Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ- ஒன்பது (A-9); முடிவொன்றின் ஆரம்பம்! (ஜீ உமாஜி)

Featured Replies

"அங்க போயிற்று மறந்திடுறேல்ல… கோல் பண்ணுங்கோ பதின்னாலாம் திகதி அங்க வருவன்... சந்திப்பம்" - பிரதீபன் அண்ணன்.

20.18 pm புறக்கோட்டை ரயில் நிலையம், கொழும்பு.

எனது இருக்கையில் அமர்ந்திருந்தேன். நல்ல மழை. இருந்தாலும் வெள்ளவத்தையிலிருந்து சும்மா துணைக்காகக் கூடவே வழியனுப்ப வந்திருந்தார் அண்ணன் பிரதீபன்.
"தாங்க்ஸ்ணே... பாத்துப்போங்க சந்திப்பம்"
இருவரும் கைகாட்டிக் கொண்டோம். 

ரயில் நகரத் தொடங்கியது. வவுனியா வரை ரயில்ப் பிரயாணம். பின்னர் பேரூந்தில் புகழ்பெற்ற A-9 வீதியூடாகப் பயணம். 2002 சமாதான உடன்படிக்கையை அடுத்து மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் சாத்தியமாகியிருந்த தரைவழிப்பயணப் பாதை அது. A-9 என்கிற யாழ்-கண்டி வீதி.

தாண்டிக்குளம், வவுனியா. காலை மணி ஐந்தரை.
யாழ் செல்லும் பேரூந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பயணிகள் தேநீர் அருந்திக்கொண்டும், சிலர் வீதியோரத்து கை பம்ப் அடிக்கும் குழாய்க் கிணற்றில் நீர் இறைத்து பல் விளக்கிக்கொண்டுமிருந்தார்கள். டீ குடித்துவிட்டு யன்னலோரம் என் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில்வே பாதையில் இரண்டு மயில்கள் சாவகாசமாக நடைபோட்டன. தூரத்தில் மயில் அகவும் சத்தம்.

அலைபேசியில் டினேஷனின் எண்ணை எடுத்துவைத்து, யோசித்தேன். கோல் பண்ணலாமா? என் முன்னே இரண்டு தேர்வுகள். அழைப்பெடுத்தால் என்னவாகும்? உடனடியாக டினேஷன் மோட்டர்சைக்கிளில் இங்கே வருவான். அடம்பிடித்து வீட்டுக்கு அழைத்துச்செல்வான். அங்கே போனால் எப்படியும் இரண்டு நாட்கள் கிளம்ப அனுமதிக்கமாட்டார்கள். அன்புத்தொல்லை.
எடுக்காவிட்டால் என்னவாகும்? இப்படியே யாழ்ப்பாணம் போய்விட்டு ஐந்து நாட்களில் திரும்ப வரலாம். இரண்டு நாட்கள் டினேஷன் வீட்டில் தங்கிவிட்டு, கொழும்பு செல்லலாம். இது நல்ல யோசனையாகப்பட்டது.
இருநிலையில் நின்ற மனதை தீர யோசித்து சாதகமான முடிவுக்குக் கொண்டு வந்திருந்தேன்.

நம் ஒவ்வொரு செயலுக்கும் சாத்தியமான பல விளைவுகள் உருவாகலாம். எதிர்வுகூற முடியாது. ஒரு செயலைச் செய்யும்போது என்ன நடைபெறும், செய்யாவிட்டால் என்ன நடைபெறும் என சாத்தியமான, எமக்குச் சாதகமான இரண்டு விளைவுகள் பற்றி நாம் சிந்திக்கிறோம். ஆனால், சாத்தியமான, எமக்குச் சாதகமல்லாத விளைவுகளும் ஏற்படலாம். சமயங்களில் முற்றிலும் எதிர்பாராத மூன்றாவது விளைவுகூட உண்டாகலாம்.

