Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசை கனவே... அதிசய நிலவே!

Featured Replies

ஆசை கனவே... அதிசய நிலவே!

 

white_spacer.jpg

ஆசை கனவே... அதிசய நிலவே! white_spacer.jpg
title_horline.jpg
 
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
white_spacer.jpg

ண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண்ணிட்டிருந்தா தூக்கம் வரும்’ என்று யாரோ கூறியது ஞாபகத்துக்கு வர, மனதுக்குள் எண்ண ஆரம்பித்தேன்.

‘‘ஒண்ணு...’’

p65d.jpg

‘ஒரு நாள்கூட, உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியாது பாலு!’

‘‘ரெண்டு...’’

‘ரெண்டு குழந்தை பெத்துக்கலாம் பாலு!’

‘‘மூணு...’’

‘‘மூன்றாம் பிறை படம் பாத்தி ருக்கியா பாலு?’

‘‘கடவுளே...’’ என்று எழுந்து அமர்ந்தேன். நைட் லேம்ப் வெளிச்சத்தில் அருகில் உறங்கிக்கொண்டு இருந்த புது மனைவியைப் பார்த்தேன். கட்டிய மனைவியை அருகில் வைத்துக்கொண்டு, பழைய காதலியை நினைத்துக்கொண்டு இருக்கிறேன். எத்தனை பெரிய துரோகம்?

குற்ற உணர்வுடன், கட்டிலைவிட்டு இறங்கினேன். சட்டைப் பையிலிருந்து சிகரெட்டையும், தீப்பெட்டியையும் எடுத் துக்கொண்டு, அறைக்கதவைத் திறந்து பால்கனிக்கு வந்தேன்.

ஜிலுஜிலுவென்று வீசிய காற்று, மனதுக்கு இதமாக இருந்தது. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தேன். சென்னை நகரமே ஆழ்ந்த உறக்கத் தில் இருக்க, நான் மட்டும் பைத்தியக்காரன் போல் நடு இரவில் சிகரெட் பிடித்தபடி நின்றுகொண்டு இருக்கிறேன்.

எத்தனையோ பேர் காதலில் தோற்றாலும், வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் இரண்டு வருடங்களுக்கு முன் எவனையோ திரு மணம் செய்துகொண்டு, அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டவளைப் பற்றி இன்னும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்?

யோசனையுடன் சிகரெட் புகையை இழுத்தபோது, ‘‘என்னங்க... தூங்கலையா?’’ என்று குரல் கேட்டுத் திரும்பினேன். தூக்கக் கலக்கத்துடன் புடவையைச் சரி செய்தபடி, என் புது மனைவி நந்தினி.

‘‘என்ன நந்தினி... தூங்கலையா?’’

‘‘திடீர்னு முழிப்பு வந்துச்சு’’ என்ற நந்தினி, என்னையே உற்றுப் பார்த்தாள்.

‘‘நான் ஒண்ணு கேப்பேன். மறைக்காம உண்மையைச் சொல்லணும். என்னைப் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?’’

‘‘ஏய்... என்னது அசடு மாதிரி... பிடிச்சுதான் பண்ணிக்கிட்டேன். அதுல உனக்கென்ன சந்தேகம்?’’

‘‘அப்புறம் ஏன் ஒட்டவே மாட்டேங்கறீங்க? கல்யாணமாகி பத்து நாளாகுது. எப்பவும், எதையோ பறிகொடுத்த மாதிரி யோசனையிலேயே இருக்கீங்க. நாலு வார்த்தை கலகலப்பா பேசறதில்லை. ஹனிமூனும் போகவேண்டாம்னு சொல்லிட்டீங்க. ஒரு சினிமா, பீச்சுக்குக்கூட அழைச்சிட்டுப் போகலை. என்னைப் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க...’’ என்ற நந்தினியின்கண்கள் கலங்கியிருந்தன.

‘‘என்னம்மா இது, நீயா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டு... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஆபீஸ்ல கொஞ்சம் டென்ஷன். ஆனுவல் இன்ஸ் பெக்ஷன் நடக்குது. அந்த ப்ரஷர்தான். வேற ஒண்ணுமில்ல’’ என்ற நான் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்துவிட்டு, நந்தினியின் தோளைப் பிடித்து, ‘‘எல்லாம் சரியாப் போயிடும். மனசைப் போட்டு உழப்பிக்காம, போய்ப் படு!’’ என்றேன்.

‘‘நான் ஒண்ணு சொல்றேன், கேப்பீங்களா?’’

