Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தராக்கி- சில நினைவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா)

மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும்.

உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான்.

அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன்.

அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்கியின் உயிர் பறிக்கப்பட்டு ஓராண்டு கழிந்துவிட்டது. பட்டப்படிப்பைத் துறந்து மானுடத்துக்காகப் போரிடப் புறப்படுதல் என்ற சேனையில் அணிவகுத்தவன், துப்பாக்கிக்குழாயிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை பேனா முனைகளால் கேள்விக்குரியதாக்கும் மறுபிறப்பை அடைந்தவன் ஆனான்.

அதனால் அவன் ஈடுபாடு காட்டிய இதழியல் ஊடான கருத்துச்செறிவுக் குவிப்பு ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடற்தளத்தில் சர்வதேசக் கவனிப்பைப் பெற்ற ஒன்றாக மாறியது.

அதற்கு அவனது இருமொழிப் புலமை மேலும் வீறூட்டியது.

1997ம் ஆண்டு சுவிஸ் நாட்டின் ஏரிகள் சூழ்ந்த அழகிய நகரங்களில் ஒன்றான “லுசேர்ண்” நகரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி பத்து வருடங்கள் முடிவடைந்ததையொட்டி ஓர் கருத்துக் குழும மாநாட்டை “இன்ரநசனல் அலேர்ட்” என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அச் சமயம் சந்திரிகாவின் அக்கா சுனீத்திராவின் முன்னாள் கணவர் குமார் ரூபசிங்கா “இன்ரநாசனல் அலேர்ட்” அமைப்பின் தலைமைத்துவப் பதவியை வகித்திருந்தார்.

ஏறத்தாழ முப்பது பேர் வரையில் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான புலமையாளர்கள், வல்லுனர்கள், ஒப்பந்த ஈடுபாட்டாளர்கள் என்ற வகையில் அம் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

“இந்து” பத்திரிகையின் ராம், இந்தியப் படைத்தளபதி கல்கத், ரோகான் குணரட்ணா, முன்னாள் வடகிழக்கு மாகாணசபை அமைச்சர் டயான் ஜயதிலகா, பிராட்மன்வீரக்கோன், ஜே.என்.டிக்சிற், அருட்தந்தை சந்திரகாந்தன் ஆகியோரெல்லாம் அந்த மாநாட்டிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். தராக்கி அவர்களும் இந்த மாநாட்டிலே உரையாற்றுவதற்காக சுவிஸ் வந்திருந்தார். மாநாடு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

மாநாடு முடிவுற்ற பின்னர் தராக்கி சூரிச்சில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வருவார்.

அந்த வேளையிலேதான் எனக்கு அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலே ஒர் நாள் அவரைக் கேட்டேன்.

“நீங்கள் ஐரோப்பிய நாடொன்றிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பணிபுரியலாமே”?

அவரது பதில் நீரை விட்டுப் பிரிந்து மீன் உயிர் வாழுதல் சாத்தியமா? என்ற தோரணையில் அமைந்தது.

“எங்களைப் போலை ஆக்களுக்கு அங்கைதானே வேலை கிடக்கு” என்று சிரித்தபடியே பதிலளித்தார். தொடர்ந்து மட்டக்களப்பில் காத்திரமான தமிழ் பத்திரிகையொன்றின் தேவை குறித்த அக்கறையோடு தான் இருப்பதாகவும் அது விடயமாக மேற்கொண்டு அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியது இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது. வெளிநாட்டு வாழ்க்கையில் அறவே விருப்புக் கொள்ளாத துறவுத்தனம் அவரை எனக்கு ஒரு சித்தராக உணர்த்தியது.

“ஒரு வகையில் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை மீள் கண்டுபிடிப்புச் செய்தோம்,” என்று கூறுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

தராக்கி இல்லாத வெற்றிடத்தில், சர்வதேச தளத்தில் தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடல்களை எவ்வாறு புரியவைப்பது அல்லது இன்றைய பிரகடனப்படுத்தப்படாத போர் உத்திகளின் மூல உபாயங்களை போரியல் பின்புலத்தில் எப்படி ஆய்வுக்குள்ளாக்குவது என்ற சிக்கல்கள் எழுந்து நிற்கிறது.

அவை தொடர்பாக தராக்கி என்ற தனி மனிதன் சாதித்தவைகளை அவனது அரசியல் எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சியங்களாக அமைந்து நிரூபித்து விடுகிறது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான அவர் எழுதிய கட்டுரையொன்றில்(கட்டுரையின் ஆங்கில வடிவமே என் கைக்கு எட்டியது) நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் குறித்த விமர்சனம் ஒன்றின் சாரத்தை இங்கு சுட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன்.

