Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் வியாபாரக்களம்

Featured Replies

அரசியல் வியாபாரக்களம்

 

பாராளுமன்றம், மாகாண மட்டம் என்பவற்றுக்கு அடுத்ததாக அடி மட்டத்தில் அல்லது தாழ்ந்த மட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற பணிகளுக்குப் பொறுப்பானது. பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகரசபைகள் என குறுகிய எல்லைப் பிரதேசத்தைத் தமது நிர்வாக நிலப்பரப்பாக இவைகள் கொண்டிருக்கின்றன. இங்கு மக்கள் சேவையே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தப் பணிகள் முக்கியமாக அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயினும் தற்போதைய நாட்டின் அரசியல் சூழலில், உள்ளூராட்சி சபைகளை அரசியல் மயமாக்குவதற்கான பணிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற் கான முக்கிய தளமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வியூகம் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. 

உள்ளூராட்சி அரசியல் மயப்படுத்தப்படுகின்றது என்பதை நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் கூற்று ஒன்று உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்து பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டிருக்கின்றார். 

இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள், தமிழ் அரசியல் மற்றும் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும் என உங்களால் கருத்து தெரிவிக்க முடியுமா என அவரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், 'தாழ்ந்த மட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. புதிய அரசியலமைப்பின் கீழ் உள்ளூராட்சி செயற்பாடுகள் பட்டியல் இருப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது. தேசிய செயற்பாடுகள் பற்றிய பட்டியல், மற்றும் மாகாண விடயங்கள் பற்றிய பட்டியலைப் போன்று, உள்ளூராட்சி செயற்பாடுகளுக்கும் புதிய அரசியலமைப் பின் கீழ் பட்டியல் ஒன்று இருப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளது. புதிய அரசியலமைப்பின் கீழ் ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டிருக்கும்போது, உள்ளூராட்சி நிறுவனங்கள் நியாயபூர்வமான வகையில், முக்கியமான வையாக உருவாக முடியும். தற்போது தொகுதிகளில் தேசிய விவகாரங்களை ஆட்கள் எழுப்புவதை நான் பார்க்கின்றேன்....' என தெரிவித்துள்ளார். 

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக, கட்சி அரசியலின் ஆக்கிரமிப்புக்கு உட்படாத வகையில் உள்ளூராட்சி சபைகள் செயற்பட வேண்டியது அவசியம். குறுகிய எல்லைப்பரப்பு மற்றும், மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை என்பவற்றின் அடிப்படையிலேயே, அவற்றின் செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

பிறப்பில் இருந்து இறப்பு வரையிலுமான ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அந்தப் பணிகளை, தடங்கலின்றி சீராக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் உள்ளூராட்சி சபைகளின் தலையாய கடமையாகும். இந்தக் கடமைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. முற்றிலும் மனிதநேயம் சார்ந்தவை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியவையாகும். 

இந்தப் பணிகளில் அரசியல் கலந்தால், அங்கு மனிதாபிமானம் மறைந்து போகக் கூடிய ஆபத்து உண்டு. குறிப்பாக கட்சி அரசியல் தாக்கம் செலுத்துகின்ற பணிகளில் ஊழல்கள் பெருகுவதும், குளறுபடிகள் நிறைவதையும் கண்கூடாகக் காண முடிகின்றது. பல விடயங்களில் பாகுபாடு, பாரபட்சம் என்பன தலைதூக்கவும், மோசடிகள் இடம்பெறவும் அரசியல் தலையீடு வழி வகுத்திருப்பதையும் தெளிவாகக் காணலாம். 

