Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ்

என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:53

(பகுதி - 01)

இன்றைய தினம், 2019 செப்டெம்பர் 16ஆம் திகதி, காலையில் யாழ். முற்றவௌியில், தமிழர் மரபுரிமைப் பேரவை, ‘எழுக தமிழ்’ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.   

இந்நிகழ்வு தொடர்பில், குறித்த பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில், சமகாலத்தில் இலங்கை வாழ் தமிழினம் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சினைகளையும் சவால்களையும் அது கோடிட்டுக்காட்டி நிற்கிறது.   

‘தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள், விளைபுலங்கள், வன்கவர்வு செய்யப்பட்டு, தமிழர் மரபில் அந்நிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த, காரண இடுகுறிப் பெயர்கள் மாற்றப்பட்டு, சிங்களப் புனை பெயர்கள் இடப்பட்டு, திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், கேட்பாரற்று மேற்கொள்ளப்பட்டு, இதன் மூலம் இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில், தமிழரின் இனப்பரம்பல் கோலம், இன விகிதாசாரம் என்பவை, திட்டமிடப்பட்டு சிதைக்கப்படுகின்றன.   

தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சாட்சிகளான, வணக்கத்தலங்கள் தகர்க்கப்பட்டு, பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்க முடியாத அரசியல் கையறு நிலையில், தமிழினம் தவிக்கின்றது.   

image_dc7ab01a99.jpgதமிழர் தாயகப் பிரதேசத்துடன் இணைந்த கடற்பரப்பில், அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களின் தான்தோன்றித் தனத்தைக் கட்டுப்படுத்தாது, அதற்கு தூபமிடுவதாகவே அரசியந்திரம் செயற்பட்டு வருகின்றது. இதனால், தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வு வினாக்குறியாகி உள்ளது.   

தசாப்தங்கள் கடந்தும், அரசியல் கைதிகள் கேட்பாரற்று, சிறைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வர, இறுதி யுத்தத்தின் இனப்படுகொலைஞர்கள் தண்டனைகள் எதுவுமின்றி, ஆட்சி பீடத்தின் அதிகாரக் கதிரைகளை அழகுபடுத்துகின்றனர்.   

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள், 931 நாள்களைக் கடந்துவிட்ட போதும், காத்திரமான முடிவுகள் எதுவும் கிடைத்து விடாத கையறு நிலையில், இலங்கைத்தீவின் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றுக்கு உட்படுத்தப்பட்டு, தான் வாழும் தன் மரபுசார் நிலத்தில், மெல்ல மெல்ல இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற அபாய நிலையின் விளிம்பில், தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.   

நிரந்தரமான, காத்திரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டாலன்றி, இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு, இல்லாமலாக்கப்பட்டு விடும் என்பது, அரசியல் பொதுவெளியில் அனைவராலும் உணரப்படுகின்றது. இருந்தபோதிலும், போர் ஓய்ந்து போன கடந்த ஒரு தசாப்த காலம், ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆறப்போடல்கள், இழுத்தடிப்புகளுடன் கடந்து போகின்றது.   

எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும், ‘தமிழினம் வீழ்ந்து விடாது; விழவிழ எழும்’ என்பதைச் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு உணர்த்தவும் தமிழ் இனத்தின் நிலையையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்துக்கு இடித்துரைக்கவும், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, தமிழினம் இந்த எழுக தமிழில், ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இந்தப் பத்தியின் நோக்கம், ‘எழுக தமிழ்’ என்ற இந்த நிகழ்வைப் பற்றிய விமர்சனமோ, இதன் பின்னால் உள்ளவர்களின் அரசியல் பற்றிய விமர்சனமோ, ஆய்வோ அல்ல; அதைச் செய்வதற்கு, இங்கு பல அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் பத்தியாளர்களும் உளர். இந்தப் பத்தியின் நோக்கம், ‘எழுக தமிழ்’ என்ற, தமிழினத்தின் எழுச்சிக்கான அறைகூவல் என்பது, வெறும் அறைகூவல் என்ற பகட்டாரவாரப் பேச்சுகளின் எல்லைகளைத்தாண்டி, தமிழ்த்தேசம் பலம்பெறுவதற்கும் அர்த்தமுள்ள ரீதியில் எழுச்சி பெறுவதற்குமான அடிப்படைகளைப் பலப்படுத்துவது எப்படி என்பது பற்றியதொரு பார்வையை முன்வைத்தலாகும்.  மேற்குறித்த அறிக்கையில், தமிழர் மரபுரிமைப் பேரவை, தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், சமகாலத்தில் எதிர்நோக்கும் முக்கியமானதும் உடனடியானதுமான பிரச்சினைகள் சிலவற்றைச் சரிவர அடையாளம் கண்டுள்ளது.   

இந்தப் பிரச்சினைகளை, வடக்கு, கிழக்கு சார்ந்து இயங்கும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மிக நீண்ட காலமாகவே அடையாளங்கண்டு குரலெழுப்பி வருகின்றன. ஆகவே, இந்தப் பிரச்சினைகள் பற்றிய பிரக்ஞை, தமிழ் மக்களிடம் நிறையவே உண்டு என்பதுடன்  ஆளும் அரசாங்கங்களும் இதனை அறிந்தே வந்திருக்கின்றன.   

ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வுதான் கிடைத்தபாடில்லை; பிரச்சினையை அடையாளம் காண்பதில் அக்கறை காட்டும் அமைப்புகள், அதற்கான தீர்வு என்ன என்பதை ஆராய்வதில் அத்தனை அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகிறது.   

அனைத்தையும் தீர்க்கக்கூடியதான ‘அரசியல் தீர்வை’ முன்னிறுத்துவதும், அந்த அபிலாசைமிக்க ‘அரசியல் தீர்வை’ ஒரே இரவில் அடைந்து கொள்வதற்கான ‘இலட்சியப் புரட்சி’ப் பாதையைத் தான், அரசியல் மய்யவோட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் முன்வைத்து வருகின்றன.   

