Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கிராமம் ஒரு தெய்வம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமம் ஒரு தெய்வம்

ஒரு கிராமம் ஒரு தெய்வம்

................................................................................................................................................................................................ 

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்திலிருந்து பேருந்து போகும். ஊரில் பாதி வீடுகளுக்கு மின் வசதி கிடையாது. அவன் கல்யாணத்தின்போது என் தாய்க்கு உடல் நலமில்லாமல் போனதால் என்னால் அவன் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சரி, கல்யாணத்துக்குத்தான் போக முடியவில்லை, இவ்வளவு தூரம் வந்த பிறகு அவன் கிராமத்துக்கு ஒரு நடை நடந்து அவன் மனைவியை பார்த்து வாழ்த்தி விட்டு வரலாம் என்று தோன்றியது. 

அதே சமயம் அவனிடமிருந்து அலைபேசி வந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு,, “ நான் உங்க ஊருக்கு வரலாமா, நாளைக்கு? ” என்றேன். 

வர வேண்டாம் என்றா சொல்லப் போகிறான்? பெரியகுளத்திலிருந்து வத்தலகுண்டுக்குப் பேருந்தில் சென்றேன். 

சீனு வத்தலகுண்டுக்கு பைக்கில் வந்திருந்தான். என் நண்பன்தான் என்றாலும் இது வரை நான் பெண் 
என்பது அவனுக்கு அந்த அளவு உறைத்ததில்லை. இப்போது பெண்ணிடம் என்னத்தையோ காணாததை கண்டு விட்டவன் போல் என்னிடம் சங்கோஜப்பட்டான். நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.. 

காபி சாப்பிட ஓட்டலுக்கு அழைத்தேன். பேசப் பேச சங்கோஜம் மறைந்து பழைய நட்புணர்வு மேலோங்கியது... 

“ மிஸஸ் அம்மா வீட்டுக்குப் போயிருக்கா..! இது ஆடி மாசமில்லே.. ” என்று அவன் சொன்னதும்தான் எனக்கு நினைவில் தைத்தது. 

“ ஐயைய்யே, நான் அவங்களைப் பார்க்கத்தானே வந்தேன்..! ” 

“ அதனாலென்ன? மெட்ராசில வச்சிப் பார்த்துக்கோ..! இப்ப ஊருக்குள்ளே திருவிழா..! சாமி பார்த்துடு..! எங்க குடும்பம்தான் ஏற்பாடு பண்ணுது..! ! ” 

நான் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். ஆபிசில் நாத்திக வாதம் செய்பவன் அவன். 

அவன் தாய் தந்தையரை நான் முன்பிருந்தே அறிவேன் என்பதால் உற்சாகத்தோடு பைக்கில் புறப்பட்டேன். 

“ இந்த மொள்ள மாரித் தெருவை க்ராஸ் பண்ணி, அப்படிக்கா போய் செகண்ட் லெப்ட் எடுத்தா எங்க வீடு..! ” 

“எப்படிக்கா போய்? ” நான் சிரித்தேன். “ மெட்ராசில இப்படிப் பேச மாட்டியே, குரங்குப் பயலே..! ” 

“ அது சரி, அதென்ன மொள்ள மாரித் தெரு? திருட்டுப் பயம் அதிகமோ? ” நான் கேட்டேன். 

அவன் சிரித்தான்.. 

“ ஒரு காலத்துல இந்த தெருவுல நந்தவனம் இருந்ததாம்.. முல்லையும் மருக்கொழுந்தும் ..அதனால முல்லை மாரித் தெருன்னு வச்ச பேரு இப்படி ஆயிடுச்சு..! ” 

சீனு வீட்டில், அவன் உறவினர்களின் பாச மழையில் ஒரு பாட்டம் நனைந்தேன். வந்திருக்கிறது சீனுவோட பெண்டாட்டியா என்று சிலர் சீண்டினர். இதையெல்லாம் கண்டு கொள்ளும் அளவு நானோ அவனோ பலவீனமானவர்கள் அல்லர். 

பிறகு கோயிலுக்குப் புறப்பட்டோம்.. 

