Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாவின் எழுச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவின் எழுச்சி

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 07:21 Comments - 0

image_8d4571f1bc.jpgபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏதாவது மாயாஜாலங்கள் நிகழ்ந்தால் ஒழிய, இதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.   

அவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவா, கரு ஜயசூரியவா, சஜித் பிரேமதாஸவா போட்டியிடப்போகிறார்கள், என்பதுதான் இப்போதைய கேள்வி.   

ஒக்டோபர் 26, சதிப்புரட்சியின் தோல்வி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை செல்லாக்காசாக்கி விட்டது. சர்வாதிகாரத்துக்கும் பெரும் ஊழலுக்கும் எதிராக, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னிறுத்தப்பட்ட மைத்திரி, இன்றைக்கு மக்கள் முன்னால், கோமாளியாகி நிற்கிறார். ஜனநாயகத்தின் குறியீடாகவே முன்னிறுத்தப்பட்ட ஒருவர், ஜனநாயக அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கி, கேலி செய்வதென்பது என்றைக்குமே ஏற்கக்கூடியதல்ல. அது, பெரும் நம்பிக்கைத் துரோகம்.   

சதிப்புரட்சியின் மூலம் மைத்திரி நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கத் துணிந்தது அப்படியான ஒன்றையே. இன்றைக்கு அவர் வெற்றி முகமும் அல்ல, தீர்மானிக்கும் சக்தியும் அல்ல; தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடல்களில் மைத்திரி தாக்கம் செலுத்தும் பெயர் அல்ல. அப்படியான கட்டத்தில் அவர் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கட்டத்தை அடைவது என்பது, சாத்தியமே இல்லாத ஒன்று.  

மஹிந்த ஆட்சிக் காலத்திலேயே, அவரைக் காட்டிலும் அதிகாரத்தோடு வலம் வந்தவர் கோட்டாபய ராஜபக்‌ஷ. போர் வெற்றியை மூலதனமாக்கிக் கொண்டு, ராஜபக்‌ஷக்கள் சர்வ வல்லமையோடும் வலம் வந்த தருணங்களில், கட்சியோ, அதுசார் நிறுவனக் கட்டமைப்போ எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தவில்லை. ராஜபக்‌ஷக்களின் கரங்களே தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அதனை, செயற்படுத்தும் ஏவல் கட்டமைப்பாகவே, சுதந்திரக் கட்சியும் அதன் முக்கியஸ்தர்களும் இருந்தார்கள்.   

அரசியலுக்கான அறம் என்பதோ, உரையாடல்களுக்குரிய வகிபாகம் என்பதோ அங்கு அனுமதிக்கப்பட்டு இருக்கவில்லை. அவ்வாறான தருணத்தில், மஹிந்தவைக் காட்டிலும் கோட்டாபயவுக்கே, பிரதான அமைச்சர்களில் இருந்து, அனைத்துத் தலைவர்களும் பெரும் அச்சம் கொண்டிருந்தார்கள். அவர் முன்னால், பவ்வியத்தோடு நடக்கத் தலைப்பட்டார்கள்.   

வெள்ளை வான் அச்சுறுத்தலின் சூத்திரதாரியாக, கோட்டாபயவை பாதிக்கப்பட்ட தரப்புகள் மாத்திரமல்ல, அவருக்கு இணக்கமாக இருந்த, அவருக்கு சேவகம் செய்த தரப்புகளே பின்னரான காலத்தில் குற்றஞ்சாட்டி இருக்கின்றன.   

அப்படிப்பட்ட ஒருவர், ஜனாதிபதி வேட்பாளராக அடையாளப்படுத்தப்படும் சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது. அது, பெரும் விருப்போடு ஒன்றும் ராஜபக்‌ஷக்களுக்குள்ளேயோ அல்லது அவர்களது ஆதரவு அணிக்குள்ளேயோ நிகழ்ந்துவிடவில்லை.  

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றியோடு, மஹிந்தவிடம் இருந்து சுதந்திரக் கட்சி மைத்திரி வசம் சென்றது. ஆனாலும் சுதந்திரக் கட்சியின் அடிமட்ட ஆதரவுத் தளம் என்பது, மஹிந்தவோடு பெருமளவு தங்கிவிட்டது. அது, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெருமளவு வெளிப்பட்டது. அந்தச் சூழல், மைத்திரியை பெருமளவுக்கு அலைக்கழித்தது.   

