Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் போராளிகளை இழிவுபடுத்தி யாழில் நூல்! (விகடனுக்கு திறந்த மடல்)

Featured Replies

vikatan2.jpg?w=620

முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார். குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அன்று தமிழ்லீடர் ஆசியர் பீடம் எழுதியிருந்த திறந்த மடலினை வாசகர்களுக்காக மீளவும் பிரசுரிக்கிறோம்..

முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!

2012 நவம்பர்.

தாய்த்தமிழகத்தில் இருந்து வெளிவரும் விகடனுக்கு அன்புகலந்த வணக்கம்!

நொந்து போய் மீளமுடியாத அவலத்துள் வாழும் ஈழத்தமிழ் மக்களின் மனங்களுடன் உங்களை வணங்குகிறோம். இனவிடுதலைப் போர் தொடர்பிலான நியாயங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் சென்ற தமிழக ஊடகங்களில் பிரதான பங்கைப் பெறத்தக்க வகையில் செயற்பட்ட உங்களது சஞ்சிகையில் அண்மையில் வெளிவந்த ஆக்கம் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

உங்கள் தனித்துவத்துடன், புதிய, புதுமையான விடயங்களை சுவாரஸ்யமாக வெளியிட்டு வரும் நீங்கள் தமிழகத்தின் ஏனைய சஞ்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறீர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தேசியவிடுதலைப் போருக்காக நாற்பதாயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அது போன்ற இரண்டு மடங்கிற்கும் அதிகமான போராளிகள் தங்கள் அங்கங்களை பறிகொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மேலாக பல இலட்சம் மக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எமது இன விடுதலைப் போராட்டம் கடக்க முடியாத நெருப்பாறுகளைக் கடந்தே பயணித்தது. இத்தனை ஆயிரம் இழப்புக்களும் தமிழீழம் என்ற நோக்கம் ஒன்றை இலக்காகக் கொண்டே அமைந்திருந்தன. சில வார்த்தைகளுக்குள் சில பக்கங்களுக்குள் எழுதி முடித்துவிடும் அளவிற்கு சின்னத்தனமானதல்ல எமது விடுதலைப் போராட்டம் என்பதை எமது மாவீரர்களும் கரும்புலிகளும் நிகழ்த்திச் சென்ற வரலாற்றுப்பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் புரியும்.

இத்தனை ஆயிரம் இழப்புக்களின் பின்னாலும் எமது போராட்டம் நசுக்கி அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தாய்த்தமிழகத்திலும் புலத்திலும் இன்னமும் சுடர்விடும் எமக்கான ஆதரவுத்தளம் எம் மக்களை ஆறுதலடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் தேசிய விடுதலைப்போரில் பங்கெடுத்த முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரியாக தொழில்புரிவதாகத் தெரிவித்து அருளினியன் என்பவர் எழுதியிருக்கின்ற ஆக்கம் முழுமையான உள்நோக்கம் கொண்டது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக குறித்த பேட்டி கற்பனை மூலம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. தங்கள் சஞ்சிகையின் மாணவ நிருபராகப் பணி புரிகின்ற குறித்த நபர் யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்தவர் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது தந்தையார் தற்போது வரையில் தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் மிக நெருக்கத்துக்குரியவர் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்து கலாசார, பண்பாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது உங்கள் மாணவப் பத்திரிகையாளரின் தந்தையார் மகாலிங்கம் அமைச்சரின் மிகுந்த விசுவாசத்துக்குரிய ஒரு நபராக பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். இலகுவில் எவராலும் நெருங்க முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அருகமர்ந்து பணி செய்யும் பாக்கியம் பெற்ற சிவமகாராஜாவின் அன்புக்குரிய புத்திரனே முன்னாள் பெண் போராளியையும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் புனைதலை மேற்கொண்டிருக்கின்றார்.

இதனைவிடவும் அருளினியன் பதிவுகள் என்கிற அவரது தனிப்பட்ட இணையப்பதிப்பினைப் பார்வையிட்டால் அவரது தேசிய விடுதலையைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கின்ற பதிவுகளைப் பார்வையிட முடியும். அவரது தந்தையாரின் விசுவாத்துக்குரிய அமைச்சருக்கு விசுவாசம் காட்டுவதற்காகவே அருளினியன் தனது புனைதலை முன்னாள் போராளி என்ற விடயத்தின் மூலம் முன்வைத்திக்கின்றார். இந்த விடயம் மட்டுமே குறித்த பேட்டியின் உண்மைத் தன்மை தொடர்பில் தோலுரித்துக் காட்டியிருக்கும் என்று நம்புகிறோம். ஆனாலும் குறித்த பதிவு தொடர்பிலான சில தெளிவுறுத்தல்களை மேற்கொள்வதற்கு நாங்கள் முற்படுகிறோம்.

