Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழையே... மழையே...

Featured Replies

 
மழையே... மழையே...
 
 
E_1526374181.jpeg
 

உச்சி வெயில் நெருப்பாய் சுட்டெரித்தது. கையில் பூக்கூடையுடன், காலை இழுத்து இழுத்து நடந்தபடி, மரத்தடி நிழலில் ஒதுங்கினாள், பொன்னம்மா. அவளின் ஒரு கால் பிறவி ஊனமாகவும், ஒரு கண், மாறு கண்ணாக இருந்ததாலும், அவளின் இயக்கம் மந்தமாகவே இருந்தது. அத்துடன், மன வளர்ச்சி கூட சிறிது குறைவு தான். ஆனாலும், தினந்தோறும், பூ மார்க்கெட் சென்று, பூ வாங்கி, கட்டி, தெருத் தெருவாய் விற்று, அந்த பணத்தில், சமைத்து சாப்பிடுவாள்.
இரக்கப்பட்டு யாராவது எதையாவது தந்தால் வாங்க மாட்டாள். எப்போதும், வெயிலிலும், மழையிலும் போராடுபவளாயிருந்தும், இந்த ஆண்டு வெயிலை, எல்லாரையும் போல் அவளாலும் தாங்க முடியவில்லை.


காடு, கழனிகள் காய்ந்து விட்டன; கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. சில ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்தாலும், அதை, கடல் நீர் ஊடறுத்துக்கொண்டு வந்து வாயில் வைக்க முடியாத அளவுக்கு உப்பு நீராக்கி விட்டது.
மரத்தடி நிழலுக்கு அவர் ஒதுங்கியபோது, அவரைப் பார்த்து, வெள்ளந்தியாக சிரித்தாள், பொன்னம்மா.
''என்ன பொன்னம்மா, இங்கே நின்னுட்டே... பூ விக்கப் போகலியா?'' என்று கேட்டார்.
''இந்த வெயில்ல எங்கண்ணா போறது... நான் பிறந்ததுல இருந்து இப்படி ஒரு வெயில பாத்தது இல்ல; மரம், செடி, கொடியெல்லாம் கறுகிப் போயி கெடக்கு; போற போக்க பாத்தா, பூ விளைச்சலே செய்ய முடியாம, பொழைப்புல மண்ணு விழுந்துரும் போலிருக்கு...
''பாவம் வேலாத்தா... அவ வளர்த்த பசு வெக்க தாங்காம, நேத்து செத்து போச்சு; அழக்கூட ஆவியில்லாம மொடங்கிக் கெடக்கறா... வெயிலு இந்த அடி அடிச்சா, புள்ளக் குட்டிகளும் சாவத்தான் வேணும்,'' என்றாள்.


''முன்னெல்லாம், நம்ம ஊருல ஓலக்குடிசையா இருந்துச்சு; எப்படியாப்பட்ட வெயிலா இருந்தாலும், வீட்டுக்குள்ள வெக்க இருக்காது. இப்ப அரசாங்கம், சுனாமி வீடு, மூணு லெச்ச ரூபாய்ல இலவச வீடுன்னு, மட்டுப்பா வச்ச வீட்டக் குடுத்தாச்சு. மட்டுப்பா வீட்டுக்குள்ள அடிக்கற வெயிலும், வெக்கயும் நெருப்பள்ளிக் கொட்டுது; அப்புறம், வராத நோயெல்லாம் வரத்தானே செய்யும்,'' என்றார், அவர்.
''இதுக்கு வழியென்னண்ணா... மழய எப்படித்தான் வரச் செய்யுறது?'' என்று கேட்டாள், கவலையுடன் பொன்னம்மா.
''நம்மளால என்ன செய்ய முடியும்; சாமிகிட்டதான் மழையப் பொழிஞ்சு, மண்ணையும், மக்களையும் காப்பாத்துடா கடவுளேன்னு மக்கள் எல்லாம் கூடி பிரார்த்தனை செய்யணும்,'' என்று அவர் கூறியதும், ''பிரார்த்தனைன்னா என்னண்ணா...'' என்று கேட்டாள், பொன்னம்மா.
''கடவுளுகிட்ட கெஞ்சிக் கேக்கறதுக்குப் பேர் பிரார்த்தனை.''
''கெஞ்சிக் கேட்டா சாமி மனமெரங்கி, மழை பெஞ்சிடுமா?''


