Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாப்பரசரின் நற்போதனையை ஏற்றுச் செயற்பட அரசு தயாரா?

Featured Replies

பாப்பரசரின் நற்போதனையை ஏற்றுச் செயற்பட அரசு தயாரா?

`

"திருத்தந்தையின் தரிசனம் திருந்துவதற்கு நல்வழிப்படுத்துமா?'என்று ஆற்றாண்மையோடும் ஆதங்கத்தோடும் இப்பத்தியில் சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தோம். அந்தக் கருத்தை ஊக்கப்படுத்துவதுபோல பரிசுத்த திருத்தந்தை 16 ஆவது ஆசீர்வாதப்பர் இப்போது அறிவுரை உரைத்திருக்கின்றார்.

தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைதிக்கான மார்க்கத்தை சமாதானத்துக்கான பாதையை தெளிவாகவும் வெளிப்படையாகவும் எடுத்துரைத்திருக்கின்றார் திருத்தந்தை.

""மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! அமைதிப் பேச்சுக்கு மீண்டும் திரும்புங்கள். அதன்மூலம் மட்டுமே இலங்கையில் இரத்தக் களரியை உண்டாக்கும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்டுவரலாம்'' என்பதை இலங்கை அதிபருக்கு புனித பாப்பரசர் விளக்கமாக எடுத்துரைத்தார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிரில் ஊறிக் கிடக்கும் தென்னிலங்கைச் சிங்களம் அந்தப் பேரினவாதப் போக்குக் காரணமாக சிறுபான்மை இனத்தவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி அவர்களின் அடிப்படை உரிமைகளை நிராகரித்து கொடூர ஆட்சி புரிந்து வருகின்றது. தமிழர்களுக்கு நியாய உரிமைகளும் கௌரவ வாழ்வும் மறுக்கப்பட்டதால் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி பெரும் இனப்போர் இலங்கையில் வெடித்துள்ளது.

சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நியாயம் செய்யாமல், பெரும்பான்மையினரான சிங்களவர்களின் மேலதிகச் செருக்குப் போக்கை மேலும் திருப்திப்படுத்தும் விதத்தில் அடக்குமுறை நெறியைக் கையாள்கிறது தென்னிலங்கை அரசு. விட்டுக்கொடுத்து சமரசம் செய்யும் நீதியான நெறிமுறையை விடுத்து, இராணுவப் பலத்தின் அடிப்படையில் அடக்கி நொறுக்கும் அதிகாரப்போக்கை ஒரே பிடியாக பிடித்து நிற்கின்றது அது.

இதனால் இலங்கையில் அமைதி நிலை கானல் நீராகி, நாடு பெரும் அமளிக்குள் சமருக்குள் சிக்கித் தடுமாறுகின்றது. வன்முறை இரத்தக்களரி கட்டவிழ்த்து விடப்பட்டு, ஊழிக்கூத்தாக அது பேயாட்டம் போடுகின்றது.

இந்தச் சமயத்தில் சமாதானத்தின் தூதர் இயேசு பிரானின் வழியில் உலகை நெறிப்படுத்தும் புனித திருத்தந்தை பாப்பரசர் போன்றவர்களது தரிசனமும், சந்திப்பும் போதனையுமாவது இலங்கை ஆட்சித் தலைமையை சரியான பாதைக்கு நெறிப்படுத்தாதா என்ற ஆதங்கம் தமிழர்கள் மனதில் எழுவது நியாயமானதே.

அவர்கள் எதிர்பார்த்தது போன்றே நியாயத்தை நீதியை சரியான பாதையை இலங்கை அதிபருக்கு தமது ஆலோசனையாகவும் வழிகாட்டலாகவும் எடுத்துரைத்திருக்கின்றார் திருத்தந்தை.

