Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே

by நோவா • July 1, 2020 

குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என சிலவும் கேள்விப்படுகிறோம். காடுகள் மலைகளில் தனித்து விடப்பட்ட வீடுகள் கட்டிடங்கள் என சில இடங்கள் பார்ப்பதற்கே அச்சமூட்டுபவையாகவும் அமானு‌ஷ்ய சக்திகளின் இருப்பிட ஈர்ப்பாகவும் உள்ளன. நாம் தமிழ்ப்பட பேய்களைக் கண்டு வளர்ந்திருந்தாலும் ஆங்கில-ஜப்பானிய சீனப் பேய்களுக்கும் அந்நியமானவர்கள் அல்ல. மலேசியர்கள் கூடுதலாக இந்தோனேசிய வகை பேய்களையும் சயாம் வகை பேய்களையும் ஓரளவாவது அறிந்தே வைத்திருப்பர்.  எப்போதுமே உள்ளூர் பேய்களுக்குதான் கிராக்கி அதிகம். பேய்களுக்கென்று தனித்த தேச அடையாளங்கள் இல்லாமல் இருந்தால் எப்படி?

இந்நாட்டில் மலாய் சமூகம் தங்கள் நம்பிக்கைக்கு ஏகப்பட்ட பேய் வகையறாக்களைக் கொண்டுள்ளன. மலாய்க்காரர்களின் மத்தியில் பேய்க்கதைகள் மிகப்பிரபலம். அவர்கள் மத்தியில் புழங்கும் மாத, வார இதழ்களிலும் பேய்களின் அனுபவங்கள் மிக அதிகமாக இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் பேய்க்கதைகளுக்கு என்றே ஏராளமான மலாய் இதழ்கள் இருந்தன. variasari, Misteri போன்றவை சில உதாரணங்கள்.  எங்கெல்லாம் மலாய் சமுதாயம் வாழ்கிறதோ அங்கெல்லாம் நடுநிசியில் கட்டியணைத்த தலையணைகளுக்கிடையே பயம் மருள பேசிக் கொள்ளும் கதைகளில் இந்த பேய்கள் நடமாடுவது உண்டு. நாளடைவில் அதுவே அவர்கள் திரைப்படங்களிலும் அதிகம் பிரதிபலித்தது.

மலாய் மொழியில் நூசாந்தாரா (Nusantara) என்று சொல்லப்படும் மலாய் சமுதாயம் வாழும் நிலப்பரப்புகள் இப்படி நிறைய பேய்க்கதைகளைக் கொண்டுள்ளன. சில பேய்களுக்குக் குறிப்பிட்ட பெயர்கள் உள்ளன. உதாரணமாக தோயோல் (Toyol), போச்சோங் (Pocong), ஓராங் மிஞ்ஞாக் (Orang minyak), லங்சுயீர் (Langsuir), ஜெங்லோட் (Jenglot), பொந்தியானாக் (Pontianak), ஜெரங்குங் (Jerangkung) என சொல்லாம். சில பேய்களைப் பொதுவாக ஹன்த்து (Hantu) எனக் குறிப்பிட்டு அதன் பின் அது இருக்கும் இடங்களை கூறுவார்கள். ஹன்ந்து ராயா (Hantu raya), ஹன்ந்து ஆயீர் (Hantu air), ஹன்ந்து தானா (Hantu tanah), ஹன்ந்து கூபூர் (Hantu kubur), ஹன்ந்து ஜெப்பூன் (Hantu Jepun), ஹன்ந்து புக்கிட் (Hantu bukit) என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் கெட்ட பேய்கள். நேனேக் கெபாயான் (Nenek kebayan), பூனியான் (Bunian), பாரி பாரி (Pari-pari) போன்ற நல்ல பேய்கள் வகையறாக்களும் உண்டு. நான் கூறிய பேய்களை நீங்கள் மலேசியா, இந்தோனேசியா தவிர்த்து வேறு எங்கே சென்றாலும் பார்க்கவோ கேள்வி படவோ முடியாது. அவற்றுக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்கலாமோ என்னவோ!

