Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாரி யானை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாரி யானை

by ஜா.ராஜகோபாலன் • September 11, 2018

IMG_2325

9௦ களின் தொடக்கத்தில் நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய எனக்கு பத்தாண்டுகள் கடந்த பின் சில கேள்விகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை பொதுவாக வகைப்படுத்தும்போது வணிக எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள் எனச் சொல்கிறோம். இலக்கிய எழுத்தாளர்களுக்குள் வந்தால் அதிலுமே சில பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தின் வகையாலன்றி பேசுபொருளின் அடிப்படையில் நான் வகுத்துக் கொண்ட விதத்தால் இப்படி சொல்கிறேன்.

இலக்கிய எழுத்தில் பெரிதும் புகழப்பட்ட எழுத்துகளில் பெரும்பான்மையும் உறவுச் சிக்கல்களை, விலக்கமும் நெருக்கமும் அச்சுகளாகி ஆடும் மானிட உறவுகளின் ஆட்டங்களை, அதன் ரகசியங்களைப் பேசியவையாகவே இருந்தன. வெகு குறைவாக அல்லது வெகு சில எழுத்தாளர்களே இந்த பேசுபொருளைத் தாண்டி வந்தனர். அப்படி வந்தவர்களில் இன்னும் சலித்தால் கிடைக்ககூடிய விரல் விட்டு எண்ணத்தக்க வகைப்பாட்டில் கிடைக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பவா செல்லத்துரை. அவரது இலக்கிய இடம் என்ன என்பதை இப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட நிலத்தின், மண்ணின் கதையை தம் எழுத்துகளில் துலங்கத் தரும் எழுத்தாளர்கள் உண்டு. இலங்கை மண்ணின் எழுத்தை சயந்தன், ஷோபா சக்தியிடமும், நாஞ்சில் மண்ணின் எழுத்தை நாஞ்சில் நாடனிடமும், கரிசல் மண்ணின் எழுத்தை கி.ராஜநாராயணனிடமும், நடுநாட்டு எழுத்தை கண்மணி குணசேகரனிடமும் என நம்மால் வாசிக்க இயலும். ஆனால் அதற்குள் ஒரு நுண்தளம் உருவாக்கி அதில் தன் படைப்புகளை நிகழ்த்தும் ஆளுமையுள்ள எழுத்தாளர்கள் சிலர்தாம்.  இலங்கை எழுத்து என்றால் அதில் மலையகத் தமிழர் பாட்டை சொல்ல ஒரு தெளிவத்தை ஜோசப் வரவேண்டியிருக்கிறது. மலேசிய இலக்கியத்தில் ரப்பர் தோட்ட தமிழர் கதையைப் பேச சீ.முத்துசாமி வரவேண்டியிருக்கிறது. கரிசல் மண்ணின் இன்னொரு முகத்தைக் காட்ட பூமணி வரவேண்டியிருக்கிறது.  இவர்களெல்லாம்  பேசிய கதைகள் அதற்கு முன்பு அவ்வளவு வலிமையாகப் பேசப்பட்டதில்லை எனும் அளவில் இருப்பவை. அந்த வகையில் ஆற்காடு, குறிப்பாக வட ஆற்காடு நிலத்தின் கதையை அதிலும் குறிப்பாக அம்மண்ணின் இருளர், குறவர் என பழங்குடி இனக்குழு வாழ்க்கையை சொல்லும் ஒரே படைப்பாளி இன்று பவா செல்லத்துரை மட்டுமே.