‘‘சொல்லு!’’

‘‘நீங்க இப்படிப் பட்டும் படாம இருக்கிறதைப் பார்த்து, எங்கப்பா ரொம்பக் கலங்கிட்டாரு. ஜோசிய ரைப் போய்ப் பார்த்திருக்காரு. அவர் உங்க ஜாதகத்தைப் பார்த் துட்டு, உங்களுக்கு ராகு தோஷம் இருக்கு... ஒரு முறை ராகு ஸ்தலத்துக்குப் போய் வந்தா, எல்லாம் சரியாப் போயிடும்னு சொன்னாராம்!’’

‘‘எனக்கு இந்த ஜோசியம், ஜாதகம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லே. இருந்தாலும், உனக்காக வரேன். எந்தக் கோயி லுக்குப் போகணும், சொல்லு?’’ என்றேன்.

‘‘திருநாகேஸ்வரம்’’ என்று நந்தினி சொன்னதும், தூக்கி வாரிப் போட்டது. சுதாரித்துக்கொண்டு, ‘‘ஏன், திருநாகேஸ்வரம்தான் போகணுமா? வேற ஏதாச்சும் கோயிலுக்குப் போகலாமே?’’ என்றேன்.

‘‘அங்கேதான் நாகநாத சுவாமி கோயில் இருக்கு. அங்கே ராகு பகவானுக்கு 21 தீபம் ஏத்தி, ஞாயித் துக்கிழமை சாயங்காலம் ராகு காலத்துல, ராகுவுக்கு பால் அபிஷேகம் செஞ்சா, எல்லாம் சரியாப் போயிடுமாம். திருநாகேஸ் வரத்துல எங்கப்பாவோட சிநேகிதர் ஒருத்தர் இருக் காரு. அவரே எல்லா ஏற் பாடும் செஞ்சிடுவாரு. என்ன சொல்றீங்க?’’ என்று ஆர்வத் துடன் என் முகத்தை நோக்கினாள் நந்தினி.

நந்தினியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆசையாகக் கேட்கிறாள். தயக்கத்துடன், ‘‘சரி’’ என்றேன்.

‘‘தேங்க்ஸ்!’’ என்று என் புறங்கையில் முத்தமிட்டாள்.

‘‘சரி, நீ போய்ப் படு. நான் இப்ப வந்துடறேன்’’ என்று நந்தினியை அனுப்பி வைத்தேன்.

நந்தினி, ‘திருநாகேஸ்வரம்’ என்ற வார்த்தையைக் கூறிய வுடன் ஏற்பட்ட பதற்றம், இன்னும் தணியவில்லை. வேகமாக மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டேன்.

கடவுளே... என்னை ஏன் இப்படி மீண்டும் மீண்டும் சோதிக்கிறாய்?

திருநாகேஸ்வரத்தைப் பற்றி நினைத்தபோது, கூடவே வித்யாவின் ஞாபகமும் பொங்கிக்கொண்டு எழும்பு வதைத் தவிர்க்க முடியவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்... நான் எம்.ஏ., முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் தேங்கிப் போயிருந்த நாட்கள் அவை. ஒரு மத்தியான நேரத்து வீதி போல் சோம்பிக் கிடந்த அந்நாட்களில், சூறாவளியாகப் புகுந்தாள் வித்யா.

எங்கள் ஃப்ளாட்டுக்கு எதிர் ஃப்ளாட்டில் குடி வந்த பேங்க் மேனேஜரின் மகள். என் தங்கையும் அவளும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால், இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.

தங்கை மூலமாக, வித்யாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம். பிறகு திருட்டுத் தனமாகப் புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டோம். பின்பு இதயங்களையும் பரிமாறிக்கொண்டோம்.

புதிதாகச் சிறகுகள் முளைத்த பறவைகள் போல் உற்சாகமாகத் திரிந்த காலம் அது. ஓரப் பார்வை களில் சிலிர்த்து, மொட்டை மாடி இருட்டு ஈர முத்தங்களில் கிறங்கிக் கிடந்த நாட்கள் அவை.

ஒருநாள் டி.வி-யில் ‘மகாநதி’ படம் போட்டார்கள். நான், என் தங்கை, வித்யா மூவரும் எங்கள் வீட்டில் அமர்ந்து, ஒன்றாக அந்தப் படத்தைப் பார்த்தோம். மறுநாள் மாலை, கடற் கரையில் சந்தித்தபோது, ‘‘மகாநதி ஃபர்ஸ்ட் கிளாஸ் படம்ல?’’ என்றாள் வித்யா.