'' நம்பிக்கை வச்சு, கடவுளுகிட்ட கேட்டா கெடைக்காதது எது... கண்டிப்பா கடவுளு மனமெரங்கி மழையத் தருவாரு.''
''பொறவென்ன... கடவுளுகிட்ட கேக்க வேண்டியதுதானே...''
''அதுக்காகத்தான் நம்ம வட்டாரத்துல உள்ள எல்லா ஊர் ஜனங்களையும் ஆலமரத்துக்கு வரவச்ச, கூட்டுப் பிரார்த்தனை பண்றதுக்கு ஏற்பாடு நடந்துகிட்டிருக்கு.
''வர்ற வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் நடக்கும். ஐயர்மாரு வந்து யாகம் வளப்பாங்க; அமிர்தவர்ஷினின்னு ஒரு ராகத்தப் பாடிகிட்டேருந்தா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம். அந்த ராகத்தப் பாட, பெரிய பெரிய வித்வான்கள் வாராங்களாம்...''
''ரொம்ப செலவு ஆகுமோ...''


''பின்னே... லட்சக் கணக்கில ஆகும்ன்னு பேச்சு.''
''அன்னைக்கு பூவுக்கும் செலவாகும் இல்லயா?''
''கட்டாயம்; ஏன்... நீயே பூவெல்லாம் குடுத்துடறேன்றியா?''
''எங்கிட்ட துட்டிருந்தா நானே குடுத்துருவேனே... ஆனா ஒண்ணு...'' என்றாள்.
''என்ன?''
''இன்னையிலேருந்து நா, பூவ விக்கிற காசுல ஒரு பைசா கூட எஞ்செலவுக்கு எடுக்காம, அந்த காசுக்கு பூ வாங்கிட்டு வந்து வெள்ளிக்கெழம உங்க கைல குடுத்துப்புடுறேன்; நீங்க அந்த பூவச் சாமிகிட்ட சேர்த்திடுறீயளா...''
''கண்டிப்பா சேர்த்துர்றேன்; ஒன்னோட பிரார்த்தனையிலயாவது மழை பொழியட்டும்,'' என்றார்.



வெள்ளிக்கிழமை ஊரே அல்லோலகல்லோலப் பட்டது. பரந்து, விரிந்து, விசாலமாக கிளை பரப்பி, நிழல் தந்து கொண்டிருந்த ஆல மரத்தடியில், ஆண்களும், பெண்களும் பக்தி சிரத்தையோடு கூட்டுப் பிரார்த்தனைக்காக கூடினர்.
காலை ஏழு மணிக்கெல்லாம், தன் பெருத்த சரீரத்தோடு இரண்டு பெரிய சாக்கு மூட்டைகள் நிறைய பூக்களை சுமந்தபடி, தத்தி தத்தி நடந்து வந்தாள், பொன்னம்மா. துாரத்திலிருந்தே கவனித்துவிட்ட அவர், விரைந்து சென்று, அவள் தலையிலிருந்த மூட்டைகளை இறக்கி, யாகக் குண்டமிருந்த இடத்திற்கு கொண்டு போனார்.
''அண்ணா... நான் இங்கே ஒக்காரலாமா?'' ஆர்வத்தோடு கேட்டாள் பொன்னம்மா.
''உட்காரும்மா... யாரும் உன்னை தள்ளிப்போகச் சொல்ல மாட்டாங்க,'' அவளை அமரச் சொல்லி, நகர்ந்தார்.
பொன்னம்மா கொண்டு வந்திருந்த பூக்கள், பூஜைக்கு பயன்படுத்தப்பட்டன.
மேள தாளத்தோடு ஆரம்பமானது, கூட்டுப் பிரார்த்தனை. ஆகம விதிப்படி, வேத பாராயணங்கள் ஹோம புகை மேலெழுந்து விரிந்த பரவல்கள்... நாதஸ்வர வித்வானின் அமிர்தவர்ஷினியின் ஆலாபனை... கூடியிருந்தோரின் ஒருமித்த பிரார்த்தனை குரல்கள் என, தெய்வீக மனம் பரவி, அலைமோதி காற்றில் கலந்து, விண்ணை எட்டியது.
'இதோ... இப்போது... இன்னும் சிறிது நேரத்தில்... மழையே வா... வருண பகவானே மனமிரங்கு...' நம்பிக்கையின் குரல்கள், அந்த ஆல மரத்தடியெங்கும் எதிரொலித்தன.
பொழுது இருளத் துவங்கியது; அமிர்தவர்ஷினி, ஹோமம், பிரார்த்தனை... எல்லாவற்றிற்கும் ஏமாற்றமே மிஞ்சியது. கூடிப் பிரார்த்தனை செய்தவர்களெல்லாம் கலைந்தாகி விட்டது.


