Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்வனம் // ஆனந்த விகடன் - கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

92p1.jpg

பச்சைக்குருதி அருந்தும் பேய்.

கொதிநீரில் பரவிய டீத்தூள்
ஒரு நூற்றாண்டுக்கான உழைப்பின் நெடியை
அறையெங்கும் கமழச்செய்கிறது
கடுஞ்சிவப்பில் சிற்றலைகள் எழுமாறு
குதியாட்டம் போடும் டிக்காஷனில்
இருக்கிறது எல்லாப் பிரிவு ரத்தமும்
மலைமுகட்டின் காடழித்து தேயிலை நட்டதிலிருந்து
நெடிதுயர்ந்த மரங்களின் நிரவல் இழந்த மேகங்கள்
கண்ணீரை மழையாய்ப் பெய்வதில்லை
வறண்டு வெடித்த விரல்களின் இலை கிள்ளும் லாகவத்தில்
நரம்புகளின் ஊடேறி நெஞ்சடைக்கும் பச்சைக்குருதி
தொழிற்சாலை பாய்லரில் கருகி வெடிக்கும் இலைக் கொழுந்துகள்
பால் கேட்டுக் கதறும் குழந்தைகளாய் சப்திக்கும்
செந்நிறத்திரவத்தில் நாரத்தைத் துளி கலந்து அருந்துகையில்
பச்சைக்குருதி அருந்தும் பேயெனத் தொடங்கும் நாள்.


- சி.எம்.சரவணன்

ஊழ்வினை

பெட்டிக்கடைகளில்
முட்டையாகிக் கிடப்பதற்கும்,
உணவகங்களில் சிக்கனாகிக்கிடப்பதற்கும்
ஊழ்வினையில்
என்ன பெரிய வித்தியாசம்
இருந்துவிடப்போகிறது?


 - ராம்பிரசாத்

92p2.jpg

இளைப்பாறல்

வயலின் இசையில்
துயிலெழுப்புகிறார்
இளையராஜா.
 
6 மணி ஷிப்ட்.
 
எறும்புகள் மொய்த்துக் கிடக்கும்
சளிக்கான சிரப் மூடியை
கழுவுதலில்
தொடங்குகிறது இன்றைய காலை.
 
இருமிக் களைத்த குழந்தைகள்
போர்வைகள் மறுத்து புரண்டு
படுக்கிறார்கள்.
 
வண்டியைக் கிளப்புகையில்
சன்னலில் தெரியும்
குழந்தையின் கண்களை
தவிர்க்கும்படியான
இந்த வாழ்விலிருந்து
இளைப்பாறல் வேண்டி
இன்னும் வேகமாக வண்டியை
விரட்டுகிறேன்.
 
இப்போது வயலின் இசை
ஒரு கத்தியைப்போல்
உள்ளிறங்குகிறது.


- முரளி கண்ணன்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

நட்சத்திரப்பிடாரி

பாற்சோறு உண்ட இரவின் நினைவில்
பருப்பு சோறுக்கும் நிலவைத் தேடியவள்தான்

எண்ணிக்கொள்ள ஆள்வைத்து
குழல்விளக்கை
கரகரவெனத் தின்றவனை
அச்சத்துடன் பார்த்தவள்தான்
இப்போதெல்லாம்
நட்சத்திரங்களைத் தின்கிறாள்

சட்டினியில் தட்டுப்படும் தேங்காய் நாருக்கோ
குழம்பில் நீளும் ஒற்றை முடிக்கோ
தட்டெறியப் பழகாதக் கட்டுப்பாட்டோடு
சொரசொரவென்றிருக்கும்
நட்சத்திரங்களைக் கடித்து விழுங்குகிறாள்

எத்தனை பேர் தின்றாலும்
தீராது உடுக்கூட்டம்
உங்கள் இதழ்க்கடைப் புன்னகையை
அவள் நட்சத்திரமாக்கினாள்
சற்றே சாறு வழிந்தபோது
பக்கவாட்டுப் பற்களை நீட்டி வரைந்தாயிற்று

- உமா மோகன்

வருகை

சில பருவங்கள் கடந்தும்
வெறிச்சோடிக் கிடந்த
பின்வாசல்
முற்றத்து மரக்கிளையின்
பறவைக்கூட்டை
பார்த்துக்கொண்டிருந்தபோது
முன்வாசல் முற்றத்தில் வந்திருந்த நீ
அழைப்பு மணி ஒலிக்கிறாய்.

- கோ.பகவான்

கானல் பழம்

கோடை ஒரு மழையைப்போல
சோவெனப் பெய்துகொண்டிக்கிறது.
மொட்டைமாடி நிரம்பி
படிகளின் வழியே சலசலவென
இறங்கிவருகிறது வெய்யில்.
வெய்யிலில் நனைந்து ஈரமான உடல்களை
கூடுதல் காமத்தோடு தழுவுகிறது காற்று.
பட்டுப்போன மரமொன்றின் உச்சியில் ஏறி
தன் கழுத்தைப் புடைத்துப் படமெடுக்கிறது கோடை.
வானக் கிளையிலிருந்து தவறிவிழுந்த கானல் பழத்தை
அது தன் இரட்டை நாவால் கவ்விக் கொண்டதும்,
கருகும் பயிர்களின் கரவொலியோடு தொடங்கிவிட்டது
கோடையின் நடனம்.
வெறிச்சோடிக் கிடக்கும்
வீதிகளை எல்லாம் சுறுசுறுப்பாகச்
சுருட்டிவைத்துக்கொண்டிருந்தது கோடை...
ஓ... ஊழி முடிந்துவிட்டதா?
ஆகாயப் பாதையில் வந்துநிற்கிறது
நாம் ஏறிச் செல்லவேண்டிய
சூரியக் கப்பல்.

- கார்த்திக் திலகன்

பத்துக் கொலைகளுக்கு அதிகம்...

பக்கத்துவீட்டுச் சிறுவன்
சுவற்றில் அப்பிக்கிடந்த பல்லியைக்
குறிவைத்து அடித்தான்.
அடித்த மாத்திரத்தில் அப்படியே விழுந்து
அசைவற்ற நிலையில் கிடந்தது.
நானதைப் புரட்டிப்போட்டேன்.
அதன் வயிறு வீங்கியிருந்தது
சற்றைக்கும் முன்புதான்
பத்துக்கும் மேற்பட்ட பூச்சிகளை
அது விழுங்கியிருக்கக்கூடும்.
இப்போது
பத்துக்கும் மேற்பட்ட கொலைகள்புரிந்த
கொலைகாரனைப் பயந்து நடுங்கும்
ஒரு சிறுவனின் கண்களால் பார்க்கிறேன்.

- நெகிழன்

p98a.jpg

அறம்

கம்பீரமாக அவன்
உட்கார்ந்து கொண்டிருந்தான்.
எல்லோரிடமும்
கை நீட்டிச் சென்றது
யானை.

- எஸ்.நடராஜன்

http://www.vikatan.com

24m

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொல்வனம்

படம்: அருண் டைட்டன்

 

பூ

யாருமற்ற தீவில்
அத்தனை அழகாய்
ஒரு பூ
பூத்திருக்கிறது...

கொய்து சூட‌
கூந்தல்களில்லை
என்பது குறித்து
அதற்குக் கவலைகளேதும் இல்லை...

விண்ணை நோக்கி வளர்ந்திருக்கிறது
ஆதலால்
கிளையில் ஒட்டியிருக்கும்வரை
அதன் உருவத்தை
கடல் நீரில் அது
பார்த்திடவே போவதில்லை...

வயோதிகம் முற்றி
கிளையிலிருந்து விழுகையில்
அதன் புலன்கள்
அடைபட்டிருக்கும்...

