Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை

Featured Replies

மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை

 

 

p42b_1531481942.jpg

‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம்.

‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி குறித்து முடிவெடுப் போம். தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’ என்று பேசினார் அமித் ஷா.’’

‘‘அதற்கு என்ன?’’

‘‘ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவார் என்கிறார் தமிழருவி மணியன். செப்டம்பருக்குள் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும். 2.0 படம் நவம்பரில் ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட அந்த நேரத்தில் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வந்திருப்பார்.’’

p42a_1531481933.jpg

‘‘இரண்டுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள்?’’

‘‘தமிழக பி.ஜே.பி சீனியர்கள், ‘அமித் ஷா சொல்லும் அந்த வலிமையான கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ரஜினியை வைத்தே அமையும்’ என்கிறார்கள். அ.தி.மு.க-வின் நிர்வாகப் பொறுப்புக்கு ரஜினியைக் கொண்டுவந்து, அவர் கையில் இரட்டை இலை என்ற வெற்றிச் சின்னத்தைக் கொடுத்தால் அது சாத்தியமாகும் என்பதுதான் பி.ஜே.பி-யின் மாஸ்டர் பிளான். அதற்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. இரு திராவிடக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாகப் பழகக்கூடியவர் ரஜினி. ஆனாலும், பி.ஜே.பி-மீது ரஜினிக்கு தனிப்பாசம் உண்டு. அகில இந்திய தலைவர்களில் நரேந்திர மோடிதான், வீடு தேடி வந்து ரஜினியைப் பார்த்தவர். ‘அரசியலுக்கு வருவேன்’ என 1996-லிருந்து சொல்லிக் கொண்டிருந்த ரஜினி, கடந்த டிசம்பரில்தான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ‘இத்தனை ஆண்டு காலம் அமைதியாக இருந்துவிட்டு, ரஜினி இப்போது அரசியலுக்கு வருவதே பி.ஜே.பி-க்காகத்தான். பின்னணியில் இருந்து ரஜினியை பி.ஜே.பி-தான் இயக்குகிறது’ என்ற விமர்சனங்கள் இன்றுவரையில் தொடர்கின்றன.’’ 

‘‘சரி, இந்தத் திட்டத்துக்கு ரஜினி ஒப்புக்கொள்ள வேண்டுமே?’’

‘‘அதற்குத்தான் வருகிறேன். ரஜினி 1996 மற்றும் 98 தேர்தல்களுக்குப் பிறகு, எந்தத் தேர்தலிலும் வெளிப்படையாகக் கருத்து சொல்லவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அவர் வாக்களிக்க வந்தபோது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிரே இருந்த பட்டனை ரஜினி அழுத்தும் காட்சிகள் வெளியாகின. அதைப் படம்பிடித்தவர்களை ரஜினி தடுக்கவில்லை. இரட்டை இலைமீதான ரஜினியின் பாசம் பற்றி அவரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள். 1996 தேர்தலில் தி.மு.க ஜெயிப்பதற்கு ரஜினியும் பங்கு வகித்தார். அந்த நேரத்தில் நெருக்கமான சிலர் ரஜினியிடம், ‘இந்தத் தேர்தலில் நீங்கள் களமிறங்கியிருந்தால் ஆட்சியில் அமர்ந்திருக்கலாமே?’ எனக் கேட்டார்கள். அதற்கு ரஜினி, ‘இந்திய அரசியலில் சினிமா நடிகர்களுக்கு மாஸ் ஏற்பட்டது என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும்தான். அப்படியான மாஸ் எனக்கு அரசியலில் கிடைக்குமா என்கிற சந்தேகம் உண்டு. எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அப்படியே என் ரசிகர்களுடன் இணைந்தால் நிச்சயம் அரசியலில் இறங்கலாம்‘ என்று சொன்னாராம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இதை உண்மையாக்கும் வகையில் சில விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற பெயரில்தான் ரஜினி இயங்கிவருகிறார். கமல் கட்சியை ஆரம்பித்துத் தேர்தல் ஆணையத்திலும் பதிவுசெய்துவிட்டார். ஆனால், ரஜினி கட்சியையே ஆரம்பிக்கவில்லை; பெயரும் சூட்டவில்லை. ‘அரசியலுக்கு வருவதாக அறிவித்தவர், கட்சி ஆரம்பித்தல்லவா களமிறங்கியிருக்க வேண்டும். அதை அவர் செய்யாமல் இருப்பது ஏன்’ என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 2018 மார்ச் மாதம் ஏ.சி.சண்முகம் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினி திறந்து வைத்தார். அங்கே ரஜினி பேசிய அரசியலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, அந்த ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்று சொன்னார்.

