ஒன்றல்ல,  மூன்று ,  நான்கு  வீடுகள்  இருப்பது அவர்   உரையாடலில்   தெரியவந்தது.
அந்த  அழகான  பெரிய  மாடிவீட்டுக்குள்  சென்றதும்,  சுவரில் படமாகத்தொங்கிய   அவர்  புதல்வர்களை  அறிமுகப்படுத்தினார். நான்கு  புதல்வர்களும்  பட்டதாரிகளாகி,  பல்கலைக்கழக - மருத்துவ பீட   பொறியியல்  பீடச்சான்றிதழ்கள்  சகிதம்  காட்சியளித்தார்கள்.
கல்விக்காக,   விளையாட்டுக்களுக்காக   அவர்கள்   பெற்றிருந்த கேடயங்கள்,   விருதுகள்,  பாராட்டுச்சான்றிதழ்கள்   ஒரு  பெரிய கண்ணாடி   அலுமாரியில்    அலங்கரமாக   வீட்டுக்கு  வரும் விருந்தினர்களுக்காக   விருந்து  படைத்தன.
" இவன்  செல்வகுமார்  மூத்தவன்  எஞ்சினியர்.  இது  சிவகுமார்.... டொக்டர்.   இவன்  மூன்றாவது....  ராஜ்குமார்  சொலிஸிட்டராக பிரக்டிஸ்   செய்யிறான்.    இவன்தான்  கடைக்குட்டி   சந்திரகுமார்.  தாயின்ர  செல்லம். போனவருஷம்  டிகிரி  முடிச்சிட்டான். எக்கவுண்டன்ஸி  செய்தவன்.  சொந்தமாக  ஒரு Audit Firm  தொடங்க உத்தேசம்.   இனித்தான்   இவனுக்கு  பொம்பிளை  தேடவேணும்.
பட்டதாரி  உடை,  தொப்பிகள்  சகிதம்  அந்த  நான்கு  புதல்வர்களும் என்னைப்பார்த்து  முறுவலிப்பதாக   உணர்ந்தேன்.
காராளசிங்கத்தார்   கொடுத்துவைத்தவர்.  முற்பிறவியில்  புண்ணியம் செய்திருக்கவேண்டும்.   நான்கு  சிங்கக்குட்டிகளின்  தந்தையென்ற பெருமிதம்  அவர்  முகத்தில்   மின்னியது.
நானும்  இவரைப்போன்று  எப்போதோ  இங்கே  வந்திருந்தால்,  எனது மகன்  கபிலனும்  இப்படி பட்டதாரி உடையுடன் சுவரில் காட்சியளித்திருப்பான்.
பொங்கிவந்த  பெருமூச்சை  நாகரீகம்  கருதி  அடக்கிக்கொண்டேன்.
பல  மணிநேரங்களின்  பின்னர்,   நித்திரையின்போது   எனக்கு  மூச்சே அடங்கிவிட்டது.
காராளசிங்கத்தார்  மகனுடைய  வீட்டை  சுற்றிக்காண்பித்தார்.
"மற்ற மகன்மார் எங்கே...?" எனக்கேட்டேன்.
" பொறுங்கோ... வாத்தியார்.  ஒவ்வொருத்தரும்  ஒவ்வொரு  வீட்டில். இன்றைக்கு   வருவினம்.   மாதத்துக்கு  ஒருதடவை  எங்களுக்குள்ள  ஒரு  Get together.   ஒவ்வொரு   மகன்மார்   வீட்டிலயும்   நடக்கும். இன்றைக்கு   இங்கே... மூத்தவன்ட   வீட்டில்.   பகல்தான் நடக்கவிருந்தது.   ஒவ்வொருத்தருக்கும்   பல   சோலிகள்.    எனக்கும் இந்தத் தியாகிகள்  தின விழா வேலைகள்  இருந்தது.   அதுதான்.... எல்லாம்  முடிஞ்சாப்பிறகு,   இங்கே  மூத்தவன்ட  வீட்டில்  டின்னர்.  அதுதான்   உங்களையும்  வரச்செய்து  அழைச்சனான்.   பால்யகால சிநேகிதமல்லோ..." அவர்  உரத்துச்சிரித்தார்.
தொலைபேசி    ஒலித்தது.
அவரின்   மருமகள்   எடுத்துப்பேசினாள்.
அவள்,   சமையலறைப்பக்கம்  திரும்புகையில்,   ஹோல்   பக்கம் வந்து," மாமா,  சந்திரன்தான் எடுத்தவர். இடியப்பம் ஓடர் செய்த வீட்டில்  நிற்கிறாராம்.  அரை  மணிநேரத்தில  வராராம்.  உங்களிட்டச் சொல்லச்சொன்னவர்." என்றாள்.
" ஆறுதலாக  வரட்டும்..."  காராளசிங்கம்  மதுப்புட்டியை எடுத்தார்.
சற்றுநேரத்தில்  அழைப்பு  மணி  ஒலித்தது. காராளசிங்கத்தின் மனைவி   கதவைத்திறந்தாள்.   ஒரு குடும்பம் வந்தது.
   ''  வாத்தியார்,  இதுதான்  சிவக்குமார்,   டொக்டர். "
அறிமுகப்படுத்தியதும்   அந்த  அழகான சிவந்த  நெடிதுயர்ந்தவன் அருகே  வந்து, எனது கரம் பற்றிக்குலுக்கினான். அவனது மகள் ஐந்து வயதிருக்கும், " கிரேண்ட்பா" என்று  கூவிக்கொண்டு  உற்சாகமாக ஓடிவந்து  காராளசிங்கத்தாரின்  மடியில்  ஏறி  அமர்ந்தாள்.
