Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் நீ மற்றும் கடல்!

Featured Replies

நான் நீ மற்றும் கடல்! - சிறுகதை

 

அனுராதா ஆனந்த் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

p82k.jpg

நித்யா காரைத் திறந்து உள்ளே ஏற எத்தனிக்கும் போதுதான்  சட்டெனக் கவனித்தாள். வேப்ப மரமெங்கும் மல்லிகைப் பூ மொட்டுகள் தெறித்துவிட்டதுபோல் கிடந்தன. நெற்றி சுருங்க ஆச்சர்ய மாய்ப் பார்த்தாள்.  அருகிலிருக்கும் பந்தலையும் தாண்டி மரத்திலேறி அதன் கிளையெங்கிலும் பெரிய பச்சைப்பாம்பைப் போல்  சுற்றிக் கொண்டு  மல்லிக்கொடி படர்ந்திருக் கிறது . அந்தக்  காலை நேரத்தில் அது அவ்வளவு வாசனையை அந்தத் தெருவுக்கு வழங்கிக்கொண்டிருந்தது. அருகில் போய் கைக்கெட்டும்  கொஞ்சம்  மொட்டுகளைப் பறித்து  மூக்கின் அருகில் வைத்து மனசு கொள்ளுமளவுக்கு அதன் வாசத்தை நுகர்ந்துகொண்டாள். பின் காருக்குள்  நுழைந்து அந்த மொட்டுகளை  டேஷ்போர்டில், வைத்தாள். எப்படியும் சிறிது நேரத்திற்கெல்லாம் காரெல்லாம் அதன்  சுகந்தம் பரவிவிடும். அந்த  மரத்தைப் போலவேதான் நித்யா வெண்மையும் பசுமையும்  கலந்த உடையை உடுத்தியிருந்தாள்.    

p82a.jpg


சட்டென வாழ்க்கை எவ்வளவு வாசம் நிரம்பியதாக  மாறிவிடுகிறது என்று நினைத்தாள். நேற்று இதே பூவின் எதிர் மணமுள்ள மீன் மார்க்கெட்டுக்குப் போன போதிலிருந்தே தனக்குள் இப்படி யான உணர்வு தொடங்கிவிட்டதை உணர்ந்தாள். மீன் மார்க்கெட்டில் அவளைப் போல யாரும் மீன் தேர்வு செய்துவிட முடியாது. பாறை மீன்களை அதன் செதில்களைத்  திறந்து  திறந்து பார்த்து அடர்த்தியான சிவப்பு நிறமிருக்கும் புதிய மீன்களைத் தேர்வு செய்து சரியாய் வாங்கி விடுவாள். ஒரு காலத்தில் குமட்டிக் கொண்டு வந்த மீன் வாடையும், ருசியாக அதைச் சமைக்கப் பழகி, இப்போது வாசமாகியிருந்தது. பின் சீட்டைத் திரும்பிப் பார்த்தாள். சாப்பாட்டுப்  பை  இருப்பதை உறுதி செய்துகொண்டு  காரைக் கிளப்பினாள். மார்கழி மாத அதிகாலைப் பனியின் குளுமையை அனுபவிக்க காரின் கண்ணாடியை இறக்கி விட்டாள். கார் ஏறக்குறைய காலியான தெருவில் சீராகச் சென்றது . தெருவின் முனைக்கு வந்து வலது பக்கம் திரும்பினாள். பெசன்ட் நகர் கடற்கரைச் சாலை வந்தது.    

p82b.jpg

 எட்டு வருடங்களுக்கு முன் அவள் பெங்களூரிலிருந்து சென்னை வந்த போது எவ்வளவு ஆசுவாசம் வழங்கியது இந்தக் கடற்கரை நகரம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாயல் இருக்கிறது உண்மைதான். கடற்காற்று கசடுகளைத் துலக்கி விடுவதனாலோ என்னவோ இளமையாகவும் லேசாகவும் இருக்கிறது சென்னை அவளைப்போல. மித்ரனைக் காதலித்துக்கொண்டிருந்த நாள்களில் பெரும்பான்மையான மாலை நேரம்  இங்கேதான் கழிந்தன.  எத்தனையோ முறை நினைவுபடுத்திப் பார்த்திருக்கிறாள். முதன்முதலாக மித்ரனை எப்போது பார்த்தோமென்று நினைவுக்கு வரமாட்டேனென்கிறது.