அமைதியையும் சமாதானத்தையும் எட்டுவதற்கு புனித பாப்பரசர் காட்டிய சீரிய நெறியையும், ஆலோசனையையும் இலங்கை அதிபரின் இந்த ஆட்சி ஏற்றுக் கொள்ளுமா, அதன்படி நடக்குமா என்பதே கேள்வி.

குருவாயூர் அப்பனின் தரிசனத்தையும் பௌத்த காயாவின் தரிசனத்தையும் முடித்துக் கொண்டுவிட்டார் அதிபர் மஹிந்த. சுவாமி அமிர்தானந்தா மயி அம்மாவின் ஆசீர்வாதமும் அவருக்குக் கிட்டியாகிவிட்டது. இப்போது புனித திருத்தந்தை பாப்பரசரின் தரிசனமும் அவருக்கு கிடைத்துள்ளது. மிக விரைவில் தலாய் லாமாவையும் அவர் சந்திக்கக்கூடும் எனத் தகவல். இனி சுவாமி சத்தியசாயி பாபா, கல்கி பகவான் போன்ற புனிதர்களது அருட்கடாட்சம்தான் அவருக்குப் பாக்கி.

அவ்வளவும் கிடைத்தாலாவது அவரது பாதை இனசமரசத்திற்குத் திரும்புமா என்பது தான் கேள்வி.

முன்னர் இப்பத்தியில் நாம் குறிப்பிட்டது போல "கெடுவான் கேடு நினைப்பான்' என்பது போல அவரது செயற்பாடும், அவரது அரசின் போக்கும் அழிவை நாடும் இராணுவ அடக்குமுறையை அடிப்படையாகக் கொண்டே நிற்கின்றன.

இத்தகைய குரூரப் போக்கை புனித திருத்தந்தை போன்றோரின் தரிசனங்கள் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் அமைதித் தீர்வுக்கு வாய்ப்பும் வழியும் கிட்ட வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை, விருப்பு எல்லாமும்.

ஆனால் அஹிம்சை, கருணை, காருண்யம், அன்பு போன்ற உயர்சீலங்களைப் பொழிந்த புத்தரைத் தமது மூலவழிகாட்டியாகக் கொண்ட பௌத்த மதத் துறவிகளை அரவணைத்துக் கொண்டுதான் மதம் என்னும் மதம் பிடித்தலையும் காவியுடையினர் கிளப்புகின்ற இராணுவ வெறித்தனத்தை தமது கொள்கைக் கோட்பாடாகவும், வழிகாட்டலாகவும் வைத்துக் கொண்டுதான் இன அடக்குமுறையைக் குரூர வடிவத்தில், ஒவ்வா நெறியில் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் மஹிந்தர்.

அவருக்கு புனிதர்களுடன் ஏற்படும் தொடர்பும், வழிகாட்டல்களும், தரிசனங்களும் நல்ல பாதையை எதிர்காலத்தை திறந்து விடும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

நாட்டுத் தலைவருக்கு சாதுக்களுடன் ஏற்படும் தொடர்பு அவரை சாதுவாக்கினால் நல்லது. அதைத் தவிர, இத்தகைய சந்திப்புகளின் பயனாக வேறு பெரிய விடயங்களை பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியுமா என்பது வாதத்துக்கு உரியதே!

உதயன் ஆசிரியர் கட்டுரை

  • தொடங்கியவர்

பேச்சை ஆரம்பிக்க பாப்பரசர் கூறியதால் ஜே.வி.பி., ஹெல உறுமய கடும் சீற்றம்

ரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், இந்த முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டுமென்றும் தெரிவிக்கும் ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துமாறு மக்களோ, படையினரோ அரசாங்கத்தை கோரவில்லையென்றும் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நிபந்தனையாக முன்வைத்து பேச்சுவார்த்தைக்கு தயாரென்பதை நிராகரித்துள்ள அரசாங்கம், அதேநேரம் வேறெந்தவிதமான நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயாரென தெரிவித்திருப்பது தொடர்பாகவே ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் தமது எதிர்ப்பினை வெளியிட்டன. இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்கா கருத்து தெரிவிக்கையில்;

யுத்தநிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும் வரை அதனை நிபந்தனையாக வைத்தே பேச்சுவார்த்தைகளுக்கு தயாரென புலிகள் தெரிவிப்பார்கள் என்பது தெட்டத்தெளிவான உண்மை. அதனை பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சர்வதேச சமூகமும் அங்கீகரிக்கும்.

