Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குச் சந்தையில் என்ன இருக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையில் என்ன இருக்கிறது?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 டிசெம்பர் 23

கடந்த சில வருடங்களாக, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளத் தொய்வும் உறுதியில்லாத அரசியல் கொள்கையும் முதலீட்டாளர்களைக் குழப்பத்துக்குட்படுத்தி தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும், பங்குசந்தையில் எல்லா பங்குகளுமே நாம் நினைப்பதுபோல குறைவானப் பெறுபேற்றை வெளிப்படுத்துவன அல்ல. சராசரியாகப் பார்க்கும்போது, பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுபேறு எதிர்பார்த்த அளவுக்கு குறைவாகயிருந்தாலும் முதலீட்டுக்கு இலாபத்தைத் தரக்கூடியப் பங்குகளும் அவைசார் பங்குச் சந்தைப் பரிமாற்றங்களும் நிகழந்துகொண்டே இருக்கின்றன.

எனவே, பங்கு முதலீட்டு விடயங்கள் தொடர்பில் அடிப்படையான விடயங்களையும் அதுசார் மேலதிக விடயங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.   

பங்குச் சந்தையொன்றில் ஈடுபாட்டுடன் பங்குகொள்ள விரும்பும் பங்காளர்களுக்கு எவ்வாறு இலாபம் உழைக்கும் நோக்கமும் ஊக்கமும் உள்ளதோ, அதுபோன்றே அபாய நேர்வுகளைச் சந்திக்கக்கூடிய மனத்திறனையும் கொண்டிருத்தல் அவசியமாகும்.

அபாயநேர்வுகள் காரணமாக நட்டத்தைச் சந்திக்கின்றபோது, விரக்தியடைந்து, பங்குச்சந்தையை விட்டு வெளிேயற எண்ணுவதை விட, அத்தகைய நட்டங்களில் இருந்து, பாடங்களைக் கற்றுக்கொண்டு, எவ்வாறு பங்குச்சந்தையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, பங்குச் சந்தை தொடர்பிலும், அதன் அடிப்படை செயற்பாடுகள் என்ன என்பதை அறிவது அவசியமாகிறது.  

பங்குச் சந்தையில் எப்போதுமே குறுகியக் காலத்துக்குள் நலன்களை ஈட்டிக்கொள்ளுவது என்பது அசாதாரணமானது. அதுபோல, நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்பு, அதிக நலனை அல்லது இலாபத்தை பெற்றுக்கொள்ளுவது என்பதும் சாதாரணமான ஒன்றே.

எனவே, எவ்வளவு காலம் நீங்கள் பங்குச் சந்தையின் அசைவுகளை (Movements) கண்காணித்து இருக்கிறீர்கள் என்பதே முக்கியமே தவிர, எப்போது சந்தையில் பிரவேசிப்பது என்பதல்ல. ஆனால், சந்தை அசைவுகளில் தேர்ச்சி பெற்றபின்பு, குறுகியகால முதலீடுகள் மூலமாக நலனை பெற முயற்சி செய்யும்போது,  எப்போது பங்குகளைக் கொள்வனவு செய்வது, விற்பனை செய்வது என்பதில் காலமானது முக்கியத்துவம் பெறுகிறது.  

எந்தப் பங்குகளை வாங்குவது என்கிற தீர்மானமானது, உங்கள் ஒவ்வொருவரினதும் முதலீட்டுக் குறிக்கோளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுபோல, நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளுகின்ற பங்குகளும் குறுகிய, நீண்டகால நலனைத் தருமா என்பதனைக் கவனித்தல் வேண்டும்.  

நீண்டகால முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளும்போது, காலாகாலம் நீங்கள் முதலீடு செய்த ஆரம்ப முதலை விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக்கூடிய பங்கு வர்த்தகத்துக்கான வாய்ப்புக்கள் எழலாம். அதுபோல, குறுங்கால முதலீட்டு பங்குப் பரிவர்த்தனையின்போது, அதனுடன் இணைந்த நட்ட அச்சங்கள் தொடர்பிலும் அவதானமாக இருத்தல் வேண்டும். இதன்போது, நீங்கள் முதலீடு செய்யும் பங்கின் வகையானது, பல்வகைக் காரணிகளின் அடிப்படையில் பின்வருமாறு வேறுபடும்.  