முற்றிலும் புனையப்பட்ட படைப்பு என்பதற்கான பெருமளவான ஆதாரப்படுத்தல்களை முன்வைக்க முடியும். அவற்றில் சிலவற்றை தங்கள் பார்வைக்காக முன்வைக்கின்றோம்.. விகடனின் தனித்துவங்களில் ஒன்று செவ்வி வழங்குபவர்கள் சொல்லும் வார்த்தைகளை அட்சரம் பிசகாமல் அவ்வாறே ஒப்புவிப்பது. ஆனால் முன்னாள் பெண் போராளி என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ள செவ்வியில் அதற்கு முற்றுமுழுதாக மாறுதலையே காண முடிகின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களோ அல்லது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த மக்களோ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை சாதாரண உரையாடல்களின் போது கூட “பிரபாகரன்” என்று குறிப்பிடமாட்டார்கள் என்பது முக்கியமான விடயமாகும். அண்ணை அல்லது தலைவர் என்பதுதான் அவர்களின் அடைமொழியாக இருக்கும். குறிப்பாக போராளிகள் அனைவரும் “அண்ணை” என்றே தலைவர் அவர்களை அழைப்பார்கள். ஆனால் பேட்டியில் பிரபாகரன் என்று அழுத்தம் திருத்தமாக பல இடங்களில் அவரது பெயர் விழிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் பொறுப்புக்கள் நியமிக்கப்படுகின்ற போது கடந்தகாலங்களில் போராளிகள் செயற்பட்ட விதம், அவர்களின் திறைமை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டே பதவி நிலைகள் வழங்கப்பட்டுவந்திருக்கின்றன. இந் நிலையில சாதாரண பொறுப்புக்களில் உள்ளவர்களுக்கே பல்வேறு பயிற்சிகள், தலைமைப் பண்புகளை அதிகரிப்பதற்கான வகுப்புக்கள் இன்னும் பெருமளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறான நிலையில் குறித்த பெண் ஒரு முன்னணித் தளபதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு முன்னணித் தளபதியாக இருந்திருந்தால் அவர் மிகத்திறமை வாய்ந்த ஒருவராகவே இருந்திருப்பார். பேட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குச் சென்றிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

சாதாரண கச்சான் விற்பனையில் இருந்து வீதித் திருத்த வேலைகளில் கூட யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். வட்டுக்கோட்டையில் இருந்து பல கிலோமீற்றர் தூரம் பயணித்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் சோர்ந்து படுக்கவேண்டிய தேவை அந்தப் போராளிக்கு ஏற்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை. அதனைவிடவும் முன்னாள் போராளி என்பதால் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற சாரப்படவும் கருத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், விற்பனை நிலையங்கள் உட்பட்ட பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் போராளிகளை மக்கள் எவரும் தீண்டத் தகாத பொருட்களாகப் பார்க்கவில்லை. பிச்சை போடுவதற்கு கூட யாழ்ப்பாண மக்கள் பயந்ததாக அவரின் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் அவ்வாறான ஒரு இழி நிலைக்கு இன்னும் போகவில்லை. பல போராளிகள் பிறந்த அந்த மண்ணில், அம்மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிக்கு பிச்சை போடுவதற்கு தயங்கும் நிலையும் அங்கில்லை.

இதேவேளை குறித்த பேட்டியின் ஊடாக அரசியல் பழிவாங்கலுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பேட்டியில் , தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளையும் இலக்குவைத்து அவர்களை சாடி எழுதப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும், முதலாவதாக தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்பவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கூட குறித்த பதிவு எழுதப்பட்டிருக்கவில்லை. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகள் செயற்பட்டுவருகின்றன. அவை இரண்டும் முடிந்த வரையில் உதவி தேடிச் செல்லும் ஏதிலிகளுக்கு உதவி வருவதாகவே நாம் அறிகிறோம். தம்மிடம் இல்லாவிடினும் புலத்தில் உள்ளவர்களின் துணையுடன் முடிந்தவரையில் உதவிகள் வழங்கப்பட்டே வந்திருக்கின்றன. அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டினை முன்வைக்கும் அவர் யாரிடம் உதவிக்குப் போய் மனம் உடைந்தார் என்பதற்கான ஆதாரம் விகடனிடம் இருக்கிறதா?

அதேவேளை, “அதனால் தான் இன்றும் இனி ஒரு ஈழப்போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்” என்றெல்லாம் சும்மா எழுதிக்கொழுத்திப் போடுகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேபேட்டியில் எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து “எப்போது உங்கள் அடுத்த போராட்டம்” என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அடுத்தவேளை உணவுக்காக பாலியல் தொழில் செய்யும் ஒரு நபர் தமிழகத்தில் என்ன எழுதுகிறார்கள்? எவ்வாறு எழுதுகிறார்கள் என்று ஆய்வு செய்து அறிந்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருக்கிறதா? அல்லது அவரிடம் செல்பவர்கள் விளக்கம் சொல்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு செவ்வி கண்ட நபர் பதில் தருவாரா?

இன்னொரு முக்கியமான விடயத்தினை நோக்க முடியும்.. வவுனியாவில் வைத்து தானும் தனது குழந்தைகளும் பிரிக்கப்பட்டதாக குறிப்பிடும் அவர், அந்தக் குழந்தைகள் எங்கிருந்தன. அவர்களை யார் பராமரித்தது? எப்போது மீண்டும் தன்னுடன் சேர்ந்தார்கள் என்ற விடயத்தினை எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை. குழந்தைகள் மீது அதீத பாசத்தின் விளைவாகவே அவர் பாலியல் தொழிலுக்குச் சென்றதாக சொல்லப்பட்டிருக்கின்றது. தாய் தனது பிள்ளைகளை பிரிந்த நாட்களை மறந்திருப்பாரா? அந்த விடயத்தினைக் கூறாமல் மறந்து போகும் நிலையில் ஒரு தாயுள்ளம் இருக்குமா?