எனவே, தான் அன்று தொடக்கம் இன்று வரை யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் வெளியேறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து இரத்துச் செய்ய வேண்டுமென ஜே.வி.பி. வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அரசாங்கம் இதுவரையில் அதற்கு செவிசாய்க்கவில்லை. அவ்வொப்பந்தம் அமுலில் இல்லை. எனவே, இல்லாதவொன்றை ஏன் இரத்துச் செய்ய வேண்டுமென கூறிவந்தது.

இன்று புலிகள் அதனை அடிப்படையாகவும், நிபந்தனையாகவும் முன்வைத்தே பேச்சு நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இச் சூழ்நிலையில் அரசாங்கம் இதனை இரத்துச் செய்யாத காரணத்தினால் ஏற்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வெறும் பேச்சுக்களினால் ஒப்பந்தத்தை நிபந்தனையாக ஏற்றுக்கொள்ள முடியாதென அரசாங்கம் தெரிவிப்பது செல்லுபடியாகாது.

அத்தோடு, புலிகளிடம் பேச்சுக்களை நடத்துமாறு இலங்கை மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினார்களா? அல்லது விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுக்க முடியாதென படையினர் தெரிவித்தார்களா? இல்லை எவரும் தெரிவிக்கவில்லை. புலிகளுக்கு துணை போகும் மேற்குலக நாடுகளே பேச்சுக்கு செல்லுமாறு வலியுறுத்துகின்றன எனத் தெரிவித்தார் அநுரா திசாநாயக்கா.

பாப்பரசர் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறும், மனித உரிமைகளை பாதுகாக்குமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பாக அநுரா திசாநாயக்கவிடம் கேட்டபோது;

மேற்குலக நாடுகளின் முகவர் தான் பாப்பரசர். எனவே இக்கருத்து தொடர்பாக ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.

ஆனால், ஜனாதிபதி தானே வலியச் சென்று கேட்டு பெற்றுக்கொண்ட ஆலோசனையென்றே இதனை வர்ணிக்க வேண்டும். ஜனாதிபதி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரையும் எந்தநாளும் ஏமாற்ற முடியாதென்றும் தெரிவித்தார்.

எல்லாவெலமேதானந்த தேரர் (ஜாதிக ஹெல உறுமய)

புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அவசியமும் அரசாங்கத்திற்கு உருவாகவில்லை. படையினர் வெற்றிகரமாக புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே, தோல்வியிலிருந்து மீளவே பேச்சுக்கு முன்வருகிறார்களென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே, அதனை நிபந்தனையாக முன்வைத்து பேச்சுக்களை நடத்துவதை எதிர்க்கின்றோம்.

அவ்வாறு அரசாங்கம் பேச்சுக்களை நடத்துமானால் பதில் தாக்குதல் நடத்தப்படுமென்ற நிபந்தனையை முன்வைக்க வேண்டும். அத்தோடு, இலங்கையிலேயே அது நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் பேச்சுக்கள் அவசியமில்லை. பேச்சுவார்த்தையென்ற போர்வையில் வெளிநாடுகளுக்குச் சென்று தமது பலத்தை அதிகரித்துக் கொள்ளவே முயல்கின்றனரெனத் தெரிவித்த எல்லாவெல மேதானந்த தேரர், பாப்பரசரின் கருத்துக்களை ஏற்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. உள்நாட்டுப் பிரச்சினைகளை எமது தேவைகளுக்கேற்பவே தீர்க்க வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.