மழைதான் எட்டிப் பார்க்கவில்லை. நெஞ்சில் பாரத்தோடு அவரும் வீட்டை நோக்கி நடையை கட்டினார்.
நடுச்சாமத்தில் விழிப்பு தட்ட, தன் ஒரு வார சம்பாத்தியம் முழுவதையும் பூவாக கொண்டு வந்து கொட்டிய பொன்னம்மாவின் நினைவு வந்தது.
இப்போது, அவளின் மனநிலை எப்படி இருக்கும்... நான், அவளுக்கு கொடுத்த நம்பிக்கை சொற்கள் அவளை பாதித்திருக்குமோ...
மனதிலெழுந்த கேள்விகளோடு, தன் வீட்டிற்கு வடக்கே நின்றிருக்கும் ஆல மரத்தடி நோக்கி ஓசையில்லாமல் நடந்தார். சாலை ஓரத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில், ஒரு பெண்ணின் உருவம் தெரியவே, பரபரப்போடு ஓடினார்.
கடவுளே... அவளே தான்... ஆடாமல், அசையாமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்திருந்தாள், பொன்னம்மாள்.


''பொன்னம்மா... இங்கே தனியா உக்காந்து என்ன பண்ணிகிட்டிருக்கறே... இப்ப, மணி என்ன தெரியுமா...''
கண் மூடி அமர்ந்திருந்த பொன்னம்மா, அலட்டிக்கொள்ளாமல் தலை நிமிர்ந்து, அவரைப் பார்த்து,''சாமிகிட்ட மழைய கேட்டுகிட்டிருக்கேன் அண்ணா...'' என்றாள்.
''எல்லாரும் போனப்புறம் நீ மட்டும் ஒத்தையில உக்காந்து கேட்டா, உடனே மழை வந்துருமா... எழுந்து வீட்டுக்கு போ...'' என்றார்.
''நீங்கதானேண்ணா நாம மனம் உருகி சாமிகிட்ட கேட்டா, கட்டாயம் மழை தருவார்ன்னு சொன்னீங்க?''
''ஒரு நம்பிக்கையில சொன்னேன்.''
''இப்ப மட்டும் ஒங்க நம்பிக்கை எங்க போச்சு... நீங்க சொன்னது எனக்கு சாமி சொன்னது மாதிரியே இருந்துச்சு. சாமி சொன்னது எப்படி பொய்யாகும்... சாமி மழை தருவாரு...''
''ஒனக்கு கிறுக்குப் பிடிச்சுப் போச்சா... பேசாம எந்திருச்சி வீட்டுக்குப் போ...''
''மழை வந்தாத்தான் இந்த எடத்த விட்டு எந்திரிப்பேன்,'' என்றாள், அழுத்தமாக!


''மழை வரலேன்னா இங்கேயே கெடந்து சாவப் போறியா?''
''அதெப்படி மழை வராம இருக்கும்... சாமிக்கு எத்தன சோலியோ... அதெல்லாம் முடிச்சிட்டு தானே மழையக் கொண்டாருவாரு... அதுவர இங்கேயே இருப்பேன். செத்தாலும் சாவேனே தவிர, மழையை வாங்காம வரவே மாட்டேன். நீங்க போங்க,'' தீர்க்கமாக சொன்னவள், இரண்டு கைகளையும் குவித்து, சாமிக்குள் சங்கமித்து விட்டவள் போல் மவுனமானாள்.
மறுநாள், ஆல மரத்தை நோக்கி அவர் சென்ற போது, அதற்குள் விஷயம் தெரிந்த பலர், அவளை சுற்றி நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
''ஏற்கனவே, அரைக் கிறுக்கி; இப்ப முழு கிறுக்கியாகிட்டா... அதான் இப்படி உக்காந்திருக்கறா. ஏய்... கிறுக்கு சிறுக்கி... எழுந்திருக்கறயா இல்ல முடியப் பிடிச்சு துாக்கி விடணுமா?'' பொன்னம்மாவின் ஒன்றுவிட்ட சித்தி, சீற்றத்தோடு அவளை நெருங்கி வந்தாள்.
''அவசரப்படாதீங்கம்மா... சாமி மழைய தருவார்ன்னு அவளுக்கு அப்படியொரு நம்பிக்கை. ஒருவேளை எல்லாராலயும் முடியாதது அவளோட நம்பிக்கையால வந்தா நல்லது தானே...'' நடுத்தர வயது பெண்மணி, அவளை தடுத்தாள்.


