Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயகாந்தன் சிறு கதைகள்

Featured Replies

நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன்

ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோjayakanthan_185_1_050408 ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவிலே நின்னு பார்த்தா இந்த வீடு ரொம்ப லட்சணமா இருக்கோ இல்லியோ? அந்த லட்சணமே இந்த ஜன்னல் ரெண்டினாலேதான். ஜன்னல் இல்லேன்னா பார்க்கச் சகிக்குமோ? இந்த வீடு ரொம்பப் பழசுதான். பழசுன்னாலும் பழசு, அறதெப் பழசு… பழசானால் என்ன? அழகாகத்தானே இருக்கு! தாத்தாவோட தாத்தாவெல்லாம் இங்கேதான் பொறந்தாளாம். இப்போ இந்த வீட்டுக்கு ரெண்டு பக்கத்திலேயும் பெரிசு பெரிசா மாடி வீடு வந்துட்டுது. ரெண்டு பெரியவா கையைப் பிடிச்சுண்டு ஒரு சின்னக் கொழந்தை நிக்கற மாதிரி இந்த வீடுதான் குள்ளமா நடுவிலே நின்னுண்டு இருக்கு… சின்ன வீடு, ஓட்டு வீடு; வீட்டுக்கு முன்னே ரெண்டு பக்கமும் திண்ணை; நடுவிலே வாசற்படி; ரெண்டு திண்ணைக்கு நேராவும் ரெண்டு ஜன்னல்; இந்த வீடு ரெண்டு கண்ணையும் தெறந்துண்டு தெருவைப் பார்க்கற மாதிரி இருக்கும். இந்த ரெண்டு ஜன்னலும் இந்த வீட்டுக்கு ரெண்டு கண் மாதிரி. ஜன்னல் வீட்டுக்குக் கண்தானே? யார் சொன்னா அப்படி?… யாரும் சொல்லலே. எனக்கே அப்படித் தோன்றது… நான்தான் சொல்றேன்.

வீட்டுக்கு ஜன்னல் எதுக்கு வெச்சாளாம்? காத்து வரதுக்கு; வீடு தெருவைப் பாக்கறதுக்கு; வீட்டில இருக்கிறவா மூச்சு விடறதுக்கு. வீட்டிலெ இருக்கிறவா தெருவிலே நடக்கிறதையெல்லாம் பாக்கறதுக்கு…

ஏன் பார்க்கணும்னா கேக்கறேள்? நன்னா கேட்டேள்! ஏன் பார்க்கப்படாதுன்னு நான் கேக்கறேன். அதுக்குப் பதில் சொல்லுங்கோ. ஏன் மூச்சு விடணும்? ஏன் காத்து வரணும்னு கூடக் கேப்பேளா? இதெல்லாம் என்ன கேள்வி? ஜன்னலே இல்லாமெக் கட்டினா அதுக்கு வீடுன்னா பேரு? அது சமாதிடீ அம்மா, சமாதி!

காலமெல்லாம் இது ஒரு பேச்சா? ‘ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா… ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா’ன்னு கரிக்கறேளே…

எனக்கு ஜன்னலண்டேதான் சித்தே மூச்சு விட முடியறது. இந்த வீட்டிலே வேறே எங்கே போனாலும் மூச்சு முட்டறது; புழுங்கறது; உடம்பு தகிக்கிறது. இந்த வீட்டிலேயே… ஏன்? இந்த லோகத்திலேயே இதைவிட சொகமான இடம் கிடையாது. அடீ அம்மா! இங்கேதான் என்னமா ஜிலுஜிலுன்னு காத்து வரது! நான் உக்காந்துண்டிருக்கேனே, இந்த ஜன்னல் கட்டைதான் என்னமா வழவழன்னு இருக்கு! சேப்புக் கலர் சிமிட்டி பூசி இருக்கா… என்னதான் வெய்யல் நாளா இருந்தாலும் இது மட்டும் தொட்டா ஜில்லுனு இருக்கும்! ஜன்னலுக்கு நேரா தெரியறதே ஒரு அரச மரம்… எப்பப் பார்த்தாலும் அது ‘சலசல’ன்னு என்னமோ பேசிண்டே இருக்கு. இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி ‘ஜம்’னு உக்காந்துண்டு இந்த அரச மரத்தைப் பார்த்துண்டே இருந்தா நேரம் போறதே, காலம் போறதே தெரியறதில்லே – அப்படித்தான் நான் உக்காந்துண்டிருக்கேன்! இன்னிக்கி நேத்திக்கா உக்காந்திண்டிருக்கேன்? இதிலே உக்காந்துண்டா எனக்கு அது ஒரு பாந்தமாத்தான் இருக்கு. ஜன்னலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற சுவத்திலே ஒரு பக்கம் முதுகைச் சாச்சுண்டு இன்னொரு பக்கம் ரெண்டு பாதத்தையும் பதிய வச்சு உதைச்சுண்டா ‘விண்’ணுனு எனக்கு ரொம்பக் கச்சிதமா இருக்கு. இதெ எனக்காகவே கட்டி வெச்சிருக்கா. இது என்னோட ஜன்னல். நான் இந்த ஜன்னலோட நான்! எனக்காக இதைக் கட்டி வச்சு, இதுக்காக என்னைக் கட்டி வச்சுட்டா. யாரும் வெக்கல்லே; நானே வச்சுண்டேன்! எப்படிச் சொன்னாத்தான் என்னவாம், இப்போ?

இந்த மாதிரி ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு உக்காரணும்னு எவ்வளவு காலம் பிரயாசைப் பட்டிருக்கேன் தெரியுமா, நான்? அப்போவெல்லாம் எனக்குக் காலே எட்டாது. கால் எட்டினா முதுகைச் சாச்சிக்க முடியாது! அப்பல்லாம் ஜன்னல் கட்டையிலே ஏறி நின்னுண்டா எனக்கு உசரம் சரியா இருக்கும்!

எப்படி நிக்கணும் தெரியுமா? ரெண்டு கம்பிக்கு நடுவே ஒரு காலை வச்சுக்கணும். வலது காலை வச்சுண்டா வலது கையாலே கம்பியை இழுத்துப் பிடிச்சுண்டுடணும்… அப்புறம் இந்தப் பக்கமா இடது கையையும் இடது காலையும் நீளமா வீசி வீசி அரை வட்டமா சுத்திச் சுத்தி ஆடணும்… ரயில் போறதாம்!… வேக வேகமா போறதாம்; தந்திக் கம்பியெல்லாம் ஓடறதாம்! அப்பறம் கும்மாணம் வரதாம்… தஞ்சாவூர்லே நிக்கறதாம்; மறுபடியும் போறதாம்; திரும்பி இங்கேயே வந்துடறதாம்…

அடீ அம்மா! இந்த ஜன்னல் கட்டையிலே உக்காந்துண்டே நான் எத்தனை பிரயாணம் பண்ணி இருக்கேன்!…

காலையும் கையையும் வீசி வீசிச் செஞ்ச பிரயாணம்; கண்ணையும் மனசையும் வெரட்டி வெரட்டிச் செஞ்ச பிரயாணம்; ஆடாமல் அசங்காமல் செஞ்ச பிரயாணம்; அழுதுண்டு செஞ்ச பிரயாணம்; சிரிச்சுண்டு செஞ்ச பிரயாணம்; ஆனந்தமான பிரயாணம்; பிரயாணத்தின் அலுப்பே இல்லாமல் செஞ்ச பிரயாணம்…

ஜன்னலுக்குப் பொருத்தமாகப் பொருந்தி உக்காந்துண்டு நான் எவ்வளவு பிரயாணம் போயிருக்கேன்! பிரயாணம் போனவாளையும் பார்த்திருக்கேன். எவ்வளவோ பேர் போறா… சும்மா போறவா, சொமந்துண்டு போறவா, தனியாப் போறவா, கூட்டமாப் போறவா, ஜோடியாய் போறவா…

இந்த ஜன்னல் வழியாக மொதல்லே யார் பார்த்திருப்பா? மொதல்லே என்னத்தைப் பார்த்திருப்பா?… யாரோ பார்த்திருப்பா… எதையோ பார்த்திருப்பா… நான் மொதல்லே என்ன பார்த்தேன்? எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் நெனைவே இந்த ஜன்னல் வழியாப் பார்த்ததுதான்… என்னைப் பெத்தவளை நான் பார்த்த ஞாபகமே இலை… உயிரோடு பார்த்த ஞாபகமில்லை. எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் விஷயமே அதுதான்.