வழியில் தென்னங்கீற்று ஓலை வேய்ந்து கூரை போட்டிருந்தனர். தரையில் இளம் பச்சைப் புற்களை கொட்டியிருந்தனர். கூரைக்கு ஊன்றிய மூங்கில்களில் வாழை மரம் கட்டியிருந்தது. நடுவே மாவிலைத் தோரணம், உச்சியில் கூளைப் பூங்கொத்து..! நிஜ மாவிலைத் தோரணம்..! நகரத்தில் செய்வது போல பிளாஸ்டிக் அல்ல..! நடக்கும் போதே காலை பதினோரு மணியிலும் காற்று சிலுசிலுத்து வீசியது..! பசும் புல்லின் வாசத்தை அங்குதான் நுகர்ந்தேன். வழியெங்கும் பற்பல சுகந்தம்..! நகரத்து வாழ்க்கையில் கனவில் கூட கிட்டாத அனுபவம்..! 

கோயிலைச் சமீபித்தோம். 

கோயிலுக்கு முன்பிருந்த கூடத்தில் சாணம் மெழுகி, பூசணிப் பூக்களோடு மாக்கோலம் விரிந்திருந்தது. இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு பசு தன் கன்றுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் வெட்டிவேர் தட்டியால் தடுக்கப்பட்ட திட்டில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் இரண்டு தண்டு மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.. எச்சிலை போடும் தொட்டியைச் சுற்றி காக்கைகள், நாய்கள்.. 

எதிரே குளம்..! 

தரை தெரியும் பளிங்குத் தண்ணீர்..! மூன்றடி போல் தோன்றும் பதினெட்டடி ஆழம் ! சமீபத்தில் தூர் வாரியிருந்தது. குளத்தில் சில வெற்றிலைகள் மிதந்தன. வெற்றிலையில் சூடம் வைத்து குளத்து நீரில் விட்டிருக்கிறார்கள். விரிந்த குளத்தில் ஆகாயம் தெரிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே குறவை மீன் ஒன்று “ சளப்” என்ற சத்தத்துடன் துள்ளிக் குதித்தது. அது ஒரு மேகத்திலிருந்து இன்னொரு மேகத்துக்குத் தாவுவதைப் போலத் தோன்றியது, காணக் கிடைக்காத காட்சி..! 

சூரியன் உச்சிக்கு வந்த பின், அதன் பிம்பம் நீரில் தெரியும்போது குளத்து நீரில் மெதுவ்...வ்வ்வாக கால் வைத்து நடந்தால் சூரியனைக் கூட தொட்டு விடலாம்..! 

கோயிலுக்கு இடப்பக்கம் நேர்ந்து விட்ட ஆடு கோழி மாடுகளுக்கான திடலும் கொட்டகையும் தென்பட்டன. நாகலிங்க மரத்தில் சில சேவல்கள் உட்கார்ந்து தங்கள் ஜோடி மேய்வதை பார்த்துக் கொண்டிருந்தன. கோ பூஜை நடந்ததற்கு அடையாளமாக மாடுகள் சந்தனப் பொட்டோடு காட்சியளித்தன. தரையில் வைக்கோல், அகத்திக்கீரை, ஆமணக்கு கொளை, தினையரிசி என்று சிதறிக் கிடந்தது. கொட்டகை மத்தியிலிருந்த செயற்கை நீரூற்றைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இப்படி இன்னொரு கோயிலில் பார்க்க முடியுமா? 

மிக நேர்த்தியான ஏற்பாடுகள்..! இவையெல்லாம் சீனுவின் கைவண்ணம்தான்..! 

பெயிண்ட் அடித்த கோபுரத்தில் சில புறாக்கள் ட்ரூங்...ட்ரூங் என்றன. 

கர்ப்பகிருகத்துக்கு இடப்புறம் பிள்ளையாரும் வலப்புறம் கருப்பண்ண சுவாமியும் வீற்றிருந்தனர். 

கோயிலில் தொங்கிய எல்.ஈ டி விளக்குகள், மின்விசிறி, டிவிடியில் கசிந்த காதுகளை உறுத்தாத வீணை இசை எல்லாம் என் நண்பனின் கைவண்ணத்தை மேலும் காட்டின. கோயில் தூண் ஒவ்வொன்றிலும் கீழ் மணலைப் பரப்பி மாக்கோலமிட்டு சந்தனம் குங்குமம் பூசப்பட்ட கையகல அகல் விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். தூண்களின் மேல் சரவிளக்கு..! 