கள நிலைமைகள்

குப்பை அள்ளுவது அல்லது குப்பைகளை அகற்றுவதே உள்ளூராட்சி சபைகளின் முக்கிய பணி என்று கூறுவார்கள். குப்பைகளை அகற்றி நோய்கள் பெருகாமலும், நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான சுகாதாரம் சார்ந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே குப்பை அள்ளுதல் என குறிப்பிடுகின்றார்கள். கழிவுகளை அகற்றுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பதும் உள்ளூராட்சியின் முக்கிய பணியாகும். சுத்தமான குடிநீர் வழங்குதல், கர்ப்பிணிப் பெண்கள், தாய் சேய் ஆகியோரின் ஆரோக்கியத்திற்கான சுகாதார சேவைகள், சந்தைகளிலும் வர்த்தக நிலையங்களிலும், உரிய சுகாதார தரத்திலான உணவுப் பொருட்களைக் கிடைக்கச் செய்வதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல், மீன் இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் உரிய சுகாதாரத் தரத்துடன் சுத்தமான முறையில் கிடைக்கச் செய்தல் என்பவற்றுடன், சிறுவர்களின் ஆரம்ப கல்விக்குரிய முன்பள்ளிகளைக் கண்காணித்தலும் உள்ளூராட்சி சபைகளுக்கான கடமைகளாகும். 

அது மட்டுமல்லாமல், வாழ்ந்து முடிந்து மரணத்தின்போது, இந்த உலகத்தைவிட்டுச் செல்லும் மனிதனுக்குரிய இறுதிக்கிரியைகள் இடம்பெறுகின்ற மயானம் மற்றும் இடுகாடு என்பவற்றைப் பராமரிப்பதும் உள்ளூராட்சி சபைகளின் பொறுப்பாகும். 

கைம்மாறுகளை எதிர்பாராமல், கடமையே கண்ணாகச் செயற்பட வேண்டிய தன்மை வாய்ந்த உள்ளூராட்சி சபை பதவிகளுக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து, வேட்பாளர் பட்டியலில் சிலர் இடம் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்ல. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவதற்காக கட்சிகளுக்குப் பணத்தை வாரி இறைத்த சிலர் வேட் பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. 

உள்ளூராட்சி சபைகளின் தலைவர் அல்லது உறுப்பினர் பதவி என்பது ஏதோ அரசியல் களத்தில் அதிமுக்கிய பதவி போலவும், அதன் ஊடாக பெரிய சாதனைகளை நிகழ்த்தப் போவது போலவும் வேட்பாளர்களாவதற்கு முண்டியடித்தவர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது என்று, சில கட்சிகளுக்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் முக்கிய பணியாற்றிய சில அரசியல் முக்கியஸ்தர்கள் கூறுகின்றார்கள். 

உள்ளூராட்சி சபைகளில் நுழைந்து விட்டால், பின்னர் அங்கிருந்து மாகாண சபைக்கும், மாகாண சபையில் இருந்து பாராளுமன்றத்திற்கும் சென்றுவிடலாம் என்ற நப்பாசையும் வேட்பாளர்களாவதற்கு முண்டியடித்தவர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மாகாண சபை மற்றும் பாராளுமன்ற அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான நுழைவாயிலாகவே உள்ளூராட்சி தேர்தலில் பங்கேற்கும் முயற்சி காணப்படுகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். 

உள்ளூராட்சி தேர்தலுக்காக வட்டாரங்களில் இரத்த உறவினர்களும் கூட, வேறு வேறு கட்சிகளில் எதிர் எதிர் அணிகளில் போட்டியிடுவதற்காகக் களம் இறங்கியிருக்கின்றார்கள். இவ்வாறு களம் இறங்கியிருப்பவர்கள் பரப்புரைகளின் போது,  கட்சி கொள்கைகள் சார்ந்து அரசியல் பேசவும், அரசியல் கருத்துக்களை வெளியிடவும் தொடங்கியிருப்பதனால், உறவுகளிடையே அரசியல் ரீதியான பகைமை உணர்வு தலையெடுத்திருப்பதாகவும் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். அரசியல் நோக்கத்தோடு உள்ளூராட்சி தேர்தலில் வட்டாரங்களிலும் தொகுதிகளிலும் போட்டியிடுவதனால், கிட்டத்தட்ட இந்தக் குட்டித்தேர்தலானது தேசிய தேர்தலைப் போன்று அரசியல் வியாபார களமாக மாறியிருக்கின்றது என்றும் ஊர்ப்பிரமுகர்கள் பலர் கவலை கொண்டிருக்கின்றார்கள். 

