Jump to content

வாடாமலர் மங்கை


Recommended Posts

பதியப்பட்டது

வாடாமலர் மங்கை

 

 
kadhir7

''மங்க... அடி மங்க... இஞ்ச... எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா'' என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி.
""இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல'' என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை. 
""அடி மகராசியா இருப்பே, அந்தப் போகணில தண்ணியைக் கொண்டா கையக் கழுவோணும்'' என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி. 
""இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக?'' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டு வந்தாள் மங்கை. 
கையைக் கப்பில் விட்டுச் சுழற்றிக் கழுவிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார்கள் வாடாமாலை ஆச்சி.
""நச்சுப்பிடிச்ச வேலைன்னுதான் செட்டிய வீட்டுக்கு ஒத்துக்குறதுல்ல'' என்று முனகியவாறு கப்பைக் கழுவி ஊற்றிவிட்டு செல்போனை எடுத்துப் பார்த்தாள் மங்கை. 
""வயசான ஆச்சி மட்டும்தான். அவுகளக் கவனிச்சிக்கினாப் போதும்'' என்று சொல்லித்தான் சேர்த்துவிட்டு இருந்தார் பாண்டியக்கா. 
நாற்பத்தேழு வயது மங்கையும் தொண்ணுத்தாறு வயது வாடாமலை ஆச்சியும் மட்டும் அந்தப் பழங்கால வீட்டில் வசித்து வந்தார்கள். ஆச்சியின் பிள்ளை குட்டிகள், பேரன், பேத்திகள் எல்லாரும் வெளிநாட்டிலும் வெளியூரிலும் வசித்து வந்தார்கள். 
தெம்பு இருக்கும் நாளில் கைத்தடியை வைத்துக் கொண்டு வீட்டை சுற்றி வந்துவிடுவார்கள். "அடி இந்த ரிமோட்டைக் குடு' என்று கேட்டு மதியம் ஒன்றரைக்கு மகாபாரதம் பார்ப்பார்கள். அன்றைக்கு பீஷ்மர் தந்தை சந்தனு மகாராஜாவிடம் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என்று வாக்கு கொடுக்க அவர் சத்தியவதியை மணந்து கொள்ளும் காட்சி வந்தது. சோத்தை உண்டுவிட்டுக் கண்ணயர்ந்து கொண்டிருந்தார்கள் ஆச்சி. 
செல்போனை வைத்துவிட்டுக் கீழ்வாசலில் கயிறு கட்டிக் காய வைத்த உப்புக்கண்டத்தை எடுக்கச் சென்றாள் மங்கை. தட்டில் ஒவ்வொன்றாகப் பிரித்து வைக்கையில் செல்போன் அழைத்தது. 
""என்னக்கா இது இப்பிடிக் கொண்டாந்து சிக்க வைச்சிட்ட. மஹா நொச்சு பிடிச்ச வேலையாயிருக்கு. பேரன் வீடு பேத்தி வீடு வந்தா இந்தாச்சி பண்ற இம்ச தாங்கல . ரெண்டுகிலோ கசாப்பு எடுத்தாந்து சமைக்கச் சொல்றாக. நாள் கிழமைன்னா முழு வீட்டையும் கூட்டி மொழுகச் சொல்றாக. ஆள் இல்லாத வீட்டைத் தொடைச்சுத் தொடைச்சு எதுக்கு வைக்கணும். இடியாப்ப மாவு இடி, புட்டுமாவு இடி, உப்புமாவுக்குத் திருகையில ஓடைன்னு ஓவர் வேலையா இருக்குக்கா. ஊறுகாயைப் போடு வத்தலைப் போடுன்னு வேற வேலை வைக்கிறாக''.
""அதுக்கெல்லாம் ஆச்சி காசு தனியா குடுத்திருவாகளேடி..'' 
""ஆங்க் காசெல்லாம் தனியா தர்றாக. அதுக்குன்னு என்னால பார்க்க முடியாதுக்கா''. 