தூண்களில் சில புடைப்பு ஓவியங்கள் இருந்தன. பெரும்பாலானவை காலத்தால் அழிந்திருந்தன. லிங்கத்தின் ஓவியம், பசு, நாகம், ஒருவன் இன்னொருவனை சாட்டையால் அடிப்பது போன்ற ஓவியம், ஒரு பெண் யாருடைய நாக்கையோ பிடித்து இழுத்த நிலையில் ஓவியம், கட்டில்.., ஆண் பெண் சங்கமம்..! 

ஜவ்வாது விபூதியைப் பிடித்து சின்ன சின்ன லிங்கங்கள் செய்து வைத்திருந்தனர்..! சுற்றிலும் வெளிர் மஞ்சள் நிறத்தில் முளைப்பாரி கலயங்கள்.. 

பிள்ளையார் சந்தனக் காப்போடும் செம்பருத்திப்பூ மாலையோடும் காட்சியளித்தார். 

இங்கு கருப்பண்ண சுவாமி செந்தூரக் கருப்பண்ண சுவாமியாக வணங்கப்படுகிறார். பொதுவாக கருப்பண்ண சுவாமி கடா மீசையும் முட்டைக் கண்களுமாக பயங்கர தோற்றத்துடன் இருப்பார்; இங்கே இந்த கருப்பண்ண சாமி அரும்பு மீசையும் குறும்பு விழிகளுமாய் சின்னப் பையன் போல இருந்தார்..! தோளில் கொஞ்சும் கிளி..! 

கர்ப்பகிருகத்தில் மனிதர்களின் சராசரி உயரத்தில், உட்கார்ந்த நிலையில் ஒரு பெண் தெய்வம்..! செல்லியம்மா...! பகுளா தேவியின் அம்சமாம்..! 

சந்தனக் காப்பில் குங்குமப் பொட்டும் மூக்குத்தியும் மின்ன, தாமரை, தாழையால் ஆன மாலை அணிந்து, வெற்றிலை பாவாடை கட்டி, நான்கு கரத்தோடு பீடத்தில் கொலுவிருந்தாள். பின்னிரு கரங்களில் அங்குசமும் பாசமும் தென்பட்டன. முன்னிரு கையொன்று வரமளித்தது. இன்னொரு கையில் உருளையாக ஏதோ ஒன்று..! 

உலக்கை என்றான் சீனு.. 

பீடத்தைக் காட்டினான். ஒன்றன் மேல் ஒன்றாக சடலங்கள் அடுக்கப்பட்டதைப் போல ஓவியம்..! 

அம்மன் உச்சிக் காலப் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். 

அம்மனின் சிலையும் செந்தூரக் கருப்பண்ணனின் சிலையும் ஒத்த வார்ப்பாக இருக்க, பிள்ளையார் விக்கிரகம் அவற்றிலிருந்து வேறுபட்டிருந்தது.... 

திடலில் உட்கார்ந்து இளநீர் குடித்தோம். 

சீனு அங்கிருந்த பெரியவரிடம், “ நாளைக்கு சர்க்கரைப் பொங்கல் பண்ணி செந்தூர கருப்பண்ணனுக்கு நீல வேட்டி சாத்தணுமே? அதுக்கான சாமானெல்லாம் தயாரா இருக்கா? நீல வேட்டி வந்துடுச்சா? ” என்று கேட்டான்.. 

“ வந்துடுச்சுங்கைய்யா ” பணிவுடன் பதிலளித்தார் அந்தப் பெரியவர்..! 

ஒரு பெரிய காரியத்தை திருப்தியாக முடித்ததைப் போல் பெருமூச்செறிந்தான் சீனு. என் முகத்தைப் பார்த்தான். 

“ கேப்பைக் களிதான் இங்க தினசரி படையல். செந்தூரக் கருப்பண்ணனுக்கு முதல்ல படையல் போட்டு அந்தப் படையல் அப்புறமா செல்லியம்மாவுக்குப் போகும். ஆடி மாசம் கடைசி வெள்ளிக்கிழமை செந்தூரக் கருப்பண்ணனுக்கு மாத்திரம் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணுவோம். அது முடிஞ்சு நீல வேட்டி சாத்தி பூஜை பண்ணுவோம்..! ” 

நான் அவனையே குறுகுறுத்துப் பார்த்தேன். இது அவ்வளவு முக்கியமான விஷயமா? அலுவலகத்தில் ஆடிட் வந்தால் கூட இவ்வளவு துல்லியமாக ஏற்பாடு பண்ணாதவன் செல்லியம்மா திருவிழாவை இந்த கலக்கு கலக்குகிறானே? ஏதாவது வேண்டுதலா? ம்..ம்..? 