மித்ரன்அவளின் அண்ணன் பிரசன்னாவின் நண்பன். அவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்து  கல்லூரி வரை ஒன்றாய்ப் படித்து வருகிறார்கள். சிறுவயதிலிருந்தே அடிக்கடி வீட்டுக்கு வரப்போக இருந்திருக்கிறான் மித்ரன்.  பிரசன்னாவின் நட்பு வட்டம் சற்று பெரிது. பன்னிரண்டாம்  வகுப்புப் பொதுத்தேர்வுக்குத்  தயாராகிக் கொண்டிருந்தபோது தன் அண்ணனிடம் கணக்கு சொல்லிக்கொடுக்கச்  சொன்ன போது `‘மக்கு… மக்கு’’ என்று அவனின்     நண்பர்கள் எல்லோர் முன்பும் சொல்லிவிட்டான். அவளுக்கு அவமானமாக இருந்தது.  சட்டென அங்கிருந்து நகர்ந்தவளிடம் சிறிது நேரத்தில் அவளின் அண்ணன் மித்ரனை அறிமுகப்படுத்தி ``இவனுக்குக் கணக்கு நல்லா வரும். உனக்குச் சொல்லிக்கொடுப்பான்’’ என்று சொன்னான். அப்போதுதான் முதன்முதலில் பேசிக் கொண்டார்கள். அண்ணனுடன் எல்லோரும் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்துக் கொண்டி ருந்தார்கள். மித்ரன் அவ்வளவு பொறுமையாக அழகாகச் சொல்லிக் கொடுப்பான். நித்யாவின் அம்மா அப்போதெல்லாம் மித்ரனுக்கு அடிக்கடி காபி போட்டுக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு நித்யா வீட்டு காபி அவ்வளவு பிடிக்கும். அந்த ஆண்டு பொதுத்தேர்வில் கணிதத்தில் அதிகமான மதிப்பெண் பெற்றி ருந்தாள். மித்ரனுக்கு அப்போது நன்றி சொல்லக்கூடத் தோன்ற வில்லை அவளுக்கு.  

p82c.jpg

பிரசன்னாவுக்கு  கேம்பஸ்  இன்டர்வியூவிலேயே குர்கவுனில் நல்ல வேலை கிடைத்து அங்கே போய்விட்டான்.  மித்ரன் தன் தந்தையோடு பெரிய உருட்டு மரங்களை வாங்கி அறுக்கும்  டிம்பர்  டிப்போவைப் பொறுப்பாய்ப் பார்த்துக் கொண்டான். நித்யா ப்ளஸ் டூ முடித்து இன்ஜினீயரிங் சேர்ந்துவிட்டாள். மித்ரன் இவளுடைய நட்பு வட்டத்தில் இருந்தான். பிரசன்னா ஊரில் இல்லாவிட்டாலும் அவனின் நண்பர்கள் வாரம் ஒருமுறையாவது வந்து அவனின் அம்மாவிடம் உரிமையாய் காபி கேட்டுவாங்கிக் குடித்தார்கள். மித்ரனும் வருவான். மற்றவர்களைவிட நித்யாவிடம் மித்ரனுக்குப் பேசுவதற்கு நிறைய விஷயம் இருப்பதுபோல உணரத் தொடங்கினான். நித்யாவும் அப்படியேதான் உணரத் தொடங்கினாள். படிப்பு சார்ந்து நிறைய பேசினார்கள் என்றாலும் பேச இருவருக்கும் பொதுவான விஷயங்களும் இருந்தன. தன் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கென ஒரு வாரம் திருநெல்வேலி வரை  மித்ரனும் அவன் குடும்பத்தாரும் போயிருந்தார்கள். அவனை அந்த ஒரு வாரமும் காணாமல் முக்கியமான எதையோ பறிகொடுத்ததுபோல் இருந்தது அவளுக்கு. இதுவரை அவளுக்கு அப்படி இருந்ததில்லை. ஏனோ மித்ரனை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஊர் திரும்பியதும் மித்ரன் அவளின் வீட்டுக்கு வந்தான்.  நித்யா அவனிடம் ஒரு  வார்த்தைகூடப் பேசவில்லை. காரணம் தெரியாமல் அவளின் கல்லூரி வாசலுக்குப்போய் நின்றான். இப்போது அவளுக்கு அவனிடம் பேசவேண்டியிருந்தது. பைக்கில் ஏறி அமர்ந்து பீச்சுக்குப்  போகச் சொன்னாள். ஏதும் பேசவில்லை. அமைதியாய் இருந்துவிட்டு, திரும்ப தன்னை அழைத்துப்போய் வீட்டில் விடச்  சொன்னாள். பைக்கிலிருந்து  இறங்கியபின் சொன்னாள்  ``ஊருக்கு எங்கேயும்  போறதுன்னா சொல்லிட்டுப் போ. மேக்ஸிமம் ரெண்டு நாள். அதுக்குள்ள வந்திடு’’ சொல்லிவிட்டுப் போய்க்கொண்டேயிருந்தாள்.  

