Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்னா - உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு - ஷோபாசக்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்னா

ஷோபாசக்தி
 

உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு

ங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே  இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத்  துண்டித்துவிடும்  அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா 1996-ல் எழுதிய SRI LANKA-CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் தொண்டு நிறுவனமொன்று இலங்கை முஸ்லீம்களிடையே கிளிட்டோரிஸ் துண்டிப்புக் குறித்துக் கருத்துக்கேட்டபோது கருத்துத் தெரிவித்தவர்களில் 90 விழுக்காடானவர்கள் இந்தக் ‘கத்னா’ வழக்கத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர் எனப் பதிவு செய்கிறார்.

கடந்த வருடம் இதுகுறித்து ‘த ஐலண்ட்’ பத்திரிகையில்  The Hidden Horrors of Female Genital Mutilation என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய நபீலா சபீர் இலங்கைச் சட்டங்களின்படி இச் சடங்கு தண்டனைக்குரிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சடங்கை அய்.நா. பெண்களிற்கு எதிரான வன்முறை என வரையறுத்திருக்கிறது. இக்கொடிய சடங்கு இன்று அய்ந்து கண்டங்களிலும்  எழுபத்தைந்துக்கு மேற்பட்ட நாடுகளில் வழக்கத்திலுள்ளது. Prevalence of female genital mutilation by country என்ற ‘விக்கிபீடியா’ கட்டுரை இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தச் சடங்கு வழக்கிலுள்ளதைச் சான்றுகளுடன் தெரிவிக்கிறது.

இலங்கையிலுள்ள தமிழ் வாசிப்போர் மத்தியில் இந்தக் கொடிய சடங்கு குறித்து ஒன்றிரண்டு பதிவுகளுள்ளன. அனார் இச்சடங்கு குறித்து ‘ப்லேட் (Blade) என்ற சிறுகதையை எழுதியுள்ளார். சமூக வலைத்தளத்தில் லபீஸ் ஸாகீட் ‘சில ஆண்டுகளுக்கு முன்பு உஸ்தாத் மன்சூர் தன்னுடைய ‘நகர்வு’ சஞ்சிகையில் இந்த வழமைக்கு எதிராக எழுதவும் அதற்கு சூபி செல்வாக்கு கொண்ட மதரஸாக்கள் கடுமையாக மறுப்பு வெளியிட்டமைக்கு நான் சாட்சி. சுருக்கமாக சொல்வது எனில் மரபு ரீதியான முஸ்லிம்களிடத்தில் இந்த வழமை இன்னும் செல்வாக்கு இழந்திடவில்லை என்பதே உண்மை’ எனப் பதிவு செய்துள்ளார்.

Naseeha Mohaideen தன்னுடைய முகநுால் பதிவொன்றில் “கிளிட்டோரிசை நீக்காமல் அதில் சிறுபகுதியை வெட்டுதல்/ கிளிட்டோரிஸை வெட்டி அதை முற்றாக நீக்குதல்  போன்ற வழக்கங்கள் இலங்கையில் உள்ளதாகத் தெரிகிறது…” எனக் குறிப்பிட்டு இந்தச் சடங்கிற்கு எதிரான பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

கல்முனையைச் சேர்ந்த மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் ‘பெண்களுக்கு கத்னா செய்வது என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும். இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை. முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.’ என  பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டுமா? என்ற கட்டுரையில் (mailofislam.com) இரக்கமற்றுக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இச்சடங்கு ஓர் இரகசியமான புதிர்த் தன்மையுடனேயே இன்னுமிருக்கிறது. இப்பேசாப் பொருளைப் பேசத் துணிந்தோருக்காக ஒரு தொகை  முஸ்லீம் பெண் மழலைகள் காத்துக்கிடக்கிறார்கள்.  அந்த மாசற்ற மழலைகளை ஒஸ்தா மாமிகளின் கைகளிற்கு ஒப்புக்கொடாமல் தப்புவிப்பதைத் தவிர வேறென்ன முக்கிய கடமை நமக்கிருக்கப்போகிறது?

ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதுபவரும்  derailedwords.com என்ற வலைப்பதிவில் பதிவிடுபவரும், தற்போது பாரிஸில் தரித்து நிற்பவருமான தோழர். முகமட் ஃபர்ஹான் அண்மையில் இக்கொடிய வழக்கத்தைக் கண்டனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருடன் ‘ஆக்காட்டி’க்காக ஒரு தொடக்க உரையாடல்

ஷோபாசக்தி

***

இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு இலங்கையில் எப்படி உருவாகி நீடித்து நிற்கிறது? இந்தச்சடங்கு இஸ்லாமிய வழிமுறையா? அல்லது பழங்குடிப் பண்பாட்டு எச்சமா?

இச்சடங்கு அதிபழைமைவாதமான சூஃபி மரபிலிருந்து உருவானதாகவே கருதுகிறேன்.  வஹாபிகள் மட்டுமே இந்தச் சடங்கை இலங்கையில் சமகாலத்தில் எதிர்த்துக்கொண்டிருக்கும் ஒரே தரப்பாகும். அவர்கள், ஹதீதுகளில் இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு குறித்துக் குறிப்பிடப்படவில்லை, அதனால் இச்சடங்கு இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார்கள். மற்றைய வலுவான முஸ்லீம் தரப்புகள் -குறிப்பாகத்  தம்மை முற்போக்கெனப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் –  ஜமாத்  ஏ இஸ்லாமி, முஸ்லீம் பிரதர் கூட் (MFCD)போன்ற அமைப்புகள் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சடங்கு குறித்துப் பேசாமலேயே இருக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்திலுள்ள அறிவுஜீவுகள் மத்தியிலும் கல்விச் சமூகத்தின் மத்தியிலும் எழுத்தாளர்கள் மத்தியிலும் இச்சடங்கு குறித்து நீண்ட கள்ள மௌனமே இதுவரை சாதிக்கப்படுகிறது. இலங்கை முஸ்லீம்களால் நடத்தப்பட்ட-  நடத்தப்படும் சீரிய இலக்கியச் சிறுபத்திரிகைகள் கூட இந்த விடயத்தில் இதுவரை மௌனம் காத்துள்ளன. வானத்திற்கும் பூமிக்கும் நடுவிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தட்டச்சும் அவர்களது விசைப் பலகைகள் கத்னாவுக்குப் பலியாகும் சிறுமிகள் பற்றி எழுத மட்டும் தயங்கிக்கிடக்கின்றன.