இந்த அணுகுமுறையின், யதார்த்த ரீதியான சாத்தியப்பாடுகள் எவ்வாறு இருந்தாலும், தாக்க வரும் நூறு சண்டியர்களை, ஒற்றையாளாக அறுபது வயதுடையவர் அடித்து நொறுக்கும் போது, அதன் யதார்த்தப் போலியை கருத்தில் கொள்ளாது, உணர்ச்சி வசமாகிக் கைதட்டி மகிழும் மக்களின் ஜனரஞ்சக மனத்துக்கு, மேற்கூறிய ‘வெட்டுவோம், விழுத்துவோம்’ வகையிலான பகட்டாரவார அரசியல், கவர்ச்சிமிக்கதாக அமைகிறது.   

 ஆகவேதான், யதார்த்த ரீதியிலான சாத்தியப்பாடுகளைக் கடந்து, வெறும் பகட்டாரவாரப் பேச்சு அரசியலை மட்டும் மூலதனமாகக் கொண்டு, நடைமுறையில் பெறுபேறுகளையோ, அடைவுகளையோ பெற்றுக்கொள்ளாத அரசியலை, மிக நீண்டகாலமாகத் தமிழ் அரசியல் தலைமைகளால் கொண்டு நடத்தக் கூடிய துரதிர்ஷ்ட நிலை இன்றும் தொடர்கிறது.   

இது தமிழர் அரசியலையும் அரசியல் தலைமைகளையும் தமிழ்க் கட்சிகளையும் எழுந்தமானமாகச் சாடும் பதிவல்ல; இந்தப் பத்தியின் நோக்கமும் அதுவல்ல. மாறாகத் தமிழ்த்தேசம், அர்த்தமுள்ள அரசியல் பாதையை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான, அழைப்பு மணியாகவே இதனைக் கருதிக்கொள்ள வேண்டும்.   

இலங்கை வாழ் தமிழ் மக்களை, ஒரு தனித்த ‘தேசமாகக்’ கருதி, ‘தமிழ்த்தேசம்’ என்ற அடையாளப்படுத்தலை, மிகுந்த வேட்கையோடு முன்வைக்கும் தமிழ் அரசியல்வாதிகள், அந்தத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய உறுதியான, கணிசமான ‘தேசக் கட்டுமான’ நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமாகிறது.   

வெறுமனே, மூச்சுக்கு முந்நூறு தடவை, நாம் தமிழ்த்தேசம், தனித்தேசம் என்று உரைப்பதால் மட்டுமே, ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியுமா? வெறுமனே பதாகைகளாலும் ஆர்ப்பாட்டங்களாலும் அறிக்கைகளாலும் மட்டும், ஒரு தேசம் மற்றும் தேச உணர்வு கட்டியெழுப்பப்பட்டுவிடுமா?   

ஆகவே, இவற்றைத் தாண்டி உறுதியான, கணிசமான, அர்த்தமுள்ள ‘தேசக் கட்டுமான’ப் பணிகளை, “தமிழர் ஒரு தனித்த தேசம்” என்று கூறும் தலைமைகள், முன்னெடுத்திருக்கின்றனவா என்றால், அதற்கான பதில், எதிர்மறையாகவே இருக்கிறது என்பது கவலைக்குரியது.   

தேசமொன்றைக் கட்டியெழுப்புவதில், அடையாளப் பிரக்ஞையை வளர்த்தெடுத்தல் சார்ந்த செயற்பாடுகள் முக்கியமானதே; ஆனால், அடையாளப் பிரக்ஞையும் தேசஅடையாள உணர்வும் மட்டுமே, ஒரு தேசம் பலம்பெறுவதற்குப் போதுமானதல்ல.   

ஜோசப் ஸ்டாலினின் வரைவிலக்கணத்தின்படி, ‘வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்’ என்கிறார்.   

ஆகவே இந்த வரவிலக்கணத்தின் படியான, புறநிலை அம்சங்கள் உள்ளதாலும் அகநிலையில் இம்மக்கள் தம்மைத் தனித்த தேசமாக உணர்வதாலும், தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை வரையறுக்கலாம். ஆனால், வெறும் தேச அடையாளமும் உணர்வும் ஒரு தேசத்துக்கான அடிப்படையாக அமைந்தாலும், அது வலுப்பெறுவதற்கும், தேசமாகக் கட்டியெழுப்பப்படுவதற்கும் அவை மட்டும் போதுமானவையல்ல.   

அதைத்தாண்டி, யதார்த்தத்தில் தொட்டுணரக்கூடிய விடயங்களும் தத்துவார்த்த அம்சங்களும் தேசமொன்று பலமானதாகக் கட்டியெழுப்பப்பட அவசியமானதாகும். இந்த விடயங்களில் ‘தமிழ்த் தேசம்’ எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வி இங்கு முக்கியமானது.  

தத்துவார்த்த ரீதியாகப் பார்ப்பின், ‘தமிழ்த் தேசியம்’ என்பது காலங்கடந்த, சமகாலத்துக்கு ஒவ்வாத, ஸ்டாலினிய ‘தேசிய’த் தத்துவார்த்த அணுகுமுறையைத்தாண்டி, பெருமளவுக்குப்  பரிணாமம் அடையவில்லை என்றே, குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது.   

‘க்யுபெக்’ தேசியம், ‘ஸ்கொட்லாந்து’ தேசியம் போன்றவை, தத்துவார்த்த ரீதியில் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிக்கு ஒப்பாக, ஆறு தசாப்தங்களைக் கடந்தும், ‘தமிழ்த்தேசியம்’ அருகில்கூட இல்லை என்பது வருந்தத்தக்கதே. 