செல்பேசியை வைத்துவிட்டு தெளிவான மனநிலையுடன் இயற்கையை ரசிக்கத் தொடங்கினேன்.

murikandy.jpgமுறிகண்டி பிள்ளையார் கோவில். நேரம் காலை 8.45 மணி.
'ஓ! முருகண்டிக்கு வந்தாச்சா? அப்பிடி இப்பிடி ஏதும் லேட்டாப் போனாலும் எப்பிடியும் பன்ரண்டு மணிக்கு வீட்ட போயிடலாம்' என் யாழ்ப்பாணப் பிரயாணத்தில் ஒருநாளும் இவ்வளவு விரைவாக வந்ததில்லையே என நினைத்துக் கொண்டேன்.

“அவங்கள் அடிச்சா முதல் ஷெல் இங்கதான் வந்து விழும்!”

யாரோ ஒருவர் கலவரத்தை ஏற்படுத்தினார். வன்னியிலிருந்து யாழ் மண்ணிற்கான நுழைவாயிலான முகமாலைப்பகுதி. நாங்கள் வந்த பேரூந்து, புலிகளின் செக் போயிண்டில் இறக்கிவிட்டுத் திரும்பி விட்டதிலேயே ஏதோ குளறுபடி எனத்தெரிந்தது. வழமையாக புலிகளின் சோதனை முடிந்ததும் யுத்த சூனியப் பிரதேசம் கடந்து, இராணுவத்தின் செக் போயிண்ட் வரை கொண்டுபோய்விடும்.

யுத்த சூனியப்பிரதேசம் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தூரம் இருக்கலாம். அதற்கான வாயிற்கதவு ஒன்றிருந்தது. திறந்தேயிருந்தது. அருகே நின்றிருந்த ஒரு புலி உறுப்பினர் "அங்கால போகவேண்டாம் செஞ்சிலுவைச் சங்கம் கதைச்சிட்டிருக்கு" என்றார். கதவுக்கு அந்தப்பக்கம் செஞ்சிலுவைச் சங்கம் சிறு கண்காணிப்பு சாவடி அமைத்திருந்தது. அங்கே யாரும் இருக்கவில்லை. வெளியேறியிருந்தார்கள்.

திரும்ப வந்த வழியிலேயே சில அடிகள் நடந்து, அருகிலிருந்த கொட்டகைக்கு அருகே நின்று கொண்டோம். என்ன நடக்குது? நடந்திருக்கும்? அதற்குள் சூனியப் பிரதேசத்தில் புலிகள், இராணுவம் இருதரப்பும் ஒரு பயணியாக அன்றி ஆயுதங்களுடன் நுழைய கூடாது. யாராவது மீறும்போது அது, மோதலின் ஆரம்பமாக இருக்கும். சண்டை தொடங்கப் போகுதோ? அப்படியே ஆரம்பித்தால் என்ன செய்வது?

என்னைப் போலவே எல்லோர் மனதிலும் அந்தக் கேள்வி தோன்றியிருக்கும். யாரும் பேசிக் கொள்ளவில்லை. சரியாக அந்தச் சமயத்தில்தான் எல்லோர் மைண்ட் வொய்சையும் காட்ச் செய்து யாரோ ஓர் சிங்கன் சிக்சர் அடித்தார். அவங்கள் அடிச்சா முதல் ஷெல் இங்கதான் வந்து விழும்!”

பீதியைக் கிளப்பிய அவரை எல்லோரும் ஏக காலத்தில் பார்த்துக் கொண்டார்கள். ஷோர்ட்ஸ், டி ஷர்ட் அணிந்து, ஆறுமாத கர்ப்பிணி வயிறும், நெற்றில் முறிகண்டி வீபூதி சந்தனமும் துலங்க ஒரு தெய்வீகச் சிரிப்புடன் பேசினார். இந்த உலகுக்கு ஏதோ ஓர் உண்மையைத் தெரிவித்துவிட்ட மலர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. ‘அப்பிடியென்ன பெரிசா சொல்லிட்டேன் ஏதோ என்னால் முடிஞ்சது’ என்கிற ஒரு அவையடக்கமும் எளிமையும் கூடத்தெரிந்தது.

a-9_muhamalai.jpgஉண்மையில் அப்போதுதான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நின்று கொண்டிருகிறோம் என்பது பலருக்கும் உறைத்தது. கண்களில் பீதியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஓரிரண்டு பேர் அவசரமாகப் பக்கத்தில இருந்த பஸ் ஸ்டாண்டுக்குள் 'கவர்' எடுத்து நின்றுகொண்டார்கள். ‘பஸ்ஸ்டாண்ட்’ நான்கு தடிகள் நாட்டப்பட்டு, மேலே கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதில்ஆச்சரியப்பட ஏதுமில்லை.

