Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெனிம் ஜீன்ஸ்: சொல்ல வேண்டிய கதைகள்

Featured Replies

டெனிம் ஜீன்ஸ்: சொல்ல வேண்டிய கதைகள்
 
 

உலக அரசியல் கட்டுரைக்கும் டெனிம் ஜீன்ஸ்க்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரை, நாம் அறியவேண்டிய நுண்ணரசியலின் சில பக்கங்களையும் எமது சமூகப் பொறுப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்ப முனைகிறது.   

இன்று ஆண்கள், பெண்கள் என அனைவரினதும் ஆடையாக இருப்பது டெனிம் ஜீன்ஸ். அவ்வகையில், மேற்குலக ஆடையின் குறியீடாக, அதைக் கொள்ளவும் இயலும்.   

டெனிம் எனப்படும் நீலநிற காற்சட்டையின் கதை, கொஞ்சம் சுவையானது. 1700ஆம் ஆண்டுகளில், தடித்த கம்பளியால் குளிரைத் தாங்குவதற்காகச் செய்யப்பட்ட காற்சட்டைகளானவை, பிற்காலத்தில் கம்பளியும் பருத்தியும் கலந்து செய்யப்பட்டன.   

ஆரம்பகாலத்தில், இது பாய்மரக் கப்பல்களின், துணி செய்வதற்குப் பயன்பட்டது. இத்துணியின் தன்மையையும் இதன் நீண்டகாலப் பாவனையையும் அவதானித்த மாலுமிகள், இத்துணியிலிருந்து தமது காற்சட்டைகளைத் தைக்கத் தொடங்கினர். காலப்போக்கில் டெனிம், முழுமையாகப் பருத்தியில் உற்பத்தி செய்யப்பட்டது.   

நீல டெனிம் என்ற பெயர், இந்தத் துணியை உருவாக்கப் பயன்படும் சாயம் நீலநிறமாகையால் இதை, நீல டெனிம் என அழைத்தார்கள்.   

இதற்கான சாயம், கருநீலச் சாயத்தைத் தருகின்ற செடியில் இருந்து பெறப்பட்டது. இந்தக் கருநீலச் சாயமானது, 2,500 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   

குறிப்பாக, பண்டைக்கால எகிப்திய, கிரேக்க, உரோம, பிரித்தானிய மற்றும் பெருவிய ஆடைகளில், இதன் அதிகளவான பயன்பாட்டைக் காணவியலும். காலப்போக்கில் செயற்கை முறையில், கருநீலச்சாயம் உற்பத்தி செய்யப்பட்டது.   

இப்போது புழக்கத்தில் உள்ள நீல டெனிமானது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது. லெவி ஸ்றோஸ் (Levi Strauss) என்ற அமெரிக்கர், கலிபோர்ணியாவில் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, பயனுள்ள, உறுதியான, நீண்டகாலம் உழைக்கக் கூடிய காற்சட்டையின் தேவையை உணர்ந்தார். அவர்களுக்காகவே, லெவி நீலநிற டெனிம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படை வடிவமைப்பு, இன்றுவரை மாறவில்லை.   

1950களிலேயே டெனிம் பரந்துபட்ட பாவனைக்கு வந்தது. 1957ஆம் ஆண்டு 150 மில்லியன் டெனிம்கள் விற்கப்பட்டன. 1981ஆம் ஆண்டான போது, இது 520 மில்லியனாகியது. இன்று உலகெங்கும் பரந்து வியாபித்துள்ள ஒன்றாக டெனிம் மாறியுள்ளது.   

இதேவேளை, இங்கு சொல்லப்படாத கதையொன்று உண்டு. இந்த நீலநிற டெனிம், முற்றிலும் பருத்தியில் உற்பத்தியாகிறது. இப்பருத்தி உற்பத்திக்கு, ஏராளமான நீரும், இரசாயன உரங்களும், கிருமி நீக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன.   

ஒரு கிலோ பருத்தியை உற்பத்தி செய்வதற்காக 25,000 லீற்றர்  நீர் பாசனத்துக்கு மட்டும் தேவைப்படுகிறது. அதேவேளை, பருத்தியை உற்பத்தி செய்த நிலங்களில், அதிகளவான உப்பு சேர்கின்றமையால், அந்நிலத்தில் வேறெந்தப் பயிரையும் பயிரிட இயலாத நிலையில், மண் பாதிக்கப்படுகிறது.   

