Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது- தமிழரசுக் கட்சி

Featured Replies

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது- தமிழரசுக் கட்சி

 
 
 

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது- தமிழரசுக் கட்சி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், “தேர்தல்கள் வரும் போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை. அவ்விதமான ஒன்றே கடந்த 27ம் திகதியன்று அவரால் வெளியிடப்பட்ட அறிக்கையாகும். ஐயா அவர்கள் தான், அரசியல் சாராத ஓர் அரசியல்வாதி என்று சொல்கிறார். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக இவரது பெயரை நான் முன்மொழிந்தேன்.
பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள்’வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்’ என்று எச்சரித்தார். இருப்பினும் அவரையும் சமாதானப்படுத்தி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம். கிழக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களும் வடாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீட்டுச் சின்னத்திற்கு ஆதரவு தேடினோம்.
இவரை அரசியலுக்குக் கொண்டுவர முற்பட்ட போது எமது தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘அரசியல் என்பது அடிமட்ட மக்கள் வரை சென்று வேலை செய்யும் ஒரு துறை, விக்னேஸ்வரன் அவர்களைப் போன்ற உயர் அந்தஸ்தைப் பராமரிக்கக்கூடியவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அந்த நிலைமையில் இருந்து இறங்கி வரமாட்டார்கள். இது நமது அரசியலைப் பாதிக்கும்’ என்று குறிப்பிட்டார். அவருடைய வாக்கு இன்று மெய்த்துவிட்டது.


அதுமட்டுமல்ல எட்டு மாகாண முதலமைச்சர்களும் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள். அதிகம் வலியுறுத்த வேண்டிய வடமாகாண முதல்வர் இக்கூட்டங்களில் கலந்து கொள்ளவும் இல்லை, வலியுறுத்தவும் இல்லை. இவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்கத்தவர். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற எல்லா தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களுக்கும் ஐயா அவர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய இரண்டொரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டும் இருக்கின்றார். ஆனால் அநேகமாக மதிய வேளைக்குள் அவர் விடைபெற்றுச் சென்று விடுவார். இவ்வாறு இருக்க கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, தனது கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பளிக்கவில்லை என்று குறிப்பிடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.


வன்முறை சாராத கட்சி என்றவகையில் இயற்கையாகவே இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன்தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன என்று அவர் கூறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் தனக்குத் தரப்பட்டதாகவும், அதிலிருந்த கொள்கைகள் சரியெனப் பட்டதாகவும் கூறுகின்றார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் (1977களில் வெளியிடப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தவிர்ந்த) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதே அல்லது இதனைத் தழுவிய விடயங்களே இடம்பெற்றிருக்கின்றன.
ஐயா அவர்கள் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெளியிட்ட பத்திரிகை அறிக்கைகளில் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினை மையப்படுத்திய) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் மக்களை அணிதிரளும் படி பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.இக்கட்சியின் கொள்கையின்பால் இருந்த பிடிமானமே இதற்குக் காரணமாக இருந்திருக்கும்.


இந்தக் கொள்கைக் கோட்பாடுகளின்றும் தமிழ் அரசுக் கட்சி எவ்விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஒரு கொள்கையின் பொருள் கோடல் என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இலக்கணப் பொருள்கோடலாக இருக்க முடியாது என்பது ஐயாவிற்குத் தெரியாததொன்றல்ல. அந்த வகையிலே நடப்பியல் தழுவிய செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எவ்விதத்திலும் விலகிச் செல்லவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியலுக்கு வரவழைக்கப்பட்ட போது அக்கட்சி பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி அல்ல என்பது தனக்குத் தெரியாது என்று கூறுகின்றார். கூட்டமைப்பு பதியப்பட்டிருந்தால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று ஐயா ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். 2014ல் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐயா அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டார். அவர் வருகின்றார் என்பதற்காக சுமந்திரன் அவர்களே வண்டியின் சாரதியாக இருந்து வண்டியைச் செலுத்தி வந்தார். நான் இவர்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
தென்சூடானின் முன்னுதாரணத்தை நாமும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் போர்க்குற்றம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் நின்று சிறந்த சான்றுகளை முன்வைக்கும் போது சான்றுகளினுடைய பெறுமானத்தைக் கருத்திற் கொண்டு இன அழிப்பு நடைபெற்றது என்ற தீர்ப்பைப் பெறும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். என்ற விடயத்தை ஆசிரியரும், மாணவனும் கருத்தொருமித்துக் கலந்துரையாடினர்.


இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கூட குறித்த பிரேரணை வடமாகாணசபையில் முன்வைக்கப்படவில்லை. ஆனால் 2015ல், ஆட்சி மாற்றத்தின் பின் இன அழிப்புப் பிரேரணை வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. அதுவும் ஆரம்பத்தில் அதனை முன்மொழிய முனைந்த சிவாஜிலிங்கம் அவர்கள் முன்மொழியாது விக்னேஸ்வரன் ஐயா அவர்களே முன்மொழிந்தமையானது ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்திதானே? அவ்வாறு ஒரு அவசியம் இருந்திருந்தால் கூட அது ஏன் தலைமைக்குத் தெரிவித்திருக்கப்படக் கூடாது.
கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராஜா அண்ணன் அவர்களுக்கு சென்றடைந்தமைதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்பு கனவாயிற்றே என்பதைச் சகித்துக் கொள்வது கடினம் தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல. ஐயா அவர்கள் அரசியலுக்கு வருமுன் குறிப்பிட்டார் ‘நீங்கள் எல்லாம் நிர்ப்பந்திப்பதால் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக நிற்கின்றேன், அதேவேளை இரண்டரை வருடங்கள் மாத்திரமே பதவியிலிருப்பேன்’ என்று பெருமனதோடு குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகாநாட்டின் பின்னர் வேறொரு விஸ்வரூபம் எடுத்து விட்டார்.


இவர் எமக்கு மிகவும் வேண்டியவர். இவரது மனநிலை மாற்றம் தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமோ என்று கூட கவலையடைகின்றோம். ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரத்தில் ஏற்பட்ட இந்தத் துர்ப்பாக்கியத்தை நினைத்து ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்’ என்று பாரதி கேட்டது போல கேட்கத் தோன்றுகிறது.
இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார். 2017.10.21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அதனை நிராகரிப்பதாகச் சொன்னார். பின்னர் தான் அதை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சொன்னார். அவர் குழம்பாமல் இருப்பதும், மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்.


அரசியலமைப்பு என்பது இன்றைய நிலையிலே புரிந்துணர்வோடு, இணக்கப்பாட்டோடு உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. இவை இரண்டும் இல்லையென்றால் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு தீர்வு அடையப்பட மாட்டாது. சமஷ்டி என்பது நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபட்ட பொருள் கோடலைக் கொண்டதாக வழங்கிவருகின்ற, வளர்ந்து வருகின்ற ஒரு கோட்பாடு. பிரித்தானிய ஒற்றையாட்சி கூட வடஅயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற பிராந்தியங்கள் பிரிந்து செல்லக்கூடிய தத்துவங்களைக் கொண்டிருக்கின்ற அளவிற்கு தற்போது மாற்றமடைந்துள்ளது. எனவே அரசியல் தீர்வில் சமஷ்டி, சுயநிர்ணயம் என்பன எழுதப்படுவதற்கு மேல் செயற்படுத்தப்படுவதிலேயே அதிகம் தங்கியுள்ளன.
இடைக்கால அறிக்கையை ஆறு உபகுழுக்களின் அறிக்கை, இடைக்கால அறிக்கை, பின் இணைப்புக்கள் எனும் எல்லாவற்றையும் ஒருசேரப் படித்தே பொருள்கோடல் செய்ய வேண்டும். இப்போது இருக்கின்ற வாய்ப்பை எல்லோரும் சேர்ந்து பயன்படுத்த வேண்டும். எதுஎது இல்லை என்று கருதுகின்றோமோ, அவ்வவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் என்ன உத்திகள் கையாளப்பட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும். நமது தனிப்பட்ட கௌரவங்கள், பிடிவாதங்கள் என்பன தமிழ் மக்களின் தலைவிதியாக மாற்றிவிடக் கூடாது. அடுத்த தரப்பினரை அகௌரவப்படுத்திக் கொண்டு புரிந்துணர்வோடு கூடிய நல்லிணக்கத்தை எய்த முடியுமா?


