Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருந்து!

Featured Replies

 
விருந்து!
 
 
 
E_1536917073.jpeg
 
 
 

குத்து விளக்கு வடிவில் சீரியல் செட், மஞ்சள், பச்சை வண்ணத்தை சிதறிக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் வணக்கம் சொல்லும் வளையல் அணிந்த பெண் கைகள் இரண்டு அழகாய் ஜொலித்துக் கொண்டு இருந்தன.
இரண்டு புறமும் அழகாய், அடர்த்தியான வாழை மரங்கள் கட்டப்பட்டு இருக்க, அதன் உச்சியில் தென்னை குருத்து கட்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நடப்பட்ட பந்தக்காலின் உச்சியில், மஞ்சள் துணியில் நவதானிய மூட்டை புஷ்டியாக காட்சி தந்தது. வாசல் முழுக்க தென்னை தடுக்கு வேயப்பட்டு இருக்க, அந்த விசாலமான இடத்தில், 'இன்ஸ்டென்ட்' நட்பு கிடைத்த சின்ன குழந்தைகள் ஓடிப்பிடித்தும், ஒளிந்தும் விளையாடிக் கொண்டு இருந்தன.
வாசலில் மடக்கு நாற்காலியில் அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கதிர், வாசலில் வந்து நின்ற கால் டாக்சியை பார்த்து மிகவும் உற்சாகமானான்.


''டேய் மச்சான்...'' கத்தியபடி ரவி, பாலு, சிவா, அனு மற்றும் சவிதா என்று ஒரு பட்டாளமே என்ட்ரி ஆனது. முன் சென்று அவர்களை அழைத்து வந்தான், கதிர்.
''என்னடா மாப்பிள்ளை... இப்படி சர்க்கஸ் குரங்கு மாதிரி உட்கார்ந்து இருக்க... விடிஞ்சா உனக்கு கல்யாணம்டா,'' - அவன் விலாவில் இடித்தான், பாலு.
''தோடா... இதைச் சொல்லத் தான் சென்னையில இருந்து இந்த பட்டிக்காட்டுக்கு இவரு டிராவல் பண்ணி வந்திருக்காரு...'' - தப்பாய் சொல்லி விட்டதாய் எண்ணி உதடு கடித்தாள், அனு.
''ஹலோ... அனு... இதொண்ணும் பட்டிக்காடு கிடையாது. என்ன, நம்ம சென்னை மாதிரி மெட்ரோ பாலிடன் சிட்டி இல்லாட்டியும், இது தாலுகா தான். நீ கேள்விபட்டதில்ல, ஏ சென்ட்டர், பி சென்ட்டர், சி சென்ட்டர்ன்னு. சென்னை, ஏ சென்ட்டர்னா, இந்த ஊரு, பி சென்ட்டர் அவ்வளவு தான்...'' கதிர் பேசப்பேச மற்றவர்கள் கோரசாய் கத்தினர்.
''பாருடா... இப்பயே மாமனார் ஊரை விட்டு கொடுக்காம பேசுறதை... சப்பை கட்டு கட்டறான் மாப்பிள்ளை...''
''ஏய், சும்மா வம்பு பண்ணாதீங்கடா... இங்க எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்க... நீங்க சீக்கிரம் வந்திருந்தா நாம ஊரை சுத்தி பார்த்து இருக்கலாம்.''
அதற்குள், அனு கண்களை விரித்து, அந்த இடத்தைப் பார்த்தாள்.
''கதிர்... இது, கல்யாண மண்டபமா... இல்ல வீடாடா... இவ்வளவு பெரிசா இருக்கு?''
வாய்விட்டு சிரித்தான் கதிர்.