""அடி நீ காலைல ஒன்பதரை மணிக்குத்தான் வர்றியாம். அதுவரைக்கும் வயசானவுகளுக்குப் பசிக்காதா?'' 
""அக்கா எனக்குன்னு புள்ள குட்டி குடும்பம் இல்லையா. என் மக, மகன் வேலைக்குப் போறாகள்ல. அவுகளுக்குக் சமைக்க வேணாமா? காலைல ஒன்பது மணிக்குத்தான் வாரேன். வரும்போதே ஆச்சிக்கு இட்டலியோ வேற பலகாரமோ கொண்டாந்திருவேன்''
""ஐயாயிரம் சம்பளம் தாராகள்ல... மேக்கொண்டும் தரச்சொல்றேன், நீ இருந்து பாத்துக்கடியாத்தா. புண்ணியமாய்ப் போகும்'' .
""நீ வேற ஆள் புடிச்சுவிடுக்கா. அதுவரைக்கும்தான் இருப்பேன்'' கறாராகச் சொன்னாள் மங்கை.
வாசல் கதவு உடைப்பட்டது. 
""ஆத்தா.. யாரது இருங்க வாரேன்'' என்று சத்தம்போட்டபடி கதவைத் திறக்கச் சென்றாள் மங்கை. ஆச்சியின் பேத்தி வந்திருந்தாள். ரொட்டி, மிட்டாய்களும் ஆர்லிக்ஸ் பாட்டிலும் பழங்களும் கொண்டுவந்திருந்தாள். சூழ்நிலையில் பாசம் ததும்பிக் கொண்டிருந்தது. ஆச்சியின் மடியில் பேத்தி படுத்துக் கொள்ள தலையைக் கோதிவிட்டார்கள் ஆச்சி. 
""எதுக்கு கடவுள் வச்சிருக்குண்ணே தெரியலாத்தா. ஐயா போனதுமே போயிருக்கோணும். எம் மக்களெல்லாம் போயிருக்கும்போதே போயிருக்கணும். தப்பிப் பொழைச்சிக் கிடக்கேன் எதுக்கு இருக்கேன்னே தெரியல''
""ஏன் அப்பத்தா அப்பிடி எல்லாம் சொல்றீக. இனிமே அப்படி எல்லாம் பேசாதீக அப்பத்தா . எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரமாச்சும் இருந்திட்டுப் போகலாம் வாங்கப்பத்தா'' என அழைத்தாள் பேத்தி.
""உங்க வீட்டுக்கு எல்லாம் வந்தா ஒதவியா இருக்கோணும். நீயே புள்ளகுட்டிக்காரி. ஒவகாரம் இல்லாம ஒபத்திரமாய் போயிரும். ஒரு வேலையும் பார்க்க முடியல. அதான் வாரதில்லை'' என்றார் வாடாமாலை ஆச்சி.
""ஆமா நம்மளாலே பார்க்கமுடியல. இவுகதான் வேலை பார்க்கப் போறாகளாக்கும்'' நொடித்தபடி சென்றாள் மங்கை.
""அடி மங்க... ஆச்சிக்கு எடுத்துக் கட்டிவச்சதக் கொண்டாந்து குடு'' என்று வாடாமாலை ஆச்சி சொல்லவும் மங்கை ஒரு கட்டைப்பையை முகப்பறையிலிருந்து எடுத்து வந்து வைத்தாள். அதில் துணிக்கடை மஞ்சள் பைகளில் கட்டிவைத்த கத்தரிவத்தல், அவரை வத்தல், மாவத்தல், தேன்குழல், இடியாப்ப மாவு, புட்டுமாவு, கொழுக்கட்டை மாவு எல்லாம் இருந்தன. 
""ஆத்தா உப்புக்கண்டம் காயோணும். உங்க பிளாட்டுல வெய்யில் வாராதுல்ல. அதுனால நல்லா காய வச்சு வைக்கிறோம். அடுத்த தவணை வரும்போது கொண்டு போகலாம்'' என்றார் ஆச்சி. 