இவை இப்படிதான் இருக்கும் என இந்தப் பேய்களுக்கென்றே தனித் தனி தோற்ற அமைப்புகள் உண்டு. பொதுவாகவே எல்லா மலாய்க்கார அம்மாக்களும் அத்தைகளும் உஸ்தாஸ் உஸ்தாசாக்களும் மிக மிக துல்லியமாக இவை இன்ன வகை பேய்கள்தான் என கூறும்போது உடலின் ரோமங்கள் என்னையறியாமல் எழும் பாருங்கள். அப்போதெல்லாம் சுற்றி முற்றி பார்த்துக்கொள்வேன். பிடரி மயிர் கூச்செரியும். என் தோழிகளோடு எவ்வளவு நெருக்கமாக அமர முடியுமோ அவ்வளவு நெருக்கமாக அமர்ந்து கொள்வேன். ஒவ்வொரு முறை வெளியிடங்களுக்கு முகாம் காரணமாகச் செல்லும் போதும் இப்படிப்பட்ட கதைகள் இரவு வேளையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும். அப்படி சில வித்தியாசமான பேய்கள் உள்ளன.

தோயோல்

novah 01

 

தோயோல் என்பது மிகவும் அழகான குட்டி பேய். யாரோ ஒருவரால் அன்பாக வளர்க்கப்படும் ஒரு சின்ன சுட்டித்தனமான குட்டிச்சாத்தான். பொதுவாகவே அதற்கு ஒரு எஜமானர் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் எப்படி நம் வீட்டுப் பிள்ளைகள் சொல் பேச்சுக் கேட்காமல் அடாவடி தனம் செய்வார்களோ அப்படித்தான் இதுவும். இதன் உருவ அமைப்பும் நிர்வாணமான ஒரு ஆறு ஏழு வயது சிறுவன் போல காட்சியளிக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் என வண்ணத்திரைப்படங்கள் வந்ததும் தெளிவுபடுத்தப்பட்டது.  இதன் வேலையே திருடுவதுதான். இதன் எஜமானன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் வீடுகளில் புகுந்து விலையுயர்ந்த நகைகளையும் பணத்தையும் எடுத்து வருவதற்காகவே இதை வளர்ப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் தோயோலுக்குப் புனித மறைநூல்கள் தெய்வ சன்னதிகள் என்றெல்லாம் வித்தியாசம் இல்லையாம். எல்லா இடத்திலேயும் புகுந்து விளையாடுவது இதன் சிறப்பு அம்சம். இன்னொரு விஷயம் என்னவென்றால் இதைப் பரம்பரை பரம்பரையாக வைத்திருப்பார்களாம்.

ஒரு இடத்தில் தோயோல் இருக்கிறதா இல்லையா என்பதை வெகு சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சாயங்கால நேரங்களில் மக்ரிப்-இஷாக் தொழுகை நேரத்துக்கு அப்பால் மணி ஏழு எட்டைத் தாண்டிய பின் வீட்டின் மூலை முடுக்குகளில் கோலி குண்டு சரமாரியாக விட்டுடெறிவது போல ஓசை கேட்கும். பின்னர் நின்று விடும். இச்சத்தம் விட்டு விட்டு இரவு முழுவதும் கேட்கும். இப்படியே தொடர்ந்து பல நாட்களுக்குக் கேட்கும். அதைத்தொடர்ந்து சின்ன சின்ன சில்லறைகள், பொருட்கள் என ஒவ்வொன்றாகக் காணாமல் போகும். திருடினாலும் தோயோலிடம் ஒரு நியாயம் உண்டு. அதிகமாகப் பணத்தை எடுக்காது. பெரிய பொருள்களைத் தூக்காது. உங்கள் பணப்பையில் ஆயிரம் ரிங்கிட் வைத்திருந்தாலும் ஐம்பது ரிங்கிட்டை மட்டும் அலேக்காகத் தூக்கிவிடும்.