வருமானப் பங்குகள்: இவ்வகை பங்குகள் முதலீட்டாளர்க்கு ஒர தொடர்ச்சியான வருமான பாய்ச்சலை வழங்கும் பங்குகளாகும். ஏனைய பங்குகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, பங்கிலாபத்தில் அறவிடப்படும் வரிகள், பங்குக்கானச் செலவு அதன் தேறிய பங்கிலாபம் ஒப்பிடப்படுதல் கவனிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.  

பெறுமதிப் பங்குகள்: பெறுமதிப் பங்குகள் பெரும்பாலும் குறைவான விலையையும் உயர்ந்த பங்கிலாப விளைவுகளையும் கொண்டிருக்கும். நீண்டகால முதலீட்டாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இத்தகையப் பங்குகளை அதன் மெய்யானப் பெறுமதிப் பங்கிலாபங்கள் அல்லது பங்குகளின் விலைகள் அதிகரிக்கும் வரை வைத்திருப்பார்கள்.  

வளர்ச்சிப் பங்குகள்:  பங்குச்சந்தையில் திடமான வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் பங்குகளாகும். இத்தகையப் பங்குகள் குறைவானப் பங்கிலாபத்தைச் செலுத்தக்கூடும் அல்லது எவ்வித பங்கிலாபத்தையும் வழங்காமலும் போகலாம். வளர்ச்சிப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் எதிர்கால இலாபத்துக்காக அல்லது பங்குகளின் விலைகள் அதிகரிப்பதன் மூலமாக பெறக்கூடிய நிகரத்தக்க பங்கிலாபத்தை பெறுவதற்காக வைத்திருப்பார்கள்.  

சுழற்சித்தன்மையுடைய பங்குகள்: பெரும்பாலும் சந்தையின்போக்குக்கு நெருங்கிய தொடர்பைக் கொண்ட பங்குகளாக இது இருக்கும். எனவே, இவற்றின் சந்தை பெறுமதி, இலாபத்தன்மை என்பவை இதுதானா என நிச்சயமாக கூறமுடியாதவொன்றாக இருக்கும்.  

தற்காப்பான பங்குகள்:  எவ்விதமான புறக்காரணிகள் அல்லது பொருளாதார மாற்றங்களும் பாதிக்காத பங்குகள் இவையாகும். இவ்வகை பங்குகள் எவ்வகை பொருளாதார இடநேர்வுகளின்போதும் திடமான தன்மையைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளாக இருக்கும்.  

பங்குகளைத் தெரிவுசெய்யும்போதும், பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் ஒவ்வொரு முதலீட்டாளர்க்கும் இரண்டு வகையானத் தெரிவுகள் உள்ளன. ஒன்று பங்குதரகர்களின் வழிகாட்டலுடன் தமக்குத் தேவையான மேற்கூறிய பங்குகளை இனம்கண்டு அவற்றில் முதலிடக்கூடியதாக இருக்கும். அடுத்து, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை இணையத்தளத்திலுள்ள வழிகாட்டல்களுடன் தனக்குத் தேவையான பங்குகளை இனம்கண்டு முதலீடு செய்யக் கூடியதாக இருக்கும்.  

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. பொருளாதார, புறக்காரணிகளுக்கு அமைவாக எந்தத்துறையில் முதலீட்டை செய்யவேண்டும் என்பதை அறிந்துகொண்டு, அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களை இனங்காண முடியும். அதேபோன்று, மேற்கூறியக் காரணிகளை கொண்டு நிறுவனப் பங்குகளை ஆய்வு செய்யும்போது, ஊகப்பண்புடைய பங்குகள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.  

ஊகப்பண்புடைய பங்குகள்:  சந்தை ஆய்வின்போது, கவர்ச்சிகரமான தகவல்களையும், விரைவில் வளர்ச்சியையும் காட்டும் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிறுவனங்களின் பங்குகளே இவையாகும். இத்தகைய நிறுவனங்கள் தமது வளர்ச்சி தொடர்பில் விளம்பரப்படுத்தும்போது, அதற்கான அடிப்படை ஆதாரங்களை அளிக்காதுவிடின், அவை நட்ட அச்சத்தன்மை கொண்ட ஊகப்பண்புடைய பங்குகள் ஆகும். இவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.   

