Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

Featured Replies

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள்.

இந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் திருத்துவதற்கு/ நிர்மாணிப்பதற்கு என பல தேவைகளுக்காக கடன் பெற்றார்கள், இன்றும் பெற்றுவருகிறார்கள்.

 

eb472754-e79f-4163-b2b6-8288499ce565.jpg?asset_id=18e968ce-e51f-4ae0-acf5-61bfd69d8d25&img_etag=82c0b695336752ace2e6d5f294a42f56&size=2560

போர் முடிவடைந்து இன்றோடு 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். மக்கள் மத்தியில் புதியதொரு கலாசாரத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருக்கிறது. அதுதான் கையேந்தும் கலாச்சாரம். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்த 2009 போர் மக்களின் அனைத்தையும் பறித்தெடுத்திருந்தது. என்னதான் இழந்தாலும் கெளரவத்துடன் எங்களால் வாழமுடியும் என்றிருந்த மக்களை இன்று கயிற்றுக்கும், நஞ்சுப் போத்தலுக்கும் வங்கிகளும், நுண்கடன் வழங்கும் நிறுவனங்களும் இறையாக்கிக்கொண்டிருக்கின்றன.

34501bcf-c102-49fb-ba6d-d44854aeeed5.jpg?asset_id=1a50f752-628e-4077-8916-a2261651424f&img_etag=c132cbd55350d983db02423e295a6d72&size=1024

ள்கிறார் அந்த முகவர். குறித்த பெண் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக தன்னுடைய உறவினர்களையோ அல்லது கிராமத்தவர்களையோ இணைத்துக்கொள்கிறார். இப்போது இவர்கள் அனைவரும் எடுக்கும் கடனை வாராந்தம் செலுத்துவதாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் செலுத்தத் தவறும் பட்சத்தில் குழுவில் உள்ள ஏனையவர்கள் அவருக்காக செலுத்துவதாகவும் ஏற்றுக்கொண்டே கடன்பெறுகிறார்கள். ஆனால், யதார்த்த நிலைவரம் தலைகீழாக இருக்கிறது. குழுவில் ஒருவர் வாரம் வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் ஏனையோரால் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதுடன் கடன் வசூலிக்க வருபவராலும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்.

நிதிநிறுவனங்களால் அனுப்பப்படும் கடன் வசூலிப்பவர்கள் வீடுவீடாக, கிராமம் தோறும் சென்று கடனை செலுத்த முடியாமல் இருக்கும் பெண்களை தகாத வார்த்தைகள் கூறி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிவருகிறார்கள். இதன் விளைவாக கணவர் தன்னை விட்டு பிரிந்துசென்றுவிட்டதாக ‘மாற்றம்’ தளத்திடம் கடன் பெற்ற பெண்ணொருவர் குறிப்பிட்டார். குழுவாக ஒன்று சேர்ந்து கடன் வாங்கிய காரணத்தால் அயலவர்கள், உறவினர்கள் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததால் தான் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாக பெண்ணொருவர் எம்மிடம் கூறினார்.

திங்கள் லோன், செவ்வாய் லோன், புதன் லோன் என பல நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளதால் பெரும்பாலான நேரத்தை வாராந்தக் கொடுப்பனவைத் தேடுவதிலேயே பெரும்பாலான பெண்கள் செலவழித்துவருகிறார்கள். கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்காக பொது இடங்களில், வீட்டுக்கு வெளியில் வைத்து அவமானப்படுத்துவதை ஒரு கருவியாக கடன் வசூலிக்க வருபவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். இவ்வாறு மக்கள் முன்னிலையில் தொடர்ந்து அவமானப்படுத்தபட்டதால் தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை ஒருவர் எம்மிடம் கண்ணீர் மல்கக் கூறினார்.

கடன் வசூலிப்பாளர்களின் தொந்தரவினால், குழுவில் உள்ள ஏனையவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் உயர்ந்த வட்டிக்கு ஏனைய நிதிநிறுவனங்களிடமிருந்தோ அல்லது ஊரில் வட்டிக்குப் பணம் வழங்குபவர்களிடம் இருந்தோ கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் இதன் மூலம் மேலும் மேலும் தாங்கள் கடனாளிகளாக்கப்படுவதாகவும் எம்மைச் சந்தித்த பெண்கள் கூறுகிறார்கள்.

எம்மிடம் பேசிய பெரும்பாலான பெண்கள், கடன் பத்திரத்தில் என்ன இருந்தது என்பதை அறியாமலேயே தாங்கள் கையெழுத்திட்டதாகக் குறிப்பிட்டார்கள். பத்திரம் ஆங்கிலத்தில் இருந்தபோதும் அதில் என்ன நிபந்தனைகள் உள்ளதென்பதை நிறுவனக்காரர்கள் தங்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்றும், கையெழுத்திட்டவுடன் பத்திரம் தங்களுக்குத் தரப்படவில்லை என்றும் கூறினார்கள்.

கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் நிபந்தனைகள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவு போதாது என்று கூறுகிறார் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் அகிலன் கதிர்காமர். கடன் வழங்க அடையாள அட்டை மட்டும் இருந்தால்போதும் என்று கூறி மக்களின் பணத்தை நிதிநிறுவனங்கள் சுரண்டி வருகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

“பொதுவாக வங்கிகளில் கடனுக்கு வட்டி வீதமாக 8% வீதத்திலிருந்து அறவிடப்படுகிறது. சுயதொழிலிலுக்கான கடனுக்காக 14% வீதத்திலிருந்து அறவிடப்படுவதுடன், தங்க ஆபரணங்கள், சொத்துக்களை அடமானம் வைத்து அதனை மீட்பதற்கான வட்டியாக 15-21% வரை வங்கிகள் அறவிடுகின்றன. ஆனால், நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் பெருமளவு வட்டி அறவிடுகின்றன. நாங்கள் ஆராய்ந்து பார்த்தபோது 40%-220% வரை நிதிநிறுவனங்கள் அறவிடுகின்றன. இருந்தபோதிலும் கடன் பத்திரங்களில் 24%-28% வரை அறவிடுவதாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்” என்று அகிலன் கதிர்காமர் குறிப்பிடுகிறார்.

கடந்த வருடம் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றிய பேரணி ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றது. பேரணியின் இறுதியில் மக்களால் யாழ். அரச அதிபர், வடமாகாண ஆளுநரிம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் நிறுவனங்கள் தனது வேட்டையை நிறுத்தவுமில்லை. அதிகாரிகள் அத்துமீறி நடக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமில்லை.

இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறும் அகிலன் கதிர்காமர், ஒரு வருடத்தில் செலுத்தி முடிக்கவேண்டிய கடனை 5 வருடங்களில் செலுத்தி முடிப்பதற்கு கால அவகாசமொன்றை வழங்கலாம் அல்லது வட்டியை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பெண்கள் நிதிநிறுவனம் எனும் முதலையின் வாயிற்குள் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், கணவனின் வன்முறையைத் தாங்க முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், அடமானத்தில் உள்ள பொருட்களை மீட்பதற்காகவும், வீட்டைக் கட்டுவதற்காகவும் என நிதிநிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட, தலைமறைவாக வாழ்ந்துவரும் பெண்களை ‘மாற்றம்’ சந்தித்தது. அவர்கள் தாங்கள் அனுபவித்துவரும் இன்னல்களை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

குறிப்பு: பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

99a01b59-47fa-498f-beb8-276b903f6242.jpg?asset_id=fa4168c8-10f9-4be4-8a29-2e96daf9d08c&img_etag=8370f3c7fdb258dc255e7e72f35eff80&size=2560$

மகளைத் திருமணம் செய்யும்போது அவளுடைய கணவர் நன்றாகத்தான் இருந்தார். பிறகு குடிக்கு அடிமையானவர் மகளை கடன் வாங்கித்தருமாறு தொந்தரவு செய்திருக்கிறார். என்ன செய்தாவது கடன் வாங்கித்தருமாறு அடித்திருக்கிறார். குழுவாகச் சேர்ந்து வாங்கும் கடன் முறையில்தான் மகள் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனை முழுவதுமாக குடித்தழித்துவிட்டு, எங்கு சென்றானோ தெரியவில்லை, இதுவரை காணவில்லை.

கடன் வழங்கிய நிறுவனக்காரன் மகளுக்குத் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறான். குழுவாகச் சேர்ந்து கடன் எடுத்ததால் குழுவில் இருந்த மற்றவர்களும் மகளை கஷ்டத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். ஒரு நாள் என் கண் முன்னே மகளை பெண்ணொருவர் அடித்தார். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் நாங்கள் இருந்த இடத்துக்கு மகளை அழைத்துச் சென்றோம். அங்கு நிம்மதியாக இருந்தாள்.

கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி, “புதுவருஷம் வருது, வீட்டெல்லாம் கூட்டிப்போட்டுட்டு, துப்பரவாக்கிட்டு வாரேன் அப்பா” என்று வீட்டுக்குப் போனவள் தூக்கில் தொங்கிய செய்திதான் வந்து சேர்ந்தது. இதோ இந்த வீட்டில்தான்... இறக்கும்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறாள். அவளுக்கு பெரிய வயதும் இல்லை தம்பி, மூன்று பிள்ளைகளையும் எங்களால் வளர்க்க முடியாது என்பதால் இருவரை கிறிஸ்தவ தேவாலயமொன்றால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்திருக்கிறோம். ஒருவரை மட்டும் நாங்கள் வளர்த்துவருகிறோம்.

