Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவளையும் இளவரசனும் - ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

தவளையும் இளவரசனும் - ஜெயமோகன்

DIY-diamond-painting-cross-stitch-frog-king-lotus-leaf-handmade-diamond-embroidery-full-circle-inlaid-decorative.jpg

இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல் உலுக்கியது. ஏனென்றால் நான் அந்தத் தவளையை மணந்த இளவரசனாக என்னை கற்பனை செய்துகொண்டிருந்தேன்.

மியான்மாரின் மேய்க் ஆர்க்கிபெலகோவுக்கு மேலும் எண்பது கிலோமீட்டர் தொலைவில் தனியார் சுற்றுலா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கௌங்கையின் என்னும் இந்தச் சிறிய தீவின் ஆடம்பரக் குடிலின் அறைக்கு வெளியே புலரிவெளிச்சம் கடல் அலைகளின் மேல் அற்புதமாக ததும்பிக்கொண்டிருக்க, சுவர்கள் ஒளியலைகளாக அசைய, திரைச்சீலைகள் மலரிதழ்கள்போல வண்ணம் பொலிந்துகொண்டிருக்க நான் என் போர்வையை விலக்கி கைகளைத் தூக்கி சோம்பல்முறித்துக்கொண்டு நேற்று இரவெல்லாம் என்னுடன் உறவாடிய பர்மிய அழகியைப் பார்த்து “குட்மார்னிங்”என்று சொன்னபோது அவள் அறையிலிருந்த கண்ணாடித் தொட்டியில் நீந்திய மீன்களில் ஒன்றை கையால் பிடித்து அப்படியே தூக்கி துள்ளத்துள்ள வாயிலிட்டு முறுக்கு போல மென்று தின்றபடி என்னைப் பார்த்து புன்னகைத்து ‘மார்னிங்” என்றாள்.

நான் குமட்டி மடங்கிவிட்டேன். கையால் வாயை அழுத்தியபடி ஒலிகளை எழுப்பினேன். அவள் அதை விழுங்கிவிட்டு அருகிலிருந்த கூஜாவிலிருந்து நீரை கண்ணாடி கோப்பையில் ஊற்றி என்னருகே கொண்டுவந்து நீட்டி “என்ன ஆயிற்று…?தண்ணீர் குடி” என்றாள்.

நான் “இல்லை, பரவாயில்லை” என்றேன்.

“என்ன ஆயிற்று?”

“குமட்டல்”

“நேற்று அந்த மார்ட்டினி உனக்கு ஒத்துக்கொள்ளவில்லை”

“அதில்லை”

“உனக்கு ரத்த அழுத்தம் உண்டா?”

“இல்லை”என்றபின் நான் கழிப்பறை நோக்கி ஓடினேன். வாந்தி நின்றுவிட்டது என்று தோன்றியது, வயிறு அமைதியாக இருந்தது. கழிப்பறை முன் சென்று நின்று கண்ணாடியில் என்னை பார்த்தேன். சற்றுமுன் பார்த்த காட்சியின் நினைவு எழ பிளிறலோசையுடன் வாந்தி எடுத்தேன். என் உடல் குலுங்கியது. கண்ணீர் வழிந்தது. மூக்கிலிருந்தும் நீர் வழிந்தது.

“என்ன ஆயிற்று? டாக்டர் தேவையா?” அவள் வாசலுக்கு அப்பால் நின்று கேட்டாள்.

நான் “வேண்டாம்” என்றேன்.

“நீ நேற்று எதையுமே சாப்பிடவில்லையே!” என்றாள்.

நான் சைவ உணவுக்காரன். அதை விடுதிக்காரனுக்குப் புரியவைக்க என்னுடைய முழு மொழித்திறனையும் காட்டினேன். ஓவியம் நடனம் ஆகிய கலைகளில் உள்ள திறமையையும் காட்டியபின் ஒரு கோப்பை பாலும் ஓரிரு ரொட்டித்துண்டுகளும் காய்கறிகளும் பழத்துண்டுகளும் சாப்பிட்டேன். அவள் அங்கிருந்த எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாள்.

“இதெல்லாமே அசைவமா?”என்று கேட்டேன்.

“அசைவம் என்றால்?”

“விலங்குகள்”

அவள் “இல்லை” என்றாள். “மீன்கள் உண்டு. பூச்சிகள்கூட உண்டு”

அப்போதே எனக்கு ஒரு சிறுபதற்றம் ஏற்பட்டது. ஆனால் உலகில் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் ஒவ்வொரு வகை. சில இடங்களில் புழுக்கள் கூட உணவு.

“இங்கே புழுக்களை உண்கிறார்களா?”

“ஆம், சோகோ புழுக்கள் சுவையானவை”

அவை என்ன வகை புழுக்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்குள் பேரொலியுடன் இசையை ஆரம்பித்துவிட்டார்கள். மியான்மாரில் அப்போதும் போனிஎம் தான் மோஸ்தர். ராரா ரஸ்புடின். அவள் இடையை அசைத்து மென்மையாக நடனமாடியபடியே சாப்பிட்டாள்.

