Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

January 28, 2019
 

kokkaddisolai.jpg?resize=800%2C643
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன.

கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.

1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.

இறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேடடை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதிரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.

வீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப்படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.

பலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.

கொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 32 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 32 வருடங்கள் என்று கூறலாம். ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 31 வருடங்கள்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.

படையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.

கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.

மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.

 

http://globaltamilnews.net/2019/111395/

 

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச்சோலை படுகொலை! அன்று நடந்தது என்ன? கொலைக் களத்துக் கணங்கள்

(உதிரா)

 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின்  அழகிய கிராமங்களில்   ஒன்று மகிழடித்தீவு. அன்பு, உபசரிப்பு,நேர்மை, கல்வியறிவு, விடுதலை உணர்வு இப்படி பல விடயங்களைக் தாங்கிய மக்கள் கூட்டம் வாழும் ஒரு பொன்னான கிராமம். மகிழ்ச்சியாக வாழும் அந்த மக்களுக்கு அவ்வப்போது சோகங்களும் வந்து சேரும். அந்த சோகங்களும் விடுதலைப் போராட்ட காலத்திலேயே அதிகம் அவர்களை ஆட்கொண்டது.

1987ஜனவரி 27ம் திகதி அதிகாலை. விடுதலைப்போரில் நாம் சந்தித்த மற் றொரு கரிநாள். வழமைபோல அன்றும் அன்றைய விடியலுக்காக மற்றயவர்கள்போல கொக்கட்டிச்சோலை - மகிழடித்தீவு மக்களும் காத்திருந்தனர். விடுதலைப் போராளிகளும் தமது அன்றாட செயற்பாடுகளுக்காக படுக்கையில் அமர்ந்திருந்து சிந்தித்தவர்களும் எழுந்து தமது சுடுகலன்களை தயார்நிலைக்கு கொண்டுவந்தவர்களுமாக உட்சாகமாக அன்றைய நாளை சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய கடைசி காவல் கடமை. 05.00 மணியி லிருந்து கடைசிக் காவல் கடமை எனதாயிருந்தது. 05.00 மணி வரை காவல் கடமையிலிருந்த பொட்டம் மான் சற்றும் ஓய்வெடுக்காமல் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தில் தமது அணி சந்தித்த அனுபவங்களை சுவாரஸ்யமாக விபரித்துக் கொண்டிருந்தார். சில வாரங்களாக சில விசேட நடவடிக்கைகளிற்காக பொட் டம்மான் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று வெற்றிகரமான தாக்குதல்களைச் செய்து பல பகுதிகளில் போராளிகள் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தார். இரண்டு வருடங்களிற்குப் பின் சந்தித்துக்கொண்ட நாம் அன்றுதான் சற்று அதிகம் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது உரையாடலில் திடீரென எம்மையறியாமலே நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாகி விட்டோம். இருவரது கண்களும் சற்று வியப்புடன் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. சற்று நிதானித்துக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினோம்........... எழுந்து வீட்டின்(எமது  முகாமின்) வெளியே சென்று அவதானித்தோம்.  அதிகாலை  05.45 - 06.00 மணி இருக்கும். தூரத்தே உலங்குவானூர்திகளின் இரைச்சல்.... நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி வருவதாக உணர்ந்தோம்.  நிலமை வித்தி யாசமாக இருக்கு, எதுக்கும் குமரப்பாவை அலேர்ட் பண்ணும்படி பொட்டம்மான் கூறினார். உடனடியாக ஒரு போராளியை அனுப்பி குமரப்பா, நியூட்டன் போன்றோ ரையும் ஒரே இடத்தில் ஒன்று சேரும்படி தகவல் அனுப்பினோம். அதேவேளை சூட்டியின் முகாமிலிருந்து வோக்கி டோக்கியில் மூன்று உலங்குவானூர்திகள் கொக்கட்டிச்சோலை நோக்கி வருவதாக தகவல் தெரி வித்தது. உடனடியாக சகல முகாம்களையும் உஷார்ப் படுத்தப்பட்;டது.

