Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா, தினகரனை ஒதுக்கி வைக்க அ.தி.மு.க., கூட்டத்தில் முடிவு

Featured Replies

அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

 

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத்

admk%20officejpg
admk%20ofc2jpg

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கூட்டம் |படம்: க.ஸ்ரீபரத்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் தினகரன் தரப்பினர் தணி அணியாக செயல்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூடிவரும் நிலையில் இருதரப்பும் மாறி மாறி அறிக்கை, பேட்டி என பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதே தினகரன் தரப்பினர் கோரிக்கையாக உள்ளது. அதிமுக அணியினர் சசிகலாவை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர் வைத்தியலிங்கம் அறிவித்தார்.

மறுநாள் வைத்தியலிங்கத்தை நீக்கினார் தினகரன். அடுத்தடுத்து மாவட்ட நிர்வாகிகளை மாற்றும் தினகரன் பலரை கட்சியை விட்டு நீக்கிவருகிறார்.

இந்நிலையில் இன்று எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் நடக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

அறிவித்தப்படி இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. முதலில் அதிமுக ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் வந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் வரத்துவங்கினர். அவர்களை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தார். கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குவார் என தெரிகிறது.

இந்த கூட்டத்தில் தினகரன் அறிவிப்புகள் குறித்தும், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டப்படும் இந்த கூட்டத்தின் முடிவை அடுத்தே தமிழகத்தின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு இருக்கும்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19574708.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

கட்சியிலிருந்து சசிகலாவுக்கு 'கல்தா'- ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் 4 முக்கிய முடிவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக-வில் சசிகலா தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

dinakaran
 

சசிகலாவை மற்றும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுக்குழு கூட்டி இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மற்றும் ஜெயா டிவி மீட்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நான்கு தீர்மானங்கள் :

1. சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.

2. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. மீடியாக்களை கட்சியே நடத்த வேண்டும்.

3. செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட வேண்டும்.

4. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம்.

http://www.vikatan.com/news/tamilnadu/100502-edappadi-palanisamy-government-decided-to-expel-sasikala-and-dinakaran.html

  • தொடங்கியவர்

தினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது; ஜெயா டிவி-யை கட்சியே நடத்தும்: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

 
admk234jpg

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஓபிஎஸ்., எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் | படம். க.ஸ்ரீபரத்

முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் சசிகலா, தினகரனை ஒதுக்குவது உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் முழு விபரம்:

அதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு சசிகலா குடும்பத்தை அதிமுக கட்சியிலிருந்து நீக்குவது என்ற முடிவில் அதிமுக அணியினர் தீவிரமாக உள்ளனர். இதற்கு தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினகரன் தரப்பில் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இது தவிர மூன்று ஆதரவு எம்.எல்.ஏக்கள் நிலைபாடு இன்னும் தெளிவாகவில்லை. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன் முழு விபரம் வருமாறு;

தீர்மானம்: 1

ஜெயலலிதாவால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைப்புடன் உருவாக்கப்பட்டு இயங்கிப்வரும் அதிமுகவின் நிர்வாக அமைப்பையும், நடவடிக்கைகளையும் மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து 10/8/2017 அன்று டிடிவி தினகரன் நீக்கப்பட்டார். அதுகுறித்த விரிவான விளக்கமும் அன்றே வெளியிடப்பட்டது. கழக சட்ட திட்ட விதி 30(5)ற்கு விரோதமாக டிடிவி துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாலும், டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக ஏற்க இயலாது என இந்திய தேர்தல் ஆணையம் 3/3/2017 அன்று நிராகரித்திருப்பதாலும் அவர் கட்சியின் எந்த நிர்வாக பொறுப்பிலும் ஏற்க இயலாது என்பதை அதிமுகவின் கட்சி நிர்வாகிகள் 10/8/2017 அன்று தெளிவாக அறிவித்திருந்தோம்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இடைக்கால ஏற்பாடா சசிகலா நியமிக்கப்பட்டதையே தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்காத நிலையில் அவரால் துணைப்பொதுச்செயலாளராக ஒருவர் நியமிக்கப்படுவதும் அப்படி நியமிக்கப்பட்டவர் கட்சிப்பணியில் ஈடுபடுவதும் முழுதும் கட்சி சட்டதிட்ட விதிகளுக்கு புறம்பானது.