p82d.jpg

அடுத்த நாள் பெசன்ட் கடற்கரையில் பௌர்ணமிக்கு இரண்டு நாள்களிருக்கும் நிலவொளியில்  பச்சை நரம்புகள் தெரியும் அவளின் மணிக்கட்டைப் பிடித்தபடி காதலைச் சொன்னான் மித்ரன். நித்யா சம்பந்தமில்லாமல் ‘`என்னோட கோயிலுக்கு வருவியா?’’ என்று கேட்டாள். ``விபூதி எடுத்துப் பட்டைகூட   அடிச்சிக்கிறேன்’’ என்று சொன்னான் மித்ரன் தேவசகாயம். அதன் பின் பலகாலம் மித்ரன் பித்துப்பிடித்து அலைந்தாள். நாள்கள் விடிவதே அவன் குரல் கேட்பதற்குத்தான், உடை உடுத்துவதே அவன் ரசிப்பதற்குத்தான் என்று நினைத்துக்கொண்டாள். காலையில் அப்போதுதான் கல்லூரி  வரை வந்து விட்டுவிட்டுப் போவான். அதற்குள் அவளுக்கு  எப்போது  மாலை நேரம் வருமென்று மணிக்கட்டைத்  திருப்பி நேரத்தைப்  பார்க்கத்  தொடங்கிவிடுவாள்.  வீட்டிலிருப்பவர்களுக்கு அரசல்புரசலாகத் தெரியத் தொடங்கியது. குர்கவுனிலிருந்து  பிரசன்னா சென்னை வந்திருந்த போது  மித்ரனை அழைத்துப் பேசினான். மித்ரன் எங்கோ தூரமாய் வெறித்துப் பார்த்தபடி ஆமாமென்று ஒத்துக்கொண்டான். ‘`இனிமே வீட்டுப்பக்கம் வந்துடாதே துரோகி’’ என்று சொல்லி, இடத்தை காலி செய்தான்.

