Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் தொடாத நதி

Featured Replies

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 26 - சிவாஜி நடிக்க மறுத்த படம்!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

நூற்றுக்கணக்கில் படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருந்தாலும் நான் எனக்காக உருவாக்கும் கதைகள் மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். இப்போது எடுத்து முடித்திருக்கும் ‘குடை’ திரைப்படம், இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதைச் சொன்னது. என்னுடைய ‘உப்பு’ திரைப்படம், நகரச் சுத்தி தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொன்னது.

அந்தப் படத்தில் ரோஜா நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவுசெய்தோம். ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் அப்போதுதான் மணம் முடித்திருந்தனர். தவிர, அப்போது ஆந்திர அரசியலில் குதித்திருந்தார் ரோஜா. நண்பர் செல்வமணி, ‘‘எப்ப ஷூட்டிங்னு சொல்லுங்க சார்’’ என்றார் பெருந்தன்மையாக.

ரோஜாவின் தந்தையாக, தயாரிப்பாளர் கே.ராஜன் நடித்தார். ‘‘நடிகர்களுக்கான சாப்பாட்டை நானே ரெடி செய்து அனுப்பட்டுமா?’’ என்பார் ஆர்வமாக. லண்டனில் வசிக்கும் வெற்றி என்பவர் ரோஜாவுக்கு கணவராக நடித்தார். உற்சாகமான டீம். வேகமாகப் படப்பிடிப்பில் இறங்கினோம். நகரைச் சுத்தம் செய்யும் பெண்ணின் வேடம் என்பதால் பெரும்பாலும் சென்னை நகரத் தெருக்களில்தான் படப்பிடிப்பு. சிரமமான காட்சிகள். ஆனால், ரோஜா ஒரு முறையும் முகம் கோணியது இல்லை. ஒரு மழைக் காட்சி. அப்பா இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டு, கொட்டும் மழையில் அலறி அழுதபடி ஓடிவர வேண்டும். நான், ரோஜாவுக்குக் காட்சியை விளக்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ரோஜாவின் உதவியாளர் மெல்ல ஒரு விஷயத்தைச் சொன்னார்.

p30a.jpg

‘‘அம்மா முழுகாம இருக்காங்க சார். இப்படி மழையில ஓடி வரச் சொல்றீங்களே?’’

ஆடிப்போனேன். எனக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், அவருக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்கவே மாட்டேன். ‘‘ஏம்மா சொல்லவே இல்லை?’’ என்றேன்.

‘‘இந்தக் கேரக்டருக்கு இப்படி நடிச்சாத்தானே சார் சரியா இருக்கும்?’’ என்றார் ரோஜா. டூப் போட்டு எடுக்கலாம் என்றாலும், ‘வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். நெகிழ்ந்து போய்விட்டேன். ‘‘கண்ணீரும் வியர்வையும் உப்பால் ஆனது. இந்த நகரச்சுத்தி தொழிலாளர் களிடம் இந்த உப்புக்குப் பஞ்சமே இல்லை’’ எனச் சொன்னேன்.

படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம், வைரமுத்து, பாரதிராஜா எனப் பலரும் பாராட்டுக் கடிதம் அனுப்பினர். ‘‘அந்த க்ளைமாக்ஸ் காட்சி இதுவரை சினிமாவில் கண்டிராதது’’ எனப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார் மணி சார்.

அந்தப் படத்துக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கினார். விருது பெற்ற படங்களுக்கு அரசு மானியம் ஏழு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிவுக்கு வந்து, கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், என் படத்துக்கு மானியம் அறிவிக்கப்படவில்லை.

அப்போது நான் ஒரு படத்துக்கான திரைக்கதை சம்பந்தமாக பெங்களூரு சென்றபோது ஏர்போர்ட்டில், கலைஞரின் மருமகன் ‘முரசொலி’ செல்வம் அவர்களை எதேச்சையாக சந்தித்தேன். தமிழ்ப் படங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டிருப்பதைப் பற்றி பேச்சு வந்தது. ‘‘பெண்களுக்கான சிறப்பைப் பேசும் பிரிவில் விருதுபெற்ற என்னுடைய திரைப்படத்துக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். ஏனோ தவிர்த்து
விட்டார்கள்’’ என்றேன். அவர் அன்பான மனிதர். உடனே, அங்கிருந்து அந்தக் குழுவில் இடம்பெற்ற யாரையோ அழைத்து டோஸ் விட்டார்.

நான் சென்னை வருவதற்குள் என் வீட்டுக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகள், கலைஞர் வீட்டில் இருந்து கூப்பிட்டார்கள் என்று. பெங்களூரில் இருந்து வீட்டுக்கு வந்ததும் கலைஞரின் வீட்டுக்குப் போனேன். மானியம் வழங்கும் குழுவில் இருந்தவர் அங்கே காத்திருந்தார். ‘‘ஏதோ தவறு நடந்துவிட்டது. அதை ஏன் செல்வம் சாரிடம் சொன்னீர்கள்? ஏழு லட்ச ரூபாய்க்கு இப்படிச் செய்துவிட்டீர்களே?’’ என்றார்.

‘‘விருது, மானியம் என்பதெல்லாம் அங்கீகாரம். ஒரு கலைஞன் அதற்காகத்தான் காத்திருக்கிறான். பணத்தை வைத்து அதைத் தீர்மானிக்காதீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுடைய திரைக்கதை, ‘அந்திமந்தாரை’. அந்தப் படத்தில் சிவாஜி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் பாரதியின் ஆசை. அதனால், ஒருநாள் காலை சிவாஜி சாரைச் சந்தித்துக் கதை சொன்னேன். தியாகி பென்ஷன் வாங்க விரும்பாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் எதிர்கொள்ளும் அவமானங்கள்தான் கதையின் மையம்.

திருமணம் செய்துகொள்ளாததால், அண்ணன் மகன் வீட்டில் இருப்பார் அந்தத் தியாகி. வருமானத்துக்கு வழி இல்லாத அவர், அந்தக் குடும்பத்துக்கு ஒரு சுமையாகத் தெரிவார். இந்த நேரத்தில் சென்னைக்கு ஜனாதிபதி வருவார். ‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஜனாதிபதியும் நானும் ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள்’ என ஏற்கெனவே சொல்லியிருப்பார் அந்தத் தியாகி. மருமகள், ‘‘ஜனாதிபதியைச் சந்தித்து உங்கள் தியாகி பென்ஷனுக்கு வழி பண்ணுங்கள்’’ எனச் சொல்வாள்.

ஜனாதிபதியைச் சந்திக்க அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வாசலில் காத்திருப்பார். அப்போது வரும் கலெக்டர், ‘யாரோ பெரியவர் நிற்கிறாரே’ என விசாரிப்பார். ‘‘நானும் ஜனாதிபதியும் நண்பர்கள்’’ என்ற தகவலைச் சொல்வார் தியாகி. கலெக்டர் உள்ளே சென்று, ‘‘கோபாலகிருஷ்ணன் என ஒருவர் உங்களைத் தெரியும் என வந்திருக்கிறார்’’ என்பார், ஜனாதிபதியிடம்.

‘‘கோபாலா வந்திருக்கிறான்?’’ என ஜனாதிபதியே எழுந்து ஓடிவந்து வரவேற்பார். இருவரும் வெகுநேரம் பேசுவார்கள். பேச்சின் இடையில் தன் தியாகி பென்ஷன் பற்றிக் கேட்கலாம் எனக் காத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். ஆனால், ஜனாதிபதியோ, ‘‘நீ எங்கே இருக்கிறாய் எனத் தேடினேன். தியாகி பென்ஷன் பட்டியலையும் வாங்கிப் பார்த்தேன். அதில் உன் பெயர் இல்லை. தியாகத்துக்கெல்லாம் பென்ஷன் வாங்குகிற ஆள் நீ இல்லை என எனக்குத் தெரியும்’’ என்பார் பெருமையாக. அதன்பிறகும் தன் பென்ஷன் பற்றிப் பேச முடியுமா? எதுவும் கேட்காமல் திரும்பிவிடுவார். மருமகள் மேலும் திட்டித் தீர்ப்பாள்.

படத்தின் முடிவில் கோபாலகிருஷ்ணன் சாலை ஓரத்தில் அநாதைப் பிணமாகக் கிடப்பார். ‘அமைச்சர் வருகிற நேரத்தில் இந்தத் தொல்லை வேற’ என அவரை லாரியில் ஏற்றி குப்பைமேட்டில் கொண்டு போய் போடுவார்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது அவரால் காதலிக்கப்பட்டவர், அவரை அந்தக் குப்பை மேட்டில் தேடித் தேடி அலைந்து, அவரும் அங்கேயே இறந்துபோவார். இந்தக் கதையை சிவாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் கண்கலங்கினார்.

கதையை முழுதுமாகக் கேட்டு முடித்துவிட்டு, ‘‘வேண்டாம்பா... என்னாலேயே தாங்க முடியலை. நான் நடிச்சா உங்க கதையை இன்னும் சோகக் காவியமாக்கிடுவேன். ஜனங்க தாங்க மாட்டாங்க’’ என சிவாஜி நடிக்க மறுத்துவிட்டார்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p30b.jpg

‘அந்திமந்தாரை’யின் ஆதி!