சில ஆண்டுகளுக்கு முன் தைப்பிங்கில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். அந்த வீட்டில் மாலை ஆனால் போதும். டுக்கு டுக்கு டுக்கு என ஓயாமல் குண்டு விளையாடும் சத்தம். பயம் எல்லாம் கிடையாது. ஆனால் படு எரிச்சலாக இருக்கும். சத்தம் எங்கிருந்து வருகிறது என்று இரவெல்லாம் கண்விழித்து சுவரில் காது வைத்துக் கேட்ட அனுபவம் எல்லாம் உண்டு. முதலில் ஒரு அறையிலிருந்து சத்தம் வருவது போல இருக்கும். அங்கே போய் பார்த்தால் சமையறைக்கு சத்தம் கடந்து போய் விடும். சரி என்று சமையலறையில் போய்ப் பார்த்தால் மேல் மாடிக்கு சத்தம் போய் விடும்.

ஏன் இப்படி சத்தம் போடுகிறது? வீட்டில் பணம் இருந்தால், தோயோல் சந்தடி தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடும். ஏவிவிட்ட பொருள் கிடைக்காத பட்சத்தில் அதிருப்தியில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள இது செய்யும் எரிச்சலூட்டும் காரியம்தான் இந்த கோலி குண்டு விளையாட்டு. இதனை திசை திருப்ப பிரபலமான செயல்களில் ஒன்று பச்சை பயறுகளைத் தூவி விடுவது. அவற்றைத் தரையில் தூவி விட்டு விட்டால் திருட வரும் தோயோலுக்கு வந்த காரியம் மறந்து கடலைகளைப் பொறுக்க ஆரம்பித்து விடுமாம். குட்டி தானே… அதனால் விளையாட்டு புத்தி. விடிந்ததும் வேலை முடியாமல் வந்த இடத்துக்கே திரும்ப போய்விடுமாம்.

போச்சோங்

novah 02

 

போச்சோங் என்பது கொஞ்சம் பயமுறுத்தகூடிய பேய் தான். இஸ்லாமியர்கள் வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால் இறுதி காரியங்களின் போது அவரது உடலில் இருக்கும் பலதரப்பட்ட துவாரங்களைப் பஞ்சு வைத்து அடைத்த பின்னர் அதை கைன் காஃபான் (Kain Kafan) என அழைக்கப்படும் ஒரு வெள்ளை துணியில் சுற்றி உச்சந்தலையில் ஒரு முடிச்சு போடுவார்கள். கோணியில் சரக்கை நிரப்பி உச்சி கொண்டை போடுவோமே அப்படி. அதன் பின்னர்தான் பிணப்பெட்டியில் வைத்து மண்குழியில் இறக்குவார்கள். போச்சோங்கின் உருவ அமைப்பும் அப்படிதான் இருக்கும். இது நடந்து செல்ல கூடியது அல்ல. உடல் முழுவதும் கட்டி வைக்கப்பட்டுள்ளதால் சீன பேய் போல குதித்து குதித்து தான் செல்லும் அல்லது உருண்டு செல்லும். அது மட்டுமல்லாமல் ஒரு கூரையிலிருந்து இன்னொரு கூரைக்கு தாவக்கூடிய ஆற்றலும் அபார வேகத்துடன் கண்முன் கடந்து செல்லுவதும் உண்டு. இதற்குத் தோயோல் போன்று எஜமானர்கள் கிடையாது.

இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த என் கல்லூரி நண்பர்களுடன் பேய் கதைகள் பேசுவது எங்களின் சுவாரசியமான வழக்கங்களில் ஒன்று. அப்படிக் கேட்ட கதைகளில் போச்சோங் கதைகளும் உண்டு. அதாவது இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளிலும் நிசப்தமான இடங்களிலும் காரோட்டுபவர்களுக்கு தான் இந்த அனுபவங்கள் நடந்துள்ளன. வேகமாக காரோட்டிக் கொண்டு செல்லும் போது சட்டென்று ஒரு உருவம் சாலையின் குறுக்காகக் கடந்து சென்றால் ஒரு கவன சிதறல் ஏற்படும் அல்லவா? அதுதான் இந்தப் பொச்சோங்கின் வேலை. அதாவது நமது கவனத்தைச் சிதறடிப்பது. சில நேரங்களில் அமைதியாக சிலைப்போலே சாலையோரங்களில் நிற்பதும், காரின் முன் மின்னல் வேகத்தில் கடந்து செல்வதும் ஒரு புற சாலையின் மரக்கிளையினின்று இன்னொரு புறத்துக்குத் தாவுவதும் காரோட்டிகளை பயமுறுத்தவ செய்வதற்கான யுக்திகள். இதனால் பல நேரங்களில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டிருகின்றன. உடல் உயிர் சேதங்களும் நிகழ்ந்துள்ளதாகப் பல நேரங்களில் கேட்டிருக்கிறேன்.

இதற்குப் பின் இன்னொரு கதையும் உள்ளது. அதாவது உடலைச் சுற்றியிருக்கும் அந்தத் துணிக்குள் ஏகப்பட்ட பணமும் நகைகளும் இருக்குமாம். யார் இந்தப் போச்சோங்கின் அரட்டல் மிரட்டலுக்குப் பயப்படாமல் அதை எதிர்கொள்கிறார்களோ அவர்களுக்குதான் அந்தப் புதையல் கிடைக்கும் என ஒரு கதையும் உண்டு. இந்தப் போச்சோங் திருடர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என வைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடப்பது வேறு. போச்சோங் பேய்கள் கிடைக்காமல் திருடர்களே போச்சோங் பேய்களாக மாறிவிடுவதும் உண்டு. குறிப்பிட்ட ஊரில் அருகாமையில் திருடர்கள் திட்டம் போட்டுப் போச்சோங் போல உடையுடுத்தி நடுநிசியில் அந்த இடத்தைத் தாண்டி செல்பவர்களை பயமுறுத்தி பொருட்களை அபகரிப்பது நிறைய நிகழ்ந்துள்ளது. வாய்ப்பு வரவில்லையென்றால் அதை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொன்மொழியெல்லாம் திருடர்களுக்கும் பொருந்தும்தானே.

லங்சுயீர்

novah 03

 

இது மிகவும் பயங்கரமானது என்றுதான் சொல்ல வேண்டும். இவள் ஒரு பெண்.  பல உருவங்களை எடுக்கக்கூடியவள். மனித உருவத்திலும் இருப்பாள். இரத்தம் உறிஞ்சக்கூடியவள். பேயாய் மாறுவதற்கு முன் இவளின் பேறுகாலத்தின்போது இறந்தவள் எனவும் எனவே எந்த வீட்டில் கர்ப்பிணிகள் இருக்கிறார்களோ அவர்களின் சிசுக்களை கர்ப்பத்திலேயே தின்றொழிப்பவள் எனவும் பலவாறாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மனித உருவில் இருக்கும் போது இவள் மிகவும் அழகான ரூபம் கொண்டிருப்பாள். நாம் அறிந்த மோகினி வகையறா. ஆண்களுக்கு இவளைப் பார்த்ததுமே காமம் மேலேறுமாம். இவளும் அவர்களை மயக்கி தனியிடங்களுக்கு அழைத்துச் சென்று வசமாக மாட்டிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டபின் அசந்திருக்கும் வேளையில் இவளின் சுய உருவெடுத்து அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி கொன்று விடுவாளாம். இப்படியும் லங்சுயீர் பற்றிய கதை உண்டு.