ஆக,
அதற்கு
அதன் உருவம் குறித்த‌
யாதொரு பிரக்ஞையும் எப்போதும் இல்லை...

இதையெல்லாம் சொல்லிவிட்ட பிறகு
கண்ணாடிகள்
முகம் பார்க்க இல்லை
என்று சொன்னால்
நம்பிவிடவா போகிறீர்கள்?

 - ராம்பிரசாத்

சவ ஊர்வலம்

யாருமற்ற தன் சவ ஊர்வலத்தில்
தானே நடனமாடிக் கடக்கும்
பழுத்த இலை.

 - நாகராஜ சுப்ரமணி

அம்மா

கொடியில் காயும்
குழந்தையின் துணிகளை
வெயில் படாமல்
சிரத்தையுடனே
பார்த்துக்கொள்கிறது
அருகில் காயும்
அம்மாவின் புடவை.

- ராமதுரை ஜெயராமன்

p62a.jpg

இன்று

விஷேச நாட்களிலும்
ஒருவரும் வரவில்லை
சிறிய துணிக்கடைகளுக்கு
பின்மதிய நேரங்களில்
தூக்கத்தை கட்டுப்படுத்துகிறான்
செருப்புக்கடை சேல்ஸ்மேன்
கதர்கடை விற்பனைப் பிரிவில்
துடைத்துக்கொண்டே
எதிர்பார்க்கிறான் வாடிக்கையாளரை
எதிரில் இருக்கும்
பல்பொருள் அங்காடியை
ஏக்கமாய் பார்க்கிறான்
மளிகை கடைக்காரன்
குவிந்திருக்கும்
மசால் வடைகள்
நஷ்டக்கணக்கையே காட்டியது
டீக்கடைகாரருக்கு
இன்றும் நேற்று போல்
இருக்கக்கூடாதென நினைத்து
கதவைத் திறக்கிறார்கள்
வேண்டுதல்களுடன்
விற்பனையாளர்கள்!

- மணிகண்டபிரபு

http://www.vikatan.com

31m

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொல்வனம்

ஓவியம்: டோர் சந்தானகிருஷ்ணன்

 

92p1.jpg

உள்ளங்கை குளிர்ச்சி

வெகு காலமாக அந்த வீடு
பூட்டியே கிடக்கிறது.
இதயம் அளவுக்கு ஒரு பூட்டு
அதில் தொங்கிக்கொண்டிருக்கும்.
ஒரு நாளும் அந்த வீட்டைத்
திரும்பிப் பார்க்காமல்
நான் கடந்து போனதே இல்லை.
எனது அன்பின் பாதை
அந்த வீட்டில்தான் வந்து முடிவதாக
நான் நினைத்துக்கொள்வேன்.
தெரு முக்கில்
என் வாகன ஒலி கேட்கும்போதே
தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு
சாதுவாகப் படுத்துக்கொள்ளும்
அந்த வீடு.
என்ன மாதிரியான பந்தம் இது.
இன்று ஏனோ
என்னால் அந்த வீட்டைக்
கடந்து போகவே முடியவில்லை.
பூட்டிய பூட்டுக்குள்
அழுந்திக்கிடந்த மௌனம்
என்னை என்னவோ செய்தது.
குளிர்ந்திருந்த அந்தக்
குட்டியூண்டு இதயத்தை
உள்ளங்கையில் பற்றிக்கொண்டு வெகுநேரம் நின்றிருந்தேன்.
அந்தக் குளிர்ச்சி
எனக்கு எல்லாவற்றையும்
சொல்லிவிட்டது மாதிரி இருந்தது.

- கார்த்திக் திலகன்


மீட்சி

லசலத்து
தான் வாழ்ந்த பெரு வாழ்வை விடுத்து
பற்றற்ற துறவிபோல்
காற்றில் அசைந்து அசைந்து
நீருண்ட குளம் நோக்கி
வீழ்கிறது ஒரு பழுத்த இலை.
தவறி விழுந்த எறும்பொன்று
தன் வாழ்வின்
ஒட்டுமொத்தப் பிடிமானமாக
பற்றிக்கொண்டு ஏறிப் பயணிக்கிறது
இலை மீது.
பழுத்த இலை
மெள்ளத் துளிர் விடுகிறது.

- வெள்ளூர் ராஜா


அழகி

ற்கெனவே
அவள் கோபக்காரி.
அலங்காரத்தால்
இன்னுமதைக்
கூட்டியிருந்தார் பூசாரி.

அடிக்கடி வருபவர்கள்
ஆடிக்கு மட்டும் வருபவர்களென
அடையாளம் கண்டு
ஆவேசப்பட்டபடி
இருந்தனர்
அவளின் மருளாடிகள்.

சிரித்தபடி வந்தவர்கள்
சினந்த அவளின் முகங்கண்டு
“தாயே
நாங்க ஓம்புள்ளக” என
தாழ்ப்பணிந்தனர்.

ஒலித்தபடியிருந்த
உருமியின் சத்தம்
ஊடுருவிக்கொண்டிருந்தது
மனதை.

ஆடிக்கொடைக்கென
வந்த சிறுமியொருத்தி
“ஹைய்யோ
எவ்ளோ அழகு”
என்றபடித் தன் செல்லின்
வால்பேப்பருக்காய்
படம் பிடிக்கிறாள் அவளை.

சூடியிருந்த
தன் ரௌத்திரத்தை
இறக்கிவிட்டுப்
புன்னகைக்கத்
தொடங்கினாள்
வனப்பேச்சி.


- கண்மணிராசா

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

படம்: கே.ராஜசேகரன்

 

அன்பு எனும் நான்

ன் அன்பு
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி
மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி
குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு
நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை
முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை
ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம்
மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு 
இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா
வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல்
கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து
தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும்
தாய் யானைப் பிளிறல் சத்தம்
கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை
இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா
முதுகாவலாளியின் குட்டித் தூக்கம்
இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல்
கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல்
பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர்
நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும்
விடுதலை மரணம்
என் அன்பு…

- தர்மராஜ் பெரியசாமி

p100.jpg

ஓவியக்காரி

சுவரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய
லாவண் குட்டி
முதலில் காடு வரைந்தாள்
மரக்கிளையில் மீன் வரைந்தாள்
நதி வரைந்தாள்
அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள்
வானம் வரைந்தாள்
அதன்மேலே படகு வரைந்தாள்
கடல் வரைந்தாள்
அதன் மேலே விமானம் வரைந்தாள்
அடுத்து என்ன வரைவதென
யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள்
கனவிலும் எதையோ
வரைந்துகொண்டிருப்பாள்.

- கோ.பகவான்


காதல் காலம்

ன்றும்கூட சட்டை காலரில்
கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும்
ஆண்களின் முகத்தை
வலிய வந்து பார்க்கிறாள்
விமலா அக்கா;
இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள்
ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த
முகமழிந்த பிணம்
வில்லியம் அண்ணா இல்லையென;
இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது
அந்தப் பேருந்து நிழற்குடையும்
தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும்
காவியக் காதலுக்கு சாட்சியாய்;
இன்றும்கூட உயிரோடிருக்கிறார்
ஊர்ப் பெரியவர் சதாசிவம்
தான் எப்போதோ செய்துவிட்ட
பாதகங்களுக்கு
கோயில்தோறும் பாதயாத்திரை
செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு;
இன்றும்கூட எங்கோ வளர்கிறது
வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில்
விமலா அக்காவின் அழகான கண்களுடன்
ஓர் அனாதைப் பிள்ளை;
இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது
அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில்   
விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்...