அனுபவக் கட்டுரைகள், திரைப்பட செயல்பாடுகள் , கதை சொல்லல், இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைத்தல் என பலவற்றை பவா செல்லத்துரை செய்துகொண்டிருந்தாலும் இன்று தன் இலக்கிய முத்திரையாக பவா வைத்திருப்பவை அவரது சிறுகதைகளையே.   இன்று இலக்கியம், சமூகம் சார்ந்த செயல்பாடுகளாலேயே அதிகமும் பேசப்படும், அறியப்படும் பவா செல்லத்துரை 9௦ களில் தமிழ் இலக்கிய  உலகில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் எழுச்சியுடன் அன்றைய இளம் எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, போப்பு, ஷாஜகான், ச.தமிழ்செல்வன்  போன்றவர்களுடன் இணைந்து சிறுகதைத் தொகுப்பு (ஸ்பானிய சிறகும், வீர வாளும்) ஒன்றைக் கொண்டு வந்தவர். யதார்த்தவாத எழுத்தில் அழுந்திக் கிடந்த தமிழ் இலக்கிய உலகை உலுக்கி எழுப்பிய தொகுப்பு இது. அதில் பிரும்மராஜன், சாரு நிவேதிதா, சி. மோகன், அமரந்தா ஆகியோரது  மொழிபெயர்ப்பு படைப்புகளும் இடம் பெற்றிருந்தன. ஒரு பேரலை போல் அத்தொகுப்பு வந்து யதார்த்தவாதத்திலிருந்தும் தமிழ் படைப்புலகின் எல்லையை விரியச் செய்தது. சமகால தமிழ் இலக்கியத்தின் திருப்பம் நிகழ்ந்த இடம் அத்தொகுப்பு. அதைக் கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பவா செல்லத்துரை. அதில் எழுதிய பலரும் இன்றும் தமிழகம் அறிந்த எழுத்தாளர்கள்.

பவா எழுத்தின் நுட்பங்களைச் சொல்ல வேண்டுமென்றால் இப்படி வரையறுக்கலாம். வெகுமக்களிடையே  ஊடாடி இருக்கும் அனைத்து விழுமியங்களை மறுக்காமலும், அதன் வழியே உருவாகி வரும் முற்போக்கான மானுட சிந்தனைகளுமே அவரது படைப்புகளின் மையம்.

பவாவின்  படைப்பில்  முதலாக  நான்  வாசித்தது  ஒரு  மழைப்  பொழிவினால் மரணம் மன்னிக்கப்பட்ட திருடனின் கதை.  மிகுந்த பிரமிப்புடன், ஒரு வார காலம் அந்தக் கதையையே நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு  குறிப்பிட்ட கதைமாந்தரின் மீது  இரக்கம்  தோன்றும் விதத்தில் கதை சொல்லப்படுவது வழக்கம். அதுவும் ஒரு கதாபாத்திரம்,  இன்னொன்றின் மீது வெளிப்படுத்தும் ஒன்றாக அமைவதே மரபு. ஆனால் இப்படைப்பில் இரக்கம்  உருவாகி வருவது திருடன்  மீதல்ல. கட்டுகளை அவிழ்த்து விடும் ஊர்க்காரர்கள் எவரும் பரிதாபத்தையோ,  இரக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஊர்க்காரர்கள் தண்டிக்கும்படியான காரியங்கள் பல செய்த திருடன் , அவர்களே மன்னித்து விடுதலை செய்யுமளவு என்ன மகத்தான நல்ல காரியம் செய்தான்? ஒன்றுமில்லை.  அவன் ஒரு பொருட்டே அல்ல. மாறாக, மழை வழியே அவர்கள் மனம் அடைந்த விரிவு.  அந்த மழை கொடுத்த மன விரிவு. நெல்லுக்கும், புல்லுக்கும், விஷச் செடிக்கும், பழமரத்துக்கும் ஒன்றே போல் முலை  சுரக்கும் மலையருவிகள். குழந்தைகளின் முகம் பார்த்து அன்னையின் கையில் இடப்பட்ட பிடி சோற்றின் வலிமை. இனி உழைக்க வழியுண்டு என்ற மனம் தந்த விரிவு அது. இப்படி மானுட செயல்கள் வழியே மானுடத்தை மீறி நிற்கும் ஒரு மகத்தான உணர்வை சொல்ல முடிந்த இவர் யார் என்றுதான் பவாவின் பெயரை கவனிக்க ஆரம்பித்தேன்.

