Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் எதிர்காலம்: அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: உலகின் எதிர்காலம்: அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்

spacer.png

ராஜன் குறை

காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான வாக்குறுதியைக் கொடுத்தது. அது வறுமையில் இருப்பவர் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருமானமாக 6,000 ரூபாய் தருவதாகச் சொன்னது. இந்த வாக்குறுதி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், தேர்தலுக்குக் குறைந்த நாட்களுக்கு முன்னர் இதை அறிவித்ததாலும், கட்சியினரால் மக்களிடையே இந்தப் புரட்சிகர திட்டத்தை விளக்கச் சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாததாலும் நியாயமான அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்முனையில் நரேந்திர மோடி அரசு வருடம் 6,000 ரூபாயை மூன்று தவணைகளாகத் தருவதாக அறிவித்து, முதல் தவணையை உடனே நூறு நாள் வேலைத்திட்டத்தில் பதிந்தவர்களுக்குக் கொடுத்தது. நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேலானது என்றும் மக்கள் கருதியிருக்கலாம்.

காங்கிரஸ் கட்சி தன்போக்கில் குருட்டாம்போக்கில் இந்தத் திட்டத்தை அறிவிக்கவில்லை. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரை கலந்தாலோசித்துதான் அறிவித்தது. உலக பொருளாதார சிந்தனையில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான திருப்புமுனை எனலாம். இது ஒரு சோஷலிச திட்டமாக இருந்தாலும், முதலீட்டியத்துக்கு எதிரானது அல்ல. இது தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றுதான் இதை ஆதரிப்பவர்கள் கருதுகிறார்கள்.

 

இது சாத்தியம் என்றால், தேர்தலுக்குப் பிறகாவது பாரதீய ஜனதா கட்சி இதைத் தங்கள் திட்டமாக நடைமுறை படுத்தியிருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு. அவர்கள் செய்யவில்லை. அதைவிட முக்கியமான பிரச்சினை, கொரோனா தொற்று ஏற்பட்டு தேசிய அளவில் ஊரடங்கு அமலாகி, யாரும் வேலைக்குச் செல்ல முடியாமல் உற்பத்தி மொத்தமாக முடங்கியது. அப்போது பல பொருளாதார வல்லுநர்களும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வறிய மக்களுக்கு, 13 கோடி குடும்பங்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் தரச்சொன்னார். ஆனால், மத்திய அரசு இதை காதில் வாங்கவே இல்லை. இரண்டு மாதங்களாக ஊடகங்களில் இது பலராலும் வலியுறுத்தப்பட்டாலும் மத்திய அரசு அசைந்துகொடுப்பதாக இல்லை. இந்த வாரம் எதிர்க்கட்சிகளெல்லாம் சேர்ந்து மீண்டும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. காது கேளாத குடியரசாக மாறிவிட்ட இந்திய அரசு கவலையே படுவதில்லை. பாசிச மனோபாவத்தில் மக்கள் மீது இரக்கமற்றுப் போவது ஒருபுறம் இருக்க, பிற்போக்குவாத சிந்தனையில் அரசு சிக்கிக் கொண்டிருப்பதால் மாறி வரும் உலக சிந்தனையை புரிந்துகொள்ளவும் மறுக்கிறது எனலாம்.

மாறிவரும் உலக சிந்தனை

பொருளாதார சிந்தனையில் எளிமையாகச் சொன்னால் இரண்டு முனைகள் உள்ளன. ஒன்று, சந்தையே பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் என்பது. மற்றொன்று, அரசு பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் என்பது. எந்த அளவு அரசு தலையிடலாம், எப்போது தலையிடலாம் என்று தொடர்ந்து விவாதம் இருக்கும். இதற்கு ஓர் உவமை என்னவென்றால், நாடக இயக்கத்தில் உருவாகும் இருவிதமான அணுகுமுறைகள். சில இயக்குநர்கள் நடிகர்களை அதிகம் கட்டுப்படுத்துவார்கள்; தன்னுடைய கற்பனைக்கு ஏற்றபடி நடிக்கச் சொல்வார்கள். சில இயக்குநர்கள் கதாபாத்திரத்தை விளக்கிய பிறகு நடிகர்களாக அவர்கள் கற்பனைக்கு ஏற்றபடி நடிப்பதை விரும்புவார்கள். மிகவும் அவசியம் என்றால் மட்டும் தலையிடுவார்கள். இரண்டு வகையான அணுகுமுறையிலும் இயக்குநர்தான் நாடகத்தை உருவாக்குவார். அதேபோல சந்தைப் பொருளாதாரமோ, அரசு கட்டுப்பாட்டு பொருளாதாரமோ அரசுதான் சூத்ரதாரி. அதுதான் அனைத்து தேசிய சொத்துகளுக்கும் உடமையாளர் என்பதால் ஆகப்பெரிய பொருளாதார சக்தி. ஆனால், தாராளவாத சிந்தனையில் சந்தையில் தனியார் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் எடுக்கும் முடிவுகளில் அரசு தலையிடக் கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் தலையிடலாம். அரசு கட்டுப்பாட்டு பொருளாதாரத்தில் அரசு உற்பத்தி, விநியோகம், வர்த்தகம், விலை நிர்ணயம் என பலவற்றையும் கட்டுப்படுத்தும். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை அரசின் வசம் இருப்பதால், முற்றிலும் சுதந்திரமான சந்தை என்பது எந்த நாட்டிலுமே சாத்தியமில்லை எனலாம்.