பிரசன்னாவைத் தொடர்ந்து நித்யாவின் வீட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகள்.  பிரசன்னாவைப் பெற்றோர்கள் குர்கவுன்  வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கு வரச்சொன்னார்கள். ‘`எதுக்கு, அவ பின்னாடியே சுத்தி சுத்தி வாட்ச்மேன் வேலை பார்க்குறதுக்கா? என்னதான் கண்ல விளக்கெண்ணெய் ஊத்தி அவளைப் பாத்துக்கிட்டாலும் நம்மள  ஏமாத்திட்டுப் போய் அவனைப் பாத்துக்கிட்டுதான் இருப்பா’’   வெறுப்பாய்ப் பேசினான். படிப்பு முடியும் வரை பொறுத்திருந்துவிட்டு இறுதித்தேர்வு எழுதி முடிந்த நாளிலேயே மித்ரனோடு கிளம்பிவிட்டாள்  நித்யா. அன்று இரவு நள்ளிரவுக்குப் பிறகும் வீடு திரும்பாதவளை, அவர்கள் எல்லோரும் முடிவு செய்து விலக்கி வைத்தார்கள். மற்ற நண்பர்கள் உதவியோடு மித்ரன் நித்யாவைப் பதிவுத் திருமணம் செய்தான். மித்ரனின் வீட்டிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. மித்ரனின் அம்மா அழுது சண்டைபிடித்து, பின் அவனுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க ஒத்துக்கொண்டார் அவன் அப்பா. டிம்பர் டிப்போக்கு இனி மித்ரன் வரக் கூடாது என்று கோபமாகச் சொல்லிவிட்டார். தனியே வீடெடுத்தான். மொட்டை மாடியில் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட மிகச் சிறிய வீடுதான். நித்யாவுக்கு மிகவும் பிடித்த  மாதிரி  மாடியிலிருந்து பார்த்தால் கடல் தெரிந்தது. துள்ளிக் குதித்தாள். அருகிலிருக்கும்  வீட்டில் வளர்ந்த சரக்கொன்றை மரம் பாதிக்கும் மேல் இவர்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் சரிந்து நின்றது. அதன் மஞ்சள் பூக்களை எந்த சாகசமுமில்லாமல் பறித்துவிடுவாள். மாடியில் சிமென்ட் முற்றத்தில் தொட்டியில் மண் நிரப்பி கேந்தி, செவ்வரளி, மல்லி எனப் பூக்களை வளர்த்தாள் . இவ்வளவு நாள் இந்த அற்புதமான  வாழ்க்கை எங்கே ஒளிந்துகொண்டிருந்தது என்று ஏங்கும் அளவுக்கு சந்தோஷமாய் இருந்தார்கள். இருவரும் வேலை தேடத் தொடங்கினர்.    

p82e.jpg

ஒரு மாதம் கழித்து நித்யாவின் வீட்டுக்குச் சென்றார்கள்..  ‘`போயிடுங்க. இல்லைனா உத்தரத்தில் தொங்கிடுவேன்’’ என்று நித்யாவின் அப்பா அமைதியாய், ஆனால் உக்கிரமாய் மிரட்டினார். அடுத்த ஒரு வாரத்தில் மித்ரனின் அக்கா ரெஜினா தன் கணவனோடு வந்து மித்ரனைப் பார்த்தாள். ‘`அம்மா உண்ணாவிரதமிருந்து அப்பாவிடம் சம்மதம் வாங்கிவிட்டாள். ஆனால், அப்பா ஒரே ஒரு கண்டிஷன் போட்டிருக்கார். சர்ச்சில் வெச்சுக் கல்யாணம் பண்ணணும்.’’ அவர்கள் கிளம்புகையில் நித்யா தேவாலயத்தில் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதம் என்று சொன்னாள். அவர்கள் போனதும் மித்ரன் அவளிடம் கேட்டான். ``உண்மையிலேயே உனக்கு சர்ச்சில் வெச்சு மோதிரம் மாத்திக்கச் சம்மதமா?’’ ``ஆமா. ஏன் சந்தேகமா கேக்குற” என்றாள் நித்யா. ``உனக்காக  வேணும்னா கோவில்ல  வெச்சு ஒருக்கா  தாலி கட்டுறேன்.’’ ``எத்தனை தடவை கல்யாணம் பண்றது மித்து. உண்மையாவே நமக்குக் கல்யாணம் ரெஜிஸ்டர் ஆபிஸில் வெச்சு நடந்ததுதான். இப்போ சர்ச்சில் வெச்சு நடக்கப் போறது உன் அம்மா அப்பாவோட திருப்திக்கு.’’