சுதந்திரப் போராட்டத்தின்போது எரவாடா சிறையில் சஞ்சீவி ரெட்டி, காமராஜர், என் சித்தப்பா சங்கரய்யா மூவரும் ஒரே சிறை அறையில் இருந்தவர்கள். பின்னாளில் காமராஜர் தமிழகத்தின் முதல்வரானார். சஞ்சீவி ரெட்டி ஜனாதிபதியாக ஆனார். ஒரு காலத்தில் தன்னோடு சிறையில் ஒன்றாக இருந்தவர், ஜனாதிபதி ஆவதாகவும் அவரைச் சந்திக்க அந்தத் தியாகி செல்வதாகவும் கற்பனைக்கு வடிவம் கொடுத்தது அந்தச் சிறைச் சம்பவம்தான். உணர்ச்சிகரமான காட்சியாக அது அமைந்தது. என் சித்தப்பா, தியாகி பென்ஷன் வாங்காதவர். மேலும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுக்கான சம்பளத்தைக் கட்சிதான் கொடுக்கும். ‘அந்திமந்தாரை’ என் மனதில் பூத்தது இந்தப் பின்னணியில்தான்!

http://www.vikatan.com/juniorvikatan/

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?

 

 

ஒரு படத்தின் திரைக்கதை எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடிந்த தருணங்கள் ஏராளம். பாரதிராஜா, ‘16 வயதினிலே’ படத்தை முடித்ததும் அடுத்த படத்துக்காக உருவாக்கிய கதை, ‘கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?’

p26b.jpgகதை விவாதம் முடிந்து, ஷூட்டிங் கிளம்பத் தயாராகினர். எனக்கு ‘இந்தக் கதையில் ஏதோ ஒண்ணு குறையுதே’ எனத் தயக்கமாகவே இருந்தது. மறுநாள் காலை, எல்லோரும் கிளம்பப் போகிறார்கள். முந்தின நாள் இரவு ஒரு பிரெஞ்சு நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்; மூளைக்குள் ஒரு ஸ்பார்க்.

காலையில் எழுந்ததும் பாரதி ராஜாவைத் தொடர்புகொண்டேன். அப்போது செல்போன் இல்லை. யாரோ அவனுடைய அலுவலகத்தில் எடுத்தார்கள். ‘‘பாரதியை என்னிடம் பேசச் சொல்லுங்கள்’’ என்றேன். ஒவ்வொருவராக ரயில் பிடிக்க ஆயத்தமாகிக்கொண்டிருப்பது அவர்களின் பரபரப்பில் புரிந்தது. எனக்கு போன் வரவில்லை. இருப்பு கொள்ளாமல் மீண்டும் போன் செய்தேன். ‘‘ஷூட்டிங் கிளம்பிட்டேன்.அப்புறம் பேசறேன்னு சொல்லுங்க’’ என போனை எடுத்தவரிடமே சொல்லி, தகவலை எனக்குத் தெரிவிக்கச் சொன்னான். நானும் விடாமல், ‘‘ஷூட்டிங் கிளம்பறதுக்கு முன்னாடி பேசணும்னு சொல்லுங்க’’ என்றேன்.

அங்கேதான் நிற்கிறான் பாரதி. என்னுடைய வார்த்தைகள், கதையில் என்னவோ மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவனுக்கு உணர்த்திவிட்டது. போனில் பேசினான். ‘‘கதையில் ஒரு முக்கியமான மாற்றம் செய்ய வேண்டும்’’ என்றேன். உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தான். ஒரு கதாசிரியனுக்கு அவன் தந்த உச்சபட்ச மரியாதை அது.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கு நாங்கள் முதலில் உருவாக்கிய கதையைச் சொல்லிவிடுகிறேன்.

ஓர் இனிய கிராமம். ஊரின் எல்லையில் தினமும் ஒருமுறை நாகரிகத்தை நகர்த்திச் செல்லும் ஒரு ரயில். பிழைப்பு தேடி, சென்னை சென்ற தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள், அந்தக் கிராமத்தின் இளம்பெண் ஒருத்தி. அவர்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு, கிழக்கே போகும் ரயில். அந்த ரயிலின் கடைசிப் பெட்டியில் சாக்பீஸால் தான் காதலனுக்குச் சொல்ல விரும்பும் தகவலைச் சுருக்கமாக எழுதுவாள். அதைப் படித்துவிட்டுக் காதலன் பதில் எழுதுவான். இந்த நேரத்தில், வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்து காதலனைச் சந்திக்க சென்னைக்குச் செல்கிறாள்.

p26a.jpg

சென்னை ரயில் நிலையத்தில், தங்கள் ஊர் ரயில் பற்றி  விசாரிக்கிறாள். அந்த ரயிலில் அவள் எழுதும் தகவலைப் படிக்க காதலன் வருவான் அல்லவா? ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள் அவளை, ‘‘நாங்களும் அதுக்காகத்தான் காத்திருக்கோம். ரயில் இப்ப வந்துடும். அதுவரைக்கும் இந்த ரூம்ல வெய்ட் பண்ணலாம்’’ என அழைத்துச் செல்கிறார்கள். அந்த அப்பாவிப் பெண்ணை, பலாத்காரம் செய்துவிட்டு ஓடிப் போகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண், ‘‘கிழக்கே போகும் ரயில் எப்ப வரும்’’ என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னபடி சென்னைத் தெருக்களில் அலைகிறாள்.

யதேச்சையாக அந்தப் பெண்ணைப் பார்க்கும் நான்கு இளைஞர்களும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அவளை மீட்டுக் காப்பாற்ற முடிவெடுக்கிறார்கள். காப்பாற்ற அவர்கள் ஓடி வர... நடுரோட்டில் அந்தப் பெண் தடுமாற... வேன் ஒன்று அவள்மீது மோதி அவளைத் தூக்கி எறிகிறது. மோதிய வேகத்தில் வேன் நிலை தடுமாறிக் கவிழ, அதிலிருந்து ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற தலைப்புள்ள கவிதை நூல்கள் சிதறி விழுகின்றன. அவளுடைய காதலன் தன்னுடைய நூல்களுடன் அச்சகத்தில் இருந்து வந்த வேன் அது. காயங்களோடு காதலன் வேனில் இருந்து வந்து கதறுகிறான்...

- இப்படித்தான் ஆரம்பக் கதை இருந்தது. அது ஒரு சோகக் காவியமாக இருந்திருக்கும். ஆனால், எனக்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் அந்த பிரெஞ்சு கதையைப் படித்தேன். வரித் தொல்லையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் ராணியிடம் முறையிடுகிறார்கள். ராணி, மன்னரிடம் மக்களின் துயரத்தைச் சொல்கிறாள். மன்னர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். ‘‘யாராவது ஒரு பெண் நடு இரவில் நிர்வாணமாக நகரத் தெருக்களில் சுற்றி வந்தால் வரியை நீக்குகிறேன்’’ என்கிறார். இப்படி ஒரு நிபந்தனையை யாரும் நிறைவேற்ற மாட்டார்கள் என்பது அரசரின் எண்ணம். அதேபோலவே ஆகிறது. மக்கள் வரிச்சுமையைப் போக்க ராணியே ஒரு முடிவெடுக்கிறாள். மக்களுக்காக ராணியே நிர்வாணமாக நடக்கிறாள்.

‘கிழக்கே போகும் ரயில்’ நாயகி பாஞ்சாலிக்கு ஊர் மக்கள் சேர்ந்து அப்படி ஒரு நெருக்கடி கொடுக்கிறார்கள். நள்ளிரவில் நிர்வாணமாக நடக்க வைக்கத் தேதி குறிப்பதாக, ரயில் பெட்டியில் அவள் தகவல் எழுதுகிறாள். அந்தத் தகவல், மழையில் அழிந்துவிடுகிறது. இறுதியில் காதலன் வந்து அவளை எப்படி மீட்டுச் செல்கிறான் என்பதாக  க்ளைமாக்ஸை மாற்றினோம். முழுவதுமாக ஸ்கிரிப்டை மாற்றிக் கொண்டுதான் மீண்டும் ஷூட்டிங் புறப்பட்டான் பாரதி. படம் ஒரு வருடம் ஓடியது.

கதைக்கான ஒரு ஸ்பார்க் நமக்கு எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். தங்கம் கிடைத்து விடும். அதை நகைகளாக அலங்கரிப்பதுதான் படைப்பாளியின் வேலை. கிராமத்தில் பார்த்தது, எங்கேயோ கேட்டது, புத்தகத்தில் படித்தது, சினிமாவில் பார்த்தது எல்லாமே நினைவில் நிழல்படங்களாகப் பதிந்து கிடக்கின்றன. கதை உருவாக்கத்தின்போது அவை நம் மூளையோடு போராடுகின்றன; ரசவாதத்தை நிகழ்த்துகின்றன. அப்படி நிகழ்ந்த ரசவாதங்களைச் சொல்வது எனக்குப் பெருமையாகவும் இருக்கிறது. விஜயகாந்த் நடித்த ‘சக்கரை தேவன்’ கதையும் அப்படிப் பிறந்ததுதான். அது..?

