Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம்

Featured Replies

எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம்

 

பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான எல் கிளாசிகோ போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. #ELcalsico #barcelona #RealMadrid

 
எல் கிளாசிகோ- 10 பேருடன் 2-2 என டிரா செய்தது பார்சிலோனா- ரியல் மாட்ரிட் ஏமாற்றம்
 
லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு எல் கிளாசிகோ என்று பெயர். இரண்டு முன்னணி அணிகள் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பார்சிலோனா சொந்த மைதானத்தில் தோல்வியடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும், முதல் தோல்விக்கு எப்படியாவது பதிலடி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ரியல் மாட்ரிட் அணியும் களம் இறங்கின.

201805071506182734_1_gareth-s._L_styvpf.jpg

போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்கள் ஆட்டத்திலும் அனல் பறந்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து பாஸ் செய்யப்பட்ட பந்தை லூயிஸ் சுவாரஸ் அருமையான முறையில் அடித்து முதல் கோலை பதிவு செய்தார். பார்சிலோனா கோலிற்கு பதிலடியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 14-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

201805071506182734_2_redcard-s._L_styvpf.jpg

முதல் பாதி நேரத்தில் காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கிட்டு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 48-வது நமிடம்) பார்சிலோனா அணியின் செர்ஜி ரொபெர்ட்டோ ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.

இதனால் 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. என்றாலும் சொந்த மைதானத்தில் ரசிகர்களின் பேராதரவோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 52-வது நிமிடத்தில் மெஸ்சி ரியல் மாட்ரிட் அணியின் பின்கள வீரர்களை சாதுர்யமாக ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.

201805071506182734_3_suarez-s._L_styvpf.jpg

இதற்கு பதில் கோலாக 72-வது நிமிடத்தில் காரேத் பேலே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது. அதன்பின் 18 நிமிடங்கள் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட்டை கோல் அடிக்கவிடவில்லை. அதேவேளையில் மெஸ்சி இரண்டுமுறை கோல் அடிக்க முயற்சி செய்தார். முதன்முறை ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்து விட்டார். 2-வது முறை கோல் கம்பம் அருகில் சென்றது. இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/07150618/1161454/EL-Clasico-barcelona-vs-real-madrid-draw.vpf

  • தொடங்கியவர்

மெஸ்ஸி, ரொனால்டோ மேஜிக்... கேம்ப் நூ அரங்கில் அரங்கேறிய கால்பந்தின் கிளாசிக்! #ElClasico 

 
 

கேடலோனிய முன்னாள் அதிபர் கார்ல் புஜிமன்ட்-க்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது மாட்ரிட்டில் இயங்கும் ஸ்பெயின் அரசு. அடுத்து நடக்கப்போகும் அதிபர் தேர்தலுக்கும் அவரையே முன்னிறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறது கேடலோனியா வட்டாரம். கேடலோனியாவின் எதிர்காலம் பற்றிய மிகமுக்கிய ஆலோசனை புஜிமன்டுடன் பெர்லினில் நேற்று நடந்தது. அதேவேளையில் கேடலோனியாவின் தலைநகரத்தில் வந்திறங்குகிறது மாட்ரிட் நகரின் அடையாளமான ரியல் மாட்ரிட் அணி. சுதந்திரப் போராட்டத்துக்கு நடுவே கால்பந்துப் போட்டி! கேடலோனியக் கொடி பறந்தது - கேம்ப் நூ மைதானத்தில். சுதந்திரக் கோஷம் எழுந்தது - 'ஹோம்' ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில். மாட்ரிட்டுக்கு எதிரான வன்மம் அந்தக் காற்றிலும் களத்திலும் மட்டுமே கலந்திருந்தது. கேம்ப் நூ மைதானம் தாண்டி எந்தப் போராட்டமும் இல்லை; வன்மமும் இல்லை. மைதானத்துக்குள் வீரர்கள் எல்லை மீற பல பிரச்னைகள். ஆனால், ரசிகர்கள் உள்ளேயும் வெளியேயும் எல்லை மீறவில்லை, செருப்புகள் ஏதும் வீசப்படவில்லை. எல் கிளாசிகோ எப்போதும் போல் அதே வீரியத்தோடு, அதே உற்சாகத்தோடு, அதே ஆக்ரோஷத்தோடு நடந்து முடிந்துவிட்டது! #ElClasico 