தினக்குரல்

நற் சிந்தனை என்னும் சொல் சிங்கள ஆட்சியாளர்களை கசக்கும் அதன் பின் என்னெண்டு அதனை பின்பற்றுவர்

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசரின் சமாதானக் கோரிக்கை சர்வதேச சதித்திட்டத்தின் ஓர் அங்கம்

போர்நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு அரசாங்கம் உடனடியாக புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும். விடுதலை புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலமே வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். இதனை உணர்ந்துகொண்டு அரசாங்கம் புலிகளை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான செயலாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக பாரிய சதித்திட்டமொன்றை மேற்கொண்டுவருகின்றது. அதன் ஒரு கட்டமே பாப்பரசர் ஊடான சமாதான கோரிக்கையாகும். இந்த சதி வலையில் அரசாங்கம் சிக்கிவிடக்கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

சமாதான செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

விடுதலைப்புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். வடக்கில் உள்ள புலிகளின் தளங்கள் மீது அரசாங்கம் தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும். கிழக்கை மட்டும் மீட்பது போதுமானதல்ல. வடக்கு மக்களையும் ஜனநாயகத்துக்குள் கொண்டு வரவேண்டும். இதற்கு முப்படையினரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதற்கு தேவையான ஆதரவினை ஜே.வி.பி. வழங்கும். போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகவேண்டும்.

போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்யவேண்டும்.

போர்நிறுத்த உடன்படிக்கை புஷ்வாணமாகும் என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளர். அத்துடன் ஜனாதிபதியும் இந்த உடன்படிக்கை கைத்தவறு என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு போர்நிறுத்த உடன்படிக்கையை விமர்சிப்பதனை விடுத்து அதனை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்துவிடவேண்டும். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள போர்நிறுத்த உடன்படிக்கை தடையாக இருக்கக்கூடாது.

-வீரகேசரி

உலகநாடுகள் பாப்பரசர் எல்லோருமே ஸ்ரீலங்காவுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள். ராஜபக்ஷ குடும்பந்தான் இவைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென இவர்கள் கோரப் போகின்றார்கள்.

நற் சிந்தனைகளை கேட்டு நடந்தால் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவுக்கு நடந்தது தான் நடக்கும்.பாப்பரசரை ஏமாற்றவெல்லோ (பாப்பரசரை ஏமாற்றினால் முழு உலகையும் ஏமாற்றியதுக்கு சமன்;பிள்ளையார் மாங்கனி பெற்றது போல)நேரடியாக போய் நாமம் போட்டவர்.ஒரு வகையில் சரித்திர புருசன் கூட!

உலகநாடுகள் பாப்பரசர் எல்லோருமே ஸ்ரீலங்காவுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள். ராஜபக்ஷ குடும்பந்தான் இவைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டுமென இவர்கள் கோரப் போகின்றார்கள்.

ஜேவிபி ஏற்கனவே சர்வதேசம் பாப்பரசரை வைத்து சதிசெய்வதாக கூறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் யுத்த முனைப்பும் பாப்பரசரின் அறிவுரையும்

[24 - April - 2007] [Font Size - A - A - A]

வி.திருநாவுக்கரசு

நாட்டின் இன்றைய பொருளாதார வளர்ச்சி 7.4 வீதம் என மத்திய வங்கி அறிக்கை கூறுகின்ற போதும், குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளடக்கப்படவில்லை என்பதை யாரும் அறிவர். ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரையில் கூட பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை எனும் விதத்திலேயே ஏறத்தாழ 65 சதவீதமான மக்களின் வாழ்க்கைத் தரம் அமைந்திருக்கின்றது.