இவ்வளவு ஏற்பாடுகள் செய்வதற்கு ஒரு இரண்டு லட்சமாவது செலவாகி இருக்குமே? அந்தளவு நன்கொடைக்கு மெனக்கெட வேண்டுமென்றால் மனதில் ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வேண்டுமே? சீனுவுக்கு சாமி விவகாரத்தில் ஈடுபாடா? நம்ப முடியவில்லையே? 

என் எண்ணம் புரிந்தவன் போல் அவன் புன்னகைத்தான்..! 

“ வெள்ளைக்காரன் வரதுக்கு முன்னாடி இந்த ஊர் வெத்தலைக் கொடிக்காலும் பாக்குமரமும் புன்செய் பயிருமா நல்லாத்தான் இருந்திச்சு..! ” 

அவன் கதை சொல்லத் தொடங்குகிறான் என்று புரிந்து கொண்டேன்..! 

“ ம்.. ” என்றேன். 

“ ஆனா, எக்கச்சக்க சாதிப் பிரிவினை, வர்க்க பேதம்..! ஜமீன்தார் உசந்த சாதியா இருந்தான். காணி நிலம் வச்சு விவசாயம் பண்ணினவங்க உசந்த சாதியில மட்ட சாதியா இருந்தாங்க.. கூலிக்காரங்க தாழ்ந்த சாதி..! 

இங்கேயும் ஒரு ஜமீன்தார் இருந்தான். கொடுங்கோலன்..! அவன் பரம்பரையே அப்படிப்பட்டது ! கீழ்ச்சாதிக்காரங்களை பிழியப் பிழிய வேலை வாங்குவான்.. கூலி கொடுக்காம ஏய்ப்பான்..! எப்போ எந்த குத்தம் கண்டுபிடிச்சி யார் நெஞ்சில கத்தியை செருகுவான்கிறது யாருக்கும் தெரியாது..! 

பொண்ணுங்க விஷயத்துல படு மோசம்..! பூப்பான பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி அவன் மாளிகைக்கு ஒரு ராத்திரி வந்து போகணுங்கிறது எழுதாத சட்டமாவே இருந்தது..! 

ஏழை பாழைங்க இதுதான் நம்ம தலையெழுத்துன்னு நினைச்சாங்களே தவிர அவுங்களும் ஒரு மனுசப் பிறவிதாங்கிற எண்ணம் அவங்களுக்கே இல்ல..! 

அப்ப நதியில வெள்ளம் வந்து ஒரு பொம்பளை கரை ஒதுங்கினாங்க..! அவங்கதான் செல்லியம்மா. அவங்களுக்கு இடம் கொடுத்து கஞ்சி ஊத்தி ஒரு குடும்பம் ஆதரிச்சது. அந்தக் குடும்பத்திலும் ஒரு பொண்ணு இருந்தா.. வண்டார்குழலி..! 

வண்டார்குழலிக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. ஜமீன்தார் கண்ணுல அவ பட்டுட்டா..! அவ வீட்டுக்கு அன்னைக்கு ராத்திரி கட்டில் வந்துடுச்சு..! குடும்பம் மொத்தமும் தற்கொலை பண்ணிக்கிற முடிவுக்குப் போச்சு..! 

செல்லியம்மா வந்தாங்க..! என்னை ஆதரிச்ச குடும்பத்துக்கு நான் இருக்கிற வரை துளி அவமானமும் பட விட மாட்டேன்னு சபதம் செய்தாங்க..! 

பண்ணையாரோட ஆளுங்க ரெண்டு பேர் என்னவோ அசிங்கமா பேசிட்டே செல்லியம்மா பக்கத்துல போனாங்க..! மின்னல் வேகத்துல செல்லியம்மா அவங்க நாக்கைப் பிடிச்சு ஒரே இழு இழுத்தாங்க..! ரெண்டு பயலுகளும் சுருண்டானுங்க. மீதி ரெண்டு பேர் கழுத்தை ஒரே திருகா திருகினாங்க..! ஒரு முழு சுத்து சுத்தி கழுத்து மீண்டப்போ ரெண்டு பேரும் பொணமா விழுந்தாங்க..! ” 

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இவன் புராணக்கதை சொல்லவில்லை; வரலாற்று சம்பவம் சொல்கிறான். தூணில் நான் பார்த்த ஓவியம் மனதில் நிழலாடியது..! 

அவன் தொடர்ந்தான்.. 