சத்ரு எனும் இக்கதைதான் பவாவின் சிறுகதை உலகை சரியாக நமக்கு அறிமுகப்படுத்தும் படைப்பு. பவா அவரது முற்போக்கு இயக்க செயல்பாடுகளால் பெரிதும் அறியப்பட்டவர். எந்த மதச் சார்புள்ள செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவர். ஆனால் தன் படைப்பினுள் இருக்கும் பவாவுக்கு பவா செல்லத்துரையின் கொள்கைகள் குறித்த தடையேதுமில்லை. பஞ்சம் தாங்கமுடியாமல் மாரியம்மனிடம் கூழ் ஊற்றி மழை வேண்ட ஊர் ஆயத்தமாகிறது. பாறைகளில் இயற்கையாக ஏற்பட்ட குழிகளிலேயே வழித்து எடுத்த தானியங்களை இட்டு இடிக்கிறார்கள் பெண்கள். வட ஆற்காடு பகுதியின் உள்ளே பயணித்தால் இதை இன்றும் காணலாம். தானியம் குத்தும் பெண்ணிடம் மூன்று குழந்தைகளுடன் பசியால் வெளிறிய பெண்ணொருத்தி பாத்திரம் ஏந்துகிறாள். தனக்காக இல்லை, தன் பிள்ளைகளுக்காக உணவிடும்படி கேட்கிறாள். ஏந்தப்பட்ட ஏனத்தில் மாவை இடும் கணத்தில்  விழுந்து பரவுகிறது முதல் மழைத்துளி. நில்லாமல் பெய்து நிறைக்கிறது.

இந்தக் கதையை அம்மனுக்கு இட்டதை விட ஏழைக்கு இட்டதால்தான் மழை என கட்டுடைத்தோ, முற்போக்காகவோ வாசிக்க இடமுண்டு. ஆனால் இரு விஷயங்கள் கதையை வேறு தளத்திற்கு நகர்த்தி விடுகின்றன. இரந்து நிற்கும் பெண்ணின் மூத்த மகள்தான் சட்டியை ஏந்தி நிற்கிறாள். நொடி தயக்கம் மாவு இடிப்பவளுக்கு என்று உணர்ந்த கணத்தில் இரப்பவள்  சொல்கிறாள் – “நாளைக்கு திருப்பி தந்துடுவேன்.’

இரப்பவள்தானா அவள் ? மந்திரம் போல் மீண்டும் சொல்கிறாள் – “நாளைக்கு சத்திமா திருப்பி தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரணும் தாயி..’’

இடப்பட்ட உணவை ஏற்ற கணம் அவள் இடக்கண் ஒரு துளியை உதிர்க்கிறது. அதே நேரம் மாரியம்மனின் இடக்கண்ணிலிருந்து துளிநீர் வழிந்து சொட்டியதை ஒருவன் பார்க்கிறான். கானக மரங்களின் அடியிலும், பாறையடிகளிலும், குகைகளிலுமாக நிலமெங்கும் நிறைந்து கிடக்கும் எண்ணற்ற தெய்வங்களில் எதைக் கண்டான் நம் முன்னோன் என்பதை அவளது ஒற்றை வரி சொல்கிறது. உறுதியும், கனிவுமாக சொல்லப்பட்ட சொல் பலித்து எழுகிறது.

அந்த முதல் மழைத்துளி எங்கே வீழ்கிறது என்பதுதான் அடுத்த நுட்பம். இருளனின் உயிர் வாங்க ஒட்டந்தழை  பறிக்க காடு புகுந்திருக்கும் ரங்கநாயகிக் கிழவியின் நெற்றிப்பொட்டில் அறைந்து சிதறுகிறது முதல் துளி. பறித்த விஷ இலைகளோடு இறந்து கிடக்கிறாள் கிழவி. ஆவேசத்துடன் பெய்த மழை நாமறியா சமன்பாடுகளை தீர்த்து வைத்து முடிகிறது. இதை ஒரு இடத்திலும் விரித்து பாடஞ் சொல்லவில்லை பவா.  ஆனால் படைப்பினை வாசிக்கையில் உணர முடிகிறது.

வெறும் முற்போக்கு எனும் இடத்திலிருந்து இரப்போர்க்கு ஈயும் இடத்தில் நிகழும் ஒன்றை சொல்லிய விதத்தில் கதை நாட்டார் கதைகளின் மாய உலகிற்கு, அதன் உள்ளார்ந்த விழுமியங்களின் சாரத்திற்கு தாவி விடுகிறது. தனி மனித உணர்வு என்பதையும் தாண்டி அதிமானுட பிரஞ்ஞை நிகழும் தருணத்தை இவ்வளவு சிறப்பாக சொல்லிய படைப்புகள் வெகு குறைவே.