‘சிங்கள-பௌத்த’ தேசியத்தைத் தத்துவார்த்த ரீதியில் கட்டியெழுப்புவதில் புத்திஜீவிகளின் பங்களிப்புகள் இன்றுவரை பெருமளவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வெறுமனே அரசறிவியல் அடிப்படையில் மட்டுமல்ல, வரலாறு, மானுடவியல், சமூகவியல், புவியியல், மொழியியல், மதம், சட்டம் என அனைத்து அடிப்படைகளிலும் அறிவுத்தளத்தில், ‘சிங்களப் பௌத்த’ தேசியத்தைத் தத்துவார்த்த ரீதியில் பலப்படுத்தும் செயற்பாடுகள், தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.   

ஆனால், இதற்கு ஒப்பான செயற்பாடுகள் இலங்கை தமிழ் அறிவுத்தளத்தில் நடைபெறுவது மிக அரிது; நடைபெறுவதே இல்லை எனலாம். 

ஆகவே, அரைத்த மாவை அரைப்பது போன்று, ஐம்பதுகளில் பேசிய அதே தேசியவாதத்தை, ஆறு தசாப்தங்கள் கடந்தும், பரிணாம வளர்ச்சியேதுமின்றிப் பேசிக்கொண்டிருப்பதானது, தமிழ்த் தேசியத்தின் தத்துவார்த்த ரீதியிலான தேக்கநிலையைத்தான் சுட்டி நிற்கிறது.   

 ‘தமிழ்த்தேசியம்’ என்பது, அர்த்தமுள்ள ரீதியில் கட்டமைய வேண்டுமானால், அது பற்றிய தத்துவார்த்த வாதப்பிரதிவாதங்கள் அறிவுத்தளத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

வெறுமனே, ‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும், ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுவது போலான, ‘தற்காப்புத் தேசியவாதமாக’ மிகக் குறுகிய எல்லைக்குள், தமிழ்த் தேசியம் தன்னைச் சுருக்கிக்கொண்டால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, நியாயப்படுத்தவதற்குக் கூட, அதன் தத்துவார்த்த அடிப்படைகள் போதாது போய்விடும்.   

ஆகவே, இதனைத்தாண்டி ‘தமிழ்த் தேசியம்’ நிறுவப்பட வேண்டுமானால், அதற்கான பலமான அத்திவாரம் அறிவுத்தளத்திலிருந்து கட்டமைக்கப்பட வேண்டும். அதற்குரிய ஆய்வுகளும் பிரசுரங்களும் வாதப்பிரதிவாதங்களும் கணிசமானளவில் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.  

இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டதும் ‘சிங்கள பௌத்த’ தேசியவாதத்துக்குள்ளது  போன்ற அரச ஆதரவு ‘தமிழ் தேசியத்துக்கு’ இல்லாமையை இங்கு சிலர் காரணமாகச் சுட்டக் கூடும். அரச இயந்திரத்தின் ஆதரவு என்பது முக்கியமானதுதான்; ஆனால், இந்தச் சவால், ‘தமிழ்த் தேசியத்துக்கானது’ மட்டுமல்ல; உலகின் பல தேசங்களும் அரச இயந்திரத்தின் ஆதரவின்றியே வளர்ச்சி கண்டுள்ளன.   

இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பபைப் பொறுத்தவரையில், தமிழ்த் தலைமைகள் தேர்தல் வெற்றிக்காகத் ‘தமிழ்தேசியத்தை’ப் பயன்படுத்துகின்றனவேயன்றி, அர்த்தமுள்ள ரீதியில், ‘தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதில், அக்கறை காட்டவில்லை. இங்கு ‘தமிழ்த்தேசியம்’ பேசும் எந்தக் கட்சி, தத்துவார்த்த ரீதியில் ‘தமிழ்த்தேசியத்தை’ வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது? குறைந்தபட்சம், தமக்கான ஒரு பத்திரிகையையாவது தத்துவார்த்த நோக்கத்துடன் நீண்டகாலமாக நடத்திவருகிறதா?   

‘தமிழ்த்தேசியம்’ பேசும் எத்தனை கட்சிகள், தமக்கான தத்துவ அறிஞர் குழுக்களைக் கொண்டுள்ளன? எத்தனை கட்சிகள் ‘தமிழ்த்தேசியம்’ சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்க முயற்சிகளையோ, ஆதரவையோ, பங்களிப்பையோ வழங்கியிருக்கிறது? ‘தமிழ்த்தேசியம்’ பற்றிய எத்தனை நூல்கள், உள்ளிட்ட பிரசுரங்கள் இங்கு வௌியாகின்றன?    இவற்றை வௌிக்கொண்டுவர, இந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஏதாவது நடவடிக்கை எடுக்கின்றனவா? 

‘தமிழ்த்தேசியம்’ பற்றிய பொது உரையாடல், வாதப்பிரதிவாதங்கள் எவ்வளவு தூரம் நடத்தப்படுகின்றன? குறைந்தபட்சம் இவற்றையாவது, இந்தக் கட்சிகள் செய்கின்றனவா?   

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எழுக-தமிழ்/91-238719

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ்: ‘வரலா(ற்)று’ தோல்வி

என்.கே. அஷோக்பரன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 06:19Comments - 0

image_83d06765dc.jpg“தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.    சாதி ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் கட்டமைந்திருந்த தமிழ் மக்களிடையே, ‘தமிழர்’ என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி, அவர்களை ஆக்கிரமிப்புச் செய்யப் பேரினவாதத் தேசியம் முயன்றது.   

இதன் எதிர்விளைவாக, அந்தப் பேரினவாதத் தேசியத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே, அதே ‘தமிழர்’ என்ற தேசிய அடையாளத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒன்றிணையத் தொடங்கியமையே இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பம் எனப் பலரும் எடுத்துரைக்கிறார்கள்.   