மூன்று உலங்குவானூர்திகளும் மணற்பிட்டிச் சந்திப் பகுதி யில் வட்டமிடுவதை உறுதிப்படுத்திக்கொண்டு எமது போராளிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முனைப்புக்காட்டினோம். மூன்று உலங்குவானூர்திகளிலும் வந்த ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப்படையினர் மணற்பி ட்டிச் சந்தியில் இறக்கப்பட்டனர். ஒரு உலங்குவானூர்தி  முகாமிற்கு திரும்பிச் செல்ல மற்றைய இரண்டு உலங்குவானூர்திகளும் கீழே இறக்கப்பட்ட சிங்களப் படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் படை யினருக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மகிழடித்தீவில் நிலைகொண்டிருந்த நாம் ஒரு பிக்கப் வாகனத்தில் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரத் தொடங்கினோம். எமது அணியில் குமரப்பா, பொட்டம் மான், கமல், திலிப், சிங்காரம், பாபு, வடிவு உட்பட ஒன்பது பேர். நியூட்டன் உட்பட சில போராளிகளை தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு காத்தான்குடி பகுதிக்கு நகரும்படி குமரப்பா அறிவுறுத்தியிருந்தார்.

மகிழடித்தீவில் இருந்து கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டிச் சந்தியை நோக்கி செல்வதே எமது இலக்காக இருந்தது. கொக்கட்டிச்சோலை குடியிருப்புப் பகுதியூடாக  வெளியேறி மணற்பிட்டியை நோக்கி நகர முடியவில்லை. உலங்குவானூர்திகள் எமது நகர்வைக் கண்டு கொண்டு எம்மைநோக்கி வந்து எம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன. உடனடியாக பிக்கப் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி நிலையெடுத்துக் கொண்டோம். இரண்டு உலங்குவானூர்திகளின்; தொடர்ச்சியான  தாக்குதல்களை எதிர்கொள்ளும் அதேவேளை மணற்பிட்டியில் இறக்கப்பட்ட இராணுவத்தினரின் முன்னகர்வுகளையும் தடுத்து தாக்குதல் நடாத்தவேண்டிய நிலையிருந்தது. எமது அணி சிறியதாக இருந்தாலும் சுடும்வலு கனமா கவே இருந்தது. ஆனாலும் சகலரிற்கும் பொட்டம் மான் வெடிபொருட்களை மட்டுப்படுத்தி பாவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். ஏனெனில் மேலதிக வெடிபொ ருள் விநியோகம் உடனடியாக எமக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் சந்தேகமாக இருந்தன.

 

வவுணதீவிற்கூடாக முன்னேற முயன்ற அதிரடிப்படையினரை தாம் கண்ணிவெடி கொண்டு தாக்கி நிறுத்திவிட்டதாக சூட்டியின் முகாமில் இருந்து தகவல் வந்தது. ஏனைய படையினர் தமது முகாம்களிற்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து தகவல். போராளி சபேசனின் நேர்த்தியான கண்ணிவெடித்தாக்குதலில் 17 ஸ்ரீலங்கா அதிரடிப்படைவீரர்கள் கொல் லப்பட்டிருந்தனர். ஸ்ரீலங்கா இராணுவம் தமக்கு மிகவும் பாதுகாப்பானது எனக்கருதி தென்னாபிரிக்காவில் இருந்து பவல் கவச வாகனங்களை சிறப்பாக இறக்குமதி செய்திருந்தது. அதில் ஒன்றே சபேசனின் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. இதில் கொ ல்லப்பட்ட அதிரடிப்படையினர் கொழும்பில் பிரசித்தி பெற்ற றோயல்கல்லூரி, மற்றும் ஆனந்தாகல்லூரியில் கல்விகற்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அதிரடிப்படைக்கு சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உள்ளவர்களையே இணைத்துக்கொள்வது என்பது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவி னதும் அதிரடிப்படைகளிற்கு பொறுப்பாகவிருந்த அவரது மகன் ரவி ஜெயவர்த்தனாவினதும் திட்டமாக இருந்தது.