வலி எனும் சிறுகதை. திருடியவனுக்கும், திருட்டு கொடுத்தவனுக்கும் இடையே முகிழ்ந்தெழும் ஒரு உணர்வை சொல்லும் கதை. மாட்டிய திருடனின் மீது கருணை காட்டிய கதைகளை வாசித்திருப்போம். ஆனால் வலி சிறுகதை இருவருமே ஒருவர் மேல் ஒருவர் காட்டிக்கொள்ளும் கருணை. நல்ல கெட்ட , மேன்மக்கள் கீழ்மக்கள் என எந்த இருண்மைக்குள்ளும் புகாமல் இரு தரப்பாரின் உணர்வையும், அதில் துளிர்த்து வரும் மானுட உணர்வுகளையும் சொல்லி விட முடியுமா என்ற கேள்விக்கு இந்தப் படைப்பே பதில்.

கதையின் தொடக்கத்தில் சரியான வேளைக்குக் காத்திருக்கிறார்கள் கள்வர்கள். தேர்ந்த கள்வர்கள். தொழிலில் இறங்கி விட்டால் பேச்சே கிடையாது. இதை இப்படி சொல்கிறார் பவா – திருட்டுக்கு வரும்போதே பேச்சை ஊரில் வைத்துவிட்டு வருவார்கள்..

நால்வரும் கையில் கல்லை வைத்து உருட்டிக்கொண்டு  புதர்களுக்குள் பதுங்கி அமர்ந்திருக்கிறார்கள். இரவு நீள்கிறது. சட்டென கொற ராமன் கையில் இருக்கும் கல் நழுவி விழுகிறது. அவ்வாறே பிறர் கை கற்களும் நழுவும் நேரம் ஒன்றாக எழுந்து கிளம்புகிறார்கள். முதலில் இந்த இடம் பிடிபடவே இல்லை. ஏன் கல் நழுவியதும் கிளம்புகிறார்கள், ஒரு வேளை அது அவர்கள் மரபான வழக்கமோ என்றெல்லாம் யோசித்தேன். சில நாட்கள் கழித்து ஒரு மதியம் வாசித்துக் கொண்டே இருந்தேன். சட்டென ஒரு கணத்தில் உறக்கம் கண்களைக் கட்ட கையிலிருந்த புத்தகம் நழுவி விழுந்தது. நழுவிய புத்தகம் கீழே விழும் முன்னர் இவ்வரிகள் மின்னி மறைந்தன.  கைகள் கல் உருட்டுவது விழிப்பின் போதத்தால், அது நழுவும் நேரம் போதத்தை உறக்கம் மூடும் நேரம். அனைவரும் உறக்கத்தில் மயங்கியிருக்கும் வேளை.

இந்த நயன பாஷை தோட்டக்காரரிடமும் தொடர்கிறது. காவல் நிலையத்தில் அடையாளம் காட்ட வருகையில் அவர் கைகள் அனிச்சையாய் அடிபட்ட விரலையே வருடுகின்றன. கொற ராமனின் கண்களும் அவ்விடத்தையே தொடுகின்றன. அதன்பின் தோட்டக்காரர் சொல்லும் வரிகள் நமக்கு வியப்பளிக்கவில்லை.

ஒரு கலைஞன். நாட்டுப்புற கலைகளில் சிறந்தவன். கூத்தே வாழ்வு எனக் கொண்டவன். கூத்து அவன் ரத்தமெங்கும் நிறைந்த ஒன்று. வழமை போல் வாழ்வு வந்து ரத்தம் கேட்கிறது. ஏழுமலை என்ன செய்கிறான் ? ஆற்காட்டின் கிராமங்களில் இன்றும் காணக் கிடைக்கும் ஏழுமலைகள் பலர். அவன் ஆட்டத்தை பவாவின் எழுத்துகள் காட்சிப்படுத்தும் விதம் அவரது கதை சொல்லும் திறனுக்கு சான்று. ஆடிச் சரியும் ஏழுமலையை இன்றும் ஒவ்வொரு கூத்து மேடையிலும் தேட முடியும்.

