Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

ஜெயமோகன்

vairamuthu1xx

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்.. பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக  படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள்,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியேவாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது.

இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும்.  இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும்.

இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும்.

ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை  எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை.அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே.

உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு  ‘எதற்கு வம்பு’ என்பதே.வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம்.  இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும்.

ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்.இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும்.  தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி.

இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது.

சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார்

கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள்.

என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும்

அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.   இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம்.

http://www.jnanpith.net

 

http://www.jeyamohan.in/105208#.WkZvybunxR4

 

வைரமுத்து ஞானபீடம் பெறுவதால் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை? மக்களிடம் நன்கு பரீட்சயம் பெற்ற மக்கள் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி வைரமுத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர், இலக்கிய ஆய்வாளர் ஜெயமோகனின் அறிக்கை ,

இங்கே யாழில் சில சமயங்களில் ஒருவர்மேல் ஒருவர் தொடுக்கும் தனிப்பட்ட தாக்குதல் ரகம்! ஒரு படைப்பாளிக்கு விருது கொடுக்காதே என்று தடுக்கும் இன்னொரு படைப்பாளியின் குரலில் கண்டிப்பாக இலக்கியம் இருக்காது ஏதோ ஒருவகை எரிச்சல்போலவே பார்க்கப்படும்!

வைரமுத்து என்ற திமுக அடிவருடி,கருணாநிதியின் பாதம் தொழுதுவாழும் மனிதன்மேல் எனக்கு துளியளவுகூட மரியாதை கிடையாது,

ஆனால் வைரமுத்து என்ற தமிழை சுவாசிக்கும் பெரும் கவிஞன்மீது எப்போதும் கொள்ளை ஆசை உண்டு!

தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை, ஒரு பெரும் கவிஞன் என்று நாங்கள் சொல்வது, அவர் இயற்ற, கரிகரன் கதைக்க, ரகுமான் தட்ட, நாங்க மேற்கத்திய இசைபோல்லிருக்கென்று ரசித்ததால்.

ஒரு நன்மை, மேற்கத்திய ஆங்கில மோகத்திலிருந்து இந்த அடிமைக்கூட்டத்தை (வேறு வழியில்லாமல் அடியானவர்களும் இதிலடங்கும்) கொஞ்சம் காப்பாத்தியிருக்கிறார்கள் இவர்கள், இல்லையென்றால் நாங்களிப்ப ஆங்கில பாடல்களைத்தான் எல்லா சமூகவலைத்தளங்களிலும் பகிர்ந்திருப்போம்.

இவர்கள், எமது அடிமனத மேற்கத்தையர்க்குகெதிரான, போட்டி, வெறுப்பு, இவற்றுக்கு இவர்கள் தீனிபோட்டார்கள் அல்லது நாங்கள் அவர்களை பாவித்தோம், அவர்கள் கனகச்சிதமாக உழைத்தார்கள்.

Edited by Knowthyself

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2017 at 5:26 PM, கலைஞன் said:

வைரமுத்து ஞானபீடம் பெறுவதால் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை? மக்களிடம் நன்கு பரீட்சயம் பெற்ற மக்கள் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி வைரமுத்து. 

ஜெயமோகன் சொல்வது..

 

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

ஜெயமோகன்

vairamuthu1xx

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

வைரமுத்துவின் ஞானபீடமுயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய ஜனதாவின் பிரமுகர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியாத எவரும் தமிழில் இல்லை. அவர் எப்போதுமே எல்லா வழியிலுமே சுயமுன்னேற்றத்திற்காக முயல்பவர், ஆகவே அதில் அதிர்ச்சி கொள்ளவும் ஏதுமில்லை

ஞானபீடம் ‘நல்ல’ எழுத்துக்காக அளிக்கப்படுவது அல்ல. ஒரு காலகட்டத்தின் குரலாக, ஒர் இலக்கியச்சூழலின் அடையாளமாக, ஒரு உச்சசாதனையாளாக கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படுவது. வைரமுத்து அவ்வாறு இந்தியச்சூழலில் அடையாளப்படுத்தப்படுவார் என்றால் அது தமிழுக்கு மிகப்பெரிய சிறுமை. எளிதில் களையப்படக்கூடியது அல்ல அது. அதையே நான் குறிப்பிட்டேன்.