ஆனால், இதனுடன் இணைந்த மற்றோர் அம்சம் வரிவிதிப்பு. அரசின் வருவாய் என்பது இதில்தான் அடங்கியுள்ளது. யாருக்கு அதிக வரி விதிப்பது, எந்த பொருளுக்கு அதிக வரிவிதிப்பது என்று அரசு தீர்மானிப்பதால் சந்தை அந்த விதத்திலும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

உற்பத்தியாளரா? நுகர்வோரா?

தனது சந்தைக் கட்டுப்பாடுகள், வரி விதிப்புகள் ஆகியவற்றின் மூலம் அரசு உற்பத்தியாளர்களை ஆதரிக்க முடியும். அல்லது நுகர்வோரை ஆதரிக்க முடியும். நவ தாராளவாத சிந்தனையில் உற்பத்தியாளர்களை, கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிப்பதும், அவர்களுக்கு வரிச்சலுகைகள் நிறையத் தருவதும் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்பது முக்கிய நம்பிக்கை. இந்த சிந்தனையில் நுகர்வோருக்கு நிறைய கடன் அளிக்கலாம். அந்த கடனும், கடன் கொடுத்தவருக்கு ஒரு சொத்து போலத்தான். தன்னிடம் உள்ள கடன் பத்திரங்களை அடகு வைக்கலாம்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டைகள் பழக்கத்துக்கு வந்தபோது, வங்கிகளிலிருந்து தொலைபேசி செய்து கிரெடிட் கார்டு வேண்டுமா என்று கேட்பார்கள். அது வியப்பாக இருந்தது. ஏனெனில் நாம்தான் தேவை ஏற்பட்டால் போய் கடன் கேட்பது வழக்கம். கடன் கொடுப்பவர்கள் யாரும் நம்மைக் கூப்பிட்டு, துரத்தி, வற்புறுத்தி கடன் கொடுத்தது கிடையாது. இந்தக் கடன் அட்டை வங்கிகள்தான் அவ்வாறு செய்யத் தொடங்கின.

 

உற்பத்தியாளருக்கு நிறைய சலுகைகள் கொடுத்து, அவர்கள் லாபத்தை அதிகரித்து ஊக்கப்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். மக்களுக்குக் கடன் கொடுத்து அவர்கள் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி நுகரச் சொல்ல வேண்டும். இதுதான் நவதாராள கொள்கை எனலாம். இதில் ஒரு சிக்கல் எழுந்தது. அது என்னவென்றால், கடன் வாங்கியவர்கள் திருப்பித் தராவிட்டால்? கடன் வழங்கு நிறுவனங்கள் தங்கள் இலக்கை பூர்த்தி செய்ய தகுதியற்றவர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டால்? அதுதான் 2008இல் அமெரிக்காவில் நடந்தது. ஏராளமான வாராக்கடன்களால் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் மூழ்கத் தொடங்கின. சீட்டுக்கட்டு அடுக்கு கலைவதைப்போல பொருளாதாரம் சரியத் தொடங்கியது. அரசுதான் தலையிட்டு பெருமளவு பணத்தை நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்கு அளித்து பொருளாதாரச் சரிவை தடுத்தது.

 

நுகர்வோருக்குக் கடன் தராமல் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளித்து உற்பத்தியைப் பெருக்கினால் யார் பொருள்களை வாங்குவார்கள் என்பது கேள்வியாகிறது. அது பெரும் பொருளாதார மந்த நிலையை தோற்றுவிக்கிறது. பிரதமர் மோடியின் தடாலடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் வாங்கும் சக்தியும், விருப்பமும் குறைந்து விட்டது என்றும், அதனால் அலை அலையாக விற்பனையில் தேக்கம் ஏற்பட்டு கார் விற்பனையாளர்கள் எல்லாம்கூட தற்கொலை செய்துகொள்ளும் அளவு சென்றது நினைவிருக்கும்.

அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய்

இந்த நிலையில்தான் ஒரு புதிய சிந்தனை பிறக்கிறது. அரசே நலிவுற்ற மக்கள் அனைவருக்கும் மாத வருவாய் அளித்துவிடுவதுதான் அது. வேலையற்ற பட்டதாரிகளுக்குச் சிறிய ஊதியம் கொடுப்பது போல, முதியோர் பென்ஷன் போல அரசே ஏழைக் குடும்பங்களுக்கான குறைந்தபட்ச மாத வருவாயைக் கொடுத்துவிட வேண்டும். சமீபத்தில் ப.சிதம்பரம் சொன்ன கணக்கு 13 கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 என்பதாகும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்று வைத்துக்கொண்டால் 50 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயனடைவார்கள்.

இதனால் அரசுக்கு என்ன நன்மை என்பதுதான் கேள்வி. எல்லோரும் அந்த 5,000 ரூபாயை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் பூட்டி வைக்கப்போவதில்லை. ஏழை மக்கள் மொத்த பணத்தையும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில்தான் செலவு செய்வார்கள். அதனால் வர்த்தகம் பெருகும். அந்த வர்த்தகத்தால் பலன் அடைபவர்கள், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். அப்படியே அது மேலே சென்று வெறும் லட்சக்கணக்கானவர்கள் வாங்கும் கார்கள் வரை செல்லும். மொத்தமாக பொருளாதார நடவடிக்கைக்கு உயிர் கொடுத்தது போலாகும். அதே நேரம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ததாகவும் ஆகும்.

 

கொரோனா தாக்கத்துக்குப் பின் ஏற்படும் மந்த நிலையைச் சமாளிக்க உலகம் இந்தத் திசையில்தான் பயணிக்கும் என்று சொல்கிறார் ரட்கர் ப்ரெக்மன் என்ற இளம் ஆய்வாளர். இவர் Utopia for Realist என்ற நூலில் Universal Basic Income என்ற தத்துவத்தை வலுவாக ஆதரித்து எழுதியுள்ளார். பணக்காரர்களின் கரங்களை வலுப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் நவ தாராளவாத சிந்தனையின் காலம் முடிந்துவிட்டது என்கிறார். கொரோனா வைரஸால் வீழும் பொருளாதாரத்தை மீட்க நிச்சயம் உலகம் பல புதிய சிந்தனைகளைப் பரிசோதிக்கும் என்றும், அப்போது தாமஸ் பிக்கெட்டி போன்றவர்கள் பேசிவரும் சோஷலிஸ சிந்தனைகளே முக்கிய சிந்தனைகளாக மாறும் என்கிறார்.

தமிழகப் பொருளாதார சிந்தனையாளர் ஜெயரஞ்சன் முதல், ரகுராம் ராஜன் போன்றவர்களும்கூட இணைந்து இந்த ஒரு கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். மக்கள் கையில் பணம் போய்ச்சேராமல் பொருளாதாரத்தை மீட்க முடியாது. இந்தப் புதிய அணுகுமுறையை ஏற்க முடியாமல் பழைய சிந்தனைகளிலேயே மாட்டிக்கொண்டுள்ளது மத்திய அரசு.

தேர்தல் வந்தால் அம்பானி, அதானி எல்லாம் பிரச்சாரத்துக்குக் காசு கொடுப்பார்கள். அதை செலவு செய்து ஜெயிக்கலாம் என்று நினைப்பதைவிட, ஏழை மக்களுக்குக் குறைந்தபட்ச மாத வருவாய் வழங்கினால் அவர்கள் ஓட்டுப்போடுவார்களே என்பதற்காகவாவது மோடியின் பாஜக அரசு இந்தப் புதிய சிந்தனையை பரிசீலிக்க வேண்டும்.

 

ஏழை மக்கள் வருவாயின்றி வறுமையில் ஆழ்ந்தால், அடித்தளம் தகர்ந்தால் சரியும் உயரமான கட்டடம் போல, பொருளாதாரக் கட்டுமானமே மெல்லச் சரியும். அதனால்தான் அடித்தளத்தை வலுப்படுத்துவது அவசியம். புதிய சிந்தனை உலகெங்கும் வெற்றி பெறட்டும் என்று கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.


https://minnambalam.com/k/2020/05/25/8

 

இது பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளில் அமுல்படுத்த கடினமாக இருக்கும். காரணம், எல்லோருமே வரி செலுத்தாமை, அரச பயன்களை பெற முடியாமல் உள்ளமை ( இலவச பணம் ) , வங்கி கணக்குகள் இல்லாமை.

ஆகவே தான் சீனாவில் மின்னியல் பணத்தை அறிமுகப் படுத்துகின்றனர்.காரணம், எல்லோர் கைகளிலும் காப்பாக இருப்பது செல்லிடை தொலைபேசி.   
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.