#ElClasico 

வழக்கமாக ஜெரார்ட் பிக்கே - செர்ஜியோ ரமோஸ் ட்விட்டர் மோதலுடன்தான் எல் கிளாசிகோ தொடங்கும். அடுத்த மாதம் ஸ்பெய்ன் அணிக்காக உலகக்கோப்பையில் பங்கேற்கவிருப்பதால் இம்முறை அடக்கி வாசித்தார் பிக்கே. அமைதியாகத் தொடங்கவிருந்த போட்டியை, இரண்டு நாள்கள் முன்னாள் பட்டாசு கொளுத்திப் போட்டு சூடாக்கினார் மாட்ரிட் பயிற்சியாளர் ஜிடேன். லா லிகா தொடரை பார்சிலோனா வென்றுவிட்ட நிலையில் "நாங்கள் கிளப் உலகக்கோப்பை வென்றபோது அவர்கள் எங்களுக்கு 'guard of honour' கொடுக்கவில்லை. அதனால் நாங்களும் அவர்களுக்கு இப்போது 'guard of honour' கொடுக்கப்போவதில்லை" என்று அறிவித்தார். 'guard of honour' இல்லாமலேயே சொந்த மைதானத்தில் களமிறங்கியது சாம்பியன் பார்சிலோனா. 

பார்சிலோனாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எதிர்பார்க்கப்பட்ட அதே அணிதான் களமிறங்கியது. கொஞ்சம் சந்தேகமாக இருந்த கேப்டன் இனியஸ்டா தன் கடைசி கிளாசிகோவில் களமிறங்கினார். வலதுபுற மிட்ஃபீல்டில் பாலினியோவுக்குப் பதில் கொடினியோ. ஆனால், ரியல் மாட்ரிட் சிலபல மாறுதல்களோடு களம் கண்டது. காயத்தால் கர்வகால் ஆட முடியாததால் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் அந்த இடத்தில் லூகாஸ் வஸ்கிஸ் களம் கண்டார். இப்போது எதிரணி பார்சிலோனா என்பதால் கொஞ்சம் டிஃபன்சிவான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தார் ஜிடேன். அந்த இடத்தில் நேசோ. வலது விங்கில் கேரத் பேல். ஆனால், அவருக்கான ரோலும் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தது. மிகவும் வேகமான வீரரானதால், பார்சிலோனாவின் இடது புற வீரர்களை 'டிராக்' செய்யும் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டிந்தது. கிட்டத்தட்ட மிட்ஃபீல்ட் ரோல். 

#ElClasico 

போட்டி தொடங்கியதிலிருந்து பார்சிலோனா கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. வலது, இடது என இரண்டு Wing-களிலிருந்தும் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டே இருந்தது பார்சிலோனா. வலது ஃபுல்பேக்கில் களமிறங்கிய நேசோ ஃபுல்பேக்கே கிடையாது. இடது ஃபுல்பேக் மார்செலோ தாக்குதல் ஆட்டத்தில் விருப்பமுள்ளவர் என்பதால் அடிக்கடி பொசிஷனில் இருந்து தவறிவிடுவார். இதனால் பார்சிலோனாவின் பிரதான தாக்குதல் திட்டம் Wing-களையே மையப்படுத்தியிருந்தது. அதற்கு 10-வது நிமிடத்தில் பலனும் கிடைத்தது. 

மெஸ்ஸி, ரொனால்டோ கோல்கள்... சண்டைகள்..கார்டுகள்...எல் கிளாசிகோ போட்டியின் புகைப்படங்களைக் காண க்ளிக் செய்க 

