Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரத்தையல் பிரிவு

Featured Replies

சித்திரத்தையல் பிரிவு - சிறுகதை

 
எஸ்.எஸ்.முருகராசு, ஓவியங்கள்: ஸ்யாம்

 

கல் ஷிஃப்ட் தொடங்கியது.

இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது ஷிஃப்ட் ஆட்கள் யாரும் வரவில்லை. கண்ணாடி ஃபிரேம்களால் சூழப்பட்ட மெஷின் அறையை நோக்கி நடந்தேன். ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரவு ஷிஃப்ட் ஃபிரேமர், ஹெல்ப்பர்கள் காலை வணக்கம் வைத்தனர். சிரித்தபடி கை அசைத்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு மெஷின் அறைக்குள் புகுந்தேன். ஜில்லென்று இருந்தது ஏசி.

''வாங்க பாஸு'' என்றான் தினகரன். நட்போடு தலை அசைத்துவிட்டு, என்ன டிசைன் ஓடுகிறது என்று பார்த்தேன். மஞ்சள் நிற பனியனின் இடது மார்பகத்தில் சிவப்பு, நீலம், ஆரஞ்சு... எனப் பல வண்ணங்களில் மீன் படத்தை வரைந்துகொண்டிருந்தது. இறுதியாக எட்டாவது நீடில் திரும்பி கறுப்பு நூலில் மீனுக்கு அவுட்லைன் கொடுத்து, பின் அதே நீடில் சட்டென ஜம்பாகி கண் எழுதியதும், நூலைப் பக்குவமாக அறுத்துக்கொண்டு 20 பனியன் பீஸ்களையும் வெளியே தள்ளியது, ஜெர்மனியில் இருந்து இறக்குமதி ஆன எம்ப்ராய்டரி இயந்திரம்.

தினகரன் டிசைன் விவரங்களைக் கொடுத்துவிட்டு வெளியேறினான். அன்லோடு செய்துவிட்டு, புதிய ஃபிரேம் போடப்பட்ட பீஸ்களை, ஏற்றி பட்டனை அழுத்தினேன். உள்ளே இழுத்துக்கொண்டது. மானிட்டரில் ஜீரோ செட் செய்து, பகல் ஷிஃப்டுக்கான எனது உற்பத்தியைத் தொடங்க மெஷினை இயக்கிவிட்டு, 20 ஹெட்டையும் ஒரு சடங்குப் பார்வை பார்த்தேன்.

சுபா வந்துவிட்டாளா? என்று திரும்பி கண்ணாடி வழியாக ஹாலை நோக்கினேன். நைட் ஷிஃப்ட் ஆட்கள் முற்றாக நீங்கி, எனது ஷிஃப்டில் உள்ள ஒரு ஃபிரேமரும், இரண்டு ஹெல்ப்பர்களும் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். சுபாவைத் தேடினேன். ஹாலில் வலதுபுறமாக இரவு உற்பத்தியாகி இருந்த பனியன்களை எண்ணி பண்டலிட்டு, டெலிவரிக்கு ஆயத்தமாக்கிக்கொண்டிருந்தாள்.

p76b.jpg

வெள்ளை நிற சுடிதாரில் பளிச்சிட்டாள். எண்ணெய் வைக்காமல் நேர்த்தியாகப் பின்னப்பட்ட அடர்த்தியான தலைமுடியில் அளவாகத் தொங்கியது மல்லிகைப் பூ. அன்றுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். எண்ணிக்கையைத் தவறவிட்டாள் போலும், இதுபோன்ற தருணங்களில் அவளது முகபாவனையைப் பார்க்க வேண்டுமே! எதைப் பார்ப்பது? சங்கடம் இல்லாமல் சலித்துக்கொள்ளும் கண்கள், முத்தமிடுவதுபோல் குவிந்து நிலைபெறும் உதடு, நெற்றி, காது மடல்களில் ஊஞ்சலாடும் ஜிமிக்கி, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாவனை. ஒன்றைப் பார்த்தால், இன்னொன்றைத் தவறவிட்ட குறை. இந்த மூன்று மாதங்களாகவே என்னை அணுவணுவாக இம்சிக்கிறாள். உள்ளே வரட்டும்.