""அதுக்கென்ன அப்பத்தா இருக்கட்டும். ஏன் இவ்வளவு செய்றீக. உங்களுக்குச் செரமம்'' என்றாள் பேத்தி.
ஆச்சியின் பேத்திக்கு காப்பியைக் கலந்து கொண்டுவந்து வைத்தாள் மங்கை. 
""இந்தக் குப்பையைக் கொட்டிட்டுக் கடைக்குப் போயிட்டு வரேன். நீங்க இருங்க அதுவரைக்கும்'' என்று சொல்லியபடி வெளியே சென்றாள் மங்கை. 
""இன்னொரு பங்குல இருந்த வெள்ளையன் ஐயாவும் வள்ளி ஆயாவும் எங்க அப்பத்தா''
""அவுக மகன் பஸ் ஸ்டாண்டுக்கிட்ட பிளாட்டு வாங்கிட்டான்னு அங்கே போயிட்டாக. மாசத்துல ஒருக்கா அரைக்கா வருவாக''
ஆளரவம் இல்லாத அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக அப்பத்தாவுடன் அமர்ந்திருந்தபோது அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. பட்டாலையில் பாட்டையா காலக் கடிகாரம் மூன்று மணி அடித்தது. மாட்டுத்தலை, மான்கொம்பு, புலித்தலை என பட்டாலை முழுக்க நிரம்பி இருந்தவை அவள் சிறுவயதில் அவளை வெகுவாகப் பயமுறுத்தியவை. ஒண்ணுக்குப் போக நடுராத்திரியில் விழிப்பு வந்தால் நிமிர்ந்து பார்க்கவே மாட்டாள். பாட்டையா கட்டிய வீட்டைப் புதையல் போலக் காவல் காக்கும்
அப்பத்தா. 
"" அப்பத்தா எங்களால எல்லாம் வந்து இருந்து பார்த்துக்க முடியல. ஆத்தாவுக்கும் வயசாயிருச்சு. பார்க்க முடியல. அண்ணனும் அண்ணமிண்டியும் கூட வரமுடியிறதில்ல... பேரன் பேத்தியைப் பார்க்க வெளிநாடு போயிருக்காக. வர ஆறுமாதம் ஆகும்''.
""ஆள் கிடைச்சது தேவலை. இந்தக்காலத்துல நம்பிக்கையான ஆள் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு. அனுசரிச்சு வைச்சுக்குங்க. என்ன பண்றது?''
""அனுசரிச்சுத்தான் வைச்சிருக்கேன். போயிருவாளோன்னு பயமா இருக்கு. யார் பார்த்துக்குவா. அவுகவுகளுக்கு அவுக அவுக அலுவல். எல்லாருக்கும் வயசாகுதுன்ன.''
"" என் ஆம்பிள்ளையான் வேற வெளிநாட்டுல இருக்காக. நானும் போக வர இருக்கேன். புள்ளைக படிப்பு முடிஞ்சு காலேஜுல சேர்ந்தா ஹாஸ்டல்ல விட்டுட்டுப் போயிடுவேன். அதுவரைக்கும் நான் அவுகளுக்காகவும் அவுக எனக்காகவும் காத்துக்கிட்டுத்தான் இருக்கோம்''
""நீங்கள்லாம் வாழ்வுக்காகக் காத்திருக்கீக.. நான் சாவுக்காகக் காத்திருக்கேன்'' கரகரவெனக் கண்ணீர் வழிந்தது அப்பத்தாளின் சுருங்கிய கன்னங்களில். 
""அப்பிடிச் சொல்லாதீக அப்பத்தா'' பதறினாள் பேத்தி. ""நீங்க இருக்கதுதான் எங்களுக்குத் தெய்வபலம்''.
அப்பத்தாவுக்கும் பேத்திக்கும் நடுவில் திரை விழுந்தது போலிருந்தது. பேத்தி விழுந்து கும்பிட்டுச் சொல்லிக் கொண்டதும் விபூதி பூசிவிட்டுப் படுத்துக் கொண்டார் வாடாமலை ஆச்சி. 