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


கதிரவனுக்காகக் காத்திருந்த சூரியகாந்தி!

‘சன்ஃப்ளவர்’ என்ற இத்தாலி படம். சோபியா லாரென் நடித்தது. அவருடைய காதல் திருமணத்தோடு படம் ஆரம்பிக்கும். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இரண்டாம் உலகப்போர். வீட்டுக்கு ஒருவன் ராணுவத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஜெர்மனி படைகளோடு சேர்ந்து போரிட சோவியத் ரஷ்யா செல்கிறான், சோபியாவின் கணவன். போர் முடிந்தபின்பும் கணவன் ஊருக்குத் திரும்பவில்லை. கணவனின் பெயர் இறந்துபோனவர்கள் பட்டியலில் இல்லை. காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறது.

p26.jpg

அவனைத் தேடி ரஷ்யாவுக்குப் புறப்படுகிறார் சோபியா. அங்கே ஒரு சூரியகாந்தி தோட்டம். இறந்த ஒவ்வொரு இத்தாலி வீரரின் நினைவாகவும் ஒரு பூ பூத்திருக்கும். மொழி தெரியாத ஊரில் எங்கெங்கோ தேடி, கடைசியில் கணவனைப் பார்க்கிறாள். அவன் வேறு ஒருத்தியுடன் வாழ்கிறான். வாழ்க்கையே வெறுத்து இத்தாலி திரும்புகிறார் சோபியா. பிறகொரு நாள் சோபியாவைத் தேடி வருகிறான், அவளுடைய கணவன். எங்கெங்கோ தேடி காதல் மனைவியைக் கண்டுபிடிப்பான். ‘போரில், பனிச் சிகரத்தில் குண்டடிபட்டுக் கிடந்த தன்னை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிப் பாதுகாத்த தன் சோவியத் மனைவியைப் பற்றிச் சொல்கிறான். ‘‘நீயும் வந்து விடு... சேர்ந்து வாழலாம்’’ என்கிறான். ஆனால், சோபியா தனக்கு மணமாகி மகன் பிறந்திருப்பதைத் தெரிவிக்கிறாள். இருவரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிரிகிறார்கள். போரின் பின்னணியில் அமைந்த உருக்கமான காதல் கதை அது!

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்

 

 

நெல்லையில் என் தாத்தாவுக்குச் சொந்தமான கரும்பு ஆலை ஒன்று இருந்தது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்ட நேரத்தில் அவர்களுக்கு எதிராகத் தொழில் நடத்திய தீரர் அவர். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டிய நிகழ்வு நமக்குத் தெரியும். பங்குதாரர்களாக இருந்த இந்தியர்களே அவருக்குத் துணை நிற்காமல், அந்தக் கப்பல் வெள்ளையர்கள் கைக்குப் போன துயரம் நிகழ்ந்தது. என் தாத்தாவுக்கும் அப்படியான வேதனையே மிஞ்சியது. இறுதியில் ஆலையை நடத்தமுடியாமல் மூட வேண்டியதாகி விட்டது. அந்த ஆலையின் நினைவுகளாகக் காலம் விட்டுவைத்த மிச்சம் மட்டுமே இன்னும் சாட்சியாக இருக்கிறது.

என் தமக்கையை மணம் செய்துகொடுத்த அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு ஆலைகள் நிறைய உண்டு. அந்த ஆலைகளைப் பார்க்கும்போது என் தாத்தா நடத்திய ஆலை நினைவில் சப்தமிட்டு இயங்கும். இந்தக் கரும்பு ஆலை நினைவுகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. கூடவே, இந்தக் கரும்பு ஆலைகள் பின்னணியில் ஒரு திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தபடி இருந்தது. அலங்காநல்லூர் போகும்போது அந்த ஆலைகளின் பின்னணிகளை, அந்த மக்களின் பழக்க வழக்கங்களைக் கவனிப்பேன்.

p28a.jpg

சுடச்சுட வெல்லம் காய்ச்சி எடுக்கும் அந்தப் பகுதிகளில், இட்லிக்கு வெல்லப்பாகு வைத்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு. அந்தப் பகுதி திருவிழாக்களில் இன்னொரு காட்சியைப் பார்த்திருக்கிறேன். திருவிழா நேரத்தில், திருமண வயதில் பெண்கள் இருக்கும் வீடுகளின் வாசலில் கொலு போல ஒரு காட்சி இருக்கும். அதாவது, அந்தப் பெண்ணின் திருமணத்துக்காக வைத்திருக்கும் சீர்வரிசைப் பொருட்களை அங்கு காட்சிக்கு வைப்பார்கள். பெண்ணுக்குச் சீராகக் கொடுக்க இருக்கும் பசு மாடும் வாசலில் கட்டப்பட்டிருக்கும். பெண் எடுக்க நினைக்கும் மாப்பிள்ளை வீட்டார், திருவிழாவுக்கு வந்தது போன்ற பாவனையில் ஊரை வலம் வந்து, தங்களுக்குத் தகுதியான சீர்வரிசை உள்ள வீட்டைப் பார்ப்பார்கள்.

அந்தச் சீர்வரிசைக் கொலுவில் இருக்கும் குத்துவிளக்குக்கு அவ்வப்போது எண்ணெய் ஊற்றிவிட்டுப் போவது அந்த மணப்பெண்களின் வேலை. மாப்பிள்ளை வீட்டார் அந்தத் தருணத்தில் பெண்ணையும் பார்க்க முடியும். சீர், பெண் எல்லாம் பிடித்துப்போனால், அதன்பின் நிச்சயம் செய்ய வருவார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, பெண்ணை நடந்துவரச் சொல்லி, மாடு பிடிக்க வந்தது போல பார்க்கும் சடங்காக இல்லாமல் நடக்கிற கவித்துவமான கலாசாரம் அது.

இதையும் சினிமாவில் பயன்படுத்த விரும்பினேன். விஜயகாந்த் நடித்த ‘சக்கரை தேவன்’ படத்தில் இந்தக் காட்சியை எழுதினேன். ‘சின்ன கவுண்டர்’ படத்துக்குப் பிறகு, நானும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும் இணைந்து விஜயகாந்துக்காக உருவாக்கிய கதை இது. கவித்துவமும் கலாசாரமும் இணைந்த அருமையான கதையாக இதைச் செழுமைப்படுத்த முடிந்தது.

படத்தில் வெல்ல மண்டியில் பல ஊர்களிலிருந்தும் வெல்லம் வந்து மூட்டை மூட்டையாகக் குவியும். ஈ மொய்க்காமல் இருக்க வெல்ல மூட்டைகளை வேப்பிலை வைத்து விசிறுவார்கள். அப்படி வந்துகுவியும் வெல்ல மூட்டைகளில், ஒருவருடைய வெல்லம் மட்டும் வந்ததும் விற்றுப் போகும். காரணம், அதனுடைய சுவை. கரும்புச் சாறு பிழியும் இடத்தில் படத்தின் நாயகனின் பாட்டும் பிறந்து சாறோடு கலக்கும். அதனால்தான் அந்த வெல்லத்தில் மட்டும் அப்படி ஒரு இனிப்பு என ஊரே கொண்டாடும். இப்படித்தான் படத்தின் காட்சி ஆரம்பமாகும். சுகன்யா, கனகா கதாநாயகிகளாக நடிக்க, இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதை வருடின. சில காரணங்களால் அந்தப் படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்க முடியாமல் போனது. படமும் நாங்கள் உருவாக்கி வைத்த ரசனையோடு வராமல் போய்விட்டது.

முதன்முதலில் நான் டி.வி பெட்டியைப் பார்த்தது மதுரை சித்திரைத் திருவிழாவில். அந்த நேரத்தில் பொருட்காட்சி ஒன்றும் நடக்கும். அதில்தான் பார்த்தேன். தூரத்தில் நடக்கும் நடனத்தை அருகே பார்ப்பதற்கு வசதியாக ஒரு குளோஸ்டு சர்க்யூட் டி.வி வைத்திருந்தார்கள். நாட்டியம் பார்க்க கூட்டம் அலை மோதியதால், அந்த டி.வி ஏற்பாடு. அந்த டி.வி பெட்டியில் முதன்முதலாக நான் பார்த்தது, பழநி தெய்வ குஞ்சரி என்ற நாட்டியத் தாரகையை. அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘கற்பகம்’ படத்தில் கதாநாயகியாக உச்சம் தொட்டார் அந்த நாட்டிய நாயகி. அவர்தான், கே.ஆர்.விஜயா.