இதனை விடவும் சிறிது காலத்தின் பின்னர் இராணுவத்தினர் அவர்களாகவே விடுவித்ததாகவும் முல்லைத்தீவில் ஒரு காட்டுப் பகுதியில் விடப்பட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். இராணுவத்திடம் சரணடைந்த தளபதி நிலையில் இருந்த விடுதலைப்புலிப் புலிகள் எவரும் இன்றுவரையில் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் சோதியா படையணியின் முன்னணித் தலைவி எவ்வாறு விடுதலையானார்? அதனைவிடவும் முன்னாள் போராளிகளை இராணுவம் கொண்டு சென்று காடுகளில் மீள்குடியேற்றம் செய்வதில்லை. அவர்களை குடும்பத்தவர்கள் பொறுப்பேற்றால் மாத்திரமே, இராணுவத்தினரால் கையளிக்கப்படுவர். விடுதலை செய்யப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் ஐ.ஓ.எம் நிறுவனம் தலா ஒரு இலட்சத்தினை அண்மித்த தொகை நிதி உதவி வழங்கி வருகின்றது. அதுவும் சுயதொழில் முயற்சிக்காக மட்டுமே அந்த உதவி வழங்கப்படுகின்றது. அதன் மூலம் வீதியோர வியாபாரம் கூட அந்தப் போராளியினால் செய்திருக்க முடியும்.

முல்லைத்தீவில் காட்டில் விட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரு தளபதிக்கு வன்னியில் எந்த இடத்தில் விடப்பட்டோம் என்பதைக் கூட அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லையா? அல்லது முன்னாள் போராளியை வைத்துக் கதை எழுதிய நபருக்கு முல்லைத்தீவில் இருக்கும் இடங்கள் தெரியாதா? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

குறித்த செவ்வியில் மிக மோசமாக இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுடன், குறித்த விடயம் சொல்லப்படும் பாங்கு எழுதியவரின் எண்ண ஓட்டத்தினை பிரதிபலிக்கின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்கள் மிக மோசமான எதிர்விளைவை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ஆனந்தவிகடன் பேட்டி காணும் அளவிற்கு இலங்கை இராணுவம் அதி முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக எண்ணுகிறீர்களா? அல்லது இராணுவப் புலனாய்வு மிகவும் நலிவடைந்து காணப்படுவதாக நினைக்கிறீர்களா?

அனைத்தையும் கடந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த குறித்த எழுத்தாளர், ஒரு பெண் குறிப்பாக அவரது பார்வையில் மிகச் சிறந்த வீராங்கனையாகக் கருதப்படுகின்றவர் இவ்வாறான நிலையில் இருப்பதை பார்த்து எழுதி விளம்பரம் தேட முற்படுவாரா? அல்லது அவரின் அடுத்த கட்ட வாழ்வியலுக்காக என்ன செய்ய முற்பட்டார்? என்பதைத் தெரியப்படுத்த முடியுமா? தமிழர் தாயகத்தில் பிறந்த உணர்வுள்ள ஒருவன் இவ்வாறான நிலையில் இருக்கின்ற ஒரு பெண்ணை தொடர்ந்தும் இவ்வாறான இழிவான தொழில் செய்வதற்கு அனுமதிக்கமாட்டான். யாழ்ப்பாணத்தில் இன்னமும் பெருமளவு சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் அந்தக் குழந்தைகளை சேர்ப்பித்திருக்க முடியும். குறித்த பெண் போராளியின் பரிதாப நிலையினை யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஏதாவது ஒரு கத்தோலிக்க மத நிர்வாகத்தினர்களிடம் தெரிவித்திருந்தால் அவர்கள் கட்டாயம் அவருக்கான மாற்றீட்டு ஏற்பாடு ஏதாவது செய்திருப்பார்கள். இதனை வேண்டுமானால் நாங்கள் பகிரங்க சவாலாக விகடனிடம் முன்வைக்கின்றோம் முடிந்தால் குறித்த பெண் தொடர்பிலான சரியான தகவல்களை, அனுப்பிவக்க முடியுமா?

ஆக, இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குறித்த பேட்டியினுள்ளே புதைந்திருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேட்டி முழுமையிலும் முரண்பாடுகளைக் கொண்டே புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை தான் இந்த முன்னாள் போராளி தொடர்பிலான பேட்டி என்பதை விகடன் நிர்வாகிகளுக்குச் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

மதிப்புக்குரிய விகடன் நிர்வாகத்தினரே!

எங்களுக்காக எழுதும் உங்கள் பணிகளுக்காக எங்கள் தலைகளைச் சாய்த்துக் கொள்கிறோம். அரசியல் பழிவாங்கல்களுக்காக மிகப் பெரிய ஊடக நிறுவனம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது. ஆனாலும் விகடன் நிர்வாகம் மீதான விமர்சனமே அதிகளவில் வெளிவந்திருக்கின்றது. உண்மையில் குறித்த கட்டுரையின் பின்னணி என்ன? என்பதை வெளிப்படுத்துவதும் எதிர்காலத்திலாவது உரிய பதிவுகளை ஆதாரங்களுடன் விகடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதுமே எங்களின் எதிர்பார்ப்பாகும். எனவே எமது இனத்தின் வலி உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைகொள்கின்றோம்..

நன்றி.
தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்.

 

aruliyan.jpg?w=720

http://tamilleader.org/?p=3884

  • கருத்துக்கள உறவுகள்

 இப்ப எல்லாம் நூல் நூலாத்தான் விடுறாங்கள்  என்னத்த செய்வது ஆயிரம்  வேலைகள் இருப்பவன் இந்த நுலெல்லாம் படிக்க மாட்டான்  விட்ட நூலை பிடித்து வைத்திருக்க வேண்டியதுதான் 

  • தொடங்கியவர்

 

அந்தக் கட்டுரையின் பின்னால் நிறைய அரசியல் உண்டு!