நீங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயின், தொண்ணூற்றைந்தாமாண்டு காலம் வரை அங்கே வாழ்ந்தவராயின் புரியும். திடீரென ஹெலியோ, பொம்பரோ வந்துவிட்டால் கையில் இருக்கும் ஈழநாதம் பேப்பரால் தலையைக்கவர் செய்தபடி ஓடுவதையோ, மண்ணெண்ணெய்க் கியூவிலிருந்து, கானைத்தலைக்கு மேலே பிடித்தபடியே தெறித்தோடுவதையோ நீங்கள் கண்டிருக்கக்கூடும். சொல்லமுடியாது நீங்களே கூட அப்படி ஒருமுறையேனும் கவர் எடுத்திருக்கலாம்.

பீதி கிளப்புவது ஒரு அற்புதமான கலை. தமிழ்கள் பலருக்கும் இயல்பாகவே வாய்த்திருக்கிறது. நடிகர் வடிவேலுவின் பாஷையில் சொல்வதானால், தமிழனுக்கு எந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுகிறது.

பீதியைக் கிளப்புவது நம்மவர்களின் இயல்பான குணமாகவே மாறிப் போய்விட்டது. பீதி கிளப்புவதில் பலவகைகள் இருந்தாலும் நமது நாட்டு சூழ்நிலை சார்ந்து இரண்டு பிரதானமானவை. வேலை கிடைத்துக் கொழும்புக்கு வர ஆயத்தமானபோது, அது சமாதானகாலம் என்றாலும் யாழ்ப்பாணத்தின் நிலைமை சரியில்லை. அது இப்பவோ, அப்பவோ என்று இருந்தது. ஓர் பெண்மணி இப்படிக் கூறினார். “இனி சண்டை வந்தா கொழும்பிலதான் அடிவிழுமாம்”. 'நேற்றுத்தான் தலைவர் கடிதம் போட்டவர்' என்கிற ரீதியில் பேசினார்.

அவர் வேண்டுமென்றே கூறாவிடினும் இயல்பாகவே அப்படி வந்தது. அப்படியே பழகிப்போய் விட்டது. இது ஒரு ரகசிய எதிர்பார்ப்பாகவும், மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாகவும் பலருக்கும் இருந்திருக்கிறது. நாம் இருக்கும் இடம் தவிர, மற்றைய இடங்களில் நாம் விரும்பும் பிரதேசம் ஒன்றில் அடி விழப்போதாம் என்ற பீதி ஒருவித மனக்கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டிருக்கலாம். “யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு அடிச்சாத்தான் புத்திவரும்” என அவர்களும், “கொழும்புச் சனத்துக்கு அடிச்சாத்தான் தெரியும்” என இவர்களும் பேசுவதைப் பலரும் கேட்டிருக்கக்கூடும். ‘எங்கயாவது அப்பப்ப அடி விழவேணும்’ என்போரும் இருக்கிறார்களாம்.

இரண்டாவது வகை நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு உள்ளூரப் பயந்துபோயிருக்கும்போது பக்கத்திலிருப்பவனை இன்னும் அதிகமாகக் கலங்க வைப்பதில் ஒரு அற்ப சந்தோஷம்.

பொம்பர் குண்டுபோட மேலே வட்டம் போட்டுட்டிருக்கும். எங்க போடப்போறானோ? என்னாகப் போகுதோ? எல்லோரும் முழுசிக் கொண்டு பங்கருக்குள்ள இருப்பார்கள். அந்த நேரத்தில் ஒருவர் கதை சொல்ல ஆரம்பிப்பார் பாருங்கள். "அண்டைக்கு தெல்லிப்பளையில நடந்தது தெரியுமோ? இப்பிடித்தான் பங்கருக்குள்ள ஏழுபேர் இருந்தவையாம். பக்கத்தில குண்டு விழுந்து, மண்மூடி அவ்வளவுபேரும் சரி".
அப்படித்தான் அந்தப் பீதியூட்டுனரும் இராணுவம் அடிக்கப்போகும் ஷெல் குறித்துப் பேசினார்.