அதேவேளை, பருத்திப் பயிரைப் பாதுகாப்பதற்காக, அளவுக்கதிகமான இரசாயன உரங்களும் கிருமிநாசினிகளும் பயன்படுத்தப்படுகின்றன.  

அண்மைய கணக்கெடுப்புகளின் படி, ஒரு டெனிமின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள். ஒரு டெனிம் அதன் ஆயுட்காலத்தில் (உற்பத்தி முதல் வீசப்படுவது வரை) 3,781 லீற்றர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. இதேவேளை, பல மேற்கத்தைய நாடுகளில் டெனிமின் ஆயுட்காலம் குறைவு (ஆண்டுதோறும், 11 பில்லியன் கிலோ கிராம் அளவிலான ஆடைகளை, அமெரிக்கர்கள் வீசுகிறார்கள், இது ஆளொருவருக்கு சராசரியாக 32 கிலோ கிராம்). 

அதேவேளை, சலவை இயந்திரங்களில் டெனிம்கள் சுத்தமாக்கப்படுவதால், அதற்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவும் அதிகமாகிறது.   

இதேவேளை, தண்ணீர் இன்று மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வளமாகியுள்ளது. இன்று, அதிக பெறுமதியுடையதாகத் தண்ணீர் மாற்றம் பெற்று வருகிறது.   

உலக சனத்தொகையில், ஐந்தில் ஒருவருக்குக் குடிப்பதற்கேற்ற நீர் கிடைப்பதில்லை. ஆண்டுதோறும், நான்கு மில்லியன் மக்கள் நீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள். நீர் தொடர்பான மரணங்களில், 98 சதவீதமானவை அபிவிருத்தியடையும் நாடுகளிலேயே நிகழ்கின்றன. எட்டு செக்கனுக்கு ஒரு குழந்தை, நீர் தொடர்பான நோயால் மரணிக்கிறது.   

ஆபிரிக்கப் பெண்கள், நீரைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும், வாரமொன்றுக்கு 16 மணித்தியாலங்களைச் செலவழிக்கின்றார்கள். ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள பெண்கள், நீரைப் பெறுவதற்காகத் தினமும், சராசரியாக 5.95 கிலோ மீற்றர்கள் நடக்கிறார்கள். ஆனால், உலகின் மொத்த நீர்வளத்தில் ஒரு சதவீதம் மட்டுமே, மனிதப் பாவனைக்கு உகந்த நன்னீராகும்.   

image_33af519460.jpg

உண்மை என்னவென்றால், எங்களிடம் இருக்கின்ற சில சோடி டெனிம்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஆற்றை, அசுத்தமாக்கியுள்ள அதேவேளை, சிலநூறுபேரின் தாகத்துக்குக் காரணமாகியும் உள்ளது.   

தென்மேற்குச் சீனாவில் உள்ள சிங்டாங் (Xintang) நகரம் தான், ‘நீல டெனிமின் தலைநகரம்’ என அழைக்கப்படுகிறது. இங்கு 3,000 தொழிற்சாலைகளில், நீல டெனிம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாளொன்றுக்குச் சராசரியாக, 2.5 மில்லியன் டெனிம் காற்சட்டைகள், இங்கு உற்பத்தியாகின்றன.   

இந்நீலநிற டெனிமானது, பல தடவைகள் பல்வேறு சாயங்களாலும் இரசாயனங்களாலும் கழுவப்படுகின்றது. இச்செயன்முறைக்கு கந்தகம், கட்மியம், ஈயம், பாதரசம் போன்ற ஆபத்தான இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், நேரடியாக நீர்நிலைகளில் கழிவாகக் கலக்கின்றன.  

 பல மில்லியன்கள் இலாபம் தரும் இத்தொழில்துறையானது, கழிவுகளைச் சுத்தமாக்கக் கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஆனால், அவற்றில் முதலிடுவதில்லை. ஏனெனில், இதனால் இலாபம் குறைவடைகிறது. உச்ச இலாபம் பெற வேண்டும் என்பதால், சுற்றுச்சூழல் விடயங்களில் அக்கறை காட்டப்படுவதில்லை.   