எனினும் நான்கு ஆண்டுகளின் பின் அச் சபைக்குச் சென்றார்கள். சோல்பரி ஆணைக்குழுவின் முன் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டு ஐம்பத்தைந்திற்கு நாற்பத்தைந்து முன்வைக்கப்பட்ட போது அதனையும் ஏற்க மறுத்தார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தம் வந்தபோது ஐயா ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் செல்வநாயகம் தமிழ் மக்களை விற்றுவிட்டார் என்று பரப்புரை செய்தார். டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் போதும் இதுவே நடைபெற்றது. 1987ல் வடகிழக்கிற்கான இடைக்கால நிர்வாகசபை அறிவிக்கப்பட்ட போது நாம் கொடுத்த மூன்று பெயர்களைப் பெற்ற ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் அதில் ஒருவரைத் தலைவராகத் தெரிவு செய்த போது அதனை சாதுரியமாக நகர்த்தாமல் அந்த வாய்ப்பையே போட்டுடைத்தோம்.
13வது திருத்தத்தின் பின்னர் வடகிழக்கு இணைப்பு என்பது நிபந்தனையோடு கூடியதாக இருந்தது. சரியோ பிழையோ தேர்தல் நடைபெற்று வடகிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதே! அதே போன்று ஒரு தேர்தல் மூலம் வடகிழக்கை இணைத்திருக்க முடியாதா? அந்த வாய்ப்பையும் நழுவ விட்டோம். 1999ல் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வகையிலான நீலன் – பீரிஸ் தீர்வுத் திட்டம் அரசியலமைப்புச் சட்டமாக வந்தது. பின்னொரு நாளில் அன்டன் பாலசிங்கம் அவர்களே இது வரவேற்கத்தக்க தீர்வுப் பொறிமுறை என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கூட நழுவவிட்டோம். இவ்வாறு வெண்ணெய் திரண்டுவரும் போதெல்லாம் தாழியை உடைத்த வெற்றி வீரர்களின் வாரிசுகள் நாம்.


இது ஒரு நாடு, இந்த நாட்டுக்குள்ளே தான் நமக்கான தீர்வு. தீர்வின் அடிப்படை புரிந்துணர்வுடனான, விட்டுக் கொடுப்பும், நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கமும் ஆகும். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் முன்மொழிவு உண்டு. இது இடைக்கால அறிக்கை மட்டும் தான் இறுதி வடிவம் இன்னும் வரவில்லை. தோசை சுடுபவளுக்கு எப்போது அதைப் புரட்டிப் போட வேண்டும் என்று தெரிய வேண்டும், என்று தொண்டமான் அவர்கள் ஒரு முறை கூறியிருக்கின்றார். சமையற்கலைப் புத்தகத்தைப் படித்துவிட்டு மட்டும் வந்து தோசை சுட முடியாது. அது போலத்தான் அரசியற் கலையை நூல்களை வாசித்துவிட்டு மட்டும் கையாள முடியாது.


மக்கள் விக்னேஸ்வரன் ஐயாவை முதலமைச்சராக்கியது தீர்வுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அதில் சேர்ந்துள்ள ஒவ்வாரு கட்சியினதும் செயற்பாட்டோடு சேர்ந்து பலம் சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். நடப்பியல் அறிந்து அதை நகர்த்த வேண்டும். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது’. கம்பவாருதி அவர்கள் ஐயா விக்னேஸ்வரன் பற்றி பல பக்கக் கட்டுரை வரைந்திருக்கின்றார். அவற்றைப் படித்தோம், ஆனால் பெரிது படுத்தவில்லை. அவற்றின் இலக்கணமாக அவர் இருந்து விடக் கூடாது என்று இன்றும் நாங்கள் விரும்புகின்றோம்.


அண்மையில் கனகீஸ்வரன் அவர்களின் முன்னிலையில் மூன்று மணித்தியாலங்கள் ஐயா விக்னேஸ்வரன், ஐயா சம்பந்தன் அவர்களுடன் மனம் திறந்து கலந்துரையாடினார். அதற்குப் பின் 84 வயதிலும் சம்பந்தன் அவர்கள் எல்லா விடயங்களையும் அறிந்து வைத்துள்ளார் என்று அவரே குறிப்பிட்டும் இருக்கின்றார். மாற்றுத் தலைமை தேவையில்லை என்றும் சொல்லியிருக்கின்றார். இந்த நிலையில் இவ்வாறான அறிக்கை ஏன்? தமிழரசுக் கட்சி கொள்கை வழியே தான் செல்கின்றது. நடப்பியல் தழுவி நடந்து கொள்கின்றது. இதனை மக்களுக்கு விளக்கியுள்ளோம். மக்களும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தூங்குவது போல் பாசாங்கு செய்வோரை என்ன செய்வது?