 

மங்கை கடையிலிருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்திருந்தாள். பேத்தியும் மங்கையும் கட்டுத்துறையில் குசுகுசுவெனப் பேசிக்கொண்டார்கள். எல்லாம் ஆச்சி காதில் விழுந்துகொண்டுதான் இருந்தது. 
""மருந்தெல்லாம் நான்தான் வாங்கியாறேன். கைகால் பிடிச்சி விடுறேன், எண்ணெய் தேச்சுக் குளிப்பாட்டி விடுறேன்''
""அன்னைக்கு ஒரு நாள் நான் வெளிய போயிட்டு வர நேரமாயிருச்சு. பகல் நேரந்தான். அதுக்குள்ளே என்னயக் காணம்னு கண்ணீர் விட்டு அழுதுக்கினு இருக்காக'' 
"வளவு, பட்டாலை, பத்தி, வளவு, முகப்பு, இரண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு என்றிருக்கும் வீட்டில் தனியாக இருந்தால், முதுமையினால் அமயம் சமயத்துக்குக்கூட எழுந்து பூட்டையும் கேட்டையும் திறக்கமுடியாவிட்டால் இருளடித்தது போல் பயமாகத்தானே இருக்கும்.' நினைத்துக்கொண்டாள் பேத்தி.
""எல்லாம் சரிதான் அக்கா. அவுக பெரியவுக. எது சொன்னாலும் குத்தங்குறையா எடுத்துக்காத. முன்னாடி கருப்பாயி அக்கா இருந்துச்சு. அது போன பின்னாடி அப்பத்தாவுக்குத் தொணை இல்லை. நீதான் உங்கப்பத்தா மாதிரிப் பார்த்துக்கோணும். எங்களால எல்லாம் வந்து இருந்து பார்த்துக்க எசையல'' அம்பது ரூபாய் நோட்டையும் இரண்டு பழைய சீலைகளையும் கொடுத்துவிட்டு, ""ராத்திரிக்குத் தொணைக்குப் படுக்க வர்ற அம்சக்கா தெனம் ஒழுங்கா டயத்துக்கு வருதுல்ல?'' " என்று கேட்டு அதுக்கும் கொடுக்கச் சொல்லி ஐம்பது ரூபாய் கொடுத்துச் சென்றாள்.
ஆச்சி எப்பவுமே யார் எது வாங்கியாந்தாலும் மங்கைக்கு ஒரு பங்கு குடுப்பாக. அன்னைக்கும் பேத்தி வாங்கி வந்த பழம், பிஸ்கட்டுக் கட்டில் ஒன்றை அவளுக்காக எடுத்து வைத்தார்கள். புள்ளைகுட்டிக்காரி. சாப்பிடட்டும்.

கண்மூடிப் படுத்திருந்த வாடாமாலை ஆச்சியின் கண்ணுக்குள் அவுக அப்பச்சி முத்துக்கருப்பன் செட்டியார் வந்து போனார்கள். ஆஸ்ட்டின் காரில் ஆச்சி சின்னப் பெண்ணாக அமர்ந்திருக்க அந்தக் காரை ஓட்டிப் போகும் அப்பச்சியின் பக்கத்தில் பெருமிதமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இன்றும் மதகுபட்டியில் அவர்கள் ஆத்தா வீட்டில் இருக்கிறது. அப்பத்தாவின் செல்லக்குட்டி என்பதால் காலையில் எழுந்ததும் அவளுக்கு மட்டும் கொட்டானில் தேன்குழல் கிடைக்கும். 
துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளை முகம் மறந்து வெள்ளி விளையாடும் மலாயா சீமைக்குச் செந்திலாண்டவனைத் துணையாகக் கொண்டு விக்கச் சென்ற அப்பச்சியின் முகம் தண்ணிமலையானின் சாயலில் நிழலாடியது. கொண்டுவிக்கச் சென்றவர்கள் பெருக்கிய பணம் மட்டும் வந்தது. நான்காண்டுகள் கழித்து அவர்கள் வந்த கப்பல் கடலில் மூழ்கிவிட இறைவனடி சேர்ந்த விவரம் மட்டுமே வந்தது. 