எனவே அதிமுக நிர்வாகிகளாக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களையும், கட்சி அமைப்பு தேர்தல்களில் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்களையும் கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கவோ, புதிதாக யாரையும் நியமனம் செய்யவோ டிடிவி தினகரனுக்கு எவ்வித உரிமையோ தகுதியோ கிடையாது.

டிடிவி தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது, செல்லாது. ஜெயலலிதாவால் கட்சி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களும், கட்சி அமைப்புத்தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்.

இந்த முதல் தீர்மானத்தை அமைச்சர் ஜெயகுமார் முன்மொழிந்தார்.

தீர்மானம்:2

மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அயராத முயற்சியாலும், லட்சக்கணக்கான கட்சித்தொண்டர்களின் பங்களிப்பாலும் தொடங்கப்பட்டு உருவான ஜெயா டிவி , டாக்டர்.நமது எம்ஜிஆர் நாலேடும் கட்சியின் சொத்துகள். ஜெயலலிதாவின் புகழ்பாடும் அமைப்புகளாக டாக்டர்.நமது எம்ஜிஆர் நாளேடும், ஜெயா டிவியும் செயல்படுவதை உறுதிப்படுத்த அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென தீர்மானம்

இதை ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் முன் மொழிந்தார்.

தீர்மானம்:3

அதிமுகவின் நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட கோரிக்கை வைத்துள்ளனர். அதன் படி விரைவில் கட்சியின் செயற்குழுவையும், பொதுக்குழுயும் உடனடியாக கூட்டப்படும்.

இந்த தீர்மானத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் முன் மொழிந்தார்.

தீர்மானம்:4

பல நூற்றாண்டுகளுக்கு அதிமுக கட்சியும் ஆட்சியும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூளுரையேற்று தமிழக மக்களுக்கு தொண்டாற்றி தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுச்செல்வது.

எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை கொண்டாடும் இப்பொழுதும் இனிவரும் காலங்களிலும் கட்சியில் கட்டுக்கோப்பாக செயல்பட்டு கட்சியையும் அரசையும் காப்பாற்ற இயன்றதனைத்தையும் செய்வது.

இந்த தீர்மானத்தை பி.எச்.மனோஜ் பாண்டியன் முன் மொழிந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19575258.ece?homepage=true

  • தொடங்கியவர்

அதிமுகவில் உச்சகட்ட மோதல்: குழப்பத்தில் தொண்டர்கள்

 

 
admk5

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் மோதல் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் கட்சியும் ஆட்சியும் தப்புமா? தங்களுக்கு யார் நிர்வாகி என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். சாதாரண நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

அதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. 1972-ல் எம்ஜிஆர் அதை உருவாக்கிய போது அபிமானம் மிக்க தொண்டர்களாலும் , நிர்வாகிகளாலும் வழி நடத்தப்பட்டது. எம்ஜிஆர் என்ற சக்தி அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.

கட்சிக்குள் ஒரு வித சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தது. ஆனாலும் தலைமைக்கு நிகராக கருத்துக்களை கூறும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அதன் பின்னர் எம்ஜிஆர் நோய் வாய்ப்பட்ட போது அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்திருந்தது.

1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இது பகிரங்கமாக வெளிப்பட்டு மூன்றே ஆண்டுகளில் ஆட்சிக் கவிழ்ப்பில் போய் முடிந்தது. ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகள் பிரிய 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.

ஜெயலலிதா தலைமையின் கீழ் கட்சி மீண்டும் ஒன்றிணைய கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் ஜெயலலிதா கட்சியை தனக்குக் கீழ் கொண்டு வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் ஒரே குரல் ஜெயலலிதாவின் குரல் என்றாகிப் போனது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆளுமையின் கீழ் கட்சி வந்தது. மீண்டும் ஒற்றைத்தலைமையின் கீழ் கட்சி செல்கிறது என்கிற நிலையில் ஓபிஎஸ் நீக்கப்பட அவர் தனி அணியானார். அதிமுக 1988-க்குப் பிறகு மீண்டும் ஓபிஎஸ், எடப்பாடி அணி என இரண்டாக ஆனது.