''அனு... இது பொண்ணோட வீடு... இங்கயெல்லாம் மண்டபத்துல வச்சு கல்யாணம் பண்ணா மரியாதை இல்லை தெரியுமா... ஏன்னா, எல்லார் வீடும் மண்டபத்திற்கு நிகராத்தான் இருக்கும். வீடில்லாதவங்க தான் சத்திரத்துல வச்சு கல்யாணம் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க இங்க.''
''சத்திரம்னா?''
''மேரேஜ் ஹால்... நீ ரொம்பவே பந்தா பண்ற சவிதா... என்னவோ, அமெரிக்கா - சவுத் ஆப்பிரிக்கா கொலாபிரேஷன்ல பிறந்தவ மாதிரி,'' அனு சொல்ல, சிரித்தனர்.
''டேய் ஜொள்ளு மன்னா... நாளைக்குத்தானேடா கல்யாணம்... இப்பயே இங்க வந்து உட்கார்ந்து எதுக்குடா வாட்ச்மேன் வேலை பாக்குற?''
''டேய் லுாசு... எங்க மாமனாருக்கு, ரெண்டு பையன், ஒரே பொண்ணு. அதனால, எங்க கல்யாணத்தை ரொம்ப தடபுடலா நடத்திட்டு இருக்காரு... உள்ளூர்ல இருக்கிற எங்க சொந்தக்காரங்களைக் கூட கூட்டிவந்து இங்க தங்க வச்சு விருந்து போட்டுட்டு இருக்கார்டா... மாடி முழுக்க நாம தங்கறதுக்குத் தான். சாப்பிட்டு சாப்பிட்டு அஜீரணமா போச்சு... வேளைக்கு நாலு சோடா குடிக்கறேன்னா பாருங்க.''
''டேய் மச்சான்... இதை, நீ நம்புற... பொண்ணை, 'சைட்' அடிக்கத்தான் இப்பயே, இவன் இங்க, 'டேரா' போட்டிருக்கான்... நீ என்னடா நினைக்கிற, பாலு.''
''நிஜத்துல நம்ம பார்ட்டி கொஞ்சம், 'ஜொள்' தான். ஆனாலும், 'இந்த வீட்டில் அதெல்லாம், 'ஒர்க்-அவுட்' ஆகும்ன்னு தோணல... ஏன்னா, இவன், பொண்ணை யாருக்கும் தெரியாம பாக்கறேன்னு போய் எங்கயாச்சும் மாட்டிட்டு வழி தெரியாம முழிச்சா, என்ன பண்றது சொல்லு. அப்புறம் காலையில தாலி கட்டற நேரம் வந்திருச்சு, மாப்பிள்ளை எங்கிருந்தாலும் வரவும்...' அப்படின்னு அறிவிப்பு செய்வாங்க,'' அவன் இப்படி சொல்ல... அங்கே, ஆனந்த தீ பற்றிக் கொண்டு சந்தோஷ பொறி பறந்தது.
''பீப்... பீ... பீப்... பீ...'' அசல் நாதஸ்வர சத்தம் சரியாய் ஒத்துழைக்காத சீவளி வழியாக பிரதேசம் முழுக்க கல்யாண சேதியை சொன்னது.
விடிகாலையிலே எழுந்து, குளித்து முடித்து, பட்டு வேட்டி - சட்டையுடன் தயாராகி இருந்தான் கதிர். நுனி நாக்கு ஆங்கிலமும், நாகரிகத்தின் வரம்பு நிலையைக் கடந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருந்தான். ஐந்து இலக்க உச்சத்தில் சம்பளம். ஆனாலும், பழைய பண்பும், இயல்பும் மாறாதவன்.
அப்பா, தாத்தா விருப்பப்படி, அவர்கள் ஊரின் பெரும்புள்ளி மகளான சீதாவை, முறைப்படி பார்த்து, அவளுடைய அழகில் மதிமயங்கி, திருமணம் முடிக்க காத்திருந்தான்.
காலையில், உறவினர் மற்றும் நண்பர்கள் என்று பெருங்கூட்டம் சாப்பிட்டு முடித்திருந்தது.