ஞானபீட விருதுகள் ஆகஸ்ட் வாக்கில் உறுதிசெய்யப்படுகின்றன. செப்டெம்பர் அல்லது அக்டோபரில் அறிவிக்கப்படும். இப்போது அதற்கான திட்டமிட்ட பூர்வாங்க வேலைகள் நிகழ்கின்றன. இத்தருணத்தில் கறாரான விமர்சனங்கள் வழியாக அவருடைய இடத்தை தமிழில் வகுக்கவேண்டிய பொறுப்பு, வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதை தெளிவாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் இலக்கியச் சூழலுக்கு உண்டு. முன்னரே அவருடைய முயற்சிகளைப்பற்றிஎழுதியது இதனாலேயே

ஏனென்றால் வைரமுத்து தமிழின் ஓர் அதிகார மையம் என்பதனாலேயே இங்கே அவரைப்பற்றி எதிர்மறையாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. அது பொதுவான தமிழ்க்குணம், அதிகாரமற்றவர்களைச் சீண்டுவதும் அதிகாரத்தை போற்றுவதும். இது அவருக்கு துணையாக ஆகிறது. விருதுக்கு அவர் சென்றுகொண்டிருக்கையிலேயே ஓரிரு விமர்சனக்கருத்துக்களேனும் வந்தால் மட்டுமே பயன். அன்றி ஆகஸ்டில் முடிவெடுக்கப்பட்டபின் பேசிப் பயனில்லை

இணையம் அளிக்கும் வாய்ப்புகளில் ஒன்று எந்த மனமயக்கமும் தேவையில்லை, நாம் பெரும்பாலும் மொண்ணைகளிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று ஐயமில்லாமல் நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறது அது என்பது. இவ்விஷயத்திலும் அதையே எதிர்பார்த்தேன். நடக்கிறது

வழக்கமான மொண்ணைத்தனங்கள், நூறாயிரம் முறை மறுமொழி சொல்லப்பட்டுவிட்டவை. ஒன்று, ’எல்லாமே இலக்கியம்தான், இதுதான் இலக்கியமென எவர் முடிவுசெய்வது?’ – என்னும் குரல். இந்த விஷயத்தை சோறு துணி எதிலாவது இந்த மொண்ணைகள் கருத்தில்கொள்கின்றனவா? இலக்கியத்தில், சிந்தனையில், கலையில் எப்போதுமே தரம் என்று ஒன்று உண்டு. அது ஆதாரங்களால் எல்லா மொண்ணைகளுக்கும் தெரிய நிரூபிக்க முடியாதது. ஆனால்  மானுட முயற்சிகள் எதிலும் ஒன்று இன்னொன்றைவிட மேல் என்பதனால்தான் ரசனை என ஒன்று இருக்கிறது. அந்த தரம்நோக்கிச் செய்யப்படும் முயற்சியே கலையின் அடிப்படை விசை. அதில் கருத்தியல்வேறுபாடு இருக்கும், ஆனால் கலைச்செயல்பாட்டின் நெறிகள் பொதுவானவையே

நல்ல இலக்கியம் என ஒன்று இல்லை என்பது இலக்கியம் என்பதே இல்லை என்பதற்கு நிகரானது. இதே மொண்ணைகளிடம் வைரமுத்துவை விட ராஜேஷ்குமார் மேல் என்று சொல்லுங்கள், எகிறுவார்கள். மக்கள் வாசித்தால்தான் இலக்கியம் என்றால் பி.டி.சாமிதான் அய்யா இலக்கியமேதை.