உள்ளார்ந்த தீமை மானிட இயல்பின் ஒரு பகுதி என்பதை பேரிலக்கியங்கள் சொல்லியபடியே இருக்கின்றன காலந்தோறும். பூவினுள் விதையென அணுவிடை அளவில் தீமை உட்கரந்திருப்பது மானுட இயல்பு. அது வெளிப்படும் தருணம் ஒன்றை அனாயாசமாய் படைப்பில் காட்டிச் செல்ல நல்ல படைப்பாளிகளால்தான் இயலும். இல்லையேல் கருப்பு வெள்ளையாய் ஆகிவிடும் அறைகூவல் உள்ள களம் இது. பவாவின் கோழி எனும் சிறுகதை. தன் வீட்டினுள் வந்து கிளறும் அண்டைவீட்டு சேவல் மீது உள்ள கோபத்தில் ஒரு மழைநாளில் அந்தப் பெண் அதை அறுத்து சமைத்து விடுகிறாள். இறகு போன்ற தடயங்கள் அவளால் கவனமாக மறைக்கப்படுகின்றன. மாலையில் அண்டைவீட்டுப் பெண் தன் சேவலைக் காணோமே என இவள் வீட்டுக்குத் தேடி வருகிறாள். இவளும் ஆவலுடன் சேர்ந்து காணாமல் போன கோழியைப் பற்றிய கவலையைப் பகிர்ந்து கொள்கிறாள், எவ்வித உறுத்தலுமின்றி. இதுவரை கூட இது சம்பவம்தான். இதை சிறுகதை ஆக்குவது இதற்கு அடுத்து வரும் உரையாடல்தான். கோழி கிடைக்காத சோகத்தில் அண்டை வீட்டுப் பெண் கிளம்பும்போது இவள் சொல்கிறாள் – “எங்க வீட்லயும் இன்னைக்கு கோழிக்கறி கொழம்புதான். ரெண்டு தோசை ஊத்தித் தாரேன். சாப்டுட்டு போ “ என்கிறாள், வெகு இயல்பாய் முகத்தில் எந்த சலனமும் இன்றி. தன்னியல்பின் துளி வஞ்சம் அல்லாது வேறேது இதைச் சொல்ல வைக்கும்?

இதைவிட மிக நுட்பமான இடம் இக்கதையில் உண்டு. இக்கதைசொல்லி  அவ்வீட்டில் உள்ள சிறுவன். அந்த சம்பவத்தை முழுதும் பார்த்த சாட்சி மட்டுமன்றி ருசியும் பார்த்த பங்குதாரர். அவன் சொல்லும் இக்கதையில் வரும் பெண் அவனது அம்மா. கதையின் துவக்கத்தில் இருந்தே அம்மா என்றுதான் சுட்டப்படுகிறது அப்பெண்ணின் பாத்திரம்.

வேட்டை கிட்டத்தட்ட “கடலும், கிழவனும்”தான் என்று விவாதம் செய்த நண்பர்கள் உண்டு. ஆனால் வேட்டை அளவுக்கு தமிழில் இயற்கைக்கும்,மனிதனுக்குமான உறவினைப் புரிய வைத்த கதைகள் ஒரு கை விரல் எண்ணிக்கையில் அடக்கம். இயற்கையின் ஒரு பகுதியாக மனிதன் வாழ்ந்தால் அவனும் இயற்கைக்கு உட்பட்ட போராட்ட இருப்பையே கொள்ள வேண்டும். வேட்டைக்காரன், வேட்டை உயிர் இரண்டுக்குமான நியதிப் பங்கீடு இயற்கையால் செய்யப்பட்டு , சம நிலையில் இயற்கையாலேயே பேணவும் படும். இந்நிலையில் மாசுபடாத ஒரு மனித மனம் வேட்டையில் தன்பங்கு இயற்கையால் சமன் செய்யப்படுகையில் எப்படி உணரும்? ஜப்பான் கிழவன் போன்ற ஒரு கதைமாந்தன் இதுவரை தமிழில் பேசப்பட்டதில்லை.

