Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலையானது எப்படி...?

Featured Replies

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு நாராஹேன்பிட்ட பகுதியில் வைத்து நடராஜா ரவிராஜ் இனந்தெரியாத நபர்களினால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், குறித்த கொலை வழக்கு தொடர்பில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

எனினும், இந்த கொலை வழக்கில் பல சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என ஜூரிகள் முடிவு செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஜூரிகள் சபையின் ஒருமனதான முடிவின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கொலை வழக்கில் 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் முதலாவது பிரதிவாதி உயிரிழந்து விட்டதாக வழக்கின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள அனைவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதனின் குழுவை சேரந்த இருவரும் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/special/01/129403?ref=home

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து எதிரிகள் விடுதலையானது எப்படி?

raviraj-murder-suspects

சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, சிங்கள ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 10ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பத்தாண்டுகளுக்குப் பின்னர் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மூன்று சிறிலங்கா கடற்படையினர் உள்ளிட்ட ஐந்து பேரும் நேற்று, சிங்கள ஜூரிகள் சபையின் ஒருமனதாக முடிவின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் பல சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என்று, ஜூரிகள் முடிவு செய்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரிகளும் விடுவிக்கப்பட்டனர்.

raviraj-murder-suspects

வழக்கில் இருந்து  விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியில் சிறிலங்கா கடற்படையினர்

ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் முதல் பிரதிவாதியான பழனிசாமி சுரேஷ் அல்லது சாமி இறந்து விட்டதாக வழக்கின் ஆரம்பத்திலேயே சாட்சிகளை விசாரணை செய்து நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, சிறிலங்கா  கடற்படையைச் சேர்ந்த  லெப். கொமாண்டர் ஹெற்றியாராச்சி முதியன்சலாகே பிரசாத் சந்தனகுமார அல்லது சம்பத், கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்த தெகிவலகெதர காமினி செனவிரட்ண, கங்கானம் லாகே பிரதிப் சாமிந்த அல்லது வஜிர, கருணா குழுவின் சிவகாந்தன் விவேகானந்தன் அல்லது சரண் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் காவலர் பெபியன் ரொய்ஷ்டன் டூசேன் ஆகியோரே இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் மூன்று கடற்படை அதிகாரிகளே மன்றில் முன்னிலையாகியிருந்தனர். கருணா குழுவைச் சேர்ந்த சரண், சுவிசில் தஞ்சமடைந்திருப்பதாகவும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெபியன் ரொய்ஷ்டன் டூசேன் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, குமாரபுரம் படுகொலை வழக்கிலும், 26 தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவத்தினர், சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அனைவரும் ஜூரிகள் சபையினால் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2016/12/25/news/20304

  • தொடங்கியவர்

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு – சுமந்திரன்

sumanthiran

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் சிங்கள ஜூரிகள் சபை அளித்த தீர்ப்பை நிராகரித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன்,

“ரவிராஜ் படுகொலை வழக்கில் நேற்று அதிகாலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது.

ஐந்து எதிரிகளையும் விடுவித்து கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளேன்.

இந்தத் தீர்ப்பு, சிறிலங்காவின் நீதித்துறை நம்பகமானது அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கள ஜூரிகளை மாத்திரம் கொண்ட ஒரு ஜூரிகள் சபையிடம் இருந்து, நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது என்ற பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு அச்சத்தை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

இது எங்களுக்கு (சிங்களவர்கள்) எதிர் அவர்கள் (தமிழர்) என்ற விவகாரமாகவே மாறியிருந்தது. இந்த ஜூரிகள் சபை  குறித்து சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு இருந்தது. ஆனால் அதனை நீதிபதி நிராகரித்து விட்டார்.

இந்த தீர்ப்பு, 2009 மேமாதம் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த வழக்கில் திட்டமிட்ட படுகொலையை செய்தவர்கள் என்று ஐந்து பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

படுகொலையில் அரச புலனாய்வுப் பிரிவுகள் தொடர்புபட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளது.

ஆனால், இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டார் என்று அடையாளம் காணப்படவோ, சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2016/12/25/news/20302

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, போல் said:

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன்,

“ரவிராஜ் படுகொலை வழக்கில் நேற்று அதிகாலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது.

ஐந்து எதிரிகளையும் விடுவித்து கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளேன்.