- கோஸ்ரீதரன்

http://www.vikatan.com/

1j

  • தொடங்கியவர்

சொல்வனம்

படம்: அ.குரூஸ்தனம்

 

30p1.jpg

தினசரி

சில வீடுகளுக்கு நகர்ந்தவாறே வீசிச்செல்கிறான்
அந்த வீடுகள் பூட்டியே இருக்கின்றன.
சில வீடுகளில் “சார் பேப்பர்” என்று குரலெழுப்புகிறான்
அந்த வீடுகள் எப்போதாவது பதில் சொல்கின்றன.
சில வீடுகளிடம் ஏதும் பேசாமல் செருகிச் செல்கிறான்
அந்த வீடுகள் மௌனம் கலைப்பதேயில்லை.
சில வீடுகளை ரசித்துச் செல்கிறான்
அந்த வீடுகள் அவனிடம் புன்னகை செய்கின்றன.
சில வீடுகளில் மட்டுமே நின்று கேட்கிறான்
“அக்கா தண்ணி குடுக்கா”
அந்த வீடுகளும் அவனிடம் கேட்கத் தவறுவதில்லை.
“வேலைய முடிச்சிட்டு ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறியாடா?”


- சுபா செந்தில்குமார்

நினைவு ஊஞ்சல்

ஓய்வெடுக்கும் ஒரு ஞாயிறு மதியத்தில்
என்றுமில்லா சத்தம் எங்கள் தெருவில்
புதிதாய் வந்த பிள்ளைகள் தந்த சத்தம்
திட்டித் தீர்க்கலாமென சன்னல் திறந்தால்
நாங்கள் ஆடிய பின் யாரும் ஆடாத
புளியமரக் கிளையில்
`ஓ’ வெனக் கத்தி ஆர்ப்பரித்து
ஊஞ்சல் கட்டி ஆடும் பிள்ளைகளைக் கண்டு
ஊமையாய் வேடிக்கை பார்த்துப் பின்
ஊஞ்சல் மேலே போகும்போதெல்லாம்
`ஓ’ வென நானும் கத்துகிறேன் இங்கிருந்து
ஒப்பாகத் திரும்ப ஊஞ்சலில் இருந்து
`ஓ’ வெனக் கத்துவதும் நான்தான்
ஊஞ்சல் தள்ளிவிடும் டவுசர் சிறுவன்
உம்மணாமூஞ்சி குமார்தானே...
உனைப் பார்த்து முப்பது வருசமாச்சே நண்பா.


-நாகராஜ சுப்ரமணி

கோடையை விழுங்குதல்

இருளில் நடக்கும் சிறுமியென
மிகக் கவனமாய் அடியெடுத்து
நகரக்கூடிய காலம்
வேனல் தாங்காமல்
நீர்த் தேடி நொண்டுகிறது.
துணிகளைக் கிழித்தெறிந்து
தெருவில் ஓடும் காலத்தை
கையில் கால்சராயுடன்
துரத்துகிறாள் தாயொருத்தி.
வியர்வை பூக்கத் தொடங்கி
நனைந்து உழன்றுகொண்டிருப்பவன்
மன்றாடுகிறான்
‘இந்த நகரத்தின் உயரத்திலிருக்கும்
கல்நார் வேயப்பட்ட
பத்துக்கு ஆறு அறையைக் குளமாக்கி
அதில் நீந்தும் சிறு புழுவாக்குக் கோடையே!
நீ வறுத்துத் தின்னும் வாதைக்கு
மீனின் ஒரு விழுங்கில் சுகப்படுவேன்’
உச்சந்தலைக்கு மேல் மணி ஒளிர்கிறது
பன்னிரண்டு முறை கடிகாரத்தில்
பகலின் கதறெலன.
அடிக்கடி காறி உமிழும்
நோயுற்ற கிழவனின்
எச்சில் குவளை காய்ந்து கிடக்கிறது
கனன்றிருக்கும் படுக்கையிலிருந்து நிமிர்பவன்
முதுகை ஈரத் துவாலையால் அரக்கியபடி
தன்னை நொந்து வெக்கையை ஏசுகிறான்.
ஒரு மிடறு எச்சிலூறும் கணத்தில்
அமைதியடைந்து
ஒட்டகம்போல் நீர் அறையில் தேக்கிக்கொண்டு
ஒவ்வொரு மிடறையும்
முன் வைக்கிறான்
வாளேந்தி வரும் வேனிற்காலத்துக்கு எதிராக.


-ஸ்டாலின் சரவணன்

மழைச்சாமி

கூழ் ஊற்றும் திருவிழாவில்
கொட்டிய பம்பை உடுக்கையில்
மருள் வந்தாடிய
மாணிக்கம் சம்சாரம்
அத்தனைக்கும் பதில் சொன்னது
அசராது.
மழையேயில்லையே தாயென்று
மக்கள் கேட்டிட ஏனோ
கமுக்கமாய் மலையேறியது
கனியொன்றை விழுங்கி.


- இரா.ஜெயசங்கரன்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

ஒற்றைக் குறுஞ்செய்தி

கோரைப் பற்களெனும்
கொடிய சொற்களைக்கொண்டு
கதறக்கதறக் கிழித்துக் குதறுகிறேன்
இம்மழை இரவை.
விடியும்வரை தூக்கம் தொலைத்து
செந்தூரமாய் விழிகள் சிவந்து
தேம்பியழுது
கண்ணீர் வறண்டு
ஆறுதல் கரத்திற்காய்
காத்திருத்தலைத் தொடர்கிறது.
தவளைபோல
விடாமல் பிணாத்துகிறது.
கதிரவனைப் பறிகொடுத்த வெம்மை
தன் சோகம் சொல்லி
அதனோடு இணைந்து கொள்கிறது.
தன்னை விட்டுவிடுமாறு
கன்னங்களில் போட்டுக்கொண்டு
கால்கள் பிடித்து இறைஞ்சுகிறது.
கணநேரத்தில் ஊடலகற்றுமாறு
உன்னிடமிருந்து ஒற்றைக் குறுஞ்செய்தி
வந்தால்கூடப் போதும்.
நினைவிலாவது அணைத்துக்கொண்டு
துயர்மிகும் இத்தனிமைக்கு
விடுதலை கொடுத்துவிடுவேன்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

p64a.jpg

புல்லாங்குழல் மனசு

கடைசிப் பேருந்தைத்
தவறவிட்டவனின்
மனவிசும்பல் போலிருக்கிறது
இயலாமையை எதுவும் செய்யமுடியாத
அந்தப் பொழுதுகளில்
திருவிழாவில் தொலைந்தவனின்
மனநிலையைப் போலிருக்கிறது
விஷேசங்களில் சமனின்மையைச்
சந்திக்கும் பொழுதுகளில்
ரங்கராட்டினத்தின் உச்சியில்
ஏற்படும் பீதியைப் போலிருக்கிறது
எதிர்பாராமல் வந்துநிற்கும்
கடன் கொடுத்தவனைக்
கண்களால் பார்க்கும் பொழுதுகளில்
இவைகள் இல்லாவிட்டாலும்
வாழ்க்கை ருசிக்காது என்று
ஆறுதல் கொள்கிறது மனசு
எதிர்பாராமல் விழுந்துவிட்ட துளைகளையும்
புல்லாங்குழலாய் மாற்றிக் கொள்பவனின்
மனநிலையைப் போல

- விகடபாரதி

வாஞ்சையின் துளி!