சீதாவின் அப்பா மாணிக்கம், தன்னுடைய பண பலத்தை, உணவு அயிட்டங்களின் எண்ணிக்கையில் காட்டி இருந்தார். இதெல்லாம் பார்க்க பார்க்க, ரொம்பவும் புதிதாக இருந்தது அனுவிற்கும், சவிதாவிற்கும். 'பபே சிஸ்டமும்' வாய்க்குள் நுழையாத பேருள்ள பண்டமும், சென்னையில் பார்த்தவர்களுக்கு, ஆறு வகை இட்லியும், நான்கு வகை இடியாப்பமும், எட்டு வகை தோசையும் ஆச்சரியத்தை தந்தது.
வாழைப்பழ அளவிற்கு மைசூர் பாகையும், அப்பளம் அளவில் ஜாங்கிரியையும் பார்த்து மிரண்டு போயினர்.
''ஐ கான்ட் ஈட்...'' இப்படியும் அப்படியும் நெளிந்தபடி, திருவிழா கூட்டத்தில் தலை மழித்த கதையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொட்டு வைத்து, அனுவும், சவிதாவும் இலையை மூட, தள்ளி அமர்ந்திருந்த கதிர், முகம் சுருங்கினான்.
பொதுவாகவே, உணவை வீணாக்குவோர் மீது அவனுக்கு பெரும் கோபம் வரும். அவன் கடிந்து கொள்ள வாய் திறக்கும் முன், பெண்ணின் பெரியப்பாவும், அப்பாவும் அங்கு வந்து நின்றனர்.
''என்ன தங்கச்சிமார்களா... சாப்பாட்டை சாப்பிடாம அப்படியே மூடி வச்சிட்டீங்க... அதுல எதுவும் குறையா?'' என்றனர் பதறிப்போய்.
''ஐயோ... அங்கிள், அயிட்டம் எல்லாம் சூப்பரா இருக்கு... சொல்லப் போனா, நாங்க இது மாதிரி பார்த்தது கூடயில்ல... ஆனா, இத்தனையும் சாப்பிட எங்ககிட்டத்தான் வயிறு இல்ல.''


அவர்கள் உதடு பிதுக்கி சிரிக்க, அப்போதுதான் பெரியப்பாவும், அப்பாவும் திருப்தி அடைந்தனர்.
''அதான பார்த்தேன்... ஒவ்வொரு அயிட்டத்திற்கும் ஒரு ஜாம்பவானை கூட்டியாந்துல பண்ணி இருக்கோம்... எப்படி பிடிக்காம போகும்கறேன்... நீங்க இவ்வளவு துாரம் வந்து ஒருவாய் சாப்பிட்டு போனாலே, எங்களுக்கு ரொம்ப திருப்தி தான். ஆனா, கோவிச்சுட்டோ, இல்லை வேறு எதனாலயோ சாப்பிடாம போனா, உண்மையில ரொம்பவும் வருத்தப்படுவோம்,'' என்று சொல்ல, அவர்கள் வாயெல்லாம் பல்லாக, சிரித்தனர்.
காலை சிற்றுண்டி முடிந்ததுமே, முகூர்த்த வேலை வந்துவிட, சொந்தங்கள் புடைசூழ, அட்சதை துாவி அனைவரும் ஆனந்தக் கண்ணீர் விட, சீதாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான், கதிர்.
வாழ்த்துகள், பரிசுகள், அரட்டை, பேச்சு என்று அடுத்த இரண்டு மணி நேரம் ஓடிப்போக, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் போஸ் கொடுத்து அலுத்துப் போய், வாசலில் இருந்த மடக்கு நாற்காலியில் சரிந்திருந்தான், கதிர். உள்ளே, பந்தி போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.
முன்பக்கம் வெறிச்சோடியும், ஆங்காங்கே குழுக்களாகவும் பிரிந்து, அரட்டை அடித்தபடி உறவினர்கள் இருக்க, தயக்கமாக உள்ளே நுழைந்தான், அவன்.
வெளிரிய கருப்பில் பேன்ட்டும், நீல நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தான். கல்யாணத்திற்கு அணிந்து வரும் உடை போல் இல்லை பார்ப்பதற்கு.
''யாருங்க வேணும்?'' என்றான் நிமிர்ந்து.
லேசாய் தடுமாறியவன், பின் தயங்கியபடி சொன்னான், ''நான் மாப்பிள்ளை கதிரோட ப்ரெண்ட்!''
''நாந்தான் அந்த கதிர்... நீங்க, யாருன்னு சரியா தெரியலயே.''
''நான் மாலி, இந்த ஊர் முத்தையா ஸ்கூல்ல ஏழாவது வரை ஒண்ணா படிச்சோம்... என்னை கூட நீங்க... மாலின்னு கூப்பிடாம, கோமாளின்னு கூப்பிடுவீங்க நியாபகம் இருக்கா?'' அவன் தயக்கமாய் வார்த்தைகளைக் கோர்த்தான்.
அவன் கண்களை உற்றுப் பார்த்தான் கதிர்.