அந்த மதுரை சித்திரைத் திருவிழாவில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம், என்.சி.பி.ஹெச் புத்தக நிறுவனம் போடும் புத்தகக் காட்சி. ரஷ்ய நூல்கள் எல்லாம் மலிவான விலையில் அங்கே கிடைக்கும். புத்தகக் கடையில் வாலன்டையராக வேலை பார்த்தால் சுகமாகப் புத்தகங்கள் படிக்க முடியும். அங்கே சுகுமாரன் என்ற தோழர் எனக்குக் கிடைத்தார். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ போன்ற நூல்களை எல்லாம் அங்கேதான் பார்த்தேன். என் வாழ்க்கையின் தடத்தையே மாற்றிப்போட்ட நூல் அது. ‘ஜமீலா’ போன்ற அற்புதமான காவியங்களை அங்கே படித்தேன். புத்தகக் கடையில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, சில நூல்களைப் பழுதடைந்த நூல்களாகக் கணக்கில் காட்டி எனக்குத் தருவார் சுகுமாரன். ரஷ்ய இலக்கியங்கள் மனத்தில் நங்கூரம் பாய்ச்சி அமர்ந்தததற்கு, எங்கள் குடும்பம் கம்யூனிஸ பின்னணியில் இருந்தது ஒரு காரணம் என்றாலும், அந்தப் புத்தகக் கடையில் அந்த நூல்களுடன் நெருக்கமாக இருக்க முடிந்தது இன்னொரு காரணம் என்றே சொல்லுவேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p28.jpg

கனவுகளைச் சுமக்கும் பெண்கள்!

ன்பது வயது மகளுடன் தன் புதிய கணவனின் நகரத்துக்குக் கடலில் பயணித்து வந்து இறங்குகிறாள் ஒரு தாய். அவள் பேச இயலாதவள். அவளுடைய மொழியே பியானோ இசைதான். கடற்கரையில் இறக்கிவிடப்படும் அவளுடைய பொருள்கள் அனைத்தும் கணவனின் வீட்டுக்குப் போய்ச் சேர்கின்றன. அவள் உயிருக்கு உயிராக நேசிக்கும் பியானோ மட்டும் கடற்கரையிலேயே இருக்கிறது. அந்தப் பியானோவை வைக்க கணவன் வீட்டில் இடம் இல்லை. கொட்டும் மழையில் பியானோ மட்டும் கடற்கரையில் அனாதையாகக் கிடக்கிறது. அந்தப் பியானோவை வாங்கிக்கொள்ள விரும்புகிறான் அந்த நகரத்து இளைஞன் ஒருவன். மனைவியின் விருப்பத்துக்கு மாறாக அதை அவனுக்கு விற்பதோடு, அவனுக்கு பியானோ கற்பிக்குமாறும் வற்புறுத்துகிறான் கணவன். வேறு வழியில்லாமல் கற்பிக்க சம்மதிக்கிறாள்.

அவளுக்கு பியானோ மீது உயிர். கற்க வந்தவனுக்கோ அவள் மீது உயிர். பியானோவில் எத்தனைக் கட்டைகள் உள்ளனவோ, அத்தனை முறை அவள், அவன் வீட்டுக்கு வந்து கற்பித்தால் அந்த பியானோவைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்கிறான். பியானோவுக்காக அவளையே அவனுக்குத் தருகிறாள். ‘ஒவ்வொரு பெண்ணும் கணவன் வீட்டுக்கு அவளுடைய ஒரு கனவையும் சுமந்துசெல்கிறாள்’ என்பதைச் சொல்லும் காவியம் ‘தி பியானோ’ என்ற அந்தப் படம்.

நியூஸிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் இயக்குநரான ஜேன் காம்பியன் இயக்கினார். 1993-ம் ஆண்டில் வெளியாகி, கேன்ஸ் படவிழாவில் ‘தங்கப் பனை’ விருது பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற படம் இது.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 29 - செக் கொடுத்தார்... செக் வைத்தார்!

 

 

வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது. சினிமா வாழ்க்கை மட்டும் என்ன... அது பல அதிரடித்  திருப்பங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. 230 திரைப்படங்களுக்குமேல் பணியாற்றிவிட்டேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை பிரபலங்கள், எத்தனை வெற்றிகள், எத்தனை சறுக்கல்கள்... காலச் சுவற்றில் கணக்குக் கரிக்கோடுபோல நினைவுக்கீறல்களின் வடுக்கள் ஏராளம் இருக்கின்றன.

ஒருமுறை திருவனந்தபுரம் சென்றிருந்தபோது ஒருவர் என்னைப் பார்க்கக் காத்திருந்தார். தன்னை கேமரா மேன் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தனக்குத் தமிழ்ப் படத்தில் பணியாற்ற விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். பயன்படுத்திக்கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.

என்னுடைய ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்துக்கு அவரையே கேமரா மேனாக நியமித்தேன். ரயில் வரும் நேரங்களில் சாலையின் குறுக்கே கேட் மூடப்படும். அப்போது, அதன் இருபுறங்களிலும் நிற்கும் பேருந்துகளில் காத்திருக்கும் பயணிகளிடம் பூ, பழம், தின்பண்டங்களை விற்பவர்களைப் பார்த்திருப்போம். ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தின் கதைமாந்தர்கள் அவர்கள்தான்.

p26a.jpg

பேசும் கிளியுடன் அந்தச் சிறு வணிகத்தில் பங்கேற்கும் ‘சங்கராபரணம்’ ராஜலட்சுமிதான் படத்தின் நாயகி. எளிய மனிதர்கள் வாழும் சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்துக்கு முதல்முறையாக வரும் பேருந்து இன்னொரு முக்கியமான பாத்திரம். அதன் நடத்துநராகக் கார்த்திக் படத்தின் நாயகன். தியாகராஜன், வடிவுக்கரசி, வினோத் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

படத்தின் சில காட்சிகளை விகடன் சேர்மன் பாலசுப்ரமணியன் சாரின் படப்பை பண்ணை வீட்டில் ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டேன். உடனே அனுமதி தந்தார் அந்த மாபெரும் மனிதர். அடுத்தவர்களின் கஷ்டம் தெரிந்தவர். படப்பிடிப்பு சம்பந்தமாக எங்களிடம் பேசிய ஒருவர், ஒரே ஒரு கண்டிஷன்தான் வைத்தார். ‘‘ஐயா நிறைய பறவைகள் வளர்க்கிறார். அவற்றுக்குப் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும்’’ என்றார். வாடகை எவ்வளவு தர வேண்டும் என நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை. ஷூட்டிங் முடிந்து, ‘‘எவ்வளவு வாடகை’’ எனக் கேட்டேன். ‘‘ஐயா வாடகை வாங்க வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்’’ என்று கூறிவிட்டார், அந்தத் தோட்டத்தை நிர்வகிப்பவர். எவ்வளவு வற்புறுத்திக் கொடுத்தபோதும் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார்.

படத்தில் ஒரு காட்சி... தியாகராஜன், தன் மைத்துனியை இரண்டாம் திருமணம் செய்வதற்காகத் தன் மனைவி வடிவுக்கரசியிடம் மிரட்டல் தொனியில் பேசுவார். ‘‘பஞ்சாயத்து கூட்டுவேன். நீ ஒரு மலடின்னு சொல்வேன்’’ என ஆவேசமாகக் கிளம்புவார். வடிவுக்கரசி பொங்கிவிடுவார். ‘‘நில்லுய்யா. பஞ்சாயத்து என்றால் பத்து ஆம்பளைங்க இருப்பாங்கதானே? அதில ‘யாராவது ஒருத்தன் வாங்க. பத்து மாசத்தில புள்ள பெத்துக்கொடுக்கிறேன்’னு சொல்வேன். பரவாயில்லையா?’’ என்பார். கைதட்டலில் தியேட்டரே அதிர்ந்த காட்சி அது.

மதுரைக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கடைசி நாள் ஷூட்டிங். ‘சேர்ந்தே இருப்பது’ என இன்றைய நாளில் சிவபெருமானிடம் தருமி கேள்வி கேட்டால், ‘சினிமாவும் பண நெருக்கடியும்’ என்று பதில் வரும். பணியாற்றிய அனைவருக்கும் கடைசி நாள் ஷூட்டிங்கில் பணம் செட்டில் செய்ய வேண்டும். ஒரு ஃபைனான்சியர் வந்தார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும் சேர வேண்டிய பணத்துக்குச் சரக் சரக் என செக் போட்டுக்கொடுத்தார். எல்லோரும் திருப்தியாக ஷூட்டிங் முடிந்து கிளம்பினோம். சென்னைக்குப் புறப்படுவதற்காக, மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். அந்த ஃபைனான்சியர் ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றியது மாதிரி ஒரு வரி சொன்னார்: ‘‘இந்த எல்லா செக்கும் பாஸ் ஆகணும்னா, படத்தை என் பெயருக்கு மாத்திக் கொடுத்துடுங்க.’’

p26b.jpg

கடனைத் திருப்பித் தருவது வேறு... படத்தின் அத்தனை லாபத்தையும் கேட்பது வேறு. என்ன செய்வது எனப் புரியவில்லை. அத்தனை பேருக்கும் செக் கொடுத்தாகிவிட்டது. செக் திரும்பினால் கேவலமாகப் போய்விடும். இப்படிச் சிக்க வைத்துவிட்டாரே எனக் கோபம் பொங்கியது. என்னுடைய நண்பரான வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனுக்கு போன் செய்தேன். ‘‘ஒன்றும் கவலைப்படாதீர்கள். அவர் கேட்டபடி எழுதித் தந்துவிடுங்கள்’’ என்று யோசனை சொன்னார். நல்லவேளையாகப் பிறகு கரூர் சுப்பிரமணி, போன்ற நண்பர்கள் வந்து அவரிடம் வாங்கிய கணக்கை செட்டில் செய்துவிட்டனர்.