வீசும் சிறுஅறை ஓரத்தில்,
அச்சிறு மேசை
நடுவில் மலினமான போத்தல் ஒன்று,
சுற்றிலும் பகிர்ந்துகொள்ளும் பிளாஸ்டிக் டம்ளர்கள்,
அருகே வாட்டர் பாக்கெட்,
சிவப்பேறிய மாங்காய்ப் பத்தை,

உழைத்து உப்பேறிய கரங்கள்
அதனைச்சுற்றி
நடுவில்
கை தட்டி ஏந்துபவளின்
கரங்களுக்குப் பதிலளிக்க
சட்டைப்பையில் எதுவுமில்லை,

“காசில்லக்கா! ஆனா உன் கையால
ஆசிர்வாதம் பண்ணிட்டுப்போக்கா!”

இறைநம்பிக்கையற்ற யாசகியோ
துணுக்குற்றவளாய்
ஒரு கணம்
அள்ளஅள்ளக் குறையாத
உப்புநீரின் வாஞ்சையை
ஒரு துளி உதிர்த்து
மறைந்தாள்
பெருந்தேவியாய்!!

- லிவிங் ஸ்மைல் வித்யா

வேண்டுதல்

நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும்
ஒரு பூவைப் பார்த்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி
அவசர அவசரமாகக்
கண்களை மூடிக்
கடவுளை வேண்டுகிறாள்
ஒரு வேகமான
காற்று வேண்டி.

- பிரபு

http://www.vikatan.com

14j

  • தொடங்கியவர்

சொல்வனம்

படம்: சி.சுரேஷ் பாபு

 

கோலிக்குண்டு கண்கள்

இந்தக் குட்டிப்பையனுக்கு
யார் சொல்லிக் கொடுப்பது?
பதில் சொல்ல முடியாத
கேள்விகளாகப் பார்த்துப்
பார்த்துக் கேட்கிறான்.
அவன் உதடுகளைப் பார்த்தால்
முத்தத்தின் இருக்கையைப்
போலவே இருக்கும்.
பதில் தெரியாத
நேரத்தில் எல்லாம்
அதில் ஒரு முத்தத்தை
உட்கார வைத்துவிட்டுப்
போய்விடுவேன்.
நேற்று அவன்
கேட்ட கேள்வியில்
என் மனைவியே
முகம் சிவந்துவிட்டாள்.
அவளின் சிவப்பு வண்ண
வெட்கத்துக்கும்
அவன் கோலி வடிவக்
கண்களுக்கும் இடையே
என் முத்தம் கிடந்து
அல்லாடியதைப்
பார்க்க பரிதாபமாக
இருந்தது எனக்கு.

- கார்த்திக் திலகன்

p54a.jpg

நேசம்

மகிழுந்து கண்ணாடியில்
படிந்த
பனியில்
தனது எண்ணங்களை
சித்திரமாக்குகிறாள் சிறுமி
தனது பார்வையால்
அள்ளிக்கொண்டு
பிரகாசிக்கிறது
வெயில்.

- புன்னகை பூ ஜெயக்குமார்

நீருள்ள குளம்

கைக்கு அடக்கமாக ஒரு
தவளைக்கல்லைத்
தேடி எடுத்துவிட்டேன்
இப்போது
நீருள்ள ஒரு
குளத்தைத்தான்
தேட வேண்டும்.

- பிரபு

பூர்வீக வீட்டின் உத்திரங்கள்

ஏதொவொரு சொல்லுக்காய்
ஏதோவொரு நிராகரிப்புக்காய்
ஓடிச்சென்று தாழ்ப்பாளிட்டு
விதி முடிக்கும்
யாரோ ஒருவருக்காய்
திடுக்கிட்டு கதவுடைத்துத்
திறக்கிறவர்களின்
கால்களில் விழுந்து
மன்னிக்கச்சொல்லி
மன்றாடுவதைப் போல்தான்
கிடக்கிறது
நாத்தள்ள
விறைத்துத் தொங்கும்
சோடிக்கால்களின் அடியில்
எப்போதும்
ஒரு பழைய நாற்காலி.

- கார்த்தி

http://www.vikatan.com

21j

  • தொடங்கியவர்

சொல்வனம்

படம்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்

 

பாட்டி வீட்டிற்கு வந்த கிளி

ஊருக்கு ஒதுக்குப்புறத்திலிருந்த
அந்த வெற்று நிலத்தில்
பெரிய மாமரமொன்று முன்பு இருந்தது.
காக்கைகளும் குருவிகளும் கிளிகளுமாய்
எப்போதும் இரைச்சலாயிருக்கும்
அந்தப் பிரதேசம்.
போனவருடம்தான் புளுப்ரின்ட் போட்டு
நிலத்தைச் சமன் செய்திருந்தார்கள்.
மூன்றடுக்கு மாடிகளோடு இப்போது
பிரமாண்டமான கட்டடமாய்
மாறிப்போயிருந்தது அந்த மாமரம்.
போனவாரம் மதிய நாளொன்றில்
அந்த வழியாகப் போகும்போது
எதேச்சையாய் நான் பார்த்தேன்
கீச் கீச்சென்று கத்தியபடி
ஒரு சின்னக் கிளியொன்று
குதூகலமாய் அந்த வீட்டையே
சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.
மாலையில் திரும்பவும்
அந்த வீட்டைக் கடக்கையில்
அப்போது அந்தக் கிளியைக் காணோம்.
கோடை விடுமுறைக்காக
வெகுதூரத்திலிருந்து
பாட்டி வீட்டைத் தேடி
வந்திருந்த கிளியோ என்னவோ?

 - எஸ்.நடராஜன்

p62a1.jpg

பொன்னூஞ்சல்

வயோதிகத்தின் வெறுமையில்
வதைக்கும் வறுமையில்
கடன் தொல்லையில்
காதல் தோல்வியில்
கணவன் மனைவி பிணக்கில்
தோற்ற அவமானத்தில்
களவாணிப்பட்டம் கிட்டிய களங்கத்தில்
நாண்டு நா வெளித்தள்ள
எம்மூர் சீவாத்திகள் விழிபிதுங்கத் தொங்கும்
ஏரிக்கரை புளியமரத்திற்கு
எமகாதக மரமெனும்
ஏச்சும் பேச்சும் பழியும் பாவமும்
அடியோடு நீங்கிற்று
நடுநிசியில் ஊரடைந்து
கூடாரமிட்டு குடியேறிய
கழைக்கூத்தனின் மகள்களில் ஒருத்தி
கயிற்றூஞ்சல் கட்டியாடிய கணம்தொட்டு!

-ஸ்ரீதர்பாரதி

வீடற்றவனின் வார்த்தைகள்

வீடிருப்பவனுக்கு
வெள்ளம் என்றும்
வேக்காலம் என்றும்
கடுங்குளிர் என்றும் சொல்ல
சொல்லிருக்கிறது
வீடற்றவனுக்கு
வீடு என்ற ஒற்றைச் சொல்லே
எல்லாமாக இருக்கிறது
வியர்வையோ
ஊதக் காத்தோ
மழையோ
வீடற்ற தன்மையிலேயே
எல்லாவற்றையும்
ஒன்றென பாவித்துக் கடந்துவிடும் அவன்
ஒதுங்கிக்கொள்ள
ஒரு வீட்டின் வெளி ஓரம் போதும் என்று
ஓடிக்கொண்டே இருக்கிறான்.