இந்தத் தீர்ப்பு, சிறிலங்காவின் நீதித்துறை நம்பகமானது அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு, 2009 மேமாதம் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த வழக்கில் திட்டமிட்ட படுகொலையை செய்தவர்கள் என்று ஐந்து பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தும்பி சும்மு ....இதுதான் உங்கடை லெவல் 

 

32 minutes ago, போல் said:

சிங்கள ஜூரிகளை மாத்திரம் கொண்ட ஒரு ஜூரிகள் சபையிடம் இருந்து, நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது என்ற பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு அச்சத்தை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

இது எங்களுக்கு (சிங்களவர்கள்) எதிர் அவர்கள் (தமிழர்) என்ற விவகாரமாகவே மாறியிருந்தது. இந்த ஜூரிகள் சபை  குறித்து சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு இருந்தது. ஆனால் அதனை நீதிபதி நிராகரித்து விட்டார்.

இதுதான் அவங்கடை லெவல் .....

இதுக்குள்ள உங்கடை வாலுகள் நீங்கள் தீர்வு விடயத்தில்  இன்னமும் வெட்டி முறிக்கப்போவதாக  வாயால வடை சுட்டுக்கொண்டு திரியினம் 
பார்க்கவே பாவமாக இருக்கிறது ....பதினாறும் போயிட்டு ...அடுத்தது என்ன பதினேழா இல்லை பதினெட்டா 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 100 வருச அனுபவம்

வரலாறு....

மீண்டும் மீண்டும்.........

  • தொடங்கியவர்

பல தசாப்த அனுபவத்தில் அரசியலில் உள்ள 99% சட்டத்தரணிகள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. 

  • தொடங்கியவர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டது எப்படி?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையில் இலங்கையின் அரச புலனாய்வு சேவையினர் தொடர்புள்ளமையை குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் சுட்டிக்காட்டியிருந்தன.

எனினும் போதிய சாட்சிகள் இல்லையென்றுக்கூறி பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் த ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.

சாதாரண கடற்படை வீரர்கள் தமது விருப்பப்படி இந்தக்கொலையை செய்யவில்லை யாரோ இதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்தக்கொலை நடந்து 10 வருடங்களாகியும் இன்னும் யார் கொலைக்கான உத்தரவை பிறப்பித்தது என்பதை தாங்கள் தேடிக்கொண்டிருப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்திய நிலையிலேயே ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது அரச சாட்சியாக மாறிய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், ரவிராஜை கொலை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் குழுவுக்கு 50மில்லியன் ரூபாய் தயார்ப்படுத்திக்கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் போதிய சாட்சியங்கள் இல்லையென்றுக்கூறி ஜூரிகள் எதிரிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்தனர்.

குறித்த வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழும் குற்றவியல் சட்டத்துக்கு கீழும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் கொலையுடன் தொடர்புடையதாக கூறி இரண்டு கடற்படை அதிகாரிகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சட்டப்படி, ஜூரிகளுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க அனுமதிக்க முடியாது.

எனினும் இந்த வழக்கில் குறித்த கடற்படை அதிகாரிகளை குற்றவியல் சட்டத்தின்கீழ் ஜூரிகள் விடுவித்துள்ளனர்.

சட்டத்தை பாரபட்சமாக முன்னெடுத்துக்கொண்டு வெறுமனே தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமித்துள்ளமையில் எவ்வித பயனும் இல்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/129469?ref=home

 
  • தொடங்கியவர்

இலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் 

சிங்கள ஜுரர் சபையின் முன் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளார்.

வெள்ளியன்று நள்ளிரவு வரையிலும் இந்த வழக்கின் ஜுரர் சபை நடத்திய நீண்ட ஆலோசனைகளின் பேரில் எதிரிகளை விடுதலை செய்யும் முடிவு அறிவிக்கப்பட்டது.

ரவிராஜ் கொலை வழக்கு:`கருணா குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்'

இந்தத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு வழங்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு நள்ளிரவு வேளையில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் ஆறு பேருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது இறந்துவிட்டார். இதனையடுத்து. எஞ்சிய ஐந்து பேருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் முன்னாள் கடற்படைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களாவர், ஏனைய மூவரும் கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதமாக நீடித்த ரவிராஜ் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் வெளியிடப்பட்ட பல தகவல்கள் பெரும் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டி, மணிங் டவுண் பகுதியில் அவருடைய இல்லத்திற்கு அருகில் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஆயுததாரிகளினால் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38426171

  • தொடங்கியவர்
ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்
 

article_1482728348-Raviraj.jpg

 

 

அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்

தமிழர்கள் மட்டுமன்றி, பெரும்பான்மை இனத்தவர்களும், ஏன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேசமுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், படுகொலை வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை(24) அதிகாலை 12:20க்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். 

நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், அன்று காலைமுதல் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 1ஆவது இலக்க அறைமட்டும், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த வழக்கின் இறுதிநாள் என்பதனால், பார்வையாளர்களும் ஊடகவியலாளர்களும் நீதிமன்றத்துக்கு படையெடுத்திருந்தனர். சட்டக்கல்லூரி மாணவர்களும் சமூகமளித்து, விடிய விடிய அவதானித்துக்கொண்டிருந்தனர். 

வௌ்ளிக்கிழமை (23) காலை 10:48க்கு ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம், சனிக்கிழமை அதிகாலை 12:20யை தாண்டியும் தனது கடமைகளை செய்துகொண்டிருந்தது. நீதிமன்ற அறைக்குள் செல்கின்ற சகலரும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

நீதிமன்ற பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்த பொலிஸாருக்கு மேலதிகமாக, பொலிஸ் உயரதிகாரிகளும் அவ்வப்போது, நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர். சிறைச்சாலைக் காவலர்களும் மேலதிகமாக வருகைதந்திருந்ததை அவதானிக்கமுடிந்தது. எனினும், பாதிக்கப்பட்ட (படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ்) தரப்பில் சட்டத்தரணிகள் மட்மே மன்றிலில் இருந்தனர். 

சாட்சியளிக்கப்பட்டவர்கள், அழைத்து வரப்படவில்லை. எனினும், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும், சிறைச்சாலை பஸ்ஸின் மூலமாக அழைத்துவரப்பட்டனர். 3, 4ஆம் பிரதிவாதிகள் இருவருக்கும் ஒரு கைவிலங்கு இடப்பட்டிருந்தது. தனி கைவிலங்கிடப்பட்ட நிலையில் முதலாவது பிரதிவாதி அழைத்துவரப்பட்டார்.  

வழக்கின் தொகுப்புரைகள் மற்றும் விளக்கவுரை அன்றையதினம் அளிக்கப்பட்ட இருந்தமையால், சகல தரப்பினரும் வழக்கின் மீது கூடுதல் கரிசனை கொண்டிருந்தனர்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ், நாரஹேன்பிட்டி மாதா வீதியிலிருந்து, எல்விட்டிகல மாவத்தைக்குப் பிரவேசித்த போது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி காலை 8.15க்கு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையிலேயே, குற்றவியல் தண்டனை கோவைச் சட்டத்ததுக்கு அமைவாக, கொழும் மேல் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களென ஐவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். அதில், 5ஆவது பிரதிவாதியான சரண் என்றழைக்கப்படும் விவேகானந்தன் சிவகாந்தன், 6ஆவது பிரதிவாதியான ரொய்ஸ்டன் டுஸேன் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.   

ஏனைய மூவரும் கடற்படை புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில், 2ஆவது பிரதிவாதி முன்னாள் லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி ஆவார். 3ஆவது பிரதிவாதி காமினி செனவிரத்ன ஆவார் 4ஆவது பிரதிவாதி பிரதீப் சாமிந்த ஆவார்.  

இவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டன.  

ரவிராஜ் எம்.பியைக் கொல்லத் திட்டமிட்டமை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரைக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டடிருந்தன.  

வழக்கின் சாட்சிகளாக 25 பேர் குறிப்பிடப்பட்டனர். 44 சாட்சிப் பொருட்கள் பதியப்பட்டன.  

வழக்கின் 5ஆவது மற்றும் 6ஆவது பிரதிவாதிகளான சரண், டுசேன் ஆகிய இருவரும் தலைமைறைவாகியிருந்த நிலையில், அவர்கள் இல்லாமலேயே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.  

இந்நிலையிலேயே சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் முன்னிலையில் வழக்கை, விசாரணைக்கு உட்படுத்துமாறு பிரதிவாதிகள் மூவரும் கோரிக்கையொன்றை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

எனினும், விசேட ஜூரிகள் சபை முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்தே, விசேட ஜூரி சபை நவம்பர் மாதம் 22ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது. இந்த விசேட ஜூரி சபையின் விசேடமான தன்மை என்னவெனில், சகலரும் பட்டதாரிகள் ஆவர்.  

எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபையில் அறுவர் பெண்களாவர். எம்.பி.பி திலகசிறி என்பவர் மட்டுமே ஆண், அவரே அதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 

அதனையடுத்து, அடுத்தநாளான நவம்பர் 23ஆம் திகதியிலிருந்து, டிசெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலும் 21 நாட்கள், ஜூரிகளின் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.  

முதலாவதாக, வழக்கின் பிரதிவாதியாக இருந்து, சாட்சியாளராக மாறிய விஜயவிக்ரம மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அவரிடம், முறைப்பாட்டாளர் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதுடன், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. 

டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை வரை, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான 25 சாட்சியாளர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், வழக்குப் பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 

22ஆம் திகதி வியாழக்கிழமை, பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் மூவரும் சாட்சியளித்ததுடன், இன்னொரு சாட்சியாளரான, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவும் ஆஜரானார். 

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (23), முறைப்பாட்டாளர், பிரதிவாதிகள் தரப்பில் தொகுப்புரைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் அவதானிப்பின் கீழ், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 10.40க்கு வழக்கு ஆரம்பமானது. 

இதன்போது, முறைப்பாட்டாளர்கள் சார்பில், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். 2ஆவது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாலசூரியவுக்குப் பதிலாக ஆஜரான சட்டத்தரணியான யுரான் லியனகேவும் 3,4ஆவது பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்தனர். 

வழமையான வழக்கு விசாரணையை விட, அன்றையதினத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சகாக்கள் நிரம்பியிருந்தனர். 

முற்பகல் 10.45 மணியளவில், முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, தனது தொகுப்புரையை ஆரம்பித்தார்.  

அபேசூரியவின் தொகுப்புரை 

அவரது தொகுப்புரையில், தமது சார்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில், விசேட ஜூரி சபைக்கு விளக்கமளிக்க ஆரம்பித்தார். 

தனக்கு உடல்நலக்குறைவு காணப்படுவதாகவும் அதனால் தொகுப்புரையை நடத்துவதில் சிரமம் காணப்படுவதாகவும் கூறிய அவர், 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கொன்றில், ஜூரி சபை முன்னிலையில் பணியாற்றியதாகவும் பட்டதாரிகள் அடங்கிய விசேட ஜூரிகள் முன் பணியாற்றுவது இதுவே முதல் முறை எனக் கூறினார். 

குறிப்பாக, விஜயவிக்ரம மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜ் என்ற, முதலாவது சாட்சியாளர் தொடர்பிலான நம்பகத்தன்மை தொடர்பாக விளக்கமளிக்க ஆரம்பித்தார். அவருக்கு எதிராக அரிசி லொறிகளைக் கொள்ளையடித்தமை, ஆட்கடத்தல், 106 கிலோகிராம் கஞ்சாமாவுடன் கைதானமை போன்ற 8 வழக்குகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சாட்சியாளரின் நம்பகத் தன்மையில் குறைவு ஏற்பட இவற்றை, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் காரணம் காட்டியதாகக் கூறினார். 

சட்டத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட, அல்லது குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களும் சாட்சியாளர்களாக மாறலாம் என, ஜூரிகளுக்கு சுட்டிக்காட்டிய அவர், அதன் அடிப்படையிலேயே, பிருதிவிராஜ், பிரதிவாதியாக இருந்து சாட்சியாளராக மாறியதாகக் குறிப்பிட்டார். 

தன்னை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சாட்சியாளராக மாற விரும்புவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் அவர் கூறியதன் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைய அவர், சாட்சியாளராக மாறினார். 

பிருதிவிராஜின் சாட்சியத்தில், காணப்படும் நம்பகத் தன்மையை மட்டுமே ஜூரிகள் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் குண இயல்புகளைப் பார்க்கக் கூடாது எனவும் கூறியதுடன், நம்பகத்தன்மையை அளவிட வேண்டுமாயின் அவரது சாட்சியத்திலுள்ள விடயங்களைப் பார்க்கவேண்டும் எனக் கூறினார். 

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிருதிவிராஜின் குண இயல்புகளைக் கொண்டு, அவர் சாட்சியாக இருப்பதற்குத் தகுதியற்றவர் என வாதங்களில் ஈடுபடுவதால், அவர் உண்மையிலேயே தகுதியுடையவரா என்ற சந்தேகம் ஜூரிகளுக்கு ஏற்படவாய்ப்புண்டு எனவும் கூறினார். 

