Jump to content

மழை நின்ற காலத்தில்...


Recommended Posts

பதியப்பட்டது

மழை நின்ற காலத்தில்...  

 

 
k2

 


குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். 
விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு
சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு.
யாரோ என் தோளைத் தொட திரும்பினேன்.
"நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...''
அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்சாகமாகக் கையாட்டினாள்.
யார் இவள்...? குழப்பத்துடன் "என்னையா?' என்பது போல் சைகை காட்ட அவள் சிரித்தபடி "ஆமாம்' என்பதாக பெரிதாகத் தலையாட்டினாள்.
அந்த முகம்... அந்த சிரிப்பு... கால் நொடியில் சிந்தனை, மூளை முழுவதும் பரவி ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி... அட, இது மினி... சிஸ்டர் மினி.
உற்சாகமாகப் புன்னகைத்து தலையாட்டினேன்.
இதுவே தமிழ்நாடு என்றால் அவளை முன்னே வரவழைத்துப் பேசலாம். கேரளா என்பதால் நான் பின்னே சென்று அவளுடன் சேர்ந்து கொண்டேன்.
"எந்தா ஏட்டா... மினியை அடையாளம் கண்டோ...?''
"மினி... எப்படியிருக்கே மினி...? எவ்வளவு வருஷமாச்சு உன்னைப் பார்த்து...''
"ம்... அதாச்சு ஏழெட்டு வருஷம் ஏட்டா...''
"யாரு மினி உன்னோட குழந்தையா...?''
"அதே. அசுவதிக் குட்டி... அங்கிளுக்கு குட்மானிங் பறையு...'' 
அவள் சொல்ல அதுவும் தன் இடது கையை நெற்றி மேல் வைத்து "மார்னி...'' என்றது.
"ஏட்டா... இது எண்ட அம்மை...''
அருகிலிருந்த அவள் தாயை அறிமுகம் செய்தாள்.
"ஞான் ஆஸ்பத்திரில ஜோலில இருந்தப்போ ஏட்டனோட அம்மைக்கு ட்ரீட்மென்ட் நோக்கான் வேண்டி ஏட்டன் அவிட வந்துட்டுண்டு...''
"ஓ...'' என்றவள் என்னிடம் திரும்பி "அம்மே இப்போ எங்கன உண்டு...? சுகந்தானே...''
"அம்மே...'' மினி தாயை அடிக்குரலில் அதட்டினாள்.
"ஏட்டனோட அம்மே இப்போ இல்லே. மரிச்சுப் போயி...'' என்று சொல்ல அவள் பதட்டமாகி "úஸôரி úஸôரி...'' என்றாள் வேகமாக.
"நோ ப்ராப்ளம்'' என்றேன் புன்னகையோடு. 
"ஏன் மினி கல்யாணமே கழிக்க மாட்டேன்னு சொன்ன...?''
"கடைசி வரை வேணாம்னு தான் பிரஸ்னம் பண்ணினா. சரியான மண்டை வேதனை. நானாக்கும் கம்பெல் பண்ணி செஞ்சு வச்சது...''
"எண்ட மாமன் மகன் தான் அவரு ஏட்டா.''
"சந்தோசமா இருக்கேல்ல மினி...? அது போதும். நர்ஸ் யூனிபார்மில உன்னைப் பார்த்தது... இப்போ திடீர்னு சேலைல பார்த்ததும் ஆள் அடையாளமே தெரியலே மினி''
"அதாக்கும்! செரி உங்க சம்சாரம் வரலையா...? ஒரு மகன் தானே...?''
"ம்... ரெண்டு பேருமே வரலை மினி. தனியாத் தான் வந்திருக்கேன்..''
கூட்டம் மெல்ல நகரத் துவங்கியது.
"அப்புறம் ஆஸ்பிட்டல் எப்படியிருக்கு மினி, ஜோசப் டாக்டரு எப்பிடியிருக்காரு...?''
"ஓ. நான் இப்போ அங்கே இல்லே ஏட்டா. வேற ஆஸ்பிடல் போயி...''
"ஓ அப்படியா...''
"அம்மையை என்னால மறக்கவே முடியாது ராஜேஸ் ஏட்டா. அம்மை இப்பவும் என்னோட கனவுல வந்துட்டுண்டு. வெல்லம் கேட்கும். சிரிக்கும்.''
திடீரென்று குழந்தை அழுதாள்.
"எந்தா குட்டி... மோளுக்கு பசிக்குதா'' என்று முந்தானையை விலக்கி விட்டுக் கொண்டாள்.
முன்புறம் திரும்பிக் கொண்டேன். அவள் பற்ற வைத்த அம்மாவின் ஞாபகத் தீ என்னுள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது...