மிகச்சிறிய உடம்பு. பின்னாலிருந்து பார்த்தால் ஒரு சிறுமி என்று சொல்லிவிடலாம். அல்லது சிறுவன் என்று. குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிர். குறுகிய தோள்கள், குறுகிய பின்பக்கம், சீனப்பொம்மை போல. ஆனால் சீனர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடு. இவள் நிறம் சீனர்களைப்போல பளீர் வெண்மை இல்லை. கொஞ்சம் மங்கலான பீங்கான் நிறம். கண்களும் உதடுகளும் கொஞ்சம் பெரியவை. சீனமொழி அளவுக்கு மூக்கோசை இல்லாத மொழி.

இரவு நான் அவளிடம் கேட்டேன் ‘நீ எந்த இனக்குழுவைச் சேர்ந்தவள்?”

‘அது எதற்கு?” என்றாள்.

“இல்லை, சும்மா”

‘நீ என்னை கல்யாணமா செய்துகொள்ளப் போகிறாய்?”

‘அய்யய்யோ!”என்றேன்.

“ஏன்? என்ன பதற்றம்?”

“ஊரில் என் அம்மா எனக்கு பெண்பார்க்கிறார்… அம்மாவை நினைத்துக்கொண்டேன்”

“அம்மாவா உனக்கு பெண் பார்க்கிறாள்?”

“ஆமாம்…”

‘அவளா முடிவுசெய்வாள்?”

“ஆமாம்”

“உன் அம்மா உன் பெண்ணுடன் படுத்துப் பார்ப்பாளா என்ன?”

நான் கோபத்துடன் “வாயை மூடு!” என்றேன்.

“சும்மா வேடிக்கைக்காக கேட்டேன்”

‘இதுவா வேடிக்கை… முட்டாள்தனம்”

‘பையனுக்கு அம்மா பெண்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா?”

‘அது எங்களூர் வழக்கம்…”

“எல்லாருமேவா?”

“ஆமாம், பெரும்பாலும்”

“என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை”

“அது அப்படித்தான். எனக்கு நிறைய வேலைகள். நிறைய பயணங்கள். எனக்குப் பொருத்தமான பெண்ணை தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை”

அவள் தன் ஆடையைக் கழற்ற கையை பின்னால் கொண்டுபோனாள். பின்னர் என்னைப் பார்த்து “நீ பின்னால் திரும்பிக்கொள்” என்றாள்.

“ஏன்? நான் உன்னை பார்த்தாலென்ன?”

“பர்ர்க்கலாம். ஆனால் ஆடை கழற்றும்போது பார்க்கக்கூடாது”

‘இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது”

“அது அப்படித்தான்… எங்கள் வழக்கம்… கண்ணை மூடு”

நான் கண்ணை மூடினேன். அவள் ஆடையைக் கழற்றும் ஓசை மென்மையான ரகசியமாக ஒலித்தது. அது அத்தனை கிளர்ச்சியானது என்று நான் உணர்ந்திருக்கவில்லை.

அவள் ஓடிவந்து மெத்தையில் பாய்ந்து என்னை கட்டிக்கொண்டாள். என் உதடுகளில் முத்தமிட்டாள்.

“நீ இனிமையானவன்”

“நீயும்”

அவள் உதடுகள் இரண்டு சிறு மொட்டுகள் போல. மார்புகள் இரு சிறு பித்தளைக் கதவுக்குமிழிகள்.

“நீ இதுவரை பெண்ணை கண்டுபிடிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது”

‘நான் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டேன். மணமுறிவு”

“ஓ… அவள் யார்?”

“என் ஊர்க்காரிதான்…”

‘அம்மா பார்த்துவைத்தவளா?”

“ஆமாம். அப்போது அப்பாவும் இருந்தார். என் ஊர், என் இனக்குழு, எங்களுக்கு நன்றாகத் தெரிந்த குடும்பம். படிப்பு, பொருளாதாரச் சூழல் எல்லாமே பொருத்தமானவை. அதோடு ஜாதகம்… நீ கேள்விப்பட்டிருப்பாய். எங்களூரில் பிறந்ததுமே ஒரு சோதிடக்கணிப்பைச் செய்து எழுதி வைப்பார்கள். மனிதர்கள் பொருந்தினால் போதாது, அதுவும் பொருந்தவேண்டும். எனக்கு எட்டு பொருத்தங்களும் இருந்தன”

‘நீங்கள் எத்தனை ஆண்டு சேர்ந்து வாழ்ந்தீர்கள்? நான் கேட்கக்கூடாது என்றால் மன்னித்துவிடு”

“நான்கு ஆண்டுகள்.. ஒரு குழந்தை. பெண்குழந்தை. அவளை நான் இப்போதும் அடிக்கடி சந்திக்கிறேன். அட்லாண்டாவில் இருக்கிறாள்”

அவள் “துயரமானது” என்றாள்.