இந்தச் சடங்கு இலங்கை முஸ்லீம் சமூகத்தினரிடையே தற்போது எவ்வளவிற்குநிலைகொண்டிருக்கிறது? ரேணுகா சேனநாயக்க 90 விழுக்காடு முஸ்லீம்கள் இலங்கையில்இச்சடங்கை ஆதரிப்பதாகக் கூறுகிறாரே?

ரேணுகா சேனநாயக்க குறிப்பிடுவது மிகச் சரியெனவே நான் எண்ணுகின்றேன். இந்தச் சடங்கு  என்னுடைய குடும்ப உறவுகளிற்கே நடந்திருக்கிறது.  இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு குறித்து  முஸ்லீம் பெண் ஆளுமைகளுடன் பேசியிருக்கிறேன். அவர்களும் இச்சடங்கிற்கு உள்ளாகியிருப்பதாகச் சொன்னார்கள். எனினும் இது குறித்து ஓர்மமான எதிர்ப்புக் குரலோ உரையாடலோ இன்னும் கிளம்பாமலிருப்பது மிகப் பெரிய துக்கம்.

எழுத்தாளர் றியாஸ் குரானா கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்துத் தான் அறிந்திருக்கவில்லைஎனவும் ஆனால் குழந்தைகளின் பெண்ணுறுப்பில் சிறுதுளி இரத்தம் எடுப்பதுபோல ஒரு சடங்குநிலவி வருகிறது எனவும் எழுதியிருக்கிறாரே?

றியாஸ் குரானா சொல்வதுபோலவே இச் சடங்கு சிறுதுளி இரத்தம் எடுப்பதுதான் என்று வைத்துக்கொண்டாலும் அதுவும் வன்கொடுமைதான். ஆனால் ,இலங்கையில் நடப்பது கிளிட்டோரிஸ் துண்டிப்பு அல்லது சிதைப்புத்தான். அதைத்தான் கத்னா என்கிறார்கள். நான் என் குடும்பத்திற்குள்ளும் வேறுபலரிடமும் பேசி உறுதிப்படுத்திக்கொண்டுதான் இதைச் சொல்கிறேன். றியாஸ் குரானா இது குறித்து அறியாதவர்போன்று நன்றாக நடிக்கிறார். அவருக்குள் உறைந்திருக்கும் பழைமைவாத முஸ்லீம்  இந்தக் கொடுமையைப் பூசிமெழுகிவிட முனைகிறார். ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமே இது குறித்து உரையாட விரும்பாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் இச்சடங்கு இப்போது அருகி வருகிறது என்று சிலர் சொல்கின்றார்களே?

நீங்கள் யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடம் இப்போதும் சாதிமுறை இருக்கிறதா எனக் கேட்டுப்பாருங்கள்.  இப்போது அது அருகிவிட்டது என்பார்கள். ஆனால் உண்மையிலேயே சாதிமுறை பலமாக அங்கிருக்கிறது.

இந்தக் கத்னா சடங்கு இப்போது அருகிவிட்டதென இவர்கள் எந்த ஆய்வின், தரவுகளின் அடிப்படையில் சொல்கிறார்கள்? இவர்கள் சொல்வதற்குச் சான்றுகள் என்ன? இப்போதும் வழக்கத்திலிருக்கும் ஒரு மிகப் பெரிய சமூகக் கொடுமையை இப்படியான சப்பைக்கட்டுகளைக் கட்டி இவர்கள் மூடி மறைப்பது  வருத்தத்திற்குரியது. மதத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை மறைப்பதையும் சகித்துக்கொள்வதையும் அனுமதிக்கவே முடியாது.

இந்தச் சடங்கு குறித்து பரவலான எதிர்ப்பு இதுவரை தோன்றாததற்கான காரணமென்ன?

ஒன்றை யோசித்துப் பாருங்கள்… அனாரும் நஸீஹாவும் உஸ்தாத் மன்சூரும் இது குறித்துப் பேசியது கற்பனைத்தளத்திலிருந்தா? ஒரு உண்மையை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் குரல்களை என் சமூகம் நிராகரித்திருக்கிறது. கடுமையாக எதிர்க்கவும் செய்கிறது. மதவாதத்திற்குள் விழுந்து கிடப்பவர்கள் இந்தச் சடங்கை இயல்பானதொன்றாக ஏற்கும் மனநிலையிலிருப்பதே இதுவரை எதிர்ப்புத் தோன்றாததற்கான காரணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புக் குரல்கள் தோன்றும்போது கூட, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை எனப் பொய்ச்சாட்சியம் உரைப்பது மதவாத நோய்க் கூறாகும்.

இந்தச் சடங்கைத் தடுத்து நிறுத்துவதற்கான எதிர்ப்புச் செயற்பாடுகளை நாம் எங்கிருந்துதொடங்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

கண்டிப்பாக முஸ்லீம்கள் மத்தியிலிருந்துதான்  எதிர்ப்புக் குரல்களைத் தொடங்க வேண்டும்.  முஸ்லீம் சிந்தனையாளர்களாலும் எழுத்தாளர்களாலும் இது குறித்த ஒரு விழிப்புணர்வைச் சிறிய அளவிலாவது  உண்டாக்க முடியும்.

இலங்கை முஸ்லீம்களிடையே இடதுசாரி இயக்கங்களோ தீவிர பெண்ணிய இயக்கங்களோ கிடையாது. எனவே மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் தான் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து இந்தக் கொடூரமான வழக்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அவர்களால் மட்டுமே முழுவதுமான மாற்றம் சாத்தியம்.

அப்படியானால் இந்தச் சடங்கைத் தீவிரமாக எதிர்க்கும் வஹாபிகளை நாம் இந்த விடயத்தில்ஆதரிக்கத்தானே வேண்டும்?