இன்னொரு மொண்ணைக்குரல்.எவர் முடிவுசெய்வது என்பது. இலக்கியத்தின் தரத்தை அவ்விலக்கியச்சூழலில் இருப்பவர்களே முடிவுசெய்யவேண்டும். நல்ல டாக்டரை டாக்டர்களே முடிவுசெய்கிறார்கள். நல்ல பொறியாளரை பொறியாளர்களே முடிவுசெய்கிறார்கள். ஐராவதம் மகாதேவன் சிறந்த தொல்லியல் ஆய்வாளர் என்பதை மக்கள் வாக்களித்தா தேர்ந்தெடுத்தார்கள்? Peer review என அதற்குப்பெயர். வைரமுத்து இலக்கியச்சூழலில் இலக்கியவாதியாக இன்றுவரை ஏற்கப்படாதவர்.

மொண்ணைத்தனங்கள் மேலும். ’வைரமுத்து லாபி செய்கிறார் என்றால் எங்கேதான் லாபி இல்லை’ என இன்னொருகுரல். வைரமுத்து லாபிசெய்வதை குறைசொல்லவில்லை, செய்யட்டும். அதன்மூலம் தமிழுக்கு அவர் சிறுமையை ஈட்டித்தருவதை மட்டுமே கண்டிக்கிறோம். இது இலக்கியமதிப்பீடு சார்ந்த ஒரு கண்டனம். நூறாண்டுகளுக்கும் மேலாக இங்கே இருந்துவரும் நவீன இலக்கியம் என்னும் இயக்கத்திலிருந்து எழும் குரல் இது.

எந்த எழுத்தாளரையும் விருதுகள் வரை கொண்டுசென்று சேர்க்கவேண்டும். அவ்வாறு கி.ராவை கொண்டுசென்று சேர்க்கவேண்டும் என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அது இலக்கியச் செயல்பாடு. ஆனால் ஆளும்கட்சிக்குப்பின்னால் சென்று அதைச்செய்வது அப்படி அல்ல, அது கீழ்மை. அதை வணிகத்தில் ஒருவர் செய்தாலே கீழ்மை. இலக்கியம் வணிகம் அல்ல, என்ன இருந்தாலும் இதுஒரு கொள்கைச்செயல்பாடு..

’இவன் விருதுக்காக எழுதுகிறான், பொறாமையால் பேசுகிறான்’ – என ஒரு குரல்.  ‘எல்லா விருதுகளையும் இப்படித்தான் இவன் எதிர்க்கிறான்’ என இன்னொரு குரல். இதெல்லாம் எழுதப்படிக்கத்தெரியாத கும்பல். எந்த விருதுகளை ஏற்றிருக்கிறேன், எந்த விருதுகளுக்கெல்லாம் பாராட்டுவிழாக்களையே ஒருங்கிணைத்திருக்கிறேன் என வாசிப்பவர்களுக்குத் தெரியும்..

என்னென்ன அறிவுஜீவி பாவனைகள்!

“நான் விருதுகளுக்கு அப்பால்சென்று யோசிப்பவன், ஆனால் இக்கட்டுரையில் இலக்கணப்பிழை உள்ளது”

“சரி, இதைச்சொல்ல இவர் யார்?”

“நான் இதை பின்நவீனத்துவப் பகடிதான்சார் பண்ணுவேன்”

ஆனால் எந்த அந்தர்பல்டியிலும் தெரியாமல்கூட, வாய்தவறிக்கூட வைரமுத்துவை இலக்கியவாதி என ஏற்கவில்லை என்று ஒரு சொல் வந்துவிடக்கூடாது. பின்நவீனத்துவமே ஆனாலும் அதிகாரத்துடன் உரசிவிடக்கூடாது.வேடிக்கை என்னவானாலும் அது வைரமுத்துவுக்கு எதிரானதாக தொனிக்கவும் கூடாது.சாதுரியத்தில் சமத்காரத்தில் பல்டியடித்தே அதிகாரம் நோக்கிச் செல்வதில் இவர்கள் ஒவ்வொருவரும் வைரமுத்துக்களே.