எம்.ஜி.ஆரின் ரசிகர்களை, அவரின் தொண்டர்களை அப்படியே மொத்தமாக அணைத்துக்கொள்வதுதான் ரஜினியின் திட்டம் என்பது அந்தப் பேச்சிலிருந்து வெளிப்பட்டது.’’

‘‘அது கைகூடுமா?’’

‘‘ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்தபிறகு கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் என்கிற பதவியை நீக்கிவிட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் அமர்ந்தபடி அவர்கள் கட்சியை நடத்திவருகிறார்கள். அவர்களுக்கு ஓட்டு வாங்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது பி.ஜே.பி தலைமைக்குப் புரிந்திருக்கிறது. அ.தி.மு.க-விடம் இரட்டை இலை சின்னம் இருந்தாலும், மக்களை ஈர்க்கும் அளவுக்கு வசீகரமான ஒரு தலைமை தேவை. அந்த இடத்தை ரஜினி பூர்த்தி செய்வார் என பி.ஜே.பி நம்புகிறது. அதனால்தான், அ.தி.மு.க சீனியர்களை சம்மதிக்கவைக்க மாயவலை விரிக்கிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அது விரைவில் முடிவுக்கு வரும்போது, அ.தி.மு.க-வின் அதிகாரப் பதவிக்கு ரஜினி வரலாம்.’’ 

‘‘இரட்டை இலை வழக்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் போலவே?’’

‘‘ஆமாம். இந்த வழக்கில் தினகரன், சசிகலா தரப்பு வாதங்கள் முடிவடைந்துவிட்டன. அதே போல், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதமும் முடிவடைந்துவிட்டது. இன்னும் செம்மலை மற்றும் மதுசூதனன் தரப்பு வாதங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அவையும் விரைவில் முடிந்து, இந்த மாதம் 23-ம் தேதிக்கு முன்பே தீர்ப்பையும் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் துவங்க உள்ளது என்பதை டெல்லி நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்கள் தினகரன் தரப்பினர். நீதிபதியும் அதை உள்வாங்கிக்கொண்டு, ‘விரைவில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும்’ என்று சூசகமாகக் கூறியுள்ளார். இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு வந்த அடுத்த சில நாள்களில், 18 எம்.எல்.ஏ வழக்கிலும் தீர்ப்பு வந்துவிடும். இரு வழக்குகளின் தீர்ப்பும் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம். ஒருவேளை ஏதேனும் தாமதமானாலும், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்குள் இரண்டு வழக்குகளும் முடிந்துவிடும்.’’

‘‘தி.மு.க-வில் மண்டலச் செயலாளர்கள் நியமனம் எப்போதாம்?’’