தனது 23 வருட அனுபவத்தில், பிருதிவிராஜ் போன்றதொரு சாட்சியைப் பார்க்கவில்லை எனக் கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவர் மனசாட்சிக்கு விரோதமின்றி சாட்சியமளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, கருணா குழுவினருடன் இணைந்து எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக மேற்கொள்ள எத்தனித்த தாக்குதல்களையும் கேள்விக்கு உட்படுத்தி, அவற்றைப் பொய்யாக்க முனைந்ததாகவும் கூறினார். 

சாட்சியாளர், 2008ஆம் ஆண்டு வழங்கிய வாக்குமூலத்தில், ரவிராஜ் படுகொலை தொடர்பில், கூறவில்லை என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குறுக்குக் கேள்வி கேட்டிருந்தனர். கருணா குழு தொடர்பான அச்சநிலையின் காரணமாகவே, அவர் இதுதொடர்பில் கூறவில்லை. 

அதுமட்டுமின்றி, 2015.02.26அன்று வழங்கிய வாக்குமூலம் தொடர்பிலும் அதனையடுத்து வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் தொடர்பிலும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதில் விடுபட்ட விடயங்கள் பற்றியும் வினவியிருந்தனர்;. முதலாவது வாக்குமூலத்தைத் தெளிவுபடுத்தவே அடுத்தடுத்த வாக்குமூலங்கள் பெறப்படும் எனக் கூறிய அவர், புதிது புதிதான விடயங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். 

இராணுவ வைத்தியசாலை தொடர்பான குறுக்குக் கேள்வி தொடர்பில் கூறியபோது, 2015ஆம் ஆண்டில் வாக்குமூலமளித்த போது, அந்த இடத்தில் இராணுவ வைத்தியசாலை காணப்பட்டதாலேயே, அதைக் கூறி சாட்சியமளித்துள்ளதாகவும், குறுக்கு விசாரணையில் ஈடுபட்ட சட்டத்தரணி, அங்கவீனமடைந்த இராணுவவீரர்கள், வீதியைக் கடந்தனரா என்று சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டதாகவும் தெரிவித்தார். 

படுகொலையுடன் கருணா குழுவினரும் தொடர்புபட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருணா குழுவின் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் சாட்சியமளித்தார். அப்படியிருக்கையில், கருணா குழுவினரே கொலை செய்திருக்கலாமே என நீங்கள் எண்ணக்கூடும் என, ஜூரி சபையைப் பார்த்துத் தெரிவித்த அவர், அந்தக் காலத்தில், முச்சக்கரவண்டியொன்றில் ஆயுதமொன்றைக் கொண்டு, தமிழர்கள் சென்றால் என்ன ஆவார்கள் என உங்களுக்கே தெரியும். அதற்காகவே, இந்தப் பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.  அதுமட்டுமின்றி, வழக்கு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஐக்கிய நாடுகளினால் 6மாதங்களுக்கு ஒருமுறை, வினாவப்படுவதாகவும் சர்வதேச நாடாளுமன்ற சம்மேளத்தினாலும் கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பிற்பகல் 2.05மணிவரை அவரது, தொகுப்புரை இடம்பெற்றதுடன், சுமார் 20 நிமிட இடைவேளை வழங்கப்பட்டது. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பிரான ரவிராஜ் எம்.பியின் மனைவியான சசிகலா ரவிராஜ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு, விளக்கவுரை வழங்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், பிற்பகல் 2.40 வரை அவர் தனது விளக்கவுரையை ஆற்றினார்.  

சட்டத்தரணி சுமந்திரனின் விளக்கவுரை 

2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதியன்று, கொழும்பில், அதுவும் வாகன நெரிசல், சன நெரிசல் மிக்க காலை வேளையில், பிரதான வீதிக்கு நுழையும் போது, ரவிராஜ் எம்.பியும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அப்போது, லக்ஷ்மன் என்பவருக்கு கைக்குழந்தையொன்றும் இருந்தது.  

அன்றைய தினம் தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவே, ரவிராஜ் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தின் தமிழ்ப் பாடசாலையொன்றில் கல்விகற்ற அவர், கொழும்புக்கு வந்தார். மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். நல்லிணக்கத்தையே அவர் விரும்பியிருந்தார். 

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை விட, இந்தக் கொலைக்கான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். 

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர், நேற்றையதினம் (வியாழக்கிழமை) சாட்சியமளிக்க வந்திருந்தார். வருகை தந்ததற்கான காரணம் தெரியாமலேயே அவர் இருந்தார். அதுமட்டுமின்றி, அவருடைய சாட்சியத்திலும் நம்பகத்தன்மை இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு எனக் கூறி, சில கேள்விகளுக்கான விடைகளைத் தர அவர் மறுத்திருந்தார். அந்தச் சாட்சியம் தொடர்பிலான, நம்பகத் தன்மையை நீங்களே பார்த்திருப்பீர்கள் என, ஜூரிகளைப் பார்த்துக் கூறினார். 