-விகடபாரதி

vikatan

5.7

  • தொடங்கியவர்

சொல்வனம்

படம்: அருண் டைட்டன்

 

94p1.jpg

உள்ளிருப்பு

வகுப்பறைக்குள்ளிருந்து
ஜன்னல் கம்பியின் இடுக்குகளில்
ஏக்க பாவனைகளுடன் ஏகப்பட்ட முகங்கள்

வெளியில் பறந்தலையும் பட்டாம்பூச்சிகள்
சிறுசிறு பறவைகளே
பொழுதுபோக்கு
சுதந்திரம் இழந்த குழந்தைகளுக்கு

தன்பக்கம் வரும்
பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கும் முயற்சியில்
சில ஜோடிக் கைகள்

இன்னும் சற்றுநேரத்திற்குள் வந்துவிடும்
ஆசிரியரை எண்ணி
இப்பொழுதே
கைகளனைத்தும்
பின்வாங்கத் துவங்கிவிட்டன
ஒவ்வொன்றாய்.

- அயன் கேசவன்

எல்லார்க்கும் பெய்யும்...

அலுவலகம் முடிந்து
வீடு திரும்புகையில்
பெய்திருக்கும் மழையின் ஈரம்
ஞாபகப்படுத்துகிறது
ஊரிலிருக்கும் அம்மாவை,
மழை கசிந்த ஆரம்பப்பள்ளியை,
நனைந்தபடியே பெரிய
விளக்கு
ஏற்றப்பட்ட கார்த்திகைத் திருநாளை,
கப்பல் மூழ்கியதால் அழுத
ஒரு கார்கால மாலையை,
கொஞ்சம் ஈரமானாலும் வீசப்படும் பந்துகளின்
வேகத்தை மட்டுப்படுத்தி
சுலபமாய் அடிப்பதற்கு வாகாக்கித்தரும்
மங்களமேட்டு கிரிக்கெட் மைதானத்தை,
ரம்மியங்களை மனசுக்குள் எழுதும்
வாகை மரப் பூக்களின் வாசத்தை,
குடையை விரிக்காமல்
மழை தழுவத் தழுவ பூங்கொடியுடன்
நடந்துபோனதை...

மழை
மழையாக மட்டுமே
பெய்துவிட்டுப்
போவதில்லை
ஒருபோதும்.

-சௌவி

காயம்

தலை கவிழ்ந்து நிற்பதால்
தவறு செய்தவன் என அர்த்தமில்லை.
மெளனத்தைத் துப்பியபடி
மெல்ல நகர்கின்றன
நீண்ட காலத்தின் மணித்துளிகள்.
தேற்றலுக்கான மொழியையும்
ஆறுதலுக்கான உணர்வையும்
தொலைத்துவிட்டு
பெருமூச்சிட்டு நகர்கிறது
மற்றுமொரு சந்திப்பு.
என்றோ வரும்
என் தருணமென
வெட்டிய மரக்கிளையில்
மெல்லிய வலை பின்னித் தொங்கும்
சிலந்தியின் மனது
ஆறாத காயங்களோடு
தனிமையில் ஆடிக் கொண்டிருக்கிறது.

- ர. ராஜலிங்கம்

பாதை

நொடிக்கொருமுறை
வாகனங்கள்
கர்ஜித்துக் கடக்கும்
இந்த நெடுஞ்சாலையில் புதையுண்டு கிடக்கின்றன
ரெட்டைப் பனங்காய் வண்டியின்
தடங்கள்.

-கோ.பகவான்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

கானல் நீரலைகள்

நதியே! திரவத்தமிழே!
என்று பாடினேன்.
என்னை மிகவும் பிடித்துவிட்டது
நதிக்கு.
பேச்சு வாக்கில்,
தன் முதுகில் ஏழெட்டு லாரிகள்
மணல் அள்ளிய புண்களை
திருப்பிக் காட்டியது.
புண்களின் கானல் நெடியில்
மயக்கமே வந்துவிட்டது எனக்கு.
மணல் என்பது மணல் மட்டுமல்ல
அது சிறிய வடிவிலான
பூமி உருண்டை என்றது.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே,
எங்களைக் கடந்துபோனது
ஏழெட்டு மணல் லாரிகள்.
எத்தனையோ உலகங்களின் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது வழி எங்கும்.
கானல் நீரலைகள்
நாய்களைப்போல
விரட்டிக் குரைத்தன லாரிகளை...

-கார்த்திக் திலகன்

p62a.jpg

ஃப்ளாஷ்பேக்

இரக்கமற்ற அந்த ஃப்ளாஷ்பேக்கிற்கும்
எனக்குமான WWF
இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
முகத்தில் மூன்று உதை
வயிற்றில் எட்டு மிதி வாங்கியபின்
அந்த ஃப்ளாஷ்பேக்கின் முன்
திராணியற்றவனாக நிற்கிறேன்.

இவனை எளிதில் வென்றுவிடலாம்
என்று தெரிந்துகொண்ட அது
கயிற்றின் மீது ஏறி
என் கழுத்தில் குதித்து கீழே தள்ளுகிறது
என்மீது ஏறி அமர்ந்துகொண்டு
என் கால்களை மடக்கிப் பிடித்துக்கொள்கிறது.

சர்ர்ர்ர்ர்ரென்று சறுக்கி வந்த அம்பயர்
அதன் வெற்றியை உறுதிசெய்ய எண்ணுகிறார்.

ஒன்...

உலகின் இரக்கமற்ற எல்லா மனிதர்களும்
அவருடன் சேர்ந்து எண்ணுகிறார்கள்.

டூ...

அந்த ஃப்ளாஷ்பேக்
மெல்ல என் காதருகில் வந்து கேட்கிறது
‘இந்த முறையாவது திருந்துறியா!?’

நான் த்ரீ...எண்ணுவதற்குள்
என் கால்களை உதைத்து
போட்டியைத் தொடர விரும்பவில்லை
நான் அந்த ஃப்ளாஷ்பேக்கிடம்
தோற்றுப்போகவே விரும்புகிறேன்.

- தி.விக்னேஷ்

மைக் டெஸ்டிங் 1...2...3...

சிட்டு பாட்டியோட
மூணாவது பொண்ணு வைரம்
இந்தக் கிணத்துலதான் மிதந்துச்சுன்னு
சொல்லிட்டுப்போன தங்கப்பாண்டி
எடுத்துட்டுப்போனது
கோடையோட குளியல் கொண்டாட்டத்த.

மாந்தோப்புக்குள்ள
ஏதோ ஒரு மரத்துலதான்
பானு அத்தை கயித்துல தொங்குச்சுன்னு
ராஜதுரை சொன்னதுக்குப்பிறகு
யாருக்குத்தான் தோணும்
திருட்டு மாங்கா திங்க.

பூட்டியே கெடக்குற
மஞ்சகலர் வீட்ல
சாந்தி அக்கா விஷம் குடிச்சு
செத்துட்டாங்கனு
வினோத் மூலமா கேள்விப்பட்டதிலிருந்து
எடுக்கவே போனது இல்ல
காம்பவுன்ட்டுக்குள் விழுந்த பந்துகள.

முத்துவிஜயன் ஞாபகப்படுத்தினதுக்குப் பிறகு
அவுட்டானாலும் பரவாயில்லப்பானு
தீக்குளிச்ச தோழி
அன்புச்செல்வி வீட்டு
சந்துப்பக்கம் ஒளியவே மாட்டோம்
ராத்திரி விளையாடும்போது.

தண்டவாளத்துல வெச்ச காசு
தங்கமாகும்னு சொன்னாலும்
யாரும் போறதா இல்ல
பொட்டல் ஸ்டேஷன் பக்கம்
கோகிலாவ ரெண்டு துண்டா
பிரபு பார்த்ததுலயிருந்து.

மழைக்குறியோடு
பாதிக்கப்பட்டவங்களுக்கு
நீதி உண்டு
பழிவாங்குவேன் ஒருநாள்னு
அருள் வந்து ஆடும்
ஊர்க் குலசாமி
இன்னைக்கு வரைக்கும் மலையேறுவது
சுருட்டோடு வேண்டியதை
மட்டுமே வாங்கிக்கிட்டு.