இராணுவப் பகுதியிலிருந்து ஒரு பேரூந்து வந்தது. ஆர்வமாக அருகில் சென்று விசாரித்தார்கள் சிலர். அது நாங்கள் வருவதற்கு சற்று முன்பு இங்கிருந்து சென்ற பேரூந்து என்பது தெரிந்தது. ‘ஆமி திருப்பி அனுப்பீட்டான்’ என்றார்கள்.

இப்போது வாயிற்கதவைப் பூட்டினார் அந்தப் புலி உறுப்பினர். "இங்க இருந்து போன லொறி ஒண்டில ஆயுதங்கள் இருந்ததாம். ஆமி கண்டுபிடிச்சுட்டான்களாம். அதான் விடுறானில்லையாம்" - யாரோ தகவல் அறிந்து சொல்லிக் கொண்டிருந்தார். 
அப்ப விடமாட்டாங்களா?

0enZ-bqIiBM6KscB8djc7TrIloUNNS8XLXLe8fsL

இப்போது எனக்குப் பீதியாக இருந்தது. திரும்பிக் கொழும்பு செல்ல வேண்டியதுதானா? அது ஒன்றும் பிரச்சினையில்லை. என்னிடமிருந்தது ஐம்பது ரூபாய் மட்டுமே என்பதுதான் இப்போது பிரச்சினை. முகமாலை ஆமி பொயிண்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இருபது ரூபாய் போதும். அப்போது வாழ்க்கை இரண்டு அட்டைகளை நம்பியிருந்தது. ஒன்று தேசிய அடையாள அட்டை. ஏ.டி.எம்.அட்டை. அது, சில வினோத பழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருந்தது. கையில் கடைசிக் காசு தீரும்வரை அக்கறையில்லாமல் இருந்துவிட்டு பின்பு வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கி இயந்திரத்தில் பணமெடுத்துக் கொள்வது. பயணங்களில் தேவையான அளவு பணத்தைமட்டும் கையில் வைத்திருப்பது என்கிற முன்யோசனையே இல்லாத அபத்தமான வழக்கமிருந்தது. சமயங்களில் அதைச் சமயோசிதபுத்தியாகவும் சிலர் சொல்வதுண்டு. இப்போது அது எனக்கு ஆப்பு வைத்துவிட்டது. ஒருவேளை திரும்பிச் செல்வதாக இருந்தால், வன்னியில் கொமர்ஷல் ஏடிஎம் எங்கே இருக்கிறது?

சரி, என்னமோ நடப்பதை வேடிக்கை பார்க்கலாம் மனநிலையில் இருந்தேன். சுற்றுமுற்றும் பார்க்க, தெரிந்த முகமாக ஒருவன், 
"ஹலோ எங்கயோ பாத்தமாதிரி இருக்கே .." 
"வேற எங்க சயன்ஸ் ஹோல்லதான்"
"எங்க பெராவா?"
"ஓமடா இப்ப ட்ரெயினிங்...செலிங்கோ பில்டிங் கட்டுது புதுசா"
"அந்த உயரமான பில்டிங்"
"அதேதான்.. நீ எங்க"
"வோட்டர் சப்ளை ப்ராஜெக்ட் ஒண்டில இருந்தேன் கன்றாக்ட் நேற்றயோட முடிஞ்சுது"
"வேற வேலை எடுத்துட்டியா?"
"அடுத்தது கன்றாக்ட் சைன் பண்ணச் சொல்லியிருக்காங்க. இன்னொரு பிபிஒ கம்பனிலயும் வேலை ரெடி. அப்பொயிண்ட்மெண்ட் லெட்டர் இன்னிக்கு வந்து எடுக்கச் சொன்னாங்க. ஒரு கிழமை வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு வருவம்னு வந்துட்டேன். நிறைய நாளாச்சு வந்து, நீ எங்க?"
"எனக்குக் காய்ச்சல்டா... நானும் ஒரு கிழமை வீட்ல ரெஸ்ட் எடுக்கத்தான் வர்றேன்" 
அடுத்தவருஷம் இருவரும் ஒரே கம்பனியில், வேலையில் சேர்ந்து நண்பர்களாகப்போவது தெரியாமல் நானும், பார்த்தியும் பேசிக் கொண்டிருந்தோம்.