அதன்பின்னர், பிற்பகல் 2.40 மணியளவில் மதிய போசன இடைவேளை வழங்கப்பட்டதுடன், பிற்பகல் 3.38 மணியளவில் மீள ஆரம்பிக்கப்பட்டது. அதன்போது, 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, தனது தொகுப்புரையை வழங்க ஆரம்பித்தார். 

சட்டத்தரணி யுரான் லியனகே 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, பிருதிவிராஜ் மனம்பேரி என்பவரை மட்டும் பிரதானமாகக் கொண்டு, அவரது சாட்சியமளிப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்டார். 

25 சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ளனர். எனினும், மனம்பேரி என்பவரை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர் மட்டுமே பிரதிவாதிகளைத் தெரியும் எனக் கூறியுள்ளார். ஏனையவர்கள் யாருமே, நேரில் கண்டோம் எனக் கூறவில்லை. 

2ஆவது பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சியை, கப்டன் பிரசாத், லெப்டினன் பிரசாத் என்று, ஒரே வாக்குமூலத்தில் மாறி மாறிக் கூறியுள்ளார். 5 தடவைகள் கப்டன் எனவும் 3 தடவைகள் லெப்டினன் எனவும் கூறியுள்ளார்.  

சாதாரண ஒருவர், பதவிநிலைகளைப் பிழையாகக் கூறினால் பரவாயில்லை. அரச ஊழியராக, அதுவும் பொலிஸ் கான்ஸ்டபிளாகக் கடமையாற்றிய ஒருவருக்கு, இதுதொடர்பில் தெரியவில்லை. 

அதுமட்டுமின்றி, 1ஆவது சாட்சியாளரான பிருதிவிராஜ் சாட்சியமளித்தார். 2ஆவது சாட்சியாளரான அமில சிந்தக்க ரணசிங்க, 3ஆவது சாட்சியாளரான திலின நிஷாந்த நாமல் ஆகியோர் ஏன் அழைக்கப்படவில்லை.  

கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், இலங்கை அணி விளையாடும் போது, சனத் ஜயசூரிய ஆட்டமிழந்தால், அடுத்த நிலையிலுள்ள குமார் சங்கக்கார அழைக்கப்படுவார். அவரும் ஆட்டமிழந்தால், மஹேல ஜயவர்தன அழைக்கப்படுவார். லசித் மலிங்கவையோ, முத்தையா முரளிதரனையோ அவர்களது இடத்துக்கு அனுப்ப மாட்டார்கள். 

அதுபோல், இந்த வழக்கிலும் தேவையான இரு சாட்சியாளர்கள் அழைக்கப்படவில்லை. 2004-2006வரை யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிவிட்டு, கொழும்பில் சேவையின் தேவை கருதி அழைக்கப்பட்ட 2ஆவது பிரதிவாதி, ரவிராஜ் படுகொலை இடம்பெறுவதற்கு 19 நாட்களுக்கு முன்னரே, கொழும்புக்கு வந்திருந்தார். அவரை, இரண்டு மாதங்களாகத் தெரியும் என, பிருதிவிராஜ் மனம்பேரி சொல்வது பொய். அத்துடன், எல்லா வழக்குகளுக்கும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறிய அவர், இந்த வழக்கில் மாத்திரம், ஏன் அவ்வாறு இடம்பெற வில்லை எனக் கேட்டார். 

2015.03.15அன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, அங்கு சென்ற போதே கைதுசெய்யப்பட்டார். அவர், ஓடிஒழியவில்லை. இவ்வளவு மாதங்களாக அவர் சிறையில் இருப்பது, அவரது பிள்ளைகளுக்குக் கூடத் தெரியாது. அவர், இந்தியாவில் படிக்கச் சென்றுள்ளதாகவே, பிள்ளைகள் எண்ணியுள்ளனர்.  

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்குப் பிணை வழங்கப்பட்ட போதும், அடுத்த நாட்களாக சனி, ஞாயிறு தினங்கள் காணப்பட்டதால், சிறையிலேயே இருந்தார். திங்கட்கிழமையன்று, மேலுமொரு குற்றச்சாட்டுத் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், அவரை நீதிமன்றில் மீண்டும் ஆஜராக்கியதைத் தொடர்ந்து, அவர் தடுப்பில் வைக்கப்பட்டார். இது தொடர்பில் ஆராய்ந்து தீர்ப்பினை வழங்கவேண்டும் என, ஜூரி சபையிடம் கேட்டுக்கொண்டார். 