-கார்த்தி

http://www.vikatan.com

19j

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

96p1.jpg

விழுந்து உடையும் ஊர்க்குளம் 

விடுமுறை நாளில் மல்லாந்து கிடக்கும் 
பளிங்குக் குளத்தின் மீதேறி 
ஈர நடனம் புரிகிறார்கள் 
குழந்தைகளும் பெரியவர்களும் 
மணிக்கு ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.
குளத்தில் நீலம் பாவித்துத் தளும்பும் வானத்தை 
குழந்தைகள் குடித்துச் செருமுகின்றன. 
தாமரைக் கொடிகள் இல்லை 
நீர்க்காகங்களின் முக்குளிப்பில்லை
கரை தொட்டு நிற்கும் மரங்களில்லை
மீன்களில்லை
மீனுண்ணிப் பறவைகளில்லை
குளம்போல் ஒரு குளம் மட்டும் இருக்கிறது. 
மழை ஒரு பொருட்டில்லை அதற்கு 
குழாய் வழி பெருகிவந்து குழாய் வழியாகவே 
வெளியேறிவிடுகிறது. 
ஊர்க்குளம் ஒன்று வானத்தின் கரிய 
மேகத்திற்குள் நின்றபடி மெல்லக் குமுறுகிறது. 
நீச்சல் அறியாத அலைகளில் விழுந்து  உடைகின்றன 
சொட்டுகள் சில.


- காடன்


உயிரோடிருக்கும் அறை 

அந்த அறையின் நாற்றத்தை
இனி நீங்கள் சுவாசிக்க வேண்டியதில்லை
 
அந்த அறையின் முனகல்களால்
இனி உங்கள் துயில் கலையப்போவதில்லை

அந்த அறையில் மேலும் பல கிரீஸ் டப்பாக்களை
இனி நீங்கள் அடுக்கி வைத்துக்கொள்ளலாம்

அந்த அறை புறக்கணிக்கப்பட்டது பற்றி
இனி உங்களை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை

ஒரே ஒரு கோரிக்கை

அந்த அறையை சுத்தப்படுத்திய அவளை
இனியேனும் உங்கள் அறைக்குள் அனுமதியுங்கள்

இன்னும் உயிரோடுதான் இருக்கிறது
அறைகளற்ற அவள் வீடு.


- சுபா செந்தில்குமார்


கடைசி அந்தி நிறத்திலான உடை

இறந்தவன் என்றோ பரிசளித்த ஆடையொன்றை 
அணிந்து செல்லும் நாளொன்றில் அவனது 
நினைவுகளால் நெய்யப்படுகிறோம்.
எல்லா வண்ணங்களின் மீதும் கருமை பூசி 
நமது அன்றையச் சூரியனை 
இருளச்செய்கிறான்.
பணிச்சுமைகளுக்கிடையே 
துருத்திக்கொண்டு நிற்கும் 
அவனது ஞாபகங்கள் 
நமது அன்றைய நாளை மேலும் இறுகச்செய்கிறது 
அல்லது தளர்த்திவிடுகிறது 
அவ்வாடையைக் களையும் 
நாளின் இறுதியில் 
அவனைச் சிதையிலிறக்கி 
திரும்பிய மழைக்கால 
அந்தியொன்றை மீட்டுத்தருகிறான்.
அன்றைய இரவில் 
நமது போர்வைக்குள் 
கதகதத்துக்கொண்டிருப்பது 
நாம் அவ்வப்போது ஸ்பரிசித்த அவனது 
உள்ளங்கைகளின்றி வேறென்ன?


- கே.ஸ்டாலின்
 

http://www.vikatan.com/

26j

  • தொடங்கியவர்

சொல்வனம்

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, செல்வம் பழனி

 

நிழற்படகு

சாளரங்களின் குறுக்குத் தடுப்புகளைக் கடந்து
அனுமதியற்று உள் நுழைந்த 
சூரிய ஒளி அலையில்
மிதக்கின்றது ஒரு தொட்டிலின் நிழல்.
மின்மினிக் கண்களை
மூடிக்கொண்டிருக்கும் மகவு
புடவைத் தொட்டிலினுள்
துடுப்புக் கால்களை அசைக்க
அலைகிறது நிழற்படகு.
அடுக்களை புகை மூட்டத்தில்
அலைகிற வளையல் கை
உப்பிற்கும் மிளகாய்க்கும்
ஓடுகின்ற வேளையில்
வீல்லென அழுகின்ற பிள்ளைக்கு
ஓடி வந்து “ப்பே...ப்பேபே...” யென
தாலாட்டுகிறாள்.
ஊமைத் தாயின் குரல் கேட்டு
முகம் மலர்ந்து சிரிக்கின்ற
அக் குழந்தையின் செவிக்குள்
“ஆராரோ ஆரிரரோ’’
என்றே கேட்கிறது.

- கோ

p80a.jpg


சாயல்

மிதமிஞ்சிய தனலில் தகிக்கும் வன்மம்
குதிரும் கணமொன்றிற்காக
நாவால் மீசையை நீவியபடியே
ஒரு கள்ளப்பூனையென காத்துக்கிடக்கிறது.
அதன் கொடும் பற்கள்
துரோகக் கற்களில் முன்பே கூர்தீட்டப்பட்டு
சிக்கும் இரையைக் கிழிக்க
தயார்நிலையில் இருக்கிறது.
இதழ்க்கடையில் மெல்லியதாய் விரியும்
போலிப் புன்னகையை
நீங்கள் நம்பிவிட்டதை நினைந்த பொழுதே

p80b.jpg

உவகையில் உடலைச் சற்றே
ஓசையின்றி சிலிர்த்துக்கொள்கிறது.
இயல்பாய் கவிழ்ந்த இருளை
அது தனக்குச் சாதகமாக்கியதன் பொருட்டு
வருத்தம்தான் இரவுக்கு.
ஆனால், அப்பூனையோ
எதன்பொருட்டும் கவலைகொள்ள நேரமின்றி
கருமமே கண்ணாயிருக்கிறது.
கனல் ஒளிரும் விழிகள்தான்
காட்டிக்கொடுக்கின்றன என
கைவசம் புகாரொன்றையும் வைத்திருக்கும்
அப்பூனையைக் கண்டு
நமக்கென்ன அச்சம்..?
ஒரு சாயலில் அது
என்னையோ உங்களையோ ஒத்திருக்கிறது எனும்போது!

- பாப்பனப்பட்டு வ.முருகன்


p80c.jpg

கீப் ரைட்

நெடுஞ்சாலை அகலப்படுத்த
வெட்டித் தீர்த்த மரங்களின்
மிச்சம் மீதி இருந்த வேர்கள்
அனிச்சையாய் இன்னும்
நீர் உறிஞ்சுகின்றன
மரத்தின் பசியாற்றும் தாய்மையொடு
புசிக்க மரமற்றது உணராமல்
ஊட்டாத முலைப்பாலாக
உறிஞ்சிய நீர் மண்ணில் கசிய
மண்ணுக்குள் ஈரம் அது
மனிதருக்கில்லா ஈரம்
நெகிழ்ந்து வழிவிட
நெடுஞ்சாலையில் கொதிக்கும் தார்
கொல் கருவியாய் இறங்கி
கருணைக் கொலை நடந்தேறியது
மண் மேல் நடந்த மரப் படுகொலைகள்
மரவேர் அறியாதே மடிந்தடங்கியது
அடங்கிய அச்சிறுவேர்கள்
நெடுஞ்சாலையின் இடது பாகத்தில்தான்
சாந்தி அடைந்து கொண்டிருக்கின்றன
ஆகவே நெடுஞ்சாலையில் வேகமாக பயணிப்பதென்றால்  
தயவு செய்து வலது பாகத்திலேயே பயணிக்கவும்.