முதலீட்டு முறை: சாதாரணமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதனை அறிந்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த முதலீட்டு நிதியில் 60 சதவீத பங்குகளிலும் 30சதவீதத்ைத முறிகளிலும் (அபாயநேர்வு குறைவான அரச பங்குகள் என குறிப்படலாம்), 10 சதவீதத்ைதப் பணமாகவும் கொண்டிருத்தல் பரிந்துரைக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் 80 சதவீதப் பங்குகளை கொண்டிருப்பின், அது முதலீட்டின் உயர்நிலையாகக் கொள்ளப்படும். இந்த நிலையில், முதலீட்டாளர் இலாபத்தையோ அல்லது நட்டத்தினையோ அடையக்கூடிய உயர்நிலையைக் கொண்டிருப்பதாக இருக்கும்.  

மீள் முதலீட்டு சந்தர்ப்பங்கள்: பங்குசந்தையில் முதலீடு செய்தபின்பு, வேறொரு நிறுவனத்தின் பங்குகள் வாய்ப்பானதாக அல்லது முதலீட்டுக்கு ஏற்புடையதாக கண்டிருக்கக்கூடும்.  இதன்போது, தன்னிச்சையாக உள்ள பங்குகளை விற்பனைசெய்து அதை புதிய பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்னதாக, எதிர்கால முதலீட்டு உபாயங்களுக்கும் தற்போது செய்துள்ள எஞ்சிய முதலீடுகளுக்கும் நன்மை பயப்பதாக உள்ளதா  என்பதனை ஆய்வு செய்தே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.  

பங்குத்தரகர் ஏன் அவசியம்?

கொழும்பு பங்குச் சந்தையில் ஒரு பாதுகாப்பான, முறையான பங்குப் பரிவர்த்தனையை செய்வதற்கும், முதலீட்டளர்களை நேரடியாக இன்றி தரகர்கள் ஊடாக பங்குப் பரிவர்த்தனை கண்காணிப்பகங்கள் முறைமைபடுத்துவதாலும் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் பங்குத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். இதன்போது, பங்குதரகர்கள் ஆலோசனைகளை வழங்குவதுடன், பங்கு பரிவர்த்தனையில் சேவைக்கட்டணத்தை அடிப்படையாகக்கொண்டு, கொள்வனவு, விற்பனை கொடுக்கல் வாங்கல்களை முதலீட்டாளர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள்.  

நடைமுறையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது, சுமார் 31 உரித்துவமளிக்கப்பட்ட பங்குத் தாரர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் ஒருவரை உங்கள்  முகவராக அல்லது ஆலோசகராக கொண்டு பங்குச்சந்தையில் முதலீட்டாளராக உள்நுழைய முடியும்.  

பங்குகளை எப்போதெல்லாம் கொள்வனவு செய்ய முடியும் ?

சாதாரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை முதலாந்தரச் சந்தையில் அல்லது இரண்டாம்தரச் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும். முதலாம் தரச் சந்தை என்பது, புதிய பங்கு வழங்கலின் ஊடாக மூலதனத்தைத் திரட்டிக்கொள்ள உரித்துடமைக் கொண்ட நிறுவனங்களால் முதன்முறையாக பொது மக்களுக்குப் பொது வழங்கலை செய்யும் சந்தையாகும். அதுபோல, இரண்டாம் தர பங்குச் சந்தை எனப்படுவது,

ஏற்கெனவே முதலாம்தர சந்தையின் ஊடாக பங்குத் தாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்ட பங்குகள் மீளவும் மூலதன ஆதாயங்களுக்காகவும் ஏனைய நலன்களுக்காவும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற சந்தை இதுவாகும்.  புதிதாக பங்குகொள்ள விரும்புகின்ற எந்தவொரு முதலீட்டாளருமே அறிந்திரு க்கவேண்டிய அடிப்படையான விடயதானங்கள் ஆகும்.

 

http://www.tamilmirror.lk/வணிகம்/பங்குச்-சந்தையில்-என்ன-இருக்கிறது/47-242841

பங்குச்சந்தை பொருளாதாரத்தின் ஒரு பகுதி. இதை முழுமையாக தெரிந்தவர்கள் எவரும் இல்லை. ஓரளவிற்கு தெரிந்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு செல்லும் வாய்ப்புக்கள் உண்டு. 