கதையின் களங்களை பவா அமைக்கும் விதம் அலாதியானது. பாறைக் கற்கள் விரவிய பரம்பு மலைகள், குறுங்காடுகள், வயல்கள், நீரோடைகள் , தோட்டங்கள், கிணறு , குளம் என அவரது கதைக்களங்களை வாசித்துப் பழகியிருந்த எனக்கு முதல்முறையாக செஞ்சியை நெருங்குகையில் அந்த நிலப்பகுதியை  முதல்முறை காணும் ஆர்வம் இருந்ததே தவிர ஆச்சரியம் இல்லை. குறைவான சொற்களில் காட்சியைக் காட்டிவிடும் கதை சொல்லி பவா. பச்சை இருளன் கதையில் அவன் கொண்டுவந்து கட்டப்படும் பண்ணையாரின் வீடு சொல்லப்படும் விதம் வாசித்து அறியவேண்டிய ஒன்று. கிணறு ஒன்று படிப்படியாக அகழப்பட்டு நீர் ஊரும் தருணங்கள் வெறும் எட்டு பக்கங்களுக்குள் சொல்லப்பட்டிருக்கும் என்பதை நீர் கதையை வாசித்தாலாலொழிய நம்ப இயலாது.

பவாவின்படைப்புகளில் உருவாகிவரும் கதைமாந்தர்கள் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு மையக் கதாபாத்திரம் மட்டும் அப்படி அமைந்து வருவதில்லை.  அனைத்து கதைமாந்தர்களுமே தனித்துவம் கொண்டவர்கள்தான். மின்னல் வெட்டில் தோன்றி மறையும் காட்சிகளைப் போல ஒவ்வொரு கதைமாந்தரும் தம் இயல்புகளை சட்டென காட்டி மறைவது வாசிப்பை சுவாரசியமாக்குகிறது. கரடியில் வரும் வாத்தியார், பிடி கதையின் கடைசி நாலு பாராவில் மட்டுமே வந்து படைப்பை உச்சத்தில் கொண்டு நிறுத்தும் அப்பா , படைப்பு முழுவதும் எங்குமே ஒரு வரி கூட பேசாமல் அனைத்துக்கும் காரணபூதமாக நிற்கும் “டொமினிக்”கின் ராணி, படைப்பின் கடைசி இரண்டு வரிகளை மட்டுமே பேசி படைப்பை அதன் இலக்கில் கொண்டு சேர்க்கும் “நீர் “ சக்ரபாணியின் மகள், கதை முழுவதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அனைத்து காரியங்களையும் செய்யும் “வலி” யின் கொறராமன்  – இன்னும் இருக்கிறார்கள். எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னத தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக் கூடியது.

இதே மின்னல் வெட்டில் தான் படிமங்களையும் பவா கையாள்வது. பெரும் மாமரத்தில் ஏறி விளையாடும் அணில் கூட்டத்தைப் பார்க்கும் காட்சியில் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட “கால்” கதையின் திரை நாயகன் நினைத்துக் கொள்கிறான் –இந்த மரம் பட்டுப் போய் விட்டால் இவை என்ன செய்யும்?.  அன்பின் காரணமாக அடைக்கலமளித்த பெண்ணும், குழந்தையும் வல்லடியாய் பிரிக்கப்பட்ட பின் , மறுநாள் காலை டொமினிக் மீண்டு வந்து தன்  முழவோடு எழுவது “ஆணாய்பிறந்தான் “ கிராமத்தில், விசாரணையின் போது அடிபட்ட இடத்தையே மிருதுவாய் தடவிக் கொண்டிருக்கும் ரகோத்தமனின் விரல்கள் “வலி”யில், “நீர்” கதையில் குழந்தைகளின் கைகளில் மாறி மாறி சிக்கும் ஓணான் , “பிரிவு” கதையில் லாவண்யா தொலைதூர கணவரிடம் தொலை பேசுகையில் பிய்த்து போடுவது கசப்பு சுவையின் வடிவான வேம்பின் கொழுந்துகளை, – பவா,கதை எழுதுவதில்லை. கதை சொல்லி.

இன்று பவா செல்லத்துரை கதைசொல்லியாகவும் பெயர் பெற்றவர். சமகால எழுத்தாளர்களையும், மூத்த எழுத்தாளர்களையும், பிற மொழி எழுத்தாளர்களையும் நம்கண்முன்னே நிகழ்த்திக் காட்டும் மாயத் திறன் கொண்டவர் பவா. அவரது கதை சொல்லல் முறை அவராகவே அவரது வாசிப்பில் தோய்ந்து உருவாக்கிக்கொண்டஒரு முறை. தேர்ந்த நிகழ்த்துகலை போல் ஆகிவிட்டது இப்போது.