மனித உருவில் அழகு தேவதையாக இருக்கும் இவளின் சுய உருவம் அகோரமாக காட்சியளிக்கும். உடலை விட்டு தனியாகக் குருதி வழியும். நீண்ட பற்களோடும் நீண்ட பரட்டை தலையோடும் இருக்கும் இவளுக்கு உடல் இருக்காது. வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் நாக்கு, இருதயம் குரல்வளை குடல் என குருதி சொட்ட சொட்ட அந்தரத்தில் மிதப்பாள். அவளுக்குத் தேவையானபோது இரத்தம் கிடைக்கவில்லை என்றால் யாரையும் கொல்ல துணிபவள்.

மலாய்க்காரர்களின் பாரம்பரிய வீடுகள் தரையிலிருந்து கொஞ்சம் மேலெலும்பி தடித்த தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கும். இயல்பாகவே நதிக்கரையோரங்களிலும் கடல் அருகாமையிலும் வீடு கட்டுவது என்பது பரம்பரை மீனவர்களான மலாய்க்காரர்களின் வழக்கம். அதன் காரணம் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தின் போது உடைமைகள் அடித்துக் கொண்டு போகாதவாறு அப்படி ஒரு கட்டிட யுக்தியை சமயோசிதமாகப்பயன்படுத்தி இருந்தார்கள். வீட்டின் தரைகளை மரப்பலகைகள் வைத்துதான் கட்டுவார்கள். முன்பெல்லாம் மலாய் சமுதாயத்தில் பேறுகால பெண்களுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது வழக்கம். அப்படி பேறுகாலம் ஆகும் போது உதிரம் மரப்பலகைகளின் இடுக்கில் வழிந்தோடும். அந்த உதிரம் மிகவும் சுவையானதாம். அதற்காகவே லங்சுயீர் வீடுகளின் அடியில் காத்திருக்குமாம்.

இதையறிந்த மருத்துவச்சிகள் ஒரு வீட்டில் பெண் பிரசவிக்கத் தொடங்கும்போதே பலதரப்பட்ட மறைநூல் வாசகங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். சரியாகப் பேறுகாலம் ஆகும் போது வீட்டின் அடியில் முள் முள்ளாய் இருக்கும் ஒரு வித இலைகளைப் பரப்பி வைத்து விடுவார்களாம். எனவே லங்சுயீர் அந்த வீட்டை அண்டாது. தூர நின்று வாய்ப்புக்காக எதிர்பார்த்திருக்கும். ஒரு பெண் கர்ப்பம் தரித்ததிலிருந்து பேறுகாலம் முடிந்து நாற்பது நாட்கள் உதிர போக்கு நிற்கும் வரையில் இந்த மருத்துவச்சிகளின் உடனிருப்பு மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்பட்டது. இந்த மருத்துவச்சிகள் பிரசவ தெளிவோடு லங்சுயீர்களின் ஆபத்தை எப்படி குர் ஆன் மறை வாசகங்களை வைத்து துரத்துவது வரையில் தெரிந்து வைத்திருந்தனர்.

லங்சுயீர் எப்படி இருக்கும் என்பதற்கான குறியீடாக மலேசியாவில் ஏற்கனவே ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது. ஏமி மஸ்தூரா (Amy Mastura) நடித்து 2011-ஆம் ஆண்டு வெளிவந்த பெனங்கால் (Penanggal) என்ற படம் தான் அது.