நீங்கள் இதை அறிய எனது பார்வையில் தேவையான விடயங்கள் :
1. தொடர்ச்சியான ஆவல், தளராத காதல் 
2. இளவயதில் ஆரம்பிக்கவேண்டும் 
3. ஒரு பொட்காஸ்ட் இனை தொடர்ந்தும் கேட்கவேண்டும் 
4. ஒரு சிறு தொகையை ஒரு சந்தை இன்டெக்சிட்டில் முதலிட வேண்டும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையில் பங்குகளைத் தெரிவு செய்வது எப்படி?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 டிசெம்பர் 30

பங்குச் சந்தையில் பரிவர்த்தனை என்பது, தனியே பங்குகளை வாங்கி விற்பதன் மூலமாக ஈட்டப்படும் இலாபத்துக்காக மாத்திரம் இடம்பெறுவது அல்ல. மாறாக, பங்கு ஒன்றை நீங்கள் கொள்வனவு செய்யும்போது, நீங்கள் மறைமுகமாக அந்தப் பங்குக்குச் சொந்தக்காரரான நிறுவனத்தின் உரிமைத்துவத்தில் அங்கத்துவத்தைப் பெறுகிறீர்கள்.

அதிகளவில் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, அந்த உரிமைத்துவத்தின் மூலமாக, நிறுவனத்தின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய பங்காளராக மாறுவீர்கள். எனவே, பங்குச்சந்தையில் பங்குகளின் பரிவர்த்தனை என்பது, பங்கு கொடுக்கல் வாங்கலின் இலாபநட்டத்தைப் பார்க்கிலும், பங்குகளின் சொந்தக்காரரான நிறுவனங்களின் உரிமைத்துவத்தில் தாக்கத்தைச் செலுத்துவதாக அமைந்திருக்கிறது.

உதாரணமாக, பங்குகளை உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பரிமாற்றம் செய்வதன்மூலம் நிறுவனங்களின் உரிமைத்துவத்தில், உங்களுக்குத் தெரியாமலே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அத்தகைய மாற்றத்தில், ஒரு சிறு பங்காளராக நீங்களும் இருந்திருப்பீர்கள்.

எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பங்குச் சந்தையில் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, அந்தப் பங்குகளை எதனடிப்படையில் கொள்வனவு செய்யத் தெரிவு செய்ய வேண்டுமென்பது, கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயமாக அமைகிறது.  

இலங்கை போன்ற நாடொன்றில் பங்குச்சந்தையில் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் முதலீடுகளை மேற்கொள்ளுகிறார்கள். இவர்களில் சிலரின் நோக்கம் முதலீட்டு இலாபத்தை பெறுவதாகவும் சிலரது நோக்கம் பங்குகளின் ஊடாக அதிகாரமிக்க உரிமைத்துவத்தை நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளுவதாகவும் இருக்கும்.

இவற்றில் எந்த நோக்கத்தை நீங்களோ, முதலீட்டாளர்களோ கொண்டிருந்தாலும், அவர்கள் அந்த நோக்கத்தை அடைந்துகொள்ள எவ்வகை பங்கைத் தெரிவு செய்வதென்பது பல்வேறுவிதமான காரணிகளில் தங்கியுள்ளது. அவற்றையும், அவற்றின் அடிப்படையையும் அறிந்துகொள்வது பங்குச் சந்தையில் பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைவருக்குமே அவசியமானவொன்றாகும்.  

முதலீட்டாளர்கள், தமது தேவையை பூர்த்திசெய்துகொள்ள பங்குகளைத் தெரிவுசெய்யும்போது, வேறுபட்ட வழிமுறைகளை பயன்படுத்தவோ, பல்வேறுபட்ட காரணிகளையோ கவனித்து தமது கொள்வனவை முடிவு செய்துகொள்ள முடியும். அவ்வாறு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்களை பங்குசந்தையில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களும் ஈடுபடுபவர்களும் அறிந்திருத்தல் அவசியமாகிறது.  

நிறுவனமே பங்குகள்; பங்குகளே நிறுவனம்

என்னதான் முதலீட்டாளர்கள் பங்குகள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தினாலும் பங்குகளின் பெறுமதியும், அதன் வளர்ச்சியும் அந்ததந்தப் பங்குகள் உரித்தாகவுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

நிறுவனத்தின் செயற்பாடுகளின் விளைவாக ஏற்படக்கூடிய மாற்றங்கள், அகபுற காரணிகளால் நிறுவனத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்துமே, பங்கின் விலையிலும் சரி, கொடுக்கல் வாங்கலிலும் சரி தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.  

உதாரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் வளர்ச்சியடைந்துவரும் துறைகளில் முதன்மையான துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. வருடம்தோறும் சராசரியாக 22 சதவீத வளர்ச்சியை இந்தத்துறைக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அதீத உதவிகளைச் செய்துவருகிறது. முதலீட்டாளர் ஒருவரின் பார்வையில், இந்தச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியும் அரசாங்கத்தின் ஆதரவும், சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களின் எதிர்காலம் மிகச்சிறப்பாக அமையும் என்கிற நம்பிக்கையையே ஏற்படுத்தும். எனவே, அவர்கள் கொழும்பு பங்குச்சந்தையில் சுற்றுலாத்துறையின் கீழுள்ள பட்டியல்படுத்தப்பட்ட 38 நிறுவனங்களிலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால், இவ்வாறு வகைபடுத்தப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுமே, மிகச்சிறப்பாக செயற்படும் என உறுதியாகக் கூறமுடியாது, காரணம், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, அரச ஆதரவு போன்ற சாதகப் புறக்காரணிகள் மட்டுமே இதற்க்கு போதுமானதாக இருக்காது.

மாறாக, குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகளும், எதிர்காலத் திட்டங்களும் அதன் வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்துவதாக இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் எதிர்காலம் கொண்ட துறைகளைக் கண்டறிவதுடன், அதனுள்ள நிறுவனங்களில் எவை மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.  

நிறுவனத்தின் தன்மை

முதலீட்டாளர் தன் முதலீட்டுக்கு பாதுகாப்பானத் துறையைப் பங்குச் சந்தையில் கண்டறிந்த பின்பு, எந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் எனும் சிக்கலான முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன்போது, குறித்தத் துறையிலுள்ள நிறுவனங்களின் கடந்தகால, நிகழ்கால பெறுபேறுகளைக் கவனத்தில் கொள்ளுவதுடன், எதிர்காலத்தில் எவ்வகையானத் திட்டங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

இதற்கு நிறுவனங்களின் தன்மையை வெளிப்படுத்தும் நிதியாண்டு அறிக்கைகளை பயன்படுத்த முடியும். இதில் வெளியிடப்படும் நிதியறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு முதலீட்டாளர்களும் நிதிசார் விகிதங்களை கணிப்பிட்டு நிறுவனத்தின் போக்கை கண்டறிய முடியும்.

நிதிசார் விகிதங்கள், கடந்தகால நிதியியல் அறிக்கைகள்,  செயற்பாடுகள் என்பன ஓரளவுக்கு நிறுவனத்தின் தன்மை, அதன் எதிர்கால வளர்ச்சி என்பவற்றை எடுத்துகாட்டுவதாக இருக்கும். இதனடிப்படையில், எந்த நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்கிற சரியான முடிவுகளை எடுக்க முடியும்.  

முதலீட்டாளர் கொடுக்க விரும்பும் பங்கின் விலை

பங்குச் சந்தையில் மேற்கூறிய முடிவுகளின் பிரகாரம், முதலீட்டாளர் தனது முதலீட்டுக்கான நிறுவனப் பங்கை தேர்வு செய்தாலும், குறித்தப் பங்குக்கு வழங்கக்கூடிய பெறுமதிக்கு மேலாக அவர்கள் வழங்க விரும்புவதில்லை. இது நிறுவனச் செயற்பாடுகளுக்கும், பங்கின் பங்குச் சந்தை பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அதாவது, பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் அதீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதா அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பொறுத்தே முதலீட்டாளர்களின் முதலீட்டு தீர்மானம் அமைய வேண்டும்.  

பெரும்பாலும் நிறுவனங்களின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுமிடத்து குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளிலேயே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். காரணம், எதிர்காலத்தில் இந்தப் பங்குகளின் பெறுமதி அதிகரிக்ககூடும் என்கிற அடிப்படையில் இந்த முதலீட்டை செய்ய விரும்புவார்கள்.