அம்மாவைத் தூக்கிண்டு போனாளே அதுதான்!… யார் யாரோ அழுதுண்டு வாசல் வரைக்கும் ஓடி வந்தாளே… அவா அழ அழ அவசர அவசரமா அம்மாவைத் தூக்கிண்டு நாலு பேர் ஓடினாளே… நான் இந்த ஜன்னல் மேலே நின்னுண்டு, ஜன்னல் வழியாப் பார்த்துண்டிருந்தேனே!…

அதுக்கப்பறம் அந்த மாதிரி எத்தனையோ பார்த்திருக்கேன். சந்தடியில்லாமத் தூக்கிண்டு திடுதிடுன்னு ஓடுவா… சில பேர் தாரை, தப்பட்டை, சங்கு எல்லாம் வச்சுத் தெருவையே அமக்களப்படுத்திண்டு போவா. சில சமயத்திலே அவா போனப்புறம் கூடத் தெருவெல்லாம் ரொம்ப நாழி ஊதுவத்தி மணக்கும்…

அதே மாதிரி, கல்யாண ஊர்கோலமும் பார்த்திருக்கேன்! அது ரொம்ப நன்னா இருக்கும். அதென்னமோ யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் நமக்குச் சந்தோஷமா இருக்கு. ஊர்கோலம் ஜன்னல் கிட்டே வர்றதுக்கு முன்னே ரொம்ப நாழிக்கி முன்னயே – திடும் திடும்னு மேளம் கொட்டற சத்தம் தூரத்திலே கேக்க ஆரம்பிச்சுடும். அதுவும் கல்யாண மேளச் சத்தம்னா அது மட்டும் தனியாத் தெரியறது. அது வந்து போறவரைக்கும் நான் ஜன்னலை விட்டு நகரவே மாட்டேன்…

அந்த ஜன்னல் வழியாத் தெரியற தெரு, அதோ… அந்த அரச மரத்தடி பிள்ளையார் தெரியறதே அங்கே ஆரம்பிச்சு இந்தப் பக்கம் சிவானந்தம் வீடு வரைக்கும் தான் தெரியும். அதுவும் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையை நன்னா சாச்சுச் சாச்சுப் பார்த்தால்தான் இந்த அளவுக்குத் தெரியும். கல்யாண ஊர்கோலம் வரச்சே, அந்த லைட்டுத் தூக்கிண்டு வர ஒருத்தன் மொதல்லே அரச மரத்தடிக்கு வருவான். சில பேர் லைட்டை அங்கேயே எறக்கியும் வச்சுடுவான். ஆயிரந்தான் எலக்டிரிக் லைட் இருக்கட்டுமே, கல்யாணம்னா இந்த லைட்தான் வேண்டியிருக்கு. ‘ஓ’ன்னு பாயிலர் எரியறமாதிரி… நாதசுர சப்தம் பக்கத்திலே கேக்கும். அதென்னமோ கல்யாண நாதசுரத்தைக் கேட்டா மட்டும் வயத்துக்குள்ளே என்னமோ குளு குளுங்கும். அப்புறம் நெறைய பெட்ரோமாக்ஸ் லைட்… வரிசையா வந்துடும்… உடம்பெல்லாம் வேர்த்து நனைய நனைய அந்தத் தவுல்காரனும் நாதசுரக்காரனும் போட்டி போட்டுண்டு வாசிப்பா. எனக்கு ஒத்து ஊதறவனைப் பார்த்தாச் சிரிப்பு சிரிப்பா வரும். பல் வலிக்காரன் மாதிரி அவன் வாயிலே துணியை வச்சுண்டு நிப்பான். அதுக்கப்புறம் கல்யாண ஊர்கோலத்துக்காகவே சேஞ்சு வச்ச மாதிரி ஒரு கார்… அந்தக் காருக்கும் அன்னிக்கிக் கல்யாணம்! மாலையெல்லாம் போட்டிருக்கும். அந்தக் காரிலே யார் இருந்தாலும் இல்லாட்டாலும் வாண்டுப் படைகள் மட்டும் நிச்சயமா இருக்கும். சில சமயங்களிலே மாப்பிள்ளை மட்டும் தனியா, கொழந்தைகள் உண்டு; அதாவது பொண் இல்லாமல் வருவார். சில சமயத்திலே பெண்ணும் மாப்பிள்ளையும் ஜோடியா வருவா. பொண்ணு தலையைக் குனிஞ்சிண்டிருக்கும். ஆனா மனசுக்குள்ளே ஒரே சந்தோஷம்னு மொகத்திலேயே தெரியும்! எல்லாப் பொண்களும் தலையைக் குனிஞ்சிண்டுதான் இருக்கும். ஆனா என்னோட படிச்சாளே சுமதி அவளுக்கு என்ன தைரியம்! ஊர்வலம் ஜன்னலண்டை வரும்போது என்னைப் பார்த்து சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமாப் போயிடுத்து… எல்லாரும் திரும்பி என்னை வேற பார்க்கறா. அப்போதான் நானும் பார்த்தேன். எல்லார் ஆத்து ஜன்னல்லேருந்தும் எல்லாருந்தான் பார்க்கறா. ஆமா; என்னை மட்டும் பெரீசா சொல்றாளே… கல்யாண ஊர்கோலம் வந்தா அவாளுந்தானே வேடிக்கை பார்க்கறா… அவாளுக்கு கல்யாண ஊர்கோலம் மட்டும்தான் வேடிக்கை; எனக்கு எல்லாமே வேடிக்கை. நான் பார்க்கத்தான் பார்ப்பேன். காலத்துக்கும் இது ஒரு வழக்கா; இது ஒரு பேச்சா?

