Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணியம்: தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!- குறள் ஆய்வு-7, பகுதி-3

Featured Replies

பெண்ணியம்: தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!- குறள் ஆய்வு-7, பகுதி-3

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

சமர்ப்பணம்!

திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) எழுதிய நூலுக்கு மறுமொழியாக நான் யாழ் இணைய இதழில் எழுதிவரும் 'திருக்குறள் ஆய்வு' தொடர்கட்டுரைகளில் ஒன்றான "பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் கட்டுரைக்கு,  யாழ் இணையதளத்தில் அறிவார்ந்த பங்களிப்பைப் பின்னூட்டமாக நல்கிய திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

எதற்காக என்று கேட்க மாட்டீர்களா? "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" என்று திருவள்ளுவர் கூறவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று  என்னைத் துளைத்தெடுத்த பெண்ணியவாதிகளின் நியாயமான கேள்வியை வசதியாக ஓரம் கட்டிவிட்டே "பெய்யெனப் பெய்யும் மழை!" என்ற ஒற்றைக் கருத்தை மையமாகக் கொண்டே முந்தைய கட்டுரை கட்டமைக்கப்பட்டது.

சுவி அவர்களின் கவித்துவமான பின்னூட்டத்தைப் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளை,  திருவாளர் சோமசுந்தரனார் அவர்கள்,  திருவாளர் சுவியின் "அகத்துறை  உரைநடைக் கவிதை"க்கு, அருமையான "சீவக சிந்தாமணி" பார்வையில் உரையெழுதி பின்னூட்டம் இட்டாரோ இல்லையோ, நான் ஓரம் கட்டி வைத்திருந்த "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" கேள்விக்கான விடையின் கரு உதயமாகி,  நன்கு வளர்ந்து இப்போது முழுக்கட்டுரையாகிவிட்டது. 

 இத் திருக்குறளுக்கான மறைதிறவை (ரகசியத்தை) உணராமல்,  பல்லாண்டுகளாகப் பெண்ணியவாதிகளால் 'கொலைவெறி வெறுப்புடன்' இக்குறள் பார்க்கப்பட்ட வரலாற்றுப் பிழையை நேர் செய்யும் விடை கிடைத்துவிட்டது. நன்றி.

இத்தொடரின் இக்கட்டுரை  திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் சமர்ப்பணம்!

'தெய்வம் தொழாள்' என்பதன் மறைபொருள் என்ன?

'கற்றதனால் ஆயபயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்!' என்று இரண்டாம் குறளிலேயே இறைவணக்கம் செய்யாதாரை இடித்துரைத்த வள்ளுவர், எதன்பொருட்டு "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்" என்ற தொடரைப் மனைவிக்குரிய சிறப்புப் பண்பாகத் தரவேண்டும்?

இல்லறத்துக்குரிய பெண்  தெய்வத்தைத் தொழமாட்டாள் என்று வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தேவையென்ன? இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறிப்பிட்டது எல்லாம் வல்ல இறைவனை அன்று என்பதும், வேறு எதையோ மறைபொருளாகச் சொல்கிறார் என்பதும் மனதில்பட்டது; எதைக் குறிக்க வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்னும் மறைபொருளால் குறிப்பிட்டார் என்ற  வினாவிற்கான விடை காணாமல், மனம் நிலைகொள்ளவில்லை.  

தமிழர் பண்பாட்டைச் சீர்கெடுக்க வந்த ஆரிய மணச்சடங்கியல்!

வாழ்க்கைத்துணை என்னும் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், 'மறை'வாகச் சுட்டப்பட்ட இத்தொடருக்கான மெய்ப்பொருள், வள்ளுவர் காலத்திலேயே தமிழரின் வாழ்வியலில் ஊடுருவத் தொடங்கிவிட்ட ஆரியவியலின் திருமணச் சடங்கியல் முறைகளின் மூலம் நேர்ந்துவிட்ட ஏதேனும் பண்பாட்டுச் சீர்கேடுகள் குறித்து இருக்கலாமோ என்ற ஐயம் மனதில் உதயமானது. (நன்றி:சுவி)

நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், வேதாந்தம், மனுசாத்திரம் உள்ளிட்ட ஆரிய சாத்திரங்களின் கரைகண்டவரும், காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா அவர்களின் அணுக்கத் தொண்டருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய "எங்கே போகிறது இந்துமதம்" என்னும் நூலில் ஆரியவேதத் திருமண மந்திரங்களின் கீழ்த்தரமான பொருளைக் குறித்து  மிக விரிவாக எழுதியுள்ளது நினைவுக்கு வர, அந்நூலை மறுவாசிப்பு செய்தேன்.  