இந்த முறை சசிகலா என்கிற ஒரே தலைமையின் வழிகாட்டுதல் படி எடப்பாடி முதல்வர் ஆனதால் ஆட்சி கவிழவில்லை. ஆனாலும் சசிகலா சிறைக்கு செல்ல பிரிந்திருந்த ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைய முயற்சிக்க தினகரன் விலக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத தினகரன் பின்னர் வேகம் காட்டத் துவங்கினார். திடீரென ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் மீண்டும் கட்சிப் பதவி,  துணை முதல்வர் என பதவிக்கு வர, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்குவோம் என்ற திடீர் அறிவிப்பால் அதிமுகவில் ஆரம்பமானது பூகம்பம்.

துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் ஏற்கெனவே பலரை நியமித்திருந்தார் தினகரன். தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அடுத்தடுத்த அதிரடியாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி, நடவடிக்கைகளில் இறங்க தற்போது மிகப்பெரும் குழப்பத்தில் அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அடுத்தடுத்த நடவடிக்கைகளால் முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை தினகரன் நீக்குவார், இனி தினகரன் கைகாட்டுபவர்தான் முதல்வர் என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் சசிகலா அங்கீகரிக்கப்படவில்லை அதனால் அவர் நியமித்த தினகரன் நியமனமும் செல்லாது என்கின்றனர் அதிமுக அணியினர்.

தினகரன் தரப்பில் கிட்டத்தட்ட 75 சதவிகித கட்சி நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர்கள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தினகரனே துணை பொதுச்செயலாளர் இல்லை எனும்போது நீக்கமும் நியமனமும் எப்படி செல்லும் என்று தீர்மானம் நிறைவேற்றி பழைய நிர்வாகிகளே நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர் அதிமுக அணியினர்.

இதனால் மிகவும் குழம்பிப்போய் நிற்பது தொண்டர்களே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆளுங்கட்சி என்பதால் பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் கட்சித்தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

ஆட்சி நிலைக்குமா? கலைக்கப்படுமா? என்பது பற்றி குழப்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதை அவர்கள் தினம் தினம் ஒவ்வொரு அணியாக மாறுவதை வைத்து புரிந்துக்கொள்ள முடிகிறது என்கிறார் அரசியல் ஆர்வலர் ஒருவர்.

முதல் நாள் காலை தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேசும் ஏ.கே.போஸ் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையில் மரியாதைக்காக சந்தித்தேன் என்று பேட்டி அளிக்கின்றார். இவையெல்லாம் அவர்கள் மத்தியில் உள்ள குழப்பத்தையே காட்டுகிறது என்றார்.

இது போன்ற குழப்பத்திற்கு என்னதான் காரணம் என்று அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, சசிகலா இருக்கும் வரை அவரை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது இந்த அணியினர் தான்.

இப்போது தினகரன் பத்தாண்டுக்கு முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுபவர்கள் அன்று தினகரன் தலைமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்களே.

இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார். மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.

மறுபுறம் ஒருவரை நீக்கும் போது நீக்கம் செல்லாது என்பவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவதேன், கொடும்பாவி கொளுத்துவதேன். நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தன்னை நீக்கியவுடன் முதல்வரை நீக்க முடியுமா என்று கேட்க முதல்வரின் மாவட்டச்செயலாளர் பதவியையும் தினகரன் பிடுங்கினார்.

அப்படியானால் இவர்கள் தினகரனை இன்னும் துணை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிகொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார்.

மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.

இது போன்ற குழப்பங்கள் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமாரிடம் கேள்வி எழுப்பினோம்.

சசிகலா நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது , அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடுகிறீர்கள் , அதே நேரம் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை தினகரன் நீக்கினால் போராட்டம், ஆர்ப்பாட்டம், தினகரன் கொடும்பாவியை எரிக்கிறீர்களே ஏன்?