இதனால்தான், ஏ.ஜே. வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். “தேசியப் பற்றின் எழுச்சித் தீக்கு, அந்தத் தேசத்தை அழிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்புச் செய்பவரை விட, வேறு யாரும் அதிகம் பங்களிப்பதில்லை” என்கிறார் ராம்சே மயர்.   

ஆகவே, தமிழர்கள் என்ற அடையாளத்துக்கு எதிரான பேரினவாதத் தேசியத்தின் அடக்குமுறையே, தமிழர்கள் அந்த அடையாளத்தை மேலும் பலமாகச் சுவீகரித்துக் கொள்ள வழிவகுத்தது என்ற வாதத்திலும், உண்மை இல்லாமல் இல்லை.   

ஆனால், ‘தற்காப்புத் தேசியமாக’ பிறப்பெடுத்த தமிழ்த் தேசியம், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக, இலங்கைத் தமிழர்களை, அவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களையேனும், தம்மைத் தனித்ததொரு தேசமாக உணரச் செய்திருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதில், தமிழ் அரசியலது பங்களிப்பு மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டத்தின் பங்களிப்பும் கணிசமானது.   

ஆனால், சித்தாந்த ரீதியாகத் தமிழ்த் தேசியம், ‘தற்காப்புத் தேசியம்’ என்ற எல்லையை, இன்னும் முழுமையாக உடைத்தெறியவில்லை. உணர்வு ரீதியாகத் ‘தமிழ்த் தேசியம்’ பலமாக வேறூன்றியிருந்தாலும், ஒரு தேசம் பலமாகக் கட்டமைவதற்குத் தேசிய உணர்வு மட்டுமே போதாது. அதைத்தாண்டி, தொட்டுணரக்கூடிய அம்சங்கள் சார்ந்த விடயங்களும் பலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.   

இந்த இடத்தில், ‘தமிழ்த் தேசியம்’ மிகவும் பின்னடைவைச் சந்தித்துவிட்டது என்ற உண்மையைத் தமிழ்த் தேசியவாதிகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.  

‘சிங்கள-பௌத்த’ தேசியம், இந்த இடத்தில் மிகத் தௌிவாக இருக்கிறது. இது ‘சிங்கள-பௌத்த’ நாடு என்ற கற்பிதத்துக்கான நியாயம், புனைகதை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்படுகிறது.   

ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு மேற்பட்ட, ‘சிங்கள-பௌத்த’ நாடு இது என்ற கற்பிதம், இந்தப் புனைகதை வரலாற்றிலிருந்தே பிறக்கிறது. ஆனால், இந்த இணைந்த ‘சிங்கள-பௌத்த’ அடையாளத்துக்கு, 2,000 வருடத்துக்கு மேற்பட்ட கால வரலாறு கிடையாது என்பதுதான், கே.எம். டி சில்வா போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.   

இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ அடையாளம் என்பது, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அநகாரிக தர்மபாலவுடன் எழுந்த ‘புரட்டஸ்தாந்து - பௌத்த’ எழுச்சியோடு உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதுதான், கணநாத் ஒபேசேகர, ரிச்சட் கொம்ப்றிச், ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட மானுடவியலாளர்களின் கருத்து.   

ஆகவே, வரலாற்றுக் காலத்தில் இருந்த மக்கள் கூட்டங்களின் அடையாளங்களுக்கும் இன்றிருக்கும் ‘சிங்கள-பௌத்த’ அடையாள‍ங்களுக்கும் நேரடித் தொடர்புகள் இல்லை. மேலும், அநகாரிக தர்மபாலவின் காலத்துக்கு முன்பிருந்த மக்கள் கூட்ட அடையாளங்கள், ஐரோப்பியப் பாணியிலான இனம், தேசம் ஆகிய அடையாளங்களுக்கு ஒப்பான அடையாளங்களாக அமையவில்லை என்று, ஆய்வுக் கட்டுரையொன்றில் ஜோன் டி றொஜேர்ஸ், தௌிவாகக் குறிப்பிடுகிறார்.   

ஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசிய அடையாளமானது, அநகாரிக தர்மபாலவின் காலத்துக்குப் பின்னர் உருவான, ஐரோப்பிய பாணியிலான ‘இன-மத தேசிய’ அடையாளமாகும். ஆகவே, இன்றுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசத்துக்கு அதிகபட்சமாக ஒன்றேகால் நூற்றாண்டுதான் வயதாகிறது. 

அதிலும், 1950களின் பின்னரே, குறிப்பாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதயத்தோடுதான், ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பயணிப்பதற்கான அரசியல் வாகனமும் அரசியல் முன்னரங்கும் கிடைக்கிறது.  ஆகவே, இந்த அடிப்படையில் நோக்கும் போது, இலங்கையிலுள்ள ‘சிங்கள-பௌத்த’ தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் ஏறத்தாழ ஒரேயளவு வயதுதான் ஆகின்றது. 

ஆனால், இந்தச் சமகாலப் பகுதியில், ‘சிங்கள-பௌத்த’ தேசியம், தன்னை அரசியல், வரலாறு, மானுடவியல், சமூகவியல், புவியியல், மொழியியல், மதம், சட்டம், பொருளாதாரம், அறிவுத்தளம், உணர்வுத்தளம் என அனைத்து அடிப்படைகளிலும் பலப்படுத்திக்கொண்டது. ‘சிங்கள-பௌத்த’ தேசியம், தன்னை மிகப்பலமாகக் கட்டமைத்துக்கொண்டு விட்டது.  

ஆனால், மறுபுறத்தில் தமிழ்த் தேசியம் உணர்வுரீதியில் பலம் பெற்றிருந்தாலும், அதனைத்தாண்டிய முன்னகர்வுகள் மிக அரிதாகும். ஆனால், பல இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.   