‘‘லண்டனிலிருந்து ஸ்டாலின் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். எட்டு பேருக்குப் பொறுப்பு கிடைக்கப்போகிறது. சென்னை, திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களுக்கு துரைமுருகன்; காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு பொன்முடி; திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங் களுக்கு எ.வ.வேலு; கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஆ.ராசா; திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர் மாவட்டங்களுக்கு கே.என்.நேரு; மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களுக்கு ஐ.பெரியசாமி; விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்; தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கீதாஜீவன் என்று உத்தேசப் பட்டியல் ரெடியாக உள்ளது. வேடிக்கை என்ன வென்றால், இவர்களில் எல்லோருமே அவர்கள் ஏற்கெனவே வகிக்கும் மாவட்ட மற்றும் மாநிலப் பதவிகளிலும் தொடர்வார்களாம். இவர்களில் சிலர் மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர். ‘மண்டலச் செயலாளர் என்ற அதிகாரத்தில் பக்கத்து மாவட்டங்களில் இவர்கள் குழப்பம் ஏற்படுத்த மாட்டார்களா?’ என்று சீனியர் தலைவர்கள் சிலர் கேட்கிறார்கள்.’’

‘‘தமிழக காங்கிரஸிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் இருக்கப்போகிறதாமே?’’

‘‘ராகுல் காந்தி கடந்த ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான பிறகு மாநிலத் தலைவர்கள் யாரையும் அவர் மாற்றவில்லை. ஆனால், மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் என்று ஒவ்வொரு பொறுப்பிலும் ஆறு பேர் மட்டுமே போதும் என்று ராகுல் காந்தி சொல்லியிருக்கிறாராம். ஆனால், பழைய முறையிலேயே நிர்வாகிகள் பட்டியலை திருநாவுக்கரசர் தயார் செய்துள்ளாராம். அத்துடன் ஜூலை 16-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். இதில் பொருளாளர் பதவிக்குத்தான் கடும் போட்டி. திருநாவுக்கரசர் தனிக்கட்சி தொடங்கியபோது அவருடன் இருந்த நாசே.ராமச்சந்திரன் இப்போது பொருளாளராக உள்ளார். ஆனால், அவர் இப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அணியில் இருக்கிறார். எனவே, அவரை மாற்ற திருநாவுக்கரசர் முடிவெடுத்து விட்டார். காங்கிரஸ் கட்சியின்வசம் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைக் குறிவைத்துப் பொருளாளர் பதவிக்குப் பலர் காய் நகர்த்துகிறார்கள். பரிசீலனையில் உள்ள பலர் குற்றப் பின்னணி உள்ளவர்களாம். பட்டியலுடன் அரசர் டெல்லி போவதற்கு முன்பாகவே, புகார்கள் ராகுலுக்குப் போயிருக்கின்றன.’’

‘‘பழநி உற்சவர் முருகன் சிலை கும்பகோணத்துக்கு வந்திருக்கிறதே?’’

‘‘இந்தச் சிலை செய்வதில் முறைகேடு நிகழ்ந்ததாக வழக்கு நடைபெறுகிறது. அதனால், ஜூலை 11-ம் தேதி பழநி கோயிலிலிருந்து இந்தச் சிலை எடுத்துவரப்பட்டு, வழக்கு நடைபெறும் கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இதை வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எப்போதும் கலகலப்பாக இருக்கும்  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கும்பகோணம் நீதிமன்றத்துக்கு முருகன் சிலையைக் கொண்டு வந்தபோது, இறுக்கமாகவே காணப்பட்டார். பின்னர் சிலை வைக்கப்பட்ட நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்றவர், ‘சிலைகளில் பெயின்ட்டால் எழுதக் கூடாது. வேண்டுமென்றால் விவரங்களை அட்டையில் எழுதி ஐ.டி கார்டு போல் மாட்டிவிடுங்கள்’ என்று திருமேனி உலோகப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொன்னார். ‘மீறி யாராவது பெயின்ட்டால் எழுதினால் எல்லோரும் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்’ என்றார். ராஜராஜ சோழன் சிலையை மீட்டுக்கொண்டுவந்தபோதெல்லாம் உற்சாகமாகக் காணப்பட்டார் பொன்.மாணிக்கவேல். முருகன் சிலை வந்தபோது அந்த உற்சாகம் மிஸ்ஸிங். ‘இந்தச் சிலை முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் கொடுக்கும் நெருக்கடிதான் இதற்குக் காரணம்’ என்கிறார்கள் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

படம்: ஏ.சிதம்பரம்


p42c_1531481972.jpg

அமித் ஷா சந்தித்த நிழல் மனிதர்!