''அப்படியா...''
''ஆமாம் கதிரு... இப்ப நான் இங்க இல்ல, பக்கத்து ஊருக்கு போயிட்டேன்... இந்த பக்கம் வரும்போது போர்டு பார்த்தேன். அது, நீயா இருக்குமோன்னு நினைச்சு வந்தேன். பார்த்துட்டேன்,'' அவன் பார்வை, பந்தி நடைபெற்ற இடத்திலேயே நிலைத்திருந்தது. அவன் தொண்டை குழியின் நரம்புகள் ஏறி இறங்கி, ஆசையை வெளிப்படுத்தியது.
பக்கத்தில் வந்து, அவன் முதுகில் தட்டினான், கதிர்.
''சாரி மாலி... நான் மறந்திட்டேன்... அதனாலயென்ன, இப்போ நியாபக படுத்திக்கறேன்... நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்... போய் முதல்ல சாப்பிடு,'' என்றான், அவனுடைய கைகளை குலுக்கி.
அவன் கண்களில் நிம்மதி பெருமூச்சு.
''முன்னமே தயாரா வந்திருந்தா, உனக்கு ஏதாவது கொண்டு வந்திருப்பேன்... எதுவும் குடுக்காம எப்படிடா சாப்பிடறது?'' என்றான் தயக்கமாக. ஆனாலும், அவன் கண்கள், இன்னும் கூட பந்தி கூடத்திலே நிலைத்து தான் இருந்தது.
''ஏய்... அதனால என்னடா... நீ என் ப்ரெண்ட்... அதுவும், இத்தனை ஆண்டுக்கு பின் நீ என்னை பார்க்க வந்ததே பெரிய, 'கிப்ட்!' முதல்ல சாப்பிடு... அப்பத்தான் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.''
அவனை அன்போடு தோளில் தட்டி அனுப்பி வைக்க, அதற்குள் முதல் பந்தி முடித்து வந்தவர்கள், இவனிடம் கை கொடுத்து வாழ்த்து சொல்ல வர, கொஞ்சம் பிசியானான்.
''யாருப்பா நீ?'' இலை போட்டவன், சந்தேகமாய் கேட்டான்.
''யாரா... நான் கதிரோட ப்ரெண்டு பா... நானும், அவனும் நம்மூர், முத்தையா ஸ்கூல்ல ஏழாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம்... அப்பயே பய சூட்டிகையாத்தான் இருப்பான்... செவசெவன்னு, சேட் வீட்டு புள்ளை மாதிரி அத்தனை அழகா இருப்பான்... நட்பை மறக்காம இருக்கான் பாரு... அதான் பெரிய விஷயம்,'' மாலி சத்தமாய் சொல்லி சிரித்தான்.