அதனையடுத்து, மாலை 5.10 மணியளவில் இடைவேளை வழங்கப்பட்டு, 5.50க்கு ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, 3,4ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன, தனது தொகுப்புரையை ஆரம்பித்து, 8.20 மணியளவில் நிறைவுக்குக் கொண்டுவந்தார்.  

சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன 

மனம்பேரியின் சாட்சியம் தொடர்பில், கேள்விக்குட்படுத்திய அவர், கொள்ளைக்கார, ஆட்கடத்தலில் ஈடுபட்ட, கஞ்சாமா விவகாரத்தில் கைதான ஒருவரையா இந்த வழக்கின் சாட்சியாளராக ஏற்பது எனவும் அவரது சாட்சியத்தை எவ்வாறு நம்புவது என்றும் கேள்வியெழுப்பினார். 

கஞ்சாவை கடத்திவிட்டு, கஞ்சா மா என்கிறார். அதில் பாண் செய்ய முடியுமா என்றும் ஜூரிகளிடம் வினவினார்.  

அபேரத்ன என்பவர், ஏறாவூருக்குச் சென்று சாட்சியமளித்ததாகக் குறிப்பிட்டார். பிருதிவிராஜ், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் வாக்குமூலமளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  

இங்கு ஐந்து மாடிக் கட்டம் இருக்கையில், அபேரத்ன, ஏறாவூருக்குச் சென்றது எதற்காக, அங்குதான் இனிய பாரதியின் மனைவி இருக்கிறார் எனக் கூறினார்.  

கொழும்பில் ஆயுதத்தைத்தைக் கொண்டு செல்வது சிரமம் எனவும் அதனால் தான், கடற்படை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கூறியது நகைப்புக் குரியது. மத்திய வங்கி, விமான நிலையம் என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி மாணவர்கள் பலியானமை. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் என்ன கூறுவது. அதுவெல்லாம் சம்பவமே இல்லையா? 

நடராஜ் ரவிராஜ் கொலையுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. எனினும், நாட்டுக்காக உழைத்த, பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இந்த மூவரும் (பிரதிவாதிகளை சுட்டிக்காட்டி) தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டுவிடக்கூடாது என்றார். 

அதுமட்டுமின்றி, ஐக்கிய நாடுகளினால், ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வினவப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இங்கு இடம்பெற்ற கொலைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் வினவப்படவில்லையா, கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். அந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை என, அனுஜ கேள்வியெழுப்பினார். 

அதுமட்டுமின்றி, மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்படாததையும் அடையாள அணிவகுப்பின் போது, பிரதிவாதிகள் அடையாளம் காணப்படாததையும் சுட்டிக்காட்டினார். 

சீருடையணிந்து கம்பீரமாக இருக்க வேண்டிய இந்த மூன்று கடற்படை வீரர்கள் மீதும் பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேட்டார். இரவு 8.20 வரை அவரது தொகுப்புரை இடம்பெற்றது. 

நீதிபதியின் தெளிவுபடுத்தல்

மீண்டும் இடைவேளை வழங்கப்பட்டு, இரவு 9.05க்கு நீதிமன்றம் கூடியது. இதன்போது, இடம்பெற்ற தொகுப்புரைகள் தொடர்பிலும் சாட்சியாளர்களின் சாட்சியம் தொடர்பிலும், ஜூரி சபையினருக்கு சட்டத்தைச் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தல்களை வழங்கிய நீதிபதி மணிலால் வைத்தியதிலக, இரவு 11.15 மணியளவில் தெளிவுரையை நிறைவு செய்ததுடன், ஜூரிகள் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு நேரம் வழங்கினார். 

தனது தெளிவுரையின் போது, சாட்சியாளர்களின் சாட்சியங்களை வாசித்துக் காட்டிய நீதிபதி, குறுக்கு விசாரணைக்கான பதில்களையும் வாசித்ததுடன், அவற்றை அடிப்படையாக வைத்து, எவ்வாறு முடிவெடுப்பது என்பதை சட்டப் பிரிவுகளைக் கொண்டு விளக்கினார். அதனையடுத்தே கலந்துரையாடலுக்கான நேரம் வழங்கப்பட்டது. 