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வஹாபிகள் சிறுமிகள், பெண்கள் மீதுள்ள அக்கறையால் இச் சடங்கை எதிர்க்கவில்லை. ‘பித்ஹத்’ என்பதாலேயே எதிர்க்கிறார்கள். அதாவது இறைத்தூதர் செய்யாத, மொழியாத விடயமாக இந்தச் சடங்கை அவர்கள் பார்க்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமியப் பெண்கள்மீது மட்டுல்லாமல் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்தின் மீதும் வஹாபிகள் ஏராளமான அடக்குமுறைகளைத் திணித்துவருகிறார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். 70-களில் இலங்கையில் காலுான்றிய வஹாபிஸம் இப்போது  வலுவான ஒரு தரப்பாகி முஸ்லீம் சமூகத்தை மத அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளிச் சீரழிக்கிறது. பிற சமூகங்களிற்கும் முஸ்லீம் சமூகத்திற்குமான நல்லிணக்க உரையாடல்களிற்கான சாளரங்களை  வஹாபிகளின் அடிப்படைவாதம் மூடியும்விடுகிறது. ஆக கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு எதிரான வஹாபிகளின் எதிர்ப்பு அவர்களிற்கும் சூஃபி மரபுக்கும் இடையேயான போரின் ஒரு அம்சமே தவிர பெண்களின் நலனுடன் தொடர்புடையதல்ல.

இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்புச் சடங்கு முஸ்லீம்களிடையேயுள்ள பண்பாட்டுப் பிரச்சினை. இதுகுறித்து முஸ்லீம்கள் அல்லாத மேற்குலகும் பிறரும் பேசுவது ஒருவகையான மூக்குநுழைப்பு,ஆதிக்கச் செயற்பாடு  எனக் கருதுகிறீர்களா?

மேற்குலகம் உட்பட எல்லாத் தரப்புகளும் தங்களது சொந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகக்கூடியவைதான். அதேவேளையில் நம்மிடையேயிருக்கும் கிளிட்டோரிஸ் துண்டிப்பு அல்லது சிதைப்பு போன்ற விடயங்கள் குறித்து அவர்கள் பேசும்போதும் தலையீடு செய்யும் போதும் நாம் அந்தக் குரல்களை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா என்ன!  இலங்கையில் நடைபெறும் இந்தக் கத்னா சடங்கை இனியும் அனுமதிப்பது முஸ்லீம் சமூகத்திற்கு பெருத்த சுய அவமானமாகும். கத்னாவை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான பண்பாட்டுத்தளத்திலான நடவடிக்கைகளை மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கைகளையும் நாம் ஒருகணமும் தாமதியாது தொடங்கியாக வேண்டும்.

மதத்தின் பெயரால் கிளிட்டோரிஸ் துண்டிப்புக்கு உள்ளான ‘பாலைவனப் பூ’ வாரிஸ் டைரி தனது தன்வரலாற்று நுாலில் சொல்வதைக் கவனியுங்கள்:

விசுவாசத்தை காட்டுமிராண்டித்தனமான சடங்குகளின்  வழியே பெறுவதைவிட, நம்பிக்கையின் மூலம், அன்பின் மூலம் பெறமுடியும் என்பதை அறிய வேண்டும். துன்பங்களைச் சுமந்திருக்கும் பழைய முறைகளை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது!

ஆக்காட்டி -ஏப்ரல் 2017 இதழில் வெளியானது.
 
 
பின்னூட்டம்:

துணிச்சலான பேட்டியை வழங்கிய நண்பன் பார்ஹானுக்கு பாராட்டுக்கள்.

நண்பன் கவனிக்கத் தவறிய பகுதி : வஹ்ஹபிகள் மொத்தமாக இந்தப் பழக்கத்தை எதிர்ப்பதில்லை. வஹ்ஹபிகளில் உள்ள TNTJ போன்ற ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே இந்த கொடுமையை எதிர்க்கின்றனர். மெயின்ஸ்ட்ரீம் வஹ்ஹபிகள், சலபிகள் போன்றவர்கள் இதனை ஆதரிக்கின்றனர். இதனை ஆதரித்து வஹ்ஹாபிகள் எழுதியும் இருக்கின்றார்கள்.

மேலும் இக்கொடுமை அதிபழைமைவாதமான சூஃபி மரபிலிருந்து உருவானதான கருதுகோள் தவறானதாகும். முகம்மது நபி அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்யும் உம்மு அதிய்யாஹ் என்ற பெண்மணிக்கு “முழுமையாக அடியோடு வெட்டிவிடாதே” என்று வெட்டுவதற்குரிய முறையை கற்றுக்கொடுத்தை அபூதாவுத் 5271 ஆவது ஹதீஸில் குறிப்பிடுகின்றது. (இதே ஹதீஸ் அபூதாவுத் 4587, ஹாகிம் 6236, பைஹகி 17338 ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது.)

மேலும் முஹம்மது நபி தனது 53 ஆவது வயதில் 6 வயதுக் குழந்தையாக திருமணம் செய்துகொண்ட அவரது மனைவிகளில் ஒருவரான ஆயிஷா அவர்கள், ஆணும் பெண்ணும் சேர்ந்த பின்னர் எப்பொழுது குளிப்பு கடமையாகின்றது என்பது குறித்து கூறும் பொழுது, ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் வெட்டப்பட வேண்டியவை என்பதை அழுத்தமாக குறிப்பிடுகின்றார்.

ஆகவே, பெண்ணுறுப்பு சிதைப்பு என்பது இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தும் உள்ள ஒன்றாகும் என்பதை அறியலாம்.

இந்தக் கொடுமை எந்த புனித மூலாதாரங்களில் இருந்தாலும், காட்டுமிராண்டித்தனத்திற்கு கடைக்குப்போகும் புனிதங்கள் புறம்தள்ளப்பட்டு, இந்தக் கொடுமையான பழக்கம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

 