அவர்  பேத்தியின்  தலையில்  உச்சிமோந்தார்.
உரையாடல்  தொடர்ந்தபோது   சொலிஸிட்டர் குடும்பமும்   எக்கவுண்டனும்    வந்துவிட்டனர்.
" ஒன்றாகத்தான் வாரியளோ....?" எனக்கேட்ட  காராளசிங்கத்தார் அவர்களையும்  அறிமுகப்படுத்தினார்.
சகோதரர்கள்  ஆங்கிலத்தில்  ஏதோ  பேசிக்கொண்டு  ஒரு  அறைக்குள் சென்றனர்.
அவரது  மூத்த   மருமகள்  எனக்கு  தோடம்பழச்சாறு  தந்தாள். உரையாடல்  தொடர்ந்தது.
ஊர்  புதினங்கள்,   பழைய  மாணவர் சங்கங்கள், கோயில் சண்டைகள்,  கிரிக்கட்,  நாட்டுப்பிரச்சினைகள்,   சதாம் உசேன், ஒஸாமா  பின்லாடன், ஒபாமா,   என்று  உரையாடல்  எங்கெல்லாமோ சுற்றிச்சுழன்றது.
அவருக்கு  உள்ளே சென்றது  புத்துணர்ச்சி  தரவேண்டும். அதன்பிறகுதான்  சாப்பிடவேண்டும்.   அதுவரையில்  உரையாடல் நீடித்தது.
அவரது  மனைவியும்  மருமகள்மாரும்  சமையலறையிலிருந்து உணவுகள்  நிரம்பிய  பாத்திரங்களை  நீண்ட  சாப்பாட்டு   மேசைக்கு எடுத்துவந்தனர்.  இடியப்பம்  வாங்கிவந்த  எக்கவுண்டன் சந்திரகுமார்  அது  நிரம்பிய   பெட்டியை   தூக்கிவந்தான்.
பேரப்பிள்ளைகள்  ஒரு  விசாலமான அறையிலிருந்து கும்மாளம் போட்டனர்.  ஒரு  மூலையில்  தொலைக்காட்சியில்  பாடல்காட்சியில் விஜய்யும்   த்ரிஷாவும்  ஆடிக்கொண்டிருந்தனர்.   அந்த  ஆட்டத்தை எவரும்   கேட்பாரில்லை.   பார்ப்பாரில்லை.
அந்த  அழகான  வீட்டில்  என்னை   வசீகரித்தது  சுவரிலிருந்த இஞ்சினியரும்,   டொக்டரும்,  சொலிஸிட்டரும் ,  எக்கவுண்டனும்தான். கெட்டிக்கார   மக்கள்.   படித்து  முன்னேறிவிட்டார்கள்.
தியாகிகள்  தின  விழாவில் ஒளிப்படங்களாக  காட்சியளித்த இளம் துளிர்கள் மண்ணிலே வித்தாகிப்போனார்கள்.  மகன்  கபிலனும்  ஒரு வித்து  என்ற துயர் தோய்ந்த  பெருமையைத்தவிர,  எனக்கு வேறு என்ன பெருமை இருக்கமுடியும்....!!!!
அந்த மேசையில் அமர்ந்து உணவருந்தினாலும்  உள்ளே  செல்ல மறுத்தது.  அடிக்கடி  தண்ணீர்  அருந்தினேன்.  விதம்  விதமான உணவுவகைகள்  பரிமாறப்பட்டிருந்தன.  அவை என்னை எடுத்து விழுங்கு எனச்சொல்வதுபோன்ற  உணர்வு.
பேருக்கு  ஏதோ  சாப்பிட்டேன்.
" அங்கிள்... உங்களுக்கு  தாகம்  அதிகமா...?  ஒரு  செக்கப்  செய்தால் நல்லது" என்றான்  டொக்டர்  மகன்.
" டயபட்டீஸ்  இருந்தாலும்  அடிக்கடி  தாகம்  வரும்   இல்லையா தம்பி...?" எனக்கேட்டாள்  தாய்.
" கொலஸ்ரோல்  ஏதும்   இருக்கா  வாத்தியார்...?" எனக்கேட்டார் காராளாசிங்கம்.
" தெரியவில்லை..."  என்றேன்.
" அங்கிள்... ஒரு நாளைக்கு  என்ர  கிளினிக்குக்கு  வாங்க... முழுசா ஒரு செக்கப்  செய்திடுவம். " என்று  சொன்ன அந்த டொக்டர், விருந்து முடிந்தபோது  தனது  விசிட்டிங்  கார்டைத்தந்தான்.
காராளசிங்கத்தாரின்  இஞ்சினியர்  மகனே  என்னை  மகள்  வீட்டுக்கு கொண்டுவந்து  விட்டு  விடைபெற்றான்.
இறப்பதற்கு   முன்னர்  நான்  இறுதியாக  பயணித்தது  அவனுடைய பி.எம்.டபிள்யூ. காரில்தான்.
இப்போது  வெளியே  நிற்கும்  அழகான  வெள்ளை  நிற  நீண்ட  கார் ஒன்றில்  சடலமாக  இறுதிப்பயணத்திற்கு  தயாராகின்றேன்.