எப்படி ஆரம்பிப்பது..? சட்டென ஓர் உணர்வு உடல் எங்கும் பரவியது. ஜெயன்ட் வீல் ராட்டினத்தில் மேல் இருந்து கீழே இறங்கும்போது வருமே ஒரு பயம் கலந்த மூலாதாரக் கூச்சம்... அப்படி இருந்தது. மெஷின் அறையை நோக்கி வந்தாள். கதவைத் தள்ளிக்கொண்டு, ''குட்மார்னிங் ஆப்பு'' என்றாள்.

குமரவேல் என்கிற எனது பெயரை, இங்கு யாரும் அழைப்பது இல்லை. 'ஆப்பரேட்டர்’ என்றே அழைப்பார்கள். அதிலும் இவளுக்கு மாத்திரம் செல்லமாக 'ஆப்பு’!

''குட்மார்னிங்'' என்றேன்.

மெஷின் அறைக்குள் இடது ஓரமாக இருந்த திரெட் ரேக்கில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

''சுபா...'' என்றேன் மெதுவாக.

''என்ன ஆப்பு?'' என்று திரும்பினாள்.

மெஷின் சத்தத்தில் எவ்வளவு சன்னமாகப் பேசினாலும் கேட்கும்படி எல்லோருக்கும் காது பழகியிருந்தது.

''நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே?'' எனச் சொல்லி முடிப்பதற்கும், நூல் அறுபட்டு மெஷினின் இயக்கம் தடைபடுவதற்கும் சரியாக இருந்தது. அறுபட்ட ஹெட்டில் நூலைக் கோத்து மெஷினை இயக்கினேன். இப்போது என் அருகில் நின்றிருந்தாள்.

''நமக்குள்ள என்ன ஆப்பு... எதுவானாலும் சொல்லு!'' என்றாள்.

'இவளுடனான இந்த மூன்று மாத நட்பு பாழாகிவிடுமோ! ஆனால் ஆகட்டும். ஒன்று... அது காதலாக வேண்டும்; இல்லை கடைநாசமாகப் போகவேண்டும். எதற்கு இந்த ரெண்டுங்கெட்டான் பொழப்பு? தைரியமும் பீதியும் ஒருசேர உண்டானது. ஒருவேளை, அவள் என் காதலை மறுப்பதோடு முதலாளியிடம் புகார் செய்துவிட்டால்?! செய்யட்டும்! திருப்பூரில் தடுக்கி விழுந்தால் கம்பெனிகள். யாரோ சொன்னது ஞாபகம் வந்தது. 'ஓனருக்குத்தான் ஒரு கம்பெனி. நமக்கு ஆயிரம் கம்பெனி!'' என்ற என் சிந்தனையை சுபா இடைமறித்தாள்.

''ஆப்பு... என்னாச்சு? ஏதோ சொல்ல வந்த... எதையோ யோசிச்சிட்டு இருக்க?''

''நான் உன்னை லவ் பண்றேன் சுபா!''

இதைத்தான் சொல்லவருகிறான் என்று அவள் கணித்துவிட முடியாத கணத்தில் உதிர்த்துவிட்டேன்.

பரிவு, புன்னகை, பாசம்... என எத்தனையோ உணர்வுகளை அவளது கண்களில் அனுபவித்துள்ளேன். அவை இப்போது கொத்தாக நெருப்பை அள்ளி வீசின. குளிர் அறை முதன்முறையாகச் சுடுவதை உணர்ந்தேன். அவள் பார்வை, உஷ்ணத்தை நிறுத்துவதாக இல்லை. இன்னும் சற்று நேரத்தில் கருகிக் கரிக்கட்டை ஆகிவிடுவேன் போலும். 'எதைச் செய்து தடுப்பது?’ என்று தடுமாறினேன். டிசைன் முடிந்து வெளியே தள்ளியது. அதைச் சேகரிக்கும் முனைப்புடன் விலகினேன். முறைப்புடனே அவள் வெளியேறினாள்.