சிங்கள மக்களுக்கு சமஷ்டி பற்றி விளக்குவதில் சுமந்திரன் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். சோபித தேரரின் அணியினால் அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து அவர் சமஷ்டி பற்றிக் கூறிய விடயம் அமோக வரவேற்புப் பெற்றது. இச் செயற்பாடு தொடர்கின்றது. எலும்புத் துண்டு பற்றியெல்லாம் ஐயா பேசுகின்றார். இது இரண்டாம், மூன்றாம் தரப் பேனாக்களின் வாசகங்கள். இதை நீங்களும் சொல்லுவது ‘நிலத்திற் கிடந்ததை கால் காட்டும்’ என்ற குறளை நினைக்கச் செய்கின்றது. இது உங்கள் தராதரத்திற்குரிய பாவனை அல்ல.
துயரோடு இருக்கின்ற எல்லாத் தமிழர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றேன் தமிழ் மக்களின் நம்பிக்கை வீணாகக்கூடாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/முதலமைச்சர்-விக்னேஸ்வர-5/

  • கருத்துக்கள உறவுகள்

 இப்ப வந்த விக்கினேஸ்வரன் ஐயாவை விமர்சிக்காமல் நீங்கள் இவ்வளவு காலமாய் சாதித்ததை சொல்லுங்கோ. நீங்கள் சரியாய் நடந்திருந்தால் அவர் ஏன் குழம்புகிறார். அது சரி நீங்கள் பெரிய வீர தீரர் இருக்க என்ன காரணத்திற்காக விக்கினேஸ்வரனை கொண்டு வந்தனீங்கள்? நீங்கள் அவரை வெறும் வேட்ப்பாளராய் மட்டும் நிறுத்தி வெற்றி பெற்றபின் ஓரம்  கட்ட நினைத்தீர்கள், ஆனால் மக்கள் அவர் பக்கம் இருப்பதால் நீங்களும்  குழம்பி அவரையும் குழப்பி அவரை ஒரு குழப்பவாதியாக சித்திரிக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் கலைஞ்சு இளம் சமுதாயத்திடம் கட்சியை   ஒப்படைக்கிற வழியைப் பாருங்கோ. நீங்கள் எல்லாம் தோத்த, ஏமாந்த அரசியல்வாதிகள். விக்கியர் அரசியலுக்கு வரமுதல் நீங்கள்   அரசாங்கத்தோட கூடியிருந்து என்னத்தை சாதிச்சனீங்கள் ?  கூடிக் கூத்தடிச்சுப்போடு வாக்கு வேட்டைக்கு  வக்கணையாய் வந்து மேடையில வீற்றிருந்து கச்சேரி நடத்தினீங்கள். இப்ப காலம் மாறி மக்களும் விழித்து விட் டார்கள்.  ஒரு தலைவன் வாக்கு கொடுத்து வாக்கு வாங்கும் போது கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேணும். இல்லையெண்டால் அடுத்தமுறை சொன்ன பொய்யையே சொல்லிக்கொண்டு  வாக்கு கேட்டு வரக்கூடாது. அதையேதான் முதல்வரும் சொல்லுறார். நீங்கள் சரியாய் நடந்தால் மக்கள் ஏன் அவரின் பேச்சைக் கேட்க போகிறார்கள். உங்களுக்காகத்தான் மக்கள் அவருக்கு வாக்குப் போட்டார்கள் என்று சொல்கிறீர்கள்.  அது உண்மையெண்டால் பிறகேன் அவரின் பேச்சைக் கேட்டு பதறுகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