சென்டர் சர்க்கிளில் கிடைத்த பந்தை, வலது புறம் த்ரூ பாலாக பாஸ் செய்தார் சுவாரஸ். எதிர்பார்த்ததைப்போல் மார்செலோ அங்கு இல்லை. புயலாக விரைந்தார் செர்ஜி ராபெர்டோ. மாட்ரிட்டின் தடுப்பாட்டக்காரர்கள் எல்லோரும் மேலே இருக்கிறார்கள். பார்சிலோனாவின் கவுன்ட்டர் அட்டாக் வேகம் எடுக்கிறது. மெஸ்ஸி, சுவாரஸ் இருவரும் கோல் நோக்கி விரைகிறார்கள். அதற்குள் ராபெர்டோ மாட்ரிட் பாக்சுக்கு அருகில் சென்றுவிட்டார். மார்செலோவால் அவரை டிராக் செய்ய முடியவில்லை. அதனால் ராபெர்டோவைக் கவர் செய்ய நடுவிலிருந்து விலகி வருகிறார் ரஃபேல் வரேன். மெஸ்ஸி கோல் கம்பத்துக்கு நடுவே விரைகிறார். அவர் விரைவதைப் பார்த்து, மார்க் செய்ய வேகம் கூட்டிய நேசோ, அந்தப் பக்கம் சுவாரஸ் நின்றிருந்ததை மறந்துவிட, ராபெர்டோவின் கிராஸ் வரேன், ரமோஸ், மெஸ்ஸி, நேசோ அனைவரையும் தாண்டி சுவாரஸ் கால்களுக்கே வருகிறது. On the volley... கோல்! பார்சிலோனா 1, மாட்ரிட் 0. ஒரு லட்சம் பேர் நிறைந்திருந்தது கேம் நூ மைதானம் அதிர்கிறது!

 

 

பார்சிலோனாவைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்கு மாட்ரிட்டுக்கு இந்தமுறை கூடுதல் காரணமும் இருந்தது. இந்த லா லிகா சீசனில் பார்சிலோனா ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை. ஒரு அணி அந்த சீசன் முழுக்கத் தோற்காமல், டொமஸ்டிக் கோப்பையை வென்றால் invincibles என்பார்கள். அப்படி இதுவரை ஸ்பெய்னில் எந்த அணியும் வென்றதில்லை. இவ்வளவு ஏன்... ஐரோப்பிய கால்பந்து வரலாற்றிலேயே இதுவரை 4 அணிகள் (அர்செனல் 2003-04, மிலன் 1991-92, யுவென்டஸ் 2011-12, செல்டிக் 2016-17 ) மட்டுமே அப்படி வென்றுள்ளன. அப்படிப்பட்ட மிகப்பெரிய பெருமையை நோக்கி பார்சிலோனா பயணிப்பதை மாட்ரிட் வீரர்களால் எப்படிப் பொறுக்க முடியும்? இனி பார்சிலோனா ஆடவிருக்கும் 3 அணிகளும் சுமாரான அணிகள்தான். தாங்கள் தோற்கடித்தால்தான் உண்டு. ஆனால், இப்போது பின்தங்கியிருக்கிறது...

அந்த கோலுக்குப் பிறகுதான் ஆட்டம் வெறித்தனமாக மாறியது. சுவாரஸ் மீது செய்த ஃபௌலால் மஞ்சள் அட்டை பெற்றார் நேசோ. வீரர்களுக்கிடையே வாக்குவாதங்கள் தொடர 'கிளாசிகோ சூடுபிடிச்சிருச்சு' என்று உற்சாகமானார்கள் கால்பந்து பிரியர்கள். மீண்டும் பாக்ஸில் விழுகிறார் சுவாரஸ். பெனால்டி கேட்கிறார்... கிடைக்கவில்லை. மாட்ரிட் வீரர்கள் அமைதி இழக்கத் தொடங்கினர். ஆனால், அந்தக் கோபத்தையெல்லாம் மறுபுறம் கொட்டினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