அன்லோடிங்... லோடிங் மெஷினை இயக்கிவிட்டு ஹாலைப் பார்வையிட்டேன். ஹெல்ப்பர் முருகையனுடன் பேசிக்கொண்டிருந்தாள் சுபா. 'இன்னும் சற்று நேரத்தில் முதலாளி வந்துவிடுவான். ஏன் சொன்னோமோ?’ என்று மனசு கிடந்து அரட்டியது.

நினைத்தபடி முதலாளியும் வந்தான். சுபா முதலாளியின் அறைக்குள் செல்வதையும், என்னை முறைத்தபடி வெளியே வருவதையும், எப்படி நோட்டம்விடாமல் இருக்க முடியும்! முருகையனிடம் ஏதோ சொன்னாள். அவன் மெஷின் அறைக்குள் வந்தான்.

''அண்ணா... ஓனர் கூப்பிடுறார்.''

'போச்சு போச்சு... எல்லாம் போச்சு’ முதலாளியின் அறை நோக்கி நடந்தேன். 'கடுங்கோபக்காரர் இந்த முதலாளி. வேலையை விட்டுத் துரத்தினால் பரவாயில்லை. அடித்து அவமானப்படுத்துவான்... சண்டாளன்! அதுவும் தனியாக அழைத்து அடித்தால் பரவாயில்லை. ஹெல்ப்பர்கள் முன்பெல்லாம்! ச்சே... என்ன கருமத்துக்குச் சொன்னோம். ஊரு விட்டு ஊரு வந்து அடிபட வேண்டியிருக்கே... ஆண்டவா!’ என்று எண்ணியபடி முதலாளி அறையினுள் நுழைந்தேன். யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். ஓர் ஓரமாக நின்றேன். சிறுநீர் கழிக்க வேண்டும்போல் இருந்தது. இணைப்பைத் துண்டித்தார்.

''குமரா... டிசைனை மதியத்துக்கு மேல மாத்திரு. அந்தப் பூமா எக்ஸ்போர்ட் பீஸைப் போட்டுரு. அது நாளைக்குக் காலையில டெலிவரி. அர்ஜென்ட் பீஸ்டா. வேகமாக ஓட்டி வுடு. ம்ம்... அப்புறம்...''

சட்டெனப் பயம் விலகி, திடீர் தெம்பு கிடைத்தது.

''சொல்லுங்க சார்!''

''டெலிவரி பாய் இருந்தா பாரு... 4,000 ரூபாய் சம்பளம் கொடுத்துரலாம்!''

''சரி சார்... பாக்குறேன்'' - வெளியேறினேன்.

'அப்ப்பா... பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தேன்.’

ன்று முழுவதும் சுபா என்னை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. அடுத்த நாள் ம்ஹூம். அதற்கடுத்த நாள் சுத்தம். அவளின் பார்வை எல்லைக்குள் நின்றாலும், அருகே சென்றாலும் கண்டுகொள்ளாததுபோல விலகிச் சென்றுகொண்டே இருந்தாள்.

காதலைச் சொல்லாமல் இருந்திருந்தால், பழைய பழக்கத்துடனே நெருக்கமாகவாவது இருந்திருக்கலாம். இப்போது சங்கடம், தர்மசங்கடம், பிராண சங்கடம் என்று அன்லிமிடெட் அவஸ்தையாக இருந்தது.

''சிம்பிள் மச்சி, பொண்ணுங்க எப்பவுமே நெருங்கிப் போனா விலகிப் போவாங்க.. விலகிப் போனா நெருங்கி வருவாங்க'' என்றான் நண்பன் பெரியசாமி. எரிச்சலில் பல்லைக் கடித்துக்கொண்டே கேட்டேன்.