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1365

பல முஸ்லிம் நண்பர்களுடனும் சில முஸ்லிம் தோழிகளுடனும் பழகி இருந்தாலும் 'கத்னா' இலங்கையிலும் நடைமுறையில் பரவலாக இருக்கு என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். மிகவும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒன்றரை வருடங்கள் முஸ்லீம் இனத்தவர்களுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறேன். அங்கு பெண்களே அதிகம் பல விடயங்களை வெளிப்படையாக என்னுடன் பேசிக்கொள்வார்கள் எங்கள் சம்பிரதாயங்கள் அவர்களுடைய சம்பிரதாயங்கள் என்று அவர்களுடைய சம்பிரதாயத்தில் ஆண்களுக்கு சுன்னத்து மற்றும் திருமணமான மறுநாள் பெண் சுத்தமானவள்தானா என்ற மதகுருமாரின் பரிசோதனை என்பனவற்றை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள் இப்படி ஒரு விடயம் இருப்பதாகவே அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை..... அல்லது அங்கு வாழ்ந்தவர்கள் இப்பழக்கத்தை கடைப்பிடிக்காதவர்களாக இருந்திருக்கலாம். திருமணத்திற்கு மறுநாள் மதகுருமாரின் வரவையே அநாகரீகமாக கருதுபவர்களாக அவர்களைக் கண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியான விசய‌ங்களை வாசித்து கருத்து எழுதவும் ஒரு தராதரம் வேணும் ,போலகிடக்கு.....சோபாசக்தி சோமாலியா பெண்ணின் (பிரித்தானிய குடியுரிமை பெற்று பிரித்தானிய ஊடகங்களில் பிரபலமான அந்த சோமாலியா பெண்ணின்  விடயத்தை) கற்பனையில் சொல்லுகின்றார் போலும்.....

வட இந்திய(இந்து) பெண்னான சீதையின் ஒழுக்கம் எல்லாம்  சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பெண்கள் கடை பிடிக்கின்றனர் என்கின்ற பொழுது  குரானில் உள்ள அந்த விடயம் பற்றி நாங்கள் கருத்து கூறலாமா?

On 2017-4-26 at 7:12 PM, கிருபன் said:

இந்தச் சடங்கு இலங்கை முஸ்லீம் சமூகத்தினரிடையே தற்போது எவ்வளவிற்குநிலைகொண்டிருக்கிறது? ரேணுகா சேனநாயக்க 90 விழுக்காடு முஸ்லீம்கள் இலங்கையில்இச்சடங்கை ஆதரிப்பதாகக் கூறுகிறாரே?

இஸ்லாமிய பெண் ஊடகவியாளர் வந்து இது பற்றி கருத்து கூறிய பின்பு எனைய சமுகத்தவர்கள் தங்களது மூக்கை இதனுள் நூழைக்கலாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிட்டோரிஸ் : ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

April 30th, 2017 | : |

– ஸர்மிளா ஸெய்யித்

பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம்  இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்குத்தேவைப்படலாம்!

பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM), பெண் விருத்தசேதனம் (Female Circumcision) ஆகிய சொல்லாடல்கள் சில ஆண்கள்,மதவாதிகள், சமூக கலாசாரக் காவலர்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம். இனஒடுக்குதல்களாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்கமக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட சாபம் என்பதாக இந்தக் கொடுமை பற்றி மனச்சாட்சியே இல்லாத அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆப்பிரிக்காவிலும் முஸ்லிம்கள் அல்லாத பழங்குடியினர்கள் மத்தியில் மட்டும்தான் இந்தப் பண்பாடு இருக்கின்றதென்பதாக மானிடத்திற்கு எதிரான அவர்களது மனங்கள் அமைதி கொள்ளலாம். இவர்கள் தங்களது சொந்தவீட்டுக்குள்ளும் அயலிலும் நடக்கின்ற மாபெரும் அநீதியைப் பற்றியஅக்கறையற்றவர்களாக இருந்துகொண்டு மதத்திலிருந்து ‘ஆகுமாக்கப்பட்ட’ ஆதாரங்களையும் ‘தடுக்கப்பட்ட’ ஆதாரங்களையும் காண்பித்துத் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டிருப்பவர்கள். மனச்சாட்சியை உலுக்குகின்ற ஒரு செயற்பாட்டைத் தடுப்பதற்குக் கூட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான கோப்புகளுக்குள்தான் ஆதாரம் தேடியாக வேண்டிய கண்மூடித்தனமான பாதையில்தான் நவீன நூற்றாண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றது. தங்கள் கால்களில் முள் குத்தினால்கூட எடுத்துவிடுவதா வேண்டாமா என்று மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மேற்கோள்களிலிருந்தே தீர்மானம் எடுப்போம் என்பதாகப் பிடிவாதமாக இருக்கும் பழைமைவாதிகளிடம் வேறென்ன மாதிரியான எதிர்வினையைநாம் எதிர்பார்க்க முடியும்? மனசாட்சியின் நரம்புகள் அறுந்து ‘மதம்’ முற்றிய பித்தர்களைச் சகித்துக் கொண்டுதான் பல காரியங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள்,லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா,அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து நாடுகளில் குடியேறிய மக்களிடத்திலும் கிளிட்டோரிஸ் நீக்கம் செய்யும் வன் கொடுமை இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

பெண்ணுறுப்பின் உள் உதடுகளில் சிதைப்பை ஏற்படுத்துவதனால் மருத்துவரீதியான நன்மைகள் ஏதும் உண்டா? இதனால் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கோ உடல் நலனுக்கோ நன்மைகள் விளையுமா? இதைக் குறித்த எந்தவொரு தெளிவும் விளக்கமும் ஒய்த்தா மாமிகளுக்குத்தெரியாது. கூர் மினுங்கும் புதிய பிளேட்டும், வெண்ணிற துணித்துண்டும் கையுமாக வந்து இந்தக் கடமையைச் செய்கிறவர்களை இலங்கை, கிழக்குமுஸ்லிம்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள். சில பிரதேசங்களில் ‘ஒஸ்தாமாமி’ என்றும் சில பிரதேசங்களில் ‘ஒய்த்தா மாமி’ என்றும்அழைக்கப்படுகின்ற இவர்கள் சந்ததி வழியாக இதே தொழிலைச் செய்கிறவர்கள். பெண் குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் பெரும்பாலும் முடிநீக்கம் செய்து, குளிப்பாட்டிப் புத்தாடை அணிவித்து இந்தச் சடங்குக்குக் குழந்தையைத் தயார்ப்படுத்துகிறார்கள். இந்தச் சடங்கு பெரும்பாலும் பெண்களை உள்வாங்கிய செயற்பாடாக இருப்பதனாலேயே இது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றும் சொல்லலாம். தாயோ, தாயின் தாயோ வெள்ளைத் துணி விரித்த பித்தளை வட்டாவின் மீது குழந்தையின் பிஞ்சுத் தொடைகளை அகல ஊன்றிப் பிடிக்க ‘ஒய்த்தா மாமி’ குழந்தையின் பிறப்புறுப்பில் பிளேட்டினால் இரத்தம் கசியக் கீறிச் சுத்தமான வெண்ணிறச்சாம்பலைக் கிள்ளிக் காயத்தில் போட்டு விடுவாள். குழந்தை வீறிட்டு அழும். இந்தப் பெண்களோ அழுகின்ற குழந்தையை அரவணைத்துக் கொண்டே சிரித்து மகிழ்வார்கள். இவர்களைப் பொறுத்தமட்டில் மிகமுக்கியமான மத – பண்பாட்டுக் கடமைகளிலொன்றை நிறைவேற்றி விட்டார்கள். ‘பாலியல் ஒழுக்கம்’ மிக்க பெண்ணாக குழந்தை வளர்ந்துவாழ்வதற்கு அடித்தளமிட்டுள்ளார்கள். ‘கிளிட்டோரிஸ் துண்டிப்புச்’சடங்கினால் இப்படியான ‘நன்மைகளை’ நிலைநாட்டிவிட முடியும் என்பதே இவர்களது நம்பிக்கை. இவர்களுக்கு இது இனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் பெருந்தியாகம்.