ஆரியவியல் திருமணச் சடங்குகள் குறித்த  சமற்கிருத நூற்களில் உள்ள ஆரியவியல் திருமணச் சடங்கியலில் உள்ள ஒரு சமற்கிருத மந்திரம் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.

மணமகளுக்கு நான்கு தெய்வங்களைத் திருமணம் செய்விக்கும் ஆரியமந்திரம்!

திருமணச் சடங்கின்போது மணப்பெண்ணைத் தூய்மைப்படுத்த(?!?) ஆரியப் பிராமணப் புரோஹிதன் கூறும் ஒரு மந்திரம்:.

"சோமஹ ப்ரதமோ

விவிதே கந்தர்வ

விவிதே உத்ரஹ

த்ருதியோ அக்னிஸ்டே

பதிஸ தூயஸ்தே

மனுஷ்ய ஜாஹ" - ரிக்வேதம் -  10.85.40.41.

மணப்பெண்ணான இவளை (புனிதப்படுத்துவதற்காக), திருமணத்தின் முதலாம் நாள் இரவு சோமன் (சந்திரன் என்னும் தெய்வமும்), இரண்டாம் நாள் இரவு கந்தர்வன் (என்னும் தெய்வமும்), மூன்றாம் நாள் இரவு உத்திர தேவன் (என்னும் தெய்வமும்), நான்காம் நாள் இரவு அக்னிதேவன் (என்னும் தெய்வமும்) மணந்து கலந்த பிறகு, ஐந்தாம் நாள் இரவு இவளை மணந்தவனான கணவன் கலக்க வேண்டும் என்பது இம்மந்திரத்தின் விரிவான பொருள்.

இம்மந்திரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடைசி வரியான "மனுஷ்ய ஜாஹ" என்பதாகும். இக்கடைசி வரிக்கு, "இம்மந்திரத்தில் குறிப்பிட்ட தெய்வங்களெல்லாம், இரவு நேரத்தில், மனிதவடிவில்(பிராமண வடிவில் என்று வாசிக்கவும்) மணப்பெண் தங்கியிருக்கும் தனி அறைக்கு வருவார்கள்." என்று இம்மந்திரங்களுக்கு விளக்கம் தருவதுதான் பதுதான்  ஆரியப்பிராமணத் திருமணச் சடங்குகளின் முறைபிறழ்ந்த கயமைத்தனத்தின் உச்சகட்டமாகும்.

இத்தகைய சடங்கின் மூலம்,  நான்கு ஆரியப் பிராமணர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்நான்கு நாட்களில் இரவுப் பொழுதில் 'தெய்வம்' என்னும் பெயரில் வருவதால், அவர்களை மணப்பெண்  'தொழ(?!)வேண்டும்' (ஆரியப் பிராமணனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்கான மறுப்புக் குறியீட்டை மனதில் கொண்டே இங்கு 'தெய்வம் தொழாள்' என்று வள்ளுவர் குறித்திருக்க வேண்டும்) என்ற கொடுவழக்கை திருமணச் சடங்கு என்ற பெயரால், மணப்பெண்ணின் 'நிறை'யை நான்கு ஆரியப் பிராமணர்கள் சூறையாடுவர்.

மணமகளை விட்டு விலகுமாறு கந்தர்வனிடம் கணவன் கெஞ்சும் மந்திரங்கள்!

இம்மந்திரத்துக்குச் சப்பைக்கட்டு கட்டும் ஆரிய அடிவருடித் தமிழர்கள் சிலர் 'பதி' என்றது  கணவன் என்ற பொருளில் சொல்லப்படுவது இல்லை; பதி என்றால் பாதுகாவலன் என்பதே பொருள் என்பார்கள். அப்படியானால்,

"உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா

அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ"

விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுவாயாக!  உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனான என்னுடன் சேர்த்து வைப்பாயாக! என்ற மந்திரத்துக்குப் பொருள்தான் என்ன?

"உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே

அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி"

"இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!" என்னும் மந்திரத்தின் பொருள்தான் என்ன?

பித்தலாட்டப் பொருள் சொல்லும் ஆரியர்கள்!

இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! ஆரியப்பிராமணர்கள் சப்பைக்கட்டு கட்டுவதுபோல, இந்தத் தேவர்கள் மணமகளின் தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலர்களாக இருந்திருந்தால், இவர்களுக்கு மணப்பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?

ஆரியத் தெய்வங்கள் பிராமணர்களின் உருவில் தோன்றுவார்களாம்!

சோமன், அக்னி, கந்தர்வன் போன்ற தெய்வங்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட இழிவானது, மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் ஆரியப்பிராமணனுக்கு மனைவியாக்கி, இத்தனை கயமைத்தனத்துக்கும் மணமகனின் சம்மதம் பெற்று என்றெல்லாம் ஆரியப் பிராமணர்களின் வேதமந்திரங்கள் முழங்கப்படுகின்றன.  இம்மந்திரங்களில் சொல்லப்படும் வேத தெய்வங்கள் அனைவரும் ஆரியப்பிராமணர்கள் உருவில் வருவார்கள் என்னும் பித்தலாட்டம் வேறு!

தமிழ் மணமகள் "தெய்வம் தொழாள்!" என்று வள்ளுவர் கூறியதன் காரணம் இதுதான்!

இப்பழக்கத்தைக் கண்டு கொதித்துப்போன திருவள்ளுவர், மணமகளான தமிழ்ப் பெண், இத்தகைய ஆரியப் பிராமணத் 'தெய்வம் தொழாள்(புணராள்)"; அவள் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட 'கொழுநன் (மட்டுமே) தொழுதெழுவாள்'; கணவனுக்கு மனைவியாகக் கிடைத்த இத்தகைய நிறையுடைய பெண்ணரசி, பயன் கருதாது 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற அன்பின் திருவுருவம் (பெய்யெனப் பெய்யும் மழை)  என்று போற்றுகின்றார் வள்ளுவர்.

தெய்வங்களின் பெயரால் நம் பெண்களின் 'நிறை' கெடுக்கும் ஆரியவியல் சடங்கியல்களை உடனே துரத்துங்கள் என்று வள்ளுவர் மறைமொழியாகச் சொன்னதுதான்  "தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!" என்னும் மறைபொருள் பொதிந்த மந்திரமாகும்! அவ்வாறு (தங்களைத்) "தெய்வம் (என்று பொய்யுரைக்கும் ஆரியப் பிராமணர்களைத்) தொழாள்! (தன்னை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொண்ட)கொழுநன் தொழுதெழுவாள்! "அத்தகைய பெண்ணே  தன் எல்லையற்ற அன்பை கொழுநனுக்கு வரையாது வழங்கும் 'சோ'வெனப் பெய்யும் மழைபோன்ற தேவதை!" என்னும் பொருளில் "பெய்யெனப் பெய்யும் மழை!" என்றும் முழங்கியது இத்திருக்குறள்!

இங்கு 'தொழுதல்' என்பது 'கணவனுடன் கலத்தல்' என்னும் சொல்லுக்கான மங்கல வழக்காகவே திருவள்ளுவர் குறித்துள்ளார் என்ற மறைதிறவு (ரகசியம்) சுவி-சோமசுந்தரனார் விளக்கங்களினால் வெளிச்சம் பெற்ற என் சிற்றறிவுக்குப்படுகின்றது. இவ்விடத்தில் வள்ளுவர் 'தெய்வம் தொழாள்' என்ற சொல்லால் குறித்தது 'சாமி'யை அன்று; ஆசாமியான, நயவஞ்சக ஆரியப்பிராமணப் புரோகிதனையே என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். திருமணச்சடங்கு என்ற பெயராலும், தெய்வம் என்ற பெயராலும் ஆரியப்பிராமணர்கள் நடத்திவந்த அடாவடித்தனத்தை எதிர்த்தே நேர்மறையில் இக்குறள் எழுதப்பட்டது என்பதை எண்ணும்போதுதான் வள்ளுவர் தந்த இமாலயப் பங்களிப்பின் உயரம் விளங்குகின்றது!