 இப்ப வந்த விக்கினேஸ்வரன் ஐயாவை விமர்சிக்காமல் நீங்கள் இவ்வளவு காலமாய் சாதித்ததை சொல்லுங்கோ. நீங்கள் சரியாய் நடந்திருந்தால் அவர் ஏன் குழம்புகிறார். அது சரி நீங்கள் பெரிய வீர தீரர் இருக்க என்ன காரணத்திற்காக விக்கினேஸ்வரனை கொண்டு வந்தனீங்கள்? நீங்கள் அவரை வெறும் வேட்ப்பாளராய் மட்டும் நிறுத்தி வெற்றி பெற்றபின் ஓரம்  கட்ட நினைத்தீர்கள், ஆனால் மக்கள் அவர் பக்கம் இருப்பதால் நீங்களும்  குழம்பி அவரையும் குழப்பி அவரை ஒரு குழப்பவாதியாக சித்திரிக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் கலைஞ்சு இளம் சமுதாயத்திடம் கட்சியை   ஒப்படைக்கிற வழியைப் பாருங்கோ. நீங்கள் எல்லாம் தோத்த, ஏமாந்த அரசியல்வாதிகள். விக்கியர் அரசியலுக்கு வரமுதல் நீங்கள்   அரசாங்கத்தோட கூடியிருந்து என்னத்தை சாதிச்சனீங்கள் ?  கூடிக் கூத்தடிச்சுப்போடு வாக்கு வேட்டைக்கு  வக்கணையாய் வந்து மேடையில வீற்றிருந்து கச்சேரி நடத்தினீங்கள். இப்ப காலம் மாறி மக்களும் விழித்து விட் டார்கள்.  ஒரு தலைவன் வாக்கு கொடுத்து வாக்கு வாங்கும் போது கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேணும். இல்லையெண்டால் அடுத்தமுறை சொன்ன பொய்யையே சொல்லிக்கொண்டு  வாக்கு கேட்டு வரக்கூடாது. அதையேதான் முதல்வரும் சொல்லுறார். நீங்கள் சரியாய் நடந்தால் மக்கள் ஏன் அவரின் பேச்சைக் கேட்க போகிறார்கள். உங்களுக்காகத்தான் மக்கள் அவருக்கு வாக்குப் போட்டார்கள் என்று சொல்கிறீர்கள்.  அது உண்மையெண்டால் பிறகேன் அவரின் பேச்சைக் கேட்டு பதறுகிறீர்கள்? 

மிகச்சரியான கூற்று.

தேர்தலில் பின்னடைவு வருமாயின் எந்தமுகத்தோட சம்பந்தரையா மைத்திரி-ரணில்- சந்திரிகாவைச் சந்திக்கிறதாம். அதுதான் உண்மைகள் வெளிப்படும்போது இந்தத் துள்ளல்.  எதிர்காலத்தில்  தமிழ்மக்கள் பெருன்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தாலும் ஆச்சரியப்படமுடியாது.  அதற்கான வேலையைத்தான் தமிழரசுக்கட்சிசெயகிறதோ என்ற ஐயம் எழுகிறது. 

1. கூட்டமைப்பைப் பதியாது தவிர்த்து வருதல்
2. கூட்டமைப்பிலிருந்த கட்சிகளை வெறுப்பேற்றி அகற்றுதல்.
3. கூட்டமைப்பெனில் அனைத்துக் கட்சிகளும் பங்காளரென்ற மெய்நிலையை ஏற்காமை.
4. தேர்தல்காலத்தில் ஒன்றும் நாடாளுமன்ற காலத்தில் ஒன்றும் பேசுதல்.
5. தமிழ்தேசியத்தின் நலனைவிடக் கட்சியினதும் தமது சுயநலனையும் முன்னிறுத்தியதுமான கட்சியாக வளர்க்கும் முனைப்பு.
6. பதவிகளுக்காகச் சந்தர்பவாதக் கூட்டுகளை ஏற்படுத்தல்.
7. மக்களாதரவை மறுதலித்துக் கட்சிவிசுவாசிகளை முன்னிறுத்தல்
8. மக்களது தேவைகளைப் புறம்தள்ளிச் சிங்கள இனவாத அரசுகளைக் காத்தல்.
9.  தமிழினத்தினது இனவழிப்பை மறுதலித்துப் போர்குற்றமென்ற சிங்களத்தின் எண்ணக்கருவையே தாங்களும் ஏற்று நிற்றல்.
10. தமிழினவிரோத நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று கையாளாத கையாலாகாத்தனம். (எ-டு:தீப்தி போகல்லாகம விடயம். இதேவேளை சோனகராயின் றிசாத் உட்பட எத்தபைேர் வந்திருப்பர்)
இதுபோன்ற பல்வேறு நிலைகள் சார்ந்து சிந்திக்கும் தமிழினம் இடைத்தரகர்களை நீக்கிவிட்டு  தமிழப்பொது மக்கள் மற்றும்  புலமையாளர்கள் கொண்ட ஒரு குழுவை நிறுவி இரண்டு இனவாதக்கட்சியுடனும் பேசி  யாரால் தமிழினத்துக்கு அதிகபட்ச நன்மைகளைத் தரமுடியுமோ அந்தக் கட்சிகளைத் தேர்தலில் ஆதரிப்போமென்று செல்வதற்கான  வழியை மறைமுகமாக ஏற்படுத்தும் சூழலைத் தோற்றுவிக்கும் செயற்பாடகவே நோக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லை குடுத்துட்டார் எல்லாத்துக்கும் சேர்த்து வாங்கி கட்டபோகினம் .இதுக்கே அந்தாள் விளக்க அறிக்கை என்று காய்ச்சி எடுக்கபோகுது .