‘‘ஆமாம்... நான் ரெண்டு மூணு ஸீன்ல கண்கலங்கிட்டேன்!’’

‘‘எனக்கு சோகமான ஸீன்களை விட, திருநாகேஸ்வரம் ஃப்ளாஷ்பேக் தான் ரொம்பப் பிடிச்சிருந் தது. திரும்பின பக்கமெல்லாம் பச்சைப் பசேல்னு வயல், கரை புரண்டு ஓடுற காவிரி, ரயில்வே கேட் பக்கத்துல அந்தப் பழங்காலத்து வீடு... எல்லாம் மனசுல அப்படியே நிக்குது. ராத்திரி பூரா தூங்கவே இல்லை. ஏதேதோ கற்பனை.’’

‘‘என்ன கற்பனை?’’

‘‘சொன்னா சிரிப்பே!’’

‘‘சிரிக்கலை. சொல்லு!’’

‘‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, திருநாகேஸ் வரம் போய்க் குடும்பம் நடத்துற மாதிரி!’’

‘‘ஏய் லூசு... நடக்கிற காரியமா பேசு!’’

‘‘அட, நான் சீரியஸாதான் சொல் றேன்ப்பா! ராத்திரி பூரா என்னென்ன நினைச்சிட்டிருந்தேன் தெரியுமா?’’ என்றாள் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு.

‘‘என்ன நினைச்சிட்டிருந்தே?’’

 

‘‘ரெண்டு பேரும் திருநாகேஸ் வரத்துல காவிரிக் கரையோரமா ஒரு வீடெடுத்துத் தங்கறோம். நீ சாப்பிட் டுட்டு சிவப்புத் திண்ணையில் படுத்துத் தூங்குறே. நான் உன் வயித்துல எட்டுப் புள்ளி கோலம் போட்டுப் பாக்கு றேன். காவிரிக் கரை படிக்கட்டுல உக்காந்துகிட்டு, உனக்கு வெத்திலை பாக்கு மடிச்சுத் தர்றேன். நீ காவிரித் தண்ணிக்குள்ள மூழ்குறப்ப நான் ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண் ணுறேன். நான் எத்தனை எண்ணுற வரைக்கும் நீ தண்ணிக் குள்ள இருக்கியோ, அத்தனைமுத்தம் தர்றேன் உனக்கு!’’

‘‘ஆஹா... இது சூப்பரா இருக்கே! இப்பவே அட்வான்ஸா ரெண்டு குடு. அப்புறம் கழிச்சுக்கலாம்!’’

‘‘சீ... போடா!’’ என்று சிணுங்கிய வித்யா, ‘‘முத்தமெல்லாம் இருக்கட்டும். நான் பாட்டுக்கு தண்ணிக் குள்ள மூழ்குறதைப் பத்திப் பேசிட்டிருக்கேன். உனக்கு நீச்சல் தெரியும்ல?’’ என்றாள்.

‘‘சுத்தமா தெரியாது! நான் பொறந்து, வளர்ந்ததெல்லாம் இங்கே சென்னைல. தாம்பரம் தாண்டி எங்கேயும் போனதில்லை. எங்க போய் நீச்சல் கத்துக்கறது?’’

‘‘அட, என்னப்பா நீ... என் கற் பனையை எல்லாம் சொதப்பிட் டியே! போ... போய் மொதல்ல நீச்சல் கத்துக்க.’’

‘‘ஏண்டி இவளே... இது உனக்கே நியாயமா படுதா? 24 வயசுல நீச்சல் கத்துக்கச் சொல்றியே?’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரி யாது. நீ கட்டாயம் நீச்சல் கத்துக் கறே!’’

‘‘வித்யா... ஆர் யூ ரியலி சீரியஸ்?’’

‘‘வெரி சீரியஸ்! இந்த ஊரோட டிராஃபிக், கும்பல், சத்தம், புகை... எதுவுமே எனக்குப் பிடிக்கலே! அதே மாதிரி, எனக்கு வேலைக்குப் போறதுலயும் இஷ்டம் இல்லை. ஆனா இந்த ஊருல, ஒருத்தர் சம்பளத்துல குடும்பம் நடத்துறது கஷ்டம். அதான், பேசாம திருநாகேஸ்வரம் மாதிரி அழகான ஊர்ல போய் செட்டி லாகிடலாம்னு தோணுது! ஒழுங்கா படிச்சு, சட்டு புட்டுனு டி.என்.பி.எஸ்.சி. பரீட்சை பாஸ் பண்ற வழியைப் பாரு. எந்த ஊர்ல போஸ்ட்டிங் போட்டா லும், திருநாகேஸ்வரத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிடலாம்!’’