ஆனால் வைரமுத்து நல்ல படைப்பாளி என்று சொல்லிவிடவும்கூடாது, அறிவுஜீவி முகம் கலையக்கூடாதல்லவா? இவர்களுடன் ஒப்பிடுகையில் கள்ளிக்காட்டு இதிகாசமே தமிழிலக்கிய உச்சம் என நம்பும் அப்பாவிகள் எவ்வளவோ மேல். இந்த மொண்ணைகளுக்கு இவர்களின் தகுதிக்குரிய முகம்தான் கிடைக்கும். அது வைரமுத்துதான்போல

எண்ணிப்பாருங்கள், இவ்வாறு இன்னொரு எழுத்தாளர் பாரதியஜனதாவிடம் உறவாடி விருதுக்கு அலைந்தால் தமிழ் இணைய உலகம் என்னென்ன வசைகளை எழுப்பும். சாகித்ய அக்காதமி விருதை திருப்பியளிக்காத இலக்கியவாதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னென்ன வசைகள் கொண்டு அவமதித்தனர். ஒருசொல்லேனும் வைரமுத்துவுக்கு எதிராக அப்போது எழுந்ததா?அன்றைக்குப் பொங்கியவர்களெல்லாம் இன்று எங்கே?இப்போதும் அந்த அற்பத்தனத்தை மறைக்கவே இலக்கியவாதிகள் கோமாளிவேடம் பூணுகிறார்கள்.

இத்தருணத்தில் திட்டவட்டமாக என் மதிப்பீட்டை முன்வைப்பது கடமை என்று தோன்றியது. இது நூறாண்டுகளாக இங்கே மிகச்சிறிய தீவிர இலக்கிய வட்டத்திற்குள் திரட்டி வளர்க்கப்படும் இலக்கிய மதிப்பீடு. இதை ஏற்பவர்களுக்காகவே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்இந்த இலக்கிய மதிப்பீட்டை நான் என் முன்னோடிகளிடமிருந்து பெற்றேன். முப்பதாண்டுகளாக அத்தனை சந்தர்ப்பங்களிலும் எந்தச் சமரசமும் இல்லாமல் இதை முன்வைத்து வருகிறேன். அடுத்த தலைமுறையில் சிலரிடம் இது சென்றடையவேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்ப்பு. இங்கே இந்த மொண்ணைகளுக்கு அப்பால் சற்றேனும் நுண்ணுணர்வும் தீவிரமும் கொண்ட சிலர் உண்டு என நான் அறிவேன் என்பதனால்இக்குரலை முன்வைக்கிறேன். நான் எதற்கும் எங்கும் சென்று நிற்பவனல்ல என்பதனால் தயக்கமில்லை.

 

http://www.jeyamohan.in/105260#.WkjAQ7unxR4

ஜெயமோகன் ரொம்பவே மனம் நொந்து இருக்கிறார் போல. பாவம் அந்தாளையும் கூப்பிட்டு ஒரு ஞானபீடமோ அல்லது சக்திபீடமோ விருதை கொடுங்கள். கடைசி மொண்ணையங்கள் என்று சொல்லி விமர்சனம் செய்ததற்காவது  ஒரு கிரீடம் அவர் தலையில் சூட்டத்தான் வேண்டும். :10_wink:

இப்படியான வார்த்தைப்பிரயோகத்தை நான் வைரமுத்துவிடம் இருந்து காணவில்லை. வைரமுத்து நல்ல கவிஞரோ அல்லது எழுத்தாளரோ இல்லை என்று ஜெயமோகன் வாதிடுவதன் அர்த்தம் இப்போது விளங்குகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் விருதுகளை மறுப்பவர்!

 

 

ஜெயமோகனின் அரசியலையும் அவரது அகம்பாவத்தையும் சிறிதும் பிடிப்பதில்லை எனக்கு. ஆயினும் வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுப்பது  தொடர்பான அவரது எதிர்ப்பினை வரவேற்கின்றேன்.

கி.ஜா, அசோகமித்திரன் போன்ற உன்னத எழுத்தாளர்களை எல்லாம் விட்டு விட்டு எந்த இலக்கிய செழுமையுமற்ற வெறுமனே சினிமா பாட்டு எழுதி வரும் வைரமுத்துக்கு கொடுக்கப்படும் ஞானபீட விருதால் தமிழுக்குத் தான் அவமானம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.