“அவளுக்கு மறுபடியும் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்கன். வெள்ளையன்”

“மகிழ்ச்சியாக இருக்கிறாளா?”

“தெரியவில்லை”

“அதைத்தானே நீங்கள் முதலில் பார்ப்பீர்கள்?”

“மகிழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கு முன்னரே அவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது. மணமுறிவுக்கு மறுவாரமே அவர்கள் மணந்துகொண்டார்கள். அப்போதுதான் எனக்கு தெரியும்”

அவள் சிரித்தாள். “பெண்கள் புத்திசாலிகள்”

நான் அவளை உடலுடன் சேர்த்துக்கொண்டேன். மிகச்சிறிய உடல். “நீ சிறுவனைப் போல் இருக்கிறாய்”

“நானும் அதைத்தான் நினைத்தேன். நீங்களெல்லாம் ஏன் இத்தனை பெரிதாக இருக்கிறீர்கள்… பெரிய கை, பெரிய வயிறு… விரல்கள் கூட பெரிது… உன் கைகளை பார்த்தால் இரண்டு சிறுவர்கள் பக்கமாக நிற்பதுபோலிருக்கிறது”

“பர்மியப் பெண்கள் எல்லாருமே பீங்கான் பொம்மைகள் போலிருக்கிறீர்கள்”

”அப்படியா?” என்றாள்.

எங்கள் குரல்கள் கசங்கிக்கொண்டிருந்தன.

“உங்கள் உடல்கள் பிளாஸ்டிக் போல தோன்றுகின்றன”

“உங்கள் உடல்களில் ஏன் இத்தனை முடி?” அவள் என் மார்பின் முடியைப் பிடித்து “இங்கே குரங்குகளுக்குத்தான் இத்தனை முடி” என்றாள்.

நான் அவளை செல்லமாக தோளில் அறைந்தேன்.

அதன் பின் அவள் கழிப்பறை சென்றாள். நான் கைநீட்டி கண்ணாடிக் கோப்பையை எடுத்து ஒரு விரற்கடை மார்ட்டினி விட்டுக்கொண்டேன்.

அவள் வெளியே வந்து “நீ ஏற்கனவே குடித்துவிட்டாய்”என்றாள்.

நான் கோப்பையுடன் சாய்ந்துகொண்டு “மார்ட்டினி இதமானது” என்றேன்.

“உன் அம்மா இப்போதும் அதேபோல பொருத்தங்கள் பார்க்கிறாரா?”

“ஏன் திடீரென்று? கழிப்பறையில் அதைத்தான் நினைத்துக்கொண்டிருதாயா?”

அவள் சிரித்தபோது மேலும் சிறுமியாக ஆனாள். “ஆமாம்” என்றாள்.

“அம்மா நினைக்கிறாள், சென்றமுறை ஜாதகம் பார்த்தவர் ஏதோ மறைத்துவிட்டார் என்று. ஆகவே இன்னும் சரியாக பொருத்தம் பார்க்கிறாள். அத்தனை பொருத்தமும். ஒன்றுகூட குறையாமல்”

“முதல் பொருத்தமாக என்ன பார்ப்பார்கள்?”

“பெண் கன்னியாக இருக்கவேண்டும்”

“கன்னி என்றால்? கிறித்தவ தெய்வம்தானே?”

“இல்லை. எவருடனும் உடலுறவு கொள்ளாதவள்”

“ஏன்?”

“அது ஒரு வழக்கம்”

“எத்தனை வயதுவரை?”

“திருமணம் வரை”

“அடடா”

“எத்தனை ஆண்டுகளாக?”

“என்ன?”

உன் முந்தைய மனைவி எத்தனை ஆண்டுகள் உடலுறவு இல்லாதவளாக இருந்தாள்?”

“பதினொன்று”

“அய்யோ!” என்று வாயைப்பொத்தி கண்களால் சிரித்தாள். “உனக்கு என்ன வயதாகிறது?”

“நாற்பத்திரண்டு”

“அப்படியா? எனக்கு வெளியூர்க்காரகளின் வயதை கணக்கிடவே முடிவதில்லை”

“எனக்கு உங்களூரில் சிறுமி கிழவி என இரண்டே வேறுபாடுகள்தான் தெரிகின்றன”

அவள் சிரித்துக்கொண்டு வந்து படுத்து என் கையிலிருந்த மார்ட்டினியை வாங்கிக்கொண்டாள்.

“உன் இனக்குழுவினர் எங்கே இருக்கிறார்கள்?” என்றேன்.