இன்று ஆடைத் தொழிற்றுறையின் பிரதான உற்பத்தித் தளங்களாக மூன்றாமுலக நாடுகள் மாறியுள்ளன. இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில், தொண்ணூறுகளின் இறுதியில், ஓர் ஏற்றுமதி ஆடைக்குத் தரப்பட்ட விலை, இப்போது கிடையாது.அதேவேளை, தொழிலாளர்களுக்கு அப்போது கொடுக்கப்பட்ட சம்பளமும் இப்போது கிடையாது.   

ஒரு தொழிலாளியின் எதிர்கால சேமிப்பு, நிகழ்காலத்துக்கான பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் இவற்றை இல்லாமல் செய்வதன் மூலம், அதிகளவான இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது. 

எந்த ஒரு மூலப்பொருளும் விலை குறையாதபோது, இந்த விலைக் குறைப்பு, தொழிலாளர்களுக்கான நிதியைக் குறைப்பதன் வாயிலாகவே சாத்தியமாகிறது.   

இந்த உழைப்புச் சுரண்டல், எல்லாத் தொழில்களிலும் வியாபித்திருக்கிறது. ஆடை உற்பத்தியின் சகல படிநிலைகளிலும், செலவுக் குறைப்புக்கான ஒரே ஆதாரமாக, தொழிலாளர்களின் சம்பளமும் அவர்களுக்கான பிற வசதிகளும்தான் காணப்படுகின்றன.   

அதிக விலையுடைய பொருட்கள், தரமானவை எனும் நினைப்பு, எம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. இது பலபொருட்களுக்கு உண்மையாகின்ற போதும், ஆடை விடயத்தில் கதை, சற்று வேறுமாதிரி உள்ளது.   

அநேகமாக, எல்லா ஆடைகளுக்குமான தையல் கூலி, கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதை உணரலாம். ஆடைத் தொழிற்சாலையில் ஒரு சட்டையை உருவாக்க (மூலப்பொருளில் இருந்து, பொதி செய்யப்பட்ட முடிவுப்பொருள் வரை) குறைந்தது, 60 பேர் வேலை செய்தாக வேண்டும்.   

வாங்கப்படும் பொருட்கள் தவிர்த்து, ஒரு சட்டைக்கு 50 முதல் 75 ரூபாய் வரை, கூலி பெறப்படுகிறது. ஆக, நாங்கள் வாங்கும் 2,000 ரூபாய் சட்டையின் உற்பத்திக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும், ஒரு ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகையே கொடுக்கப்படுகிறது.   

ஆனால், அந்தச் சட்டையின் ஒட்டுமொத்த உற்பத்தி விலையான 300 ரூபாயை, தொழிற்சாலைக்கு முதலிட்ட முதலாளிக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் இலாபமாகக் கிடைக்கிறது. மிகுதி இலாபம் எல்லாம் இதை வாங்கும் பல்தேசியக் கம்பெனி அல்லது பலர் விரும்பி அணியும் ‘பிராண்ட்’ முதலாளிக்கு சென்று சேருகிறது.   

பங்களாதேஷில், அடிக்கடி ஆடைத் தொழிற்சாலைகளில் விபத்துகள் நடப்பதைக் கேள்விப்படுகிறோம். பங்களாதேஷ் நவீன அடிமைகளை வைத்து, முக்கியமாக அவர்களின் உயிர்களை மூலதனமாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வருமானம் கொடுக்கும் தேசம். 

பங்களாதேஷ் ஏற்றுமதித் துறையில், ஆடைகளின் பங்கு மட்டுமே 77சதவீதமாகும். 2015 - 2016 ஆம் ஆண்டில், பங்களாதேஷ் ஏற்றுமதியின் அளவு, 5 இலட்சத்து 50 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களாகும். இன்றைய திகதியில், தைத்த ஆடை ஏற்றுமதியில், சீனாவுக்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் பங்களாதேஷ் இருக்கிறது.   

சீனத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி அதிகரித்து வருவதால், பங்களாதேஷை நோக்கி, மேற்கத்திய ஆடை நிறுவனங்கள் நகர்கின்றன.   

பங்களாதேஷ் ஆடைத்தொழிற்றுறையில் ஈடுபடும் 40 இலட்சம் தொழிலாளர்கள், மாதக்கூலியாக வெறும் 9,000 இலங்கை ரூபாய்களையே பெற்றுக்கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் தொடர்ந்தும், தங்களது இன்னுயிர்களை இழக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர். ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, ஏனைய மூன்றாமுலக நாடுகளின் கதையும் இதுதான்.  