ronaldo #ElClasico 

ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் பந்தை தன்வசப்படுத்திய அவர், பார்சிலோனா பாக்சுக்குள் நுழைந்தார். ராபெர்டோவை ஏமாற்றி போஸ்டின் இடது புறமிருந்து மறுபுறம் முன்னேற முயன்றார். ராபெர்டோ, பிக்கே இருவரும் ரொனால்டோவின் மீதே பார்வை கொண்டிருக்க, அழகாக பேக்-ஹீல் மூலம் டோனி குரூஸுக்குப் பாஸ் கொடுத்தார் CR7. நடுகள வீரர்கள் எவராலும் மார்க் செய்யப்படாத குரூஸ், செகண்ட் போஸ்ட் அருகில் நின்றிருந்த பென்சிமாவுக்குக் கிராஸ் செய்தார். குரூஸ் ஷூட் அடிப்பார் என்று நினைத்த உம்டிடி, பென்சிமாவை விட்டு அகன்றதால், பென்சிமா ஃப்ரீயானார். கண் முன்னால் கோல் போஸ்ட்... எளிதாக ஹெடர் செய்ய முயன்றிருக்கலாம். ஆனால், ரொனால்டோ வந்த திசைக்குப் பாஸ் போட்டார் பென்சிமா. தான் தொடங்கிவைத்த மூவை தானே முடித்து, கோல் போஸ்ட்டுக்குள் பந்தைத் திணித்து, பார்சிலோனா ரசிகர்களை அமைதியாக்கியது அந்த போர்ச்சுகல் கோல் மெஷின்!

அடுத்து இரண்டு அணிகளும் மாறி மாறி கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டன. சுவாரஸ், ஜோர்டி ஆல்பா, ரொனால்டோ என ஒவ்வொருவரும் தங்களின் பலத்தை நிரூபித்துக்கொண்டிருந்தனர். அவர்களின் அற்புதமான ஷாட்களைத் தடுத்து டெர் ஸ்டெகன், கெய்லர் நவாஸ் என இரண்டு கோல்கீப்பர்களும்கூட அவர்களின் இருப்பைக் காட்டினர். முதல் அரை மணி நேரம் அதிரடியாகப் போக, அடுத்த 15 நிமிடங்கள் ஆக்ரோஷமாக மாறியது. சுவாரஸை ஃபௌல் செய்து வரேன் மஞ்சள் அட்டை பெற்றார். கோல் போஸ்டின் முன் கில்லியான சுவாரஸ், நேற்று நடிப்பிலும் கொஞ்சம் பெர்ஃபார்ம் செய்தார். எதிரணி வீரர் மீது உடல் பட்டாலே கீழே விழுந்து ஃபௌல் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் அவருக்கும் ரமோஸுக்கும் சண்டை மூள இருவருக்கும் மஞ்சள் அட்டை நீட்டினார் ரெஃப்ரி.

suarez - ramos

பார்சிலோனா வீரர்களெல்லாம் அந்தச் சம்பவத்தால் ரமோஸ் மீது கோபம் கொண்டிருந்தனர். மெஸ்ஸி அதை ரமோஸ் மீது வெளிப்படுத்திட, அந்த ஃபௌலால் அவருக்கும் யெல்லோ கார்டு! மாட்ரிட் பாதியில் இத்தனை களேபரங்கள் நடந்துகொண்டிருக்க, அதைவிடப் பெரிய நாடகம் பார்சிலோனா பாக்சுக்கு அருகே நடந்தது. பந்தை இழந்த மார்செலோ, செர்ஜி ராபெர்டோ மீது மோத, பொறுமை இழந்த அவர் மார்செலோவை முகத்தில் அடித்தார். நடுவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ரெட் கார்ட். பார்சிலோனா 10 ஆள்களுடன் ஆடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. வழக்கமாக கிளாசிகோ போட்டிகளில் மாட்ரிட்தான் சிவப்பு அட்டை பெறும். இந்த முறை பார்சிலோனா பெற்றதால், எப்படியும் ரியல் மாடரிட் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், இரண்டாம் பாதியில்...

முதல் பாதியில் சொதப்பிய கொடினியோவுக்குப் பதில் டிஃபண்டர் நெல்சன் செமெடோவைக் களமிறக்கினார் வெல்வர்டே. அந்தப் புறம் Marco Asensio in for Cristiano Ronaldo! கோல் அடித்தபோது பிக்கேவுடன் கால் மோத, ரொனால்டோவுக்கு சிறிதாகக் காயம் ஏற்பட்டது. அதனால்தான், தன் டிரேட்மார்க் செலிபிரேஸனில் ஈடுபடவில்லை. முதல் பாதி முழுவதுமே அந்தக் காயத்தின் தாக்கத்தை அவர் உணர்ந்தார். சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடவேண்டும் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாத ஜிடேன், அந்த அணியின் எதிர்காலமாகக் கருதப்படும் அசேன்ஸியோவைக் களமிறக்கினார். இரண்டாம் பாதியில் 11 வீரர்களில் ஒருவர் இல்லாமல் பார்சிலோனா களமிறங்க, 11 வீரர்கள் இருந்தும் உயிரில்லாமல் களத்தில் நின்றது மாட்ரிட்