இன்று பணவீக்கம் 20 வீதம் என்ற நிலையில் மக்களின் கொள்வனவு சக்தி வெகுவாக வீழ்ச்சி அடைந்த நிலையில் நிலைமை மேலும் மோசமடைந்து செல்வதற்கான அபாயமே காணப்படுகின்றது. ஏனென்றால், தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு விரைந்து ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வை நோக்கி நகர்வதை விடுத்து அரசாங்கம் இராணுவ ரீதியாகவே முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது.

இந்த வகையில் இவ்வருடத்திற்கான செலவுக்காக 143 பில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. 38 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. எனவே, பணவீக்கம் மேலும் உயர்வடைவதற்கே பெரிதும் வாய்ப்பு உண்டு.

கிழக்கில் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக வடக்கிலும் வெற்றிகளை ஈட்டலாம் என்றெல்லாம் யுத்த முனைப்பினை முதன்மைப்படுத்தி, முன்னரைக் காட்டிலும் தற்போது கூடுதலான மக்கள், அதாவது 59.2 வீத மக்கள் விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னரே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர் என்றொரு சித்திரமும் வரையப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2002 பெப்ரவரி யுத்தநிறுத்த ஒப்பந்தம் (CFA) இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். அது அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நகர்வுகளுக்கு ஒரு தடையாக இருப்பதாக தான் கருதவில்லையென அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தாரல்லவா? சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக தாம் அதனை உத்தியோகபூர்வமாக ரத்துச் செய்யாமல் விட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ ஒரு சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

இதனிடையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டுமெனக் கோரி ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் சில அமைப்புக்கள் கூட்டுச்சேர்ந்து உச்சநீதிமன்றத்தினை நாடுகின்றன.

அதாவது, யுத்தநிறுத்த உடன்படிக்கை செல்லுபடியற்றவை என அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது.

"உயிர்த்த ஞாயிறு" பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் விடுத்த விரிவானதொரு செய்தியில் இலங்கை நிலைமை தொடர்பாகவும் கவலையைத் தெரிவித்திருந்தார். மனித உரிமைகள் மீறப்படும் விடயத்தில் இலங்கை, சூடான் நாட்டிற்கு அடுத்ததாக விளங்குவதாக சர்வதேச மனித உரிமை வட்டாரங்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. அது ஒருபுறமிருக்க, பாப்பரசரின் மேற்படி செய்தியை அடுத்து நிலைமையை விளக்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ, சில அமைச்சர்கள் சகிதம் வத்திக்கான் சென்றது தெரிந்ததே.

இலங்கை "`தேவன் ராச்சியமல்ல' பௌத்த ராச்சியம்". எனவே பாப்பரசர் ஏதாவது அழுத்தம் கொடுக்க முற்படுவாராயின் ஜனாதிபதி தனது விஜயத்தினை ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பிவிட வேண்டுமென அவை விடுத்த அறிக்கை கூறின.

பாப்பரசர் ஜனாதிபதிக்கு அழைப்பொன்றினை விடுத்ததையடுத்தே வத்திக்கான் விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து அறிக்கையொன்று வெளியாகியிருந்தது. ஆனால், உண்மை என்னவென்றால் பாப்பரசரைச் சந்திப்பதற்கானதொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் பேரில் அவர் இணக்கம் தெரிவித்த அடிப்படையிலே விஜயம் மேற்கொள்ளப்பட்டதென தெரியவருகிறது.

எதுவாயினும், பாப்பரசர் இதை இரத்தினச் சுருக்கமாக "மனித உரிமைகளைப் பேணுங்கள் விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள் எனும் செய்தியினை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது. இதனையிட்டு ஜே.வி.பி., ஜே.எச்.யூ. வட்டாரங்களிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனென்றால், நோர்வே அனுசரணை வகிப்பதாகவும் வகிபாகம் அகற்றப்பட்டு யுத்தம் தொடரப்பட வேண்டுமென்பதே இவர்களின் நிலைப்பாடாகவுள்ளது.