அரசியலில் சில நேரங்களில் ஒரேயொரு வெற்றி, எல்லாவற்றையும் தீர்மானித்துவிடும். ஆனால், சில நேரங்களில் வெற்றியைத் தாண்டிய இயக்கமும் அவசியமானது. ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெற்ற மைத்திரியால், ராஜபக்‌ஷக்களைச் சரியாகக் கையாளத் தெரியாத கட்டம், அவர்களைப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக ஏற்க வைத்தது.  அந்தப் புள்ளியே, அவரை, இன்றைக்குப் படுகுழியில் தள்ளுவதற்கும் காரணமாகி இருக்கின்றது. இன்றைக்கு சுதந்திரக் கட்சி என்கிற பெயரும், பெயர்ப் பலகையும் வேண்டுமானால், மைத்திரியோடு இருக்கலாம். ஆனால், அதன் உண்மையான பலம், ராஜபக்‌ஷக்களின் வசமே இருக்கின்றது.   

அதை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னரேயே, மோப்பம் பிடித்துவிட்ட கோட்டாபய, அந்தக் கட்டத்திலிருந்து தன்னை வெற்றித் தலைவராகக் கட்டமைக்கும் பணியை முன்னெடுக்கத் தொடங்கினார்.  

ராஜபக்‌ஷக்களிலேயே சர்வாதிகார தோரணை குறைந்த நபர் என்கிற அடையாளம், மூத்தவரான சமல் ராஜபக்‌ஷ மீது இருந்தது. ஆனால், அவர் போர் வெற்றி வாதத்தைக் கொண்டு செல்லும் நபராகவோ, கடும்போக்குச் சிங்கள வாக்குகளைக் கவரும் ஒருவராகவோ இருக்கவில்லை. அதுபோல, பஷில் ராஜபக்‌ஷ மீது, பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ராஜபக்‌ஷக்களின் தோல்விக்கு முக்கியமான காரணிகளில் இதுவும் ஒன்று என்கிற அதிருப்தி, அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே இருக்கின்றது.   

இப்படியான கட்டத்தில், கட்சியைக் கட்டமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் திறமை இருந்தாலும், வெற்றி வேட்பாளராகும் தகுதி, பஷிலிடம் இல்லை என்பது, ராஜபக்‌ஷக்களின் முடிவு. அதனையே, பெரமுனவின் முக்கியஸ்தர்களும் வெளிப்படுத்தினார்கள்.   மஹிந்தவுக்கோ, அவரது மகனான நாமலுக்கோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற நிலை இருக்கும் போது, அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு கோட்டாபய மேலெழுந்தார். இம்முறை அவர், போர் வெற்றி வாதத்தை மாத்திரம் கொண்டு வரவில்லை. மாறாக, நாட்டின் அபிவிருத்தி என்ற கோஷத்தையும் முன்னிறுத்தினார்.   

போர் வெற்றி வாதம், கடும்போக்கு சிங்கள வாக்குகளையும் அபிவிருத்திக் கோஷம் நடுத்தர மக்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒருவராக, கோட்டாபய எழுந்து நின்ற போது, அவரைத் தவிர்ப்பதற்கான வேறெந்தத் தெரிவும் ராஜபக்‌ஷக்களுக்கோ, அவர்களது அணியினருக்கோ இருக்கவில்லை.  

கோட்டாபய அதிகாரத்துக்கு வருவதை, ராஜபக்‌ஷக்களே ஒரு கட்டம் வரையில் விரும்பவில்லை. ஏனெனில், அவரது அதிகார தோரணை, என்ன மாதிரியானது என்பதை, அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போதே, நாடு மாத்திரமல்ல, ராஜபக்‌ஷக்களும் உணர்ந்திருக்கின்றார்கள்.  அவரின் தெரிவைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரையில், தவிர்ப்பதற்கே மஹிந்த விரும்பினார்.   

சதிப்புரட்சி வெற்றி பெற்றிருந்தால், கோட்டாபய அரங்கிலிருந்து அகன்றிருப்பார். ஆனால், சதிப்புரட்சியின் தோல்வி, ரணிலை மாத்திரமல்ல, கோட்டாபயவையும் ஒருவாறு பலப்படுத்தியது. ஒப்பீட்டளவில் மைத்திரியை மோசமாகவும், மஹிந்தவைப் பகுதியளவிலும் பலமிழக்கச் செய்தது.   

சதிப்புரட்சியின் தோல்வியோடு, மஹிந்த ஆதரவு அணித் தலைவர்கள், வெளிப்படையாகவே கோட்டாபயவை ஆதரிக்கும் முடிவை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். தவிர்க்க முடியாத கட்டம், கோட்டாபாயவின் கையைப் பிடித்து உயர்த்தி “இவர்தான், எமது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்“ என்று அறிவிக்கும் கட்டத்தை மஹிந்தவுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. அதற்காக அவர் உள்ளூர புழுங்கிக் கொண்டிருக்கிறார். தனது, மகனின் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கிறார்.  

அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்யும் நடைமுறைகளை, கோட்டாபய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தால், அமெரிக்கக் குடியுரிமையை இழப்பது, தனக்கு எவ்வாறான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதெல்லாம், அவருக்கு நன்றாகத் தெரியும்.   

ஆனாலும், அந்தக் கட்டங்களையெல்லாம் கடந்து, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவேன் எனும் உறுதிப்பாட்டுக்கு கோட்டாபய வந்திருக்கிறார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.   

கடந்த சில வாரங்களாக, அவரது ஊடக ஊடாடல் என்பது, அதன் போக்கிலானதுதான். சிறுபான்மை வாக்குகளின்றி தன்னால் வெற்றிவாகை சூட முடியும் என்கிற விடயத்தை அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார். அதன்மூலமாக, சிங்களக் கடும்போக்கு வாக்காளர்களை நோக்கி, பலமான செய்தியைச் சொல்கிறார்.   

அதாவது, எந்தவொரு தருணத்திலும், சிறுபான்மைச் சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணியாது, சிங்கள மேலாதிக்க சிந்தனை வழியில் நின்று செயற்படும் நபராகத் தான் இருப்பேன் என்று கூற விளைகிறார். அதன்மூலம், போர் வெற்றிக்குப் பின்னராக, மஹிந்த அடைந்த தேர்தல் வெற்றிக்கு ஒப்பான வெற்றியை, தென் இலங்கையிடம் இருந்து அவர் பெற நினைக்கிறார்.   

அத்தோடு, இலங்கையின் பெருமுதலாளிகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு, நாட்டைப் புதிதாக வடிவமைக்கும் சிற்பியாகத் தன்னைக் காட்சிப்படுத்த முனைகிறார்.  

அத்தோடு, கடந்த ஐந்து வருடங்களாக அரசாங்கத்துக்குள் காணப்படும் குழப்பங்களும், பின்னடைகளும் தீர்மானம் மிக்க தலைவருக்கான வெளியை திறந்துவிட்டிருப்பதாகத் தென் இலங்கை ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்கின்றன. அந்த வெளியைக் கோட்டாபய ஆக்கிரமிக்க நினைக்கிறார்.   

ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் 20 இலட்சம் வாக்குகள் செலுத்தும் தாக்கம் என்பது பெரியது. அதனை, அவரால் அடைய முடியாது என்கிற கட்டத்தில், அந்தப் புள்ளியிலிருந்துதான், ரணில் தன்னுடைய காய்களை நகர்த்த ஆரம்பிப்பார். அதற்கான காட்சிகள் இனிவரும் நாள்களில் அரங்கேறலாம். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டாவின்-எழுச்சி/91-231047

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கோட்டாவின் எழுச்சி

அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்யும் நடைமுறைகளை, கோட்டாபய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தால், அமெரிக்கக் குடியுரிமையை இழப்பது, தனக்கு எவ்வாறான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதெல்லாம், அவருக்கு நன்றாகத் தெரியும்.   

அமெரிக்க அரசு கோத்தாவின் குடியுரிமையை இரத்து செய்யும் விண்ணப்பத்தை வாங்கி வைத்து விட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முதல் விண்ணப்பத்தை நிராகரிக்கும். ராஜபக்‌ஷ பகுதி சாமலை அல்லது நாமலை வேட்பாளராக்குவர்.  மைத்திரியும் போட்டியிடுவார். சுதந்திரக் கட்சி. வாக்குகள் பிரிய ரனில். அல்லது கரு இலகுவாக வெற்றி பெறுவார்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Jude said:

அமெரிக்க அரசு கோத்தாவின் குடியுரிமையை இரத்து செய்யும் விண்ணப்பத்தை வாங்கி வைத்து விட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முதல் விண்ணப்பத்தை நிராகரிக்கும். ராஜபக்‌ஷ பகுதி சாமலை அல்லது நாமலை வேட்பாளராக்குவர்.  மைத்திரியும் போட்டியிடுவார். சுதந்திரக் கட்சி. வாக்குகள் பிரிய ரனில். அல்லது கரு இலகுவாக வெற்றி பெறுவார்.  

கோத்தபாய இந்த ஆபத்தைப் புரிந்துகொள்ளாமலா இருப்பார்? தனது காய் நகர்த்தல்கள் மூலம் மகிந்தவின் வாயாலே ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கச் செய்தவர் வேண்டிய நடவடிக்கைகளைக் கட்டாயம் எடுத்திருப்பார்.