இப்படிக் கிளிட்டோரிஸ் நீக்கம் செய்வதால் எப்படிப் பெண்ணின் ‘பாலியல் ஒழுக்கத்தை’(?) இவர்கள் காப்பாற்றுகிறார்கள்? கிளிட்டோரிஸ் என்பது பெண்ணுறுப்பில் காணப்படும் உணர் குவியம் அல்லது மையம். பெண்ணுறுப்பின் இப்பகுதியே ஒரு பெண்ணினது பாலியல் உணர்வுகளைத் தீர்மானிப்பதாக காலங்காலமாக நம்புகிற மக்கள் இதனை நீக்கிவிடுவதன் அரசியல் என்ன?பால் உறவின் போதாமையை உணர்கின்ற ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைநிராகரிக்க வேறு காரணங்கள் தேவையில்லை என்கின்ற அச்ச உணர்வே,கிளிட்டோரிஸை நீக்குவதற்கு அல்லது சிதைப்பதற்குப் பின்னாலுள்ள ஆண்களின் அரசியல். பெண்ணை எப்போதும் ‘ஒருவனுக்கு ஒருத்தியாக’ சவக்கிடங்காகக் கிடக்கச் செய்வதற்காகவே இந்தச் சடங்குகொண்டுவரப்பட்டது. எளிதாகச் சொல்வதென்றால் பந்தயத்தில் தான் மட்டுமே சாம்பியனாக இருக்கவேண்டுமென்று சக போட்டியாளரின்கால்களை ஒடித்துவிடுவதுதான் இது.

இந்த நம்பிக்கை மத ரீதியானது என்றாலும், மத ரீதியானது இல்லை என்றாலும் இது பெண் குழந்தைகள் மீதான அப்பட்டமான மனித உரிமை மீறும் வன்முறைச் செயல். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும். அதாவது ஆண் உறுப்பில் முன் தோல் அகற்றுதல். ‘கத்னா’ என்று அழைக்கப்படுகின்ற இந்த வழக்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் ‘சுன்னத்’ ஆன கடமை. உங்களில் யாராவது கேட்கலாம், ஆண் பிறப்புறுப்பில் முன்தோலை நீக்குவது வன்கொடுமை இல்லையா, மனித உரிமை மீறல் கிடையாதா? அது என்ன பெண்ணுறுப்புச் சிதைப்பை மட்டும் வன்கொடுமை என்றும் உரிமை மீறல் என்றும் சொல்கிறீர்கள் என்று. ஆண் பிறப்பு உறுப்பில் முன் தோல் நீக்கம் செய்வது மருத்துவ ரீதியாகச் சரி காணப்பட்ட ஒரு செயற்பாடு. இது இஸ்லாமியர்களின் பண்பாடுஎன்ற போதிலும், சுகாதார நோக்கத்துடனும், குறி விறைப்பின்போது பின்னுக்குத் தள்ளப்படாத நிலையிலும் எந்தவொரு ஆணும் அதாவது எந்த இனத்தை மதத்தைச் சேர்ந்தவராயினும் முன்தோலை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ளமுடியும். கிராமப் புறங்களில் ‘ஒய்த்தா மாமா’ என்று அழைக்கப்படும் சந்ததி வழியாக இதனைச் செய்வதில் புலமைத்துவம்பெற்றவர்களால் இந்தச் சடங்கு செய்யப்பட்டு வருகின்றது. நகர்ப் புறங்களில் வைத்தியசாலைகளில் வலி தெரியாதவண்ணம் மருத்துவக் கண்காணிப்பில் மிக நூதனமாகவே ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆண் பிள்ளைகளுக்கு ‘கத்னா’ செய்யும் நிகழ்வு இலங்கை கிழக்கு மாகாண மக்களின் பண்பாட்டில் ஒரு கொண்டாட்டமாக இருந்த காலமொன்று இருந்தது. அயலார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து , மாடு வெட்டி விருந்தளித்துக் கோலாகலமாக இச்சடங்கு நடக்கும். கத்னா செய்யப்பட்ட ஆணுறுப்பு பூரண சுகம் பெறும் வரையிலும் நாலைந்துபேர் அந்தச் சிறுவனைச் சுற்றிக் காவல் இருப்பார்கள். உறக்கத்தில் கால்களைப் பிணைத்துக் கொண்டாலோ குப்புறப் புரண்டாலோ மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக்கிவிடும். உறக்கம் விழித்துக் கண்ணும் கருத்துமாக நாலைந்து பேர் சீட்டாடிக் கொண்டும் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டுமிருப்பார்கள். ஈக்கள், கொசுக்கள் அண்டாதிருக்கக் கூரையின் மேல் விட்டத்தில் கயிறு இழுத்து ஒரு வெள்ளைத் துணியைத் தொங்கவிட்டுக் கால்கள் விரித்துக் கிடக்கும் சிறுவனது உடலின் கீழ்ப்பாகத்தை மூடச் செய்திருப்பார்கள். கிட்டத்தட்ட கொசு வலையை ஒத்த இந்த வெண்ணிறத் துணி வலை புண் முழுவதும் ஆறுகிற வரையும் தொங்கிக் கொண்டிருக்கும். கடந்த பத்தாண்டு காலத்திற்குள்தான் இந்தக் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். இப்போதெல்லாம் ஆண் குழந்தை பிறந்த ஏழாவதோ பதினைந்தாவதோ நாளில் டாக்டர்களிடம் தூக்கிச் சென்று காதும் காதும் வைத்தாற்போல ‘நாகரீகமாகக்’ காரியத்தை முடித்துவிடுகிறார்கள்.

‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் பெண்ணுறுப்புத் துண்டிப்புச் சடங்கு பெரும்பாலும் குழந்தை பிறந்து நாற்பதாவது நாள் செய்யப்படுகின்றது. குழந்தைகள் வளர்வதற்கு முன்பே உடலில் செய்யப்படுகின்ற மாறுதல் ‘இதுவே தனது உடல்’ என்பதாக நம்பும்படியும், பருவ உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதபடியும் செய்துவிடுகின்றது. கிளிட்டோரிஸ் சிதைக்கப்பட்ட பெண்களின் பாலியல் இன்பம் மட்டுப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயும் பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுகள், தன் வரலாற்று நூல்கள், ஆவணப்படங்கள்  வெளிவந்துள்ளன.

கிளிட்டோரிஸ் நீக்கும் சடங்கு குழந்தைகளை மரணிக்கச் செய்யவும் கூடியது. சில குழந்தைகள் திகைப்பு (Hemorrhaging) என்கிற உள அதிர்விலிருந்து மீள்வதற்கு நாளெடுக்கும். இந்தக் குழந்தைகள் உளப்பிறழ்வு, மூளைப் பாதிப்புக்கு ஆளாகவும் இடமுண்டு. தொடர் இரத்த ஒழுக்கு (Vaginal Bleeding), சிறுநீர் எரிச்சல், பிறப்புறுப்பில் நீர்கட்டிகள் உருவாக்கம், தொற்றுகள், தோல் அரிப்பு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உருவாகுவதற்கும் இது காரணமாகக் கூடியது என்று சில மருத்துவ ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன.

கொடுமையான இந்தப் பண்பாட்டுப் பழக்கம் 200 வருடங்களாக இலங்கையில் இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் புழக்கத்தில் இருக்கலாம் என்பதாக கிளிட்டோரிஸ் நீக்கம் குறித்து 1996 இல் SRI LANKA CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் ரேணுகா சேனநாயக்க பதிவு செய்துள்ளார். அரேபிய வர்த்தகர்கள், மனைவியர்களாக அழைத்துக் கொண்டுவந்த மலேசியப் பெண்களால் கிளிட்டோரிஸ் நீக்கம் இலங்கை இஸ்லாமியர்களின் பண்பாட்டில் இடம்பிடித்திருக்கலாம் என்றும் ரேணுகாசேனநாயக்க தனது கட்டுரையில் பதிவு செய்கின்றார்.

‘பெண்கள் முஸ்லிம் ஆராய்ச்சி முன்னணியின்’ தலைவி ஜெஸீமா இஸ்மாயில், சமூகச் செயற்பாட்டாளர் டாக்டர் மரீனா றிபாய் போன்றோரினது கருத்துகளும் ரேணுகா சேனநாயக்கவின் கட்டுரையில் பதிவாகியுள்ளன. ஜெஸீமா இஸ்மாயில் இந்நடைமுறையினை “Brutal Practice” கொடூரமான நடைமுறை என்பதாகப் பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய மக்களின் பண்பாட்டோடு வேரூன்றிப் போயிருக்கும் இந்த அநீதிக்கு எதிராக, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவரும், தவிர்க்க முடியாத பெண் ஆளுமையுமான சமூகச் செயற்பாட்டாளர் ஜெஸீமா இஸ்மாயில் உயர் இடங்களில் பதிவு செய்ததோடு நின்றுவிட்டார். இந்த அநீதி நிறுத்துவதற்காக அவர் செயற்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

1997 இல் என்பதாக ஞாபகம், பிறப்புறுப்புச் சிதைப்பு விவகாரத்தை உலகத்தின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முதல் பெண் வாரிஸ் டைரி. இவர் ஆப்பிரிக்கத் தேசத்தின் சோமாலியா நாட்டிலிருந்து பால்ய வயதுத் திருமணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சொந்த நாட்டை விட்டுத் தப்பித்து வெளியேறியவர். மேற்குலகின் முன்னணி மாடல் அழகியாகத் தன்னைத் தடம்பதித்துக் கொண்டிருக்கும் வாரிஸ், உலகின் பிரபல ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ க்கு அளித்த நேர் காணலே பல்லாயிரம் வருடங்கள் பழமையான பிறப்புறுப்புச் சிதைப்பு விவகாரத்தை பொது அரங்கில் விவாதப் பொருளாக மாற்றியது. இவரது தன் வரலாற்று நூல் Dessert Flower உலகின் கவனிப்பைப் பெற்றுக் காட்சித் திரைக்கும் கொண்டு வரப்பட்டது. வாரிஸ், தன் வரலாற்று நூலில், தனது பிறப்பு உறுப்பு சிதைக்கப்பட்டதை விபரித்திருக்கிறார். பெண் உறுப்பின் உதடுகளில் அகேஷியா மரத்தின் முட்களை ஒவ்வொன்றாகச் செருகி துளையிடுகின்றாள் மருத்துவச்சி. பிறகு வெள்ளை நூல் கொண்டு உறுப்பைத் தைத்துவிடுகின்றாள். சிறுநீர் கழிக்கப் போதுமான துவாரத்தை வைத்துவிட்டு மீதிப் பிறப்புறுப்பு மூடப்படுகின்றது.

ஆப்பிரிக்க நாடுகளில் 93 விழுக்காடு பெண்களுக்கு இவ்வாறு பிறப்புறுப்புச் சிதைக்கப்படுகின்றது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் பெருந் துயரைச் சுமக்கவேண்டும். மாதவிடாய் காலங்களில் இவர்களது வலி பன்மடங்கு பெருகுகின்றது. கட்டுப்படுத்த முடியாத வலியில் அவர்கள் துடித்துஅழும்போது, மாதவிடாயை நிறுத்த மருத்துவர்கள் கருத்தடை மாத்திரைகளைத் தருகின்றனர்.