பணத்துக்காகவும், பணத்தை வாரி இறைத்தும் இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலில் வெற்றிபெற்றால், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற மாட்டார்கள். தேர்தலுக்காக தாங்கள் முதலீடு செய்த பணத்தை மீண்டும் சம்பாதித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே நாட்டம் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை உருவாகி வருகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். 

ஊடக அறிக்கை போர்

தேசிய மட்ட அரசியலில் கூர்மையடைந்து பிளவு பட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குள்ளேயே அரசியல் போட்டியை இந்தத் தேர்தல் களம் உருவாக்கி விட்டிருக்கின்றது. தேசிய அரசியல் சார்ந்த கொள்கை நிலைப்பாட்டில் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் அளித்த ஆணையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியும் மீறிச் செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருக்கின்றது. இதனால் நான்கு கட்சிகளைக் கொண்டு பலமாகத் திகழ்ந்த கூட்டமைப்பு 3 கட்சிகளைக் கொண்டதாகக் குறுகி பலமிழந்துள்ளது என்று கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் உதயசூரியனின் சின்னத்தில் களமிறங்கியுள்ள அணிக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல் பரப்புரைப் போர் தொடங்கியிருக்கின்றது. காரசாரமான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ள இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஊடக அறிக்கை போர் ஒன்று ஆரம்பமாகியிருக்கின்றது. 

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டை ஒத்த வகையிலானதொரு குற்றச்சாட்டை, வடமாகாண முதல் வர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட்டமைப் பின் தலைமைக்கு எதிராகவும், தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும் முன்வைத்  துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளிய நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் தலைமையும் தமிழரசுக்கட்சியும் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட் டியிருக்கின்றார்.  

மக்களுடைய ஆணையைப் புறந்தள்ளியுள்ள தமிழரசுக்கட்சி, எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கின்றது. என்று அவர் ஊடகங்களின் ஊடாக வினா எழுப்பியிருக்கின்றார். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் போதாமை குறித்தும், எத்தகைய அரசியல் தீர்வினை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெற வேண்டும் என்பதையும் தமிழரசுக் கட்சி வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியிருக்கின்றார். 

நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக்கொடுத்து, தாயகத்தை விட்டுக்கொடுத்து, சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுத்து, சமஷ்டியை விட்டுக்கொடுத்து, ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம். எலும்புத்துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக்கூடும். ஆனால் நடக்கப் போவது என்ன? எமது தனித்துவம் அழிந்துவிடும். மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள்....இந்த நிலைமை அவசியம்தானா என்றும் அவர் வினவியிருந்தார். 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வடமாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன், இந்த உள்ளூராட்சி தேர்தலில் எந்த கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகின்றீர்கள் என்று தமிழரசுக்கட்சியை நோக்கி நேரடியாக எழுப்பியுள்ள கேள்வி, தமிழரசுக் கட்சியை உலுப்பிவிட்டிருக்கின்றது.

தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே தான் அரசியல் பிரவேசம் செய்ததாகக் கூறுகின்ற விக்னேஸ்வரன் தனக்கென ஒரு கட்சி கிடையாது என திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். எந்தவொரு கட்சியையும் சாராத நிலையிலேயே தமிழரசுக் கட்சியை நோக்கிய அவருடைய கேள்வி அமைந்திருக்கின்றது என்பது அவருடைய நிலைப்பாடு. 

ஆனால் தமது கட்சித் தலைவரினால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட விக்னேஸ்வரன் தங்களுடைய கட்சிக்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடாகும். 