“வட மியான்மாரில். ஐராவதிக்கரையில் எங்கள் ஊர்கள் இருக்கின்றன”

“அங்கெல்லாம் அரசாங்கமே இல்லை என்பார்கள்”

‘பெரும்பாலும் இனக்குழுத்தலைமைகள்தான்… எந்த நவீன வசதிகளும் இல்லை. படகில் போய் அதன்பின் ஒற்றையடிப்பாதையில் காடுவழியாக செல்லவேண்டும்…என் ஊரை அடைய பதினெட்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும். இருபக்கமும் அடர்ந்த காடு…வழிதவறினால் கண்டுபிடிக்கவேமுடியாது”

“உலகிலேயே இங்கேதான் இத்தனை அடர்ந்த காடு இருக்கிறது என நினைக்கிறேன்”

“காட்டை வெட்டி கடத்த வழியே இல்லை. ஐராவதிக்கரை காடுகள் கொஞ்சம் அழிக்கப்பட்டிருக்கின்றன. என் ஊர் ஊரே இல்லை… காட்டுக்குள் கொஞ்சம் மூங்கில்குடில்கள். அதைத்தான் ஊர் என்கிறோம்”

“விவசாயம் செய்வதில்லையா?”

“எங்கள் இனக்குழு விவசாயம் செய்வதில்லை…வேட்டையும் உணவை சேகரிப்பதும்தான்… எங்கள் காட்டில் எல்லாவகை உணவுகளும் உள்ளன”

“ஆச்சரியம்தான்… நீ எப்படி நகரத்திற்கு வந்தாய்?”

“என்னை ஒரு ஏஜென்ஸி கூட்டிவந்தது. எட்டுவயதிலேயே அவர்களுடன் வந்துவிட்டேன்”

“ஏஜென்சியா? எதற்கு”

“இதற்குத்தான்… அவர்கள்தான் எனக்கு ஆங்கிலம் சொல்லித்தந்தார்கள். உடை அணியவும் பழகவும் கற்றுத்தந்தார்கள்”

நான் அவளை அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்டு “நான் உன்னை புண்படுத்திவிட்டேனா?” என்றேன்.

“இல்லை… இதெல்லாம் எல்லாரும் கேட்பதுதானே?”

“ஆனால்…” என்றபின் “கஷ்டம்தான் இல்லையா?”என்றேன்.

“இல்லை” என்றாள். ‘உண்மையில் கஷ்டமே இல்லை. எங்கள் இனக்குழுவில் இதைவிட கஷ்டம். அத்தனை ஆண்களும் பாலியல் வன்முறை செய்வார்கள். அதற்காக மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். கடைசியில் வலிமையானவர் நம்மை தூக்கிக்கொண்டுபோய் அவர் மட்டும் பாலியல் வன்முறை செய்வார்… அதைத்தான் திருமணம் என்கிறார்கள்.பெரும்பாலும் அவர் வயதானவராக இருப்பார். அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். ஆகவே மற்ற ஆண்களைக் கண்டாலே ஒளிந்துகொள்ளவேண்டும்… சிறுவயதிலேயே கர்ப்பம் தரிக்கவேண்டும்… அதன்பின் பிள்ளைகள்….பிள்ளைகளை நாம்தான் வளர்க்கவேண்டும். ஆண்கள் பிள்ளைகளுக்கு எதுவுமே தரமாட்டார்கள். அவர்களுக்கு உணவு அளிக்க நாம் மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். கணவரிடம் அடிவாங்கவேண்டும்.அத்தனை பேரிடமும் கடுமையாக அடிபடவேண்டும்… எங்கள் பெண்கள் நாற்பது வயதுகளில் மிகமிகக் கிழவியாக ஆகிவிடுவார்கள். அவர்கள் உடம்பெல்லாம் வடுக்களாக இருக்கும்”

“ஊரில் உனக்கு யார் இருக்கிறார்கள்?”

“யாருமில்லை… என் அம்மா செத்துவிட்டாள். நான் இரண்டுமுறைதான் அங்கே சென்றிருக்கிறேன்”

எனக்கு கண்கள் சுழற்றிக்கொண்டு வந்தது. “தூங்கு” என அவள் சொன்னாள்

“நீ தாலாட்டு பாடு”

“தாலாட்டா உனக்கா?”

“ஏன் உன் மொழியில் தாலாட்டு இல்லையா?”

“உண்டு…”

“தெரியுமா?’

“தெரியாமலிருக்குமா?”

“பாடு”

அவள் என் தலையை தட்டி பாட ஆரம்பித்தாள். விதவிதமான வெண்கலப் பாத்திரங்களில் தட்டிய ஓசை போலிருந்தது.

நான் பல் தேய்த்துவிட்டு வந்தபோது அவள் என்னிடம் “உனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றால் நாம் டாக்டரை பார்க்கலாம்… இங்கேயே தங்கும் டாக்டர் உண்டு”

“தேவையில்லை…” என்றேன்.

“காபி சொல்லவா?” என்றாள்.

“சொல்” என்றேன்.

காபி வந்தது. அவளுக்கு டீ. சீனி பால் எதையும் போடாமல் குடித்தாள்.

“நீ காபி சாப்பிட மாட்டாயா?”