இலக்கியகருத்தரங்க ஒருங்கிணைப்பு, கதை சொல்லல், கூட்டங்கள் நடத்துதல், உபசரித்தல், கட்டுரைகள் எழுதுதல், பயணங்கள்,ஆவணப்படங்கள்,திரைப்பட பங்களிப்பு என வெவ்வேறு தளங்களில் பவா இயங்கி வந்தாலும், அது அவரது உரிமை என்றாலும் தொடர்ந்து வரும் வாசகன் எனும் முறையில் இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு.

பவாவின் முதன்மை அடையாளம் அவர் ஒரு படைப்பாளி என்பதே. இதுவரை தமிழ் இலக்கியத்தின் மையத்திற்கு வராத நடுநாட்டு கதை சொல்ல இன்று கண்மணி குணசேகரன் உண்டு. அவ்வாறே இன்றுவரை தமிழிலக்கியத்தில் வராத ஆற்காட்டு வாழ்வு இன்னும் பவாவிடம் இருக்கிறது. இன்று அருகி விட்ட ஆனால் மறக்கக்கூடாத வாழ்வினை வாழ்ந்து சென்ற இருளர்களின், குறவர்களின் இனக்குழு வரலாறு பவாவால் எழுதப்பட காத்திருக்கிறது. அவ்வாழ்க்கையை உடனிருந்து கண்டும், கேட்டும், பழகியும் வளர்ந்தவர் பவா.

நவீனதமிழ் இலக்கியத்தில் பின்நவீனத்துவம் தன் பாய்ச்சலை நிகழ்த்தி ஏறக்குறையமுப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் திருப்புமுனையின் விசையாக நின்ற பவாவிடம் அதைக் குறித்து சொல்ல ஏராளம் இருக்கிறது. அது மற்றொரு வகையில் நவீன தமிழிலக்கியத்தின் வரலாறும் தான்.

கொள்கையாளர்களாலும்,கோட்பாட்டாளர்களாலும் நிறைந்தஒரு அரசியல் இயக்க வாழ்வை உடையவர் பவா. அதில் தன்னைப் பலியிட்டோர், பின்வாங்கியோர், பலனடைந்தோர், துரோகித்தோர், புலம்பல்கள், பெருந்தன்மைகள், கண்ணீர், ஏமாற்றம், பொய்மை … எத்தனை கொட்டிக் கிடக்கிறது அவரிடம் சொல்ல.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனத்திரிவோர் வந்து குவியும் ஒரு நகரம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து மாறுவதையும், நான்கு தலைமுறைகளைக் கண்டும் கேட்டும் அங்கேயே இருக்கும் இருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு சொல்லித் தீராத பக்கங்கள் இருப்பது எந்த வாசகனுக்கும் தெரியுமே?

இக்கட்டுரையைப் படிப்பீர்களானால் பவா, அன்புடன் வேண்டிக்கொள்கிறேன், உங்கள் இடத்திற்கு திரும்ப வாருங்கள்.தனித்துவம் பெற்ற எழுத்தாளுமையாக இருந்தும் இத்தனை ஆண்டுகளில் இரு சிறுகதை தொகுப்புகளே என்பது என்போன்ற வாசகர்க்கு போதாது பவா. கட்டுரைத் தொகுப்புகள் எத்தனை வந்தாலும்தான்என்ன? நீங்கள் எழுதும் கட்டுரைகளை எழுத இன்னும் பலர் உண்டு. உங்கள் கதைகளை எழுத உங்களைத் தவிர இன்னொருவர் இல்லை.காட்டின் அரசனென கட்டுகளின்றி திரிய வேண்டிய யானை எத்தனை நாட்களுக்குத்தான் வருவோரை மகிழ்விக்க அம்பாரி ஏற்றி அணிநடை பயில்வது?

 

http://vallinam.com.my/version2/?p=5637

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பவா செல்லத்துரையின் கதைகள் நான் இதுவரை வாசித்ததில்லை.....தேடிபார்ப்பேன்.கிடைத்தால் வாசிக்கலாம். நன்றி கிருபன்.....!   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரை இன்றுதான் அறிகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவா செல்லத்துரையின் கதைகள் இணையத்தில் கிடைக்காது என்றுதான் நினைக்கின்றேன்.

ஒரு கதை அண்மையில் வாசித்திருந்தேன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.