இந்த வீட்டிலேயே எத்தனையோ கல்யாணம் நடந்திருக்கு. எவ்வளவோ ஊர்கோலம் பொறப்பட்டிருக்கு. நான் அதையெல்லாம் கூட இந்த ஜன்னல் வழியாத்தானே பார்த்திருக்கேன். எனக்குத் தெரிஞ்ச இந்த ஆத்திலே நடந்த மொதல் கல்யாணம் அப்பாவோட கல்யாணம். ஆனா அதுக்கு ஏனோ ஊர்கோலம் இல்லை. சித்தி அப்போ ரொம்ப அழகாயிருந்தா… அப்போல்லாம் எனக்கு அவளைக் கண்டா பயமே இல்லை. மொத மொதல்லே இந்த வாசல்லே ஜட்கா வண்டி வந்து நின்னு, அதிலேருந்து சித்தி எறங்கினாளே, அப்போ நான் இந்த ஜன்னல் மேலே ஏறி நின்னுண்டுதான் பார்த்தேன். சித்தி ரொம்ப நன்னாயிருந்தா… அப்பறந்தான் போகப் போக… பாவம், சித்தி! என்னமோ மாதிரி ஆயிட்டா. அவ அடிக்கடி அவ அம்மா ஆத்துக்குப் போயிடுவா. அவ ஊரு வைத்தீஸ்வரன் கோயில். சில சமயம் அப்பாவும் கூடப் போவார். ஆனா, அநேகமா சித்தி மட்டும் தனியாத்தான் போவா; தனியாத்தான் வருவா… தனியாவா? பிரசவத்துக்காகப் போய்ட்டு வரச்சே பொறந்த கொழந்தையையும் தூக்கிண்டு, துணைக்குப் பாட்டியையும் அழைச்சுண்டுதான் வருவா. பாபு பொறந்தப்பவும், நாணு பொறந்தப்பவும் அந்தப் பாட்டி வந்தா… அப்புறம் வரல்லை. ஒரு தடவை அவ செத்துப் போயிட்டான்னு அடிச்சுப் பொரண்டு அழுதுண்டு சித்திதான் போய்ட்டு வந்தா. அப்புறமெல்லாம் சித்தி மட்டும் தனியாப் போய்க் கொழந்தையைப் பெத்துண்டு வந்துடுவா. அப்பா, நான், மத்த கொழந்தைகள் எல்லாரும் இங்கேயேதான் இருப்போம். அப்பாதான் சமைப்பா… நான் கொழந்தைகளை யெல்லாம் ஜன்னல்லே உக்காத்தி வச்சுண்டு வெளையாடிண்டிருப்பேன். கொழந்தைகளுக்கெல்லாம் சாதம் ஊட்டுவேன். அப்பா எனக்குச் சாதம் போடுவா. கொஞ்ச நாளைக்கி அப்புறம் நானே சமைக்க ஆரம்பிச்சேன். நான் சமைச்சு, கொழந்தைகளுக்குப் போட்டு, அப்பாவுக்கும் போட்டு, எல்லாத்தையும் அழைச்சிண்டு ஸ்கூலுக்குப் போய்டுவேன். சித்திக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவா. வந்து கூடத்திலே தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா; கொஞ்சம் எழுந்து கூடமாட ஒத்தாசை சேஞ்சுண்டு வளைய வருவா. மறுபடியும் தலையைச் சுத்தறது, வாந்தி வரதுன்னு படுத்துண்டுடுவா. அதுக்கப்பறம்… வைத்தீஸ்வரன் கோயில்… ஜட்கா வண்டி… கூடத்தில் தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா.

நான் எட்டாங் கிளாஸ் படிச்சிண்டிருந்தப்போ என்னை ஸ்கூலை விட்டு நிறுத்திட்டா. சித்திதான் வேண்டாம்னுட்டா. அப்புறம் நாள் பூரா அடுக்களை வேலைதான். புகை, கரி, புழுக்கம்… அடி அம்மா! மொகத்தைத் துடைச்சுண்டு ஓடி வந்து சித்தெ இந்த ஜன்னலண்டை நின்னா, எவ்வளவு சொகமா இருக்கும்! ஸ்! அப்பாடீ…

அப்படி நிக்கறச்சேதான் ஒரு தடவை என்னோட படிச்சாளே சுமதி, அவ கல்யாண ஊர்கோலம் வந்தது. அவளுக்கு என்ன தைரியம்! ஜன்னலண்டை வரச்சே என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமா போய்டுத்து. நெஜமாகவே எனக்கு வெக்கமா இருந்தது, அவமானமா இருந்தது. நான் எட்டாவதோட நின்னுட்டேன்; அவ அதுக்குமேலே படிச்சா, பத்தாவது பாஸ் பண்ணினா, பாட்டு கத்துண்டா, வீணை கத்துண்டா, கல்யாணமும் பண்ணிண்டா; ஊர்கோலம் வரா; இப்ப என்னைப் பார்த்துக் கையை ஆட்டறா. எனக்கு வெக்கமா இருக்காதா? அவமானமா இருக்காதா? ம்… நான் என்ன பண்ணப் போறேன்?

பாத்திரம் தேய்க்க வேண்டியது; தெனம் ஒரு மூட்டை துணி தோய்க்க வேண்டியது. அடுப்படியிலே உக்காந்து நானும் வெந்துண்டே எதையாவது வேக வைக்க வேண்டியது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ட்டுச் சித்தி கொண்டு வந்து தந்திருக்காளே அரை டஜன் தம்பிகள் – அதையெல்லாம் வளர்க்க வேண்டியது. இதுக்கு இடையிலே ஏதாவது கொஞ்சம் அவகாசம் கெடச்சா ஜன்னலண்டை வந்து சித்தெ மூச்சுவிட வேண்டியது. வேற நான் என்ன செய்யப் போறேன்?

சுமதி கையை ஆட்டினாளே! அன்னிக்கிச் சித்தி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தா. அப்பாவும் நானும் மாத்திரம் தனியாயிருந்தோம். பசங்களைக் கூடக் காணோம்.

‘என்னம்மா கண்ணெல்லாம் செவந்திருக்கு’ன்னு அப்பா கேட்டார். வழக்கமா நான் அழும்போது யாராவது பார்த்துட்டா, ‘அம்மாவை நெனச்சிண்டேன்’னு பொய் சொல்லுவேன். ஏன்னா எனக்குப் பேரே தாயில்லாப் பொண்ணுதானே! அதிலே எனக்கு ஒரு செளகரியம். ஆனா, அன்னிக்கி நான் அப்படிச் சொல்லலை. நம்ப அப்பாதானேன்னு கொஞ்சம் தைரியமா மனசை விட்டுக் கேட்டேன்: “அப்பா அப்பா… எனக்கு எப்போப்பா கல்யாணம் பண்ணப் போறேள்?”னு கேட்டேன். என்ன தப்பு அதிலே?…

எனக்கு இன்னிக்கும் இது ஒரு தப்புன்னு தோணவேயில்லை. ஆனா, நான் கேட்டேனோ இல்லியோ உடனே அப்பா மொகம் மாறிடுத்து. என்னத்தையோ அசிங்கத்தை பார்க்கறமாதிரி மொகத்தை சுளிச்சுண்டு என்னெ மொறைச்சுப் பார்த்தார். நான் பயந்து நடுங்கிட்டேன். அதுக்கப்புறம் நான் அப்பா மொகத்தைப் பார்த்ததே இல்லை; செத்துப் போனப்புறம் கூடப் பார்க்கலை.