குறிப்பாக, அறிவுத்தளத்தில் தமிழ்த் தேசியமானது, ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தோடு ஒப்பிடுகையில், மிகவும் பின்தங்கி நிற்கிறது. ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதமானது, மிக அடிப்படையான விடயங்களில் கூட, தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவதை நாம் அவதானிக்கலாம்.   

மிக எளிமையாகப் பார்த்தால், இலங்கையின் பாடசாலைக் கல்வியின் வரலாற்று நூல்களை புரட்டிப் பார்த்தால், அதில் ‘சிங்கள-பௌத்த’ தேசியத்தின் அடிப்படையாகக் கருதப்படும் அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி இராச்சியங்களைப் பற்றி, விரிவான பகுதிகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், யாழ்ப்பாண இராச்சியம் பற்றியோ, வன்னி இராச்சியம் பற்றியோ அவ்வாறு கற்பிக்கப்படுவதில்லை.   

துட்டகைமுனுவைப் பற்றிச் சொல்லுமளவுக்கு எல்லாளனைப் பற்றி, அவன் செய்த நற்பணிகளைப் பற்றி கற்பிப்பதில்லை. குறிப்பாக, எல்லாளன்-துட்டகைமுனு போர் பற்றிச் சொல்லும் போது, எல்லாளனின் படையில் 30க்கும் மேற்பட்ட சிங்கள மன்னர்கள் இடம்பெற்றிருந்தார்கள் என்பதை, இங்கு யாரும் குறிப்பிடுவதே இல்லை. எல்லாளன்-துட்டகைமுனு போர் என்பது, தமிழ் - சிங்கள- பௌத்த போராக உணரச்செய்யப்படுவதே இதன் நோக்கம் என்றே புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது.   

மேலும், பிரித்தானியருக்குப் பிற்பட்ட இலங்கை என்ற ஒரு நாட்டுக்கும் அதற்கு முன்பிருந்த இலங்கைக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. இது கூட, வரலாற்றுப் பாடத்தில் சுட்டிக்காட்டப்படுவதில்லை.   

அந்நியரை எதிர்த்துப் போரிட்ட பலரையும் பற்றிக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம், பண்டாரவன்னியனைப் பற்றி, அவனது போர்களைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை.   
விஜயனின் வருகைக்குப் பின்பு வழங்கப்படும் முக்கியத்துவம், அவன் வருகைக்கு முன்னரான நிலையை, இயக்கர், நாகர் பற்றிக் குறிப்பிடுவதுடன் நிறுத்திக்கொள்கிறது.   

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் வரலா‌ற்றுப் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், தான் கற்பிக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாண இராச்சியம் ஒரு தனி அத்தியாயமாக இருந்தது என்றும், ஆனால் காலவோட்டத்தில், பாடத்திட்டம் மாறமாற, யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய முக்கியத்துவம் குறைந்து, தற்போது ஒரு பந்தியில் குறிப்பிடும் விடயமாகிவிட்டது என்ற தனது கவலையை, அந்த ஆசிரியர் வௌிப்படுத்தியிருந்தார்.  

இந்த இடத்தில், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இதையும் பேரினவாதத் தேசியத்தின் அடக்குமுறையின் ஒரு வடிவமாக வியாக்கியானம் உரைப்பர். அதில் உண்மை இருக்கலாம்.   

ஆனால், இங்கு மிக முக்கியமான கேள்வி, அது தொடர்பில் தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த வரலாற்றுத் திரிபை, மறைப்பை அதற்கான எதிர்ப்புக்குரல் என்பதைத்தாண்டி ‘தமிழ்த் தேசியம்’ எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? ஒரு புனைகதை வரலாற்றை, இலங்கையின் வரலாறாக்கி, அதை இன்றுவரை தொடர்ந்து எழுதச் செய்யும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை, வெறும் எதிர்ப்புக் குரலால் மட்டும் எதிர்கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் நிகழ்ச்சிநிரலா?   

அப்படியானால், தமிழ்த் தேசியம் என்பது, வெறும் ‘தற்காப்புத் தேசியம்’ என்ற எல்லைக்குள் சுருங்கிவிடும். அது, ஒருபோதும் பலமானதொரு தேசமாகக் கட்டமைக்கப்படாது. ஆகவே, தமிழ்த் தேசியம் எந்தப் பாதையில் பயணிக்க விரும்புகின்றது என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் தீர்மானித்து, அதற்குரிய முறையான நிகழ்ச்சிநிரலை வகுத்துக்கொள்வது அவசியம்.  

பொட்ஸ்வானாவின் முதலாவது ஜனாதிபதி செரடீஸ் காஹ்மா, “கடந்தகாலமொன்று இல்லாத தேசம், தொலைந்துபோன தேசமாகும். கடந்தகாலமொன்று இல்லாத மக்கள் கூட்டமானது, ஆன்மாவற்ற மக்கள் கூட்டமாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.   

அதனால்தான், ‘தேசம்’ ஒன்று கட்டமைக்கப்படுவதில், அந்தத் தேசமாகத் தம்மை உணரும் மக்களின் வரலாறு என்பது, மிக முக்கியமானதாக மட்டுமல்லாது, அந்தத் தேசத்தின் அடிப்படையாகவும் அஸ்திவாரமாகவும் அமைகிறது.   

ஆனால், நாளை இந்த மண்ணில் வளரும் தமிழ்க் குழந்தைக்கு அதனுடைய வரலாறு சரியாகப் புகட்டப்படாவிட்டால், அந்தக் குழந்தை, தன் ஆன்மாவை இழந்த குழந்தையாகவே வளரும் என்பதோடு, தன்னுடைய ஆன்மாவை வேறோர் இடத்தில் தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அது ஆளாகும்.   