ஆனாலும், இவ்வவகை முதலீட்டை செய்யும்போது, நிறுவனத்தின் பெறுமதி சந்தையில் குறைத்து மதிப்பிடப்படுவதற்கான ஏனைய காரணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

சில சமயம், நிறுவனம் மிகச்சிறப்பாக செயற்படுகின்ற போதிலும், தன்னகத்தே திறமையற்ற முகாமைத்துவத்தை கொண்டிருந்தாலும், அதீதக் கடனைக் கொண்டிருந்தாலும் முதலீட்டாளர்கள் குறித்த நிறுவனத்தின் பெறுபேறுகளுக்கு இணையான பெறுமதியை வழங்க முன்வரமாட்டார்கள். எனவே, இதுபோன்ற பாதக காரணிகளையும் முதலீடு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.  

பங்கின் வளர்ச்சியும் பங்கிலாபமும்

முதலீட்டாளர்கள் பங்குகளை தெரிவு செய்யும்போது, முதலீட்டு இலாபம் கொண்ட பங்குகளை ஒருசாரார் தெரிவு செய்ய விரும்புவதுபோல, மிக நீண்டகாலத்தில் வளர்ச்சியைத் தரக்கூடியப் பங்குகளைத் தெரிவுசெய்யும் ஒருசாராரும் முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். இவர்கள், இவ்வாறு வளர்ச்சித்தன்மை கொண்ட பங்குகளை இனம்கண்டு அதற்கு சந்தை பெறுமதியிலும் பார்க்க அதிக பெறுமதியை வழங்க முனைவார்கள்.

இதற்குப் பிரதான காரணமே, அவர்கள் வழங்க விரும்பும் பெறுமதிக்கு மேலாக நீண்டகாலத்தில் அவர்களால் இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கணிப்பீடே ஆகும். இது அதீத இலாபத்தையும் அதற்குச் சமமாக அதீத நட்டத்தையும் தரக்கூடிய ஓர் முதலீட்டு தீர்மானமாகும். 

எனவே, இத்தகைய தீர்மானத்தை ஒரு முதலீட்டாளர் எடுக்கும்போது அவர் அது தொடர்பில் மேலதிக ஆய்வுகளையும் கணிப்பீடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

பங்குகளில் முதலீடு செய்யும்போது, அவை தனித்து பங்குகளின் விலை அதிகரிப்பின் மூலமான முதலீட்டு இலாபத்தை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில்லை.

மாறாக, நிறுவனத்தின் செயற்பாடுகள் மூலமாக ஈட்டப்படுகின்ற இலாபத்தில் ஒரு பகுதியை, பங்கிலாபமாகவும் முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக் கொடுக்கின்றது. எனவே, பங்கிலாபத்தையும் தனது முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது, ஒரு முதலீட்டாளர் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுமே பங்கிலாபத்தை வழங்கும் நிறுவனங்களாக இருக்காது. அதற்காக, பங்கிலாபத்தை வழங்காத நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயற்படாத நிறுவனங்கள் எனவும் ஆகாது.

காரணம், சில சமயங்களில் எதிர்கால முதலீட்டுச் செயற்பாடுகளுக்காக பங்கிலாபம் வழங்கலை சில நிறுவனங்கள் தள்ளிப்போடக் கூடும். எனவே, ஒவ்வொரு நிறுவனத்தின் திட்டங்கள், அதன் நிதியறிக்கைகளை ஆய்வு செய்த முதலீட்டாளர்கள், எவ்வகை பங்கை கொள்வனவு செய்யவேண்டும் என்பதனை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  

மேற்கூறிய அனைத்துமே, பங்குசந்தையொன்றில் குறுங்கால, நீண்டகால முதலீட்டு தீர்மானத்தை கொண்டுள்ள முதலீட்டாளர் ஒருவர் தனது பங்கு கொள்வனவை செய்ய முதல் கவனத்தில் கொள்ளவேண்டிய அடிப்படையான விடயங்கள் எதுவென சுட்டிக்காட்டியுள்ளது. 

இவற்றுடன், மாற்றமடையக்கூடிய இதர காரணிகளான அரசியல், அதுசார் நிதியியல் கொள்கைகள் தொடர்பிலும் ஒரு முதலீட்டாளர் கவனத்தில் கொண்டிருப்பது அவசியமாகிறது. 