‘சினிமாத் தொழில், சினிமாவில் வருகிற காட்சிகளைவிட அதிகத் திருப்பங்கள் கொண்டது’ என்பதற்காக அந்தச் சம்பவத்தைச் சொன்னேன்.

தொடக்கத்தில் கேமரா மேன் வாய்ப்புக் கேட்ட இளைஞனைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர் பெயர் தினேஷ் பாபு. நான் இயக்கிய அடுத்த படத்துக்கும் அவரையே கேமரா மேனாகப் பயன்படுத்தினேன். ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற அந்தப் படம் பெட்ரோல் பங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. பூனா இன்ஸ்டிட்யூட் மாணவர் ஹீரோவாக நடித்தார்.

வேகமாகப் படம் வளர்ந்தது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகளும் சில காட்சிகளுமே பாக்கி. சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிக்கொண்டே போனது. ஒரு நாள் தினேஷ் பாபு வந்தார். ‘‘சார், எனக்குக் கன்னடத்தில ஒரு படம் பண்ற சான்ஸ் கிடைச்சிருக்கு. ‘தேசிய நெடுஞ்சாலை’ கதையை நான் பண்ணட்டுமா சார்?’’ என்றார்.

‘‘அதற்கென்னப்பா... பண்ணு’’ எனச் சொல்லிட்டேன்.

அந்தப் படம் ரிலீஸ் நேரத்தில் எனக்கு ஒரு தகவல் வந்தது... படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை, திரைக்கதை தினேஷ் பாபு’ எனப் போட்டு வெளியாகப் போவதாக. கொந்தளித்துப் போனேன். படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாது எனச் சொல்லிவிட்டேன். தினேஷும் அவருடைய அப்பாவும் வந்தனர்.

‘‘நீங்க அனுமதி கொடுத்ததால்தானே என் பையன் படத்தை எடுத்தான்?’’ என்றார், பையனின் அப்பா. ‘‘என் கதையை உன் கதைனு போட்டுக்கோன்னா சொன்னேன்? உங்க கதையைப் பண்ணட்டுமான்னு கேட்டான்... பண்ணுப்பான்னு சொன்னேன். என் கதையை அவன் டைரக்ட் செய்வதாகத்தானே அர்த்தம்?’’ என்றேன்.

அப்பாவும் மகனும் மன்னிப்புக் கேட்டனர். அதுவும் இல்லாமல், நான் முன்னர் சொன்னேனே என் தோழி பிரபா... அவர்தான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். வேறு வழி? மன்னித்து அனுப்பிவிட்டேன். சினிமாவில், ஒரு வார்த்தைக்கு ஒரு கோடி அர்த்தமல்ல... ஒரு கோடி ரூபாய் அர்த்தம். எந்த அளவுக்குத் திறமையாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p26.jpg

வாழ விரும்பியபோது...

‘ஐ வான்ட் டு லிவ்’ என்ற ஆங்கிலப் படம். சின்னச் சின்ன குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஓர் அப்பாவிப் பெண். அவள் செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. நகரத் தந்தை ஒருவரைக் கொன்ற பழி அவள் மீது விழுகிறது. வழக்கின் விபரீதம் புரியாமல் அவள் விளையாட்டுத்தனமாக இருக்கிறாள். காவல் துறையும் நீதித் துறையும் அவளுடைய மரண தண்டனையை உறுதி செய்கின்றன. அவளைப் பற்றித் தெரிந்த ஒரு பத்திரிகையாளன், அவளை மீட்க ஆதாரங்கள் தேடுகிறான். தண்டனையை நிறைவேற்றும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அவள் வாழ ஆசைப்படுகிறாள். அவள் கொலைகாரி இல்லை என்ற ஆதாரத்தைப் பத்திரிகையாளன் கண்டுபிடித்து, காப்பாற்ற ஓடோடி வருகிறான். அதற்குள் அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பரபரப்பான படம். சூசன் ஹேவர்டின் அற்புதமான நடிப்பில், அந்த உண்மையைக் கதையாக தரிசிக்க முடியும்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 30 - கமல்ஹாசனின் ‘பவர் கட்!’

 

 

ஞ்சு சாரின் தம்பி லட்சுமணன் ‘பிலிமாலயா’ என்ற சினிமா இதழை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நடத்திவந்தார். ராமச்சந்திரன் என்பவர் அந்தப் பத்திரிகையின் முதலாளி. சில காரணங்களால் ஆசிரியர் பொறுப்பிலிருந்து லட்சுமணன் விலகிக்கொண்டார். அப்போது, ‘பேசும் படம்’, ‘பொம்மை’ என இன்னும் இரண்டு சினிமா இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றுக்குப் போட்டியாக இதழை நடத்துவதற்கு ஓர் ஆசிரியர் கிடைக்காமல், ராமச்சந்திரன் யோசனையில் இருந்தார்.

‘பேசும் படம்’ இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த எம்.ஜி.வல்லபனை எனக்கு நன்றாகத் தெரியும் என ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர் பெயரை, பஞ்சுவிடம் சிபாரிசு செய்தேன். ‘‘நீங்களே ராமச்சந்திரனை வல்லபன் சந்திக்க ஏற்பாடு செய்துவிடுங்கள்’’ எனப் பஞ்சு சொன்னார். நான், ‘‘நீங்கள் ஒருமுறை பார்த்துப் பேசிவிடுங்கள்.பிறகு அவரிடம் சொல்லிக்கொள்ளலாம்’’ என்றேன். பஞ்சுவும், எம்.ஜி.வல்லபனும் சந்தித்துப் பேசினர். அவர், இதழ் வளர்ச்சிக்குச் சில யோசனைகளைச் சொன்னார். அதில் முக்கியமானது, ‘ஆண்டுதோறும் சினிமாக் கலைஞர்களுக்கு விருது வழங்கி, விழா எடுக்கலாம்’ என்ற யோசனை.

16p11.jpg

சித்ரா ராமு, சித்ரா லட்சுமணன் இருவரும் அன்றைக்குப் பரபரப்பான சினிமா பி.ஆர்.ஓ-க்கள். எல்லா சினிமா நட்சத்திரங்களின் அன்புக்கும் பாத்திரமாக இருந்தவர்கள். அவர்களை அழைத்துப் பேசினோம். விழாவுக்குப் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரத்தின் ஒத்துழைப்பும் தேவை என முடிவெடுத்து, அவரைச் சந்தித்தோம். அவர், தமிழகத்தின் பல பிரபலங்களைப் படம் எடுத்தவர்; தமிழகத்தில் பல புகைப்படக் கலைஞர்களை உருவாக்கியவர். அவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அவருடைய வீட்டுக்குப் போய்விட்டால் காபி, மசால் வடை என வந்துகொண்டே இருக்கும். தவிர, அமீன் ஓட்டலிலிருந்து சமோசாவும் டீயும் வரும்.

நாங்கள் விவாதித்துக்கொண்டிருந்தோம். சினிமா நட்சத்திரமாகவும் இலக்கிய ஆர்வலராகவும் உள்ள கமல்ஹாசன் விழாவுக்கு வந்தால், விழா களை கட்டும் என்று முடிவுசெய்தோம். ‘ஒரு நாடகம் எழுதி, அதில் கமலை நடிக்குமாறு கேட்கலாம்’ என்ற யோசனையைச் சொன்னார்கள். அது, நல்ல யோசனையாகப் பட்டது. உடனே, நான் ஓர் ஓரங்க நாடகம் எழுதினேன். ‘பவர் கட்’ என்பது நாடகத்தின் தலைப்பு. நாடக ஸ்கிரிப்ட்டோடு நானும் சித்ரா லட்சுமணனும் கமலைச் சந்தித்தோம்.