இந்த இடத்தில்தான், ‘எழுக தமிழ்’ என்பது வெறும் ஒருநாள் கூத்தாக அமைவது அர்த்தமற்றது என்ற வாதம் பலம்பெறுகிறது. ஒரு குறித்த நாளில், ஆயிரக்கணக்கானவர் ஓர் இடத்தில் ஒன்றிணைந்து, உணர்வு பொங்கக் கத்திவிட்டு, மறுநாள் வழமையான வாழ்க்கைச் சுழலுக்குள் சென்றுவிடுவது, எந்தவொரு தொட்டுணரக் கூடிய பலனையும் தராது.   

ஆகவே, அர்த்தபூர்வமானதோர் ‘எழுக தமிழ்’ அமையவேண்டுமானால், அதன் முதற்படியானது, தமிழ் மக்களின் வரலாற்று மீட்சியிலிருந்து ஆரம்பமாக வேண்டும். அந்த வரலாறு, மிகச்சரியானதாக எழுதப்படவும் எடுத்துச் சொல்லப்படவும் கற்பிக்கப்படவும் தொடர்ந்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படவும் அந்த வரலாறு பற்றிய பிரக்ஞையும் அறிவும் அந்த மக்களிடமும் தேசத்திடமும் ஆழமாக ஏற்படுத்தப்படவும் வேண்டும்.   

இந்த இடத்தில், சேர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் ஒரு கருத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “தன்னுடைய கடந்தகாலத்தை மறந்துபோகும் தேசத்துக்கு எதிர்காலமென்பது கிடையாது” என்று அவர் கூறியிருந்தார்.   

இதனால்தான், ‘சிங்கள-பௌத்த’ தேசம் தன்னுடைய வரலாற்றை, அது புனைகதையை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் கூட, மிகுந்த புனிதத்துவத்துடனும் கடும் சிரத்தையுடனும் கட்டமைத்து வந்திருக்கிறது.   

தமிழ்த் தேசம் தன்னுடைய வரலாற்றை மீட்கும் வரை, அதைத் தன்னுடைய அடுத்த தலைமுறைகளுக்குத் தௌிவாகக் கடத்தும் வரை, ‘எழுக தமிழ்’ என்பது அர்த்தம் பெறாது. ஆகவே, தமிழ்த் தேசம் தன்னுடைய வரலாறு பற்றி, அக்கறை கொள்ளாது இருப்பது மிகப்பெரிய வரலாற்றுத் தோல்வியாகும்.  

மறுபுறத்தில், வெறுமனே வரலாற்றுப் பிரக்ஞை மட்டுமே தமிழ்த் தேசத்தின் எழுச்சிக்குப் போதுமானதா என்ற கேள்வியும் முக்கியமானது. அதற்கான பதில், எதிர்மறையானதாகும். வெறுமனே பழங்கதையை மட்டும் பேசிப் பயனில்லை; சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையாததொரு தேசம், ஒரு போதும் பலமானதொரு தேசமாகக் கட்டமையாது.  


(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எழுக-தமிழ்-வரலா-ற்-று-தோல்வி/91-239119

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் கல்வி: எழுக தமிழ்! (பகுதி - 04)

என்.கே. அஷோக்பரன் / 2019 ஒக்டோபர் 07 திங்கட்கிழமை, பி.ப. 06:54 Comments - 0

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர், மனித மூலதனத்தில் முறையான முதலீடு செய்தல் என்பது எந்தவொரு நாட்டிலும் விடேசமானதொரு விடயமாகக் கருதப்படவில்லை. 

பாடசாலைக்கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி போன்றவற்றுக்கான முதலீட்டுச் செலவுகள் மிகவும் சிறியதாக இருந்தன. அதன் பின்னரான விஞ்ஞான வளர்ச்சியானது, தொழிற்றுறையில் பெருமளவு மாற்றங்களை உட்புகுத்தியதுடன், புதிய பொருள்களின் வளர்ச்சிக்கும், திறமையான உற்பத்தி முறைகளுக்கும் வழிவகுத்தது. மேற்கில் தோன்றிய இந்த மாற்றம் மிகவிரைவாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருபதாம் நூற்றாண்டில், கல்வி, திறன்கள், அறிவைப் பெறுதல் ஆகியவை, ஒரு நபரின், ஒரு தேசத்தின் உற்பத்தித்திறனைத் தீர்மானிப்பதில் முக்கியமான கூறுகளாக மாறிவிட்டன. இன்றைய காலகட்டத்தை “மனித மூலதனத்தின் காலம்” என்று கூட சிலர் அழைக்கலாம். அதாவது ஒரு தேசத்தின் வாழ்க்கைத் தரத்தின் முதன்மை நிர்ணயம் என்பது, திறன்களையும் அறிவையும் வளர்ப்பதிலும் பயன்படுத்துவதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், கல்வி, பயிற்சியை வழங்குவதிலும் அது எவ்வளவு வெற்றிகரமாகச் செயற்படுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.   

கல்வி என்பது, வளர்ச்சியின் அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும். மனித மூலதனத்தில் கணிசமான முதலீடு இல்லாமல் எந்த நாடும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. கல்வி, மக்கள் தங்களைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் புரிந்துகொள்வதை வளப்படுத்துகிறது. இது அவர்களின் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.

தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் பரந்த சமூக நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. கல்வி மக்களின் உற்பத்தித்திறனையும் படைப்பாற்றலையும் உயர்த்துகிறது. தொழில் முனைவோர், தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, பொருளாதார, சமூக முன்னேற்றத்தைப் பாதுகாப்பதிலும் வருமான விநியோகத்தை மேம்படுத்துவதிலும் இது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேவேளை கல்வியால் மட்டும், நிச்சயமாக ஒரு பொருளாதாரத்தை மாற்ற முடியாது. முதலீட்டின் அளவு, தரம், உள்நாட்டு, வெளிநாட்டு, ஒட்டுமொத்த கொள்கைச் சூழலுடன் சேர்ந்துதான் பொருளாதார செயற்றிறனின் பிற முக்கிய தீர்மானங்களை உருவாக்குகின்றன. ஆயினும்கூட மனித வள வளர்ச்சியின் நிலை இந்தக் காரணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொள்கை வகுத்தல், முதலீட்டு முடிவுகளின் தரம் கொள்கை வகுப்பாளர்கள்,  முகாமையாளர்களின் கல்வியால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், ஒரு தேசத்தின் மனித மூலதன வழங்கல் அதிக அளவில் இருக்கும்போது, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டின் அளவும் பெரிதாக இருக்கும்.   