நித்யாவுக்குக் குழந்தை பிறந்தது. நித்யா குழந்தையின் எந்தச் செயலிலும் மத அடையாளம் இருக்கக்கூடாதென நினைத்தாள். மீண்டும் பிரச்னை தலைதூக்கியது. கிறித்துவப் பெயர் சூட்ட வேண்டுமென்று மித்ரனின் அம்மா வாதிட்டார்கள். அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு எந்த மதத்துக்கும் உறுத்தாத சித்தார்த்  என்ற பெயருக்கு ஒப்புக்கொண்டார்கள். இப்போது குழந்தையின்    மருத்துவச்  செலவுகள்,  உடைகள், பண்டங்களுக்காகவும் மித்ரன்  தன் அப்பாவிடம் போய் நின்றான். இந்த முறை மித்ரனின் அப்பாவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாள். அவ்வளவுதான்   மித்ரனின் அம்மா  ``குடும்பத்தைப் பிரிக்கிறியா?’’ என்று சண்டையிட்டார்கள். ரெஜினாதான் சமாதானப்படுத்தினாள்.   

p82f.jpg

இந்த முறை நித்யா  முடிவாய்ச் சொல்லிவிட்டாள். வேறு வேலையில்  சேரச் சொல்லி. ஆனால், அவன் கேட்காமல்   தொடர்ந்து  தனது நிறுவனத்திலேயே வேலை செய்தான். ``இன்னும் ஏன் அவருக்கு ஸ்பூன்  ஃபீடிங்  பண்றீங்க? உங்க பையனை செல்லம் கொடுத்து நீங்களே கெடுக்குறீங்க?’’  பிரச்னை பல நாள்கள் போனது. இந்த முறை  நித்யா பிடிவாதமாய் இருந்தாள்.  வேறு வழியில்லாமல் மித்ரன் இறங்கிவந்தான். பெங்களூருக்குச் சென்று வேலை தேடத் தொடங்கினான். நல்ல வேலை கிடைத்ததும் அவர்களை பெங்களூருக்கு அழைத்துக் கொள்வதாக முடிவு. நித்யா மகிழ்ச்சியாய் ஒப்புக்கொண்டாள்.  நல்ல வேலை கிடைத்தது. அடுத்து குடும்பத்தோடு பெங்களூரில் சிறிய அபார்ட்மென்ட்டில் குடியேறி னார்கள். கடலிருக்கும் சென்னையை விட்டுக் கிளம்பும் போது முதல் நாள் பள்ளிசெல்லும் குழந்தை தன் அம்மாவை, கழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே செல்வதைப் போல் கிளம்பிச் சென்றாள்.

குழந்தை சித்தார்த் வேகமாக வளர்ந்தான்.மித்ரன் வேகமாக கம்பெனியின் பெரிய பொறுப்புக்கும், பெரிய சம்பளத்துக்கும் வந்தான். அவனை நம்பி, கூட வேலை பார்ப்பவர் ``பணம் போடுறேன். தனியா பிசினஸ் தொடங்கலாமா?” என்று கேட்டார்.  நித்யாவிடம் கேட்டான். நித்யா சம்மதித்தாள். வொர்க்கிங் பார்ட்னராக மித்ரனும் சேர்ந்தான். தன் கம்பெனி என்கிற கூடுதல் அக்கறையில் கடுமையாக உழைத்தான். தொழில் வேகமாக வளர்ந்தது.  நிறைய சம்பாதித்தான். தினம் புதுப்புது சவால்களை வேலையில் எதிர்கொண்டான். அதைச் சமாளித்து வெற்றிகொள்ளும் ஆற்றல் இயல்பிலேயே அவனிடம் இருந்தது. இது அலுவலகத்தை மிகவும் சுவாரஸ்யமான இடமாக மாற்றியது. பணத்தைத் தாண்டி இந்த வெற்றிகளின் மேல் போதையைப்போல் ஒரு தவிர்க்கமுடியாத ஈர்ப்பு வந்தது. வீடு வழக்கமான பழைய பிரச்னைகள் நிறைந்த அயர்ச்சி தரும் இடமாகத் தோன்ற ஆரம்பித்தது. வீட்டின் மேல் கவனமில்லாமல் போனது. நள்ளிரவு கடந்துதான் பெரும்பாலும் வீடுதிரும்பினான். அநேகமாய் எல்லா நாள்களிலும் குடித்திருந்தான்.   பணிச்சுமை, அதனால்தான் என்று காரணம்   சொன்னான்.  இது ஒன்றும்  தவறில்லை என்று சொல்வதுபோலிருந்தது தொனி. குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டான்.   