ஒரு வீட்டில், பவர் கட் ஏற்பட்டுவிடுகிறது. வீடே இருளில் மூழ்கிக்கிடக்கிறது. அந்த வீட்டில் ஒரு கணவன் - மனைவி. அவசரமாக எலெக்ட்ரீஷியனை அழைக்கிறார்கள். எலெக்ட்ரீஷியன் வருகிறார். வந்த கொஞ்ச நேரத்தில், அந்த   மனைவிக்கும்   எலெக்ட்ரீஷியனுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி உருவாகிவிடுகிறது. படு காமெடி. நாடகத்தைச் சொல்லும்போதே கமல் ரசித்து ரசித்துச் சிரித்தார். அவர் ஒரு மகா கலைஞர் அல்லவா? சொல்லிக்கொண்டிருக்கும்போது காமெடியை டெவலப் செய்தபடியே இருந்தார். அரை மணி நேர நாடகம், ஒரு மணி நேர நாடகமாக மாறிவிட்டது.16p3.jpg

அரங்கம் வெளிச்சமாகத்தான் இருக்கும். ஆனால், இருட்டில் நடப்பது மாதிரி, எல்லோரும் தடுமாறுவது போல நடிக்க வேண்டும். அத்தனை நகாசுகளையும் கமல் பார்த்துக்கொண்டார். மனைவி கேரக்டரில் ஒய்.விஜயா நடித்தார். ‘‘என்னப்பா, கனெக்‌ஷன் கொடுத்திட்டியா?’’ என்று இருட்டில் கணவர் கேட்பார். ‘‘இதோ... இன்னும் கொஞ்ச நேரத்தில கொடுத்துடுவேன்... ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்’’ என்பார் எலெக்ட்ரீஷியன். வசனத்தின் இன்னோர் அர்த்தம், அரங்கத்தை அதிரச் செய்யும்.

அந்த நாடகம், விழாவையே சிரிப்பலையில் ஆழ்த்தியது. விழாவுக்குத் தமிழகம் முழுவதுமிருந்து கமல் ரசிகர்கள் வந்திருந்தனர். அதனால் இந்த நாடகம், தமிழகம் முழுவதுமே பிரபலமாகிவிட்டது.

சில நாள்கள் கழித்து, தென்காசி பக்கம் ஒரு ரயில்வே கேட்டில் காரில் காத்திருந்தபோது, அந்த ஊர் திருவிழாவில் ‘பவர் கட்’ நாடகம் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பல கோயில் திருவிழாக்களில் ‘பவர் கட்’ நாடகம் அப்போது பிரபலம். அது, செல்வராஜ் எழுதிய நாடகம் என்பதுபோய், பொதுவுடமையாகிவிட்டது.

கமல் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. சினிமாவையே சிந்தித்து, சினிமாவையே கண்டு, சினிமாவுக்காகவே வாழும் கலைஞர் அவர். சென்னையின் எல்டாம்ஸ் ரோட்டில், ஒரு முனையில் அவர் வீடு; மறுமுனையில் என் வீடு. முதலில் தூர நின்று பார்த்து, பிறகு நெருங்கிப் பழகி, அவருடன் பணியாற்றி பிரமித்துக் கொண்டிருப்பவன் நான். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் அளவுக்கு எழுத வேண்டும். அதுதான் அந்தக் கலைஞனுக்குச் செய்யும் சிறப்பு. ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகப் புகழப்படும் பாரதிராஜாவை அடையாளம் கண்ட கண்கள் அவருடையவை.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


16p2.jpg

சாம்பியனின் நிராசை!

தாய்ப் பாசம்தான் கறுப்பு-வெள்ளை கால தமிழ் சினிமாவின் சென்டிமென்ட். அந்த நேரத்தில் சக்கை போடு போட்ட ‘தி சேம்ப்’ என்ற ஹாலிவுட் படம், தந்தை பாசத்தைச் சொன்னது. ஒரு முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன், குதிரைப் பயிற்சியாளராக அமைதியான வாழ்க்கை நடத்துகிறான். மனைவி பிரிந்து போய் வேறொரு திருமணம் செய்துகொள்ள, சிறு வயது மகனோடு தனியாக வசிக்கிறான்.

மகனுக்கு நல்ல எதிர்காலம் தரவும், கடன்களை அடைக்கவும், மீண்டும் ஒரு பந்தயத்தில் பங்கேற்று பரிசு பதக்கத்தை வெல்லவும் நினைக்கிறான் அவன். இதற்காக அவன் பயிற்சியில் இறங்கும் நேரத்தில், பிரிந்து சென்ற மனைவி வந்து மகனைத் தன்னிடம் தருமாறு கேட்கிறாள். இப்போது வசதியாக வாழும் அவள், காஸ்ட்லி பரிசுகளால் சிறுவனை அசத்துகிறாள். தான் உயிர்வாழ ஒரே காரணமாக இருக்கும் மகனை இழந்துவிடுவோமோ என்று தவிக்கிறான் அந்த முன்னாள் சாம்பியன். கவலையோடும் குழப்பத்தோடும் பயிற்சி எடுத்தாலும், தன்னைவிட வலுவான ஒரு குத்துச்சண்டை வீரனிடம் போராடி போட்டியில் ஜெயிக்கிறான் அவன். மகன் உற்சாகத்தோடு வந்து அரவணைக்கும் நேரத்தில் அந்தச் சோகம் நிகழ்கிறது. போட்டியில் ஜெயித்தாலும், வாங்கிய குத்துகள் அந்த முன்னாள் சாம்பியனைச் சாகடித்துவிடுகின்றன.

நேசிப்பவர்களோடு வாழ முடியாமல் போகும் நிராசை துயரமானது!   

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 31 - எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காக ஒரு காத்திருப்பு!

 

 

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதுமைப் பெண்’ படத்துக்கு ஏற்கெனவே ஓர் அறிமுகம் கொடுத்திருந்தேன். அந்தக் கதையைத்தான் நானும் பாரதிராஜாவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொல்லியிருந்தோம். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஜெயலலிதாவுக்குச் சொல்லிய அந்தக் கதை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுமைப் பெண்’ படமாக வந்தது. ரேவதி, பாண்டியன் நடிக்க, ஏவி.எம். தயாரிப்பில் வந்த வெற்றிப்படம். படத்தின் பிரீமியர் ஷோ, நடிகர் சங்கத் திரையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், படக் காட்சிக்கு வருவதாகப் பரபரப்பு. ‘படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர் என்ன சொல்லப் போகிறார்’ என்கிற பதற்றம் எங்கள் எல்லோருக்குமே இருந்தது. கதாசிரியனாக எனக்கு அதிகமாகவே இருந்தது. ‘புரொஜக்டரில் பிரச்னை, ஏ.சி-யில் பிரச்னை என எதுவும் ஆகிவிடக்கூடாதே’ என இயந்திரச் செயல்பாடுகள் பற்றிய கவலை இன்னொரு பக்கம்.

p30.jpg

எம்.ஜி.ஆர் வந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, அதிலே வெற்றி நடைபோட்டு, அரசியல் தலைவராகவும் தமிழ் மக்களின் நெஞ்சினில் இடம் பிடித்தவர். அவர் வந்து உட்கார்ந்த சில நிமிடங்களில் கரன்ட் கட். முதல்வர் எரிச்சல் அடைந்து, ‘இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்’ எனப் போய்விடுவாரோ என்ற கவலை எங்கள் எல்லோரையும் தவிக்க வைத்தது. அவர் வருவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், மின் வாரியத்தினருக்கு விஷயம் தெரியாது. அப்புறம் விஷயத்தைச் சொல்லி, அடுத்த சில நிமிடங்களில் மின்சாரம் வந்தது.

எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் எங்கெங்கே சிரிக்கிறார், எங்கெங்கே வியக்கிறார், எங்கெங்கே புன்முறுவல் செய்கிறார் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்ததும், பாரதியிடம் படத்தைப் பாராட்டினார். சரவணன் சாரைத் தட்டிக்கொடுத்தார். ‘கதை எழுதியது யார்’ என விசாரித்து என்னைப் பாராட்டினார். அனைவருக்கும் சந்தோஷம் தாளவில்லை. ‘‘உங்கள் கதையை, வசனத்தைப் பாராட்டி நான் ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்’’ என்றார். ‘வாயால் பாராட்டினால் அது காற்றோடு போய்விடும். எழுத்து, ஆதாரமாக இருக்கும்’ என்பதற்காக அவர் அப்படிச் சொல்கிறார் என எனக்குப் புரிந்தது.

உடனடியாகப் படத்துக்கு வரிவிலக்கு அறிவித்து முதல்வரின் அறிக்கை வெளியானது. எனக்கு எழுதுவதாகச் சொன்ன கடிதம் மட்டும் வரவில்லை. காத்திருந்தேன். அவருக்கு ஆயிரம் அலுவல்கள் இருக்கும். நிதானமாக எழுதுவார் எனக் காத்திருந்தேன்.சில நாள்களிலேயே எம்.ஜி.ஆருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் வைத்தியம் பார்த்துத் திரும்பி வந்தார். பழையபடி ஆகிவிட்டார் என்றனர். ஆனால், எனக்குக் கடிதம் வந்து சேரவில்லை. 14 ஆண்டுகள் வனவாசம் போன அண்ணன் ராமனுக்குப் பாதுகாப்பாகப் போனான் லட்சுமணன். ஒரு நொடியும் கண்ணுறங்காமல் இருந்து அண்ணனையும் அண்ணியையும் காத்தான். மணமுடித்த மறுநாளே மனைவி ஊர்மிளாவைப் பிரிந்துபோன லட்சுமணன், 14 ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு, மனைவியிடம் வந்து சேர்ந்தான். தூங்காத அந்த 14 ஆண்டுகளைத் தூங்கியே கழித்தான். ஊர்மிளா, காத்திருந்தாள்... காத்திருந்தாள்... காலத்தின் எல்லைவரை காத்திருந்தாள். எம்.ஜி.ஆரின் கடிதத்துக்காகக் காத்திருந்த என் நிலையும் அப்படித்தான் இருந்தது. 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் அவருடைய மூச்சு பிரியும் வரை, அந்தத் திரையுலகச் சக்கரவர்த்திக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்துவிடாதா எனக் காத்திருந்தேன். எம்.ஜி.ஆர் எழுத நினைத்த அந்தக் கடிதம் என்னை வந்து சேரவே இல்லை.

p30b.jpg

பெண் என்பது உண்மை... ஆண் என்பது கற்பனை. இரண்டும் இணைந்தால், கரு உருவாகி கதை பிறக்கும்.