உலக நினைவே இல்லாமல், 'சாமி... சாமி... மழை... மழை' என்ற சொற்களையே பொன்னம்மாவின் உதடுகள் உச்சரித்தபடி இருந்தன.
''இவளுக்கு ஒண்ணுமே தெரியாது; யாரோ சொன்னதக் கேட்டுதான் இப்படி கிறுக்குத்தனமா நம்பி, வானத்தை பாத்துட்டிருக்கறா... புத்தி சரியா வேல செய்யாதே தவிர, பிடிவாதக்காரி; இனிமே, அவளா இந்த எடத்த காலி பண்ணாத்தான் உண்டு. எல்லாரும் அவரவர் சோலிய பாத்துகிட்டு போங்க,'' என்றாள், அவளை நன்கறிந்து பெண்மணி ஒருவர்.
''யளா... பொன்னம்மா... இந்த காபி தண்ணியையாவது குடிச்சிட்டு கொஞ்சம் தெம்பாவாவது இருந்து தொல. இந்தா இதக் குடிளா,'' சொம்பு நிறைய கருப்பட்டிக் காபியை கொண்டு தந்தாள் இரக்கம் நிறைந்த, ஒருத்தி.
'' சாமி மழைய தந்தாத்தான் என் பல்லுல பச்சத் தண்ணி படும். அதுக்கு முந்தி என் வயித்தப் பாத்தம்னா, சாமி மழைய தரமாட்டாரு. யாரும் என்கிட்ட வராதீங்க,'' என்று, சொல்லி கடவுளுடன் ஐக்கியமாகி விட்டாள்.
''ஆனானப்பட்ட ஆளுகள் எல்லாம் வந்து, மழைக்காக லட்ச ரூபாய்க்கு மேல செலவழிச்சு கஜகர்ணம் பண்ணிப் பாத்தும் வராத மழைய, இந்த அரக்கிறுக்கி வரவச்சிருவாளாக்கும்... சவம், சாவத்தான் போவுது,'' என்றாள், கூட்டத்தில் ஒருத்தி.
'ஒருவேளை இவளுக்குள்ள நம்பிக்கை இங்கு கூடிய நமக்கெல்லாம் இல்லாததால்தான் மழை வரலையோ... இவளின் நம்பிக்கை என்பது மழையை வரவழைத்தால் நல்லது தானே... ஆனால், இவளின் நம்பிக்கையே இவளுக்கு எமனாகிப் போனால், அவளை கொன்ற பாவம் நம்மைதானே சேரும்...' என்று நினைத்து, வேதனைப்பட்டார், அவர்.


மூன்றாம் நாள் -
எவ்வளவோ முயன்றும் பொன்னம்மாவை மாற்றவே முடியவில்லை. அன்று, மதியம், திடீரென மேகம் இருண்டு கருத்தது; மழை வரும்போல் தோன்றியது. எல்லாருக்கும் பொன்னம்மா நினைவு வர, ஊரே திரண்டு ஆல மரத்தடிக்கு வந்தது.
'பொன்னம்மாவோட நம்பிக்கை பொய்யாகல... நெருப்பாக் கொதிச்ச வெயிலு அடங்கி, மழை மேகம் தெரண்டுடுச்சு... கடவுளு கண் தெறந்துட்டாரு. இன்னிக்கு மழை ஊத்தோ ஊத்துன்னு ஊத்தப் போகுது...' என்று சந்தோஷப் பட்டனர்.
ஆனால், சிறிது நேரத்தில், திரண்டிருந்த மேகம், போன இடம் தெரியாமல் போய் விட்டது.
'இவளெல்லாம் தவங்கிடந்து மழையை வரவச்சிடுவாளாக்கும்...' ஏமாற்றமும், எரிச்சலுமாய் திரும்பி விட்டனர்.


ஏழாம் நாள் -
மாலைப் பொழுதாகியும் வெயிலும், வெக்கையும் குறைந்தபாடில்லை; சுய நினைவில்லாமல் ஹோம குண்டத்தினருகே துவண்டு சரிந்திருந்த பொன்னம்மாவை அள்ளித் துாக்கினர், ஊர் பெண்கள். அவளை உயர்த்திப் பிடித்தபடி ஆல மரத்தடியை விட்டு, சாலைக்கு வந்தனர்.
'சட்'டென ஒரு பொட்டு நீர், வானத்திலிருந்து வழுக்கி, பொன்னம்மாவின் கீழுதட்டில் பட்டுத் தெறித்ததை கண்டு, அப்பெண்கள் ஆகாயம் நோக்கி, தலை உயர்த்தியது தான் தாமதம், வானம் பொத்துக் கொண்டது போல், கொட்டத் துவங்கியது, மழை.
மெல்ல உடலை அசைத்தாள், பொன்னம்மா.


'ஒத்த மனுசியாப் போராடி... சாமிகிட்ட மழைய வாங்கி தந்துட்டேடி...' என்றபடி, புரண்டோடும் வெள்ளத்தில் பொன்னம்மாவை கிடத்தினர். அடித்துப் புரட்டும் மழையை தாங்க முடியாத பெண்கள் சிதறி ஓடியபோதும், பொன்னம்மாவிற்கு காவலாய் அங்கேயே நின்றிருந்த அவரின் கண்களிலிருந்து கொட்டிய ஆனந்த கண்ணீர், ஒருவரும் அறியாமல் பொன்னம்மாவின் உடலை வருடியது.

http://www.dinamalar.com/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.