சூட்டியின் அணி தவிர்த்து றீகன் தலைமையில் ஒரு அணி வெல்லாவெளிப்பகுதிய}டாக அதிரடிப்படை நகராமல் இருக்க  நிறுத்தப்பட்டதுடன் பிரசாத்-தயாளன் தலைமையில் ஒரு அணி கொக்கட்டிச்சோலைக்கு மேற்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்தது. றீகனின் அணி யும் பிரசாத்-தயாளன் தலைமையிலான அணியும் இராணுவத்தை எதிர்கொள்ள போதியளவு படைபலம் இல்லாத காரணத்தால் போதிய எதிர்த்தாக்குதலை தொடுக்காமல் பின்வாங்கின. இதனால் ஸ்ரீலங்காப்படைகள் விரைவாக கொக்கட்டிச்சோலைப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தற்போது மும்முனை யில் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம். எம்மிடம் இருந்த ஆயுதங்களோ மிகச் சொற்பம். 1 M-16, 1 T 56-2, 3 AKMS, 1 GPMG ( பொது நோக்கு இயந்திரத் துப்பாக்கி), 4 கைத்துப்பாக்கிகள். இவற்றை வைத்துக்     கொ ண்டு சுமார் இரண்டு மணிநேரம் 150 இற்கு மேற்பட்ட ஸ்ரீலங்கா அதிரடிப்படை மற்றும் இராணுவத்தை எதிர் த்து ஒன்பது போராளிகள் தாக்குதலை நடாத்தி னோம். எம்மிடமிருந்ததோ சிறியரக ஆயுதங்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீலங்காப் படைகள் தமது நகர் வை வேகப்படுத்திய அதேவேளை சிறியரக மோட்டார் குண்டுகள் கொண்டும் தாக்கத் தொடங்கின. எனினும் அவை எமது மனபலத்தை தாக்கவில்லை.

 

நிலைமையை உணர்ந்த குமரப்பா மீண்டும் போராளி களிடம் கூடியளவு துப்பாக்கி ரவைகளை மிச்சப்படுத்துமாறும் தேவைக்கு மாத்திரம் ஒற்றைச்சூடாக (Single Shots) மேற்கொள்ளும்படியும் கேட்கிறார். இதேவேளை போராளி சிங்காரம் சிரித்துக்கொண்டு துள்ளிக்குதித்து  றீகன் தனது அணியுடன் எமக்கு உதவிக்கு அருகில் வந்து விட்டதாகக் கூறுகிறார். பொட்டம்மானிற்கு சற்று சந்தேகம். எங்கடா றீகன் குறூப், எனக்கேட்க சிங்காரமும் சுமார் நானூறு மீற்றர் தொலைவில் உள்ள இடத்தைக்காட்டி றீகனின் வாகனமும் அங்கு நிற்பதா கக் கூறினார். பொட்டம்மான் பார்த்துவிட்டு, டேய் அது றீகன்ட வாகனம் இல்லடா ளுவுகு இட பவல் கவசவாகனம்  என்றும் அவர்கள் வேகமாக முன்னேறுவதாகவும் உரக்க சத்தமிட்டார். இராணுவம் எம்மை நெருங்கி அதேவேளை நாம் பின்வாங்காவிட்டால் சகலரும் சுற்றிவளைப்பிற்குள் சிக்கி அழியவேண்டிவரும். நெருக்கடியான எதிரியின் தாக்குதல்களிற்கு மத்தியிலும் நாம் ஒன்று கூடி பின்வாங்குவது என்று முடிவெடுத்தோம். உலங்குவானூர்தியின் தாக்குதலில் போராளி வடிவி ற்கு கால் விரலில் சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இது தவிர எமது தரப்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தற் போது எமக்கும் இராணுவத்திற்குமான இடைவெளி நூறு மீற்றரைவிடவும் குறைவு. எமது பின்வாங்கலை வேகமாக்கிக் கொண்டோம். போராளி பாபு அந்தப் பிரதேசம் முழுமையாக தெரிந்தபடியால் சகலரையும் அழைத்துக்கொண்டு கொக்கட்டிச்சோலையின் வட-கிழக்கு பகுதியால் பின்வாங்கிக் கொண்டிருக்க நானும் பொட் டம்மானும் கடைசி இருவராக எம்மை நோக்கி வரும் இராணுவத்தின் மீது ஒவ்வொரு சூடுகளாக மேற்கொ ண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தோம். இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் எமக்கு முன்னும் பின்னுமாக மரம், செடி, கொடிகள் எல்லாம் சிதறுகின்றன. அதிஷ்டவச மாக எந்தவித ரவைகளும் எம்மைத் தாக்கவில்லை.