தேர்தலின் ஊடாக மக்கள் அளித்த ஆணையை மீறியுள்ள நீங்கள் எந்த முகத்தைக் கொண்டு எந்தக் கொள்கையை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என்பதே அவருடைய கேள்வியின் தொனி. தமிழரசுக்கட்சிக்கு எதிரான கடுமையான சாடலாகக் கருதப்படுகின்ற முதலமைச்சரின் ஊடக அறிக்கைக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் அரசியல் ரீதியாக சூடான பதில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். 

பதிலும், பதிலுக்கான கேள்வியும்

கேள்வி பதில் வடிவிலான விக்னேஸ்வரனின் அறிக்கை ஊடகங்களில் வெளியாகியபோது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனே அதற்குத் தகுந்த பதிலளிப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆயினும், அதற்குப் பதிலாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராசசிங்கத்தின் அறிக்கையே ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் மக்களையும் குழப்பாமல் இருக்க வேண்டியது முக்கியம் என்று தனது அறிக்கையில் துரைராசசிங்கம் கூறியிருந்தார். 

அது மட்டுமல்லாமல் தமிழரசுக்கட்சியை விமர்சிப்பதையே வழமையாகக் கொண்டுள்ள விக்னேஸ்வரன் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகியபோது, அந்தத் தலைமைப்பதவி தன்னைத் தலைவராக்காமல், மாவை சேனாதிராஜாவை தலைவராக்கியதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார் என்றும் துரைராசசிங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

'இது ஒரு நாடு, இந்த நாட்டுக்குள்ளே தான் நமக்கான தீர்வு. தீர்வின் அடிப்படை புரிந்துணர்வுடனான, விட்டுக் கொடுப்பும், நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கமும் ஆகும். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் கூட்டமைப்பின் முன்மொழிவு உண்டு. இது இடைக்கால அறிக்கை மட்டும் தான் இறுதி வடிவம் இன்னும் வரவில்லை. தோசை சுடுபவளுக்கு எப்போது அதைப் புரட்டிப் போட வேண்டும் என்று தெரிய வேண்டும், என்று தொண்டமான் அவர்கள் ஒரு முறை கூறியிருக்கின்றார். சமையற்கலைப் புத்தகத்தைப் படித்துவிட்டு மட்டும் வந்து தோசை சுட முடியாது. அது போலத்தான் அரசியற் கலையை நூல்களை வாசித்துவிட்டு மட்டும் கையாள முடியாது. மக்கள் விக்னேஸ்வரன் ஐயாவை முதலமைச்சராக்கியது தீர்வுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அதில் சேர்ந்துள்ள ஒவ்வாரு கட்சியினதும் செயற்பாட்டோடு சேர்ந்து பலம் சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். நடப்பியல் அறிந்து அதை நகர்த்த வேண்டும்' என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள துரைராசசிங்கம் 'இந்த நிலையில் இவ்வாறான அறிக்கை ஏன்?' என கேட்டிருந்தார். 

தமிழரசுக் கட்சி கொள்கை வழியே தான் செல்கின்றது. நடப்பியல் தழுவி நடந்து கொள்கின்றது. இதனை மக்களுக்கு விளக்கியுள்ளோம். மக்களும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தூங்குவது போல் பாசாங்கு செய்வோரை என்ன செய்வது? என்றும் அவர் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார். 

துரைராசசிங்கத்தின் அறிக்கை வெளியாகியதும், தனது வழமையான கேள்வி பதில் வடிவிலான அரசியல் அறிக்கையின் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சூடான முறையில் பதிலளித்துள்ளார். 

வடமாகாண முதலமைச்சர் நாட்டின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என துரைராசசிங்கம் தனது அறிக்கையில் கூறியிருந்ததை மறுத்துள்ள விக்னேஸ்வரன் அத்தகைய கூட்டங்களில் கலந்து கொண்டதுடன், காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்..