4,000 ஆண்டுகளுக்கு முன் டைக்ரீஸ் நதிக்கரையில் (இன்றைய பாக்தாத்) வாழ்ந்த சுமேரியர்கள்தான் சக்கரத்தைக் கண்டுபிடித்தார்கள். அதன் பிறகுதான் நாகரிகம் வேகமாக வளர்ச்சி பெற்றது. அந்த சுமேரிய மக்கள், களிமண் பலகைகளில் தங்கள் கதைகளை எழுதி, அவற்றைப் பானை ஓடு போல சுட்டு... கதைப் பலகைகளாக அடுக்கி வைத்தார்கள். அந்தக் கதையின் பெயர் ‘கில்காமேஷ்’. மரணமில்லாப் பெருவாழ்வைத் தேடிப் பயணித்த கில்காமேஷ் என்ற மன்னனின் கதை. உலகின் முதல் இலக்கியம் அதுதான்.

நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குச் சாகசங்கள் நிறைந்த கதை அது. மின்னலின் வெளிச்சத்தை வைத்துப் போரிட வருவார்கள் எதிரிகள். விரிந்த பெரிய மீனைத் தயார் செய்து, மின்னலை விழுங்க வைத்துவிடுவார்கள். பூமி இருண்டு போனதால் எதிரிகள் தவித்துப் போவார்கள். மின்னலைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்புவார்கள். பொன்நிறமாக வயிறு இருக்கும் மீனைப் பார்த்துச் சந்தேகம் வரும். மீனின் வயிற்றைக் கீற...  மின்னல் வெளியேறும். பூமிக்கு வெளிச்சம் கிடைக்கும்.

வாழ்க்கைத் தத்துவங்கள் சொல்லும் கதை அது.

நெருப்பில் பாக்கி வைக்காதே... நீறு பூத்த நெருப்பு மீண்டும் ஆவேசமாகத் தாக்கி சாம்பலாக்கி விடும். கடனில் பாக்கி வைக்கக் கூடாது. வட்டிக்கு மேல் வட்டி என்று குட்டி போட்டுக்கொண்டே இருக்கும். கடைசி... பகையில் பாக்கி வைக்காதே. சினிமாவில் மட்டும்தான் ஹீரோ வில்லனை வென்றதும் சுபம் போடுவார்கள். ஆனால், நிஜ வாழ்வில் பல்லாண்டுகள் காத்திருந்து பகை தீர்த்த கதைகள் உண்டு.

கதைகள்... கதைகள்... கதைகள். மனித சமூகமே கதைகளால் ஆனதுதான். மனிதனிடம் இருந்து கதைகளையும் கற்பனையையும் பிரித்துவிட்டால் மனித இனம் விலங்குப் பட்டியலுக்குச் சென்றுவிடும். நான் உருவாக்கிய இருநூத்திச் சொச்சம் கதைகளில், ஒரு கதையையும் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைக்கவில்லை என்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(அடுத்த இதழில் முடியும்)


புதுமைப் பெண்கள்!

பு
துமையான கதைக்களம் என்பது, மக்களின் புதிய பிரச்னைகளைச் சொல்லுவதும்தான். பெண்கள், தங்கள் கல்லூரிக் காலங்களில் பையன்கள் பற்றி பேசுவார்கள். ஆனால், கதையின் நாயகி, அடோலுக்கு பையன்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வம் இல்லை. இப்படித்தான் ஆரம்பிக்கிறது, 2013-ம் ஆண்டு வெளியான ‘ப்ளூ இஸ் த வா(ர்)மஸ்ட் கலர்’ படத்தின் கதை. அவளுக்குப் பெண்ணின் மீது ஈர்ப்பு. சமுதாயம் சட்டென இதை ஒரு இழிவான உணர்வாகப் பார்க்கும். பெண்ணே பெண்ணை மோகிப்பதா எனக் கேட்கும். அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல;

p30c.jpg

மனம் சம்பந்தப்பட்டது என்பதைச் சொல்லும் இந்தப் படம், என் மனதை உலுக்கிய படம். கடலின் நடுவே தாகத்தோடு அலையும் மனநிலை அது. சுற்றிலும் நீர் இருக்கும். அது தாகம் தீர்க்காது. ஆண்களால் கிடைக்காத ஒரு நிறைவை அந்தப் படம் துணிச்சலாகப் பேசியது. தன்னுடைய இணையை ஒரு பெண் எப்படிக் கண்டுபிடிக்கிறாள் என்பதைச் சொல்லும் அந்தப் பிரெஞ்சு படம், பெண் மனதைப் பேசிய புதுமைப் படம்...  புரட்சிப் படம்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

கடல் தொடாத நதி - 32 - எல்லா கதைகளும் தொடர்கதைகள்தான்...

 

 

 

டல் தொடாத நதி வைகை. ராமநாதபுரம் மாவட்டத்தைத் தொட்ட திருப்தியோடு நின்றுவிடும். வாழ்க்கைப் பயணமும் ஒரு இலக்கை அடைந்துவிடுவதற்கானது அல்ல. பயணிப்பதில் இருக்கிற சுகம், அடைந்து விடுவதில் இருப்பதில்லை. முழுமை என நாம் சொல்வது எல்லாம் ஒரு வசதிக்காகத்தான். ஒன்று முடியும் இடத்தில் இன்னொன்று தொடங்குகிறது. கற்றது கைம்மண் அளவு. எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. எல்லாவற்றையும் குடித்துவிட முடியாது. எல்லாவற்றையும் நாமே வாழ்ந்துவிடவும் முடியாது.

ஒரு நாள் மாலை. கொடைக்கானல் மலையில் படப்பிடிப்பு. இரவு நெருங்கியதும் எல்லோரையும் கிளம்பிப் போகச் சொல்லி விட்டு, காலாற நடந்து மலைச் சரிவின் ஓரிடத்தில் இருந்து கீழே பார்க்கிறேன். பூமியில் நட்சத்திரங்கள் இறைந்துகிடப்பது போன்ற அழகு. விளக்கு வெளிச்சங்கள் எல்லாம் விண்மீன்களாக மின்னுகின்றன. அதன் அழகிலே லயித்துப் போய் ஒரு பாறை மீது அமர்கிறேன். ‘இறைவனின் காலடியே இவ்வளவு அழகாக இருக்கிறதே... அவனுடைய மணிமுடி எத்தனை அழகாக இருக்கும்?’ என்று அந்தப் பாறையிலே யாரோ எழுதியிருந்த வாசகம் கண்ணில் படுகிறது. இங்கிருந்து பூமியின் அழகைப் பார்த்த யாரோதான் அதை எழுதியிருக்கிறார்கள். அந்த வாக்கியம் ஒரு தத்துவார்த்த தரிசனமாகத் தோன்றுகிறது.

‘நினைவுகள் முதியவர்களுக்குச் சொந்தம். கனவுகள் குழந்தைகளுக்குச் சொந்தம்’ என்று சொல்வார்கள். காலத்தை எழுபது ஆண்டுகளுக்குப் பின்பக்கமாக சுருட்ட முயல்கிறேன். அப்போது நான் கற்றது நினைவுக்கு வந்தது. காலம் இல்லா காலம்... Time in a Timeless Environment. இந்தப் பேரண்டத்தில் எதுவுமே நிலையானதில்லை எனும்போது காலம் எப்படி நிலையானதாகும்? கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாமே நாம் வகுத்துக்கொண்ட வீட்டுக் கணக்கு. கண்ணுக்குத் தெரிந்த புழு, பூச்சிகளையும், கண்களுக்குத் தெரியாத கிருமிகளையும் ‘நுண்ணுயிரிகள்’ என்று ஒரே வார்த்தையில் அடக்கிவிடுகிறோம். முப்பதாயிரம் கோடி சூரியன்கள் என முழுமையடையாத கணக்குகளுடன் விரிந்துகொண்டே இருக்கும் இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், பூமியே கடுகைவிட சிறிதாகிவிட, அதில் வாழும் நாமும் நுண்ணுயிரி ஆகிவிட்டோம்.

p32.jpg

இந்த விஞ்ஞானப் பேருண்மையைத் தெரிந்து கொள்ளாமல், சீனப் பெருஞ்சுவரைவிட பெரிய சுவரை, நம் ஒவ்வொருவர் மனதிலும் கட்டிக்கொண்டு... குடும்பமாய் பிரிந்து கிடக்கிறோம். ஊராய், உலகமாய்ப் பிரிந்து கிடக்கிறோம். குறுவாளும் கத்தியும் இனம், மதம் என்று பூமியைக் கீறி பெருங்காயப் படுத்திவிட்டது. விளைநிலங்களில் விவசாயிகள் வீசும் விதை நெல்லைப் போல பாசம், அன்பு, காதல், காமம், கோபம், பகை என்று ஏராளமான உணர்வுகள் நம் மனத்துக்குள் பதிந்துகொண்டன. பூமிக்குள் எது புகுந்தாலும் மக்கிப் போய்விடும். ஆனால், விதை நெல் மட்டும் வீரியத்துடன் முத்துக்கதிர்களாக முளைத்து வரும். மனதுக்குள் மாறுவேடம் போட்டு ஒளிந்திருக்கும் உணர்வுகளும் அப்படித்தான்.