மிழகத்துக்கு பி.ஜே.பி தலைவர் அமித் ஷா வந்திருந்தபோது, அவரின் பயணத் திட்டத்தில் இல்லாத ஒன்று நடந்தேறியது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டுக்கு அமித் ஷா சென்றதே அது. தமிழகத்தின் பெரும்பாலான வி.ஐ.பி-க்களால் ‘ஜுடிஷியல்’ கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் இவர், கும்பகோணத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். காஞ்சி சங்கர மடத்தின் தொடர்பு ஆரம்பத்தில் இருந்துள்ளது. அதன்பிறகு சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் மூலம் நீதிபதிகள் தொடர்பு கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைத்துள்ளது. காஞ்சி மடத்தின் தொடர்பால் பி.ஜே.பி நபர்களுடன் ஏற்பட்ட பழக்கம், நீதிபதிகளுடன் ஏற்பட்ட நட்பு... இரண்டும் ஒரு கட்டத்தில் இவரை டெல்லி மேலிட வட்டாரங்களில் வளையவரச் செய்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இவரை அணுகுகின்றன. இதில் சில அரசியல்வாதிகளும் அடக்கம்.

இந்த அளவுக்கு நீதித்துறையில் செல்வாக்கு இருப்பதால்தான் இவரை ‘ஜுடிஷியல்’ கிருஷ்ணமூர்த்தி என்று அடைமொழியுடன் அழைக்க ஆரம்பித்தனர். இந்த நிழல் மனிதரை அமித் ஷா சந்தித்தது இப்போது சர்ச்சையாகியுள்ளது.


p42d_1531481991.jpg

அடுத்த ரெய்டு எங்கே?

ரசுகளுக்கு முட்டை மற்றும் பருப்பு சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் ஐந்து நாள்கள் நடைபெற்ற ரெய்டு நிறைவடைந்தது. ‘‘அடுத்த ரெய்டு ஸ்வர்ணபூமி நிறுவனத்தில்தான்’’ என்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். ‘கிறிஸ்டி’ நிறுவனர் குமாரசாமிக்கு நெருக்கமான ஷங்கர் என்பவர் நடத்தும் நிறுவனம்தான் ஸ்வர்ணபூமி. கிறிஸ்டி நிறுவனத்தின் பல்வேறு பிசினஸ்கள் இப்போது இந்த நிறுவனத்தின் பெயரில்தான் நடைபெறுகின்றன. கிறிஸ்டி நிறுவன ரெய்டின்போது, ஸ்வர்ணபூமி நிறுவனம் குறித்த ஆவணங்களையும் ஐ.டி துறை அள்ளியுள்ளது. இந்த நிறுவனத்துக்கும், தமிழகத்தின் மாண்புமிகு ஒருவருக்கும் இருக்கும் தொடர்பும் ஆராயப்படுகிறது.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜியார் போயே 31 வருசமாகுது. கடைசி (பப்)படம் வந்து 42 ஆண்டுகள்...

இன்னும் எம்ஜியார் ரசிகர்கள் என்று சும்மா அள்ளி விட்டு, மாராட்டியருக்கு சலங்கை கட்டி விட பார்கிறார்கள்.

தமிழகத்தில், காசு கொடுத்தால் யாருக்கும் விழும் வாக்கு - வெள்ளையர் வந்து கட்சி ஆரம்பித்தாலும் அதுதான் கதை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

52118524-_F5_BD-42_F5-_ABB7-_EA16_F7_F0_

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

'வஞ்சனை செய்வாரடி கிளியே' என்ற வரிகள் பாஜக போன்ற பாசிச சக்திகளுக்கே பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.