ronaldo

ரொனால்டோ இல்லாத அந்த அணியை 10 பேர் கொண்ட பார்சிலோனா கொஞ்சம் பின்வாங்கவைத்தது. அதுவரை வழக்கமான பாஸிங் கேமைக் கடைபிடித்த அந்த அணி, 'press' செய்யத் தொடங்கியது. பந்து தங்கள் வசம் இல்லாத போதும் மாட்ரிட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அதே வேகத்தில், ஒரு கோலும் அடித்து மாட்ரிட்டை மொத்தமாக ஆஃப் செய்தார் மெஜிஸியன் மெஸ்ஸி. 52-வது நிமிடத்தில் அசேன்ஸியோவின் ஷாட்டைத் தடுத்த டெர் ஸ்டெகன், கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கிவைத்தார். மாட்ரிட்டின் வலதுபுறம் வந்த பந்தை மேலே சென்று எடுக்க நினைத்து வரேன் முன்னேற, அவரையும் நேசோவையும் ஏமாற்றி பந்தை லாவகமாக பாக்சுக்கு அருகே எடுத்துச் சென்றார் சுவாரஸ். பாக்சின் அந்தப் பக்கம் மெஸ்ஸி. கொஞ்சமும் யோசிக்காமல் அவருக்குப் பாஸ் செய்தார் சுவாரஸ். அவருக்கும் போஸ்டுக்கும் நடுவே ரமோஸ், கேஸமிரோ, நவாஸ்... மூன்று பேர். எப்படி கோல் அடிப்பார்..?

மெஸ்ஸியின் மூளை வேகத்துக்கு அவர் கால்களும் வேலை செய்யும். அவர் கால்களின் வேகத்துக்கு அந்த மூளையும் சிந்திக்கும். இரண்டும் மின்னல் வேகத்தில் செயல்படுவதால்தான் அவர் `ஃபுட்பால் ஜீனியஸ்’ என்று பாரட்டப்படுகிறார். அந்த நொடி அதை மீண்டும் நிரூபித்தார். தன் ஃபேவரிட் இடது காலால் கேஸமிரோவை ஏமாற்றி பாக்ஸின் நடுவே வந்தார் மெஸ்ஸி. கண்கள் பந்தை மட்டுமே பார்க்கின்றன. கோல் எங்கே? கோல் கீப்பர் எங்கே? எதையும் பார்த்ததாகத் தெரியவில்லை. ஷாட்... வலது கார்னரில் கோல்...! கோல் போஸ்ட்டையும், கீப்பரையும் அவர் பார்க்கவில்லை, இரண்டுக்கும் இடையே இருந்த இடைவெளியை மட்டும் தன் கால்களால் கண்டு உதைத்தார். கோல்...! மெஸ்ஸி, மெஸ்ஸிதான்! பார்சிலோனா 2, ரியல் மாட்ரிட் 1.

messi

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியதால், மாட்ரிட் டிஃபண்டர்கள் மேலேயே நின்று விளையாடினார்கள். குறிப்பாக ரமோஸ் மிட்ஃபீல்டராகவே மாறிப்போனார். ஆனால், அதன் விளைவாக பார்சிலோனாவின் கவுன்ட்டர் அட்டாக்கை அவ்வபோது சமாளிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. ரொனால்டோ இல்லை... எப்படி மீண்டு வருவது? அவரது இடத்தை இந்தப் போட்டியில் நிரப்பப் போவது யார்? மாட்ரிட் ரசிகர்களின் மனம் இந்தக் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தது. கேரத் பேல் - ரொனால்டோவின் இடத்தை நிரந்தரமாக நிரப்பத்தான் வாங்கப்பட்டார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவரால் இதை செய்ய முடியவில்லை. ஆனால், இந்த முக்கியமான போட்டியில் அந்த மேஸ்ட்ரோவின் இடத்தை நிரப்பினார் பேல். மீண்டும் ஆட்டத்தை சமனுக்குக் கொண்டுவந்தார். 