“ காட்டுத்தீ மாதிரி இந்த விசயம் ஊருக்குள்ள பரவிடிச்சு. ஒரு பொம்பளை ஜமீன் ஆளுங்களை கொன்னு போட்டாளா? கனவுல கூட ஜமீன்தாரை எதிர்க்கணுங்கிற எண்ணமே இல்லாத ஊர் ஜனங்களுக்கு அந்த தைரியம் உத்வேகம் கொடுத்துச்சு..! 

அடுத்த நாள் ஜமீன் ஆளுங்க பத்து பேர் வந்தாங்க. செல்லியம்மா துணிச்சலா சண்டை போட்டாங்க..! வெறும் கையால சண்டை போடுறாங்களேன்னு வீட்டம்மா உலக்கையை கொண்டு வந்து கொடுத்தாங்க.. ஒவ்வொருத்தரையா கொன்னு சடலத்தை ஒண்ணு மேல ஒண்ணு போட்டு அதுல ஏறி சும்மா அப்படி உட்கார்ந்தாங்க பாரு.. செல்லியம்மா..! 

சனங்க மூக்குல விரலை வச்சாங்க..! ஒரு பொம்பளையால முடியும்னா அவங்களாலையும் தானே முடியும்? 

அடுத்த நாள் அறுபது பேரோட ஜமீன்தார் வந்தான். செல்லியம்மா எப்போதும் போல சண்டைக்குப் புறப்பட்டா..! இந்த முறை அவங்க கூப்பிடாமலே ஊர் ஜனங்க கத்தி, கம்பு, கலப்பை, தொடப்பம், தீப்பந்தம்னு கையில கிடைச்சதை எடுத்துட்டு வந்து செல்லியம்மாவுக்குத் துணையா சண்டை போட்டாங்க..! ஒரு சின்னப் பையன் கூட கையில கம்பை எடுத்துப் புறப்பட்டான்னா பார்த்துக்கோ..! 

செல்லியம்மா கை காட்டின திசையில ஜனங்க திரண்டு போய் சண்டை போட்டாங்க.. ! செல்லியம்மா ரொம்பத் திறமையா அவங்களை வழி நடத்தப் போய்... 

ஜமீன்தார் படுகாயத்தோட செல்லியம்மா கால்ல விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டான்..! ! 

அவனோட கொடுங்கோன்மைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துச்சு..! ! 

ஊர் மக்கள் செல்லியம்மாவைக் கையெடுத்துக் கும்பிட்டாங்க..! அவங்களை பகுளாதேவியோட அம்சம்னு சொல்லி காவல் தெய்வமா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..! 

இளைய ஜமீன்தார் வந்தான்..! இவன் வெளிப்படையா கொடுங்கோல் பண்ணல. ஆனா செல்லியம்மாவுக்கு பணம் நகையெல்லாம் காட்டி அவளைத் தன் பக்கம் இழுக்க முயற்சி செஞ்சான்..! செல்லியம்மா மசியலே..! 

ரகசியமா செல்லியம்மாவைத் தீர்த்து கட்ட முயற்சி பண்ணான். அவங்க தங்கியிருந்த குடிசைக்கு தீ வச்சான்..! செல்லியம்மா தப்பிச்சுட்டாங்க..! 

ஜனங்க ஊர் எல்லையில செல்லியம்மாவுக்கு குடிசை போட்டுக் கொடுத்தாங்க..! ஒத்தப் பொம்பளை தனியா இருக்காளேன்னு ஒரு வயசுப் பையன் அவங்களுக்குக் காவலாப் போய்ச் சேர்ந்தான். அவன்தான் செந்தூரன்..! 

ஊர் முறை வச்சு செல்லியம்மாவுக்கு சாப்பாடு போட்டது..! பெரும்பாலும் கேப்பைக் களிதான்..! செந்தூரன் முதல்ல சாப்பிட்டு பார்த்துட்டு மீதியை அவனே கொண்டு போய் செல்லியம்மாவுக்குக் கொடுப்பான்..! ஒரு பாதுகாப்புக்காக அவன் அப்படி செஞ்சான்..! 