சமற்கிருத வேதமந்திரத்தில்  சொல்லப்பட்டவாறு, இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுகளைத் தமிழகத்தில் ஆரியர்கள் நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பெரும்பான்மையான தமிழர்கள் அறியாத ஆரியமொழியில் கீழ்த்தரமான பொருள்கொண்ட மந்திரங்கள் மறைவாக உள்ளன.

இத்தகைய கீழ்த்தரமான செயல்களைச் செய்ய  ஆரியர்கள் முனைந்திருப்பார்களேயானால், புலியையே முறத்தால் அடித்துத் துரத்திய தமிழச்சிகள் கொடுக்கும் அடிதாங்க முடியாமல் என்றோ தமிழகத்தைவிட்டு ஓடியிருப்பார்கள்.

தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று ஆரியர்கள் சொல்வதால், தமிழர்களுக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டது. கீழ்த்தரமான செயல்களைப் புரியுமாறு கூறும் சமற்கிருத திருமணச் சடங்கியல் வேதமந்திரங்களுக்குப் பொருள் அறியாமல், 'வேதம் நல்லது'  என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்ட தமிழர்களுக்கு, மறைபொருளாக 'தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்" என்று வள்ளுவர் கூறியுள்ளார் என்பது தெளிவு.

திருவள்ளுவர் ஏன் ஆரியவியலை வெளிப்படையாக எதிர்க்கவில்லை?

ஒருவேளை திருவள்ளுவர் ஆரியவியல் சடங்கியல்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியிருந்தால், திருக்குறளே இவ்வுலகில் இல்லாமல் செய்திருப்பர் ஆரியப் பிராமணர்கள். மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த எல்லையற்ற செல்வாக்கு அதைச் சாதித்து இருக்கும்.

திருக்குறளைச் செரித்து விழுங்க ஆரியர் முயல்வது ஏன்?

எங்கும் ஆரியச் சடங்கியல்களை நேராக மறுக்காமல், மறைபொருளாக, ஆரியவியலுக்கு மாறான கருத்துக்களை நேர்மறை குறட்பாக்களில் அமைத்த வள்ளுவரின் கூரிய அறிவார்ந்த தொலைநோக்கு வியக்கத்தக்கது. இமாலய அளவுக்கு மாண்பில் உயர்ந்த உலகப்பொதுமறையான திருக்குறளை மறுக்க முடியாததால், திருக்குறளுக்கு, ஆரியவியல் பொருள் திணித்துச் செரித்து விழுங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்.

திருப்பதியில் லட்டுக்குப் பதிலாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேசரி போட்டார் என்று ஒருவனை முட்டாளாக்கும் நகைச்சுவையை ரசிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு, பரிமேல்அழகர்களும், நாகசாமிகளும் ஏன் திருக்குறளை ஆரிய சாத்திரங்களின் சுருங்கிய வடிவம் என்று நிலைநிறுத்தப் போராடுகிறார்கள் என்பது இப்போது நன்கு விளங்கும்.

ஆரிய வேதமந்திரங்கள் ஓதி திருமணம் செய்விப்பது எத்துணை அவமானமான செயல்!

நம் பெண்களை அவமானப்படுத்தும் சமற்கிருத ஆரிய வேதமந்திரங்களின் பொருள் அறியாமல் நாம் மகிழ்ச்சியுடன் இம்மந்திரங்களைப் பெருமையுடன் ஓதி, திருமணம் செய்விப்பது எத்துணை மானக்கேடான செயல் என்பதை இனியாவது உணர்வோம்! 

எத்தனை நூற்றாண்டுகளாக, நம்மை முட்டாளாக்கியிருக்கும் ஆரியச் சடங்கியல் அவமானத்திலிருந்து வள்ளுவர்வழி பற்றி, விரைந்து விடுதலை அடைவோம்.