''டேய்... உன்னை ஒரு மனுஷனா மதிச்சு ஐடியா கேட்டா... இது பழைய பல்லவிடா!''

''மச்சி... பழசு எதுவுமே சும்மா சொல்லி வைக்கலை. பண்ணிப் பாரு... அனுபவிப்ப!''

கடைசி வார்த்தை மட்டும் வேறு வேறு மாடுலேஷனில் கேட்டுக்கொண்டே இருந்தது. காசா, பணமா... முயற்சிப்போமே என்று தோன்றியது.

p76a.jpg

டுத்த நாள் சின்சியராக மெஷின் ஓட்டிக்கொண்டிருந்தேன். சுபா வந்தாள். கவனிக்காததுபோல் அல்ல... நிஜமாகவே கவனிக்கவில்லை. கடைக்கண்களால் பார்த்துவிட்டால்கூட என் நடிப்பு அரங்கேறிவிடும் என்று தீர்மானித்து இருந்தேன். இதைவிட காதலுக்குப் பெரிய தியாகம் உண்டா என்ன? அசரவே இல்லை நான். அவ்வளவுதான். மதிய சாப்பாட்டுக்குள் கனிந்தேவிட்டது.

என்னிடம் வந்தாள்.

''இந்தாங்க அடுத்த டிசைனுக்கான திரெட்.''

குரலில் கோபம் இருந்தது. நான் முகத்தைப் பார்க்கவில்லை. ஹாலைத் துழாவினேன். எல்லோரும் சாப்பிடச் சென்றிருந்தனர். அதுதானே..! இந்த இரண்டு நாட்களும் இவள் பேசவேண்டிய, கொடுக்கவேண்டிய எல்லாவற்றுக்கும் முருகையன் அல்லவா வருவான்.

''நீயே கட்டிவிடு!''

இப்பவும் அவளின் முகம் பார்க்கவில்லை. மெஷின் பின்புறம் சென்றவள்.

''எந்த நீடிலில் கட்டுறது?'' என்று கேட்டாள்.

இரண்டாவது என்பதுபோல் இரண்டு விரல்களைக் காண்பித்தேன். கட்டிவிடத் தொடங்கினாள். ஐந்தாவது நீடில் இயக்கத்தில் இருக்கவே, இரண்டாவது நீடிலில் நூலை இழுத்து, பற்களால் கடித்து, விரல்களால் சமன்படுத்திக் கோக்கத் தொடங்கினேன். 'ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும்’ என்ற பழமொழிவேறு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நினைவுக்கு வந்தது. 10-வது ஹெட்டில் இழுத்தேன். அவள் கட்டிவிடும் பச்சை நூல் வரவில்லை. சத்தியமாக இப்போது அவள் முகத்தைப் பார்க்கும் ஆசையோடு நிமிர்ந்தேன். அவளைக் காணவில்லை. வெளியே போனதாகத் தெரியவில்லையே என்ற சந்தேகத்துடன் மெஷினின் பின்புறம் சென்று பார்த்தேன்.

தரையில் அமர்ந்து, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.

''ஏய்... உனக்கு என்ன பைத்தியமா? எதுக்கு இங்கே உக்காந்து அழுவுற?''

''ஆமா... எனக்குப் பைத்தியம் புடிக்கணும்னுதானே முந்தா நாளு அப்படிச் சொன்ன!''

தேம்பலுக்கு இடையிடையே வார்த்தைகள் வந்து விழுந்தன. என் முகம் பாராமலே திரும்பி நின்று கண்ணீரைத் துடைத்தாள். ஏறத்தாழ நானும் அழுதுவிடும் நிலைதான். விழுங்கவும் முடியாமல், உமிழவும் இயலாத அவஸ்தையில் கூறினேன்.

''இல்ல சுபா... நெசமாலுமே உனக்கு என்ன புடிக்கலியோனுதான்...விலகிக்கலாங்கிற முடிவுல...''