20900998_339795209788713_123415213468684

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பங்கெடுத்த பெண் போராளிகளை மிக மோசமாகச் சித்தரித்து கட்டுரைகளினை எழுதிய சிவ மகாலிங்கம் அருளினியன் எனும் நபருக்கெதிராக மீண்டும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆனந்தவிகடன் நாளிதழில் “நேற்று நான் விடுதலைப்போராளி இன்று பாலியல் தொழிலாளி“ என்ற தலைப்பில் ஒரு பெண்புலியின் வாக்குமூலமென அவர் குறித்த கட்டுரையினை ஜந்து வருடங்களிற்கு முன்னதாக எழுதியிருந்தார்.இக்கட்டுரை தொடர்பில் வடகிழக்கிலிருந்து பலத்த எதிர்வினைகள் ஆற்றப்பட்டிருந்ததுடன் பல கண்டனங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் பீடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விகடனின் மாணவ பத்திரிகையாளரான சிவ மகாலிங்கம் அருளினியன் இந்நிறுவனத்தினிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். விகடன் நிறுவனம் மன்னிப்புக் கோரலின்றி ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கேரள டயரீஸ் எனும் புதிய நூலுடன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியிருக்கும் இந்நபர் தனது புதிய நூலை எதிர்வரும் 3ம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சபாலிங்கம் மண்டபத்தினில் வைத்து வெளியிடவுள்ளார்.

இந்நிலையினில் பெண்போராளிகளை கொச்சைப்படுத்தியதற்கு யாழினில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.அத்துடன் விடுதலைப்போராட்டத்தில் மிகப்பெரிய பங்கினையாற்றிய இந்துகல்லூரி பாடசாலை மண்டபத்தை இத்தகைய நடவடிக்கைக்கு வழங்கியதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.அத்துடன் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நூலாசிரியர் அளுளினியன் யாழப்பாணத்திலிருந்து வெளியேறி தற்போது இந்தியாவினில் வேலை செய்துவருகின்றார். இந்தியாவில் அவர் உள்ளபோதே குறித்த கற்பனை கட்டுரையினை அவர் எழுதியதாக சொல்லப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் இந்தியா றோ புலனாய்வு கட்டமைப்பின் தூண்டுதலில் இக்கட்டுரை எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை எமக்குக் கருத்துத் தெரிவித்த அருளினியன்  “அதன் கொடும் அரசியல் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்தப் பேட்டி வெளிவந்த 2012- இல் நான் வெறும் மாணவப் பத்திரிகையாளனே. அந்தக் கட்டுரையின் பின்னால் நிறைய அரசியல் உண்டு”. என தெரிவித்துள்ளார்.

எனினும் கட்டுரையின் பின்னால் உள்ள அரசியல் குறித்தோ தான் அதன் பங்காளராக இருந்ததற்கான பொறுப்புக்கூறலையோ அவர் வெளியிட்டிருக்கவில்லை.

நன்றி:வாகீசம்

 

http://thuliyam.com/?p=77634

Edited by Athavan CH

'கேரள டயறிஸ்' எனும் புத்தகத்தினை நான் இன்னமும் வாசிக்கவில்லை. அதில் என்ன உள்ளது என 100 வீதம் தெரியாது ஆனால்நான் அறிந்தவரைக்கும் அருளியனால் யாழில் வெளியிடப்படவிருந்த புத்தகம் 'கேரள டயறிஸ்' எனும் பயண கட்டுரைகள் அடங்கிய புத்தகம். அவர் கேரளாவுக்கு பயணம் செய்த போது அங்கு கண்ட விடயங்களும் அவற்றிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடர்புகளும் பற்றியது. முக்கியமாக வெள்ளாளர்கள் எனும் சாதியத்திற்கும் கேரளாவுக்கும் இடையிலான தொடர்புகள். வெள்ளாளர்களுக்கும் கேரளாவுக்குமான (மலையாளிகளுக்குமான) தொடர்புகள் பற்றிய புத்தகம்.

இப் புத்தகம் யாழில் வெளியிடப்படக் கூடாது என்று நினைக்கும் ஒரு பிரிவினர் அருளியன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விகடனில் எழுதிய பெண் போராளிகள் பற்றிய கட்டுரையை முன்னுக்கு கொண்டு வந்து அதை தடை செய்ய முயல்கின்றனர். சாதிய ரீதியில் மேலாதிக்கம் செய்யும் வெள்ளாளர் சாதிக்கு எதிரான புத்தகம் என்பதால் அதை எதிர்ப்பவர்கள் உண்மையான காரணத்தினை நேரிடையாக சொல்லாமல் பெண் போராளிகள், தியாகிகள் போன்ற சென்சிடிவ் ஆன விடயத்தினை முன்னுக்கு வைத்து தடை செய்ய முயல்கின்றனர். இதில் அனேகர் இது வரைக்கும் பெண் போராளிகளின் இன்றைய அவல வாழ்வை மேன்மை அடைய வைக்க ஒரு சிறு செயல்தானும் செய்யாதவர்கள். ஆனால் தம் கருத்தை திணிப்பதற்காக பெண் போராளிகளை இதுக்குள் இழுத்து கேவலமான அரசியல் செய்கின்றனர்.

ஒரு படைப்பை வெளியிடுவதற்கான உரிமையை பொய்யான காரணங்களை முன்வைத்து மறுக்கின்றவர்களின் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது. விவாதங்களும் எதிர் விவாதங்களும் அற்ற வெறும் தட்டையான சமூகத்தினை நோக்கி யாழ் / ஈழத் தமிழ் மக்களை நகர்த்துவதற்கான செயற்பாடுகளே இவை. இதில் தீபச்செல்வன் போன்றவர்களும் தமக்கான அரசியல் காரணங்களுக்காக முன் நிற்பது தெரிகின்றது

கீழே உள்ள படத்தில் யாழில் வெளியிடப்படவிருந்த புத்தகத்தின் அட்டைப் படமும், அதை தடுக்க முனைபவர்கள் வெளியிட்ட போலியான அட்டைப் படமும் உள்ளன. பார்த்து புரிந்து கொள்க

 

keraladiaries.jpg

  • தொடங்கியவர்

ஆனந்தவிகடன் மீது கை காட்டினார் அருளினியன் (காணொலி)!