 

அப்பாவைக் குறித்தான பெரிய நினைவுகள் என் மனதில் தேங்கியிருக்கவில்லை.
அவரிடமிருந்து அடிக்கும் சிகரெட் வாடையும், முரட்டுத்தனமான அணைப்பும், சைக்கிளில் என்னைப் பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு இரவுக்காட்சி என்று சினிமா அழைத்துப் போனதும், தப்புந் தவறுமாக நான் சொல்லும் இங்கிலீஸ் எஸ்úஸக்களைக் கேட்டு ரசிப்பதும்... அழுத்தமாகப் பதிவதற்குள்ளாகவே எனது பன்னிரெண்டாவது வயதில் லாரி விபத்தில் அவர் பிரிந்து போனார்.
அதன் பிறகு எனக்கு அம்மா தான் அப்பா.
சொந்த வீடும், அப்பாவின் இன்சூரன்ஸ் பணமும் எத்தனை நாள் துணைக்கு வரும்...?
அரைகுறையாகத் தனக்குத் தெரிந்த தையல் தொழிலை மேம்படுத்தி வீட்டின் முன்புறம் தையல் மெசின்களைப் போட்டு உழைப்பின் உன்னதம் உணர்த்தினதும், படிப்பு மட்டுமே கடைசி வரை துணை என்று அதன் அருமை புரிய வைத்ததும், நல்ல நட்புகளின் உறவு உண்டாக்கி, உலகம் உணர்த்தி உயர்வு உண்டாக்கியதும்... அவர் தான்.
"சே பாவம்... அப்பா இல்லாத பையன்' என்ற உணர்வு எனக்கே கூடத் தோன்ற விடாது வளர்த்த விதம் என்ன சொல்ல...
நன்றாகப் படித்தேன். எனது சுய முன்னேற்றமே அவளது சந்தோசத்திற்கான ஒரே காரணமாக அமையும் என்பதை புரிந்தே இருந்தேன். கல்லூரி முடித்த இரண்டாவது வாரத்திலேயே நான்கைந்து வாய்ப்புகள் தேடி வர அம்மாதான் எனக்கான வேலையைத் தேர்ந்தெடுத்தாள்.
"பெரிய கம்பெனில வேணாம். உன்னைக் காணாமப் பண்ணிடுவாங்க. சின்ன கம்பெனியும் வேணாம். உன்னோட திறமையை வீணடிச்சிடுவாங்க. வளர்ந்துட்டு வர்ற கம்பெனியா பாரு. நீயும் வளர்ந்து அவங்களையும் வளர்த்திடலாம்...''
அம்மாவின் கணிப்பு சரியானதாகவே இருந்தது. தேசம் முழுக்க கிளைகள் விரித்து பெரிதான முன்னேற்றம் அடையத் துடிக்கும் ஒரு நம்பிக்கையான நிதி நிறுவனத்தின் பொறுப்பில் அமர்ந்தேன். வேலையின் தன்மை உணர்ந்து, நிறைகள் பெருக்கி, தவறுகள் களைந்து... இரண்டு வருடத்தில் மூன்று பதவி உயர்வுகள் தேடி வந்தன. வெளிநாடு வந்தேன். தலைமைக்கு அடுத்த இடத்தில் இருப்பவருடன் நினைத்த நேரத்தில் பேசும் அதிகாரம். வீடு எடுத்தேன். அம்மாவின் பெயரில் ஆனந்த வீடு. 
அதே பிறந்தநாளில் அம்மா தொடங்கிவிட்டாள் திருமணப் பேச்சினை. 
"இதான் சரியான நேரம்டா... கல்யாணம் பண்ணிக்கோ''
"சரி உன் விருப்பம்'' என்று சொல்ல, பறந்து பறந்து தேடி எனக்காக தனலட்சுமியை திருமணம் செய்து வைத்தாள்.
தனலட்சுமிக்கு அவள் இன்னொரு தாய். 
நம்பகமான ஒரு ட்ராவல் ஏஜன்சி மூலம் காசி, கயா, மதுரா என்று உள்நாட்டிலும் , இலங்கை, மலேசியா என்று வெளிநாடுகளுக்கும் டூர் அனுப்பி வைத்தேன். கண்புரை சிகிச்சை செய்து கொண்டாள். லேசான மூட்டு வலி அவஸ்தை இருந்து வந்தது. 
அவள் ஆசைப்பட்டபடியே முதல் வாரிசாக அண்ணாமலை பிறந்தான். கண்ணுக்குள் வைத்து கவனித்துக் கொண்டாள்.
நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. அல்லது நான் தான் அப்படி தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேனோ? திடீரென்று ஒரு நாள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தாள். எழுப்பி நிறுத்த, மீண்டும் தொப்பென்று சரிந்து விழுந்தாள். ஏன் இப்படி, எதனால் என ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம்.
மறுதினம் அவள் நிலை இன்னும் மோசமானது. இடது கையும், இடது காலும் முடங்கிப் போனது. கண்ணீர் விட்டுக் கதறினாள். 
"நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலையேடா''
அவளைத் தேற்றினேன். நியூரோ சர்ஜன் வந்தார். பொய் சுத்தியலால் மூட்டுகளைத் தட்டி, " இங்கே வலிக்குதா... இங்கே வலிக்குதா'' என்றார். மொன்னை ஆணியால் பாதம் கீறி ஏதாவது தெரியுதா என்று உணர்ச்சி
களைப் பரிசோதித்தார். சொன்னார்:
"பேராலைசிஸ் அட்டாக்'' - முடக்குவாதம்
இடிந்து போனேன் என்பதைவிட உடைந்துபோனேன் என்பதே நிஜம். 
அடுத்து வந்த நாட்கள் இன்னும் கொடூரமானதாகவே அமைந்தன. அவளது வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டுவிட்டது. அத்தனை கோபத்திலும் ஏதோ கருணை காட்டியதுபோல ஆண்டவனின் செயல் அமைந்தது. கோணிப் போன வாய் மட்டும் இரண்டொரு தினங்களில் தானாகவே சரியாகிப் போனது. 
அதுபோல கை, கால் முடமும் குணமாகிவிடும் என்று நம்பினேன். ஆனால் அது நடக்கவேயில்லை. 
இட்லியும், ரச சோறும் மட்டுமே சாப்பிட்டாள்.
தினசரி இரண்டு முறை நடைப்பயிற்சிக்கு பிசியோதெரபிஸ்ட் பயிற்சி. ஏராளமான மாத்திரைகள். தூக்கம் வர, யூரின் போக, மோசன் போக, நிறுத்த...
நானும் தனலெட்சுமியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம். அண்ணாமலை அவளின் கை பிடித்து இழுத்து, "வாங்க பாத்தி... வீட்டுக்குப் போகலாம்'' என்று அடம்பிடித்து அழுதான். 
டாக்டர் என்னை அழைத்திருந்தார். 
"என்ன பண்ணப் போறீங்க ராஜேஷ்? இந்த விஷயத்துக்கு இங்கே ட்ரீட்மெண்ட் இப்படித்தான். இவ்வளவுதான். மத்த டாக்டர்ஸ் மாதிரி பொய்யாப் பேசி, பணத்தைக் கறக்க மாட்டேன். வேற ஏது பண்றதுக்கும் அவங்க உடம்பு தாங்காது. வயசாகி உழைச்சு தேஞ்ச உடம்பு. வேற ஏதாவது பண்ணி நீங்களும் கெடுத்திடாதீங்க. ஒவ்வொரு உறுப்பா தேய்மானம் அடைஞ்சிட்டிருக்கு. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க. கூடவே இருங்க. தேவையானதை கேட்காமலேயே செய்து கொடுங்க. ரிஸ்க் எடுக்க வேணாம் ராஜேஷ்''
எனக்கு உண்டான கோபத்துக்கு பல்லைக் கடித்துக் கொண்டே வெளியே வந்துவிட்டேன். இவரென்ன டாக்டரா? ஞானியா?
டிஸ்சார்ஜ் செய்து அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆபிஸ் மறந்தேன். நெட்டில் தேடி மருத்துவ ஆலோசனைகள் கவனித்தேன். அம்மாவின் கட்டை விரல் ரேகை உருட்டி நாடி ஜோதிடம் பார்த்தேன். நோய்காண்டத்தில் சொன்ன பரிகாரங்களைச் செய்தேன்.