கொக்கட்டிச்சோலை குடியிருப்பைத் தாண்டி அடுத்த கிராமத்திற்கு செல்வதானால் வயல்வெளி. வயல்     வெளியைத் தாண்டிச் செல்லும்போது உலங்குவானூர்தி கள் எம்மைத் தொடர்ந்து வந்தன. ஆனால் எந்த வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. சற்று நேரத் தில் அருகில் இருந்த கன்னா மரங்களிற்குள் நுழைந்துவிட் டோம். எமது உயரத்தைவிட சற்று உயரமான மரங்கள். ஆனால் இடுப்பளவு தண்ணீர். உலங்குவா னூர்திகள் தாழப்பறந்து எம்மைத்தேடிக்கொண்டே இருந்தன. பலமுறை மேலாக சுற்றிவிட்டு எதையும் காணாமல் எமக்கு மிக தூரம் சென்று விட்டன. நாம் நிற்கும் இடம் பெரி யமரங்கள் உள்ள காடு இல்லாவிட்டா லும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டோம். ஆனாலும் மனதில் கேள்விகள் நிறைந்த குழப்பமான நிலை தொடர்ந்தது.

ஏனையபோராளிகள்  அல்லது மற்றைய அணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை வோக்கி டோக்கியைத் தேடினோம்  அப் போது    தான் திலிப் சொன்னார் வோக்கி டோக்கியின் பற்றரி வரும்போது விழுந்துவிட்டதாக. கொக்கட்டிச்சோலை குடிமனைப் பகுதியூடாக வரும்வழியில் வேலி பாயவேண்டிய சூழ்நிலையில் பாயும்போது வோக்கி அடிபட்டு பற்றரி கீழே விழுந்துவிட்டது. இராணுவத்தின் அதிகூடிய துப்பாக்கிச்சூடுகளால் திரும்பி சென்று பற்றரி எடுக்க முடியாத காரணத்தால் பின்வாங்கவேண்டியாயிற்று.

டேய் கமல் எங்கடா ? பொட்டம்மானின்   குரலைக் கேட்டு  ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டு தேடினோம் கமல் இல்லை. கமலைக் காணவில்லை. நாம் சண்டைப்பகுதியில் இருந்து பின்வாங்கு முன்னரே கமல் எம்மைவிட்டுப்பிரிந்து விட்டதாக உணர்ந்தோம்.  கொக் கட்டிச்சோலை குடிமனை கடக்கும்போதே கமல் எம்முடன் வரவில்லை என்பதை சிங்காரம் உறுதிப்படுத்திக் கொண்டார்.  எம்மிடம் கவலை குடிகொண்டா லும் கமலும் இன்னுமொரு போராளியும் முற்றுகையை உடைத்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறி இருப்பா ர்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.

அமைதியை குலைத்துக்கொண்டு மனித நடமாட்டசப்தம் எம்மை நெருங்கி வந்து கொண்டிருந்தது இடுப்பளவு தண்ணீரில் மிகவும் துன்பத்திற்கு மத்தி யில் எமது இருப்பை அந்த கன்னா மரங்களுக்கி டையே தொடரவேண்டிய நிலை. எமது இருப்பை சற்று வசதியாக்கிக் கொண்டோம். பொட்டம்மான் தன்னி டமிருந்த சுவிஸ் கத்தியினால் மரங்களை அறுத்து, வெட்டி இருக்கைகளும் அமைத்துக் கொடுத்தார். காலை யில் இருந்து ஓட்டமும் சண்டையும் ஓட்டமும்தான். 08.30 மணியளவில் சண்டையை நிறுத்தி பின்வாங்க ஆரம்பித்தோம். தற்போது மதியம் 12.00 மணிக்கு மேலாகிறது. பசியின் வாட்டம் சகலரிடமும் தெரிந்தது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்துக் கொண் டோம். கூடியளவு சைகை மூலமே பேசிக் கொண்டே சுற்றாடலை அவதானிப்பதில் கண்களையும் காதுகளையும் பயன்படுத்திக் கொண்டோம். சில நிமிடங்களிற்குப் பின்னர் அமைதியை குலைத்துக்கொண்டு மனித நடமாட்டசப்தம் எம்மை நெருங்கி வந்து கொண் டிருந்தது. எம்மை சுதாகரித்துக் கொண்டு எதற்கும் தயார்நிலையில் துப்பாக்கிகளை அமைதியாக சுடுநி லைக்கு தயார்ப்படுத்திக் கொண்டோம்.