நோர்வே அரசின் சமாதான ஏற்பாட்டாளர் சொல்ஹைம் அவர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டத்தில் அதிசயம் நிகழ்வதற்கான எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு எழுவது வழக்கம். விளைவு ஊடகங்கள் வழியாக அதே புனைவு சிரு~டிக்கப்பட்டு மக்கள் மனங்களையும் விளிம்பு நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆனால், சொல்ஹைம் தனது நாடு திரும்பியவுடன் எல்லா எதிர்பார்ப்புகளும் வெளுத்து மக்கள் வழமையான வாழ்வியல் நீரோட்டத்திலே கலந்து விடுவார்கள்.

சோல்ஹைம் அவர்களும் தனது வருகையின் பொழுது எப்போதும் போல நன்மைக்கான மாறுதல்கள் விரைவில் நிகழ்ந்து விடும் என்ற மந்திர உச்சாடனத்தை உரைப்பார்.

அவ்வாறான வகையில் மிக அண்மையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய சொல்ஹைம் அவர்கள் இன்னும் சில வாரங்களில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான இரு தரப்பும் பிணைந்த இணைக்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவை எவையுமே இன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. யாருக்காவது அது குறித்த சந்தேகம் இருப்பின் ஜே.வி;.பியினர் “அப்படியொரு கட்டமைப்பு நிறுவப்படும் பட்சத்தில் நாம் அரசிலிருந்து வெளியேறி விடுவோம்” என்று அமெரிக்கப் பிரதிநிதியான கிறிஸ்டினா றொக்கா அம்மையாருக்கு அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் இருந்தே உண்மை நிலையினை புரிந்து கொள்ளலாம். சமாதானத் தூதுவர் என்பவர் நம்பிக்கை ஊட்டுபவராகவே காட்சியளிப்பார். ஆனால் அவரால் உருவகப்படுத்தப்படும் அக் காட்சிப் பிம்பத்தின் பொறிக்குள் விழுவதா, இல்லையா என்ற முடிவை எடுப்பது எம்மில்தான் தங்கியுள்ளது.

மேலே எனது உரைநடை வடிவத்துக்கு உட்படுத்தப்பட்ட அவரது கருத்துச் சாரம் யதார்த்தபூர்வமான மெய்மையாக வரலாற்றுத்தடத்திலிருந்து வெளிக் கிழம்புவதை உய்த்துணர முடியும்.

சில நாட்களின் பின் இறுதியாக ஜெனிவா நகரில் மனித உரிமைகள் மன்றின் முன்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தின் முடிவில் தராக்கி அவர்கள் என்னோடு உரையாடியிருந்தார்.

அத் தருணத்தில், தமிழர் தரப்பில் விடுதலை என்ற கோசத்தோடு பல்வேறு அமைப்புக்கள் 80களின் முற் கூறுகளில் கிளர்ந்த போதும் அவை வீழ்ச்சிக்குள்ளான வரலாறு பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டோம். விவாதத்தின் இடையே “தமிழீழக் கோரிக்கையை கைவிட்டதாலேயே அவ் அமைப்புக்கள் அழிந்தன” என்றும் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் எந்த அமைப்பும் வரலாற்றின் இயங்கு தளத்திலிருந்து மறைந்து விடும் அல்லது அந்நியப்படுத்தப்படும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் தராக்கி என்னிடம் தெரிவித்திருந்தார். அக் கருத்தினை அன்று அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது தராக்கி அவர்களின் பெயரைக் குறிப்பிடாது ஓர் பத்திரிகையாளரின் கருத்தாக சொல்லியிருந்தேன்.

இன்று உலக அழுத்தங்கள் கூர்மைப்படுத்தப்பட்டு பல்வேறு முனைகளில் இருந்து புறப்பட்டு எம்மையே தாக்குகிற இத் தருணங்களில் தேசிய இனப்பிரச்சினையின் வடிகாலாக சம~டியின் மாதிரி வடிவங்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே(எதிரி எதையுமே வழங்கத் தயார் இல்லாத நிலையில்) என்ற உபதேசங்கள் செவிப்பறைகளில் முட்டி மோதுகின்ற இவ் வேளைகளில் தராக்கி மேற் கூறிய கருத்து சாத்தியமானதா என்பதை எதிர்கால வரலாற்றுப் பாடங்களில் இருந்து மட்டுமே நாம் கற்றுக் கொள்ளமுடியும். கற்றுத் தருவதற்கும் இப்போது தராக்கி எம்மிடம் இல்லை.