அவள் சொன்னது மிகவும் அபத்தமாகத் தோன்றியது. என்றாலும், காதலின் சுவாரஸ் யமே அந்த அபத்தத்தில்தானே உள்ளது!

அதன் பிறகும், வித்யா அவ்வப்போது திருநாகேஸ் வரத்தைப் பற்றிப் பேச்செடுப் பாள்... ‘‘ஏன் பாலு? திருநாகேஸ் வரத்துல இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலெல்லாம் இருக்குமில்ல?’’

‘‘ஏன் கேக்குற?’’

‘‘நம்ம பிள்ளைங்களைப் படிக்க வைக்கத்தான். இல்லாட்டாலும் பரவால்ல, விடு! திருநாகேஸ்வரத்துலயிருந்து கும்பகோணம் பக்கம்தான். அங்கே அனுப்பிப் படிக்க வெச்சா போச்சு! என்ன சொல்றே?’’

வித்யா திருநாகேஸ்வரம் கற்பனைகளைப் பற்றி விவரிக்க விவரிக்க, எனக்கே அந்த ஊரில் வாழவேண்டும் என்கிற ஆர்வம் நாளடைவில் உருவாகிவிட்டது. தீவிரமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிக்க ஆரம் பித்தேன்.

தேர்வு முடிவு வந்து, எனக்கு வேலை கிடைப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன், எங்கள் காதல் விஷயம் வித்யாவின் பெற்றோருக்குத் தெரிய வர... எங்கள் காதல் கோட்டையை மணல் கோட்டை போல் மிக எளிதாக மிதித்துச் சிதைத்துவிட்டார்கள். அமெரிக்க மாப்பிள்ளை என்றதும், ‘‘ஹூம்... எதுவும் விதிப்படிதான் நடக்கும் பாலு! என்னை மறந்துடு’’ என்று கூறிவிட்டு, சுலபமாக என்னிடமிருந்து விலகிக்கொண் டாள் வித்யா.

திருநாகேஸ்வரத்தில் வாழ ஆசைப் பட்டவள், லாஸ் ஏஞ்சலீஸ் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டுப் பறந்து போய்விட்டாள்.

நந்தினியின் கழுத்தில் தாலி கட்டி, இன்றோடு பத்து நாட்களாகிவிட்டது. இன்னும் என்னால் மனசளவில் அவளை நெருங்க முடியவில்லை. மனசு வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. இந்தச் சூழ்நிலையில், திருநாகேஸ்வரத்துக்கு வேறு செல்லப் போகிறேன். இது நந்தினியிடமிருந்து என்னை இன்னும் விலக்கிவிடாதா..! கடவுளே!

சனிக்கிழமை இரவு புறப்பட்டு, மறுநாள் காலை மாயவரத்தை அடைந்து, காளியாக்குடி லாட்ஜில் அறையெடுத்துத் தங்கினோம். மதியம் டாக்ஸி பிடித்து, திருநாகேஸ்வரத்தைச் சென்று அடைந்தபோது மணி மூணு. நாலரைக்குதான் அபிஷேகம்.

என் மாமனாரின் குடும்ப நண்பர் தணிகாசலம், எங்களுக்காகக் கோயில் வாசலில் காத்துக்கொண்டு இருந்தார்.

‘‘என்னம்மா... நல்லாயிருக்கியா?’’ என்று நந்தினியிடம் கேட்டவர், என்னிடம் ‘‘கல்யாணத்துல பார்த்தது. நிறையப் பேரை அறிமுகப்படுத்தி யிருப்பாங்க. ஞாபகமிருக்காது’’ என்று சிரித்தார். நான் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தேன்.

‘‘சாப்பிட்டாச்சா?’’ என்றார்.

‘‘மாயவரத்திலேயே சாப்பிட்டுட்டு தான் கிளம்பினோம்’’ என்ற நான், ‘‘சார்... நாலரைக்குதானே அபிஷேகம்? இங்கேர்ந்து காவிரி ஆறு பக்கம்தானே?’’ என்றேன்.

‘‘காவிரி ஆறு இல்லை; அதோட கிளை, நாட்டாறு. உப்பிலியப்பன் கோயில் தாண்டி, அரை கிலோ மீட்டர் போகணும்’’ என்றார்.