மகள் இறந்த பிறகுதான் தெரிந்தது, வங்கிகள் உட்பட 5 நிறுவனங்களிடம் கடன் வாங்கியிருக்கிறாள் என்று.

5b6d0d3b-cad6-4037-aadb-aab460cac978.jpg?asset_id=8b85ae37-1d40-46ee-b06d-c976f9fb2798&img_etag=16090be079c2165167594c90df83f358&size=2560

எனக்கு 4 பிள்ளைகள். கணவர் கட்டாரில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் அனுப்பிய காசைக் கொண்டுதான் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். அதேவேளை, வீட்டையும் கட்ட ஆரம்பித்தேன். வீட்டு வேலையை முடிக்க பணம் போதாததால் கடன் வாங்கினேன். அந்த நேரம் பார்த்து, நான் பொறுப்பாக நின்று போட்டு வந்த சீட்டுக்கு காசு கொடுக்காமல் சிலர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களுக்காக நான் பொறுப்புக் கூறவேண்டியிருந்ததால் அவர்களது கொடுப்பனவையும் செலுத்துவதற்கு கடன் வாங்கியிருந்தேன். இப்போது வட்டி வட்டி என்று செலுத்துவேண்டிய தொகை வானத்தைத் தொட்டுவிட்டது. கணவர் அனுப்பும் பணத்தையும், நான் உழைப்பதையும் கடன் மட்டுமே செலுத்திவருகிறேன்.

வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு வந்த கணவர் என்னோடு கோபித்துக் கொண்டு அவருடைய அம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். “அனுப்பிய பணத்தில் வீடு கட்டவில்லை, கடன்காரியாக இருக்கிறாய், என்னால் உன்னுடைய கடனை அடைக்க முடியாது, வாழவும் பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். வாழ்ந்து என்ன பயன் என்று தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். பிள்ளைகளால்தான் இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். லோன் வசூலிக்க வருபவர்கள் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் விவசாயப் பண்ணைக்குள் வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்து என்ன சொன்னாலும் பரவாயில்லை. வேலை செய்யும் இடத்துக்கு வந்து தொந்தரவு செய்கிறார்கள். எமக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரி, இனிமேல் இப்படி நடந்தால் என்னை வேலையை விட்டு விலக்கிவிடுவதாகக் கூறினார்.

நாளை மறுதினத்துக்குள் 30,000 செலுத்துமாறு லோன் வசூலிக்க வரும் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறுகிறார். வீட்டை விற்றாவது கடனைக் கட்டுங்கள், இல்லையென்றால் வேலைசெய்யும் இடத்துக்கே வருவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கிறார். அப்படி அவர் வந்து எனது இந்த வேலையையும் இழந்துவிட்டால் மீண்டும் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கவேண்டி வரும்.

வீட்டையாவது விற்றுவிட்டு கடனைக் கட்டுங்கள் என்று பிள்ளைகள் கூறுகிறார்கள். இருக்கிற வீட்டையும் விற்றுவிட்டால் பிள்ளைகளுக்கென்று ஒன்றும் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதன்றே தெரியாமல் இருக்கிறேன்.

d54a72c9-3b2b-451f-a05c-db27293040bd.jpg?asset_id=1d7235ac-75e2-4cfb-8a21-8074e6645782&img_etag=cb073edd65330cbe2b4145d80990bd6b&size=2560

சரோஜா அக்காவுக்கு நான் 60,000 கடன் வாங்கிக் கொடுத்தேன். 3 பேர் கொண்ட குழுவாக, கிழமைக்கு ஒரு தடவை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு எடுத்த கடன் அது. 4 வாரங்கள் மட்டும்தான் அவர் கட்டியிருக்கிறார். அதன் பிறகு கட்டவேயில்லை. லோன்காரன் நேரம் காலமில்லாமல் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்வான், நகரமாட்டான். பிள்ளைகள் லோன்காரனைக் கண்டவுடனே நடுக்கத்துடன் எனது பின்னால் ஒழிந்துவிடுவார்கள். லோன்காரன் அடிக்கடி வருவதால் அக்கம் பக்கம் இருப்பவர்களும் கூடாத மாதிரி பேசத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் இங்கு வந்தேன் என்கிறார் *பிருந்தா.