வீட்டிற்கே லேடி பிஸியோ தெரபிஸ்ட் தினசரி இரண்டு வேளை வந்து அம்மாவுக்குப் பயிற்சிகள் தந்து நடக்க வைக்க முயற்சிகள் தந்தாள். அம்மாவால் ஏதும் முடியவில்லை.
யாரோ சொன்னார்கள் என்றுதான் கோவைக்கும், பாலக்காட்டிற்கும் இடையே அமைந்திருக்கும் அந்த ஆயுர்வேத மருத்துவமனை பற்றித் தெரிந்து கொள்ள சென்றிருந்தேன். 
டாக்டர் தன்னம்பிக்கையோடு பேசினார். "சாரோட அம்மாவைப் போல நிறைய பேசன்டுங்க இவிட உண்டு. எங்களோட உழிச்சல், பிழிச்சல் ட்ரீட்மென்ட் நோயை சீக்கிரமா குணமாக்கித் தரும்''
என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய குற்றம் அவரின் வார்த்தைகளை நம்பி அம்மாவை அங்கே கொண்டு போய்ச் சேர்த்ததுதான். 
அம்மாவின் உடலில் மூலிகைகள் தேய்த்து, ஆயில் தடவி, மரக்கட்டிலில் படுக்க வைத்து ஊற வைப்பார்கள்.
குறிப்பிட்ட நேரம் கழித்து குளியல். குளிகை, கசாயம் என்ற பெயரில் திட, திரவ மருந்துகள்.
அந்தச் சிகிச்சையின் சரியாக மூன்றாவது நாளில் அம்மா ரத்த வாந்தி எடுத்தாள். பெரிய டாக்டர் வந்து பார்தார். 
"சிலருக்கு இந்த ட்ரீட்மென்ட் அலர்ஜியாகிவிடும். பக்கத்திலேயே நம்மளோட டயாபடிக் ஹாஸ்பிடல் உண்டு. அங்கே சேர்த்துடுங்க. நாலஞ்சு நாள் போகட்டும்''
அந்த மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் அம்மாவைச் சேர்ப்பித்தேன். மிகவும் சோர்ந்து போயிருந்தாள். இடையில் இருந்த தெம்பு கூட காணாமல் போயிருந்தது. யூரின் போக சிரமம் என்று ட்யூப் சொருகிவிட்டார்கள். செயற்கை சுவாசத்துக்கு மூச்சுக் குழாய், நாசியருகே, நெஞ்சருகே துளையிட்டு அதிலும் ஒரு குழாய்.
"கடவுளே'' உள்ளூர அலறினேன் நான்.
ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று டாக்டர் அப்போதே சொன்னதை மதித்திருக்கலாமோ...
நான் இவளைக் காப்பாற்றுகிறேனா... இல்லை கஷ்டப்படுத்துகிறேனா...
அந்த மருத்துவமனையில் வைத்துத்தான் மினியைச் சந்தித்தேன். குழந்தை முகமும், கருணை உள்ளமும் நிறைந்திருந்தாள். என் கையைப் பிடித்து அவள் சொன்ன ஒற்றை வார்த்தையில் என் பாதித் துக்கம் கரைந்து போனது. 
"கரையாண்டா சாரே... இனி சாரோட அம்மே என்னோட அம்மே''
சொன்னபடியே அம்மாவை அப்படி கவனித்துக் கொண்டாள். எந்த அசூயையும், சின்ன முகச்சுழிப்பும் அவளிடம் இல்லை. அம்மாவைச் சுத்தம் செய்து விடுவதில் இருந்து அவள் தேவைகளைக் கவனித்து சோறுட்டி, பாதுகாத்து, சன்னமான குரலில் பாடல்கள் பாடி, ஜோக் சொல்லி... என்னைப் பார்த்தால் அழுதிடும் அம்மா அவளிடம் ஆசுவாசமாக இருந்தாள்.
சரியா ஆறாம் நாள் காலை நான்கு மணி இருக்கலாம். அறைக் கதவு படபடவென்று தட்டப்பட்டது.
"சாரே வேகம் வாரும். நிங்களோட அம்மைக்கு குறைச்சு சீரியசாயிட்டுண்டு''
பதற்றமாக இறங்கி கீழே வந்தேன். அவளின் அறை பரபரப்பாக இருந்தது. டாக்டர்களும், நர்சுகளும் உள்ளே வருவதும் , போவதும் ஏதேதோ சாதனங்கள் கொண்டு போவதும்...
அரை மணி நேரம் கழித்து பெரிய டாக்டர் வருத்தமான முகத்துடன் வெளியே வந்து....