காற்றில் பறக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பெண்களை சபரிமலைக் கோவிலுக்குள் அனுமதிப்போம், தீர்ப்பை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, மற்ற அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மதவாதிகள் அரங்கேற்றிய பெண்களுக்கெதிரான வன்முறையை முறியடிக்க இயலாமல் கேரள அரசு விழி பிதுங்குமானால், பண்டைக்கால ஆரியப் பிராமணர்களின் மதவாதக் கொடுங்கோன்மை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரலாம்.

அரசியல்வாதிகளுக்குப் பெண்கள் பொது எதிரிகள்!

மதவாத அரசியல்வாதிகளுக்கும், மதச்சார்பற்ற பொதுவுடைமை அரசியல்வாதிகளுக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பதை மக்களவை, மாநிலங்களவைகளில் பெண்களுக்கான தனி இட ஒதுக்கீடில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய நாடகத்தில் இருந்து வெட்ட வெளிச்சமாகியது.

பரசுராமன் பூமியில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்!

இப்போது சபரிமலை வழிபாட்டுரிமையை பெண்களுக்கு மறுக்கும் மதவாதிகளுடன், பொதுவுடமைவாதிகள் கைகோர்த்துக்கொண்டு நடத்திய நாடகம், இவர்கள் அனைவருக்கும் பெண்கள் பொது எதிரிகள் என்பது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

பெண்களை அவமதிக்கும் ஆரியர்கள்!

மாதவிலக்கு வரு பெண்கள் தூய்மையற்றவர்கள், நைஷ்டிக பிரமச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரமச்சரியம் இப்பெண்களைக் கோவிலுக்குள் அனுமதித்தால் திருக்கோயில் களங்கப்பட்டுவிடும் என்று கூக்குரலிடும் பரசுராமன் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆரியபிராமண நம்பூதிரிகளிடம் மண்டியிடும் கேரள அரசின் இரட்டைவேடம் அம்பலமாகியது.

நைஷ்டிக பிரமச்சாரியான அனுமனைப் பெண்கள் இனி வணங்கக்கூடாது என இனி ஆரியப்பிராமணர்கள் உத்தரவு இடலாம்!

இனி, இன்னொரு நைஷ்டிகப் பிரமச்சாரியான அனுமன் கோவிலிலும் விரைவில் மாதவிலக்கு வரும் பெண்களை அனுமதிக்கப் போவதில்லை என்ற புதிய முடிவை ஆரியப் பிராமணர்கள் எடுக்கலாம். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள தூண்களில் காட்சிதரும் நைஷ்டிக பிரமச்சாரியான அனுமன் சிலைகளை, வாஞ்சையோடு வெண்ணெய் சார்த்தி, வலம்வந்து வணங்கும் பெண் பக்தர்கள், இனி அத்தூண்கள் அருகில் செல்ல அநுமதிக்கப்பட மாட்டார்கள் என்னும் அறிவிப்பை ஆரியப் பிராமணர்கள் உலக நலம்கருதி எந்நேரமும் அறிவிக்கலாம்!

'மார்புக்கச்சை' அணிய வரி விதித்த வன்கொடுமை ஆரிய நம்பூதிரிகள்!

கடந்த ஆயிரம் ஆண்டுகளில், ஆரிய நம்பூதிரிப் பிராமணர்கள், திருவாங்கூர் மன்னர்களை, பத்மநாபக் கடவுளின் தாசன், மன்னன் இல்லை என்று அறிவித்து, கடவுளின் சார்பாகச் சொல்லுவதாகக் கூறி, நம்பூதிரிகள் மன்னனை ஆட்டிப்படைத்து நாட்டை ஆண்டனர். ஆரிய நம்பூதிரிகளே அரசை வலியுறுத்தி, ஏனைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் 'மார்புக்கச்சு அணிந்துகொள்ள' வரிவிதித்து வன்கொடுமை செய்தனர்.

ஆரிய நம்பூதிரிகளின் வன்கொடுமையை எதிர்த்துப் போராடிய நாஞ்ஜெலா!