ஓராங் மிஞ்ஞாக்

orang minyak

லங்சுயீர் குருதி பயங்கரமாக இருக்குமென்றால் ஓராங் மிஞ்ஞாக் பயங்கர கருப்பாக இருக்கும். முன்பொரு காலத்தில் மாய மந்திரங்களைத் தவறாகக் கற்றுக் கெட்ட விஷயங்களை செய்வதற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்களின் உடல் கருப்பாக மாறியதாகவும் அதை சரிப்படுத்த நாற்பது கன்னி பெண்களைக் கற்பழிக்க வேண்டும் எனவும் பல கதைகள் உண்டு. மிகவும் பரவலாகப் பேசப்பட்ட ஓராங் மிஞ்ஞாக் பற்றி பி.ரம்லி (P.Ramlee) நடித்து 1958-ஆம் ஆண்டு வெளிவந்த சும்பாஹ் ஓராங் மிஞ்ஞாக் (Sumpah Orang Minyak) என்று ஒரு திரைப்படமே உள்ளது.

ஓராங் மிஞ்ஞாக் என்றால் எண்ணெய் மனிதன் என பொருள். உடல் முகம் என எல்லாமே கருப்பாக இருக்கும். ஆண்கள் மட்டுமே இப்படி இருப்பார்கள். ஆக இது ஆம்பள பேய். இந்த ஒராங் மிஞ்ஞாக் திருடு மட்டும் பாலியல் வல்லுறவுக்கென்றே பிரசித்தி பெற்றது. சுலபமாகப் பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள் நுழைவதும் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடுவதும், அப்படி வீட்டில் பெண்கள் இருந்தால் அவர்களை மயக்கி உறவு கொண்டுவிட்டு அதன் அத்தாச்சியாக அப்பெண்ணின் முகத்தில் பெருக்கல் குறியிட்டுத் தப்பிப்பதும் அப்படி தப்பிக்கும் போது மாயமாவதும் தான் இவர்களின் விவரிப்பு.

நான் ஏழு எட்டு வயதாக இருக்கும் போது கம்போங் குனோங் பொங்சு என்னும் ஃபெல்டா அருகில் தான் இருந்தேன். அப்போதெல்லாம் செம்பனை மர விதைகளைப் பயிரிடும் இடத்தில் நிறைய பேர் பை போடவும் செம்பனை கன்று நடவும் வருவார்கள். நானும் அப்பாவுக்கு உதவியாகத் தண்டல் வேலை பார்த்தேன். உரம் போடுவதிலிருந்து மருந்து அடிப்பதிலிருந்து நீர்ப்பாய்ச்சும் இயந்திரம் திறந்து விடுவது, ரப்பர் கன்றுகளுக்கு முளை விடுவது வரை எல்லா வேலைகளும் செய்து வேலை செய்யும் மலாய்க்காரர்களை மேற்பார்வை இடுவது வரை செய்யக் கற்றுக் கொண்டேன். அப்போது வேலை செய்யும் மலாய்க்கார அக்காக்கள் நிறைய கதை சொல்லுவார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த ஓராங் மிஞ்ஞாக் கதை.

அப்படிக் கம்பத்தில் வீட்டில் பொருட்கள் காணாமல் போய்விட்டாலோ அல்லது ஆண்தொடர்பில்லாமல் பெண் கருத்தரித்து விட்டாலோ முதலில் சுட்டிக்காட்டும் காரணம் ஓராங் மிஞ்ஞாவாகத்தான் இருக்கும். அதனாலேயே கன்னி பெண்கள் இருக்கும் வீடுகள் அதிக கட்டுப்பாடுகளோடும் வீட்டு ஆண்கள் மிகவும் விழிப்போடும் இருப்பார்கள். இரவு நேரங்களில் ரோந்து வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.

வெறும் கதையாக இருந்த இந்த ஒராங் மிஞ்ஞாக் ஐடியாவைப் பயன்படுத்தி 2006-ஆம் ஆண்டு ஒரு திருடன் பிடிப்பட்டுள்ளான். ஆக இது திருடர்களுக்கு மிகவும் தோதாகவே அமைந்திருக்கிறது. உடல் முழுவதும் எண்ணெயைத் தடவிக்கொண்டு திருடப் போக, விழிப்பாயிருந்த ஊர் மக்களிடம் அகப்பட்டுக்கொண்டான்.