அதை நிர்வாகிகள் செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆங்காங்கே உள்ள தொண்டர்கள், அவருடைய செயலை கண்டிப்பதற்கு உரிமை இருக்கிறது, போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு கட்சி வழிகாட்டுதல் காரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனக்கு ஒரு பாதிப்பு என்றால் என்னைச் சேர்ந்தவர்கள் கோபத்தினால் எதிர்ப்பை வெளிக்காட்டலாம் அல்லவா?

அப்படியானால் தொண்டர்கள் தினகரனை தங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளராகத்தான் இன்றும் பார்க்கிறார்கள் என்று கருதலாமா?

நீங்கள் கேட்பது அதிசயமாக உள்ளது. அவர் மன நோயாளி போல் எதையாவது செய்தால் யாராவது தடுத்தாலோ குறை சொன்னாலோ யார் பொறுப்பாக முடியும். அதற்கு தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இன்று கட்சி உள்ள நிலையில் இன்று அவர் தேவையில்லாத குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்பதற்காக தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

அப்படியானால் தினகரன் குழப்பத்தை ஏற்படுத்துவதால் தான் தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம். அதற்குத்தான் எதிர்ப்பு. அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அவர் அதற்கு பிறகும் அதிமுகவுக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்று நடந்து கொள்கிறார்.

அவர் எந்த அமைப்புக்கும் கட்டுப்படுவதில்லை, அவராகவே எதாவது பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து அதனால் பாதிக்கப்படுவதாக நினைக்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார் ஆவடி குமார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19576195.ece?homepage=true

  • தொடங்கியவர்
ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.,முயற்சி :
முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
 
 
 

''துஷ்ட சக்திகளுடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., முயற்சிக்கிறது; அதை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

 

ஆட்சி,கவிழ்க்க,முயற்சி,தி.மு.க.,முதல்வர்,குற்றச்சாட்டு


அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது.
 

எக்கு கோட்டை


கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''அ.தி.மு.க.,வை எக்கு கோட்டையாக, ஜெ., உருவாக்கி வைத்திருந்தார். அதை வீழ்த்த, பலரும் முயற்சிக்கின்றனர்.

''நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அதை முறியடிக்க வேண்டும், ஜெ., வழியில், அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.


முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''துஷ்ட சக்திகளுடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க, தி.மு.க., முயற்சிக்கிறது; அதை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். ''மீண்டும் கட்சியை, குடும்ப கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர்; அதை, நாம்அனுமதிக்கக் கூடாது,'' என்றார்.
முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பேசும்போது, 'மீண்டும் குடும்ப ஆதிக்கத்துக்குள், கட்சி செல்ல அனுமதிக்கக் கூடாது. 'குடும்ப அரசியல் வரக்கூடாது என்பதில், எம்.ஜி.ஆரும்., ஜெ.,வும் உறுதியாக இருந்தனர். அதே வழியில், நாமும் செயல்படுவோம்' என்றனர்.
 

முன்மொழிந்தனர்



அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், எம்.பி., மைத்ரேயன், முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர், தீர்மானங்களை முன்மொழிந்தனர்.சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக, கூட்டத்தில் யாரும் பேசவில்லை. கட்சி பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டிய பின், முக்கிய முடிவுகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

30 எம்.எல்.ஏ.,க்கள், 'ஆப்சென்ட்!'



அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 135 பேர் உள்ளனர். அதில், ஒருவர் சபாநாயகர்; மூன்று எம்.எல்.ஏ.,க்கள்,

 

அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சியினர். தினகரன் அணியில், 22 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மீதம், 109 எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 80க்கும் குறைவான, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, கூட்டத்திற்கு வந்திருந்தனர். எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
எஸ்.சி., - எஸ்.டி., எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் பேர் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, அமைச்சர்கள் கூறுகையில்,'பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள் வந்து விட்டனர்' என்று மட்டும் பதில் அளித்தனர்; எண்ணிக்கையை தெரிவிக்க மறுத்து விட்டனர்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1843424

  • தொடங்கியவர்

அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்

 

 
admkofficejpg

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். தற்போதைய சூழலில் முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் ஆதரவாளர்கள் 21 பேர் தவிர, 113 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தவிர 110 எம்எல்ஏக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 75 மட்டுமே நேற்று கூட்டத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘எம்எல்ஏக்கள் சிலருக்கு தகவல் சரியாக செல்லவில்லை. அவர்கள் தற்போது வராததற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்’’ என்றனர்.