 

 

aruliniyan3

ஆனந்தவிகடன் மீது கை காட்டினார் அருளினியன் (காணொலி)!

பெண் போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் ஆனந்தவிகடனில் 2012ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருந்த எழுத்தாளர் மகாலிங்கம் அருளினியன் அந்தச் சம்பவத்துக்காக யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் சோதியா படையணியின் தளபதியான பெண் போராளி ஒருவர் தற்போது (2012) யாழ்ப்பாணம் தொடருந்து நிலையப்பகுதியில் விலைமாதுவாக செயற்படுவதாகத் தெரிவித்து நேர்காணல் ஒன்றினை அருளினியன் என்பவர் ஆனந்தவிகடன் சஞ்சிகையில் எழுதியிருந்தார்.

குறித்த சம்பவம் பெண் போராளிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பினை அன்றே தோற்றுவித்திருந்தது. இந்நிலையில் கேரள டயறீஸ் என்கிற நூலினை யாழ். இந்துக்கல்லூரியில் வெளியிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

arul1.jpg?w=576

குறித்த எழுத்தாளர் பெண்போராளிகளை இழிவுபடுத்தி ஆனந்தவிகடனில் எழுதியிருந்த நேர்காணல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பொதுவெளியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் அருளினியனை விமர்சிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.  எதிர்ப்புக்கள் வலுவடைந்த நிலையில் யாழ்.இந்துக்கல்லூரியும் நிகழ்ச்சிக்கான மண்டபத்தினை வழங்கமுடியாது என்று மறுப்புத் தெரிவித்திருக்கின்றது.

விடயம் தீவிரமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அருளினியன்,

ஆனந்தவிடகன் பதிவு தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கின்றார்,

“கடந்த 2012ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிகையில் மாணவ பத்திரிக்கையாளனாக பணியாற்றிக்கொண்டு இருந்தேன் அப்போது எனக்கு மாத சம்பளம் 500 ரூபாய் தான். அக்கால பகுதியில், ஆனந்த விகடன் பத்திரிக்கை பீடத்திற்கு , ஒரு பெண் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தான் முன்னாள் பெண் போராளி பேசுவதாகவும் , சில விடயங்களை தெரிய படுத்த வேண்டும் எனவும் கூறியதாக ஆசிரிய பீடத்தினர் தெரிவித்தனர்.

அப்போது அவர் பேசிய மொழி நடை ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை. அதனால் என்னை அவருடன் கதைக்குமாறும் , அவர் சொல்வதனை கேட்டு எழுதி தருமாறும் ஆசிரிய பீடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்,

அதனை தொடர்ந்து நான் அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் பேட்டியை எடுத்தேன். அதனை அப்படியே எழுதி கொடுத்தேன். அதில் என்னுடைய வேலை அவர்கள் சொன்னதை செய்து கொடுத்தது தான். என்னுடன் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது. அவர் பாலியல் தொழில் செய்தாரா என்பது கூட எனக்கு தெரியாது.

ஆனந்த விகடன் சொன்ன வேலையை செய்து கொடுத்தேன். ஏனெனில் எனக்கு ஆனந்த விகடன் மேல் பெரிய மரியாதை உண்டு. பெண் போராளிகள் தொடர்பில் எழுதிய கட்டுரைக்கு நான் மனவருந்துகிறேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அக்கால பகுதியிலையே அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். ஆனால் அதற்கு ஆனந்தவிகடன் அனுமதி அளிக்கவில்லை. தாம் அதற்கான விளக்கத்தை கொடுப்பதாக எனக்கு தெரிவித்தார்கள்.

நான் அந்நேரம் ஆனந்த விகடனில் பணியாற்றிக்கொண்டு இருந்ததால் , நிறுவனத்தின் சில ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை இருந்ததால் , நான் அதற்கு கட்டுப்பட்டேன்”என தெரிவித்தார்.

விடகன் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொலி வடிவில்…

http://tamilleader.org/?p=3916

......

அதேவேளை தான் வெளியிட உள்ள கேரளா டயரீஸ் எனும் நூல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது , நான் யாழ்ப்பணத்தில் இருந்து கேரளாவுக்கு பயணம் செய்திருந்தேன். கேரளாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பு இருக்கு என்பது தொடர்பில் நாலு கட்டுரைகள் உண்டு ஏனையவை கேரளா பற்றியும் கேரளாவின் தனித்துவம் பற்றியும் எழுதி உள்ளேன் அதில் 24கட்டுரைகள் உள்ளன அதுவே எனது கேரளா டயரீஸ் புத்தகத்தில் உள்ளது. என தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=77741

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

 கேரள டயறி நூல்   ரில்கோ  விடுதியில்   , மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரின் பங்குபற்றலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

21232093_1990349304535894_25353807129379

தமிழர் தாயகத்தில், தமிழ் மக்களிடையே கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்த கேரள டயறி என்ற நூல் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள  ரில்கோ  விடுதியில்   , மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரின் பங்குபற்றலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நூலை வெளியிடுவதற்கு யாழ்.இந்துக் கல்லூரி நிர்வாகம் மண்டபத்தை வழங்க மறுத்திருந்த நிலையில் திடீர் ஏற்பாடு ஒன்றின் பேரில் விடுதியில் இந்த நூலை வெளியிட வேண்டிய நிலை நூலாசிரியர் அருளினியன் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஆனந்த விகடனில் கட்டுரை ஒன்றை வெளியிட்ட அருளினியன், தற்போது யாழ்ப்பாணத்தில் மீண்டும் சாதிப்பாகுபாட்டைத் தூண்டும் வகையிலான கேரள டயறி என்ற நூலை எழுதியுள்ளார்.