நான் கேட்டேனே அதுக்குப் பதில் சொன்னாரோ மனுஷர்? கோவம் வந்துட்டாப் போறுமா? கோவம் இவருக்கு மட்டுந்தான் வருமோ? எனக்கு வராதோ? கேட்டதுக்குப் பதில் சொல்ல வக்கில்லே. பெரிசாப் பேசினா எல்லாரும். நான் அப்பிடிக் கேட்டிருக்கப் படாதாம், நான் மானங்கெட்டவளாம், எனக்குக் கல்யாணப் பித்தாம், ஆம்பளைப் பயித்தியமாம். என்னென்னமோ அசிங்கம் அசிங்கமாப் பேசினா. எல்லாரும் கூடிக் கூடிப் பேசினா. எல்லாத்துக்கும் இந்த அப்பாதான் காரணம். சித்தி வந்ததும் வராததுமா அவகிட்டெப் போய் இதெச் சொல்லி வச்சிருக்கார். எனக்கு வேணும். நன்னா வேணும். ‘நம்ப அப்பாவாச்சே’ன்னு சொந்தமா நான் கேட்டேன் பாருங்கோ; அதுக்கு இதுவும் வேணும். இந்த மனுஷன் எனக்கா அப்பா? சித்திக்கின்னா ஆம்படையான்! அதுக்கப்புறம் இவர் கிட்டே எனக்கென்ன பேச்சு? இவர் மொகத்தை என்ன பார்க்க வேண்டியிருக்கு? செத்தப்புறமும் நான் பார்க்கல்லே. இப்ப நெனச்சுப் பார்த்தாக்கூட அவர் மொகம் ஞாபகம் வரமாட்டேங்கறதே!…

அப்படி என் மனசை வெறுக்கப் பண்ணிப்பிட்டா… ம்!… என்னைக் கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கா… அடீ அம்மா! பொண்ணாப் பொறந்ததுக்கு எனக்கு ஒரு ஜன்மத்துக்கு இது போறுமே, போறுமே…

நான் ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். குளத்தங்கரை அரச மரத்தடி மேடையிலே யாரோ வந்து வந்து உக்காந்துக்கறானாம். அவனைப் பார்க்கறதுக்குத் தான் நான் போயிப் போயி நிக்கறேனாம். அங்கே யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார் தான் உக்காந்திருக்கார். பிள்ளையாரைப் பார்த்துண்டுதான் நானும் உக்கார்ந்துண்டிருக்கேன், பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷப் பிள்ளையார். அவர் ஆம்பிள்ளைப் பிள்ளையார். நான் பொம்பிளைப் பிள்ளையார்.

அப்புறம் அங்கே சில சமயத்துலே நாய்கள் மேஞ்சுண்டு நிக்கும். சண்டை போட்டுண்டு நிக்கும். வெரட்டிண்டு திரியும். சரசமாடிண்டு வெளையாடும். குரைக்கும். அழும். மனுஷா மாதிரி படுத்துண்டு தூங்கும். முன்னே ஒரு நாய் அந்த அரசமரத்தடி மேடையிலே, அதோ ஒரு மூலை மாதிரி இருக்கே – அங்கே குட்டி போட்டு வச்சிருந்தது.

இதையெல்லாம் பாத்துண்டு நான் உக்கார்ந்திருக்கேன். நேக்கு இதெல்லாம் பிடிக்கறது. பார்க்கறேன். யாருக்கு என்னவாம்?

நான் ஜன்னலண்டை உக்காந்திருக்கறச்சே எனக்குத் தெரியாம பூனை மாதிரி அடி மேல் அடி வச்சு வந்து என் முதுகு மேலெ எக்கிண்டு பார்ப்பா சித்தி. தெருவிலே யாராவது போனா அவனுக்காகத்தான் நான் அங்கே வந்து நிக்கறேன்னு நெனைச்சுக்குவா. அரசமரத்தடியிலே எவனாவது ஒரு சோம்பேறி உக்காந்து பீடி குடிச்சிண்டிருப்பான். அவனைப் பார்த்துத்தான் நான் மயங்கிப் போறேன்னு இவ நெனச்சுக்குவா. யாராவது இருந்தா, அவனைப் பார்க்கறேனாம். யாருமே இல்லைன்னா யாருக்காகவோ காத்துண்டு இருக்கேனாம்! அப்படியெல்லாம் பேசிக்குவா. எனக்கென்ன போச்சு? யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் நெனச்சுண்டு போகட்டுமே! அவா அவா புத்தி; அவா அவா நெனப்பு; அவா அவா குணம்…

யாரோ என்னைப் பார்க்கறாளாம். பாக்கட்டுமே! பார்த்தா என்னவாம்? ஜன்னலும் பாக்கறதுக்குத்தான் இருக்கு. ஜன்னல்ங்கறது உள்ளே இருக்கிறவா வெளியே பார்க்கறதுக்குத்தான். வெளியே இருக்கிறவா உள்ளே பார்த்தா, அதுக்கு நான் என்ன செய்யறது? நெனைக்கறது சரியாயிருந்தா பாக்கறதிலே ஒண்ணும் தப்பேயில்லை.

போகப் போக எனக்கு மனசிலே பட்டது. யாரையோ நான் தேடிண்டுதான் இருக்கேனா? யார் அது? தேடினால் தப்பா? நான் தேடவே இல்லையே. சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கறேன்… தேடினாக்க தப்பா? நான் யாரைத் தேடறேன்? நான் யாரைத் தேடறேனோ அவனே வந்துட்டா, ஜன்னல் வழியாவா நான் அவனோடு ஓடிப் போக முடியும்? இவாள்ளாம் நெனைக்கறாளேன்னு நானும் வெளையாட்டா ஒரு நாளைக்கித் தேடிப் பார்த்தேன். எனக்கு ஒருத்தருமே தென்படலே. பாவம்! ஒவ்வொருத்தரும் அவாவா பாட்டுக்கு என்னவோ போறா, வரா; நிக்கறா; பேசறா; என்னை ஒருத்தரும் பார்க்கலை. இவாதான் தெருவிலே போறவன் வரவன் எல்லாரையும் என்னோட முடிச்சுப் போட்டுக்கறா. சீ! எவ்வளவு அசிங்கமா நெனைக்கறா! இந்தச் சித்தி ஒரு நாள் என்னை என்னமோ அசிங்கமா கேட்டா… நேக்குக் கோபம் வந்துட்டுது.

“உனக்குப் புத்தி அப்படித்தான்… வருஷத்துக்கு ஒரு தடவை ஓடறியே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு”ன்னு என்னமோ நன்னாக் கேட்டுட்டேன்… பின்னே என்ன? இவமட்டும் என்னெக் கேக்கலாமோ?

நான்தான் நெஜத்தைச் சொல்றேனே, எனக்கு மத்த இடத்திலெல்லாம் மூச்சு முட்டறது. இங்கே வந்து நின்னாதான் சித்தெ மூச்சுவிட முடியறதுன்னு. நான்தான் வெளியிலேயே போக முடியாது. வெளியே போறவாளையாவது பாக்கப்படாதா?

ஐயோ! அதெ நெனைக்கவே எனக்குப் பயமாயிருக்கு! ஒரு நாள், என் கழுத்தைப் புடிச்சு அமுக்கின மாதிரி, ஒரு பானையிலே போட்டு என்னைத் திணிச்சு அடச்ச மாதிரி, என்னைப் படுக்க வச்சு என்மேல ஒரு பாறாங்கல்லை வச்சு அழுத்தின மாதிரி… இந்த ஜன்னலை மூடிட்டா!… நேக்குக் கண்ணே குருடாயிடுத்து. அதெவிட அவா என்னெக் கொன்னுருக்கலாம். அலறி, மோதி, அடிச்சுண்டு அழுதிருக்கேன் பாருங்கோ… இன்னும் கொஞ்ச நாழி ஜன்னலைத் தெறக்காம இருந்திருந்தா நான் நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிருப்பேன். அப்…பா, தெறந்துட்டா, அன்னிக்கி இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி உக்காந்தவதான்! நான் ஏன் எறங்கறேன்? நான் அந்தப் பக்கம் போனா இந்தப் பக்கம் மூடிடுவாளே!…