“ஒரே ஒருமுறை சாப்பிட்டேன்… குமட்டல்”

“என் அம்மா காபியால்தான் வாழ்கிறாள்”

‘நீங்கள் சாப்பிடும் காபி இன்னமும் குமட்டல்… பாலே எனக்கு பிடிக்காது. நான் ஒரே ஒருமுறைதான் பாலை சாப்பிட்டிருக்கிறேன்… அது…”

“என்ன?”

“குமட்டல்”

“ஏன்?”

“அது சீழ் போல என்று எனக்கு தோன்றும்” என்றபின் என் காபியை பார்த்து “என்னை மன்னித்துவிடு”

நான் கோப்பையை திரும்ப வைத்துவிட்டேன்.

“என்னை மன்னித்துவிடு”

“நான் ஏன் வாந்தியெடுத்தேன் தெரியுமா?”

“ஏன்?”

“நீ பச்சைமீனை சாப்பிடுவதை பார்த்தேன்”

“அப்படியா? உங்களூரில் சாப்பிட மாட்டீர்களா?”

“இல்லை. மீன் சாப்பிடுபவர்கள்கூட சமைத்துத்தான் சாப்பிடுவார்கள்”

“மீன்களும் புழுக்களும் ஏற்கனவே சமைக்கப்பட்டவை” என்றாள். “மீண்டும் சமைத்தால் சுவை போய்விடும்”

“அய்யய்யோ!”

“ஏன் நீ மீன் சாப்பிடுவதில்லை?”

‘உயிர்களை சாப்பிடக்கூடாது”

“செடிகளுக்கும்தான் உயிர் இருக்கிறது… சொல்லப்போனால் உயிரில்லாதவற்றைத்தான் சாப்பிடக்கூடாது. என் இனக்குழுவில் கிழவர்களும் கிழவிகளும் உப்பைக்கூட சாப்பிடமாட்டார்கள்”

நான் பெருமூச்சுவிட்டேன். “நான் சொல்வது எதையாவது நீ புரிந்துகொள்வாய் என்று தோன்றவில்லை” என்றேன்.

‘ஆனால் நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது”

நான் எழுந்துகொண்டேன். “கடற்கரைக்கு வருகிறாயா?”

“ஆமாம், நானும் சொல்லவேண்டும் என நினைத்தேன்”

குறிய ஆடைகளை அணிந்துகொண்டு கடற்கரைக்கு சென்றோம். அது தனியார் கடற்கரை. மிகத்தூய்மையான வெண்மணல். மிகமிகத் தூய்மையான நீலப்பளிங்கு நீர்ப்பரப்பு. கடற்கரையை ஒட்டியே பச்சைக்கோட்டை போல அடர்ந்த காடு ஆரம்பமாகிவிட்டிருந்தது.

அவள் “வா!” என்றாள்.

“எனக்கு நீந்தத்தெரியாது”

“உண்மையாகவா?”

‘நீச்சல்குளத்தில்கூட நீந்த மாட்டேன்”

“அய்யோ!” என்றாள். வாயைப்பொத்தியபடி சிரித்தாள்.

“ஏன்?”

‘நீந்தத்தெரியாத ஆணை இப்போதுதான் பார்க்கிறேன்”

நான் சிரித்தேன். ‘நீந்துவதை நினைத்தாலே பயம்… நான் முயற்சி செய்தேன். கல்தூண் போல அப்படியே உள்ளே போய்விட்டேன்”

“ஏன் நீந்தக் கற்கவில்லை? ஆற்றை எப்படி கடப்பாய்?

“நான் சென்னை என்ற நகரில் ஒரு அப்பார்ட்மெண்டில் வளர்ந்தேன். நான் பார்த்த தண்ணீரெல்லாம் குழாயில்தான்”

“நீ ஐராவதியை பார்த்ததுண்டா?”

‘ஆமாம், அது ஆறே இல்லை என்று தோன்றும். ஏரியே ஆறுபோல நீளமாக இருப்பதுபோல…எவ்வளவு பெரிய ஆறு”

“நான் அதில் பெருவெள்ளத்தில் நீந்துவேன்”

‘நீந்துவது எனக்கு பறப்பதுபோல… நினைத்தே பார்க்கமுடியவில்லை”

“எங்களூரில் நீந்துவது என்று எதை சொல்வார்கள் தெரியுமா?”

“எதை?”

“அதை” என்றாள் சிரித்தபடி.

“ஏய்!” என்று அவள்மேல் மணலை அள்ளி வீசினேன். பற்கள் ஒளிவிட சிரித்தபடி ஓடி கடல் அலைமேல் பாய்ந்தாள். குதிரைமேல் ஏறிக்கொள்வதுபோல அலைமேல் அமர்ந்து எழுந்து அப்பால் மறைந்தாள். நான் அவளை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் ஓர் அலையில் பாய்ந்து எழுந்தாள். பறவை வானிலெழுவதுபோல கைகளை விரித்திருந்தாள். சிரிப்பை அப்போதும் பார்க்கமுடிந்தது.