மேலும் தனிநபர் வருமான மேம்பாட்டிலும் கல்வியானது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வி மிகவும் பரந்த அளவில் கிடைக்கப்பெறும் போது, குறைந்த வருமானம் உடையவர்கள் தமக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளைத் தேடக் கூடிய சூழலை அது ஏற்படுத்தித் தருகிறது. 

எடுத்துக்காட்டாக, 1980 களில் லத்தீன் அமெரிக்காவின் 18 நாடுகளில் பாடசாலைக் கல்வி, வருமான சமத்துவமின்மை, வறுமை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஓர் ஆய்வில், பாடசாலைக் கல்வி கிடைப்பதானது, தொழிலாளர் வருமானத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டியது. ஆகவே பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. நல்ல கல்வி இல்லாமல் எந்த பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமில்லை. 

ஒரு சீரான கல்வி முறை பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, உற்பத்தித்திறனையும் ஊக்குவிக்கிறது, மேலும் தனிநபர் வருமானத்தை உருவாக்குகிறது. அது தேசிய அளவில் மட்டுமல்லாது, ஒரு குடும்ப அளவிலும் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதாக இருக்கிறது.   

காலனித்துவக் காலத்தை, குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இலங்கையில் மிஷனரிகள் பல பாடசாலைகளை ஸ்தாபித்தன. பிரித்தானியரின் இலங்கை வருகையிலிருந்து 1850கள் வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பாடசாலைகளில் மிகப்பெரும்பா ன்மையானளவு பாடசாலைகள், இன்றைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்! ஆகவே இலங்கையின் ஆரம்ப, இரண்டாம்நிலைக் கல்வியின் தாயகம் வடக்கு-கிழக்காகத்தான் அமைகிறது. வடக்கு-கிழக்கின் புகழ்பூத்த பாடசாலைகளில் தெற்கிலிருந்து வந்து கல்விகற்ற சிங்களவர்கள் கணிசமானளவில் உள்ளனர்.

இது வரலாறு. மறுபுறத்தில் மிகக்கொடூரமான யுத்தகாலத்திலும் கூட வடக்கு-கிழக்கிலிருந்து மாணவர்கள் அகில இலங்கை ரீதியான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளில் பெரும்சாதனைகளை நிகழ்த்தியதும் வரலாறு! குறிப்பாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத யுத்தச் சூழலிலும் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் அதியுயர் புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்த வரலாறு வடக்கு-கிழக்குக்கு உண்டு. ஆனால் வடக்கு-கிழக்கின் கல்வியின் இன்றைய நிலை என்ன?  

2017ஆம் ஆண்டு பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை முடிவுகளில் வடக்கு-கிழக்கு, அதிலும் குறிப்பாக வட மாகாணம் பின்னடைவைச் சந்தித்தது. கிழக்கு மாகாணத்தில் 67.76 சதவீதமானோர் மட்டுமே உயர்தரத்துக்குத்  தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 9 மாகாணங்களில் இறுதி நிலையில் வட மாகாணம் இருந்தது. வட மாகாணத்திலிருந்து வெறும் 66.12 சதவீதமானோரே உயர்தரத்துக்குத் தகுதி பெற்றிருந்தனர். மேலும், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, அனைத்து பாடங்களிலும் சித்தியடையாதவர்களின் பட்டியலிலும் வட மாகாணமே முன்னிலையிலிருந்தது. அங்கு 3.46 வீதமானவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை. இரண்டாம் நிலைக் கல்வியின் தாயகத்துக்கு  ஏன் இந்த நிலை? இது பற்றி 2017இல் அன்றைய வட மாகாண கல்வி அமைச்சராக இருந்த கந்தையா சர்வேஸ்வரன் தனது உரையொன்றில் குறிப்பிட்ட விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். “வடக்கு, கிழக்கில் தொழில் வளம் இல்லை. இங்கு விவசாயிகளாக, மீன்பிடி மக்களாக இருந்தாலும் அடுத்து இருப்பது ஒரே ஓர் அரசாங்க உத்தியோகம். ஆகவே பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்தார்கள். நிறைய செலவழித்தார்கள். ஆகவே எங்கள் முயற்சியினால் தான் நாங்கள் முன்னேறினோமே தவிர யாரும் எங்களை தட்டில் வைத்து ஏந்தவில்லை. ஆனால், யுத்தம் வந்த பின்னால் பாடசாலைகள் அழிக்கப்பட்டன. எங்கள் கல்வி பல வழிகளில் சீரழிக்கப்பட்டன.

நாங்கள் பின்தங்கியவர்களாகிப் போய் எங்களுக்கு பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு எங்களுக்கு தகுதி வாய்ந்த அதிபர்கள் போதவில்லை. தகுதிவாய்ந்த விஞ்ஞான, கணித, ஆங்கில ஆசிரியர்கள் இல்லை” என்று தன்னுடைய உரையில் அவர் குறைபட்டுக் கொண்டார். மறுபுறத்தில் பின்னடைந்து வரும் வடமாகாணக் கல்வியை முன்னேற்ற, தமிழ் கல்விக்கான தனித்த அமைச்சு வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனித்த அமைச்சு அமைவதால் மட்டுமே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடுமா என்ற கேள்வி இங்கு எழுவதைத் தவிர்க்க முடியாது.   