ஓராங் மிஞ்ஞாவுக்கு இன்னொரு கதையும் உண்டு. அதாவது அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள்தான். ஆனால் கோரமான முக அமைப்பைக் கொண்டவர்களாம். எனவே கடும் தவம் புரிந்து பூனியான்களிடமிருந்து சில வரங்களைப் பெற்று அழகான ஆணாக உருவம் கொண்டார்களாம். ஆனால் சில செய்யக்கூடாத விஷங்களை செய்ததால் சாபத்துக்கு ஆளாகி கரிய உருவத்தை அடைந்தனராம். சாபவிமோசனம் பெற நாற்பதிலிருந்து தொண்ணூற்று ஒன்பது கன்னிகளுடன் ஏழு நாட்களுக்குள் உறவு கொண்டால் மட்டுமே பழைய படி அழகாக முடியும் என்பது நம்பிக்கை. (இது ஆண் பேயா? ஆணாதிக்கப்பேயா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.)

இதைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் கன்னிப்பெண்கள் ஆண்களின் வியர்வை நாற்றம் கொண்ட உடைகளை இரவில் அணிந்து கொள்வார்களாம். கற்பழிக்க வரும் ஓராங் மிஞ்ஞாக் படுத்திருப்பது ஆண் தான் என எண்ணிப் போய் விடுமாம். அதோடு இந்த ஓராங் மிஞ்ஞாக்கள் பெண்கள் கைலி அணிந்திருந்தால் அவர்களை அண்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. அதோடு ஓராங் மிஞ்ஞாக் வராமல் இருக்க டிரகுலாவுக்கு எதிராகப் பூண்டை தொங்கவிடுவது போல வீட்டில் வாழைப்பூ தோலைக் கட்டி வைத்திருப்பார்கள் எனவும் சில விஷயங்களைக் கேட்டிருக்கிறேன். இதெல்லாம் அறுபதுகளில் மிகவும் விமரிசையாகப் பேசப்பட்ட பேய்க்கதைகள்.

ஜெங்லோட்

novah 05

 

ஜெங்லோட் என்றால் எனக்குத் தெரிந்து பயப்படாதவர்கள் கிடையாது.  சிசுவைத் தாய் வயிற்றிலிந்து எடுத்து ஒரு புட்டிக்குள் வைத்துப் பூஜை செய்து அதை தங்கள் விருப்பங்கள் நிறைவேற பயன்படுத்திக் கொள்வார்கள் போமோக்கள். சிறிய அளவிலான குருதியில் ஊறவைத்துக் காய்ந்து போன உருவம், நீண்ட கூர்மையான பற்கள், குச்சிக் குச்சியான நீண்ட மயிர்களைக் கொண்ட தலை முடி என பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும். உள்ளங்கையளவே இருக்கும் இந்த பிசாசு நீண்ட கூர்மையான நகங்களையும் கொண்டிருக்கும். பொதுவாகத் தலைச்சன் பிள்ளையே இப்படி செய்வதற்குத் தோதானதாக இருக்கும் என்பது நம்பிக்கை. மலேசியாவில் பல இடங்களில் இது போன்ற உருவங்களைப் புட்டிகளில் கைப்பற்றி உள்ளனர்.