இந்த சத்தமும், பேச்சும், அவனுக்கு கதிருடன் இருக்கும் நெருக்கத்தை மற்றவர்களுக்கு சொல்லட்டும் என்பது போல் இருந்தது.
இலை போட்டவன் நகர, மல்லிகைப் பூ சோறும், எட்டு வகை கறியும், ஆறு வகை இனிப்பும், ஊறுகாய் மற்றும் அப்பளம் என்று இலையே மறையும்படி பரிமாறப்பட்டது.
மாலி, கண்களை மூடி காத்திருந்தான், அத்தனை பதார்த்தங்களாலும் இலை நிறையட்டும் என்று. அவனுக்கு ரொம்ப நாளாய் இந்த ஆசை இருக்கிறது. இலை நிறைய சாப்பாட்டை போட்டு, அதற்கு முன் அமர்ந்து வயிறார சாப்பிட வேண்டும் என்று.
நிறைந்த இலையை கண்களை விரித்து பார்த்தான். சாப்பாட்டை பார்க்கும்போது, மனசு குதுாகலப்பட்டது. மல்லிகைப் பூ சோற்றில், தங்கத்தை வார்த்த மாதிரி சாம்பாரை ஊற்றியதும், ஆவலாய் பிசைந்து அள்ளி வாயில் வைக்கப் போனான்...
தாடை வரை உயர்ந்த கையை, சட்டென்று ஒரு கை பற்ற, அன்னத்திற்கு திறந்த வாயை மூட மறந்து அண்ணாந்து பார்த்தான்... பெண்ணுடைய அப்பா, பெரியப்பா, அண்ணன் என்று ஒரு கூட்டமே நின்றது.
''தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, சொந்தம் பந்தம்ன்னு ஒரு கூட்டமே காத்திருக்கு சாப்பிட... நீ யாரு, ரெண்டாம் பந்தியில,'' பெண்ணின் அப்பா சந்தேகமாய் கேட்டார்.
''நான் மாலி... மாப்பிள்ளையோட ப்ரெண்ட்...'' வார்த்தைகள் அடித் தொண்டையில் சிக்கிக் கொண்டன.
''எந்த ஊரு?''
''இந்த ஊர் தான்... முத்தையா ஸ்கூல்ல, ஏழாவது வரை ஒண்ணா படிச்சோம்,'' அவன் எச்சில் கூட்டி சொல்ல...
''பொய்யா சொல்ற?'' அவன் பொடறியில் கை வைத்து தள்ளி வந்தனர்.
''ஏன்டா... எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இந்த மாதிரி... மாப்பிள்ளை இந்த ஊர்ன்னு தெரிஞ்சுகிட்டு கூடப் படிச்சேன், விளையாடினேன்னு சொல்லிட்டு வர்றீங்க...
''அவர் இந்த ஊர்னாலும், படிச்சதெல்லாம் இங்க இல்லைங்கற அடிப்படை விஷயம் கூடத் தெரியாமயா நாங்க பொண்ணு குடுக்கறோம்ன்னு நீ நினைச்சுட்ட... நித்தமும் இது மாதிரியான திருட்டு கும்பல் பத்தி நாம, 'டிவி'யிலயும் பேப்பர்லயும் எத்தனை பாக்குறோம்... அப்படி இருந்தும், இவன் எப்படி உள்ள வந்தான்... யார் இவனை உள்ளே விட்டது?'' பெண்ணின் அப்பா சத்தம் போட்டதில், அந்த இடமே பரபரப்பானது.
சத்தம் கேட்டு, கதிரும் அந்த இடத்திற்கு விரைந்தான். மாலியும், அவனுடைய குனிந்த தலையும், அவனை சுற்றி இருந்த கூட்டமும், நடந்ததை வார்த்தையின்றி விளக்க, அவனுடைய இதயத்தில் இரக்கம் சுரந்தது.