 

காத்திருந்த ஓபிஎஸ்

கூட்டம் 9.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் 9.15 முதல் 9.25-க்குள் வந்துவிட்டனர். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் கே.பழனிசாமி 10.03 மணிக்குதான் வந்தார். அதன் பின்னரே கூட்டம் நடந்தது. பழனிசாமிக்காக சுமார் 45 நிமிடம் ஓபிஎஸ் காத்திருந்தார்.

 

சசிகலாவை நீக்க எதிர்ப்பு

நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, சில அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தீர்மானங்களை கொண்டுவரும்போது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாகத்தான் இருந்தனர் ’’ என்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் கூறும்போது, ‘‘சசிகலாவை நீக்குவது பற்றி எந்தத் தீர்மானமும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் நானே எதிர்த்திருப்பேன். அப்படி ஒரு தீர்மானம் வராது. அதுபற்றி அறிவித்திருந்தால் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருப்பேன்’’ என்றார்.

 

அமைச்சர்கள் டெல்லி பயணம்

அணிகள் பிரிந்திருந்தபோது, சசிகலா நியமனம் குறித்தும், கட்சியில் யாருக்கு பலம் அதிகம் என்பதை நிரூபிக்கவும் இரு தரப்பிலும் தலா 3 லட்சத்துக்கும் அதிகமான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது அணிகள் இணைந்துள்ள நிலையில், இந்தப் பிரமாணப் பத்திரங்களை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளனர்.

அத்துடன் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்து, ஒப்புதல் பெறவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக மைத்ரேயன் எம்பி., தலைமையில் முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து இன்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19577983.ece?homepage=true

 

 

இதென்ன விளையாட்டா.. மாதாமாதம் முதலமைச்சரை மாற்ற முடியுமா? - அதிமுக எம்எல்ஏக்களின் மாறுபட்ட கருத்துகளால் தொண்டர்கள் குழப்பம்

 

 
admkmlas

தமிழகத்தில் அதிமுக அரசியலில் நாளொரு பரபரப்பு, பொழுதொரு அறிவிப்புமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்னையில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் 112 எம்எல்ஏக்கள் ஆஜரானதாக ஆளும் தரப்பு தெரிவித்தாலும், 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆதரவு அணியிலேயே ‘அரைமனது’ அணி ஒன்று உருவாகியுள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத எம்எல்ஏக்கள் சிலரின் மனநிலையை ‘தி இந்து’ நிருபர்கள் குழு அறிய முயன்றது.

சத்யா (திநகர் எம்எல்ஏ): நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என, காரணங்கள் கூறி இருவர் முதல்வரிடம் அனுமதி பெற்றிருந்தனர். 98 சதவீதம் எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறாம். தற்போது அங்கு உள்ள எம்எல்ஏக்கள் எத்தனை நாட்கள் இப்படி இருக்க முடியும். அவர்கள் தொகுதிக்கு செல்ல வேண்டுமே. எனவே அவர்கள் அனைவரும் கட்டாயம் வருவார்கள். ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர் எம்எல்ஏ): எங்கள் அணியைச் சேர்ந்த 21 பேருக்கும் அழைப்பு அனுப்பாமல் கூட்டத்தை நடத்தி 4 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். பாஜக உதவியுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்பார்களாம். எங்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதாக மிரட்டுகிறார்கள். முதலில் பழனிசாமி, ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி, வீரமணி வீடுகளில் நடத்திவிட்டு, எங்கள் வீடுகளில் ரெய்டு நடத்த வரட்டும்.

எங்கள் அணியினரையும் திமுகவில் 25 பேரையும் நீக்கிவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க பழனிச்சாமி திட்டம் போடுகிறார். இவர்களைப் பார்த்துதான் மக்கள் ஓட்டுப் போடுவார்களா? தனபாலைப் பார்த்தால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்களா என்ன?