p82g.jpg

நித்யாவுக்கோ, சவால்களோ அங்கீகாரமோ, ஏன் காதலும்கூட இல்லாத வெறுமையான, ஒரே மாதிரி தோற்றம் தரும் நாள்கள்... சமையல், துணி துவைத்து உலர்த்துதல், குழந்தைப்  பராமரிப்பு, பண்டிகைகள், காலை, மாலை ஏனோ நெருக்கமான தருணங்களில்கூட எட்ட முடியாத தூரத்தில் இருப்பதுபோல உணர்ந்தாள். கண்பார்த்தல், அழகான முத்தம்,  தலைகோதுதல் எல்லாம் மறந்துபோய்  பல வருடமாயிற்று. எதிலும் ஆதுரம் இல்லாமற்போய் எல்லாவற்றின் மீதும் ஒரு ஜடத்தன்மை படிந்து விட்டது . வீட்டில் வெட்டியாய்க் கிடக்கும் பொழுதுகளையும், வெறுப்பாய்க் கழியும் நாள்களையும்  என்ன செய்வதெனத் தெரியாமல் மூச்சுத்திணறினாள்.

வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். வழக்கம்போல இந்த முறையும் மித்ரன் தடுத்தான். ``இப்போதான் நல்ல பணம் வருதுல்ல. நம்ம மூணு பேருக்கும்  ஒரு நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமானதா இருக்கு. அப்புறம் என்ன?’’ என்று கேட்டான். ``வேலைன்றது வெறுமனே பணத்திற்காக மட்டும் தானா? சம்பாதிச்சி குடும்பம் நடத்தப் போதுமான பணம் வச்சிருக்க மித்ரன். உன் உழைப்புல நீ ஒரு பெரிய கார் வாங்கியிருக்க. நான் வேலை பாத்து அதுல ஒரு ஸ்கூட்டி வாங்குனா எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும். என் அப்பா எந்தப் பாரபட்சமும் காட்டாமதான் என்னையும் என் அண்ணனையும் இன்ஜினீயரிங் படிக்க வெச்சார். அப்போதெல்லாம் ஒரு ஃபிரெண்டா நீயே எனக்கு எவ்வளவு சொல்லிக்குடுத்திருக்க. கணவனா ரோல் எடுத்துட்டா இப்படி மாறிடுவியா? எல்லா ஆண்களையும் போலத்தான் நீயும் மித்ரன். இதுவரைக்கும் நான் படிச்சது எல்லாம் வெறும் சமையல் செஞ்சி வச்சி உன்னையும் குழந்தையையும் பாத்துக்கிறதுக்காக மட்டும்தானா? அப்படினா நான் நேரடியா கேட்டரிங் படிச்சிருக்கலாமே, ஏன்  இன்ஜினீயரிங் படிக்கணும்?’’   

p82h.jpg

சிறிது நாள்கள் கழித்து வீட்டுக்கு வந்த தபாலில் மணிப்பால் யூனிவர்சிட்டியின் எம்.பி.ஏ அப்ளிகேஷன் இருந்தது. ``வேலைக்குத்தான்  போக வேணாம்னு சொல்லிட்ட, இதே சமையல் வேலைய பாத்துக்கிட்டு   எனக்கு விருப்பப்பட்ட மாதிரி ஏதோ ஒரு படிப்பைப் படிச்சிட்டு   இருக்கேனே?’’ மறுப்பதற்குக் காரணம் இல்லாததால்  அரைமனதுடன் சம்மதித்தான் மித்ரன். படிக்கத் தொடங்கி ஆறு மாதம் ஆகியிருந்தது.முதல் செமஸ்டருக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கிக்கிடந்தான். அவ்வளவுதான், அவளின் படிப்பு தடைப்பட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் தினமும் காரை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் மால்களாகச்  சுற்றினாள்.  கன்னாபின்னாவென்று செலவு செய்தாள். தேவையில்லாவிட்டாலும் அதிகமான உடையைத் தனக்கும் குழந்தைக்கும் வாங்கினாள். இப்போதெல்லாம் அவர்களுக்குள் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை என்பது போலிருந்தது. வார்த்தைகளால் இருவருமே பெரும் வறுமையை எதிர்கொண்டார்கள். எப்போதாவது வரும் வாக்குவாதம் மட்டுமே உரையாடலாக இருந்தது. இல்லையேல் தொடர்ச்சியான கனத்த மௌனம். ஒருவரை ஒருவர் காயப்படுத்துவதைத் துல்லியமாகச் செய்தார்கள். குழந்தையின் முன்னால் முடிந்தவரை நடித்தார்கள்.