வாடிக்கையாளர் மத்தியில், ஆடைகளை வாங்கிக் குவிக்கும் மனோபாவத்தை வளர்ப்பதற்காக, ஆடை விற்பனை நிறுவனங்கள், ஏராளமான நேரத்தைச் செலவிடுகின்றன. அடுத்த ஆடை வாங்கி, புதிய ஸ்டைலுக்கு எம்மை உட்படுத்தி, மகிழும் மனோபாவத்தை ஊக்குவித்து அதைக் காசாக்கிக் கொள்கிறார்கள்.  

இனி மீண்டும், டெனிமின் கதைக்கு வருவோம். டெனிம் உற்பத்தியில் அளவுக்கதிகமான தண்ணீர்ப் பாவனையும் அதனது சாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றுடன் மட்டும் பாதிப்புகள் நின்றுவிடுவதில்லை.   

ஒரு டெனிம், அதன் ஆயுட்காலத்தில் சராசரியாக 33.4 கிலோகிராம் காபனீரொக்சைட்டை உற்பத்தி செய்கிறது. இது, அதன் வாழ்வுச்சக்கரத்தின் அனைத்திலும் பரந்து விரிந்து இருக்கிறது. 

ஓர் அமெரிக்கன், ஒரு டெனிமை இரண்டு தடவைகள் அணிந்த பிறகு, சலவைக்குப் போடுகிறான். அதை அவன், பத்துத் தடவைகள் அணிந்த பிறகு செய்வானாயின், அமெரிக்காவில் உள்ள 1.3 மில்லியன் மக்களுக்கான ஆண்டொன்றுக்கான தண்ணீர்த் தேவையை நிறைவேற்றவியலும்.   

ஓர் ஐரோப்பியன் மூன்று தடவைகள் அணிந்த பிறகு, சலவைக்குப் போடுகிறான். அவனும் அதை 10 தடவைகளுக்குப் பிறகு செய்வானாயின், ஆண்டொன்று 75சதவீதமான ஐரோப்பியர்களின் நீர்த்தேவைக்குப் பங்களிக்க இயலும்.  

 நான்கு தடவைகள் அணிந்த பின்னர் சலவையிடும் சீனன், பத்து தடவைகளின் பின் சலவையிட்டால், ஆண்டொன்று 20.4 மில்லியன் சீனர்களுக்கான நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யவியலும்.   

இதன் மறுபுறத்தில், இன்று தண்ணீர் நுகர்பண்டமாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனதும் உரிமை என்ற நிலை மறுக்கப்பட்டு, ஒரு விற்பனைப் பண்டமாகியுள்ளது. இது தண்ணீரின் தனியார்மயமாக்கலுக்குத் துணையாகிறது.   

தண்ணீர் நுகர்பண்டமானதால், அது சந்தைக்குரியதாகிறது. எனவே, அதை யாராவது சந்தையில் விநியோகிக்க வேண்டும். எனவேதான், அரசுகள் தண்ணீரைத் தனியார் மயமாக்கி விற்பனைக்கு விட்டன.   

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் நீரைத் தனியார் மயமாக்குமாறு பல அரசுகளை வற்புறுத்தின. அடிப்படையில், உலகின் எல்லா மக்களினதும் வளமான தண்ணீரானது, தனிப்படப் பணம் கொடுத்து வாங்கவேண்டிய பொருளாகியது. அதாவது, தண்ணீரைப் பெறும் உரிமை, ஒவ்வொருவரும் பணம் கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயமாக மாறி வருகிறது.   

நீரை மய்யப்படுத்தியதான முதலீட்டு நிதியங்கள், இன்று தோற்றம் பெற்றுள்ளன. இவர்கள் நீரை, முதலீடாகப் பங்கு போட்டு விற்கிறார்கள். பங்குச்சந்தை போல, இன்று தண்ணீரும் பேரம் பேசி விற்கப்படுகிறது. தண்ணீர் இன்று தாகத்துக்காக அல்லாமல், இலாபத்துக்கானதாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அரசியல் குறித்து இன்னொரு முறை நோக்கலாம்.   