அப்பத்தாவுக்கும் அப்பச்சிக்கும் பிரியமான வாடாமலர் மங்கைக்கு அப்போது பன்னிரண்டு வயது. இன்னும் பருவமெய்தவில்லை. முப்பத்துமூன்று வயதில் தாரத்தை இழந்த, மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான சுந்தரேசனுக்குப் பெண்கேட்டு அவர்கள் ஐயா முத்தையா வந்திருந்தார்கள். அப்பத்தாவுக்கும் ஆத்தாவுக்கும் மூத்த மகளை ரெண்டாந்தாரமாகக் கட்டுவதா என்று தயக்கம். சுந்தரேசனோ பெயருக்கேற்றபடி சுந்தரனாக இருந்தார். 
""ஆச்சி வத்துப் பஹார்ல ஒங்க மகன் முத்துக்கருப்பன் செட்டியாரும் இவுக ஐயா முத்தையாவும் ஒரே பொட்டியடியில புழங்குனவுகங்கிறதால ஒங்க பேத்தியைக் கேட்டு வந்திருக்காக. ரொம்பப் பிரிசு புடிக்காதீக. நீங்க கட்டலைன்னாச் சொல்லுங்க. நான் என் பேத்தியைக் கட்டுறேன்'' என பங்காளி வீட்டு சேக்கப்பண்ணன் சொன்னதும் அப்பத்தாவும் ஆத்தாவும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டார்கள். 
திருப்பூட்டும்போதே நான்கு வயதிலும் மூன்று வயதிலும் இரண்டு வயதிலும் மூன்று ஆண்குழந்தைகள். ""ஆத்தா'' என்று ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். சமையுமுன்னேயே வாடாமலை மூன்று குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். பிள்ளைகளை ஐயா மேற்பார்வையில், மனைவி வளர்ப்பில் விட்டுவிட்டுக் கொண்டுவிக்கச் சென்றார் சுந்தரேசன். நான்காண்டுகள் ஒரு கணக்கை முடித்துவிட்டுத் திரும்பும்போது அவர் வந்த கப்பலும் மூழ்கியது. அந்தச் சேதி வந்தபோதுதான் பதினாறு வயதில் புஷ்பவதியாகியிருந்தாள் வாடாமலை. 
""பச்சக் குட்டியப் பிடிச்சுக் கொடுத்தேனே'' என்றுஅழுதழுது ஓய்ந்து போன அப்பத்தாவும் "அப்பச்சி இல்லாத புள்ள வாழ்க்கையக் கெடுத்துப்புட்டோமே' என்று வருந்திய ஆத்தாவும் சிவபதவி அடைந்துவிட, மகன் இறப்பால் முன்பும், பேரன் இறப்பால் இப்போதும் மனசால் ஒடிந்த முத்தையா ஐயாவும் வாதம் தாக்கி விழுந்துவிட மூன்று குழந்தைகளுக்கும் தந்தையுமானாள் வாடாமலை. 
ஐயாவையும் பார்த்துக்கொண்டு கணக்கு வழக்குகளையும் சாமர்த்தியமாகச் சரிசெய்து வாங்கி, வீட்டையோ, சொத்தையோ விற்காமல் மூவரையும் வளர்த்து ஆளாக்கப்பட்ட பாடு சொல்லில் அடங்காது. தன் நகைகளையும் கல்யாணத்துக்கு வைத்த பாத்திர பண்டங்களையும் விற்றுதான் படிக்க வைத்தார். மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து பேரன் பேத்தியும் எடுத்துவிட்டார். எழுபது எண்பது வயதில் மகன்களும் ஐயாவும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்துவிட ஆடித்தான் போய்விட்டார் வாடாமலை ஆச்சி. 
