Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழர்களின் எழுத்தறிவு

Brami-letters.jpg

இந்தியாவின் முதன்மையான எழுத்துக்களாக வட இந்தியாவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் மௌரியப் பேரரசன் அசோகனுடைய காலத்தில் வழக்கிலிருந்த பிராமி என்னும் எழுத்து வகை தான் அறிஞர்களால் இதுவரை பேசப்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த எழுத்து வகை அசோகனுடைய பிராமியிலிருந்து மாறுபட்ட எழுத்தாகவும் தமிழ் மொழிக்கே உரிய எழுத்தாகவும் விளங்கியமையால் அதனைதமிழிஅல்லதுதமிழ் பிராமிஎன அறிஞர்கள் அழைத்தனர். தமிழகத்தில் மதுரையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள இயற்கையாக உள்ள குகைகளின் விளிம்புகளில் அதிகமாகவும் பிற மாவட்டங்களில் பரவலாகவும் இதுவரை 35 ஊர்களில் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழி எழுத்து வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை முறையாக ஆய்வு செய்து மிக அரிய ஆய்வு நூல் ஒன்றை ஐராவதம் மகாதேவன் 2003 ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் திருத்திய பதிப்பை 2014 ஆம் ஆண்டு வெளியிட்டார்

இக்குகைக் கல்வெட்டுகள் தவிர தமிழகத்தில் இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட 175 இடங்களில் சங்க காலத்தைச் சார்ந்த 36 அகழாய்வு இடங்களில் மக்கள் பயன்படுத்திய மட்கல ஓடுகளிலும் தமிழி எனப்படும் எழுத்து வகை காணப்படுகிறது. இவற்றைத்தவிர  தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி  என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 நடுகற்களிலும் புதுக்கோட்டை நகருக்கு அருகில் உள்ள பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லிலும் தமிழி எனப்படும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவை தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் கல்வெட்டுகளாகும். இவற்றைத் தவிர   தமிழகத்தில் சங்க கால நாணயங்களிலும் முத்திரைகளிலும் நூற்றுவர் கண்ணனார் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் சாதவாகனர் நாணயங்களிலும்  தமிழி எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.

தமிழகத்தை தவிர வட இந்திய மாநிலங்களிலும் தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுகளை செய்துள்ளன. வரலாற்றுப் புகழ்பெற்ற நாலாந்தா, பிரயாகை, (அலகாபாத்) ஹஸ்தினாபுரம், பாடலிபுத்திரம் (பாட்னா)  குருஷேத்திரம் இந்திரப்பிரஸ்தம் அஹிச்சத்திரா,. அமராவதி, பட்டிபொருளு, நாகர்சுனகொண்டா, சன்னதி போன்ற பல வட இந்திய நகரங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்நகரங்களில் அகழாய்வுகளில்  கண்டுபிடிக்கப்பட்ட பானைகளில் எழுத்துப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் தமிழகத்தில் ஏறக்குறைய கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழி எழுத்துக்களை எழுதுகின்ற வழக்கம் இருந்துள்ளமையையும் தமிழர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாக விளங்கியிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

 அண்மைக்காலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக மதுரைக்கு அருகில் கீழடியின் நடைபெற்ற அகழாய்வில் 160 க்கும் மேற்பட்ட பானைகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் காலக்கணக்குப்படி தமிழக அரசு தொல்லியல் துறை அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்ததில் தீதன் என்ற பெயர் பொறித்த பானை ஓட்டின் காலம் அதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்தின் கால அடிப்படையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளது. இக்காலக் கணிப்பு ஏற்கனவே பொருந்தல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பானை எழுத்துப் பொறிப்பின் காலத்தை விட ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பொருந்தல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்பின் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே இந்தியாவில் மிகத் தொன்மைக் காலத்திலேயே எழுத்தறிவு பெற்ற மக்களாக தமிழர்கள் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.  

தமிழக அகழாய்வுகளில்  இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் என்ற இடத்தில் 1400க்கும்  அதிகமான மட்கலன்களில் ஆள் பெயர்கள் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் 160 க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் எழுத்துப் பொறிப்புகள் கீழடி அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு இராமநாதபுரத்தில் அழகன் குளம் ஆகிய இடங்களில் செய்த அகழாய்வுகளிலும் அதிக அளவில்  தமிழி எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதன், அந்துவன், குவிரன்,  கண்ணன், கீரன், கொற்றி, நெடுங்கிள்ளி, சாத்தன்  போன்ற பெயர்கள் இவற்றுள் அடங்கும் மேலும் சோழர்களின் தலைநகரமான உறையூர் அவர்களின் துறைமுகப்பட்டினமான காவேரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமான கொற்கை,  சேரர்களின் தலைநகரமான கரூவூர் அவர்களின் துறைமுகப்பட்டினமாக மேலைக்கடற்கரையில் இருந்த முசிறி ஆகிய இடங்களிலும் இவ்வகை பானை எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன.  