தமிழ் மக்களிடையே பிரிவினைகளைத் தோற்றுவித்து, அதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முனையும் குழுவினருடன் அருளினியனும் இணைந்துகொண்டுள்ளமை அனைவராலும் உணரப்பட்டுள்ளது.

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் அருளினியன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பெண் புலிகளைக் கொச்சைப்படுத்தும் கட்டுரை ஆனந்த விகடனின் திட்டமிட்ட சதி என்று கூறி அதில் இருந்து தப்பிக்க முயன்றார். அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் கூறினார்.

ஆனால், இன்று இரகசியமாக நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டில் பேசிய அவர், தான் எதையும் எழுதுவார் என்றும் அது தொடர்பாக யாரும் தனக்கு நிபந்தனை போட முடியாது என்றும் குமுறியிருக்கின்றார்.

இளைஞர்களின் படு மோசமான எதிர்ப்புக்களுக்கு அஞ்சி, மிகவும் இரகசியமான முறையில் கேரள டயறியை வெளியிட்ட அவர், அந்த நூலில் இரண்டாம் பாகத்தை விரைவில் யாழ்ப்பாணத்தில் வெளியிடுவார் எனவும் கூறியிருக்கின்றார்.

இதேவேளை, அருளினியன் போன்ற கபடத்தனம் செய்யும் நபர்களுக்கு தமிழர் தாயகத்தில் இடமில்லை எனவும் அவர் அடுத்து நூலை முடிந்தால் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுக் காட்டட்டும் எனவும் இளைஞர்கள் சவால் விடுத்துள்ளனர்.

http://thuliyam.com/?p=77805

 

  • தொடங்கியவர்

அருளினியனின் பேட்டி (ஒளிவடிவில்)

வேர் தேடிப் புறப்பட்ட கேரள டயறின் பயணம் திசை தடுமாறி, யாழில் வலுவிழந்து வருகின்ற சாதிப்பாகுபாடுகளுக்கு எண்ணெய் ஊற்றுவதாக விமர்சிக்கப்படுவதற்கு நூலாசிரியர் அருளினியனின் பதில் என்ன..?

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் காலத்தில் சாதிப்பிரச்சனையும் எழவில்லை. இந்துப்பிரச்சனையும் எழவில்லை. ஆறுமுகநாவலருக்கும் இடமுமில்லை.
சாதி கதைத்தவர்களை அடக்கினார்கள். இந்துத்துவ/சைவ போதனைகளுக்கு முக்கியமும் வழங்கவில்லை.

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
 
21731344_1492580887455852_7518145940867354154_n.jpg



கோபமாயிருக்கும் பொழுது எழுதக் கூடாதென்று ஆயிரம் தடவை எண்ணியிருக்கிறேன். ஆனால் கோபம் வருகிறது, என்ன செய்ய. அருளினியன் போன்ற முட்டாள்களுக்கு இங்கு என்ன நடக்கிறதென்றாவது தெரியுமா? இலங்கையில் நின்று கொண்டு அதன் ஜனாதிபதியிடம் தனக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு விட்டதென்று புலம்பியிருக்கும் இந்த முதுகெலும்பில்லாத போலி, அவரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கிறார்.

சாதாரண மக்கள் ஜனாதிபதியைச் சந்திக்க நூறு நாளாவது தெருவில் குந்தியிருக்க வேண்டியிருக்கிறது, அதுவும் கூட நடப்பது அசாத்தியம். இங்கு எதற்கும் வக்கில்லாமல் இந்த மக்களின் துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் நீதி கேட்டு எழுத்தாளர்கள்  எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்ட அப்பாவி,  மைத்திரி பால சிரிசேனாவை ஜாலியாக சந்தித்து புத்தக கையளிப்பை நிகழ்த்தியிருக்கிறார். வாவ். இந்த நாட்டில் யாரின் கருத்து சுதந்திரத்தை யார் பாதுகாப்பது.

அருளினியனின் புத்தகத்திற்கெதிரான மிரட்டல்கள் கண்டிக்கப் பட வேண்டியது. ஆனால் அதனை அருளினியனே நியாயப்படுத்திவிட்டு சிரித்துக்கொண்டிருக்கிறார். தயவு செய்து இதுபோன்ற போலிகளை எழுத்தாளர்கள் என்று அடைப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அருளினியன், நீங்கள் சமர்ப்பணம் செய்திருப்பது போராளிகளுக்கு - சந்தித்து சிரிப்பது கொலைகாரர்களுடன், உங்களுக்கு ஏதாவது தகுதியிருக்கிறதென்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு நடந்த மிரட்டல்களைப் பற்றியும் அதற்கு எதிரான எனது கருத்துக்களையும் அண்மையில் நிகழ்ந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருந்தேன். ஆகவே இப்பொழுது உங்களின் கருத்துக்களுக்கெதிராகவும் பேசவேண்டியிருக்கிறது. இலங்கை ஒன்றும் அவ்வளவு ஜனநாயக நாடல்ல. மைத்திரி கருத்துசுதந்திரத்தை காப்பாற்றும் ' ஐயாவும்' அல்ல. நீங்கள் அவரை சந்தியுங்கள் புத்தகத்தை வெளியிடுங்கள் அது உங்களின் இஷ்டம். ஆனால் கருத்து சுதந்திரம் தேவை என்று நாங்கள் இங்கே தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருப்பது அதிகாரத்தின் வேட்டிக்குள் நின்றுகொண்டு எழுத்துவதற்கல்ல. இங்கு சாதியும் மதமும் பிரச்சினை தான், ஆனால் அதற்கெதிரான எங்களின் குரலென்பதை இதுவரை பாதுகாப்பது எங்களின் எழுத்துக்களே, அதற்காக தாக்கப்பட்டாலும் கூட அப்பம் சாப்பிட அலரிமாளிகைக்குச் செல்ல மாட்டோம். நீங்கள் செய்திருப்பது கருத்துக் சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் குரலுக்காகவல்ல.

