Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகலா கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நீதியரசர் விக்னேஸ்வரன் பேசுகிறார்..

Featured Replies

விஜயகலா கூறியதில் என்ன தவறு இருக்கிறது? நீதியரசர் விக்னேஸ்வரன் பேசுகிறார்..

பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம்

wigneswaran.jpg?resize=660%2C437
ஊடகவியலாளர் கேள்வி

 

1. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது. விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்திருந்தவன். இரஞ்சனை எனக்கு பழக்கமில்லை. ஆனால் அவர் ஒரு உணர்ச்சி மிகுந்த ஒருவர் என்று எனக்குத் தெரியும். நாம் கூறுவனவற்றையும் செய்வதையும் பத்திரிகை வாயிலாக கண்டு உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கின்றார்.

உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன். இரத்தினப்பிரிய பந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லை, எமக்கு மதிப்பில்லை புறக்கணிக்கப்படுகின்றோம் ஆக்கிரமிக்கப்படுகின்றோம். ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும். எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல கௌரவ பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிசாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று!

2. கேள்வி – நீங்கள் சம்மதம் தெரிவித்தே வவுனியா, மன்னார் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்படுகின்றார்கள் என்று பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதே. அது பற்றி?

பதில் – என்னுடன் எவரும் பேசவுமில்லை சம்மதம் எதுவும் கேட்கவுமில்லை. இவ்வாறான பச்சைப் பொய்களை பத்திரிகைகள் புனைந்துரைக்கின்றனவா அல்லது அப்பிரதேச அரசியல்வாதிகள் பத்திரிகைகளுக்குப் பொய்யான தகவல்களைக் கூறிவருகின்றார்களா? தயவு செய்து விசாரித்துச் சொல்லுங்கள்.

3. கேள்வி – கௌரவ விஜயகலா மகேஸ்வரன் கூறியது பற்றி தெற்கில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளதே? அது பற்றி உங்கள் கருத்து.

பதில் – வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்மைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்த்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள் பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன். நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானது அல்ல.

தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ;டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே கௌரவ விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. கௌரவ விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

http://globaltamilnews.net/2018/86395/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘ஆதங்கத்தில் கூறியிருக்கலாம்’
 
 

-எம்.றொசாந்த்

விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது குற்ற செயல்கள் குறைவாக இருந்தது. அந்த ஆதங்கத்தில் இராஜாங்க அமைச்சர் அவ்வாறு கூறி இருக்கலாம் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தல்கள், வாள் வெட்டுச் சம்பவங்கள், வன்புணர்வுகள் அதிகரித்துள்ளன.

“விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது இவ்வாறான குற்ற செயல்கள் இடம்பெறவில்லை. அவர்களின் ஆளுகையின் போது யாழ்ப்பணத்தில் வாழ்ந்த அவர், அக்கால பகுதியில் இருந்தது போன்று தற்போது இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஆதங்கத்தில் அவ்வாறு தெரிவித்து இருக்கலாம்.

“விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை பலருக்கும் உள்ளது. அது தெற்கில் உள்ளவர்களுக்குதான் உள்ளது. அதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆதங்கத்தில்-கூறியிருக்கலாம்/71-218518

  • தொடங்கியவர்
’பேசுவதில் என்ன தவறுள்ளது?’
 
 

விடுதலைப் புலிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கங்கள், செயற்பாடுகளைப் பற்றி பேசுவதில் என்ன தவறுள்ளதெனக் கேள்வியெழுப்பியுள்ள வட மாகாண அமைச்சர்  அனந்தி சசிதரன், விடுதலைப்புலிகள் செயற்பட்ட சமகாலத்தில் வாழ்ந்த அனைவருமே அந்த விடயங்களை நன்கு அறிவார்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரை தொடர்பில், அவர், இன்று (04) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், வன்புனர்வுக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலைச் செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டு செல்வதாகத் தெரிவித்த அவர், அவற்றின் வலிகளை விஜகலா நேரில் பார்த்துள்ளாதாகவும் அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றபோதும், அதன் ஊடாக எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு அவருக்கு இயலவில்லையெனவும் கவலை வௌியிட்டுள்ளார்.