சிறு குழந்தையைப்போல் விசும்பினாள். கண்ணீரைத் துடைத்தாள். அது பெருகியது, மேலும் பெருகியது. என் மீது இருக்கும் பரிவோ, பாசமோ, எதுவோ ஒன்று அவளை அப்படிச் செய்தது. 'ச்சீ..! என்ன இது, தேவை இல்லாமல் ஒரு பெண் பிள்ளையை இப்படி அழவைத்துவிட்டோமே!’ என்று மனசு பதறியது. அப்படியே அவளை நெஞ்சோடு இறுத்திக்கொண்டேன்.

''போடா... ஆப்பு!''

''போடி டூப்பு!''

காதல் ஊர்ஜிதமானதும் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்தோம். மெள்ளத் தீண்டல், முத்தமிடுதல், அவ்வப்போது ஏசி அறையின் குளிருக்கு இதமாக இறுக்கி அணைத்தல், எல்லாவற்றுக்கும் மெஷின் அறையையே உபயோகித்தோம். ஐந்து மாதங்களாக, காதல் துணுக்குக் காட்சிகளாகவே ஓடியது.

முதலாளியின் தூரத்துச் சொந்தம் ஒருவன், டெலிவரி பாயாக அமர்த்தப்பட்டான். பெயர் செல்வகுமார். வயது 25. என் வயதுக்காரன்தான். ஆனால், என்னைவிட அழகன் என்று நானே எப்படிச் சொல்ல முடியும்? வந்த கொஞ்ச நாட்களிலேயே எல்லோரிடமும் நன்கு பழகினான். என் சுபாகூட பெரும்பொழுது அவனிடமே நகைத்து நகைத்துக் கதைத்துக்கொண்டிருந்தாள். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. இருக்காதா பின்னே! இவள் முன்புபோல் என்னிடம் பேசுவது கி¬டயாது. அட, இந்த முத்தம், உரசல் அதுவெல்லாம்கூட வேண்டாம். என் அருகில் வந்து நிற்கலாம் அல்லவா? வா... என்றால் வா. போ என்றால் போ. அவ்வளவுதான். முன்னெல்லாம் எப்போதாவது செல்லமாக உதைப்பாள். யாரும் அறியாத கணத்தில் ஒரு செல்ல உதை! அதுவும் கிடையாது. என் சந்தேகம், காதலி மீது இருப்பதைவிடவும் காதல் மீது அதிகரித்தது. அது இருக்கிறதா, இல்லையா? எத்தனை நாட்களுக்குத்தான் சினத்தை உள்ளிருத்துவது. கேட்டேவிட்டேன்.

''என்ன சுபா... ஆள மாத்திட்டியா?''

அவ்வளவுதான். கையில் இருந்த நூல்கண்டைப் படாரென என் முகத்தில் விட்டு எறிந்தாள். சுடிதார் அணிந்த நவீன கண்ணகிபோல் முறைத்தாள். இந்த நேரத்தை, நிமிடத்தை நான் குறித்துவைத்திருக்க வேண்டும். அன்றில் இருந்து ஒரு வார்த்தை, ஒரு பார்வை. கடவுளே... மனப்பிறழ்வு நோயே வந்துவிடும்போல் இருந்தது. ஒரு பெண்ணைச் சந்தேகிப்பது ஆணுக்கு அழகு அல்ல. இவை எல்லாம் இப்போதுதான் என் புத்திக்கு உரைக்கின்றன. தெருவில் செல்லும் எவனுடைய செருப்பையாவது வாங்கி என்னை நானே அடித்துக்கொள்ளலாமா..?

p76.jpgநைட் ஷிஃப்ட் முடிந்து, கம்பெனி மொட்டை மாடியில் நின்றிருந்தேன். இன்றாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டு மாதங்களாக மனது ஓயாமல் இதையே உளறுகிறது. ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, ஆழமாக இழுத்தேன். சிகரெட்டைப் பிடித்தபடியே மாடியின் சுவர் ஓரமாக வந்து நின்று கீழே நோக்கினேன். கம்பெனியின் பின்புறச் சந்தில் சுபா மட்டும் தேநீர் பருகிக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் முடித்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.