அதிகாரங்களைக் கூட்டித்தர வேண்டும் என்று மற்றைய முதலமைச்சர்கள் கேட்பது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் உள்ளேயே. அது எமக்கு அப்போதைக்கு ஒரு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் எமது இனத்தின் நீண்டகால வாழ்க்கைக்கு நன்மை அளிக்காது. அல்பிரட் துரையப்பாவோ, குமாரசூரியரோ, டக்ளஸ் தேவானந்தாவோ கேட்டார்கள் கொடுத்தோம் என்று தான் இருக்கும். தமிழர்கள் உரித்துடன் கேட்டதை நாம் அள்ளிக் கொடுத்தோம் என்றிருக்காது.

அதை நண்பர் உணராது உள்ளார். பல்லிளித்துப் பயன் பெறுவதென்றால் எந்தத் தமிழ்த் தலைவரிலும் பார்க்கக் கூடிய சலுகைகளை தெற்கில் இருந்து பெற விக்னேஸ்வரனால் முடியும். அவன் தெற்கில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவ்வாறு பல்லிளித்துப் பெற்றால் காலக் கிரமத்தில் எம்மவர் அடிமைகள் ஆகிவிடுவார்கள் என  விக்னேஸ்வரன் தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி உள்ளீடல்கள், பௌத்த மதத்தினர் உள்ளீடல்கள் என்று எம்மை 25 வருடங்களில் இருந்த இடம் தெரியாது ஆக்கிவிடுவார்கள். நாமும் வெளிநாடுகள் நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம். ஜெரூஸலத்திற்கு நடந்துள்ளதைப் பாருங்கள். ஆகவே எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டுதான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை என விக்னேஸ்வரன் தனது பதில் அறிக்கையில் அழுத்தி உரைத்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு விக்னேஸ்வரன் ஆசைப்பட்டிருந்தார் என்ற துரைராசசிங்கத்தின் கூற்றை விந்தையான கூற்று என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், 'மாறியது நான் அல்ல. கட்சித் தலைமைதான் மாறியது. அதை அவர்களுக்கு மக்கள் சார்பாக எடுத்துக் கூறவே தமிழ் மக்கள் பேரவை பிறந்தது என தெரிவித்துள்ளார். அத்துடன். கட்சி அரசியலின் வெறுப்பு மிக்க செயற்பாடுகளைக் கண்டு வந்தவன் நான். அரசியலுக்குப் புதியவன். ஏற்கனவே நல்ல பதவிகளை வகித்திருந்தவன். கேவலம் ஒரு கட்சியின் தலைமைத்துவத்திற்காகக் கனாக் காண நான் என் சில மாணவர்கள் போன்றவனா? என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கட்சித் தலைவரிலும் பார்க்க முதலமைச்சர் பதவி மேலானது. அந்தப் பதவிக்கு வழங்கப்படும் கௌரவம் மத்தியின் முன்னணி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு இணையானது. கட்சித் தலைவர்களுக்கு அவ்வாறான கௌரவத்தை அரசாங்கம் அளிக்கவில்லை. ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற ஆசைப்பட்டதாகக் கூறுவது நண்பரினதும் நண்பருக்கு இந்தக் கடிதத்தை வெளியிடுமாறு பணித்தவருக்கும் இருக்கும் பதவி மோகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. தாம் தமக்குக் கிடைக்க வேண்டும் என்று கனாக்காணும் பதவி மேல் எனக்கு மோகம் இருந்தது என்று கூறுவது அவர்களின் வங்குரோத்து அரசியலையே வெளிக்காட்டுகின்றது என்று கடுமையாகச் சாடியிருக்கின்றார். 

மொத்தத்தில் இந்தத் தேர்தல் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் சாடல்களை உள்ளடக்கி, கிராம மட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டிய உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை கட்சி அரசியல் மயப்படுத்தி, அதன் ஊடாக வர்த்தக நோக்கிலான இலாபம் சம்பாதிக்கின்ற ஓர் ஊழல் நிறைந்த செயற்பாடாக மாற்றுவதற்கான ஒரு வழிமுறையைத் திறந்துவிட்டிருக்கின்றது என்றே கருத வேண்டியிருக்கின்றது. 

பி.மாணிக்கவாசகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.