டெனிமைப் போலவே கணினிகள், மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், அலைபேசிகள், கமெராக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள், தொலைபேசிகள் போன்றவை பாவனைக்குதவாதவையாக மாறும் போது, தோற்றம் பெறும் மின்னணுக் கழிவுகள், மிகப்பெரிய நெருக்கடியை எமக்கு உருவாக்கியுள்ளன. மூன்றாமுலக நாடுகள், இதன் மிகப்பெரிய குப்பைக்கூடைகளாக மாறிவருகின்றன. இது இன்னொரு சவால்.   

இவையனைத்தும், நாம் வாழும் பூவுலகின் மீது அக்கறை கொண்டுள்ளோமா, எமது எதிர்காலச் சந்ததிக்கு வாழப் பொருத்தமான உலகை நாம் விட்டுச் செல்லப் போகிறோமா, ஆகிய கேள்விகளை நம்முன்னே விட்டுச் செல்கின்றன.  

 1962இல் பூச்சிக்கொல்லிகளின் ஆபத்துகளை விளக்கி, அதன் தீவிரத்தை உலகறியச் செய்த ரேச்சல் கார்சனின் வரிகளுடன் இதை நிறைவுசெய்வது பொருத்தம். ‘இயற்கையின் ஒரு பகுதிதான் மனிதன். ஆனால், அவன் இயற்கை மீதே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறான். உண்மையில் அவன், அவன் மீதே போர் தொடுக்கிறான்’.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/டெனிம்-ஜீன்ஸ்-சொல்ல-வேண்டிய-கதைகள்/91-218902

  • கருத்துக்கள உறவுகள்

கதை என்னவோ நல்லாத்தான் இருக்கு இப்ப ஏன் அதை பிச்சைக்காரனை விட கேவலமா பிச்சுபோட்டு திரிகினம் எண்டு தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கதை என்னவோ நல்லாத்தான் இருக்கு இப்ப ஏன் அதை பிச்சைக்காரனை விட கேவலமா பிச்சுபோட்டு திரிகினம் எண்டு தெரியவில்லை .

காலனித்துவத்தின் ஆரம்ப காலத்தில்.....மாடு மேய்க்கும் வாழ்க்கை நடத்திய வெள்ளை இனத்தவர்களுக்கு...மிகவும் தடித்த பருத்தியிலான ஆடையே அவசியமாக இருந்தது! அதன் தொடர்ச்சியே டெனிம் ஆக உருவெடுத்திருக்க வேண்டும்! அவர்களது தொழில்கள் பெரும்பாலும்...மாடு மேய்த்தல், வயல் நிலங்களில் கடுமையாக வேலை செய்தல்....களவு...கொள்ளை....மதுபானத் தயாரிப்பு என விரிந்து கொண்டு சென்றது! அவர்கள் அவ்வாறு வேலை செய்யும் போதும், துப்பாக்கிச் சமர்களின் போதும்...குதிரையின் முதுகு அண்டுவதினாலும்....டெனிம் தேய்ந்தும் கிழிந்தும் போகின்றது!

அதுவே....தற்போதைய தலைமுறையும்....பிச்சுக் கிழிச்சுப் போடுவதற்கான காரணம் ஆகும்!

டெக்சாஸ் மாநிலத்தில்...கிழிந்த ஜீன்ஸ் அணிவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது!

ஆனால்......அச்சுவேலியில்...ஒண்டு கிழிஞ்ச ஜீன்சுடன் போவதைத் தான்....சகிக்க முடிவதில்லை!

பெருமாள்....உங்கள் மகாராணியோ...அல்லது அவரது கணவரோ....ஜீன்ஸ் போட்ட படம்....எங்கையாவது கண்டால் இணைத்து விடவும்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

பெருமாள்....உங்கள் மகாராணியோ...அல்லது அவரது கணவரோ....ஜீன்ஸ் போட்ட படம்....எங்கையாவது கண்டால் இணைத்து விடவும்!

இங்கு அவயலை கண்டு கொள்வதில்லை ராணியின் பிறந்தநாளுக்கு அவுசு ,கனடா போன்ற நாடுகள் விடுமுறை அளிக்கும் இங்கு ரோயல் தேவாலயத்துக்கு வழிபட போவதை டிவி யில் காட்டுவதுடன் சரி இனிமேல்த்தான் ஜீன்ஸ் போடுனமோ என்று பார்க்கணும் புங்கைஊரான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.