கிறிஸ்தவ தேவாலயமொன்றினால் நடாத்தப்படும் பராமரிப்பு இல்லமொன்றில் 4 பிள்ளைகளுடன் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தங்கிவரும் *பிருந்தா, தொடர்ந்து கடன் வழங்கிய நிறுவனத்தைச் சேர்ந்தவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தி வருவதால் இங்கும் தொடர்ந்து இருக்கமுடியாத நிலையை எதிர்நோக்கிவருவதாகவும் கூறுகிறார்.

கடந்த வாரம் கூட *சரோஜா அக்காவைச் சந்தித்துப் பேசினேன். தான் ஆறாம் மாதத்துக்குள் செலுத்துவதாகக் கூறினார். ஆனால், லோன்காரன் எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாக அச்சுறுத்துகிறான். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.

கணவர் என்னோடு சேர்ந்திருக்கும்போது வாங்கிய ரிவியையும் நிறுவனக்காரர்கள் தூக்க வந்துவிட்டார்கள். பல மாதங்கள் செலுத்திய காசு அநியாயம் என்பதால் ஊரில் உள்ள ஒருவரிடம் 30,000 கடன் வாங்கித்தான் ரிவியை மீட்டேன். இப்போது அந்தக் கடனையும் செலுத்தவேண்டியிருக்கிறது.

கடன் பெறும்போது கையொப்பமிட்ட விண்ணப்பம் தமிழிலும் இருந்தது. எனக்கு வாசிக்க முடியாததால் லோன்காரனோ அல்லது வேறு யாருமோ எனக்குத் தெளிவாக வாசித்துக் காட்டவில்லை. அப்போது வாசித்திருந்தாலாவது கடனை வாங்காமல் இருந்திருப்பேன்.

இங்கேயே தொடந்தும் இருக்க முடியாது. எவ்வளவு நாளைக்குத்தான் இவர்களுடைய உதவியுடன் வாழ்வது. பிள்ளைகளுடைய எதிர்காலம் எனக்கு முக்கியம். நாங்கள் உழைத்து சாப்பிடுவது போல் வருமா?

8937baaf-2cec-4451-9e1a-ba917df6ae9b.jpg?asset_id=4145e03c-f9c8-45ea-9795-f3b42e1dd80d&img_etag=a7d882e177ec2b40865c645025e2e1ca&size=2560

பலசரக்குக் கடையை விருத்தி செய்யவே கடன் வாங்கியிருந்தேன். 5 கடன் வாங்கியிருக்கிறேன். மகன் அனுப்பும் 30,000 ரூபா இரண்டு கடன் அடைக்க மட்டும்தான் போதும்.

நன்றாகப் படித்தவன். கட்டாருக்கு அனுப்பிவைக்க இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் செலவானது. அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். ஐம்பதாயிரம் ரூபா சம்பளம் தருவதாகக் கூறினார்கள். ஆனால், 40,000 ரூபாவே தருவதாக மகன் கூறுகிறான். செலவு போக 30,000 எனக்கு அனுப்பிவைக்கிறான். இங்குள்ளவர்களோ, மகன் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் அனுப்புகிறான் என்று கூவித்திரிகிறார்கள்.

இரண்டு மகன்கள் இன்னும் பாடசாலை செல்கிறார்கள். மகள் ஒருத்தி ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கிறாள். அவள் என்னுடைய இரண்டு லோன்களைப் பொறுப்பெடுத்திருக்கிறாள்.

அன்று அப்படித்தான் 4ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மகனை பாடசாலையில் இருந்து அழைத்துக் கொண்டு வரும்போது லோன் காரன் நிறுத்தி கூடாத மாதிரி பேசிக்கொண்டிருந்தான். பாடசாலை செல்லும் பிள்ளைகளும் இருந்தார்கள். எனது பிள்ளைக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

சாப்பாட்டுக்குக்கூட சரியான கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய அண்ணாதான் உதவிசெய்கிறார். அவர் இல்லையென்றால் ஒரு வேளை சாப்பாடுகூட எங்களுக்கு இல்லை.

வார திங்கள்கிழமை 10 பவுண் தங்கம் ஏலம் விடப்படவிருக்கிறது. வீட்டில் பத்திரங்கள் இருக்கின்றன. அது பரவாயில்லை. எங்களுடைய பொருட்கள்தானே.