சு.ரவி (அரக்கோணம் எம்எல்ஏ): மக்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் தினகரன் அணியினர் செயல்படுகின்றனர். கட்சித் தலைமைக்கு வருபவர்கள் ஊழல் புகார் இல்லாமல் இருக்க வேண்டும். தூய்மையான தலைமையை இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக தலைமைக்கு வரும்போது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஊழல் புகார் இல்லாமல் இருந்தனர். அதேபோல், இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு இருக்கிறது. சசிகலா குற்றவாளி என்று சிறையில் இருக்கிறார். இவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தோப்பு என்.டி. வெங்கடாசலம் (பெருந்துறை எம்எல்ஏ):இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். இந்த கூட்டத்திற்கு வராத அதிருப்தி எம்எல்ஏக்களுடன் (தினகரன் ஆதரவு ) பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டால், அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

வி.சி.ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம் எம்எல்ஏ): முதல்வரையும், அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என தினகரன் தரப்பினர் கேட்கின்றனர்.

இது என்ன விளையாட்டா? மாதந்தோறும் முதல்வரையும், நிர்வாகிகளையும் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர் உட்பட நாங்கள் அனைவரும் கட்சிக்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, உழைத்து பதவிக்கு வந்துள்ளோம். அந்த கும்பல் அவர்களையும் புறந்தள்ளாது என்பது என்ன நிச்சயம்? தியாகத்துக்கும், துரோகத்துக்கும் போட்டி என்கிறார்கள். அவர்கள் என்ன தியாகம் செய்துவிட்டனர். கட்சி வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளனர்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய இந்த அரசை அகற்றுவதுதான் தியாகமா? அதிகாரம், ஆணவத்துடன் அவர்கள் செயல்படுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளோம். எந்த சூழ்நிலையையும் சந்திப்போம்.

கனகராஜ் (சூலூர் எம்எல்ஏ): கட்சியில் இருந்து இவர்களை நீக்கிவிட்டதாக அவர்களும், அவர்களை நீக்கிவிட்டதாக இவர்களும் கூறுகின்றனர். கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. யாரை நீக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புரியவில்லை. தற்போதுள்ள நிலைமையில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

கரைப்புதூர் நடராஜன் (பல்லடம் எம்எல்ஏ): உறவினர் இல்லத் திருமணத்துக்குச் சென்றதால் சென்னையில் நடைபெற்ற கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை.

பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ): தங்களின் சுய தேவைகளுக்காக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர். எனக்கும் சில எம்எல்ஏக்களுக்கும் இந்தக் கூட்டம் குறித்து தகவலே சொல்லப்படவில்லை. 32-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

முருகன் (அரூர் எம்எல்ஏ): இந்த கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை. மக்களையும், நடுநிலையாளர்களையும் குழப்பும் வேலை இது. எங்கிருந்தோ வரும் உத்தரவுக்காக செயல்படுகின்றனர். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சுயநலத்துக்காக கட்சியை அழிவு நோக்கி அழைத்துச் செல்லும் செயல் இது.

ஏ.கே. போஸ் (திருப்பரங்குன்றம் எம்எல்ஏ): நான் அடிக்கடி நிறம் மாறுவதாக நினைக்க வேண்டாம். தற்போது முதலமைசச்சர் பழனிசாமிக்கு என்னுடைய ஆதரவு. கட்சி என்று வந்துவிட்டால் சசிகலாவுக்குதான் என் ஆதரவு. சசிகலாவை நீக்குவதாக தெரிவித்துள்ளனர். நீக்கும்போது, என் கருத்தை தெரிவிப்பேன்.

பரமசிவம் (வேடசந்தூர் எம்எல்ஏ) : கூட்டத்தில் நான் பங்கேற்றேன். அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவுகள் எடுத்துள்ளனர். ஒரு வாரத்துக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என தெரிகிறது. பெரும்பான்மையான ஆட்சியாகவே அதிமுக ஆட்சி தொடரும்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19578097.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.