அதனையடுத்து, சரியாக நள்ளிரவு 12 மணிக்கு நீதிமன்ற அறைக்குள் நுழைந்த ஜூரிகளிடம், நீங்கள் அனைவரும் எடுத்திருப்பது ஒரே தீர்மானமா, என தோலக்கு முதலி கேட்க, அவர்கள் ஆம் எனப் பதிலளித்தனர். 

என்ன தீர்மானம் என்று கேட்டதற்கு, மூவரையும் விடுவிப்பது என, ஜூரிகள் கூறியதையடுத்து, பிரதிவாதிகள், பிரதிவாதிகள் கூண்டிலிருந்தவாறே கண்ணீர் மல்கியதுடன், அவர்களுடைய உறவினர்களின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். 

இவர்கள் மூவரையுமா அல்லது இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 5,6ஆம் பிரதிவாதிகளையும் விடுவிக்கிறீர்களா என, ஜூரிகளிடம் நீதிபதி கேட்டதற்கு, அவர்கள் முடிவெடுக்க வில்லை எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு நீதிபதியினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.  

நீதிமன்ற அறையிலிருந்து தங்களுடைய அறைக்குச் சென்று கலந்துரையாடியதன் பின்னர், 12.20க்கு உள்நுழைந்த ஜூரிகள், அனைவரையும் விடுவிப்பதாகத் தெரிவித்தனர்.  

இதனையடுத்து, வழக்கின் 2ஆவது பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சி, 3ஆவது பிரதிவாதியான காமினி செனவிரத்ன, 4ஆவது பிரதிவாதியான பிரதீப் சாமிந்த, 5ஆவது பிரதிவாதியான சரண் என்றழைக்கப்படும் விவேகானந்தன் சிவகாந்தன், 6ஆவது பிரதிவாதியான ரொய்ஸ்டன் டுஸேன் ஆகியோரை, அதிகுற்றச் சாட்டுப்பத்திரத்தில் காணப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்திலுமிருந்தும் விடுவிப்பதாக நீதிபதி, தீர்ப்பளித்தார். 

பின்னர், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஆகியோர் அனவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிரசின் சார்பில் ஜூரிகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நீதிபதி கூறியதையடுத்து, அனைவரும் வெளியேறினர். 

நீதிமன்ற அறைக்கு வெளியே வைத்து, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.  

நாரஹேன்பிட்டி மாதா வீதியிலிருந்து, எல்விடிகல மாவத்தைக்கு 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று பிரவேசித்த போது, காலை 8.15 மணிக்கு நடராஜா ரவிராஜ் எம்.பி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே அவரையும், அவருடைய மெய்ப்பாதுகாவலரையும் சுட்டுப் படுகொலை செய்தனர். 

அன்று அவருடைய குடும்பம் மட்டுமன்றி, தமிழ் தரப்பினரும், ஏன் சிங்கள நண்பர்களும் கூட அவலக்குரல் எழுப்பினர். சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கோரிநின்றனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்தப் படுகொலையை, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்துக்கும் கொண்டு சென்றனர்.  

இந்நிலையிலேயே சம்பவம் இடம்பெற்று, 10 வருடங்களும் 1 மாதமும் கடந்த நிலையில், 24 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடுநிசியில் அவ்வழக்கின் தீர்ப்பு வழக்கப்பட்டது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் பிரதிவாதிகள் அனைவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, சனிக்கிழமை (24) அதிகாலை 12.40க்கு விடுதலை செய்தார்.  

எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் வழங்கிய முடிவையே நீதிபதி, தீர்ப்பாக அறிவித்தார். இந்த வழக்கும், வழக்கின் தீர்ப்பு அதிகாலை வேளையில் வழங்கப்பட்டமையினால், இத்தீர்ப்பு வரலாற்று தீர்ப்பாகிவிட்டது என்பது யாவரும் அறிந்ததாகும். 

http://www.tamilmirror.lk/188623/ரவ-ர-ஜ-எம-ப-பட-க-ல-வழக-க-அவலக-க-ரல-மற-த-த-ஆனந-தக-கண-ண-ர-

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எப்போதுமே சிங்களவர்களால் கிடைக்காது என்பதை திருமலை சம்பவம்,ரவிராஜ் கொலை நிறுவி உள்ளது. கூட்டமைப்பின் மட்டக்களப்பு பா.உறுப்பினரின் ( ஜோசப் பரராஜசிங்கம் ) கொலைக்கும் இதே முடிவு தான் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.