காராளசிங்கத்தார்  மகன்  வீட்டு  இராப்போசன  விருந்திற்குப்பிறகு மகள்  வீடு  வந்து  உறங்கியபோது,  மகன்  கபிலன்  கனவில்  வந்தான். நெஞ்சை   நிறைத்தான்.   தன்னிடம்  வருமாறு  அழைத்தான்.  அவன் கழுத்தில்  சயனைற்  குப்பி.  கரத்தில்  ஒரு ஏ.கே. 47.  முன்பு  கையில் கிரணைற்றும்  கொண்டு  திரிந்தவன்.   இப்போது  எதுவுமே  இல்லாமல் காற்றுப்போல்   அலைகிறான்.
இங்கே   வந்திருந்தால்,  ஒரு  டொக்டராகவோ,  இஞ்சினியராகவோ, எக்கவுண்டனாகவோ,   சொலிஸிட்டராகவோ  வந்திருப்பான்.  அவ்வாறு   வந்திராது போனாலும்,  எனது  அந்திம  காலத்தில் எனக்குத்துணையாக   இருந்து,  நான்  இறந்த  பின்னர்  எனக்கு கொள்ளிவைப்பதற்காகவேனும்   உயிரோடு  இருந்திருப்பான்.
இங்கே   கொள்ளியும்  வைப்பதில்லையாம்.  ஊதுவத்தியைத்தானாம் கொளுத்தி   சவப்பெட்டியில்  தலை  இருக்கும்  பக்கத்தில் வைத்துவிட்டு   ஒரு  பொத்தானை  அழுத்துவார்கள்.
பெட்டி  கீழே   இறங்கும்.  அப்படியே  எரிவாயு  உமிழும்  பகுதிக்கு போய்விடுமாம்.   பிறகு  என்ன...?  சாம்பல்தான்.
மயான  மண்டபத்தில்  மருமகன்  ஏற்கனவே  கேட்டுக்கொண்டதற்கு இணங்க,   காராளசிங்கமே  இறுதி  அஞ்சலி  உரை  நிகழ்த்தினார்.
இங்கும்  அவர்,    தமிழிலும்   ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டு வந்த உரையை  நிகழ்த்தி  நேரத்தை  மிச்சப்படுத்தினார்.
" எனது  பால்ய  கால  சிநேகிதன்.  ஊரிலே  தமிழ்  உபாத்தியாயர்.  பல பாடசாலைகளில்  பணியாற்றியவர்.  எம்மவர்களுக்கு  தமிழ் உணர்வை  ஊட்டியவர்.  தமிழ்  கற்பிப்பதை  ஒரு தொழிலாகச்செய்யாமல்   தொண்டாகவே  செய்தவர். தமிழ்த்தேசாபிமானம்   கொண்டவர்.  கல்தோன்றி  மண் தோன்றாக்காலத்திற்கு   முந்திய  தமிழின்  பெருமையை  எமது  தமிழ் மாணவர்   சமுதாயத்திற்கு  போதித்தவர்.   தன்னை  எம்  இனிய  தமிழ் மொழிக்காக   அர்ப்பணித்தவர்.   தனது  ஒரே  மகனை  தமிழ் மண்ணுக்காக .... தமிழர்  தாயகத்திற்காக  அர்ப்பணித்தவர். தவப்புதல்வனையும்   அன்பிற்குரிய   தாரத்தையும்  தாய்  நாட்டில் இழந்துவிட்டு   வந்து,  இங்கே  அந்நிய  தேசத்தில்  தன்னுயிர் நீத்துள்ளார்.   இதுதான்  விதியென்பது.  பகவத் கீதை  சொன்னவாறு கடமையைச் செய்து பலனை எதிர்பராமால்  மறைந்த  செம்மல்.
இனி  எங்களிடம்  எஞ்சியிருக்கப்போவது   இந்தச்சான்றோரின்  நினைவுகள்தான்.  அவரது  மகளுக்கும்  மருமகனுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும்   எனது  குடும்பத்தின்  சார்பிலும்  உங்கள் அனைவர்   சார்பிலும்  எமது  புலம் பெயர்  தமிழர்  அமைப்பின்  சார்பிலும்  சிரம்தாழ்த்தி  கண்ணீர்  அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எழுதிப்பேசிய  அந்தத்துண்டை  தமது  பொக்கட்டுக்குள்  வைத்துவிட்டு,  ஒலிவாங்கியை  பிடித்துக்கொண்டு,  மீண்டும்  அவர் பேசினார்.
"அன்பர்களே....  ஒரு  முக்கிய  குறிப்பு.  இந்த துயர நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும்  நீங்கள்  அனைவரும்  இறந்தவரின்  மருமகன் இல்லத்தில்   நடைபெறவிருக்கும்  அமரர்  நினைவு  பகல்  போசன விருந்தில்   கலந்துகொள்ளவேண்டும்  என்றும்  அழைக்கின்றோம்" என்றார்.
காராளசிங்கம்   குடும்பத்தினர்  உட்பட  அனைவரும்  அந்த விருந்துக்கு    செல்லத்தயாரானார்கள்.
நான்  ஏற்கனவே  மேல்  உலகம்  சென்றுவிட்ட  எனது  மகன் கபிலனையும்  மனைவி  ராஜேஸ்வரியையும்  தேடிச்செல்கின்றேன்.
 