மருத்துவிச்சியால் தையலிட்டு மூடப்பட்ட பிறப்பு உறுப்பு, திருமணத்தின் பின்பு, சரியாகச் சொல்வதென்றால் முதலிரவின் போது திறந்து விடப்படுகின்ற வழக்கம் ஆப்பிரிக்கா தேசத்தின் சில நாடுகளில் வழக்கத்திலிருந்து வருகின்றது. தையலிடப்பட்ட பெண்ணுறுப்பை மீண்டும் திறப்பது, தையலிடுவதைவிடவும் கொடிய அனுபவம். வாரிஸ் டைரி மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்தே தனது பெண்ணுறுப்பைத் திறந்து கொண்டதாக Dessert Flower என்ற தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகின்றார்.லண்டன் போன்ற மேலைத்தேய நாடொன்றுக்கு வாழவந்த அவருக்கு இதுசாத்தியமாகின்றது. ஆப்பிரிக்க நாட்டிலேயே வாழ்கின்ற பெண்களுக்கு பாதுகாப்பான மருத்துவ முறையில் தைக்கப்பட்ட பெண்ணுறுப்பைத் திறப்பது சாத்தியப்படக்கூடியதில்லை. ஏனில், தைக்கப்படும்போது அனுபவித்த அதே கொடிய அனுபவத்தையே திறக்கும்போதும் அவர்கள் திரும்பப் பெறுவார்கள். பெண்ணுறுப்பின் இறுக்கமான துளையை ஆண்கள் விரும்பும் சந்தர்ப்பங்களில், தையலிட்டு மூடப்பட்ட பகுதியைத் திறக்காமலே வாழ்நாள் நெடுகிலும் வாழும் பெருங் கொடுமையைப் பெண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தப் பெண்கள் பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாது, சிறு துளையில் ஆண் உறுப்பைச் செலுத்துகின்றபோது உண்டாகின்ற வலியில் கதறுவதும், பற்களைக் கடித்துச் சகித்துக்கொள்வதுமே இவர்கள் அறிந்த பாலுணர்வு இன்பம். இப்படியானவர்கள் பிள்ளைப் பேற்றின்போது வலி தாங்கமுடியாமல் தாயும், சிறு துவாரம் வழியாக உலகத்தைப் பார்க்கமுடியாது மூச்சுத் திணறி சிசுவும் இறந்துபோகும் கொடுமைகள் ஆப்பிரிக்க நாடுகளில் தினமும் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்ச்சிகள்.

பெண்ணுறுப்புச் சிதைப்பு, முழுமையாகவும் பகுதியாகவும் நடைமுறையிலிருந்து வருகின்றது. இதில் மூன்று வகையான முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

1. பெண் உறுப்பின் உள் முனையை (கந்து) செதுக்குதல் / நீக்குதல்

2. முனை மற்றும் புழையின் இரு பக்கத்திலும் உள்ள பெண் உறுப்பின்

உதடுகளை வெட்டி நீக்குதல்

3. பெண் உறுப்பின் உள் முனையை நீக்கிவிட்டு, இதழை அறுத்து

புழையின் மேற்பகுதியை நூலால் தைத்துவிடுதல்.

இம்மூன்று முறைகளில் மூன்றாவதே வாரிஸூக்கு நிகழ்த்தப்பட்டிருந்ததை அவரது தன் வரலாற்று நூலிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆசிய நாடுகளில் இருப்பதானது, மேற்சொல்லப்பட்டிருக்கும் மூன்று முறைகளில் முதலாவதாக இருக்கலாம். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் முதலாவதே நடைமுறையில் இருக்கின்றது எனலாம்.

இந்தியாவில் மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு 2016 இல் எடுக்கப்பட்ட India’s Dark Secret : Female Genital Mutilation என்ற ஆவணப்படம் இந்தியாவில் ‘போரா’ முஸ்லிம்களிடையே பிறப்புறுப்புச் சிதைப்பு புழக்கத்தில் இருந்து வருவதைப் பற்றிப் பேசுகின்றது. பிறப்புறுப்புச் சிதைப்புக்கு உள்ளான பெண்கள் குரல்களில் வந்திருக்கும் இந்தியாஸ் டார்க் ஸீக்ரெட் ஆவணப்படம் மிக முக்கியமான தொகுப்பு. இலங்கையைப் போன்று குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் இல்லை, வளர்ந்து சிறுமியான பிறகே இச்சடங்கைச் செய்கிறார்கள். இந்த ஆவணப்படத்தில் தம் அனுபவத்தைப் பகிர்கின்ற பெண்கள் 8 – 14 வயதுச் சிறுமிகளாக இருந்தபோதே கத்னா செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை பெண் உறுப்பு சிதைப்பை 2012, நவம்பர் 27இல் தடை செய்தது. இதனையடுத்து ஆப்பிரிக்க தேசத்தில் உள்ள நைஜீரியா நாட்டு அதிபர் எடுத்த வரலாற்று முக்கியத்துமிக்க தீர்மானம் அந்நாட்டுப் பெண்கள் சிறுமிகளுக்கு விடுதலையுணர்வைப் பெற்றுத் தந்துள்ளது. பெண்ணுறுப்புச் சிதைப்பு மிக மோசமான முறைகளில் நடைமுறையில் உள்ளவொரு தேசத்தில் இருந்து வரும் இந்த சுதந்திரக் காற்று பெரும் நிம்மதியைத் தருகின்றது.
ஆம்! நைஜீரியா நாட்டில் பெண் உறுப்பு சிதைப்புச் சடங்கிற்குத் தடை  2015 மே 5 முதல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு வந்தது. நைஜீரியாவின் அதிபர் குட்லக்ஜோனாத்தன், கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் முஹம்மது புஹாரியினால் தோற்கடிப்புச் செய்யப்பட்டார். இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடப்பதுபோன்று முன்னாள் அதிபர் கொண்டு வந்திருந்த அமலுக்கு வராத சட்ட மசோதாவை புதிய அதிபர் வெட்டுக் குத்து விளையாட்டுகளால் தூக்கிப்போடவில்லை. இது பெண்களின் விவகாரம்தானே என்று புறக்கணிக்கவில்லை. புதிய அதிபர் முஹம்மது புஹாரி பெண் உறுப்புச் சிதைப்பைத் தடை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துச் செயற்படுத்தியுமுள்ளார்.