''என்னாச்சு மாமா...''
''மாப்பிள்ளை... உங்க ப்ரெண்டுன்னு சொல்லிட்டு, இவன் பந்தியில வந்து உட்கார்ந்துட்டு இருக்கான். காலம் கெட்டு கிடக்கு... இவனை மாதிரி ஆளுங்க தான் முழிச்சிருக்கும் போதே கழுத்தை அறுக்கறவங்க,'' பெண்ணின் பெரியப்பா சத்தமிட, மாலியின் கண்களில் அனிச்சையாக கண்ணீர்.
''ஐயா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க... எனக்கு பக்கத்து ஊரு... ரொம்ப வறுமை... உழைச்சாத்தான் சாப்பாடுன்னு எனக்கும் தெரியும்... ஆனா, உழைக்கணும்ன்னா கூட உடம்புல தெம்பு இல்ல... சாப்பிட்டு மூணு நாளாச்சு...
''இப்படி சொன்னதும், ஏதோ மூணு நாளாத்தான் நான் வறுமையில இருக்கிறதா நினைச்சிடாதீங்க... மூணு நாளைக்கு முன், யாரோ ஒருத்தர் புண்ணியத்துல வழியில அன்னதானம் சாப்பிட்டேன்... அதுக்கு பிறகு பருக்கை சோறு கூட வயித்துல விழல...
''என் நண்பர்கள் எல்லாம் இப்படி கல்யாண வீடுகள்ல ஏதாவது பொய்யை சொல்லிட்டு, உள்ள போய் நல்லா சாப்பிட்டதா சொல்வாங்க... எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை...


''இந்த பக்கம் வந்தேன், குப்பை தொட்டியில நிறைய வீணான சாப்பாடு, இனிப்புன்னு பார்த்ததும், கொஞ்சம் மனசு தடுமாறிட்டேன்... வயிறார சாப்பிட்டா, அந்த தெம்புல ரெண்டு நாள் அலையலாம்ன்னு நினைச்சுத் தான் பொய் சொல்லிட்டேன்... மன்னிச்சுடுங்க,'' அவன் தலையை உயர்த்தாமலே கையை மட்டும் உயர்த்தி மன்னிப்பு கோர, எல்லாரும் ஒரு கணம் குற்ற உணர்வில் தலை குனிந்து நின்றனர்.
''நாங்களும் மோசமானவங்க இல்ல... நல்லது, கெட்டது பேப்பர்ல படிக்கிறோம்... அதனால தான் யாரைப் பார்த்தாலும், எச்சரிக்கையா இருக்க வேண்டி இருக்கு... அது எங்க பக்க நியாயம்... சாப்பிட்டு போறப்ப, எதையும் துாக்கிட்டு போயிட்டா என்ன பண்றது... அது சரி, இன்னும் நிறைய பேர் வேண்டியவங்க சாப்பிட இருக்காங்க... நீ காத்திருந்து, கடைசி பந்தியில சாப்பிட வேண்டியது தானே,'' என்றார், பெண்ணின் அப்பா.
''எச்சரிக்கையா இருக்கிறதா சொல்லிட்டு, நாம நம்ம இதயத்தை இழந்துட்டே இருக்கோம் மாமா... அவர் மேல சந்தேகமாவே இருந்தாலும், அவர் சாப்பிடும் வரை காத்திருந்திருக்கலாமே... தேவை தீர்ந்ததும், மனுஷன் உட்காராத இடம் இந்த சாப்பாட்டு மேஜை ஒண்ணு தான்... அந்த இடத்தில ஒருத்தன் வந்து ஆவலா உட்கார்ந்து இருக்கான்னா, அவனுடைய பசி எத்தனை கொடியது...