- நாகராஜ சுப்ரமணி

http://www.vikatan.com

2a

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

 

50p1.jpg

காத்திருந்த கண்கள்

`வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்’
பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த
அம்மா, அப்பாவை ஆழமாய்
பார்க்கத்துவங்கினாள்
பேப்பர் படித்துக்கொண்டிருந்தவர்
பார்வையை விலக்கவேயில்லை
`மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்’
என்ற வரிகளில்
அம்மா கண்கலங்கினாளா
அல்லது வெங்காய விளைவா என
இனம் காணவே முடியவில்லை.
சடுதியில் பேப்பரை தூர எறிந்தவர்
`உன்னால முடில நான் நறுக்கறேன்’
என வாங்கி நறுக்க ஆரம்பித்தார்.
அம்மா இன்னமும் அவரையே
பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
கடந்த ஆறு வருடத்தில்
அப்பா அம்மாவிடம் பேசி
இன்றுதான் பார்த்தோம்.
`ஒருநாள் ஒருவரைக் கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்’
என்ற வரிகளை உதடுகளைக் குவித்து
சீட்டி அடித்தார் அப்பா.
கூடவே மெலிதாய் ஹம் செய்தாள் அம்மா.
அழ வைத்த அரைக்கிலோ வெங்காயம்
துண்டு துண்டாய் கிடக்கிறது.

- கோ.ஸ்ரீதரன்


விடுப்புக்கடிதம்

ஒரு மழை நடைக்கான
அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது.
உயிர்வெளியிலிருந்து
தனித்தலைதலின் 
இனிமையை எடுத்துக்கூறிக்
கொண்டிருக்கிறது
அழைப்பின் வசீகரம்.
யதார்த்த வாழ்க்கையின்
இரும்புக்குண்டுகளை
அவிழ்த்தெறியவே நினைக்கிறேன்
சில நாள்களுக்காகவாது
கடன் அட்டை வசூல் தேதிக்குள்
போய் வந்துவிட வேண்டும்
ஒரு மழைநடை.

-அனலோன்


ஒரு ப்ளூவேல் கனவு

என் பொற்காசுகளை உண்டியலில் போட்டுவிடச் சொன்னார்கள்
நான் அரசனாகிவிட்டதாகச் சொன்னார்கள்
ஒவ்வொரு விடியலிலும் நான்
இந்தத் தேசத்தின்
பிரஜைதானா என்பதை
உறுதி செய்யச் சொன்னார்கள்
என் கழுதைகளே மிரளும் வகையில்
ஆதார மணி ஒன்றை அணிவித்தார்கள்
பொதுவாகத் திமிங்கலங்கள் மூச்சு வாங்கக் கடலுக்கு மேலே வரும்
இந்தத் திமிங்கலத்தை நான்தான் கரைக்கு அழைத்து வந்தேன்
இது என் கடலையே இரையாய்க் கேட்கிறது
இந்தக் கனவு சீக்கிரம் கலைந்துவிட வேண்டும்
யாரேனும் விழிப்பின் அலாரங்களை உரக்க ஒலிக்க வையுங்களேன்.

- ரா.பிரசன்னா


மிச்சம்

முதலில் சில நெல்மணிகளை
எங்கள் கருப்பையில் பயிரிட
அனுமதி கேட்டீர்கள்.
அவை தோதாய் வளருங்கால்
அத்துணை வசதியும் ஈந்தீர்கள்.
பயிர் கருகினாலும்
பாழாகாமல் மேய்ந்துவிட
குதிரைகளையும் பரிசளித்தீர்கள்.
நீர் பாய்ச்ச தோண்டிக்
களைக்கும்போதெல்லாம்
குளிர்பானம் தந்து
இளைப்பாறச் சொன்னீர்கள்.
தாய்மையின் அடிவாரத்திலிருந்து
சூரிய வெளிச்சம்
தூயதாய்ப் பருகிய
பால்கதிரை
நக இடுக்கில் நசுக்கியபடி
நெல்மணிகள் வேண்டாமென
எங்கள் கருப்பையை
கடன் கேட்கிறீர்கள்.
யோசிக்கத் திராணியற்ற
எங்கள் கண்களில்
நீங்கள் நசுக்கிப் பார்த்த
பால்கதிரிலிருந்து
மெல்லப் பனிக்கிறது
நெல்லின் குருதி.


- ந.சிவநேசன்

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

96p1.jpg

பாப்பா அலை
கடற்கரையில் கால் நனைத்தபடி நின்றிருந்தோம்.
என் சிறுமகளின் பாதங்கள் இரண்டும்
இரு சொல் கவிதை.
அவை மண்ணில் புதைந்து விளையாடுவதை 
ரசித்துக்கொண்டிருந்தேன்.
முதலில் வருவது 
பெண்ணலை என்றேன்.
அடுத்து வருவது 
ஆணலை என்றேன்.
மூன்றாவதாக ஒரு சிற்றலை...
பாப்பா அலை... பாப்பா அலை...
என்று துள்ளிச் சிரித்தாள் பாப்பா.
குனிந்து பாப்பா அலையை
கைகளில் அள்ளினேன்.
முதன் முதலில் தாதி என் கைகளில் இட்டபோது
வழுவழுவென்று நெளிந்த
பாப்பாவைப்போலவே
என் கைகொள்ளாமல் வழிந்தது
பாப்பா அலை.
அதற்கு இனிமேல்தான்
நான் பெயர் வைக்க வேண்டும்.

- கார்த்திக் திலகன் 

நினைவு
ஆற்றிலே விட்டும்கூட
போக்கிலே போகும்வரை 
வட்டமடிக்கும்
குடுவை மீன்.

- கார்த்தி

திருடக் கூடாது குள்ளநரி
சாலையின் நடுவே
வானம் பார்த்தபடி சோற்று
பருக்கையின் காய்ந்த
தடயத்துடன் விழுந்து கிடக்கிறது
ஒரு டிபன் பாக்ஸ்.
மாலை நேர கூடடைதலில்
ஏதோ ஒரு டோராவின்
சாப்பாட்டுக் கூடையிலிருந்து
விழுந்திருப்பதை உறுதி செய்கிறது
உடனிருந்த உருளை சிப்ஸ்.
அது ஒரு பெண் குழந்தையினுடையது
என நம்ப வைக்கிறது
டிபன் பாக்ஸைக் கழுவி
வைத்திருக்கும் பாங்கு.
காணாமல்போன டிபன் பாக்ஸூக்கு 
டோரா தயங்கித் தயங்கி
அம்மாவிடம் கூறப்போகும் காரணத்தை
நேராய் காண ஆவல்.
விழுந்தது கிடக்கும் டிபன்பாக்ஸினை குனிந்து 
எடுக்கையில் காதில் விழுகிறது
குள்ள நரி திருடக் கூடாது
குள்ள நரி திருடவே கூடாது
என்னும் டோராவின் மந்திரக் குரல்
என் வேண்டுதல் எல்லாம்
காரணம் கேட்டு அடிக்காத
அம்மா அந்த டோராவுக்கு
வாய்திருக்க வேண்டும்.
கூடவே  வாஞ்சையாய்
ஒரு முத்தமும் உண்டெனில்
பரம சந்தோஷம்.