காணியொன்று இருக்கிறது. பிள்ளைகள் அதை விற்று கடனை அடைக்குமாறு கூறுகிறார்கள். முன்பு ஐந்து இலட்சத்துக்குக் கேட்டு வந்தார்கள். அப்போது காணியை விற்பதற்கு மனம் விடவில்லை. ஆனால், இப்போது விற்கலாம் என்று நினைத்தால் யாருமே வருவதில்லை. வெளிநாட்டுக்குப் போவதற்கு எல்லாம் பேசிவிட்டேன். ஒருவருடம் போல் இருந்துவிட்டு வந்தால் அனைத்து கடனையும் அடைத்துவிடலாம்.

a8b82799-3c10-4f2c-b186-256413f4f816.jpg?asset_id=91117b06-2a80-4763-8e5c-f4660965a63b&img_etag=06a8065aaa48b04e55154dbcdf637a09&size=2560

 

கணவர் என்னோடு இருக்கும்போது எங்களுக்கிருந்த காணியொன்றை அடமானத்துக்கு வைத்தோம். என்னுடைய விருப்பத்துக்கு மாறாகவே கணவர் இந்த வேலையைச் செய்தார். கடந்த தை மாதம்தான் காணியை மீட்கவேண்டிய இறுதி மாதம். அதற்காகத்தான் கடன் வாங்கினேன். 120,000 ரூபா ஒரு நிறுவனத்திமிருந்து வாங்கினேன்.

திருமணம் முடித்துக்கொடுத்த மகளுக்கு கொடுக்கவென இருந்த காணி அது. “காணியை மீட்டுத் தராவிட்டால் வீட்டுக்குப் போகவேண்டியதுதான்” என்று மகளுக்கு அவருடைய கணவர் அச்சுறுத்தியிருக்கிறார். அதனால்தான் மெனக்கெட்டு காணியை மீட்க வேண்டி ஏற்பட்டது. இல்லையென்றால் விட்டிருப்பேன்.

கணவரும் என்னை விட்டுச் சென்றுவிட்டதால் புல்லு வெட்டி, வீடுகளுக்குச் சென்று சமைத்து கடனைக் கட்டி வருகிறேன். அதுவும் போதாது என்றால் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் வட்டிக்காவது வாங்கி கட்டிவிடுவேன். இப்போது அந்தக் கடனும் அதிகரித்துவிட்டது. யாரும் எனக்கு உதவிக்கு இல்லை.

ஒரு மகன் பாடசாலை செல்கிறான். ஒரு மகன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறான். 9ஆம் வகுப்பு வரைதான் படித்தான். “படிக்காத பிள்ளைய ஏன் ஸ்கூலுக்கு அனுப்புறீங்க அம்மா? எங்கயாவது ஹொஸ்டல்ல சேர்த்திடுங்க” என்று பாடசாலை அதிபர் சொன்னார். இப்போது அவர் என்னுடைய அம்மாவின் வீட்டில்தான் இருக்கிறார்.

இவற்றையெல்லாம் யோசித்துவிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் வந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள். இல்லையென்றால் இந்நேரத்துக்கு உங்களோடு பேசிக்கொண்டிருக்க நான் இருந்திருக்க மாட்டேன்.

மூன்று தினங்கள் வைத்தியசாலையில் இருந்துவிட்டு வீடு வந்துசேர்ந்தபோது பிள்ளை சாப்பாடு இல்லாமல் பசியால் வாடிப்போய் இருந்தது. நான் செத்திருந்தால் என் பிள்ளை அநாதையாகிருக்குமே... இனிமேல் அந்த முடிவுக்கு போகமாட்டேன். என்ன செய்தாவது கடனைக் கட்டுவேன். ஆனால், எரியர்ஸ் மட்டும் நிறைய இருக்கிறது. அது இல்லையென்றால் எப்படியாவது மாதாம் மாதம் கடனைக் கட்டிமுடிக்கலாம்.

bc4e3906-e617-4442-b089-f5426847e75d.jpg?asset_id=23344822-16f8-4eaf-a446-7bba60ca23a8&img_etag=72da34d2388aebbcd2d6f0e0792233c9&size=2560

கணவர் தச்சு வேலை செய்கிறார். அவருடைய தொழிலை கொஞ்சம் விருத்திசெய்யத்தான் லோன் வாங்கினோம். மெஷின் ஒன்று வாங்கியிருக்கிறோம். வேலைகள் செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால், வருமானம் அவ்வளவாக இல்லை. ஒரு கதவையோ, யன்னலையோ செய்துகொடுத்தால் உடனடியாகவே முழுப்பணத்தையும் தரமாட்டார்கள். ஒரு மாதம் இரண்டு மாதம் என இழுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படியிருக்கும்போதுதான் இன்னும் சில லோன்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. லோன்காரன் வீட்டுக்கு வந்து சத்தம்போடும் போது என்னதான் செய்வது. இன்னொரு லோனை எடுத்து கடனைக் கட்டினோம். அப்படி அப்படி என்று கடன் பெருகிவிட்டது. இப்போது மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கடன் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுகூடப் பார்க்காமல் லோன்காரர்கள் திட்டுவதால் அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் லோன்காரன் வந்தால் 7 வயதான என்னுடைய மகள் உடனடியாக வந்து, “அம்மா லோன்காரன் வாரான் ஒழியுங்கோ” என்று கூறுவாள். இல்லையென்றால், வாசலில் வைத்தே, “அம்மா இல்லை, வெளியே கிளம்பிட்டாங்க...” என்று கூறுவாள்.