Posted by tamilmurasu

 

http://www.tamilmurasuaustralia.com/

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரை நினைத்து பரிதாபப்படுவதா?

காராளசிங்கத்தை நினைத்து எரிச்சல் படுவதா?

நானும் ஒரு சின்ன காராளசிங்கம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கும் காராளசிங்கத்திற்கும் இடையே ஒரு பிரச்சனையும் இல்லை, இருவருக்குமே தெரியும் மற்றவர் செய்ததை, செய்வதை, செய்யப்போவதை தன்னால் செய்ய முடியாது என்று. ஆனால் பிரச்சனை இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றவது நபருக்கே.

 

பி.கு: எனது மாமனார் குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இல்லை, ஒருவர் மாவீரராக அறிவிக்கப்பட்டார், மற்றவர் அறிவிக்கப்படவில்லை மூன்றாமவர் 2008 இல் கைது செய்யப்பட்டவர் இன்றுவரை நிலை தெரியாது. அப்படியிருந்தும் எனது மாமனாரோ மாமியோ இன்றுவரை மற்றக் குடும்பத்தை பார்த்து (வாத்தியார் மாதிரி) பெருமியது கிடையாது. இப்படி பல மாவீரர் குடும்பங்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தும் நிலத்தின் நினைவுகளுடன் வாத்தியார்..... !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.