இல்லையேனில், அவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒருநொடிப் பொழுதில் முதலீட்டாளர்களின் முதலீட்டு முடிவுகளை தலைகீழாகவே மாற்றிவிடக் கூடும்.  

http://www.tamilmirror.lk/வணிகம்/பங்குச்-சந்தையில்-பங்குகளைத்-தெரிவு-செய்வது-எப்படி/47-243170

 

பங்குச் சந்தை முதலீட்டில் ஏமாறாமல் இருக்க... பொதுவான 4 யோசனைகள்

அண்மைக்காலமாக பங்குச் சந்தை குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இடையே அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது. முதலீட்டாளர்களின் பணம் மற்றும் பங்குகளை சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.

விஷயம் தெரியாதவர்களிடமிருக்கும் அறியாமையை, விஷயம் தெரிந்தவர்கள் தவறாகப் பயன்படுத்துவதுதான் முறைகேட்டுக்கான அடிப்படை. இந்த இடைவெளி அனைத்துக் காலகட்டங்களிலும் இருந்துவந்திருக்கிறது. இனிவரும் காலங்களிலும் இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் தங்களிடமிருக்கும் அறியாமையிலிருந்து விடுபடுவதுதான் இது போன்ற முறைகேடுகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழி.

ஒரு காலத்தில் பங்குகள் வாடிக்கையாளர்களின் கணக்குக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்படும்; அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடந்துவந்தன. இது தவிர, வாடிக்கையாளர்களின் கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி பங்குப் பரிவர்த்தனையில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் இதுபோல, பல வகைகளில் முறைகேடு நடந்திருக்கிறது.

முறைகேடுகள் நடக்கும்போதெல்லாம் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க விதிமுறைகளை மாற்றி, அவர்களின் முதலீட்டை உறுதிப்படுத்தி வந்திருக்கிறது செபி. எத்தனை விதிமுறைகள் வந்தாலும் பங்குச் சந்தையில் நம் பணத்தை முதலீடு செய்யும்போது அதற்கான முதல் பொறுப்பாளி நாம்தான் என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2N1C7aP

பொதுவான 4 யோசனைகள்:

* உங்கள் புரோக்கிங் நிறுவனத்திடம் தேவையைவிடக் கூடுதல் தொகையை அதிக காலத்துக்கு வைத்திருக்க வேண்டாம்.

* உங்கள் மொபைல் அல்லது இ-மெயில் ஐடி-யில் மாற்றம் இருந்தால், உடனடியாக நீங்கள் டீமேட் கணக்கு வைத்திருக்கும் நிறுவனத்திடம் தெரிவிக்கவும்.

* உங்கள் கணக்குகளில் ஏதேனும் பிழை இருப்பதாக உணர்ந்தால், தயக்கமின்றி புரோக்கிங் நிறுவனத்தை அணுகவும். அங்கு தீர்வு கிடைக்கவில்லையென்றால், அடுத்தகட்டமாக எக்ஸ்சேஞ்ச் அல்லது டெபாசிட்டரி அமைப்புகளைத் தொடர்புகொள்ளவும்.

* புரோக்கிங் நிறுவனத்திடமிருந்து வரும் மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்களை உடனடியாகப் படிக்கவும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முறை எளிதாகிவிட்டது என்பதற்காக எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என எண்ண வேண்டாம். பணத்தைவைத்து பணம் சம்பாதிக்கிறோம். எனவே, பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்துவிட்டாலே பாதி வெற்றிதான். மீதமிருக்கும் பாதி வெற்றி, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பங்கு மற்றும் உங்கள் உத்தியைப் பொறுத்தது.

பங்குச் சந்தை முறைகேடுகள் மற்றும் இழப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அது முதலீட்டாளர்களின் கடமையும்கூட.

உடனுக்குடன் தகவல்களை அறிதல், பரிவர்த்தனைக் கணக்குக்கான ஸ்டேட்மென்ட், பவர் ஆஃப் அட்டர்னி, பணப்பரிவர்த்தனை பாடங்கள் மற்றும் எச்சரிக்கையாக அணுகும் முறையை விவரிக்கும் வழிகாட்டுதல்களை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பங்கு முதலீடு... ஏமாறாமல் இருக்க என்ன வழி? - வழிகாட்டும் ஆலோசனை https://www.vikatan.com/business/share-market/guidance-for-avoid-cheat-in-stock-investing

https://www.vikatan.com/news/share-market/4-tips-to-avoid-failures-in-share-market-investment

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.