நீங்கள் செய்துகொண்டிருப்பதற்குப் பெயர் பொறுக்கித்தனம்.  

 

http://kirisanthworks.blogspot.co.uk/2017/09/blog-post.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

நாவலரும் மைத்ரியும் மணியனும்

ஷோபாசக்தி
September 21st, 2017 | : | 

அருளினியன் எழுதி வெளியிட்ட ‘கேரள டயரீஸ்’ நூல் கடந்த ஒரு மாதமாகக் கிளம்பிய சர்ச்சைகளும் பிரச்சினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. நூலை வெளியிடவும் பெரும் இடர்பாடுகள். தான் கொல்லப்படக்கூடும் என அருளினியன் பேரச்சம் தெரிவித்தார். வரலாற்றில் முதற்தடவையாக ஒரு தமிழ் எழுத்தாளன், இலங்கை சனாதிபதியைச் சந்தித்துக் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டியதும், சனாதிபதியும் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கச் சூளுரைத்த காட்சிகளும் வண்ணப்படங்களாக எங்களிற்குக் காணக்கிடைத்தன.

இன்று என் கையில் கேரள டயரீஸ் கிடைத்தது. ஒரே மடக்கில் வாசித்து முடித்துவிட்டு என் உடனடி எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த நூலில் ‘வெள்ளார்கள் யாழ்ப்பாணத்தின் துயரம்’ (வெள்ளாளர்கள் இப்போது உலகின் துயராக மாறிவிட்டார்கள் என்பது வேறுகதை) என்ற பகுதியும் ஆறுமுக நாவலரின் சாதிவெறியைச் சான்றுகளுடன் முன்வைத்து நாவலரைக் கண்டதுண்டமாக்கிச் சாய்த்திருப்பதும், தேசவழமைச் சட்டம் எவ்வாறு வெள்ளாளர்களிற்கு முற்றிலும் சாதகமாக இருக்கிறது என்ற விவரிப்புப் பகுதியும் அருளினியனின் மிகச் சிறந்த ஆய்வுப் பங்களிப்புகளாக அமைகின்றன.

ஆறுமுக நாவலரின் சாதிவெறி குறித்து ஏற்கனவே பல தளங்களில் பேசப்பட்டிருந்தாலும் அருளினியன் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தே அதற்குப் பல்லுப் பிடுங்க முயன்றிருக்கிறார். யாழ் இந்துக்கல்லூரியிலும் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் அவர் தனது நூலை வெளியிட முயன்றது இத்தகைய எத்தனம்.

பொறுப்பார்களா அவர்கள்? இந்து கலாச்சாரத் திணைக்களம் வரை புத்தகத்திற்கு எதிராகப் புகார்கள் சென்றதாகவும் திணைக்களம் நூலைத் தடை செய்ய முயன்றதாகவும் அருளினியன் என்னிடம் தனி மடலில் தெரிவித்தார். நாவலரையும் சைவசமயத்தையும் அருளினியன் அவமதித்ததிற்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்குத் தொடுக்கப் போவதாக தென் கயிலை ஆதினம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இந்த வழக்கு நடந்தால் உண்மையிலேயே நல்லதுதான். நல்லதொரு புரக்கிராசியை வைத்தால் எங்கள் பக்கம்தான் வெல்லும். ஏனெனில் ஆறுமுக நாவலர் எத்தனை கொடூரமான சாதி வெறியன் என்பதற்கு நம்மிடம் நிறையவே சான்றுகளுண்டு. கவலையில்லாமல் வழக்காடலாம். ஆனால் இந்தக் கவலையின்மையிலும் ஒரு கவலை என்னவென்றால், ‘விகடன்’ நேர்காணல் பிரச்சினையில் நிகழ்ந்ததுபோல, ‘எனக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டது’ என வழக்கு முடியும்வரை அருளினியன் ஆதினத்திடம் மன்னிப்புக் கேட்டுவிடக் கூடாது என்பதுதான்.

இனிப் புத்தகத்தின் மற்றப் பகுதிகளையும் சிறிது பார்த்துவிடலாம்.

ஆறுமுக நாவலரை எதிர்க்கும் அதே தீவிரத்துடன் அருளினியன் அடிக்கொருதரம் தன்னை ஆதி சைவன் என அழைத்துக்கொள்வது எனக்குப் புரியவே இல்லை. அதே போல புத்தகத்தின் முடிவில் காளி, சூலி, மகமாயி என்று ஊருப்பட்ட தெய்வங்களை அழைத்து, இந்த நூலை எழுதத் துணைபுரிந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். நமக்கே இது புரியாவிடில் வழக்குப் போட நினைக்கும் தென் கயிலை ஆதினம் இதனால் எந்தளவிற்குக் குழம்பிப்போவார் என நினைக்கும்போதே திகிலாயிருக்கிறது.

இந்த, சாதியற்ற தமிழ்த் தேசியம்போல, சாதியற்ற சைவ மதம் என்று எதையாவது அருளினியன் ‘ட்ரை’ பண்ணுகிறாரோ தெரியவில்லை. நம்நாட்டில் சாதியற்று கிறிஸ்தவ மதமே கிடையாதபோது சாதியற்ற சைவத்தை எங்கே கண்டுபிடிப்பது? கட்டமைப்பது?