 

கன்னா மரங்களுக்கூடாக எமது பார்வையை கூர்மையாக்கினோம். வருவது ஒரு போராளி அவர் கங்கைஅமரன் (பின்னாளில் கடற்புலிகளின் தளபதி) என்பதையும் தெரிந்து கொண்டு ஓய்வு நிலைக்கு வந்தோம். காலையில் சண்டைப்பகுதிக்குள் கங்கைஅமரன் இருக்கவில்லையாயினும் போராளிகளின் நிலையை அறிய ஆவலுடன் மூன்று மணிநேரமாக தேடி அலைந்திருக்கிறார். காலை முதல் நடந்த சம்பவங்களை மிகவும் மெதுவான குரலில் பேசி பகிர்ந்து கொண்டோம். சக போராளிகளின் பசியின் நிலைமையை புரிந்து  கொண்ட கங்கைஅமரன் தனியாக முதலைக்குடா, முனைக்காடு பகுதிக்கு சென்று தெரிந்த ஒருவரின் கடையில் லெமன் பவ் பிஸ்கெட்டைப் பெற்றுக்கொண்டு சில போத்தல்களில் தண்ணீரும் கொண்டுவந்து தந்துவிட்டு மீண்டும் தனது இடத்திற்கு சென்றுவிட்டார். சகலருக்கும் ஆளுக்கு சிறிதளவு பங்கிட்டு உண்டு அருந்திவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டோம் அந்த இடுப்பளவு தண்ணீரில்.

 

நேரம் மாலையாகிக்கொண்டிருந்தது. தூரத்தே கேட்ட துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்வுக்கு வந்தி ருந்தன. இந்த முற்றுகைக்கு ஸ்ரீலங்கா இராணுவமும் அதி ரடிப்படையும் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என எமக்குள் கணக்குப் போட்டுக் கொண்டோம். அதிரடிப்படை மாத்திரம் நடவடிக்கைக்கு வந்திருந்தால் இருள் வருவதற்குள் பிரதேசங்களில் இருந்து பின்வாங்கி முகா ம்களிற்கு திரும்பி சென்று விடுவார்கள் என்பது எமது கணிப்பு. அதுதான் நடைமுறையாகவும் இருந்தது. இராணுவம் வந்தால்  சில நாட்கள் நிலைகொள்ளலாம் அல்லது நிரந்தரமாக முகாம் அமைத்து தங்கலாம் எனவும் கணித்து எமது நகர்வை மேற்கொள்வதற்கு திட்டமிட்டோம். ஸ்ரீலங்காப்படைகளின் நகர்வுகளோ நிலை கொள்ளலோ எதுவும் எமக்கு புரியவில்லை. ஊகிகæகவுமæ முடியவில்லை. ஆனாலும் மீண்டும் மகிழடி த்தீவு செல்வதென துணிச்சலாக முடிவெடுத்தோம்.  நன்றாக இருள் சூழ்ந்தபின் நகர்வை ஆரம்பிப்பதென      கொக்கொட்டிச் சோலையின் ஓரமாக நகர்ந்து அரசடித்த தீவின்  கிழக்குப்புறமாக சென்று பண்டாரியாவெளியூடாக நிலைமையை சூழலை அவதானித்துவிட்டு  மகிழடித்தீவை சென்றடைவதென முடிவு. எதற்கும் துணிந்து உற்சாகத்துடன் விருந்தோம்பும் கிராமம் சோகத்தில் துவண்டு போயிருந்தது

ஓரிடத்திற்கு சென்று அமர்ந்து நிலைமையை   ஆரா யலாம் என நினைத்து மாவீரர் வீரவேங்கை ரவி (வாமதேவன்) அவர்களின் வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டோம். ரவியின் வீடும் போராட்டத்திற்கென தனது கதவுகளை எப்போதும் திறந்தே வைத்தி ருக்கும். விடுதலை உணர்வும் விருந்தோம்பலும் ரவி யின் பெற்றோரிடம் அதிகமாகவே காணப்பட்டதால் போ ராளிகளும் ரவியின் பெற்றோரை தமது பெற்றோர்க ளாக நினைத்துக் கொண்டனர். ரவியின் வீட்டு வாசலிற்கு சென்றதும் உடனடியாக எம்மை உள்ளே அழைத்து அமரும்படி கூறிவிட்டு தமக்குத் தெரிந்த நிலைமைகளை ஓரளவு விளக்கிக் கூறினர். எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்ததை உணரக்கூடியதாக இருந்தது. அமர்ந்து சற்று நேரத்துக்குள்ளாக கிராமத்தின் அந்த சோகங்களுக்கு மத்தியிலும் ரவியின் பெற்றோரும் சகோதரிகளும்     சோற்றுடன் டின்மீன் குழம்பும் பருப்புகறியும் சமைத்து  இரவு உணவைத் தயார்ப்படுத்திவிட்டனர். முழுமை யான இழப்பு விபரம் தெரியாமல் கனத்த இதயங்களுடன் அன்றைய போசனத்தை முடித்துக் கொண்டு இரவுத் தங்கலுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்தோம்.