'நீ என்னை மன்னிக்கலைனா மாடியில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்குவேன் என மிரட்டலாமா? வேண்டாம். ஏற்கெனவே செய்த பாவத்துக்குப் பிராயசித்தம் கிடைக்காமல் அலைகிறேன். இதில் இன்னொன்றைச் செய்து, மேலும் அவளைத் துன்புறுத்த மனம் இல்லை. சற்று நேரம் நிம்மதியாக அவளைப் பார்த்துக்கொண்டாவது இருக்கலாம் என்று தோன்றியது. சிகரெட்டை ஆழமாக இழுத்து, புகையை மெதுவாக வெளியேற்றினேன். அப்போது சந்தினுள் செல்வகுமார் நுழைந்தான். எங்கோ டெலிவரி முடித்துவிட்டு வந்திருக்கிறான் போலும். இவனால்தான் வந்தது இத்தனை விவகாரமும். இந்த ஆப்புக்கே ஆப்பு வைத்துவிட்டானே!

''டீ காலியா?'' - சுபாவைக் கேட்டான்.

'இல்லை’ என்பதுபோல் உதட்டைப் பிதுக்கி, ஸ்டைலாகத் தோள்களைக் குலுக்கினாள். இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. எனக்கு இருப்பதுபோல் இவளுக்கு உணர்ச்சிகளே இல்லையா? இல்லாமலா அன்றைக்கு அழுதாள்?

அப்போது கீழே நடந்த சம்பவம் என் சிந்தனையை அறுத்தது. ஒரு கணம் என் உயிர் பிரிந்து மீண்டும் உடலுக்குள் புகுந்தது. முகத்தில் உணர்வு அறுந்து, கண்களில் நீர் திரண்டது.

சுபா, செல்வகுமாரை இறுக்கியணைத்து அவனது உதட்டைக் கடித்துச் சுவைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்.

சிகரெட் வெறுமனே புகைந்து விரலைச் சுட்டது. உதறி எறிந்தேன். கீழே சட்டென்று விலகி தன்னிலைக்கு வந்தனர்.

''டீ போதுமா?''

''சூப்பர் ஸ்ட்ராங்'' என்றான்.

என்னிடம் பயின்றதை அவனிடம் செய்து காண்பிக்கிறாளோ?

இதற்கு மேலும் நான் அங்கு நிற்க வேண்டுமா? வெளியேறினேன் மொத்தமாக. கம்பெனியைப் பொறுத்தவரை, நான் எங்கோ தொலைந்து விட்டேன். முதலாளிக்கு மட்டுமல்ல. அங்கே நான் இல்லை என்றால், இன்னோர் ஆள்.

ந்து வருடங்களுக்குப் பிறகு. சென்னை சென்ட்ரலில் முருகையனைச் சந்தித்தேன். கம்பெனியில் எல்லோரையும் விசாரிப்பது போலவே, வேண்டாம் என்று நினைத்தும் கேட்டுத்தொலைத்துவிட்டேன்.

''சுபா எப்படி இருக்கா?''

''சுபாவா..? கோயம்புத்தூர்ல ஒரு தொழிலதிபரை லவ் மேரேஜ் பண்ணி செட்டிலாகிருச்சு. ஒரு தடவை பார்த்தேன். கண்டுக்கவே இல்லைண்ணே. எல்லாத்தையும் மறந்திருச்சு!''

எனக்குக் குழப்பமாக இருந்தது. நான் என்ன தவறு செய்தேன்? செல்வகுமார்தான் என்ன தப்பு செய்திருப்பான்? ஒருவேளை... எங்களிடம் எல்லாம் காதலைக் கற்றுக்கொண்டிருப்பாளோ!?

ஊஊஊ... எனச் சத்தமிட்டபடி ரயில் புறப்பட்டது!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.