''அவரை உள்ள அனுப்பினது நான் தான்... எனக்கு அப்பயே தெரியும், அவர் பொய் சொல்றார்ன்னு... அவர் கண்ணுல இருந்த பசி ஏக்கம், என்னை ரொம்ப கஷ்டப்படுத்துச்சு... அதான் உள்ள அனுப்பினேன்... காலையில, என்னோட பட்டணத்து நண்பர்கள், சாப்பிடாம வீணாக்குன உணவு, உங்க பெருமைன்னு சொன்னீங்க... இன்னைக்கு, இந்த மாலியோட இலையில சாப்பிடாம வீணான உணவு, உங்க பெருமை இல்ல சிறுமை.''
''மாப்பிள்ளை... கோவப்படாதீங்க...''
''கோபம் இல்ல மாமா... வருத்தப்படறேன்... பணக்காரன் தட்டுல நாம பரிமாறுற பதார்த்தம் நம்முடைய வசதிக்கான அங்கீகாரம்ன்னு நாம நினைக்கிறோம்... ஏழையோட அங்கீகாரம் நமக்கு தேவையில்லையே... ஆனா, நிஜத்துல விருந்து ஏழைக்குத்தான் வரம்... பணக்காரனுக்கு அது வெறும் அஜீரணம் தான்,'' சொல்லிவிட்டு திரும்பி பார்த்தான். மாலி இல்லை.


''மாலி... மாலி...'' வாசல் வரை எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்.
''அவர் அப்பயே போயிட்டார்டா,'' பக்கத்தில் வந்து சொன்னான், பாலு.
விரித்திருந்த இலையும், பரிமாறிய உணவும் கேட்பாரற்றுக் கிடக்க, அதை ருசிக்க காத்திருந்த நாவும், வயிறும் அங்கே இல்லை.
இலையை கீழிருந்து மேலாக மாற்றி மூடினான். கண்கள் பனித்தது.
''இந்த இலையில இருக்கற உங்க பணப் பெருமையை வழக்கம் போல, குப்பையில போட்ருங்க,'' என்றபடி நடந்தான், கதிர்.
''யாருப்பா அது... பந்தி நடக்கட்டும்... என்ன, எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்க... சீதாவும் வந்திருச்சு... மாப்பிள்ளை, வந்து இப்படி உட்காருங்க... நானே உங்களுக்கு பரிமாறேன்,'' சூழலை இளக வைக்க, பேச்சை மாற்றி எல்லாரையும் உற்சாகப்படுத்த முற்பட்டார், பெண்ணின் அப்பா.


''இல்ல மாமா... இத்தனை பேர் சாப்பிடற என்னோட கல்யாண விருந்தை, நான் சாப்பிட மாட்டேன். அதுதான் உங்களுக்கு மட்டுமில்ல, இங்க இருக்கிற எல்லாருக்குமே பாடம். உண்மையான விருந்து, பசியோட இருக்கறவனுக்குத்தான்னு இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கணும்... அவங்கவங்க வீடுகள்ல விசேஷம் நடக்கும் போதாவது இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காம, இந்த நிகழ்ச்சி பாடமா அமையணும்... இப்போ, நான் சாப்பிட்டாலும், இந்த சாப்பாடு எனக்கு இனிக்காது,'' என்றான், உறுதியாக.
''நான்னு சொல்லாதீங்க... நாங்க சாப்பிட மாட்டோம்ன்னு சொல்லுங்க,'' அப்பாவின் புறம் நின்ற சீதா, கதிரை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
எல்லாரும் தவிப்பாய் பார்க்க, இருவரும் பந்தி நடக்கும் இடத்தை விட்டு வெளியேறினர்.
தெருக்கோடி வரை சென்று, மாலியை தேடி, தோற்று தளர்வாய் திரும்பியவன், குப்பை தொட்டியை திரும்பி பார்த்தான். வீணான பதார்த்தங்கள், வேதனையாய் இவனைப் பார்த்து சிரித்தன.

 

எஸ்.மானஸா

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44410&ncat=2

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீதா உஷாராகி விட்டாள், கதிரை இப்படியே விட்டால்  இரவைக்கும் தான் பட்டினியாய் இருக்க வேண்டி வரும் என்று அவளுக்கு தெரியாதா என்ன.....!  ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.