இவ்வரி, அப்பெண்களின் மார்பகங்களின் அளவுகளைப் பொருத்து விதிக்கப்பட்டது. கேரளத்தின் ஆலப்புழையைச் சார்ந்த நாஞ்ஜெலா என்ற பெண்ணிடம் அடாவடியாக இருமடங்கு 'முலைவரி' வசூலிக்க வந்த திருவாங்கூர் அரசின் வரிவசூலிப்பவர்களிடம், தனது இரு மார்பகங்களையும் கத்தியால் அறுத்துக் கொடுத்துவிட்டு, உயிரை விட்டார். இச்சம்பவம் சேர்த்தலா என்னும் ஊரின் அருகே நடந்து நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அவ்வூர் மக்கள் இச்சம்பவம் நடந்த இடத்தை 'முலைச்சிப் பரம்பு அல்லது முலைச்சிபுரம்' என்றழைத்தனர். (காண்க காணொளி: https://www.youtube.com/watch?v=2hVwuToW-Y0 https://www.youtube.com/watch?v=NU44GI2l11Y). செல்வாக்குமிக்க ஆரியப் பிராமணர்கள், இப்பெயரை மாற்றிவிட்டார்கள்; இச்சம்பவம் வரலாற்று நூலில் இடம்பெறாமலும் பார்த்துக்கொண்டார்கள். கேரளாவில் ஸ்ரீநாராயணகுருவும், தமிழ்நாட்டில் அய்யா வைகுண்டரும் வீறுகொண்டு போராடி இம்முறையை ஒழித்தனர்.

ஆரிய நம்பூதிரிகளின் சபரிமலை நாடகம்!

'பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பனைத் தரிசிக்கலாம்' என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, கோயிலைப் பூட்டுவோம் என்று மிரட்டிய ஆரிய நம்பூதிரிப் பிராமணர்களின் சங்கம், இப்போது கேரள அரசை மண்டியிட வைத்ததோடு நில்லாமல், 'மறுசீராய்வு மனு'வையும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

திருமேனி என்னும் வெறும்மேனி அடாவடிகள்!

அக்கால கட்டங்களில், திருமேனி என்றழைக்கப்படும் நம்பூதிரியின் முன்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களைச் சார்ந்த பெண்கள் மார்பகங்களைக் காட்டிக்கொண்டுதான் நிற்கவேண்டும். மார்பை மறைத்து நின்றால், நம்பூதிரிகளின் திருமேனியை அவமதித்ததாகக் கருதப்பட்டு, கொடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

ஆரிய நம்பூதிரிப் பிராமணன் தான் விரும்பிய பெண்ணை அடையலாம்; அப்பெண்ணின் கணவன் தன் இல்லத்துக்கு வந்த நம்பூதிரியின் செருப்புக்குக் காவலாக இருக்கவேண்டும். நம்பூதிரி இல்லம்விட்டு நீங்கிய பிறகே, அப்பெண்ணின் கணவன் வீட்டுக்குள் செல்ல இயலும் என்ற விதியையும் உருவாக்கினார்கள்.

திருமேனிகளின் 'தெய்வசம்பந்தம்'!

இம்முறைக்குத் 'தெய்வசம்பந்தம்' என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு எத்தனை தெய்வசம்பந்தம் உள்ளது என்பதைப் பொருத்து, அப்பெண்ணின் கணவனுக்குப் பெருமை என்றும் மூளைச்சலவை செய்தனர் ஆரிய நம்பூதிரிகள். இவை அனைத்தும் சநாதன தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று சாதித்தனர் ஆரியப் பிராமண நம்பூதிரிகள்!

கேரள ஆரிய நம்பூதிரிகளின் பாலியல் கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வேற்று மதங்களுக்குப் பெருமளவில் மாறினார்கள். 

சுவாமி விவேகானந்தா பெண்களை அவமானப்படுத்தும் கேரளத்தைக் கண்டு, "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று மனம் கொதித்துச் சாபமிட்டார்.

அடிமைகளைக் கட்டுப்படுத்துவதைவிட எளிதானது, மூளைச்சலவை அவர்களை செய்வதுதான் என்ற தந்திரத்தை ஆரியப் பிராமணர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பெண்களை மூளைச்சலவை செய்த ஆரிய நம்பூதிரிகள்!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து, அவர்களைகொண்டே, "மாதவிடாய்வரும் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால், ஆகமக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலின் தூய்மை கெடும், நைஷ்டிக பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனின் பிரம்மச்சரியம் கெடும்" என்று தொலைகாட்சி விவாதங்களில் ஆவேசமாகப் பேச வைக்கிறார்கள் ஆரியப் பிராமண நம்பூதிரிகள்.