மதத்திற்கு வெளியே நின்று சிந்திக்க அருளினியன் போன்ற இளைஞர்களிற்கு என்ன தடை? இப்போது அண்மைக்காலமாக நம்முடைய சிறுபத்திரிகை உலகிற்குள்ளேயே ‘மதம் பண்பாட்டுக் கருவி, ஆன்மீக நிம்மதி, ஞானம்’ என்றெல்லாம் தீவிரமாக அனர்த்தத் தொடங்கிவிட்டார்கள். அப்படியானால் மதமற்றவர்கள் பண்பாடற்றவர்களா? ஞானமற்றவர்களா? பிரஞ்சு மக்களில் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் மதத்திற்கு வெளியே உள்ளவர்கள். அவர்கள் பண்பாட்டிலும் ஞானத்திலும் நம்முடைய மக்களைக்காட்டிலும் என்ன கெட்டுப்போய்விட்டார்கள் என  அருளினியன் வகையறா ஆதி சைவர்கள் யாராவது விளக்கினால் புரிந்துகொள்ள முயல்வேன்.

ஈழத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரைக் குறித்து எழுதும் அருளினியன் முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்:

“எம்மைக் காத்த வீரர்கள் அவர்கள் என்ற புரிதல் இருந்தால், அவர்களை நாம் சாதியம் பேசி ஒடுக்கியிருக்க மாட்டோம்தானே.”

இங்கே நூலாசிரியர் அவர்கள் என்பது யாரை? நாம் என்பது யாரை? இந்த நூல் வழியே அவர் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்? இந்த நூலின் வாசகப்பரப்பிலிருந்து ‘அவர்கள்’ விலக்கப்பட்டிருக்கிறார்களா என்ன?

நூலின் துணைத் தலைப்பு ‘வேர் தேடுவோம்’. இதைப்பற்றிச் சொல்ல அதிகமில்லை. கேரளா முழுவதும் பயணம் செய்து அருளினியன் வில்லங்கத்திற்கு வேர் தேடியிருக்கிறார். அந்தக் காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ என மணியன் எழுதும் பயணக் கட்டுரைகளைப் போலயிருக்கிருக்கிறது அருளினியனின் கட்டுரைகளும்.

அருளினியன் சொல்லும் பல செய்திகளிற்கு எந்த வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது. ஈழவர் என்றால் ஈழத்திலிருந்து வந்தவர்கள், ஈழவர் என்பதே நழவராய் திரிந்தது, மறவன் மராட்சியானது, சங்கிலி மன்னனின் படைவீரர்கள் வல்வெட்டித்துறைக்கு ஓடிப் போய்க் குடியேறினார்கள், அவர்களிடையே பிரபாகரன் பிறந்தார் என்றெல்லாம் அருளினியன் சொல்வதற்கு எந்த நம்பகமான சான்றுகளும் கிடையாது. அவற்றை அருளினியன் தரவுமில்லை. சங்கிலியனின் வாரிசு பிரபாகரன் என்பதற்காவது காசி ஆனந்தனின் கவிதை ஒப்புக்காவாவது சான்றாயிருக்கிறது. மற்றவைக்கு அவையும் கிடையாது.

ஏனில்லை?  வையா பாடல், யாழ் வைபவமாலை போன்றவற்றில் இவையிருப்பதாகச் சொல்லியிருக்கிறேனே எனலாம் அருளினியன். இந்த நூல்களெல்லாம் அசலான வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளத் தக்கவையல்ல. இவை பெரும்பாலும் புராணங்களிலிருந்தும் கர்ண பரம்பரைக் கதைகளிலிருந்தும் கட்டப்பட்டவை.  இவற்றை  வைத்து வரலாறை மதிப்பிடுவது மகாவம்சத்தை வைத்து வரலாற்றை எழுதுவதற்கு ஒப்பானது.

கேரளத்திலும் புட்டு யாழ்ப்பாணத்திலும் புட்டு, அங்கேயும் தேங்காய்பால் இங்கேயும் தேங்காய்பால் அதனால் யாழ்ப்பாணத்தின் வேர் கேரளாவில் என்பதெல்லாம் என்ன ஆய்வு? தாய்லாந்து ஸ்பெஷல் தேங்காய்ப்பால் கறி ஞாபகம் வருகிறது. எம்பெருமான் மதுரையில் செம்மனச் செல்வியிடம் புட்டுக்கு மண் சுமந்ததை ஏற்கனவே யாரோ சுட்டிக்காட்டியிருப்பதாக ஞாபகம். நான் சின்னப் பையனாக இருந்தபோது, எங்கம்மாட ஜிமிக்கி கம்மலையும் எங்கப்பன் கொண்டுபோயி..அதற்காக என்னுடைய குடும்பம் கேரளாவாய்யா?

யாழ்ப்பாணத்தில் காலத்திற்குக் காலம் பல குடியேற்றங்கள் நடந்துள்ளன. அவை விரிவான ஆய்வுக்குரியவை. ஆனால் அதை ‘இதயம் பேசுகிறது’ பாணியில் எழுதிவிட்டு ஆய்வெனச் சொல்வது சரியற்றது.

நானொரு நன்நம்பிக்கைவாதி. எனவே இந்தக் குறைகளை அருளினியன் வருங்காலத்தில் சரி செய்வாரென நம்புகின்றேன்.

ஆறுமுக நாவலரின் சாதிவெறியை மறுபடியுமொருமுறை பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், யாழ் இந்துக்கல்லூரி – கொழும்புத் தமிழ்ச் சங்கம் – தென் கயிலை ஆதினம் போன்றவற்றின் வெள்ளாளத்தனத்தைத் தோலுரித்துக்காட்டியதற்கு வாழ்த்துகள் அருளினியன்!

 

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1447

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.