- யுவராஜா வைத்தியநாதன்

http://www.vikatan.com/

9a

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சொல்வனம்

24p1.jpg

மருதத் திணை அடையாளங்கள்
 
ண்பர் புதுமனையைச் சுற்றிக் காட்டினார்
இத்தாலி மார்பிள் கல்
அமெரிக்க முறை சமையலறை
ஜப்பானிய போன்சாய் குட்டி மரம்
சீன வாஸ்து மீன்
எல்லாம் காட்டிப் பெருமை சொல்லி
பிரெஞ்ச் கதவு திறந்து
கொரியன் புல் தரைக்குப் போனோம்
மூளையில் நின்றிருந்த சிறு மரத்தை
அவருக்கு அடையாளம் தெரியவில்லை
கொய்யாமரத் தோற்றத்திலிருக்கும்
புதிய மரம் என வெட்டாது விட்டாராம்.
அது மருதத் திணைப் பெயரிலே உள்ள
மருத மரம்
தமிழ் நிலப் பழமை மரம் என்றால்
இவ்வீட்டிற்குப் பொருந்தாது என வெட்டுவார்
தமிழ் மருத்துவம் கூறும்
இதயம் காக்கும் மருது என்றால்
தமிழ் மருத்துவத்தின் மேலான வெறுப்பை
இம்மரத்தின் மேலும் காட்டுவார்
அதை அச்சிறு மரத்தின் இதயம் தாங்காது
வயல் அழித்து உருவான வீட்டு மனையில்
மருதத் திணையின் அடையாளமாக
இந்த மருத மரமாவது நிற்கட்டும்
என
மரம் பற்றி ஏதும்
சொல்லாது வந்து விட்டேன்.

- நாகராஜ சுப்ரமணி


இது ஒரிஜினல்களின் காலம்

நானும் ஒரிஜினல்களைப் பத்திரப் படுத்தத்தான் முயல்கிறேன்

எரிமலைகளின் மீது ஈயம் பூசி வைத்திருக்கிறேன்

கனவுகளின் மீது கால்மிதியைப் போட்டு வைத்திருக்கிறேன்

பசியின் மீதெல்லாம் புன்னகைகளை விரித்து வைத்திருக்கிறேன்

துரோகங்களின் மீதெல்லாம் நம்பிக்கைகளைப் போர்த்தி வைத்திருக்கிறேன்

இதில் அசல் ஆவணம் ஒன்றை எங்கே போய் தேடுவேன்

வழியில் ட்ராஃபிக் போலீஸ் இல்லாமல் பார்த்துக்கொள் இறைவா

தவறும் பட்சத்தில்
உன்மீது பொய் வழக்குப் போடுவதைத்தவிர
எனக்கும் வேறு வழிகள் இல்லை.

-ரா.பிரசன்னா


கறியமுது

பிரியாணி தேக்ஸாவில்
கறித்துண்டுகளைத் தேடி
அளவு கரண்டியைப் பிடித்தபடி
உன் கைகள் ஆடும் நடனத்தை
நான் எப்படி மறப்பேன் பாய்?
கோடையின் வெப்பத்தில்
கொளுத்தும் பசியில்
உன் கைகளின் நடனம்
ருசிகரமான விருந்து.
கறியமுது படைத்த உன் கைகள்
இன்று நடனம் மறந்து
சில்லிட்டுக் கிடக்கின்றன.
நேற்றிரவு
நீ கடையைக் கட்டும்போது
கடைசி மேசையில் வந்து அமர்ந்த
எமனை நீ கவனித்துப் பரிமாறி இருந்தால்,
உன் அரைத்தட்டு பிரியாணியின்
சுவைக்கு அவன் அடிமையாகி கிடந்திருப்பானே பாய்.

-கார்த்திக் திலகன்

http://www.vikatan.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சொல்வனம்

 

இரவைத் தைத்தல்

இந்தத் தேநீரின்
முதல் மிடறில்
ஒட்டிக்
கரைந்தது கொஞ்சம் அந்தி.
ஒரு விமானம்
தாழப் பறக்கிறது
ட்யூசனுக்கு சைக்கிளில் செல்பவன்
அவ்வப்போது கைகளை காற்றில் விரித்து
பறக்கிறான்.
விபத்தில் மிஞ்சிய
கண்ணாடிச்சில்லில் மின்னுகிறது
முதல் விண்மீன்.
ஒற்றைச் செருப்பணிந்து
நிற்பவனின்
அறுந்த செருப்பைத் தைக்கிறவன்
ஊசியில் இரவு நுழைகிறது.
குறிப்பிட்ட
பிரசவநாளைத் தாண்டியவளைத்
தாங்கிய ஆட்டோ
திட்டுகளை வாங்கியபடி
அத்தனை மெதுவாய் நகர்கிறது.
ஒரு பள்ளத்தில்
ஒரு மேட்டில்
இறங்கி
மேலேறுகிறது
பிரபஞ்சம்.

- பிராங்ளின் குமார்

30p1.jpg

அறுந்த வலையின் அலைகள்

சூடேறும் மணற்பரப்பில் படர்ந்து கிடக்கும் பச்சைக்கொடியில்
அசையும் புழு
வெப்பமற்ற இடம் தேடுகிறது.
நெளி ஓவியமென நீர்ம விளையாட்டைத்  தொடங்குகிறது கானல்.
படகு நிழலில் மதுப்புட்டியைத் திறந்தவன்
இரு நெகிழிக் குவளைகளில் 
சமமாய்ப் பங்கிட
கடைசிச் சொட்டுத் தீர்ந்த போத்தலை
மீண்டும் மீண்டும் சாய்த்துப் பின் தூக்கியெறிகிறான்.
மணலில் பாதி புதைந்து வெளித் துருத்தித் தெரிகிறது அது.
அமாவாசைக்கென தர்ப்பணம் செய்த இடத்தில்
சிந்திய பிண்டத்தைக் கொத்தும் காக்கைகள்
பித்ருக்களுக்குள் மோதலை உண்டாக்கின.
கூட்டமாய் மேய்ந்த புறாக்களில்
வெள்ளைப் புறாவொன்று அறுந்த வலையில் சிக்கிப் போராடுகிறது.
அஞ்சிய புறாக்கள் பறந்தோடுகின்றன
கரை சேர்ந்த படகிலிருந்து இறங்கியோடுபவர்களின் பதற்றம்
கடற்கரையில் பெரும்கூட்டத்துக்கு வகை செய்கிறது.
அழுது புரள்பவர்களின் ஓசையை இழுத்துப்போகிறது அலை.

- யாழி கிரிதரன்


காருண்யத் தூரிகை

பாதையில் சரிந்து கிடந்த ஒருவரைக் கண்டதும்
உடுக்கை இழந்தவன் கைப்போல
அவன் உதவியபோது பூலோகம்
முழுவதும் அவன் இதயம் விரிந்து
கிடந்தது.
கடற்கரை சாலையில் காலுடைந்து நொண்டிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை
அள்ளியெடுத்து வந்தவனின் ஓயாத கருணையைப்போல்
அந்த அலைகள் ஒடிக்கொண்டிருக்கின்றன.
எப்போதோ நண்பர்கள் சந்தித்துக்கொண்ட
குழுப்புகைப்படத்தில் உள்ளங்கைப்பற்றிக் கபடமில்லா
புன்னகையெனப் படிந்திருப்பது அவன் இதயம்தான்
அன்பின் வாசங்களென அவன் நட்டுவைத்த
மலர்ச்செடிகள் அவன் துடிப்பெனத்தான்
அசைந்துகொண்டிருக்கின்றன.
பூக்கள் சொல்லாகப் பொழியும் ஒரு கவிதையில்
உயிரினங்கள்மீது காருண்யம் வேண்டி
அவன் இதயத்தைத்தான் அந்தத் தாளில் வரைந்திருந்தான்
நீங்கள்தான் அவன் மாரடைப்பில்
இறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

- நா.திங்களன்

 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.