ஜன்னலைத் தெறந்து விட்டுட்டா… அத்தோட போச்சா? திண்ணை நெறய ஒரே வாண்டுப் படைகள்! எனக்கு ஒண்ணும் புரியலை. என்னை எதுக்கு எல்லாரும் இப்பிடி வேடிக்கை பார்க்கறா? நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து என்னால தாங்க முடியாம ஒரு நாள் வெரட்டினேன். அடிக்கலே; வையலே… ‘என்ன ஏன்டா இப்பிடி எல்லாருமாப் படுத்தறேள்’னு அழுதேன். அதெப் பாத்து எல்லாரும் ‘ஓ’ன்னு சிரிக்கறா…

அப்பா வந்தார். நான் அவர் மொகத்தைப் பார்க்கலே; ஆனா எங்கேயோ பாத்துண்டு ‘அப்பா’ன்னு அழுதேன். அவரும் எங்கேயோ பாத்துண்டு பக்கத்திலே வந்து நிக்கறார்னு புரிஞ்சுது. “அப்பா! நான் தெரியாமக் கேட்டுட்டேன். நேக்கு கல்யாணமே வேண்டாம். இந்த ஜன்னலண்டையே நான் உக்காந்திண்டிருக்கேன். அது போறும்”னு சொன்னேன். “ஜன்னலை மட்டும் மூட வேண்டாம்னு சொல்லுங்கோ”ன்னு கெஞ்சினேன்.

“இனிமே நான் கல்யாணம் வேணும்னு கேக்கவே மாட்டேன்… ஏதோ எல்லார் மாதிரியும் இருக்கணும்கிற ஆசையிலே, எனக்குத்தான் அம்மா கெடையாதே, அப்பாகிட்டே கேட்டா தப்பில்லைன்னு கேட்டுட்டேன்… அதுக்காக என்னை இப்பிடிப் படுத்தி வெக்கறேளே… ஜன்னலை மூட வேண்டாம்னு சொல்லுங்கோ”ன்னு அழுதேன்.

“உனக்கு ஜன்னல்தானே வேணும்? ஜன்னலையே கட்டிண்டு அழு”ன்னு அப்பா சொன்னப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்தது!

அப்புறம் ஒரு நாள்… “வாடீ என்னோட வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்”னு வாசல்லே வண்டியைக் கொண்டு வந்து வச்சுண்டு அப்பாவும் சித்தியும் என்னெ வேண்டி வேண்டி, உருகி உருகி அழைச்சா… நானா போவேன்? முடியாதுன்னுட்டேன். ஜன்னல் கம்பியை இறுக்கமாகப் புடிச்சுண்டு வரவே மாட்டேன்னுட்டேன்.

“நேக்கு வைத்தீஸ்வரன் கோவிலும் வேண்டாம்! இன்னொண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட ஜன்னல் போறும். இங்கேருந்தே நான் எல்லாத்தையும் பாத்துக்குவேன். என்னெ சித்தெ நிம்மதியா மூச்சுவிட விட்டுவிட்டு நீங்கள்ளாம் எங்கே வேணும்னாலும் போங்கோ”ன்னு இருந்துட்டேன்.

எனக்கு இந்த ஜன்னலே போறும்!

அப்புறம் திடீர்னு ஒரு நாள் என்னெச் சுத்தி ஒரே ஜன்னல்… பெரிய பெரிய ஜன்னல்…. சுவரே இல்லாம ஜன்னல்… ஐயையோ இது கூண்டுன்னா? தெய்வமே! நேக்கு கூண்டு வாண்டாமே! நான் என்ன புலியா? சிங்கமா? என்னெ எதுக்குக் கூண்டுலே போட்டேள்? எப்படிப் போட்டேள்? ஏன் போட்டேள்? எப்பப் போட்டு அடைச்சேள்?… நான் என்னடீ பண்ண?… அடீ அம்மா!…

வெறும் ஜன்னல் மட்டுந்தான் இருந்தது; அரச மரத்தைக் காணோம்; அதுக்குப் பின்னாலே இருக்கிற குளத்தைக் காணோம். சிவானந்தம் வீட்டைக் காணோம். கல்யாணமும் இல்லே, சாவும் இல்லே… வெறும் ஜன்னல். அதுவும் நம்பாத்து ஜன்னல் மாதிரி அழகா, சின்னதா இல்லே. ஜன்னல் கட்டை இல்லே… ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு ம்ஹீம்… ஒண்ணும் முடியாது.

அப்பிடி ஒரு இடமா? அப்பிடிக்கூட ஒரு இடம் இருக்குமா? கூண்டு மாதிரி, குகை மாதிரி, ஜெயில் மாதிரி. ஒரு வேளை அது பொய்யோ, கனவு கண்டிருப்பேனோ?… நேக்கு ஒண்ணும் தெளிவா சொல்லத் தெரியலை… விடுங்கோ… இப்பத்தான் ஜன்னலண்டையே, மறுபடியும் இங்கேயே வந்துட்டேனே!…

ஒரு சமயம் உள்ளே ஜன்னல் வழியா ஒரு யானை வந்துட்டுது! ஸ்வாமி ஊர்வலம் போறச்சே அந்த யானையை நான் பார்த்திருக்கேன்… அதே யானை! அடீ அம்மா! எவ்வளவு பெரியா யானை! எவ்வளவு நைஸா மொதல்லே தும்பிக்கையை நீட்டி ஏந்தி என்னெக் கூப்படற மாதிரி வந்து நின்னுது. அசைஞ்சி அசைஞ்சி ரெண்டு கம்பிக்கும் நடுவிலே தும்பிக்கையை விட்டு என் கன்னத்துலே ‘சில்’னுனு தொட்டப்போ நன்னாவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.

ஜன்னல் கட்டையிலே உக்கார்ந்திருந்த நான் எறங்கி வந்து அறை நடுவிலே நின்னுண்டேன். அந்த யானை நீளமா தும்பிக்கை முழுசையும் அறைக்குள்ளே நீட்டிண்டு என்னெப் பிடிக்கறதுக்கு துழாவறது… அப்புறம்…

அடீ அம்மா! இந்த அதிசயத்தைப் பாருங்கோளேன்… பார்க்கறவரைக்கும்தான் அதிசயம்.. இப்ப ரொம்ப சர்வ சாதாரனமா இருக்கு… அந்த யானையோட உடம்பு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா தட்டையாகி ஒரு கறுப்புத் துணி மாதிரி – யானை உருவத்துக்கு ஒரு படுதாவிலே கத்தரிச்சுப் பெரிசா தொங்க விட்டா எப்படி இருக்கும் – அந்த மாதிரி ஆடி ஆடி ஜன்னல் கம்பிக்கு நடுவே நொழஞ்சு முழுக்க உள்ளே வந்துட்டுதே! நடு அறையிலே கூரையிலே முதுகு இடிக்கிற மாதிரி மறுபடியும் முன்னே மாதிரியே யானையா நிக்கறதே… தும்பிக்கையாலே ‘ஜில்’லுனு என்னெத் தொடறதே!

அடீ அம்மா! என்ன சொகமா இருக்கு!… எவ்வளவு சந்தோஷமா இருக்கு!.. பயமாவே இல்லே. கொஞ்சம் கூடப் பயமே இல்லே.

திடீர்னு சித்தி வந்துட்டாள்னா என்ன பண்றதுன்னு நெனச்சவுடனே தான் பயம் வந்துட்டுது.

“போ… போ”ன்னு நான் யானையை வெரட்டறேன். அது என் கழுத்தைத் தும்பிக்கையாலே வளைச்சுப் பிடிச்சுண்டு என்னையும் “வா வா”ன்னு இழுக்கறது.