அன்று அப்படித்தான், எனக்காக கையொப்பமிட்டு கடன் வாங்கித்தந்தவர்களை எங்களுடைய வீட்டின் முன்னால் லோன்காரன் வரிசையாக உட்கார வைத்துவிட்டான். “பணத்தைத் தந்தால் இவர்களை அனுப்புவேன்” என்று இருந்தான். காலை 11 மணியிலிருந்து பகல் 1 மணிவரை அவர்களை இருத்திவைத்திருந்தான். அங்குமிங்குமாக அழைந்து ஒருமாதிரி பணத்தைச் செலுத்திய பின்னால்தான் அவர்களைப் போக அனுமதித்தான்.

ஒவ்வொரு வாரமும், மாதமும் லோன்காரன் வந்தால் அழவைத்துவிட்டுதான் செல்வார்கள். அன்றைய முழு நாளும் செத்தவீடு போலத்தான் வீடு இருக்கும். கூடாத மாதிரி பேசுவார்கள். “பிள்ளைகளோடு வெள்ளைச் சீலையை விரிச்சிப்போட்டு இருங்கோ...” என்று அன்று வந்தவன் கூறுகிறான். குடும்பத்தோடு செத்துவிடலாம் என்றுகூட தோன்றும். பிள்ளைகளை நினைத்தால்தான்...

கன்று போட இருக்கும் மாடும் விழுந்துவிட்டது. வைத்தியர் வந்து ஊசிபோட்டு விட்டுச் சென்றார். அவருக்கு 600 ரூபா கொடுத்தோம். இன்னும் அது எழும்பவில்லை. அதை எழுப்பவேண்டுமாக இருந்தால் இன்னும் 3,000 ரூபா செலவளிக்க வேண்டிவரும்.

கோழி வளர்க்கவும் லோன் வாங்கினேன். பெரிதாக கூட்டையும் கட்டிவிட்டு 250 கோழிகள் வளர்த்தேன். அத்தனை கோழிகளும் இறந்துவிட்டன. இப்போது வெறும் கூடுதான் இருக்கிறது.

fa8b4bd6-2a8e-4470-a7e2-4d1f395925ce.jpg?asset_id=6f2fa8a3-1017-4bad-a01f-256d675b8d63&img_etag=ce0b9135808bf347a829f4a7ced46c55&size=2560

வீட்டு வேலை செய்வதற்காகத்தான் கடன் வாங்கினேன். நான்கு இலட்சம் ரூபா, கணவர் என்னோடு சேர்ந்திருக்கும்போதுதான் எடுத்தேன். தானும் வேலைசெய்து கடனை செலுத்துவதற்கு உதவுவதாக சொன்னார். ஆனால், பிறகு அவர் எனக்கு ஒரு சதம் கூடத் தரவில்லை. எந்தநேரம் பார்த்தாலும் குடிமயக்கத்தில்தான் இருப்பார். வீட்டில் இருந்த அத்தனை பொருட்களையும் விற்று குடித்தார். அவர் வீட்டில் இருந்தால் அடித்துக்கொண்டே இருப்பார். கண்ணில் பட்டதையெல்லாம் கொண்டு அடிப்பார். இப்போது எங்கு போனார் என்று தெரியவில்லை. வீட்டுப்பக்கம் வருவதே இல்லை.

லோனை நான் மட்டும்தான் உழைத்து கட்டிக்கொண்டிருக்கிறேன். அப்பா தச்சு வேலை செய்கிறார். அவரும் எனக்கு உதவிசெய்கிறார். அவர் இல்லையென்றால் எனக்கு யாரும் உதவிக்கு இல்லை. கூலி வேலை செய்து பிள்ளைகளையும் படிக்கவைக்கிறேன்.

கடனையும் வாங்கும் போது எவ்வளவு வட்டி வீதம் அறவிடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. லோன் தந்தவரும் கூறவில்லை. கடனைச் செலுத்த செலுத்த கொடுக்கவேண்டிய தொகை எகிரிக்கொண்டே போகிறது. கேட்டால் அவமானப்படுத்துகிறார்கள். “ஒழுங்காக செலுத்தினால் அது தானாக குறையும்” என்று லோன்காரர் கூறுகிறார்.