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயா, ஆண்டு வாரியாய் எல்லாத்தையும் மறக்காமல் நினைவூட்டியதற்கு நன்றிகள். ஒன்றல்ல இரண்டல்ல இவ்வளவு நடந்தும் எந்த ஒரு தமிழ்த் தலைமையும்   தங்கள் பதவிகளை விட்டு வெளியேறாமல் மக்களுக்கு துரோகமே செய்துள்ளனர். ஆரம்பத்திலேயே முளையிலே கிள்ளி ஏறிய வேண்டிய பிரச்னையை இவ்வளவு தூரம் விட்டுகுடுக்கிறோம்  என்று எங்களுக்கு மேல் சிங்களவனை குடியமர்த்தினது நீங்கள் தான். அத விடுங்கோ இளைஞரை உசுப்பேத்தமுதல் எங்கட நிஞாயபாட்டை  சர்வதேசத்துக்கு கொண்டுபோனீர்களா? அதையும் விடுங்கோ போர்நடக்கும்போது சிங்களவன் ஓடியோடி ஆதரவு தேடும்போது உங்களின் தரப்பு நிஞாயத்தை எடுத்துச் சொன்னீர்களோ? அதையும் விடுங்கோ தங்களின் இன்னுயிரை இழந்து ஒரு பாதையை திறந்து மிகுதியை கொண்டு செல்லுமாறு விட்டுச்சென்ற பாதயையாவது சரியாகப் பயன்படுத்தினீர்களா?  நீங்கள் ராஜதந்திரி என்று சப்பை கொட்டும் ஒண்டு சொல்லுது அமெரிக்கா போன்ற நாடுகள் சொன்னதாம் நீங்கள் ஜெனிவா வரவேண்டாம் நாங்கள் உங்களுக்காக கதைத்து பிரச்சனையை தீர்க்கிறோம் என்று. பாமர மக்களை ஏமாற்றும் சாதாரண வக்கீலாய் கதை அளக்கிறார். சாதாரண சிவில் வழக்கிலேயே வழக்காளியும் எதிராளியும் ஒன்றாக சமூகமளித்தாலே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.. வழக்காளி வழக்கை போட்டுவிட்டு தன்பாட்டுக்கு விட்டிடேந்தியாய் இருந்தால் வழக்கு இழுபடும். ஒரு கட்டத்தில் வழக்கு தள்ளப்படும். இல்லை எதிராளி ஒளித்து திரிந்தால் தீர்ப்பு வழக்காளிக்கு சார்பாய் வெளியிடப்படும். இதுவே கிரிமினல் வழக்காயிருந்தால் பிடியாணை பிறப்பித்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடைபெறும். ஆனால் நீங்கள் சம்பந்தப்பட்ட  மக்களுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து வாங்கிப் பதுக்குகிற மாதிரி சர்வதேசத்தையும் கணக்குபோடுகிறீர்கள். எங்களை முட்டளாக்குகிறீர்கள்.  உங்களுக்கு நடைமுறையும் தெரியேல்லை. எல்லாத்துக்கும், எல்லாருக்கும் கூனிக் குறுகி முதுகெலும்பு வளைந்து விட்டுது. நிமிர்ந்து நிக்கிறவர்களைக் கண்டால் வயிறு எரியுது. அதனால இப்ப அரசியலுக்கு உங்களால் கொண்டுவரப்பட்டு,மக்களால் தெர்ந்தெடுக்கப்பட விக்கியரை குறை சொல்லி உங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கிறீர்கள். உங்கள் வசனத்தில் சொல்லால் தோசையை பிரட்டிப் போட்டு கருகிய பக்கத்தை மறைக்கப் பார்க்கிறீர்கள். "ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு." அதைத்தான் முதல்வர் செய்துள்ளார். தவறுக்கு நியாயம் கொடுப்பதை,  தேடுவதை விட்டு திருந்தப் பாருங்கள் அல்லது ஒதுங்குங்கள். 