காலப்படகு என்றுமே படைப்பாளிகளை ஏற்றிச் செல்லாது. படைப்புகளை மட்டும்தான் ஏற்றிச் செல்லும். பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தைக் கடவுளர்கள் குடித்தார்களோ, இல்லையோ... படைப்பாளிகள் குடிக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த அமிர்தத்தை மயிலிறகால் தங்கள் படைப்புகள் மீது மட்டும் தடவி விட்டார்கள். அதனால்தான் வால்மீகியின் ராமாயணம், வியாசரின் மகாபாரதம், திருவள்ளுவரின் திருக்குறள் போன்றவை இன்றும் நம்மோடு உரையாடி வருகின்றன.

1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் நான் பிறந்தேன். தந்தை எஸ்.என்.ராஜமாணிக்கம் - தாயார் மதுரவல்லி அம்மாள். என் தாயாருக்கு இசையில் ஈடுபாடு. ‘ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் நடுவே வரும் மௌனம்தான் சிறந்த இசை’ எனச் சொல்வார். எனக்கு மகாலட்சுமி, ஜெயலட்சுமி என்ற இரண்டு சகோதரிகளும், வீரராகவன், கண்ணன் என்ற இரண்டு சகோதரர்களும் உண்டு. என் மனைவி பெயர், சாவித்திரி. நான் வைகை ஆற்றங்கரையில் வளர்ந்தவன். பிறந்தது சிவகங்கை. மருது பாண்டியர் பூமி. தாயாரின் பிறந்த வீடு அங்கேதான் இருந்தது.

எல்லாக் குழந்தைகளின் தாய் வழி உறவுகள் போலவே என் தாத்தாவும் பாட்டியும் உள்ளங் கையில் சுமந்து என்னை வளர்த்தார்கள். தாத்தா கோதண்டராம நாயுடுவுக்கு இலங்கையின் கண்டி பகுதியில் வியாபாரம். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் இந்தியா வந்துவிட்டார். சிவகங்கை ஜென்ம பூமியாகிவிட்டது. என் பாட்டி நிறைய சகோதர, சகோதரிகளோடு பிறந்தவர்; மூத்தவர். நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையை ஆயிரக்கணக்கான முறை வாய் வலிக்காமல் சொல்வார். அதைத் தொடர்ந்து, காட்டில் வடை சுட்ட பாட்டியைக் காக்கா ஏமாற்றிய கதை.

இப்படி இசையும் கதையும் அரசியலும் கலந்த குடும்பத்தில் நான் வளர்ந்தேன். நான் ஒரு கதாசிரியனாக வளர்ந்தது காலத்தின் கட்டாயமாகி விட்டது. சமீபத்தில் ஒரு சிறுவர் கதை படித்தேன். காட்டில் சுயம்வரம். மயில், தன் மணவாளனைத் தேர்வு செய்ய வேண்டும். எல்லா மிருகங்களும் கலந்துகொண்டன. மாலையோடு ஒவ்வொரு விலங்காகப் பார்த்தபடி வருகிறது மயில். சுயம்வரத்தில் காகம் வெற்றி பெற்றது. மயில் அதற்கு மாலைசூடும் வேளை. போலீஸ் ஜீப் ஒன்று காட்டுக்குள் நுழைகிறது. காகத்தைப் பார்த்து ‘‘யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’’ என்கிறார் போலீஸ்காரர். ‘‘ஏன்... ஏன்?’’ என்கின்றன எல்லா விலங்குகளும். ‘‘பாட்டியிடம் வடை திருடிய குற்றத்துக்காக இவ்வளவு நாட்களாக இந்தக் காகத்தைத் தேடிக்கொண்டிருந்தோம். கைது செய்கிறோம்’’ என்கிறார் போலீஸ்காரர்.

நம்மோடு சேர்ந்து கதைகளும் இப்படித்தான் வளர்கின்றன. வாசிக்கும் பரவசத்தைத் தருகின்றன.

எல்லாக் கதைகளும் தொடர்கதைகள்தான்... வாழ்வினைப் போலவே. எல்லா வாழ்வும் கடல் தொடாத நதிதான்... கதைகளைப் போலவே!

சந்திப்பு: தமிழ்மகன்

(இப்போதைக்கு நிறைவு!)


பினாமி குயின்!

விட்டா... அர்ஜென்டினா நாட்டு அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்ட பரபரப்பான படம். அதிபரின் மனைவியும், நாட்டின் முதல் பெண்மணியுமான ஈவிட்டா, 33 வயதில் இறந்துபோனதாக செய்தி ஒலிபரப்பாகும். மக்கள் எல்லாம் துயரக் கடலில் கலங்கி நிற்பார்கள். ‘யார் அந்த ஈவிட்டா... ஏன் மக்கள் கலங்கி நிற்கிறார்கள்’ என ஃப்ளாஷ்பேக்கில் கதை நகரும்.

p32a.jpg

ஒரு சிறுநகரத்தின் அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்த ஈவிட்டா, நல்ல வாழ்க்கைக்காகப் போராடுகிறாள். 15 வயதில் ஒரு பாடகனோடு நட்பு. அவன் உதவியோடு தலைநகரம் பியூனஸ் அயர்ஸ் வருகிறாள். அடுத்தடுத்து பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்க, அவளும் பிரபலமாகிறாள். ஒரு மாடலாக, ஒரு நடிகையாக புகழும் பணமும் சேரத் தொடங்கும். ஒரு நிலநடுக்கப் பாதிப்புக்கு நிதி திரட்டும் பொறுப்பு அவளிடம் வருகிறது. பெரோன் என்ற அரசியல் தலைவரோடு சேர்ந்து இதைச் செய்கிறாள். ஈவிட்டாவால் அவருக்குப் புகழ் கிடைக்கிறது. நாட்டின் அதிபர் மிரண்டு போய் பெரோனைச் சிறையில் அடைக்கிறார். ஈவிட்டா மக்களைத் திரட்டி, பெரோனை விடுவிக்கப் போராட்டம் நடத்துகிறாள். தொடர்ந்து தேர்தல் நடக்க, பெரோன் ஜெயிக்கிறார். ஈவிட்டாவைத் திருமணம் செய்துகொள்கிறார்.

ஆடம்பரமான ஆடைகள், அணிகலன்கள், சொகுசு கார்கள் என வாழ்க்கை நடத்தும் ஈவிட்டா, ஒரு கட்டத்தில் அதிபருக்கு பினாமியாக நாட்டையே ஆள்வாள். ஒரு கட்டத்தில் அவளுக்குப் புற்றுநோய் வர, அது அவளுடைய வாழ்க்கையையே மாற்றிப்போடும். மக்கள் நலனில் நிஜமாகவே அக்கறை செலுத்துவாள். மெல்ல மெல்ல மக்கள் மனதில் மகத்தான இடத்தைப் பிடிப்பாள். நாடே கொண்டாடும் நேரத்தில், தன் இளம் வயதில் நோய் தாக்கி இறந்துபோவாள். அரசியலுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு பெண், எப்படி வேக வேகமாகக் காய்களை நகர்த்தி நாட்டின் அதிகார சக்தியாக மாறுகிறாள் என்பது ஆக்‌ஷன் படத்தைவிட பரபரப்பாக இருக்கும். மடோனா நடித்த படங்களில் வசூல் சாதனை படைத்த படமும்கூட.


‘கடல் தொடாத நதி’ தொடர் வெளிவந்ததில் அளவற்ற மகிழ்ச்சி. பழைய நினைவுகள் புதுப்பிக்கப்பட்டதோடு, புதிதாய் ஏராளமான நண்பர்கள்... மிக்க நன்றி. என் நினைவுகளின் எல்லைக்குள் வராமல் யார் பெயராவது விடுபட்டிருந்தால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மகன் மென்மையானவர் மட்டுமல்ல... மேன்மையான படைப்பாளி. அவருக்கு என் வாழ்நாள் அன்பு. ஆமைகள், நத்தைகள் போல் முதுகில் வீடுகளைச் சுமக்காமல், கனவுகளை மட்டுமே சுமந்தபடி நகர்ந்துகொண்டே இருக்கும் எனக்குப் புதிதாய் ஒரு சுவாசம்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.