அலைக்குமேல் ஒரு சிறிய மஞ்சள்பறவை தொற்றித்தொற்றி பறப்பதுபோலத் தெரிந்தாள். ஒரு பெரிய நீர்த்திவலை போல தெறித்தாள். அவளும் கடலும் சேர்ந்து சிரித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

குட்டையான உடலும் சுருண்ட கொம்புகளும்கொண்ட நான்கு மான்கள் காட்டிலிருந்து கடற்கரை நோக்கி வந்தன. நான் திகைப்புடன் எழுந்துகொண்டேன். கடலோரம் மான் என்பதை கற்பனைசெய்யவே முடியவில்லை

அவை என்னை செவி விடைத்துப் பார்த்தன. நான் கையைச் சொடுக்கியபோது உடல் அதிர்ந்தன. கையைச் சொடுக்கிச் சொடுக்கி அவற்றுடன் விளையாடினேன். ஒரு கணத்தில் அவை அம்புகள் போல பாய்ந்து ஓடி மறைந்தன. மணலின் வெண்பரப்பில் சிறிய எழுத்துக்களால் ஆன ஒரு நீண்ட வரி போல அவற்றின் காலடித்தடங்கள்.

அவள் நீர் சொட்ட கரைக்கு வந்தாள். மூச்சுவாங்க ஓடி என்னருகே வந்து “வா கடலுக்கு” என்றாள்.

“அய்யோ…” என்றேன்.

“ஒருவாரம் என்னுடன் இரு… உனக்கு நான் கடலில் பறப்பது எப்படி என்று சொல்லித் தருகிறேன்”

”நான் நாளை காலை கிளம்புகிறேன்”

“அமெரிக்காவுக்குத்தானே?”

“ஆமாம்… இங்கே என் தொழில்முறை பயணம்”

அவள் “இங்கே எவருமே இல்லை… எதற்காக இந்த உடை?” என்றாள். இரட்டை நீச்சலுடையைக் கழற்றி மணலில் வீசினாள். ஆடையற்ற உடலுடன் ஒரு சிறிய குருவி போலிருந்தாள். தாவி மீண்டும் அலைக்குமேல் பாய்ந்தெழுந்தாள்.

அவள் அலைகளில் ஆடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டதூரம் போகிறாளா? அவளை எச்சரிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவளை என் குரல் அடையாது.

மான்கள் மீண்டும் வந்தன. இம்முறை அவை என் கைசொடுக்குக்கு அஞ்சவில்லை. செவிகள் மட்டுமே அசைந்தன.

கடற்கரையில் அவை என்ன செய்கின்றன என்று பார்த்தேன். உப்புநீரை நக்கிக்கொண்டிருந்தன.

அவள் கரைக்கு வந்தாள். “மான்கள்!” என்றாள்.

“அவை என்னை பயப்படவில்லை. நான் சைவ உணவுக்காரன்”

“உன்னை மரங்களும் செடிகளும் பயப்படும்’ என்றாள்.

நாங்கள் மீண்டும் விடுதி நோக்கி சென்றோம். “உன் முன்னாள் மனைவி நீந்துவாளா?”

“ஏன் அவளைப்பற்றி?”

“இல்லை, அவளைப் பற்றி நினைவு வந்தது. அவள் உனக்கு நீச்சல் கற்றுத்தந்திருக்கலாமே?”

“அவளுக்கும் நீச்சல்தெரியாது”

“உண்மையாகவா?”

“அவளும் அப்பார்ட்மெண்டில் வளர்ந்தவள். அதோடு எங்கள் பெண்களின் உடலும் நீச்சலுக்கு உரியவை அல்ல… அவை எடைமிக்கவை. அவர்களின் கைகளும் தொடைகளும் பருத்தவை”

“ஆம், இங்கே இந்தியப்பெண்களை பார்த்திருக்கிறேன். அப்படித்தான் இருக்கிறார்கள்”

“அதோடு அவர்கள் பொது இடங்களில் உடலைக் காட்ட மாட்டார்கள். ஆடை நனைந்தாலே கூசிவிடுவார்கள்”

“ஏன்?”

“அது ஒரு மனப்பழக்கம்”

“அவர்கள் பருமனாக இருப்பதனாலா?”

“ஆம்” என்று சிரித்தேன். வேறுவழியில்லை.

காலையுணவுக்கே சீவப்பட்ட பன்றி, வேகவைக்கப்பட்ட செம்மறியாடு, அரைத்து உருட்டப்பட்ட கோழி, பொரித்த இறால், சுட்ட மீன் என உயிரினங்கள் ஏராளமாக இருந்தன. நான் சுற்றிப்பார்த்தபின் பாலாடைக்கட்டியை எடுத்துக்கொண்டேன்.

“இதையா சாப்பிடுகிறாய்?”