"தம்பி கதவைத் திறந்துவிடு தம்பி நாங்கள் நடந்து போறம்" 
பொறுமையிழந்த சிலர் கதவைப் பூட்டிய புலி உறுப்பினருடன் பேசிக்கொண்டிருந்தார்கள். 
"அய்யா கொஞ்சம் பொறுங்கோ.. செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பெடுக்காமல் அப்பிடி விடேல்லாது.. சுட்டுடுவான்கள்"
"சுடமாட்டான் தம்பி நாங்க என்ன குண்டு வைக்கவே போறம்" விவரமாக அல்லது விவரமில்லாமல் ஒருவர் பேச, இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டார்கள்.
"எப்பிடியும் இண்டைக்கு விடமாட்டான்" கவர் எடுத்து நின்ற ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இங்கேயே நிற்க வேண்டிவருமோ? மிகுந்த யோசனையுடன் நொந்துபோயிருந்தேன். வேற வழி இல்லை. எப்பிடியாவது யாழ்ப்பாணம் போகவேணும். செக்போஸ்ட் கதவைத் திறக்கும் போராட்டத்தில் இப்போது நானும் முன்னிலையில் நின்றேன். ஒருகட்டத்தில் எல்லோரும் ஒருமித்து களத்தில் குதிக்க அரைமனதாக, "பாத்துப் போங்கோ" கதவைத் திறந்துவிட்டார் அந்தப் புலி உறுப்பினர். விரைவாக நடக்கத் தொடங்கியிருந்தோம். "ஒழுங்கா லைன்ல போங்க" பின்னாலிருந்து குரல் கேட்டது.

"ஓட்டோவில விட்டுப் பிடிக்கிறாங்களோ தெரியேல்ல" மகிழ்ச்சியாக ஒரு குரல்!
அந்த பீதியூட்டுனர் என்முன்னே சென்றுகொண்டிருப்பதை இப்போதுதான் கவனித்தேன். 
"வரவேண்டாம் எண்டு சொல்லுறாங்கள்" 
முன்னே சென்றுகொண்டிருந்தவர் குரல் கொடுத்தார்.

இராணுவத்தின் சாவடிக்கு இன்னும் ஐம்பது மீட்டர்கள் கூட இல்லை. வரிசை ஸ்தம்பித்து நின்றது. திரும்பப் போறதோ? குழப்பமாக அரைமணி நேரம் கடந்தபின்னர், பத்துப் பத்துப் பேராக அழைத்தார்கள். வழமையாகவே இராணுவச் சோதனை மிகக் குறைந்த நேரத்திலேயே முடிந்துவிடும். அன்று இன்னும் விரைவாகச் சோதனையை முடித்ததாகத் தோன்றியது. "ஒக்கே பிரச்சினை சரியாயிட்டுதுபோல" பேசிக் கொண்டோம். யாழ் செல்லும் மினி பஸ் ஒன்றில் ஏறியமர்ந்து கொண்டதும் மிகுந்த நிம்மதியாக இருந்தது. 
'அப்பாடா தப்பிச்சம்'

முகமாலை சோதனைச் சாவடி கடந்ததும், வழமைக்கு மாறான காட்சியொன்று காணக் கிடைத்தது. வீதியின் இருபுறமும் இராணுவத்தினர் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். இருநூறு பேருக்குக் குறையாமல் சண்டைக்குத் தயாராவதுபோல ஆயுதங்களோடு. எதுவும் விபரீதமாகத் தோன்றவில்லை. ஒருவேளை காலையில் சண்டைக்குத் தயாராக வந்திருக்கலாம். இப்போது எல்லாம் சுமுகமாகிவிட திரும்பிச்செல்லக் காத்திருக்கலாம்.