இதற்கான முன்னெடுப்புகள் மற்றும் பிரசாரங்கள் அவர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணலாம். இதன் ஒரு அங்கமாகவே "பயங்ககரவாதத்திற்கு எதிரான நோர்வேயர்கள்" (NAT) எனப்படும் அமைப்பின் ஒரு தனிமனித இயக்கமே தமிழ் ஒழிய வேறொன்றுமல்ல என நோர்வே அரசு சார்பில் கூறப்படுகிறது. மேலும், NAT பேச்சாளராக செயற்படுபவராகிய ஃபோக் றொவிக் (Folk Rovik) என்பவர் முன்னர் ஒரு கறுப்பின இளைஞனை கொலை செய்தவர் என வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போது அது தனக்கு ஏற்பட்ட தானதொரு மனக்கோளாறு (Insanity) காரணமாக அக்கொலைச் சம்பவம் நிகழ்ந்து விட்டதென நீதிமன்றத்திடம் மன்றாடியுள்ளார். பயனாக 10 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாகவும், சில வருடங்கள் கழித்து அவரின் நடத்தையில் திருத்தம் காணப்பட்டு, தண்டனை விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"இலங்கையின் சமாதானத்திற்கான உலக கூட்டமைப்பு" (WAPS)எனும் பதாகையின் கீழ் கொழும்பு மகாவலி நிலைய மண்டபத்தில் ஒரு கூட்டம் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி நடத்தப்பட்டது. "விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்திற்கு நோர்வே வழங்கும் ஆதரவுக்கு எதிராக" எனும் சுலோகமும், அங்கே பொறிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் மேற் குறிப்பிட்டவராகிய நொவிக்தான் பிரதான பேச்சாளர். ஜனாதிபதி சட்டத்தரணி மனோகரா டி சில்வா என்பவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் "சிங்கள ஜனதா சங்கமய" எனும் அமைப்பின் தலைவர் எஸ்.எல். குணசேகர மற்றும் அவரின் சகபாடியான கலாநிதி சுசந்த குணதிலகவும் உரையாற்றினார்.

மேலும், சில அமைச்சர்கள் அடங்கலாக ஏறத்தாழ 200 பேர் வரை வருகை தந்திருந்தனர். நொவிக் தனதுரையில் நோர்வே அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் அங்குவேறு ஆணிவேறாக சாடியிருந்தார். விடுதலைப்புலிகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடாக நோர்வே அரசாங்கம் நிதி வழங்குவதாக அவர் குற்றஞ் சுமத்தினார். மற்றும் நோர்வே அரசாங்கத்திடம் இருந்து சில உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் தனி நபர்களும் கூட நிதியுதவி பெற்று வருவதாக கூறினார்.

இது ஒன்றும் புதிய விடயமல்ல. கூட்டத்தில் உரையாற்றிய மற்றும் இரு பிரமுகர்களும் நோர்வே அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் காரசாரமாக அறைந்தனர். பின்னர் கேள்விகள் பதில்கள் இடம்பெற்றன. இலங்கைக்கான சமாதானத்தின் பேரில் நடத்தப்பட்ட இந்த அரங்கு சமாதானத்திற்கு சாத்தியமாக அல்லது சாதகமாக எத்தகைய பங்களிப்பினைச் செய்துள்ளது என நான் கேள்வியொன்றைத் தொடுத்தேன்.

கூட்டத்தலைவர் மனோகரா டி சில்வா அது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று கசப்பாக பதிலளித்தார். அடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதற்கான ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு என்பது சிந்திக்கப்படுவதில்லையா எனக் கேட்டேன்.

அதற்கு பதில் கூறப்படவில்லை.