“ஆமாம்”

“இந்த நாற்றமே எனக்கு பிடிக்காது” என்றாள். “அழுகிய மாமிசம் போலிருக்கிறது…நாங்கள் எந்த மாமிசத்தையும் புதிதாகவே சாப்பிடுவோம். எங்கள் ஊரில் ரத்தம் நின்றுவிட்ட இறைச்சியைக்கூட சாப்பிட மாட்டார்கள்”

நான் யோகர்ட் எடுத்துக்கொண்டேன்.

“அய்யோ… இது பழைய புண்ணின் சீழ்”

“சீ அந்தப்பக்கமா போ”

“சரி சொல்லவில்லை”

“நீ வேண்டுமென்றால் விலகிப்போய் நின்று சாப்பிடு”

“இல்லை, பரவாயில்லை” என்றாள்.

நான் அமர்ந்துகொண்டு “இன்று எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது. தவளையும் இளவரசனும்… ஓர் இரவு இளவரசனின் அரண்மனைக்கு ஓர் இளவரசி வருகிறாள். பேரழகி. இரவில் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். காலையில் அவள் தவளையாக மாறிவிடுகிறாள்”

அவள் சிரித்து “என்னையா சொல்கிறாய்?”என்றாள்.

“ஆம்’ என்றேன்.

“எங்களூரில் ஒரு கதை உண்டு. ஏழை நா-வின் கதை.

“என்ன?

நா… அவள்பெயர் நா”.

“ஓ!”

“அவள் அழகே அற்றவள். ஆகவே அவளை எந்த ஆணும் விரும்பவில்லை. ஆகவே அவள் ஐராவதியில் மிதந்து வந்த ஒரு மட்கிய மரக்கட்டையை எடுத்துக்கொண்டாள். அதை தன் கணவன் என்று நினைத்தாள். பகலெல்லாம் அவளும் அந்த மரக்கட்டையும் சேர்ந்து நீந்துவார்கள். இரவில் அதை அருகே படுக்கவைத்துக்கொள்வாள். இரவில் நிலவு வந்தால் அந்த மரக்கட்டை அழகான ஆணாக மாறிவிடும்”

“என்னை சொல்கிறாய்”

“ஆம்” என்று சிரித்தாள்.

நானும் சிரித்தேன்.

சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்கு சென்றோம். நான் அவளிடம் “நான் சென்றதுமே பனாமா போகவேண்டும்…” என்றேன்.

“நீங்கள் பணக்காரர்” என்றாள்.

“எல்லா இடங்களுக்கும் ஒரே பெட்டியை கொண்டுபோவதுபோல ஒரே ஆளுமையையும் கொண்டுபோகிறேன் என்று டாம் சொன்னான்”

“ஆளுமை என்றால்?”

நான் அவளுக்கு ஆளுமை என்றால் என்ன என்று விளக்கினேன். தனித்தன்மை, தனியடையாளம். நாடு, இனம், மொழி, குடும்பம், வேர்.

அவள் பொதுவாகப் புரிந்துகொண்டு “அதாவது நீங்கள் எப்படி நினைத்துக்கொள்கிறீர்களோ அது” என்றாள்.

மேற்கொண்டு சொல்லி புரியவைக்க முடியாது என்று தோன்றியது. “விடு” என்றேன்.

“எனக்கு பல விஷயங்கள் பிடிபடுவதில்லை” என்றாள்.

“எல்லாரும் அப்படித்தான். மனிதர்களால் அவர்களின் வட்டங்களை கடக்கவே முடிவதில்லை”

“நான் எப்படியாவது மியான்மாரை விட்டு போய்விடவேண்டும் என நினைக்கிறேன். என் தோழி தாய்லாந்தில் இருக்கிறாள். வருகிறாயா என்று கேட்டாள்… ஆனால் அங்கே செல்வதென்றால் ஆறுமாதம் வாழ்வதற்கான பணத்துடன் போகவேண்டும். அங்கே நன்றாக வசதியாக தங்கிக்கொண்டு நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு வேலை தேடவேண்டும்”

என் செல்பேசியில் அம்மாவின் அழைப்பு வந்திருந்தது. நான் அவளிடம் “அம்மா” என்றேன்.

“பேசு…நான் சத்தம்போட மாட்டேன்”

அம்மா “ராஜு, எப்டிரா இருக்கே?” என்றாள்.

“நல்லா இருக்கேம்மா”

“எங்கடா இருக்கே இப்ப?”

“மியான்மார்லே. வேலைவிஷயமா வந்தேன்…”

“மியான்மார்னா?”

“பர்மா. பழைய பர்மா”

“பர்மாவா… உங்க பெரிய தாத்தாகூட பர்மாவிலே இருந்தார். ஆயில் கம்பெனியிலே… அந்தக்காலம். யுத்ததிலே எல்லாம் போச்சு. அப்டியே திரும்ப வந்துட்டார்”

“நீ எப்டி இருக்கே?”