நன்மை பயக்கும் எந்த நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தாலும், பெண் இராஜாங்க அமைச்சராக இருப்பதால், அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆயிரமாயிரம் தடைகள் உருவாக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறான பல்வேறு நெருக்கடியான நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே, விடுதலைப்புலிகளை அவர் நினைவுப்படுத்தியுள்ளாரெனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பேசுவதில்-என்ன-தவறுள்ளது/71-218514

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன்...அனந்தி...விஜயகலா அனைவருமே...

ஒன்றுபட்ட இலங்கை என்ற  சிங்கள அரசின் அரசியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு,சத்தியபிரமாணம் செய்து  அதனால்தான் அமைச்சர்கள் ஆனீர்கள் என்ற  நினைவு உங்களிடமும் அவனிடமும் இருக்கும்....

புலிகளின் கட்டுக்கோப்பை ஆதரிப்பவர்கள் நீங்கள் என்பதை,

சிங்கள மத்திய அரசுக்கு கீழ்படிந்து செயலாற்ற நீங்கள்  அவன் சட்டங்களை ஏற்று சத்தியபிரமாணம் செய்யும்போது யாரிடமும் சொன்னதுண்டா?

அதனால்தான் அவன்  உங்களைபோலவே கொந்தளிக்கிறான்...

எல்லாமே இழந்து நிற்கும் எமது இனத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென்று நீங்கள் நினைத்தால் சும்மா பேசி பேசி ...(புலிகள்பற்றி உட்பட ) தவிர்த்துகொள்ளூங்கள்...

பேசி பேசி எதுவுமே ஆகாது என்பதனால்தானே முடிந்தவரை போராடி...முடிந்துபோனார்கள் அவர்கள்...?

அதனால் உங்களால் முடிந்ததை மட்டும் பண்ணுங்க... புலிகளை ஊறுகாயாய் தொட்டுக்கும் கீழ்தரமான அரசியலை தவிர்த்து கொள்ளுங்கள்...

அது உங்களைவிட...எமது இனத்துக்கு மிகவும் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு பெற்றவர்களையே வளையத்திற்குள் வைத்திருக்கிறார்கள் இவர்கள் வேற அரசியலுக்காக அனைவரையும் கொதிக்க விடுகிறார்கள் இருக்கிற வேலையை ஒழுங்கா மக்களுக்கு செய்யுங்கள் மற்றத பிறகு பார்க்கலாம் 

  • தொடங்கியவர்

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் விக்னேஸ்வரன்

"பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது" என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு ஆதரவாக விக்னேஸ்வரன் கருத்து: ஒரு புது சர்ச்சைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். அது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"நான் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்" என அந்த அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

"நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது" என்று விமர்சித்துள்ளார்.

"எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல்வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்"

"அத்துடன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே கௌரவ விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. கௌரவ விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை அந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/sri-lanka-44713488

  • தொடங்கியவர்

விஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? சுமந்திரன் பதில்

தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியமை தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பின்னர் அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விஜயகலா தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துவதாக சபாநாயகர் கூறியுள்ளதால், விசாரணைகளின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்து வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

விஜயகலாவின் கருத்துக்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து சட்டமா அதிபர் விசாரிக்க உள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/187166?ref=ls_d_tamilwin

விஜயகலா விவகாரம்: முதன் முதலில் பேசிய சம்பந்தன்!

TNA-720x450.jpg
 

வடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வடக்கிலே விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் நாட்டில் தமிழ் மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் சமாதானம் நிலவி வரும் நிலையில், அவருடைய இக் கருத்தானது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் எதாவது அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், அதனை விடுத்து இவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/?p=698824-விஜயகலா-விவகாரம்:-முதன்-முதலில்-பேசிய-சம்பந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.