‘‘இன்னும் டைம் இருக்கே. அப்படியே நடந்து போய்ட்டு வந்துரலாமா?’’ என்றேன்.

‘‘தாராளமா!’’ என்றபடி, நடக்க ஆரம்பித்தார். கோயிலுக்கு வலப்புறமாகத் திரும்பி நடந்தோம்.

சுற்றிலும் பார்த்தேன். நானும் வித்யாவும் வாழ விரும்பிய ஊர். சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. வரிசையாகக் கடைகள்.

நான் பணிபுரியும் அரசுத் துறையின் பெயரைச் சொல்லி, திருநாகேஸ் வரத்தில் அதற்கு அலுவலகம் உள்ளதா என விசாரித்தேன். ‘‘இல்ல தம்பி, கும்பகோணத்துலதான் இருக்கு!’’ என்றார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதைவிடப் பெரிய ஏமாற்றம், ஆற்றங் கரையில் காத்திருந்தது. நாங்கள் கனவு கண்டாற்போல, அகலமான ஆறெல்லாம் இல்லை. குறுகலான ஆறுதான். அதிலும் தண்ணீர் இல்லை. பெரும் பாலான பகுதி வெறும் மணற்காடாக விரிந்திருக்க, ஒரு ஓரமாக பேருக்குக் கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாதம்கூட நனையாது.

‘‘என்ன சார், கரை புரண்டு தண்ணி ஓடும்னு எதிர்பார்த்தேன்’’ என்றேன் நான்.

‘‘அதெல்லாம் 15 வருஷத்துக்கு முந்தி! வருஷத்துல 300 நாள் இப்படித் தான் இருக்கும். மழைக் காலத்துல மட்டும் கொஞ்சம் தண்ணி ஓடும். அதுகூட நீங்க நினைக்கிறாப்ல கரை புரண்டெல்லாம் ஓடாது!’’

‘‘மகாநதி சினிமாவுல திருநாகேஸ் வரத்தைக் காண்பிப்பாங்க. அதுல கமல், ஆத்துல முங்கிக் குளிக்கிற மாதிரியெல்லாம் ஸீன் வரும்!’’

‘‘முங்கிக் குளிக்கிறதாவது? நல்ல தமாஷ்! அது வேற எங்கயாச்சும் எடுத்திருப்பாங்க. நான் இந்த ஊர்ல முங்கிக் குளிச்சு 20 வருஷத்துக்கு மேல ஆச்சு!’’

சுற்றிலும் பார்த்தேன். கரையோரமாக ஒரு குடிசை வீடுகூட இல்லை.

‘‘சார், இங்கே கரையோரமா வீடுகள் கிடையாதா?’’ என்றேன்.

‘‘ம்ஹூம்! சரி, வாங்க போகலாம். டயமாச்சு!’’ என்ற தணிகாசலம், திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

மனதிலிருந்து ஒரு திரை மெள்ள மெள்ள விலகுவதை என்னால் உணர முடிந்தது.

மாலை, அபிஷேகத்தைப் பார்த்துக் கொண்டே யோசிக்க, யோசிக்க... திரை முற்றிலுமாக விலகிவிட்டது.

நானும் வித்யாவும் கனவு கண்ட எதுவும் திருநாகேஸ்வரத்தில் இல்லை. காதல் என்பது ஒரு சுவாரஸ்யமான கனவு. கனவுகளால் ஊதி ஊதிப் பெரிதாக்கப்படும் பலூன்தான் காதல்! பலூன் வெடித்ததும், சிறு குழந்தை போல் ஒரு விநாடி அதிர்ந்து, ஒரு நிமிடம் அழுது, ஓய்ந்துவிட வேண்டும். காலத்துக்கும் உடைந்த பலூனைக் கட்டிக்கொண்டு அழக் கூடாது!

கோயில் மணிச்சத்தம் முழங்க, அர்ச்சகர் காட்டிய தீபாராதனைத் தட்டிலிருந்து குங்குமம் எடுத்து நந்தினியின் நெற்றியிலும் வகிட்டிலும் இட்டேன்.

சுத்தமாக அலம்பிவிட்டது போல், மனசு பளிச்சென்று இருந்தது!

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு சுவாரஸ்யமான விடயம்.... அதிகமான காதல் சுத்தமாய் அலம்பி பிழிந்து உடுத்தற வேட்டி மாதிரி கொஞ்சம் ஈரத்துடன் ......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.