 

அதற்குள்ளாக பொட்டம்மானும் திலிப்பும் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். அந்த மகிழடித்தீவு கிராமத்தில் நாம் செல்லாத, பழகாத, எம்மை வரவேற்காத வீடுகளே இல்லை எனச் சொல்லலாம். வழியில் கண்டவர்கள் எல்லோருடனும் சுக துக்கங்களை விசாரித்துக்        கொண்ட பொட்டம்மானும் திலிப்பும் மகிழடித்தீவில் உள்ள தேவாலயம் வரை சென்று நிலமைகளை அவ தானித்தனர். நிலமையை பூரணமாக புரிந்து கொள்ள முடியாமல் சந்தேகத்துடன் நாம் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தனர். பொட்டம்மான் சற்று கலவரமாகக் காணப்பட்டார். நிலமையை விசாரித்தோம். நிலமை திருப்தியாக இல்லை, செல்லும்போது பாடசாலைக்கும் தேவாலயத்திற்கும் இடையில் இரண்டு டோர்ச் வெளி ச்சம் வந்து கொண்டிருந்தது எங்களைக் கண்டதும் வெளிச்சம் அணைந்துவிட்டது பின்னர் யாரையும் காணவில்லை எனக் கூறினார் பொட்டம்மான். இந்த இரவில் அவர்களை எங்கே போய் தேடுவது அல்லது யாரிடம் விசாரிப்பது என்று ஒன்றும் புரியாமல் சிந்தனை யில் ஆழ்ந்துவிட்டோம். எம்முடன் இருந்த இரண்டு போ ராளிகளை வீதிக்கு செல்லாமல் வீதியின் ஓரமாக மறை வாக நின்று நிலமைகளை அவதானிக்கும்படி குமரப்பா கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு போராளிகளும் எமது வேண்டுகோளுக்கிணங்க அதிக தூரம் செல்லா மல் 30-40 மீற்றர் தூரத்திலேயே நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.

நிலமை  திருப்தியாக இல்லாத காரணத்தால் பாது காப்பைக் கருத்தில்கொண்டு அன்று இரவு இரண்டு குழுக்களாக பிரிந்து தங்குவதென முடிவெடுத்து, அவ தானிக்கவென அனுப்பப்பட்ட இருபோராளிகளையும் மீண்டும் எம்முடன் இணைத்துக்கொண்டோம். திட்டமி ட்டபடி இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு  இடங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தங்கிவிட்டு காலை 5.00 மணியளவில் எழுந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை. இரவு போதிய தூக்கம் கொள்ள முடியவி ல்லை. உடல்வலி, மனவலி எல்லாம் தாராளமாகவே இருந்தது. எம்முடன் தங்கிய போராளி பாபு அதிகம்       தூங்காமல் அதிகநேரம் காவல் கடமையிலேயே ஈடுபட்டு மற்றவர்களை கட்டாயப்படுத்தி தூங்கவைத் தார்.

அமைதியாக காலை புலர்ந்து கொண்டிருந்தது. வழமையான விடியலாக எம்மால் உணரமுடியவில்லை. எல்லாமே நிசப்தமாகவே இருந்தது. பாபு இன்னொரு போராளியையும் அழைத்துக்கொண்டு ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டுவருவதாகக் கூறி புறப்பட்டுவிட்டார். சென்றவர்கள் 5 நிமிடத்திலேயே திரும்பிவந்து பாடசாலையில் அதிரடிப்படையினர் முகாம் அமைத்து தங்கியுள்ளதாக படபடப்புடன் கூறினார்கள்.... நிலமை சிக்கலாகிவிட்டது. அதிரடிப்படையை நேருக்குநேர் சந்தித்தால் தாக்குதல் செய்யவேண்டிவரும். தாக்குதல் தொடங்கினால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க போதி யளவு வெடிபொருட்கள் இல்லை. புPஆபு இற்கு 12 ரவைகளும் வு-56 இற்கு 40 ரவைகளும் ஆ-16 இற்கு சுமார் 100 ரவைகளும்(பொட்டம்மான் ஏற்கனவே தனது வழமையான பாவனைக்கான 120 ரவைகளைவிட மேலதிகமாக சுமார் 100 ரவைகள் வைத்திருந்தார்) யுமுஆளு இற்கு தலா 25-30 ரவைகளும் மாத்திரமே இருந்தன. ஆகவே நாம் தாக்குதலைத் தொடங்குவ தோ அல்லது அதிரடிப்படை வந்தால் எதிர்த் தாக்குதல் நடாத்துவதோ புத்திசாலித்தனமான காரியம் இல்லை என முடிவெடுத்து அமைதியாக மகிழடித்தீவை விட்டு வெளியேறினோம்.