ஐயையோ! எவனோடயோ ஓடிட்டாள்னு பழி வருமேன்னு நெனக்கறச்சே வயத்துலே ‘பகீர்’ங்கறது!…

“சனியனே! ஏன் வந்தே?… என்னெ எங்கே இழுக்கறே?”ன்னு அந்த யானையோட நெத்தியிலே ரெண்டு கையாலேயும் குத்தறேன்… யானை என்னைத் தும்பிக்கையாலே வளைச்சுத் தூக்கிண்டு கொஞ்சம் கொஞ்சமா வந்த மாதிரியே பின்னம் பக்கத்திலே துணி மாதிரி அலை அலையா மெதந்துண்டு ஜன்னல் கம்பிக்குள்ளே நுழைஞ்சு போயிண்டே இருக்கு. நான் ஜன்னலண்டை வந்ததும் ஜன்னல் பக்கத்துலே நன்னா முதுகைச் சாச்சுண்டு, ரெண்டு பாதத்தையும் எதிர் சுவத்திலே உதைச்சுண்டு குறுக்கா நாதாங்கி போட்டா மாதிரி உக்காந்துண்டேண். யானை நொழைஞ்ச மாதிரி நான் நொழைய முடியுமா?…

பாவம்! அந்த யானை வெளியிலே நின்னுண்டு பரிதாபமாப் பார்த்தது. என்ன பண்றது? நானும்தான் அப்பிடிப் பார்த்துண்டிருக்கேன்… எவ்வளவோ பேர் அப்பிடித்தான் பார்க்கிறா. அதுக்கு நான்தான் என்ன பண்றது? அவாதான் என்ன பண்றது? பார்த்துண்டே இருக்க வேண்டியதுதான்…

அப்பிடியே என்னெப் பார்த்துண்டே அந்த யானை பின்னம் பக்கமாவே நடந்து போயி, அரச மரத்தடியிலே பிள்ளையாரா மாறிடுத்து…

அதிசயமாயிருக்கு இல்லே! எனக்கு இது சர்வ சாதாரணமா இருக்கு. ஏன்னா, இந்த மாதிரி அடிக்கடி நடக்கிறது. ஆனை மட்டும் தான் வரும். நான் போறதில்லே – முடியுமா என்ன?

இப்பல்லாம் எனக்கு ஜன்னலண்டையே சாப்பாடு வந்துடறது. எங்க பாபுவோட ஆம்படையாள் இருக்காளே குஞ்சு, தங்கம்னா தங்கம். எனக்கு அப்பிடி சிசுருஷை செய்யறா போங்கோ! நன்னா இருக்கணும்.

நாணுவும், அவன் பொண்டாட்டியும் நெய்வேலியிலே இருக்கா… பாபு எங்கே இருக்கானோ அங்கேதான் நானும் இருப்பேன். அவனும் என்னெ விடமாட்டான்.

இப்ப சித்தி இல்லை. அவ செத்துப் போயி ரொம்ப நாளாச்சு!

புதுசு புதுசாப் பொறக்கறாளே அந்த மாதிரி மனுஷா பழசு பழசா செத்தும் போறா.

நான் மாத்திரம் எப்பவும் ஜன்னலண்டையே உக்காந்திருப்பேன். உக்காந்துண்டே இருப்பேன். இந்த வீடெல்லாம் இடிஞ்சு போனாலும் இந்த ஜன்னல் மாத்திரம் இருக்கும். நான் இதிலே சாஞ்சுண்டு காலை உதைச்சுண்டு பார்த்துண்டே இருப்பேன். லோகத்தை ஜன்னலாலே பார்த்தா பிரயாணம் போற மாதிரி நன்னா இருக்கு.

இந்தப் பிரயாணம் நன்னா இருக்கு. இந்த வீடு ஒரு ரயில் மாதிரி ஓடிண்டே இருக்கு. ரயில் பெட்டி மாதிரி இந்த அறை ஜன்னல்லே உக்காந்துண்டு பார்த்துண்டே நான் பிரயாணம் போறேன்… எல்லாம் ஓடறது. மனுஷா, மரம், வீடு, பிள்ளையார், தெரு, நாய், சொந்தக்கார மனுஷா, அந்நிய மனுஷா, செத்தவா, பொறந்தவா எல்லாரும் ஓடறா.

ரயில்லே போகச்சே நாம ஓடிண்டிருக்கோம். ஆனாக்க தந்திக் கம்பியும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ? அதே மாதிரிதான் இங்கே நான் உக்காந்திண்டிருந்தாலும் ஜன்னலுக்கு வெளியே எல்லாரும் ஓடறதனாலே நானே ஓடிண்டிருக்கிற மாதிரி இருக்கு, யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான். நாமே ஓடினாத் தானா?

இப்ப யாரும் என்னைப் பாத்து சிரிக்கிறதில்லை; என்னெ வேடிக்கை பாக்கறதில்லை. ஆனாலும் எனக்குச் சில சமயத்திலே அவா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைப் பத்தி அவா ‘ஜன்னலண்டை உக்காந்திருக்கா, உக்காந்திருக்கா’ன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி இருக்கு. யாரு சொன்னா எனக்கு என்ன? எங்க குஞ்சு அப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாள். அவ தங்கம்னா தங்கம்தான் குஞ்சு – அதான் பாபுவோட ஆம்படையாள். கொழந்தைகளைக் கொண்டு வந்து எங்கிட்டேதான் விட்டுட்டு அடுக்களைக் காரியங்களைப் பார்ப்பா.

இப்பல்லாம் நான் ஒரு வேலையும் செய்யறதில்லே. என்னெ வேலை செய்ய விடவே மாட்டா குஞ்சு.

நான் கொழந்தைகளை வெச்சிண்டு ஜன்னல் வழியா வேடிக்கை காட்டிண்டு இருக்கேன் – இல்லே, வேடிக்கை பாத்துண்டிருக்கேன்…

ஜன்னலுக்கு அன்னண்டை தெரியறதெல்லாமே வேடிக்கையாத்தான் இருக்கு!

“பாட்டி! ஜன்னலண்டை உக்காந்துண்டு என்ன பார்க்கறே?”

அடீ அம்மா! இதென்ன வேடிக்கை? பாட்டியாமே நான்? “யார் அது யாருடி நீ?”

“நான்தான் சரோவோட பொண்ணு – ஊர்லேருந்து நேத்து வந்தேனே”ன்னு என்ன வக்கணையாய்ப் பேசறது பாருங்கோ.

சரோவுக்குப் பொண்ணா? இவ்வளவு பெரியவளா? சரோ வந்து… பாபுவோட பொண்ணு… அப்போ நீ குஞ்சுவோட பேத்தியா?…

அடீ அம்மா! ஜன்னலுக்கு இந்தப் பக்கம் இவ்வளவு வேடிக்கையா நடந்திருக்கு? நான் கவனிக்கவே இல்லியே…

குஞ்சு! அடீ அம்மா! இங்கே வாயேன்! இந்த வேடிக்கையை சித்தெ வந்து பாரேன்… நான் பாட்டியாமே பாட்டீ…. உன் பேத்தி சொல்றாடி… குஞ்சு… குஞ்சு…!

(எழுதப்பட்ட காலம்: 1968)

http://azhiyasudargal.blogspot.ch/2012/02/blog-post_20.html#comment-form

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தனின்.... ஈழத்து  அரசியல் நிலைப்பாட்டில், நான்... எதிர்மாறான கருத்தை கொண்டவனாகிலும்,

அவரின் கதைகளின் ரசிகன்.  தொடர்ந்து அவரின் கதைகளை...  இணையுங்கள், ஆதவன். :)

  • தொடங்கியவர்

முன் நிலவும் பின் பனியும் – ஜெயகாந்தன்

 

கிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது.