கோத்தபாய தேர்தலில் நின்று தோற்பதுதான் சிறிலங்காவில் தமிழர்களின் எதிர்காலத்தை நிச்சயப்படுத்தும். சிறுபான்மை மக்களின் வாக்கைப் பெறமுடியாத கடும்போக்காளரான கோத்தபாயவை சிங்களவர்களின் வாக்குகள் மாத்திரம் தெரிவு செய்யுமாயின் சிங்கள இனம் தமிழர்களை அரவணைத்துச் செல்ல தயாரில்லை, அடக்கி ஆளத்தான் விரும்புகின்றது என்ற செய்தி உலகுக்குப் புரியும். இதன் மூலம் சர்வதேச நாடுகள் கோத்தபாயவிற்கு நெருக்கடி கொடுத்து தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ள உதவக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
 

சிறுபான்மையினரின் ஆதரவு எனக்கு, கட்டாயமாக கிடைக்கும் - அடித்துச்சொல்கிறார் கோட்டாபய

நாராஹேன்பிட்டியிலுள்ள விகாரையொன்றில் இன்று -20- பிற்பகல் நடைபெற்ற வைபவமொன்றை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

 
ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஸ, பொது ஜன பெரமுனவின் அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
 
தன்னிடமுள்ள சிறப்புகள் காரணமாகவே மக்கள் தன்னை கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதை விட யுத்தத்திற்கு பின்னர் வழங்கிய தலைமைத்துவத்தை மக்கள் பெரிதும் வரவேற்பதாக கோட்டாபய ராஜபக்ஸ கூறினார்.
 
குறிப்பாக தாம் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
கொழும்பு நகரை ஆசியாவிலேயே துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் நகராக மாற்றுவதற்கு செயற்பட்டதன் மூலம் மக்கள் தனது செயலாற்றலை புரிந்துகொண்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
 
சிறுபான்மை மக்களின் ஆதரவும் கட்டாயமாக தனக்கு கிடைக்கும் என கோடாபய ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டார்.
 
இராணுவத்தினரின் சேவை தொடர்பிலான உரிய புரிந்துணர்வு சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படாமை துரதிர்ஷ்டம் எனவும் அவர் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

அமெரிக்க அரசு கோத்தாவின் குடியுரிமையை இரத்து செய்யும் விண்ணப்பத்தை வாங்கி வைத்து விட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முதல் விண்ணப்பத்தை நிராகரிக்கும். ராஜபக்‌ஷ பகுதி சாமலை அல்லது நாமலை வேட்பாளராக்குவர்.  மைத்திரியும் போட்டியிடுவார். சுதந்திரக் கட்சி. வாக்குகள் பிரிய ரனில். அல்லது கரு இலகுவாக வெற்றி பெறுவார்.  

 

1 hour ago, கிருபன் said:

கோத்தபாய இந்த ஆபத்தைப் புரிந்துகொள்ளாமலா இருப்பார்? தனது காய் நகர்த்தல்கள் மூலம் மகிந்தவின் வாயாலே ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கச் செய்தவர் வேண்டிய நடவடிக்கைகளைக் கட்டாயம் எடுத்திருப்பார்.

கோத்தபாய தேர்தலில் நின்று தோற்பதுதான் சிறிலங்காவில் தமிழர்களின் எதிர்காலத்தை நிச்சயப்படுத்தும். சிறுபான்மை மக்களின் வாக்கைப் பெறமுடியாத கடும்போக்காளரான கோத்தபாயவை சிங்களவர்களின் வாக்குகள் மாத்திரம் தெரிவு செய்யுமாயின் சிங்கள இனம் தமிழர்களை அரவணைத்துச் செல்ல தயாரில்லை, அடக்கி ஆளத்தான் விரும்புகின்றது என்ற செய்தி உலகுக்குப் புரியும். இதன் மூலம் சர்வதேச நாடுகள் கோத்தபாயவிற்கு நெருக்கடி கொடுத்து தமிழர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ள உதவக்கூடும்.

சர்வதேச நாடுகள் தமிழரின் நலத்தை பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவை தமது நலத்துக்கு தேவையானவற்றை செய்கின்றன. அமெரிக்கா கொத்தா ஜனாதிபதி ஆக கூடாது  என்று. பலமுறை.  தெளிவாக.  சொல்லி. இருக்கிறது.  இனி. தனது. வழியில். செய்யும். -  அமெரிக்காவின் நலனுக்காக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.