நாம் யாரும் இராணுவச் சீருடையில் இல்லை. இராணுவச்சீருடை அணியவேண்டும் என்ற நிலைப்பாடும் இருக்கவில்லை. சாதாரண நீளக்காற்சட்டைகள், சாரம்கள், சேட்டுக்கள், டீசேட்டுக்கள்தான் அணிந்தி ருந்தோம். அந்த இடத்தில் அந்த நேரத்தில் காற்சட்டையுடன் செல்வது சூழலிற்கு பொருந்தாது என்பதால் எல்லோரும் சாரணுடன் செல்வது எனப் பேசிக்கொ ண்டோம். அப்பகுதியில் உள்ள சில மக்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு நீண்டதூரம் செல்வது வழக்கம். அவர்களைப்போலவே நாமும் சாரத்தை முழுமையாக உடுத்தி உயர்த்தி தோள் அளவிற்கு  போர்த்தி ஆயுதங்களை உடலுடன் ஒட்டி மறைத்துக் கொண்டு கூட்டமாகச் செல்லாமல் ஒருவர் இருவராக சீரற்ற நேர இடவெளியில் மகிழடித்தீவை அடுத்திருந்த வயல்வெளியைக் கடந்து பண்டாரியாவெளியூடாக படையாண்டவெளியை அடைந்து அங்கிருந்து நிலமைகளை அவதானித்தோம். கனரக வாகனங்களின் இரைச்சல் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் எமது கண்ணிற்கு எட்டிய தூரத்தில் எதையும் அவதானிக்க முடியவில்லை. பாதுகாப்பில் பூரண திருப்தி இல்லாத காரணத்தினால் அங்கிருந்து நகர்ந்து அருகிலுள்ள அடர்த்தியான கன்னா மரங்களிற்குள் சிலமணிநேரம் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என முடிவெடுத் தோம். யாரும் எம்மைப் பார்க்காதவாறு மெதுவாக கன்னா மரங்களிற்குள் புகுந்து கொண்டோம்.

 

எமது எந்த அணிகளுடனும் தொடர்புகொள்ள முடிய வில்லை. கூறப்போனால் ஒரு இராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட நிலை. எமது நோக்கம் அருகி லுள்ள எமது பயிற்சிமுகாம் ஒன்றை சென்றடைவது தான். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டோம். அவ்விடத்தில் எதேச்சையாக இன்னொரு போராளியையும் சந்தித்துக் கொண் டோம். ரெஜி என்ற அந்தப்போராளி அம்பாறை மாவட்டத் தில் நடாத்தப்பட்ட சில தாக்குதல்களில் கலந்துவிட்டு அவரது பகுதியான புலிபாய்ந்தகல்லிற்கு செல்லும்வழியில் இங்கு எம்மை சந்தித்துக்கொண்டார். அவரைக்கண்டதும் நாம் சற்று பலம் பெற்றுவிட்டதாக ஒரு உணர்வு. காரணம் அவர் ஒரு உந்துகணை செலுத்தி (RPG)யுடன் வந்திருந்ததுதான். அந்தக் கடுமையான இராணுவ முற்றுகைக்குள்ளும் அந்தப் பெரிய ஆயுதத்தை தனியொருவனாக பாதுகாத்துக் கொண்டு வந்தது பாராட்டக்கூடியதாக இருந்தது. ஒரு உந்துகணை(Rocket) மாத்திரமே மிகுதியாக இருந்தது. அன்றிரவே எமது பயிற்சி முகாம் நோக்கி நகர்வதென முடிவெடுத்தோம். பயிற்சி முகாம் நோக்கி நகரும்போது அரசடித்தீவுப்பகுதியூடாகவே செல்வது இலகுவாக இருக்கும். குடிமனைப்பகுதியூடாக செல்லாமல் அரசடித்தீவு - அம்பிளாந்துறை வீதியைக் கடந்து அதனூடாக எமது இலக்கை அடைவதென முடிவு. நகர்வு முழுவதும் இரவு நேரத்திலேயே இருக்கவேண்டிய நிலை. காரணம் இராணுவ நடமாட்டங்களே.