சின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்து விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் ‘டக் டக்’கென்ற சப்தம் ஒலிக்க, கல் வீட்டிற்குள், தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ, சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்லாத பெரியவரை, அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம், குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக் கோனார் அண்ணன் என்ற உறவுக்காக, அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியை ‘கெளரவப் பதவி’ யாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான்.

முப்பது வருஷங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம், நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனது ‘புத்திரச் சுமை’ யோடு சபாபதியையும் சின்னக் கோனார் ஏற்றுக் கொண்டதுதான்!

ஆனால் சபாபதி, தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான். யாரையும் மதியாத அவன் போக்கும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த நஷ்டமும், கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின.

பிறகு ஒருநாள் – தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார்.

தன் பிள்ளையின் செயலாலும், அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து, இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது – பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் – தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன.

“அண்ணே… நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன்? நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா…” என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு ‘வந்து வாய்த்ததும்’ ‘வயிற்றில் பிறந்ததும்’ மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.

“என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு… அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்… அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம்?… நான் தானே என் மவனா
வளர்த்தேன், அவனை!… வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு… நான் தானே உன் பிள்ளை… நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க?… என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும்? என் சொத்து உன் சொத்து இல்லியா?… என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா?…” என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார்.

அன்று வேறு வழியின்றி விரக்தியுடன் ‘மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால் என்ன’ என்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு ஜாகை மாற்றிக்கொண்டு, ‘கிருஷ்ணா கோவிந்தா’ என்று இருபது வருஷமாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு, பதினைந்து வருஷங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது.

ஆமாம்; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்… பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி: “நீ ஒண்ணும் பயப்படாதே நைனா… இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே… எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது.”

“அது சரிதான்டா தம்பி… ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்…” என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். “அதுக்கென்னா, கட்டிக்கிட்டாப் போச்சு… அங்கேயே ‘கோட்டர்ஸ்’ தராங்க… குடும்பத்தோட போயிருக்கலாம்… பொண்ணு பார்த்து வெச்சிருக்கியா?”

“அட போடா… பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி? உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே!…” என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு குஷியில் பேசினார்.

“இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனுஷன்!” என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

அந்த வருஷமே தஞ்சாவூரில் பெண் பார்த்து, சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வருஷத்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு செல்வது வழக்கமாகி விட்டது.

இந்தப் பத்து வருஷமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வருஷங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்… அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வருஷம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர்.

‘பாபு’… என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்… கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த ஸ்பரிசத்துடன் தெரியும்… அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்… எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு “பாபூ…” என்று துள்ளி நிமிர்ந்து விட��
�வார்… பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர… அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்… இந்த லயத்தில்தான் கழிகின்றன.

அது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே? அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி?

தன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன?…

வானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து… ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்!… அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே… எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்!

போன வருஷம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ‘என்னப் பேச்சுப் பேசுகிறான்?’… ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே! அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். ‘ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன? -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்.

பாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி, காலில் ஜோடு அணிந்து, ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா? ஊஹீம், தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்லுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப் ‘போ போ’ என்று விரட்டிவிட்டு, பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து, அவன் காலடியில் அமர்ந்து, வாதுமை, கல்கண்டு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை- ஒரு டப்பியில் அவனுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து, பாஷை தெரியாத அவனிடம் பேசி, அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர்.

அவன் அவரைத் ‘தாதா’ என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத் ‘தாத்தய்யா’ என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து “நை… நை… தாதா” என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள்: “அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாமா… இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை… அங்கே பக்கத்து வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு… நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான். உங்ககிட்ட வரமாட்டேங்கிறானே… அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். அவரைத்தான் ‘ தாதா தாதா’ன்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்… அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது, ‘சீக்கிரம் வந்துடுங்க’ன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு, அந்த சர்தார் தாத்தா” -என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கிழவருக்குத் தனக்குச் சொந்தமான பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு, நாளெல்லாம் கொஞ்சி விளையாடி, தன்னையும் விட அதிக நெருக்கமாகி, அவன் பாஷையைக் க�
��்றுக் கொடுத்து, தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்… அந்தப் பெருமூச்சில்- வருஷத்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும், வருஷத்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே, இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது.

ஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும், அவனுக்கு ஒரு வயது கூடுகிறது என்ற மகிழ்ச்சியும், தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும்.

‘அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோ’ என்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும்.

இந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம். சபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார். ஜபல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால், மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய், தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர்! அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார், சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார்.

மனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி.

‘பாபு வருவான், பாபு வருவான்’ என்று வீட்டுக் குழந்தைகளும், பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.

கோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம் உண்டு.

ராந்தல் கம்பம் என்றால், சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான். சிக்கனம் கருதியோ, நிலாவை ரசிக்க எண்ணியோ, அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படாமல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும் ‘தாச்சி’ யாகக் கலந்து கொள்ளும்.

அறுபது வருஷங்களுக்கு முன் பெரிய கோனாரும், அவருக்குப்பின் சின்னக் கோனாரும், இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வருஷங்களில், அவர்களின் பிள்ளைகள், இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம்; சிரிப்பு; கூச்சல்.

அப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார்.

எதிர் வீட்டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பின் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும், குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது.

தெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன்.

“ஆர்ரா அவன்? அடடே தம்பையாவா?… ஏன்டா கண்ணு, நீ போயி விளையாடலியா?”

“ம்ஹீம்… நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா!”

“கதை இருக்கட்டும்… பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா, பாரு…” என்று சொல்லிக் கொண்டே, தலை மாட்டிலிருந்
து சுருட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார்.

“அவுரு எப்பவோ போயிட்டாரே” என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா.

தம்பையா- சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள், அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன, சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு! தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி!

பெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.

“தாத்தா… உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா?”

“பயமில்லேடா… மரியாதை!?

“ம்… அவருக்குத்தான் கண்ணு தெரியலியே… நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு?”

“அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன?… எனக்குக் கண்ணு தெரியுதே… அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை… சரி, நீ போய் விளையாடு!”

“ம்ஹீம்… நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்.”

“நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே?”

“நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்!” என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.

“அடடே, உனக்கு விசயமே தெரியாதா?… அந்த இந்திக்காரப் பயலும், அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ… அவுங்க வரல… அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்..” என்று சின்னக் கோனார் சொன்னதை நம்ப மறுத்து, தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான்.

“ஐயா… பொய்யி, பொய்யி… நீ சும்மானாச்சுக்கும் சொல்ற… நாளைக்கு அவுங்க வருவாங்க!”

“பொய்யி இல்லேடா, நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே… திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து… அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்… அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்…”

“கடுதாசி எங்கே? காட்டு” என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.

“கடுதாசி பெரியவர்கிட்டே இருக்கு!”

“நான் போயி பார்க்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.

“இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே? விடிஞ்சி பாத்துக்கலாம்” என்று தடுத்தார் சின்னவர்.

“அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே” என்று பதில் சொல்லிவிட்டு, தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா.