லோன் பெறும்போது எனக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருந்தது. ஏற்கனவே எனக்கு தமிழில் வாசிப்பதே கஷ்டமாக இருக்கும்போது ஆங்கிலத்தில் இருக்கும் படிவத்தை தருகிறார்கள். நான் எப்படி விளங்கிக் கொள்வது?

http://maatram.org/?p=6856

  • கருத்துக்கள உறவுகள்

வருகிற தேர்தலில் இந்த பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் கட்சிக்கே ஆதரவு என்று மக்கள் ஒன்றாக முடிவு எடுக்க வேண்டும். மகிந்தவின் கட்சிக்கு விசேட அழைப்பு கொடுத்து தீர்வை நடைமுறை படுத்தினால் வெற்றி நிச்சயம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும். கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் போட்டி போட்டு கொண்டு தீர்வு காண முயற்ச்சிக்கும் சாத்தியம் உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மட்டுமன்றி எல்லா இனமக்களும் நுண்கடன்களால் பாதிக்கப்படுகின்றனர்தானே.

இது தேர்தல் பிரச்சாரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய விடயமல்ல. இறுக்காம regulations வங்கிகள் மீதும் கடன்கொடுப்போர் மீதும் பிரயோகிக்கப்படவேண்டும்.

 

10 லட்சம் புலம் பெயர் தமிழர்கள் வருடம் $1 கொடுத்தாலே வருடம் 1 மில்லியன் டொலர் வரை தாயககத்துக்கு அனுப்பலாமே.

அதை விட்டு போட்டு இப்படி ஒப்பாரி வைத்து என்ன செய்வது

 

  • கருத்துக்கள உறவுகள்

87_C67_A1_C-_A0_B0-4084-9_CF9-398_DBDE80

 

7 hours ago, கிருபன் said:

றுக்காம regulations வங்கிகள் மீதும் கடன்கொடுப்போர் மீதும் பியோகிக்கப்படவேண்டும்.

உண்மை

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

தமிழர்கள் மட்டுமன்றி எல்லா இனமக்களும் நுண்கடன்களால் பாதிக்கப்படுகின்றனர்தானே.

இது தேர்தல் பிரச்சாரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய விடயமல்ல. இறுக்காம regulations வங்கிகள் மீதும் கடன்கொடுப்போர் மீதும் பிரயோகிக்கப்படவேண்டும்.

 

கிருபன், நீங்கள் சொல்வது போல் இறுக்கமான ஒழுங்கு விதிகளை நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் மேல் பிரயோக்கும் கடமையும், ஆற்றலும் யாருக்கு இருக்கிறது? அரசாங்கத்துக்கே இருக்கிறது. ஆகவே, அரசாங்கத்தை நடத்துபவர்களே இதனை செய்யலாம். அரசாங்கத்தை நடத்துபவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் சொல்வதை அவர்கள் கேட்டு செயல்படுத்த கூடிய காலம் தேர்தலுக்கு முற்பட்ட காலம். இல்லையா? 

8 hours ago, Dash said:

10 லட்சம் புலம் பெயர் தமிழர்கள் வருடம் $1 கொடுத்தாலே வருடம் 1 மில்லியன் டொலர் வரை தாயககத்துக்கு அனுப்பலாமே.

தாஸ், ஒரு டாலரை வருடத்துக்கு ஒருமுறை கொடுக்க யார் மறுக்க போகிறார்கள்? ஆனால் இதுவரை ஏன் எவரும் இந்த திட்டத்தை செய்யவில்லை? 
யாரும் முன்வந்து இந்த திட்டத்தை செய்யாததால் தான் இந்த நிலை. ஏன் யாரும் முன்வந்து இந்த திட்டத்தை செய்யவில்லை?
இதோ சில காரணங்கள்:

  1. எந்த ஒரு நாட்டிலும் வருடத்துக்கு ஒருவரிடம் ஒரு டாலர் பெற்றாலும் பலரிடம் சேர்க்கும் போது பெரும் தொகை சேர்ந்துவிடும். இந்த பணத்தை அந்த நாட்டின் அரசின் அங்கீகாரம் பெற்று சேர்க்காவிட்டால் அது சட்டவிரோதம். பல நாடுகளில் சிறை செல்ல நேரிடும்.
  2. அரச அங்கீகாரம் பெற்று சேர்ப்பது என்றாலும் , இந்த 10 லட்சம் புலம் பெயர் தமிழர்களும் ஒரே நாட்டில் இல்லை. ஆகவே பல்வேறு நாடுகளில் அரச அங்கீகாரம் பெற வேண்டும். இவ்வாறு அரச அங்கீகாரம் பெற ஒவ்வொரு நாட்டிலும்  ஒரு சட்டத்தரணி, ஒரு கணக்காளர் ஆகியோரை அமர்த்தி அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். சில நாடுகளில் பல நூறு அல்லது சில ஆயிரங்கள் செலவாகலாம்.
  3. தனி ஒரு நபர் இந்த 10 லட்சம் புலம் பெயர் தமிழர்களையும் அணுகி பணத்தை சேர்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தேவை. அவர்களை எப்படி சேர்ப்பது என்று யாருக்கு தெரியும்?
  4. தொண்டர்களை சேர்த்தாலும், ஒரு டொலரை சேர்ப்பதற்கு மேலதிகமாக பணம் தருபவர்களிடம் வாங்கியும், தராதவர்களிடம்  கேட்டும், கிடைக்கும் பணத்தை கொள்ளை அடிக்கவும் பலர் இருக்கிறார்கள். அதனால் வரும் சட்ட பிரச்சினைகள் மற்றும் சமூக பிரச்சனைகளை எப்படி கையாள்வது?
  5. ஒரு ஐநூறு ஆயிரத்தையாவது சேர்த்தாலும் அதை எப்படி இலங்கையில் விநியோகிப்பது? அதற்க்கு இலங்கை சட்டப்படி நிறுவப்பட்ட வங்கி அல்லது சமூக சேவை நிறுவனத்தின் உதவி தேவை. அவர்களுக்கும் ஒரு தொகை பணம் செலவாகவும் அவர்களின் வருமானத்துக்கும் வழங்கப்பட வேண்டும். 

ஆர்வத்துடனும், மனிதாபிமான உணர்வுடனும் எழுதி இருக்கிறீர்கள்,  இவை பற்றி உங்களின் கருத்துகள் என்ன? மற்றவர்கள் தமது கருத்துகளை எழுதுவதும் பயனுள்ளதாக இருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Jude said:

கிருபன், நீங்கள் சொல்வது போல் இறுக்கமான ஒழுங்கு விதிகளை நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் மேல் பிரயோக்கும் கடமையும், ஆற்றலும் யாருக்கு இருக்கிறது? அரசாங்கத்துக்கே இருக்கிறது. ஆகவே, அரசாங்கத்தை நடத்துபவர்களே இதனை செய்யலாம். அரசாங்கத்தை நடத்துபவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் சொல்வதை அவர்கள் கேட்டு செயல்படுத்த கூடிய காலம் தேர்தலுக்கு முற்பட்ட காலம். இல்லையா? 

ஆம். அரசாங்கம்தான் செய்யவேண்டும். தேர்தல் வரும்வரை காத்திராமல் தற்போதைய அரசாங்கம் உடனடியாக இறுக்கமான ஒழுங்குவிதிகளைச் நுண்கடன்  வழங்குவோர் மீது பிரயோகிக்கவேண்டும்.

நுண்கடன் வழங்குவோர் மீது சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்ட தாராளவாதியான ரணில் அழுத்தங்களைப் பிரயோகிக்கப்போவதில்லை.

சாதாரண விவசாய மக்களுக்குத் தேவையான உரங்களின் விலைகளை அதிகரித்ததும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனதும் மகிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெல்லக் காரணமாக அமைந்தன. எனவே மகிந்ததான் நுண்கடன் விடயத்திலும் சாதாரண மக்களுக்கு பயன்படத்தக்க சட்டங்களை இயற்றக்கூடியவர்!

தாஸ் கூறியபடி ஒரு டொலர் வீதம் புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சேர்த்து கஷ்டப்பட்டோருக்கு உதவக்கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் 2009 மேக்கு பிந்திய காலத்தில் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட தொண்டு அமைப்பை உருவாக்கியிருப்பார்கள். குறைந்தது மகிந்த ஆட்சி முடிவுக்கு வந்து மைத்திரியின் “நல்லாட்சி” வந்தபோதாவது செயற்படுத்த முனைந்திருப்பார்கள். அப்படி ஏதும் செய்யமுடியாத வக்கற்ற நிலையில் இருந்துகொண்டு ஊருக்கு விடுமுறையில் போய்வந்து அங்கு கஷ்டப்படுபவர்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் உதவி பெற்றுக்கொண்டு வேலை ஏதும் செய்யாமல் ஊதாரி வாழ்க்கை வாழுகின்றார்கள் என்றல்லவா சான்றிதழ் தருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

ஒரு டொலர் வீதம் புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சேர்த்து கஷ்டப்பட்டோருக்கு உதவக்கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் 2009 மேக்கு பிந்திய காலத்தில் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட தொண்டு அமைப்பை உருவாக்கியிருப்பார்கள். குறைந்தது மகிந்த ஆட்சி முடிவுக்கு வந்து மைத்திரியின் “நல்லாட்சி” வந்தபோதாவது செயற்படுத்த முனைந்திருப்பார்கள்.

சாட்டையடி.

வலிக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.