சித்தார்த்துக்குப் பதின்மூன்று வயதிருக்கும். தொடர்ச்சியாகப் பல நாள்கள்கூட வீடு வராமலிருந்தான் மித்ரன். வீட்டிலிருக்கும் நேரங்களிலும்  குறிப்பிட்ட  போன் கால்கள் வந்தால் போனை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் போய்த்  தாழிட்டுக்கொண்டான்.  நித்யா சண்டையிட்டு வாக்குவாதம் செய்து சலிப்படைந்துவிட்டிருந்தாள். இருவருமே ஒரு புள்ளியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தனர். சேர்ந்து இந்தப்  பிரச்னையிலிருந்து வெளியேற ஒரு வழி கண்டுபிடித்தார்கள். விவாகரத்து. இருவருக்குமே அது சரியான முடிவாகத்  தோன்றியது. சித்தார்த் அப்பாவுடன் இருக்க முடிவெடுத்தான். மித்ரனேகூட இதை எதிர்பார்க்கவில்லை. நித்யா உடைந்துபோனாள். ஆனால், தன் மகனின் முடிவை மதித்தாள். மனச்சுமையோடு பெங்களூரை  காலிசெய்து சென்னைக்குப் புறப்பட்டாள். இந்த முறை நித்யாவின்  குடும்பத்தினர்கள் அவளைத் தாங்கிக்கொண்டார்கள். தன் வாழ்க்கையைப் புதிதாய்த் தொடங்கினாள்.

 சில நாள்கள் கழித்து சித்தார்த்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாள். மித்ரன் சென்னை வரும்போது மகனை அழைத்து வந்தான். சித்தார்த் இவளுடன் சரியாகப் பேசமாட்டான். அவன் எடுத்த முடிவுதான் எனினும் நித்யா குற்ற உணர்ச்சியால் மருகிப்போவாள். இருவரையும் இயல்பாக இருக்க வைக்க மித்ரன் மிகவும் மெனக்கெடுவான். அது அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அலுவலகத்தில் ஒரு நாள் மயங்கி விழுந்தாள். சில நாள்களாக  உதிரப்போக்கு அதிகமாக இருந்திருக்கிறது. பெரிதாக ஒன்றும் இல்லை வீக்னெஸ். இரும்புச்சத்து குறைவு என்றார்கள். இவள் அசட்டையாக இருந்திருக்கிறாள். மறுநாள்  கண்விழித்துப் பார்க்கும்போது மித்ரன் எதிரே உட்கார்ந்திருந்தான்.   

p82i.jpg

மித்ரன் சில  நாள்கள் அருகிலிருந்து கவனித்தான். எல்லாப் பணிவிடைகளையும் செய்தான். நித்யா சங்கடமாக உணர்ந்தாள். ``நமக்குள்ள காதல்தான் செத்துப்போச்சு. நட்பு    இன்னும் இருக்கு நித்யா. நாம கல்யாணம் செஞ்சிருக்கக் கூடாது. நல்ல நண்பர்களா இருந்தோம், நண்பர்களாகவே இருப்போம்’’ என்று அவளை இயல்பாக்கினான் மித்ரன்.சித்தார்த்தும் வந்தான் அம்மாவைப் பார்க்க. அந்த இரு வாரங்கள் மூவருக்கும் இன்பமாய்க் கழிந்தன. அவர்கள் மூன்று பேரும் இரவு பகல் தெரியாமல் பேசிக்கொண்டேயிருந்தார்கள். நித்யா சந்தோஷமாய் இருந்தாள். அவர்கள் கிளம்பிச்சென்ற பிறகு அந்த நாள்களை மிஸ் பண்ணினாள். ஆனாலும் இது நாள் வரையில்லாத ஒரு நிம்மதியை உணர்ந்தாள்.