இளைய ஜமீன்தார் ஒரு வாட்டி யாருக்கும் தெரியாம விஷம் கலந்த சர்க்கரைப் பொங்கலை செல்லியம்மாவுக்குக் கொடுத்தனுப்பினான்..! அதை சாப்பிட்ட செந்தூரன் உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு செத்து விழுந்தான்..! ” 

நான் புரிந்து கொண்டேன். சர்க்கரைப் பொங்கலை செந்தூரக் கருப்பண்ணனுக்கு மட்டும் படைத்து, பிறகு நீல வேட்டி சாத்துவது இந்த சம்பவத்தை நினைவு கூரத்தான்...! 

சீனு தொடர்ந்தான். 

“ செந்தூரன் செத்தது செல்லியம்மாவுக்கு ஆக்ரோஷத்தை கொடுத்தது..! அவங்க ஜமீன் மாளிகைக்குள்ளப் புகுந்து இளைய ஜமீன்தாரை கண்ட துண்டமா வெட்டிப் போட்டாங்க..! ஜமீன் பறிச்ச நிலத்தையெல்லாம் உரியவங்க கிட்ட ஒப்படைச்சாங்க..! அப்பவே நிலத்தைப் பிரிச்சுக் கொடுத்து ஒத்துமையா விவசாயம் பண்ற மாதிரி ஆக்கினாங்க..! 

அப்புறம் செல்லியம்மா என்ன ஆனாங்கன்னு தெரியல..! ஜமீன்தார் கூட போட்ட சண்டையில காயம் பட்டிருக்கலாம்; அந்த புண்ணு புரையோடி செத்துப் போயிருக்கலாங்கிறது யூகம்..! 

ஆனா ஜனங்க இன்னும் செல்லியம்மா இருக்கறதா நம்பறாங்க..! அந்த நம்பிக்கை அவங்களுக்குத் தைரியத்தைக் கொடுக்குது..! அந்தக் கால சம்பவங்களை சடங்கா நடத்தறாங்க..! காலப்போக்குல காரணம் போய் சடங்கு மட்டும் நிக்குது..! 

செல்லியம்மா ஒரு மனுசிங்கறதுதான் நிஜம். இந்த நிஜத்தை இப்ப ஊருக்குச் சொல்ல முடியாது..! ஏத்துக்க மாட்டாங்க..! இவங்களுக்கு ஏத்துக்கற பக்குவம் வரும்போது நிஜம் காலத்துல கரைஞ்சிடும்..! வரலாறு அழிஞ்சிடும்.. அதுதான் சோகம்..! நீயாவது கேட்கிறியே..! ரொம்ப சந்தோஷம்..! ” 

அவன் முடித்தான். 

நான் பிரமித்தேன்..! “ ஆமா, இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்? ” 

“ எங்க சின்ன தாத்தா கல்வெட்டுகளை படிப்பாரு..! அவர் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்..! ” 

“ ஆச்சரியமா இருக்கு..! அதனாலதான் இவ்வளவு ஈடுபாட்டோட திருவிழாவை நடத்துறியா? ” 

“ ஆமா வாணி..! ஏன்னா சாதனை செஞ்ச பெரியவங்களை ஞாபகப்படுத்திக்கிறதும் கௌரவிக்கிறதும் நாகரீகமில்லையா? ” 

அவன் எழுந்தான். நான் சிந்தித்தேன்; இப்படி எத்தனை மனிதர்கள் கிராமத் தேவதைகளாக ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அல்லது சமூகத்தினரால் கொண்டாடப்பட்டனரோ? காலப் போக்கில் எத்தனை கிராமத் தேவதைகள் அழிந்தனரோ? எத்தனை கிராமத் தேவதைகள் சைவ, வைணவ, சாக்த மதக் கடவுளர்களாக “ பதவி உயர்வு ” பெற்று சமஸ்கிருத அர்ச்சனைகளில் மூழ்கி இருக்கின்றனரோ? 

எத்தனை வரலாற்று உண்மைகள் மறைந்தனவோ? திரிந்தனவோ? 

திரும்பவும் கோயிலுக்குள் போனோம். செல்லியம்மாவைப் பார்த்தேன். அண்டிய வீட்டில் சாணம் பொறுக்கி வீட்டு வேலை செய்த பெண்..! செஞ்சோற்றுக் கடனுக்காக கை ஓங்கப் போய், ஓங்கிய கை முன் வீழ்ந்தது ஜமீன் அடக்குமுறை..! என் நாடி நரம்புகளில் மின்னல் பாய்ந்தது...! ! ! 

செல்லியம்மாவைப் பெருமை பொங்கப் பார்த்தேன். கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வணங்கினேன். 

http://samugam.net/priya-rajan/post/10485

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.