“எனக்கென்ன, இருக்கேன். சியாமளா வந்தா. அவ பையனுக்கு இந்த வருசம் பிளஸ்டூ பரீட்சை. கூடவே இருந்து படிக்கவைக்கவேண்டியிருக்கு. அதனாலே இனிமே ஜூன்லதான் வருவாளாம்… இங்க கோமதி இருக்கா. அப்பப்ப ஸ்விகியிலே வாங்கிக்கிறது.”

“உடம்புக்கு ஒண்ணுமில்லியே?”

‘மூட்டுவலி இருக்குடா… அது இனிமே நான் போறப்ப சேர்ந்துதான் வரும்… வைகுண்டத்திலயும் கூட வருமோ என்னமோ… டேய் நான் எதுக்கு கூப்பிட்டேன்னா அந்த மாதவன் பொண்ண பத்தி சொன்னேன்ல?”

“எந்த மாதவன்?”

“ஆடிட்டர்டா… அவர் பொண்ணு லக்ஷ்மி… ஞாபகம் இல்லியா? போட்டோ ஜாதகம் எல்லாம் அனுப்பினேனே? ரோகிணி நட்சத்திரம்”

“ஆமாமா… ஞாபகம் இருக்கு… கொஞ்சம் குண்டு”

“ஆமா இப்ப எல்லா பொண்ணும் குண்டுதான். விசாரிச்சுட்டேன். எல்லா பொருத்தமும் இருக்குடா. நாலு ஜோசியர் பாத்தாச்சு. ஒரு பொருத்தம்கூட குறைவா இல்ல. பாக்கவும் உனக்கு அப்டி ஒரு ஜோடி. குடும்பமும் நம்மை மாதிரியேதான். அவ அண்ணன்கூட ஒருத்தன் பாஸ்டன்லேதான் இருக்கான்”

“சரி”

“நீ பாக்கணும்ல? நேர்ல பாக்க இப்ப வசதிப்படாது. நம்பர் அனுப்பறேன்.. ஸ்கைப்லேயே பாத்துக்க… புடிச்சிருந்தா பண்ணிக்கலாம்டா…நல்ல எடம். இத மாதிரி வராது”

நான் “சரிம்மா, நான் சொல்றேன்” என்றேன்.

“எப்ப அமெரிக்கா போவே?”

“நாளைக்கு கெளம்பறேன்”

“போனபிறகு கூப்பிடு… ”

செல்பேசியை வைத்தேன். அவள் சோபாவில் படுத்து டிவியை ஓசையில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். என்னிடம் “என்ன செய்தி? பெண் அமைந்துவிட்டாளா?”என்றாள்.

“எப்படி தெரியும்?”

“தெரியும்” என்று சிரித்தாள்.

“எப்படி?”

“அதெல்லாம் பெண்களுக்கு தெரியும்” என்று சிரித்துக்கொண்டு எழுந்து கைகளை விரித்து தழுவிக்கொள்ள அழைத்தாள்.

“மீ” என்று அழைத்தேன்.

“என்ன?”

“அம்மா சொல்லும் பெண் சரிவர மாட்டாள்”

“ஏன்? பொருத்தம் சரியில்லையா?”

“இல்லை, எல்லா பொருத்தமும் இருக்கிறது…”

“பின்னே?”

“எல்லாமே பொருத்தம்… அதனால்தான்”

அவள் என்னை புரியாமல் பார்த்தாள்

“மீ, நான் உன்னை ஒன்று கேட்கலாமா?”

“கேள்..”

“நீ என்னுடன் அமெரிக்கா வருகிறாயா?”

அவள் திகைத்துவிட்டாள். “அமெரிக்காவா?” என்று மூச்சொலியாகக் கேட்டாள்

“ஆமாம். என்னுடன் வா. நாம் திருமணம் செய்துகொள்வோம்”

“திருமணமா?”

“ஆமாம்”

அவள் திகைப்புடன் “உனக்கு என்ன கிறுக்கா?’ என்றாள்.

“ஆம்”

அவள் குழப்பத்துடன் “வேண்டாம்” என்றாள்.

“இதுதான் சரியாக வரும் மீ”

“ஏன்?”

“எந்தப் பொருத்தமும் இல்லை”

அவள் சிரித்துவிட்டாள்.

நான் கையை விரித்தேன்.

அவள் “ஊஊ!” என்று கூச்சலிட்டபடி பாய்ந்து என் கைகள் நடுவே விழுந்து என்னை இறுக அணைத்துக்கொண்டாள். நாங்கள் இதழ்கோத்துக்கொண்டோம்.

அவள் விலகி என்னை பார்த்தாள். சிறிய கண்களில் சிரிப்புடன் “தவளையும் மரக்கட்டையும்” என்றாள். சிரித்தபடி மீண்டும் அணைத்து முத்தமிட்டுக்கொண்டோம்.

***

 

https://www.jeyamohan.in/130219#.XnfEWS-nxR7

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை , எழுதியது ஜெயமோகன் சொல்லவா வேணும்....!   👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.