சட்டங்களை இயற்றுவதும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றுவதும் சிரமமான காரியங்கள் இல்லை. சிரமம், இந்தச் சட்டத்தை மதக் களைவு செய்து மக்கள் மயப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவருவதே. நைஜீரியா அரசாங்கமும் அங்கு செயற்படும் மகளிர் செயற்பாட்டாளர்களும், நாட்டின் முற்போக்கு அமைப்புகள், நிறுவனங்களும் பெண்ணுறுப்புச் சிதைப்பை முற்றிலும் இல்லாது ஒழித்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய நடவடிக்கைகளைச் செயற்படுத்திக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேம்பியா நாட்டின் அதிபர் யஹ்யாஜம்மீஹ் பெண் உறுப்புச் சிதைப்பு நடைமுறையை முற்றிலும் தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்றப் போவதாகஅறிவித்துள்ளார். இப்படி அறிவிப்புச் செய்வதனால் தேர்தலில்தோற்றுப்போவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டும் பொருட்படுத்தாமல் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் அதிபர் யஹ்யா.

பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான மனித உரிமைச் சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ள நாடான இலங்கையில் இதுவரையில், பிறப்புறுப்புச் சிதைப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், செயற்பாடுகள் எதுவும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இரு காரணங்கள்: ஒன்று, ஆப்பிரிக்கா நாடுகளில்போன்று தீவிர செயற்பாட்டுத் தளத்திற்குள் இச்சடங்கு இலங்கையில் இல்லை. இரண்டு, இது சிறுபான்மைச் சமூகமாகிய அதாவது 7 விழுக்காடுகளுக்கும் குறைவான இஸ்லாமியர்கள் மத்தியிலேயே புழக்கத்தில் இருக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசுக்கு இஸ்லாமியப் பெண்களின் கிளிட்டோரிஸ் சிதைக்கப்படுவதைக் குறித்து என்ன அக்கறை?

ஏனில், இதைக் குறித்து அக்கறைப்படவேண்டியவர்கள் யார்? இலங்கை இஸ்லாமியத் தலைவர்கள், மதத் தலைவர்கள், முற்போக்காளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், படைப்பாளிகள்.

இலங்கையில் சிறுமிகளைத் திருமணம் செய்வதை நியாயப்படுத்திக்கொண்டு, விவாக விவாகரத்துச் சட்டத்தை மாற்றுவதற்கு இடையூறாக இருக்கின்ற ஆண்களின் கைகளிலேயே இன்று இஸ்லாம் இருந்து கொண்டிருக்கின்றது. இவர்களோடு போராடுவது கல்லில் நார் உரிப்பதுபோன்றது என்பதற்காகவே பல முற்போக்கு இஸ்லாமியர்கள் செவிடராயும் ஊமையராயும் காலந்தள்ளும் ஓர் இருண்ட காலமே இன்று இலங்கையில் நிலவுவது. இஸ்லாம் மதம் என்ற நிலையைக் கடந்து, இஸ்லாம் இயக்கம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் சமூக நலன், எதிர்காலக் கனவு, விடுதலை உணர்வு, சுதந்திரம், சுயம் ஆகியவற்றுக்காக எதிர்வினையாற்றுவது உயிரையே விலையாகப் பெறக்கூடிய ஆபத்துக்களுக்கான சாத்தியங்கள் இலங்கைக்குள் வந்துவிட்டன.

இத்தகைய சூழலில், இலங்கை இஸ்லாமியப் பெண்களின் கிளிட்டோரிஸை யார் காப்பாற்றுவது? இலங்கை இஸ்லாமியரிடையே இப்படியான பண்பாட்டுச் சடங்கு புழக்கத்தில் இருப்பதே 21ஆம் நூற்றாண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாலியலில் ஆண்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக மாத்திரமே இச்சடங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்தாலும்க கூட பெண்கள்தான் இச்சடங்கை முற்றுமுழுதாகக் கையாழுகின்றார்கள்.கண்மூடித்தனமாக காலங்காலமாகத் தொடர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவோர் மதக் கடமை.‘கன்னித்தன்மையைப்’(?) பேணுவதற்காகத் தனக்குச் செய்யப்பட்டது, தனது மகளுக்கும் செய்யப்படவேண்டும் என்றே ஒவ்வொரு தாயும் இந்தச் சடங்கைச் செய்கிறார். கிளிட்டோரிஸ் நீக்கும் இந்தச் சடங்கு, ஆணாதிக்க சமூக அடிமைக் கூறுகளில் ஒன்று என்பதை இந்தப் பெண்களுக்கு எப்படி விளங்கிக் கொள்ளச் செய்வது?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுக்குப் பிறகும், பல தொழுகைகளுக்குப் பிறகும் மிம்பரில் முல்லாக்கள் முழங்கும் வார்த்தைகளை மந்திரமாகப் பாவிக்கும் இந்தப் பெண்களிடம் சமூகத்திடம் இதை எடுத்துச் செல்லத் துணிந்த ஒரு மௌலவியைத்தானும் கண்டுகொள்ள முடியுமா? இங்கு பெண் மௌலவிகளின் சமூகப் பங்குபற்றுகை பற்றிய மிகப்பெரிய கேள்வி துருத்திக் கொண்டு நிற்கின்றது. ஆண்கள் வகுத்திருக்கும் கொள்கைகளின் பிரதி விம்பங்களாக நிற்கும் பெண் மௌலவிகளின் மீது துயரம்படிந்த மௌனம் கவிகின்றது. பிறந்த குழந்தையின் முடியை மழித்துக் கொள்வது போலத்தான் பெண் உறுப்பின் கிளிட்டோரிஸை நீக்குவதும் என்று கூறிவிடாதீர்கள், பெண்களே! நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முற்படாதவரை , உங்களை வேறெவரும் காப்பாற்ற மாட்டார்கள்.  நம் பெண்குழந்தைகளின் கிளிட்டோரிஸை இனிச் சிதைக்க மாட்டோம் என்று சபதமெடுங்கள்! இதை நம்மால் தான் இல்லாதொழிக்க முடியும்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1383

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.