தராக்கி அவர்களது வாழ்வுச் சரிதத்தை அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விற்றேக்கர் என்பவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அச் சரிதத்துக்கு அவரால் இடப்பட்ட பெயர் “Learning Politics from Sivaram” என்பதாகும்.

இப் பேராசிரியர் 1982 களில் மட்டக்களப்பிலே தங்கியிருந்து மட்டக்களப்பு தொடர்பான பண்பாடு, மானுடவியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளைகளிலேதான் முதன் முதலாக சிவராமைச் சந்தித்து நெருங்கிய நண்பராகிக் கொண்டார். இருவருமே தத்துவவியல் துறை சார்ந்த பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக விளங்கியதனால் நட்பு மேலும் பலப்பட்டது.

பேராசிரியர் மார்க் விற்றேக்கர் அவர்கள் சிவராமின் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்த வேளைகளிலேதான் சிவராமின் சிந்தனைகளையும், முயற்ச்சிகளையும் பதிவு செய்து கொள்வது தனது கடமைகளில் ஒன்று என எண்ணுகின்றார். அதற்கான வேலைத் திட்டங்களை சிவராமின் மன ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனும் 1997களிலேயே ஆரம்பித்தார்.

சிவராமின் உயிருக்குக் குறி வைக்கப்படும் அபாயம் நெருங்கி வந்த வேளையில் எல்லாம் அவனுக்கு வேண்டியவர்கள் அது குறித்த அச்சம் கொண்டவர்களாக அவனை நாட்டை விட்டு இடம் பெயர்க்க முயற்ச்சித்த போதெல்லாம் அதற்கு அடங்காதவனாக, அச்சப்படாதவனாக வெகு சாவகாசமாக அவன் உலா வந்தான். அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் தூதுவனாக உலகத் தலைநகர்கள் எங்கணும் இராஜதந்திரிகளை, புத்திஜீவிகளை அறிவியல் தளத்தில், போரியல் பின்புலத்தில் எதிர்கொண்ட சிவராம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சர்வதேச அரசியல் தாக்கங்களை கணிப்பவனாக இருந்தமையினால் அவனது இழப்பு ஈடு செய்ய முடியாத சமன்பாடாகிறது.

- சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் சிவராம் அவர்களுக்கு எனது நினைவஞ்சலியை செலுத்துகின்றேன்.

ஊடகவியலாளன் என்றால் எப்படி இயங்கவேண்டும் என்ற அகராதியாக எங்களுக்கு விளங்கியவர் தான் சிவராம் அவர்கள். நடுநிலை என்ற வேஷம் போட்டு பணத்திற்கும், சொத்துக்களிற்கும் ஆசைப்பட்டு முழுத்தமிழ் இனத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் எத்தனையோ ஊடகங்கள் வெளிநாடுகளிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் சிவராம் அவர்கள் ஆபத்துக்களின் மத்தியில் மரணம் தன்னைப் பின்தொடர்வது தெரிந்திருந்தும் துணிச்சலான முறையில் தமிழ் இனத்தின் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செயல்வீரன்.

தராக்கி இல்லாத வெற்றிடத்தில் சர்வதேச தளத்தில் தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடல்களை எவ்வாறு புரியவைப்பது அல்லது இன்றைய பிரகடனப்படுத்தப்படாத போர் உத்திகளின் மூல உபாயங்களை போரியல் பின்புலத்தில் எப்படி ஆய்வுக்குள்ளாக்குவது என்ற சிக்கல்கள் எழுந்து நிற்கிறது. என்ற முரளியின் கருத்து மிகவும் துரதிஸ்ரமான எல்லோரும் சிந்திக்கவேண்டிய முக்கிய கருத்தாகும்.

இன்று எம்மத்தியில் தங்களை ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், வெளிநாடுகளில் இருந்துகொண்டு எழுந்தமானத்தில் தங்களது கற்பனைக்கு தகுந்தமாதிரி தளத்தின் உண்மை நிலைகளை புரிந்து கொள்ளாது கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கருத்தில் கொண்டு தகுந்த நேரத்தில் நடைமுறையின் தேவைகருதி ஒரு ஆக்கபூர்வமான கட்டுரையை முரளி முன்வைத்துள்ளார் அவருக்கு எனது பாராட்டுக்கள்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.