 

அரசடித்தீவுப்பகுதியை அண்மிக்கும் போது ஐயோ என்ட காலில பாம்பு கொத்திப்போட்டு என்று அலறித்துள்ளிய திலிப்பின் குரலைக்கேட்டதும் எமக்கு சற்று திகைப்பாக இருந்தது. எமது நகர்வை நிறுத்தி திலிப்பின் காலில் துணியால் ஒரு கட்டுப்போட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்தோம். ஆனாலும் திலிப்பை பாம்புக்கடி வைத்தியரிடம் உடனடியாக அழைத்துக் கொண்டு செல்லவேண்டும். அரசடித்தீவில் அப்படியான ஒருவர் இருப்பதாக பாபு கூற எமது நகர்வின் பாதையை அரசடித்தீவு நோக்கியதாக மாற்றிக்கொண்டோம். உரிய இடத்திற்கு சென்று சம்பவத்தை அவரிடம் விளக்கிக்கூற அவர் பார்த்துவிட்டு பயப்படத்தேவையி ல்லை கடித்தது தண்ணிப்பாம்புதான் என்றதும் எமக்கு    நிம்மதி. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம் என எமக்கு நம்பிக்கையளித்தார். அந்த வீட்டுக்காரர் தயாரித்துக்கொடுத்த தேனீரை அருந்திவிட்டு அவர்களுக்கு நன்றி கூறி எமது பயணத்தைத் தொடந்தோம். மிகவும் சோர்வாக நாம் இருந்தாலும் சுமார் ஒருமணி நேரத்தில் எமது முகாமைச் சென்றடைந்தோம்.

 

கொக்கட்டிச்சோலையில் எம்மைவிட்டுப்பிரிந்து சென்ற கமலையும் அங்கு சந்தித்துக் கொண்டோம். மணற்பிட்டிச்சந்தியில் இருந்து நகர்ந்த அதிரடிப்படை யுடனான சண்டையின் பின் பின்வாங்கும்போது தான் நேரடியாக பயிற்சிமுகாம் நோக்கி வந்ததாக கமல் கூறிக்கொண்டார். என்ன குமரப்பா உங்களோட சேர்த்து 44 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை வானொலியில் கூறிக்கொண்டிருக்கிறது  என கமல் தொடர்ந்தார். அவன் கத்தட்டும்... முதல்ல அண்ணைக்கு செய்தி அனுப்ப ஒரு வழியப்பாரு, இஞ்ச யாருக்கும் எதுவும் நடக்கல்ல எண்டு உடன செய்தியக்குடு என்ற குமரப்பா கொங்சம் நிம்மதியாக காலை நீட்டி இருப்பம் எனக்கூறி தரையில் அமர்ந்து கொண்டார். மகிழடித்தீவில் அமைந்துள்ள இறால் பண்ணையில் பாதுகாப்புத்தேடி தங்கி யிருந்த அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர்

விடுதலைப்புலிகள் எவரும் கொல்லப்படவில்லை என்ற காரணத்தினால் தான் மகிழடித்தீவில் அமை ந்துள்ள இறால் பண்ணையில் பாதுகாப்புத்தேடி தங்கி யிருந்த அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சுரேஷின் தந்தை வைத்தியர் கந்தையா அவர்களும் சுரேஷின் இளைய சகோதரர் ஒருவரும் அன்றைய தினம் அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தவிர கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவில் இருந்த சிலரும் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே 1987 கொக்கட்டிச்சோலைப் படுகொலையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது

இந்த கட்டுரை   எழுத்தாளர் உதிரா அவர்களால் வழங்கப்பட்டு 27  jan 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் battinaatham செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை உதிரா  என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

_18499_1548545487_kumarappa.jpg   

_18499_1548545487_POTTU.jpg   

_18499_1548545487_Sabesan.jpg   
http://battinaatham.net/description.php?art=18499

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.