அன்று கடும்போக்கான தமிழர் விரோதிகளாகிய கே.எம்.பி. இராஜரத்தின, எவ்.ஆர். ஜயசூரிய, எல்.என். மேதானந்த போன்றவர்கள் செயற்பட்டனர். அவர்களின் அடியொற்றியே இன்றைய கடும் போக்காளர்கள் பேரினவாதப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் பிரசாரத்திற்கும் வளர்ச்சிக்கும் தாமே தான் ஒட்டுமொத்தமான காரணகர்த்தாக்கள் என்பதை ஒரு கணமேனும் இவர்களால் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும்.

மீண்டும் நாம் ஜனாதிபதியின் வத்திக்கான் பயணம் விஜயம் தொடர்பாக பார்ப்போமாயின், இலங்கையில் உள்ளது சிறு குழுவினரின் பயங்கரவாதமே ஒழிய இனப்பிரச்சினை அல்ல எனக் கூறியதாக அறிக்கைகள் கூறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்க இவ்வாறு கூறிவந்ததை நாம் அறிவோம். அத்தோடு, அவர் நிற்கவில்லை. சிங்கள இனம் எனும் மரத்தினை சுற்றியிருக்கும் செடிகொடிகள் தான் சிறுபான்மையினர் என எள்ளி நகையாடியவர். அது தனக்கே இழுக்கு என்பதை உணராத ஒருவராவர் தான் விஜேதுங்க.

அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பௌத்தம் போதிக்கும் அற்புதமான அம்சங்களாகிய நற்சிந்தனை, நற்செயல், கருணை, சகிப்புத்தன்மை இவையாவும் நிறைந்திருந்தால் தான் நல்லாட்சி நிலவ வாய்ப்பு வரும். அதுதான் தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்கும் நன்மை பயக்கும்.

"படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில்" என இந்துக்கள் மத்தியில் ஒரு கிராமிய பழமொழியுண்டு. ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காலத்தில் ஐ.தே.க. ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை எதிர்த்து நடத்தப்பட்ட `ஜனகோஷ', `மனித சங்கிலி' மற்றும் `கதிர்காம பாதயாத்திரை' போன்ற போராட்டங்களில் முன்னணியில் திகழ்ந்தவர். அப்போராட்டங்களில் தான் சார்ந்த அமைப்பின் சார்பில் பலரும் பங்குபற்றியிருந்தோம். மேலும் அவர் வெனிசுலா வரை சென்று மனித உரிமைகளை நிலை நாட்டுவதற்கு குரல் கொடுத்ததும் பலர் அறிந்ததே.

எனவே, அவர் அக்காலத்தில் மேற்கொண்ட செயற்பாடுகளை மீட்டுப் பார்க்கக் கூடாதா? இன்று அவர் ஆட்சித் தலைவர் என்ற வகையில் விமர்சனங்கள் இருக்காமல் இருக்க முடியாது. அதற்காக ஊடகங்களையோ ஏனைய தரப்பினரையோ சபிக்கவோ மிரட்டவோ தேவையில்லை.

விமர்சனங்கள் எவ்வளவு தான் இகசப்பாயிருந்தாலும் அவற்றை நிதானமாகவும் பொறுமையாகவும் அணுகி ஆள்வது தான் நிச்சயமாக மதிப்பை கொண்டு வரும். யுத்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க முடியுமென்று வைத்துக் கொண்டாலும் அதுவும் நாட்டிற்கு ஒரு அழிவுப் பாதையே என்பதை மறந்து விடக்கூடாது.

விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு நாடாக வலம் வருகின்றார். மேசையில் ஒன்றுமில்லாமல் எதைப் பற்றிப் பேசுவது? இந்தக் கேள்வி ஜெனிவாவில் அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற கூட்டத்திலும் எழுப்பப்பட்ட கேள்வியாகும்.

- தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளிலோ அல்லது வேறெங்கோ ஒர் அமுத வாக்கு: பன்றிகளின் முன்னால் முத்துக்களை வைக்காதே!

  • தொடங்கியவர்

இவர்களிற்க்கு சுய புத்தியுமில்லை பிறர் புத்தியை கேக்கும் மனதுமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.