AcPIbCqKRtptFiYkyfWrIyJOzb8ZS88naADrkxrVகொடிகாமம் சந்திக்கு அருகாமையில் மினி பஸ் அரைமணி நேரம் காத்திருந்தது. 
"இப்பல்லாம் ஒவ்வொருநாளும் இப்பிடித்தான் ஆமியின்ர கன்வே போறதுக்காக ரோட்டை மறிச்சு வச்சிருவாங்கள்" யாரோ வெளிநாட்டிலிருந்து வந்த தம் உறவினருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். ஆயாசமாக இருந்தது. மணி ஒன்று காட்டியது. மீண்டும் மினிபஸ் ஓடத் தொடங்கியது. சாவகச் சேரியில் பிரதான வீதியைவிட்டு ஒரு ஒழுங்கைக்குள் சென்று மீண்டும் தரித்து நின்றது. வீதியில் ஆமிகன்வே செல்வது தெரிந்தது.

"என்ன மச்சான் ஆர்ட்டிலறி எல்லாம் கொண்டுபோறாங்கள், எங்கயோ அடிக்கப் போறாங்களோ? நாகர்கோவில், அங்காலைப் பக்கம்.." என்றேன் பார்த்தியிடம். பாருங்கள், நானும் தமிழன்தான்! இப்போது நீங்கள் கொஞ்சமும் சந்தேகமின்றி நம்பலாம்.

நேரம்இரண்டரைஆகியிருந்தது.யாழ்நகரப் பகுதி வெறிச்சோடியிருந்தது. அல்லது என் பிரமையோ? வைத்தியசாலை, பேரூந்து நிலையம் எல்லாமே ஒருவித அச்சமூட்டும் அமைதியுடன். ஒருவேளை சென்ற வருடத்தின் அசம்பாவிதங்கள் தொடர்ந்துகொண்டிருக்கலாம். மனோகரா தியேட்டர். மோகன்லாலும், ஜீவாவும் பெரிய சைசில் ஆக்ரோசமாகத் தெரிந்தார்கள். 'அரண்' படம்ஓடிக்கொண்டிருந்தது..

மாலை 5.00 மணி. 
குட்டித் தூக்கம் கலைந்து ஞாபகமாகப் பிரதீபன் அண்ணனுக்கு அழைப்பெடுக்க, செல்பேசியை எடுத்தேன். ‘டயலொக்’ தொடர்புச்சேவை செயலிழந்திருந்தது. பக்கத்தில் பிள்ளையார் கோவிலில் பூசைக்கு ஆயத்தமணி அடித்தது. அயல் நண்பர்களைக் காணலாம் என்று கோயிலுக்கு வந்தேன். 
"ஜீ எப்ப வந்தது? பிரச்சினை இல்லையா?" என்றார் சுதா அய்யா. 
"பிரச்சினையா எங்க?" 
"ஜீ பொறுத்த நேரத்தில வந்திருக்கு, ஏ 9 பாதை பூட்டீட்டாங்கள்" என்றார் மூர்த்தி அண்ணன். அவ்வளவு அதிர்ச்சியாக இல்லை அப்போது. 
"அது பிரச்சினையில்ல. ரெண்டு மூண்டு நாளில திறந்திடுவாங்கள்"
ஆறுமணி. யாழ் கோட்டைப பகுதியிலிருந்து பூந்திரி கொளுத்தியதுபோல தீப்பிழம்புகள் கிளம்பிச் சென்றன. தொடர்ந்து இடிமுழங்குவதுபோல சத்தமும் கேட்டது. 
"பூநகரிக்கு மல்ரிபரல் அடிக்கிறாங்கள்"
அன்று 11 ஆவணி 2006! முகமாலைப் பகுதியில் மோதல் தொடங்கியதாகவும், யாழ்ப்பாணம் முழுவதும் இரவு முதல் ஊரடங்குச்சட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் வானொலி, செய்தி தெரிவித்தது.

HFT235pO9kihX3wn247YXHuwpviHtm695VAOWzSDhttp://www.4tamilmedia.com/special/yard/9534-a-9

  • கருத்துக்கள உறவுகள்

ஏ 9  பாதைதான் எவ்வளவு வரலாறுகளை விழுங்கிக் கொண்டு இன்னமும் விழித்திருக்கு.....!   

  • தொடங்கியவர்

நன்றி அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.