பெண்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ்  பெண்களும் இதே கருத்தை ஆவேசமாகக் கூறுகின்றனர். (தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட மதவாதிகள் சிலர் கூறியதுபோல், சபரிமலை ஐயப்பன் கோவில் ஆகமக்கோயில் அன்று; 'தாந்த்ரீகம்' என்னும் முறைக்கு உட்பட்டது. ஆகம விதிகளின்படி, எந்த ஒரு ஆரியப் பிராமணரும் திருக்கோயில் பூசகராக முடியாது என்பதை அறிதல் நலம்.)

சநாதன தர்மத்தின் உண்மையான நிறத்தை அறிவோம்!

'தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட பெண்களுக்கு, சநாதன தருமத்தின் பெயரால் 'முலைவரி' விதித்து வன்கொடுமை செய்த திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சார்ந்த திருவாங்கூர் அரசியார், சபரிமலையில் பெண்கள் நுழைவது "சநாதன தர்மத்துக்கு விடுக்கப்பட்ட சவால்" என்று இந்நாளில் கூறுவது "இந்தியக் குடியரசின் இறையாண்மைக்கும், பெண்களின் தன்மானத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்" என்பதைக் கேரள மக்கள் உணரவில்லை என்பது கவலைக்குரியது.

தமிழக ஆகமக்கோயில்களில் ஆரியப்பிராமணர்கள் பூசைசெய்ய இயலாது!

தமிழக 'ஆகமக் கோவில்'களில் ஆரியப்பார்ப்பனர்கள் பூசைசெய்வது ஆகமவிதிகளுக்குப் புறம்பானது என்பதை, திருமூலர் அருளிய தமிழாகமத் திருமுறையான 'திருமந்திரம்' தெளிவாகக் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் 'பார்ப்பனர்' என்ற சொல், திருக்கோயில் பூசகர்களான, சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள் என்றழைக்கப்படும் ஆதித்தமிழர்களைக மட்டுமே குறிக்கும்.

ஆரியப் பிராமணர்களைத் திருமூலர் "பேர்கொண்ட பார்ப்பான்' என்றழைத்தார். இச்சொல்லின் பொருள், ஆரியப்பிராமணர்கள் பார்ப்பனர்கள் அல்லர்; ஆயினும், திருக்கோயில் பூசனை செய்வதன்மூலம், ஆன்மீகத்தலைமையைக் கைப்பற்றிவிடலாம் என்னும் பேராசையோடு, ஆரியப்பிராமணர்கள் தங்களையும் "பார்ப்பனர்கள்" என்று அழைக்கத் துணிந்தனர்.

இத்தகைய ஆரியப் பிராமணர்களைத் திருக்கோயில் பூசனை செய்ய அனுமதித்தால், போர்புரிந்து நாட்டைக்காக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதி வரும்; நாட்டில் பெரும் பஞ்சம் வந்து சேரும் என்று சிவபெருமானின் அருள்பெற்ற நந்தியம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான். எனவே அத்தகைய தவறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பது திருமூலர் அருளிய பத்தாம் திருமுறையாம் திருமந்திரம் ஆய்ந்து சொல்கின்றது.

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே

சீர்க்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே. : திருமந்திரம்-519.

திருமூலர் போன்ற தமிழ்ப் பண்பாட்டுப் புரவலர்களின் வழிகாட்டுதல் மூலம் தமிழகக் கோயில்களும், தமிழர்களும் ஆரியப் பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி அடிமைபடாமல் தப்பிவிட்டனர். எனவே, நம் அண்டை மாநிலமான கேரளம்போல அல்லாமல், தமிழக சமூக அரசியல், ஆரியப்பார்ப்பனர்களின் தாக்கத்தில் சில-பல மாற்றங்களைச் சந்தித்திருந்தாலும், தமிழ்நாட்டில் வந்தேறிய ஆரியப்பார்ப்பனர்களால் செல்வாக்குடன் வாழ முடிந்ததே தவிர, தமிழர்களை முழுமையாக அடிமைகொள்ள இயலவில்லை.

'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில்  பெண்ணியம்' குறித்து அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.