72-வது நிமிடம்... அசேன்ஸியோவிடம் பந்து. பாக்ஸுக்கு வெகுதூரத்தில் இருக்கிறார். செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ரகிடிக் பிரஸ் செய்வதால் பாஸ் செய்தே ஆகவேண்டும். த்ரூ பால் கேட்டு பாக்ஸ் நோக்கி ஓடுகிறார் பென்சிமா. அவரை மார்க் செய்ய, பின்னால் விரைந்தார் உம்டிடி. இங்குதான் பாக்ஸுக்கு நடுவே நிறைய இடைவெளி ஏற்பட்டது. பாஸ் கேட்ட பென்சிமாவை விட்டுவிட்டு, அந்த இடைவெளியை நோக்கி ஓடிவந்த பேலுக்குப் பாஸ் செய்தார் அசேன்ஸியோ. பாக்ஸுக்கு வெளியே சர்க்கிளில் பந்து... ஜோர்டி ஆல்பா பின்னாலிருந்து நெருக்குகிறார். ஒருவேளை பந்தை நிறுத்தியிருந்தால், பார்சிலோனா வீரர்கள் அதை மீண்டும் கையகப்படுத்தியிருப்பார்கள். கொஞ்சம் கூட யோசிக்காமல் இடது காலால் பலம் கொண்டு அடித்தார் பேல். கோல் போஸ்டின் மேலே வலது மூலையில் புல்லட் வேகத்தில் விழுந்தது பந்து. 2-2!

bale

அதன்பிறகு இரண்டு அணி வீரர்களும் போராடினார்கள்... போர் புரிந்தார்கள்.. வாக்குவாதம் செய்தார்கள்... சண்டையிட்டார்கள்... ஆனால், கோல்தான் அடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட கிளாசிக் போட்டியில், திருஷ்டி கழிப்பதைப் போன்ற ஒரு நடுவர். பல முடிவுகளை மிகவும் மோசமாக எடுத்தார். மாட்ரிட் வீரர்கள் செய்த பல ஃபௌல்களைப் பார்க்கத் தவறியவர், அந்த அணிக்குக் கிடைக்கவேண்டிய பெனால்டியையும் நிராகரித்தார். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பெனால்டி கொடுத்திருப்பார்கள். இவர் அதை எப்படித் தவறவிட்டாரோ! ஆனால், ஒருவழியாக இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்று ஆட்டம் முடிந்தது. 

ஆட்டம் முழுக்க எத்தனையோ சண்டைகள்... ஆனால், 90 நிமிடங்கள் முடிந்து நடுவரின் விசில் ஊதப்பட்டதும் அவையெல்லாம் காற்றோடு கரைந்து போயின. முறைத்துக்கொண்ட முகங்களெல்லாம் புன்னகை பரிமாறின. பிக்கே - ரமோஸ் இருவரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். தான் திட்டிய வஸ்கிஸின் முதுகைச் செல்லமாகத் தட்டிக்கொடுத்தார் பாலினியோ. மாட்ரிச் - ஆல்பா சண்டை மறந்து சமாதானம் பேசினர். களத்துக்கு வெளியே வெல்வர்டேவின் கன்னத்தைத் தட்டி வாழ்த்திச் சென்றார் ஜிடேன்! வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்ல, ரசிகர்களும் கூட. ஆட்டத்தின் நடுவே, தன் கடைசி கிளாசிகோ போட்டியை விளையாடி வெளியேறிய இனியஸ்டாவுக்கு மாட்ரிட் ரசிகர்களும் `ஸ்டேண்டிங் ஒவேஷன்’ கொடுத்தனர். ரியல் மாட்ரிட் ஜெயிக்கவில்லை... பார்சிலோனா ஜெயிக்கவில்லை... மாட்ரிட் - கேடலோனியா அரசியல் அங்கு தோற்றுப்போயிருந்தது... ஆம், அரசியல் விளையாட்டுக்களை கடந்து கால்பந்து அங்கே வென்றிருந்தது!

https://www.vikatan.com/news/sports/124370-el-classico-ends-in-a-22-draw-after-dramatic-incidents-in-the-field.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.