 

"எந்தா ஏட்டா கரையுன்னு''
மினி என் தோளைத் தொட நிகழ்காலம் திரும்பினேன். தரிசனம் முடிந்து கோயில் சன்னதி விட்டு வெளியே வந்தோம்.
"என் கூட வா மினி''
அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்தேன். 
"எந்தா ஏட்டா'' என்றாள் புரியாமல்.
அவள் மறுக்க, மறுக்க குழந்தைக்கு அரைப் பவுனில் செயின் வாங்கித் தந்தேன். 
"அன்னைக்கே உனக்கு ஏதாவது செஞ்சிருக்கணும். அப்போ இருந்த பதட்டத்தில, துக்கத்தில என்ன பண்றதுன்னே புரியலே... நைட் டுயூட்டின்றதாலே நீயும் இருக்கலை. ஊருக்கு வந்த பின்னாடி உன்னோட ஞாபகம் வந்துட்டேயிருந்தது. இப்போ உனக்கு பண்ணினதாலே எனக்கு ஒரு மனதிருப்தி. அம்மாவும் சந்தோசப்படுவாங்க''
"என்டே ஹஸ்பெண்ட் கொல்லும்'' என்று புலம்பினாள்.
சமாதானம் செய்வித்து என் விசிட்டிங் கார்டைத் தந்தேன்.
"ஏதாவதுன்னா கூப்பிடு என்ன''
என்னோட ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
"வர்றேன் ராஜேஷ் ஏட்டா பை''

***************

அம்மாவின் நினைவுகளுடனே பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
அம்மா இல்லாதது பெரும் துக்கமாகவே இருந்து வருகிறது. அவள் இன்னும் கொஞ்சகாலம் என்னுடன் இருந்திருக்கலாம். அதற்குள் அம்மா அவசரப்பட்டு....
அவ்வளவு பெரிய ஆள் பேருந்திற்குள் வாய் விட்டுக் கதறி அழுதது எல்லாரையும் பதற வைத்துவிட்டது.
"ஏ... எந்தா எந்தா...''
"என்னங்க... என்னாச்சு?''
"அம்மா... அம்மா....''
"அம்மாவுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா?''
"செத்துப் போயிட்டாங்க''
"அடப் பாவமே... இப்போவா''
"எட்டு வருசத்துக்கு முன்னாடி''
"எந்தா எட்டு வருசம் கழிஞ்சோ'' பின் வாங்கினார்கள். 
"யோவ் எத்தனை வருஷம் போனா என்னய்யா. அம்மா அம்மா தானேய்யா''
"சரி சாரே சரி.. கரையண்டா'' தண்ணீர் பாட்டில் தந்தார்கள்.
இத்தனை காலமும் அவள் செத்துப் போன துக்கத்தைப் போலவே மனதை உறுத்தும் இன்னொரு விசயமும்...
அம்மா படும் வேதனைகளையும், துயரங்களையும் காணச் சகிக்காது, டாக்டருடன் கலந்து பேசி அம்மாவின் மூச்சை செயற்கையாக நான்தான் நிறுத்தினேன்.
ஒவ்வொரு முறை அவள் வேதனையுடன் பதறும்போதெல்லாம், கண்ணீர் தேங்கும் விழிகளுடன் என்னை வெறித்து நோக்கி, "டேய் என்னை விட்டுர்றா. என்னால முடியலேடா'' என்று சொல்லாமல் சொல்லுவாளே என்ன பதில் அதற்கு?
கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். 
நான் தான் என் அம்மாவைக் கொன்றேன். நான்தான். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். அம்மா நிச்சயம் மன்னிப்பாள். கண்களை மூடிக் கொண்டேன்.
மனதிற்குள் அம்மாவின் முகம் விரிந்தது. 
கருணை வழியும் கண்களுடன் என்னை ஆரத் தழுவி... தலை கோதி முத்தமிட்டு, "என் மகனைப் பத்தி எனக்குத் தெரியாதா?'' என்றாள்.
ய் நித்யா

 

 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கருணைகொலைதான் ஆனால் என்ன செய்தவனையே மீண்டும் மீண்டும் கொல்கிறதே......!  ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரணிப்பவர்களை விட மரணத்தின் தருணத்தை உடனிருந்து தரிசிப்பவர்களின் மனதின் வலி உயிருள்ளவரை உடனிருந்து கொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழை நின்ற காலத்திலும் கண்ணீர் நிற்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.