அதன் பிறகு அடிக்கடி மித்ரன் பிசினஸ் சார்ந்து சென்னை வரும்போதெல்லாம் பிள்ளையையும் அழைத்து வருவான். மூவரும்  சந்தித்துக்கொள்வார்கள். சினிமாவுக்கும் டின்னருக்கும் செல்வார்கள். தன் மகனுக்கு உடை எடுக்கும் சமயங்களில் மித்ரனுக்கும் சட்டை வாங்கி அவனைப் பார்க்கும்போது கொடுப்பாள். சமயங்களில்  மித்ரனும் ஏதாவது வாங்கிவைத்துக் கொடுப்பான். நித்யா இப்போது நாற்பது வயதைத் தொட்டுவிட்டாள். அவர்களுக்கு அவர்களின் எல்லை தெரிந்திருந்தது. குடும்பமாய் இருந்தபோது  இந்த எல்லையில்லாமல் எல்லோரும் ஒருவரின் மீது ஒருவர் அத்துமீறுவதாகவே தோன்றியது. யாரும் யாரின் அந்தரங்க வாழ்வுக்குள் கதவைத் தட்டாமல் நுழைவதில்லை.  எப்போது  சென்னை வந்தாலும் அவனுக்குப் பிடித்த மாதிரி அசைவ உணவு சமைத்து எடுத்துப் போவாள்.

இப்போது நித்யா ஏர்போர்ட் வந்துவிட்டாள். மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தாள். ஃபிளைட் வரும் நேரம்தான். ஓரிரு நிமிடத்துக்குள்ளாகவே மித்ரன் அவளுக்கு கால் செய்தான். ``வந்துட்டேன். எங்க இருக்குற”. ``நான் பார்க்கிங்ல இருக்கேன்.’’ ஏர்போர்ட்டுக்கு வெளி வாசலில் நின்றான் மித்ரன். காரை அவன் முன் வந்து நிறுத்தினாள். இருவரும் ஹாய் சொல்லிக் கொண்டார்கள். மித்ரன், ``நான் டிரைவ் பண்ணவா’’ என்று கேட்டான். ``இல்ல நீ ட்ராவல் பண்ணி வந்திருக்க.  ரெஸ்ட் எடு.  நான்  டிரைவ் பண்றேன்’’ என்று சொல்லி, காரை ஓட்டினாள்.  மல்லி வாசனையையும் தாண்டி மீன் வாசனை அவனைச் சுண்டி இழுத்தது. பின்னாடி திரும்பிப் பார்த்தான். ‘`உங்கம்மாவுக்குப் பிடிக்காதுதானே அசைவம் சமைக்கிறது. பின்னே ஏன் பண்றே?’’ அவள் எப்போதும்போல அழகாகச் சிரித்துவைத்தாள், அதை நான் பார்த்துக்கிறேன் என்கிற அர்த்தத்தில்.

அவனும் எப்போதும்போல அந்தக் காலையிலும் அவசரமாகப் பையைப் பிரித்து உண்ணத் தொடங்கினான். ஸ்பூன் டிஷ்யு என்று நேர்த்தியாகப் பேக் செய்திருந்தாள். சித்தார்த் கால் செய்தான். ``அப்பா சென்னை வந்துட்டேன்டா... அம்மாகிட்ட பேசுறியா..?’’ இல்லை, அப்புறம் என்று கண்களால் சொன்னாள். அவனுடைய அலுவலகத்தின் சென்னைக் கிளையில் அவனை இறக்கி விட்டாள். இறங்கியதும் ‘`உனக்குனு யாரையாவது தேர்ந்தெடுத்துக்கோ. லிவ் யுவர் லைஃப்’’ என்று ஆதுரமாகக் கைதொட்டான். நித்யா காரை ரிவார்ஸ் எடுத்தாள் ‘`அப்படி யாரும் இல்லன்னு நான் என்னைக்காவது உன்கிட்ட சொல்லியிருக்கேனா?’’ என்று முகத்தில் குறும்பு கொப்பளிக்கக் கண்ணடித்துத் தன் அலுவலகம் நோக்கி காரைச் செலுத்தினாள். 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.