  • தொடங்கியவர்
  • கட்சித் தலைமை கனவு கலைந்ததே முதலமைச்சரின் எதிர்ப்புக்கு காரணம்
கட்சித் தலைமை கனவு கலைந்ததே முதலமைச்சரின் எதிர்ப்புக்கு காரணம்
 
 

கட்சித் தலைமை கனவு கலைந்ததே முதலமைச்சரின் எதிர்ப்புக்கு காரணம்

 
 

தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவி தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சிக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றார் என்று நேற்றுப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்.

‘‘இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவி மாவை. சோ.சேனாதிராசாவுக்கு 2014ஆம் ஆண்டு சென்றடைந்ததன் பின்னர்தான், தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்தார். விக்னேஸ்வரனின் தலைமை எதிர்பார்ப்பு கனவாகிவிட்டது. இதனை அவர் சகித்துக் கொள்வது கடினம்தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல’’ என்று அவர் தான் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த கிறிஸ்மஸ் தினத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் அறிக்கை ஒன்றை விடுத்தார். உள்ளுராட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தக்கூடிய அறிக்கை அது என்று அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்படுகிறது.

தன்னோடு ஒத்துப்போகக்கூடிய கொள்கையை உடையவர்கள் தமிழ் மக்கள் பேரவையிலேயே இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். பேரவையில் தமிழ்க் காங்கிரஸ், புளொட் மற்றும் ஈபிஆர்எல்எவ் ஆகிய அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் புளொட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈபிஆர்எல்எவ் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் தமிழ்க் காங்கிரஸ் தனித்தும் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இத்தகைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிப்பாகத் தமிழ் அரசுக் கட்சியை விமர்சித்து முதலமைச்சர் விடுத்த அறிக்கை தேர்தலில் அந்தக் கட்சியைப் பலவீனப்படுத்தும் கபடத்தனம் மிக்கது என்று கட்சியினர் கருதுகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் முதலமைச்சர் இதேபோன்று நடந்துகொண்டார் என்று கருதும் கட்சி, கடந்த முறை போன்று அமைதியாக இருக்காமல் முதலமைச்சருக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றது. அப்படிச் செய்யவில்லை என்றால் கட்சி பலவீனப்பட்டுவிடும் என்றும் கருதுகின்றது.

அதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தகிடுதத்தங்களை, அரசியல் சித்து விளையாட்டுக்களை மக்களிடம் பகிரங்கப்படுத்தி அவருக்கு சூட்டோடு சூடு பதிலடி வழங்கக் கட்சி தயாராகியுள்ளது.
இதன் வெளிப்பாடே பொதுச் செயலாளரின் நேற்றைய அறிக்கை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இவ்வாறான அறிக்கைகளை விடுப்பாரானால் அவர் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்தி பதில் அறிக்கைகளை விடுப்பதற்கும் கட்சி தயாராகிவருவதாகச் சில வட்டாரங்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தன.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ‘‘மாற்றத்துக்குக் காரணம் 2014ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மாநாடே! கட்சியின் தலைமைப் பதவி மாவை சோ.சேனாதிராசாவைச் சென்றடைந்ததுதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்பு கனவாயிற்றே என்பதைச் சகித்துக்கொள்வது கடினம்தான். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல.

முதலமைச்சர் பதவியில் தான் இரண்டரை வருடங்கள் மட்டுமே இருப்பேன் என்று அவர் முதலில் கூறியிருந்தார். ஆனால் தமிழ் அரசுக் கட்சியின் மாநாட்டின் பின்னர் வேறொரு வடிவம் எடுத்துவிட்டார். இவரது மனநிலை மாற்றம் தமிழ் மக்களின் துர்ப்பாக்கியம்’’ என்று தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://newuthayan.com/story/58894.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.