இவை மட்டுமன்றி தமிழர்கள் கடல்கடந்து வாணிகம் செய்த மேலை நாடுகளான செங்கடல் பகுதிகளில் இருந்த எகிப்து நாட்டின் துறைமுகங்களாக விளங்கிய குசிர் அல் குதாம் என்ற நகரத்திலும் பெரினிகே என்ற இடத்திலும் ஓமன் பகுதியில் கோர் ஒரி என்ற இடத்திலும் அவர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் தமிழ் மொழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் அந்நாடுகளின் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே தமிழர்கள் கடல்கடந்து மத்தியத் தரைக்கடல் பகுதி வரை கப்பல்கள் செலுத்தி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இவை தெரிவிப்பதுடன் தமிழி எழுத்தின் பரவல் அந்நாடுகள் வரை சென்றுள்ளதை அறிய முடிகிறது. இதே போன்று தமிழகத்திலிருந்து கீழை நாடுகளுக்குச் சென்ற வணிகர்களும் தொழிலாளர்களும் தமிழி எழுத்துக்களில் எழுதியுள்ளனர். தாய்லாந்து பகுதியில் கோலங்க்தோம் என்ற இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகப் பொற்கொல்லர் ஒருவர் பொன்னை ஆய்வு செய்து உரசிப் பார்க்கும் கல்லில் பெரும்பதன் கல் என தனது பெயரை எழுதியுள்ளார். பத்தர் எனப்படுபவர் பொற்கொல்லர் ஆவார். இவர் பொன்னை ஆய்வு செய்து பார்க்கும்  தன் உடைமையான அக்கல்லில் அவரது பெயரை தமிழி எழுத்துப் பொறிப்பில் குறித்துள்ளார்.

சங்க இலக்கியங்களில் ஆநிரை மீட்டல் நிரை கொள்ளல், ஊரைப் பகைவரிடமிருந்து காத்தல்  போன்ற வீரச் செயல்கள் குறித்து செய்திகள் அதிமாக உள்ளன. அவ்வாறு மீட்டு இறக்கும் வீரர்களுக்கு நடுகல் எடுப்பது தமிழர் மரபு. அவ்வகையில் புலிமான் கோம்பை தாதப்பட்டி பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த நடுகற்களே இந்தியாவில் கிடைத்த தொன்மையான நடுகற்களாகும். இவற்றின் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டாகும். இவற்றின் மூலம், தமிழகத்தில் குக்கிராமமாக விளங்கிய ஊர்களிலும் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. மேலே குறிப்பிட்டது போல் வட இந்தியாவில் பல பெருநகரங்கள் இருந்தும் அங்கு மக்கள் வழக்கில் எழுத்தறிவு மிகக் குறைவாகவே இருந்தது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகப் பேரரசன் தனது பௌத்த மதக் கொள்கைகளை சொல்வதற்கு கல்வெட்டுகளை வெளியிட்டு அவற்றைப் படித்துச் சொல்வதற்காக அதிகாரிகளை நியமித்ததாக அக்கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றார். அக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த மெகஸ்தனிஸ் வட இந்திய மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவே பெரும்பாலும் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார். இவற்றை நோக்கும் பொழுது தமிழகத்தில் பாமர மக்கள் பயன்பாட்டில் நாள்தோறும் புழங்கிய மட்கலன்களில் தங்களது பெயர்களைக் குறித்து வைத்துள்ளனர் என்பதும் அசோகன் காலத்திற்கும் முற்பட்ட 3 நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே தமிழகத்தில் எழுத்தறிவு உன்னத நிலையில் இருந்துள்ளதையும் நாம் உய்த்துணர முடிகிறது.

ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல், ஊர்மீது படையெடுத்தவர்களை எதிர்கொண்டு மீட்டு இறந்த மறவர்கள்ளுக்கு எழுத்துடை நடுகற்கள் எடுத்து மக்கள் அதனை படித்து அறிய  வகை செய்துள்ள வரலாற்றைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் தொன்மையான எழுத்துவகை தமிழி எனப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களே என்பதும் தமிழர்கள் எழுத்தறிவில் 2600 ஆண்டுகளுக்கும் முன்பாகவே சிறந்து விளங்கினர் என்பதும் புலப்படுகிறது. எனவே தான் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இலட்சம்  கல்வெட்டுகளில் அறுபதாயிரம் கல்வெட்டுகள் தமிழ் எழுத்தில் தமிழ் மொழியில் உள்ளன என்பதும் தெளிவாகிறது.

 

தினமணி


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.