இன்று வடக்கு-கிழக்கு என்பது கல்வியில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதை நாம் காணலாம். வேலைவாய்ப்பின்மை அதிகமுள்ள மாகாணங்களாக வடக்கும், கிழக்கும் காணப்படுகின்றன. இத்தனைக்கும் இந்த இரு மாகாணங்களிலும் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆயினும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் இந்த மாகாணங்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.

ஆனால் தமிழர் அரசியல் பரப்பில் இந்த விடயம் பேசு பொருளாக இல்லை என்பது மிகுந்த கவலைக்குரியது. ஒன்று இரண்டு நிகழ்வுகளில் சில அரசியல் தலைமைகள் இது பற்றி “கவலைதெரிவிப்பதோடு” அல்லது “பேரினவாதத்தின் திட்டமிட்ட செயல்” என்று குற்றஞ்சுமத்துவதோடு இந்தப் பிரச்சினைகள் பற்றிய பேச்சு நின்றுவிடுகிறது. வடக்கு-கிழக்கின் கல்விநிலையின் பின்னடைவு பற்றிய முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான சரியான காரணிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளைக் கூட தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. வறுமைகூடிய மாகாணம், வேலைவாய்ப்பின்மை கூடிய மாகாணம் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டும் போதும் அது தொடர்பில் தமிழர் அரசியல்பரப்பில் பலமாக வாதப்பிரதிவாதங்கள், கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை. தனது தேசம் கல்வியில் பின்னடைந்துகொண்டும், வறுமையில் உழன்றுகொண்டும் இருக்கையில், அதனைப் பற்றிப் பேசாது, வெறுமனே “தேசியவாத உணர்வை” அள்ளிவீசும் வெறும் வாய்ச்சொல் வீரர்களாகவே தமிழ்த் தலைமைகள் தமது அரசியலைக் கொண்டு நடாத்துகிறார்கள்.   

கடந்தகால அநீதிகளுக்கு நியாயம் கேட்பது மிக அவசியமானது. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கடந்தகாலத்துக்காக நிகழ்காலத்தை அடகுவைத்துவிட்டு, எதிர்காலத்தையும் இழந்து நிற்பது என்பது எவ்வளவு தூரம் அறிவார்ந்த செயல் என்பதை தமிழினம் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இங்கு ஒரு சமநிலை அவசியமாகிறது.  அநீதியாகக் கொல்லப்பட்டவர்களுக்கு ஜெனீவாவில் நியாயம் கேட்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு வடக்கிலும் கிழக்கிலும் வறுமையில் உழலும் தமிழ்த் தேசத்தவர்களுக்கு நியாயம் செய்தலும் முக்கியம். ஆனால் இந்த சமநிலை தமிழ்த் தலைமைகளால் உணரப்படவில்லை. பொருளாதாரப் பின்னடைவால், வறுமையால் வாடிக்கொண்டும் கல்வியில் பின்தங்கிக்கொண்டிருக்கும் ஒரு தேசம், அதன் மனித வளத்தை இழந்துகொண்டிருக்கிறது. மனித வளத்தை இழந்து கொண்டிருக்கும் ஒரு தேசம், தனது பொருளாதாரத்தை இழந்து கொண்டிருக்கிறது. இது இழப்பைத் தொடர்ந்து ஏற்படுத்தும் விசச்சக்கரமாகும். “எழுக தமிழ்” என்பது அர்த்தமுள்ளதாகவேண்டுமானால், இந்த விசச்சக்கரம் உடைக்கப்பட வேண்டும்.   

நாளை தேர்தல் காலத்தில் மட்டும் தம்மைத் தேடி வந்து மேடைபோட்டு வெறும் இனத்தேசிய பகட்டாரவாரப்பேச்சு அரசியல்வாதிகளையும் நாளை தீர்வு வரும், நாளை மறுநாள் தீர்வுவரும் எனத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் வரப்போகும் தீர்வுதான் “சர்வ ரோக நிவாரணி” என்று வெற்று நம்பிக்கையை மீள மீள விதைக்கும் அரசியல்வாதிகளையும் ஆதரிப்பது தொடர்பில், தமிழ்மக்கள் மீள்பரிசோதனை செய்ய வேண்டும். “தேசம்” என்பது வெற்றி வார்த்தையல்ல. அது வார்த்தைகளாலும் உணர்வினாலும் மட்டுமே கட்டியெழுப்பப்படக்கூடிய ஒன்றல்ல. ஒரு “தேசம்” கட்டியமைக்கப்பட உணர்வு எவ்வளவு முக்கியமோ, அதையும் தாண்டி தொட்டுணரக்கூடிய விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

வறுமைக்கும் நோய் நொடிக்கும் தன்னை இழந்துகொண்டிருக்கும் ஒரு மக்கள்கூட்டத்துக்கு அதிகாரப்பகிர்வுத் தீர்வைத்தாண்டி சிந்திக்க முடியாத தலைமைகளால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஏனெனில் அந்த அதிகாரப் பகிர்வு கிடைத்தால் கூட, அதனை வைத்து என்ன செய்வது என்ற திட்டம் கூட அவர்களிடம் கிடையாது.   

“எழுக தமிழ்” என்பது அர்த்தமுள்ளதாக வேண்டுமென்றால், தமிழ்த் தேசம் தனது அரசியலை வெறும் “பகட்டாரவாரப் பேச்சு” அரசியலைத் தாண்டியதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அது நடக்காத வரை, “எழுக தமிழ்” என்பது தமிழ் மக்களின் நிறைவேறாத கனவாகவும், தமிழ் அரசியல்வாதிகளின் உணர்வெழுச்சிப் பகட்டாரவாரமாகவும் மட்டுமே இருந்துகொண்டிருக்கும்.   
(முற்றும்)  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழரின்-கல்வி-எழுக-தமிழ்-பகுதி-04/91-239672

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.