தம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது, குடிசையின் முன், சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர்.

கிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மெளனமாய் நின்றான் தம்பையா.

கிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும், இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு. அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட �
��ுடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால், இருளில் எரியும் நெருப்பையோ, வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும்.

அவர் பார்வை எதிரில் நிற்கும் தம்பையாவை ஊடுருவி, அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவன் பின்னால் வானத்தில் வட்டமில்லாத, பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு, நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார்.

“குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிருஷ்ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே, அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர, கிழவரின் உதடுகளில் மந்தஹாஸமான ஒரு புன்னகை தவழ்ந்தது. “பாபூ!”

“பாபு இல்லே தாத்தா, நான் தான் தம்பையா.”

“தம்பையாவா?… நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே?”

“பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா?… நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே?… சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்…” என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.

பாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசேஷ வாஞ்சை பிறந்தது. “ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்… அதனாலே வரல்லே…” என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.

“பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே?” – என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.

முகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: “அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா?… டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே… அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு… ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது… அதனாலேதான் இப்பவே சுடறேன்… உக்காரு. நீயும் உரி…” என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத் தட்டி உரிக்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ, தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொண்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார்: “நீ நல்ல பையனாச்சே… கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே… நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய… உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்…” என்று தம்பையாவை தாஜா செய்வதற்காக, சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார்.

“எனக்கு வேண்டாம், தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே… சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் கஷாயம் குடுத்திச்சே…” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான்.

“ஏந்தாத்தா! இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா? எல்லாம் பெரிசு பெரிசா இருக்�
��ே?”

“ஆமா… நிறைய வெச்சிருந்தேன்… கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்…” என்று சொல்லும்போதே, தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார்:

“பரவாயில்லே, நீ ரெண்டு எடுத்துக்கடா… பாபுவுக்குத் தான் இவ்வளவு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு” என்றார்.

தம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்துவிட்டு, இப்பொழுது தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்.

“ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே? இல்லாட்டி பாபுவுக்கு… நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே?” என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.

இவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.

எதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, “உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே… பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே… நீ நல்லா படிக்கிறியா?… நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும்” என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார்.

அவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு “தாத்தா, தாத்தா…” என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா. “என்னடா வேணும்?”

“நானும் உன்கூட டேசனுக்கு வர்ரேன் தாத்தா… பாபுவைப் பாக்கறத்துக்கு…” என்று கெஞ்சினான்.

“விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோ ட எந்திரிச்சுப் போவேனே… நீ எந்திருப்பியா? இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்… உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது?…” என்று தயங்கினார் கிழவர்.

“நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும்? ராந்தல் வெளக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்… நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு…” என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.

“ஆ! கெட்டிக்காரன் தான்டா நீ… சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு! விடிய காலையிலே வந்து எழுப்பறேன்.”

“நான் இங்கேதான் படுத்துக்குவேன்.”

“அங்கே தேடுவாங்களே.”

“சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்…”

“சரி… கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்துக்க…” என்று கிழவர் சொன்னதும் ஜமுக��
�காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.

கிழவர் இரும்புரலில் ‘டொக் டொக்’கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.

நடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, “ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா?” என்று கண்களைக் கசக்கிக் கொண்டான்.

“இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் கழுவிக்க…” என்றதும் தம்பையா குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். “அப்பா…!” என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது…

“தாத்தா… ஒரே பனி… குளிருது” என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.

தாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிருஷ்ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். “பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது… பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா? மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு… தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்… சீக்கிரம் நாழியாவுது” என்று அவசரப்படுத்தவே, தம்பையா சட்டையையும் நிஜாரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு, அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும் தம்பையா போடும் கூக்குரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.

ராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பாவுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர்.

“நான் ரெடி தாத்தா, போகலாமா?” என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, “தம்பையா, இதெக் கொஞ்சம் புடி… வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, “இது ஒரு ரூபா தானே?” என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து “ஆமாம்” என்றான். பிறகு, “பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது?” என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார்.

மெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர்.

அவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ரஸ்தாவில் ஏறியபோது, பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும், சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி, முகவாய்க்குக் கீழே துண்டின் இ
ரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார்.

“தனது பேரனைப் பார்க்க இந்தக் குளிரில் தான் போவதுதான் சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான்” என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். “எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்… ஆனா, நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா… அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே கஷ்டப்படுவியே, உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்…”

-தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது…

அந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின், ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, இருள் விலகுவதற்குள்ளாக, அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர்.

அவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜீவன் இல்லை. ‘ஹோ’ வென்ற தனிமையும், பனி கவிந்த விடியற்காலை இருளும், இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார். சட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குளிரைத் தாங்கும்?

வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.

திடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, “அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்” என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.

இப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் “வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்?” என்று கேட்டார்.

“இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்” என்று பதிலளித்தான் போர்ட்டர்.

“ஹீம்… இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்” என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வருஷம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. “சீசீ! இதுக்குப் போயி பொறாமைப் படலாமா?… பாவம், அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக் கொஞ்சி திருப்திப் படறானோ” என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய கோனார்.
-அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின.

“டே… தம்பையா! வண்டி வந்துட்டுது… நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா… நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது.

கிழவர் “பாபூ…பாபூ…” வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் “சவாதி மாமாவ்…மீனா மாமீ…பாபு” என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் ஜன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன…

“பாபூ…பாபூ” என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிர��
�க்கிறானோ?

-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு குருட்டுக் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா?

வண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது.

ஒரு நிமிஷம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும், ஒரு தடவை அந்தப் பிஞ்சு விரல்களை ஸ்பரிசித்து இன்பமடையவும், இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், கிழவரின் கண்கள் கலங்கின. ரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா, ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து, கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான்.

கிழவர் வானத்தைப் பார்த்தவாறு “பாபூ” வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். அப்போது இஞ்சினுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த ஜன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரிய கோனாரைத் “தாதா” வென்று அழைத்தது.

அந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால், கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து, அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார்.

“நை ஹோனா, நை” என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி வந்த தம்பையா, பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால், குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் “பாபு பாபு” என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான்.

கிழவர் டப்பியைத் திறந்து “உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு” என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான்.

“எல்லாம் உனக்குத்தான்” என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர்.

அப்பொழுது, வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட ஸ்தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் “கோன்ஹை” என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும் குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள்.

இரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில்- அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள்: “தாதாகோ நமஸ்தேகரோ பேட்டா.” குழந்தை கிழவரைப் பார்த்து “நமஸ்தே தாதாஜி” என்று வணங்கினான். கிழவரும் பாசத்தால், பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி “நமஸ்தே பாபு” என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான், அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோ டி, குழந்தையிடம் நீட்டினார்…
அதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ?… அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி ஹிந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.

“சபாபதி தூங்கறானா மீனா? எழுந்ததும் சொல்லு” என்று கிழவர் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்காது.

வண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். “அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ” என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.

“இதென்ன, அபசகுனம் மாதி
ரித் தும்முகிறானே” என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்…

தம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை!…

(எழுதப்பட்ட காலம்: ஆகஸ்ட் 1962)

https://thoguppukal.wordpress.com/2010/06/25/முன்-நிலவும்-பின்-பனியும/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.