தினம் காலையில் விபூதி தரித்து ""ஓம் நமசிவாய'' என்று சொல்லும்போதெல்லாம், ""என்னை இன்னும் ஏன்யா வச்சிருக்கே?'' என்பதுதான் அவரது விடை கிடைக்காத கேள்வியாயிருக்கும்.
""ஆச்சி எந்திரிங்க. பலகாரம் கொண்டாந்திருக்கேன். உங்களுக்குப் பிடிச்ச கருப்பட்டிக் குழிப்பணியாரம்."" உலுப்புகிறாள் மங்கை. ஆச்சியிடம் அசைவில்லை. இரண்டு நாட்களாகப் படுக்கையில்தான் எல்லாம். யாரும் தொட்டால் உடம்பு சிலிர்க்கிறது. கூசிச் சுருங்குகிறது. 
தொலைக்காட்சியில் மகாபாரதம் ஓடுகிறது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் உத்தராயணத்துக்காக உயிரைக் காத்துக் கிடக்கிறார். இங்கே பெண் பீஷ்மரைப் போலாகிக் கிடக்கிறார் வாடாமாலை ஆச்சி. நாடி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசம் நாபியிலிருந்து குறுகுகிறது. ""தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி'' சிவபுராணம் சொல்கிறார்கள் பேரன் பேத்திகள். மூத்த மருமகள் வந்து "சிவாய நமஹ' சொல்லிப் பால் ஊற்றுகிறார். 
கண் திறந்து பார்த்த வாடாமலை ஆச்சி மருமகளின் கையைப் பிடித்துத் தடவுகிறார். பெட்டகச் சாவியைக் கொடுக்கிறார். தொய்ந்து விழுகிறது கை . ""அப்பத்தா'' கதறி அழுகிறார்கள் பேரன் பேத்திகள். பெரிய வீட்டின் கதவுகள் விசாலமாகத் திறக்கப்படுகின்றன. வாடாமலராக, சூடாமலராக உதிர்ந்து சருகாகிக் கிடக்கிறார் வாடாமலை ஆச்சி. ஊரோடு வந்து கேதம் கேட்டுப் போனது. 
""என்னது இவுகளுக்குப் பொறந்த புள்ளைக, பேரன்பேத்திக இல்லையா இவுகள்லாம்'' பாண்டியக்கா சொன்ன சேதி அதிர்கிறது மங்கைக்குள்.
""சிலர் வாழ்க்கை முழுதுமே தன்னலமற்றதாக இருக்கிறது. மற்றவர்களுக்காக மட்டுமே அவர்கள் பிறந்து வாழ்ந்து செல்கிறார்கள். அதைத் தியாகம் என்றெல்லாம் கருதுவதில்லை அவர்கள். கடமையாக நினைக்கிறார்கள்.'' ஆச்சி பார்க்கும் மகாபாரதம் ஆளில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. பராமரிக்க முடியாமல் வீட்டை இடித்து மேங்கோப்பை விற்று தனித்தனியாக பிளாட்டுக் கட்டிக்கொள்ளப் போகிறார்களாம் பேரன் பேத்திகள். 
ஆச்சி போட்டிருந்த மோதிரத்தையும் சங்கிலியையும் மங்கையின் மகள் கல்யாணத்துக்குக் கொடுக்கும்படி அப்பத்தா சொன்னதாக ஆச்சியின் பேத்தி கொடுக்கிறாள். அதைத் தொட்டு வாங்கியதும் ஆச்சியைத் தொட்டதுபோல் உடல் நடுங்க அழுகை பீறிடுகிறது மங்கைக்குள். கண்ணைத் துடைத்துக் கொள்வதுபோல் ஆச்சி அமர்ந்திருந்த குறிச்சியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறாள் மங்கை. கைகளில் 
இகவாழ்வின் பற்றறுக்க ஆச்சி பூசும் விபூதி வாசம் அடிக்கிறது. 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலரது வாழ்வை தியாகம் தனக்குள் இழுத்துக் கொள்கிறது.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.