ஜெங்லோட்களில் ஆண் பெண் என இருவகை உண்டு. பெண் போமோவால் மட்டுமே ஆண் ஜெங்லோட்டையும் ஆண் போமோவால் மட்டுமே பெண் ஜெங்லோட்டையும் பிடிக்க முடியுமாம். பார்ப்பதற்குச் சின்ன சைஸ் மம்மியைப் போல தோற்றமளிக்கும் ஜெங்லோட் என்பது காடுகளில் திரியும் அமானுஷ்ய சக்தியுடைய ஒரு வகை மிருகம் எனவும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஜெங்லோட்டை சிலர் தலைமுறை தலைமுறையாக உணவளித்துப் பாதுக்காப்பார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இந்த ஜெங்லோட்கள் வீட்டில் இருந்தால் நிறைய வரவுகள் இருக்கும் எனவும் வீட்டிற்கு வரக்கூடிய தீயவற்றை இந்த ஜெங்லோட்கள் தூர தள்ளும் எனவும் சொல்லப்படுவது உண்டு. நிறைய போமோக்கள் அதிர்ஷ்ட எண்களைப் பெறுவதற்காகவே ஜெங்லோட்களைப் பதப்படுத்தி வைத்திருக்கின்றனர். அதோடு ஒவ்வொரு முறையும் அது நம் கட்டளைக்கு ஏற்ப நடக்கும்போது அதற்கான பிரதி பலனை அது கேட்டு வாங்கிக் கொள்ளும். அந்தப் பிரதிபலன் கண்டிப்பாக இரத்தபலி சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.

உதாரணமாக அதிர்ஷ்ட எண் கேட்டு ஒருவர் போமோவைப் பார்க்க போகிறார் என்றே வைத்துக் கொள்வோமே. மந்திரவாதி எண்ணைக் கொடுத்து விட்டார். அதன் பின், ஒரு கருப்பு சேவலோ அல்லது கருப்பு ஆடோ உயிர்ப்பலி வேண்டும் எனக் கேட்பார். அப்படி எண்ணை எடுத்தவர் மறந்து விட்டலோ அல்லது செய்யவில்லை என்றாலோ, அவர் வீட்டில் ஒரு சாவு நடக்கும். அதுவும் எதிர்பாராமல் குருதி ஒழுகிய சாவு தான் நடக்கும்.  எனவேதான் மலாய்க்காரர்கள் இவற்றையெல்லாம் ஷிரிக் (Syirik) என்றும் குறாஃபாட் (Kurafat) என்றும் சொல்லுவார்கள். அதாவது மத நம்பிக்கைக்குப் புறம்பானது, அபாயகரமானது என்று அர்த்தம்.

ஹன்ந்து ராயா

novah 06

 

ஹன்ந்து ராயா என்பது நமக்குத் தெரிந்தவர்கள் உருவில் வந்து நம்மை அழைக்குமாம். அச்சு அசல் அப்படியே மனிதனைப் போலவே இருக்குமாம். ஆனால் பேசவே பேசாதாம். இதற்கு எஜமானர் இருக்கும். ஒருவர் மேல் பகை என்றால் அவர்கள் மேல் இதை ஏவி விட்டு காரியத்தை சாதித்துக் கொள்வார்களாம். இதுவும் தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்படும். அப்படி வாரிசு இல்லையென்றால் அதன் எஜமானர் வயதாகியும் அமைதியாக இறப்பதற்கு முடியாதாம். உயிருள்ள பிண்டம் போல் ஆகிவிடுவார்.  ஹன்ந்து ராயா இன்னொரு விஷயமும் செய்யும். அதாவது தன்னை வளர்க்கும் தன் எஜமானன் போலவே பல இடங்களுக்குச் சென்று வரும். பல இடங்களில் ஒருவர் ஒரே நேரத்தில் இருக்கிறார் என்றால் அவர் கண்டிப்பாக இப்படி ஒரு ஹன்ந்து ராயாவை வளர்க்க வேண்டும். பேய் ஜின் வளர்ப்பதே தப்பு தான். எனவே பெரும்பாலும் தவறான காரண காரியங்கள் செய்வதற்கே ஹன்ந்து ராயா பயன்படுகிறது. உதாரணத்துக்கு ஒருத்தருக்குச் சின்ன வீடு இருக்கிறது என வைத்து கொள்வோமே. அவர் சின்ன வீட்டில் இருக்கும் போது அவர் வளர்க்கும் ஹன்ந்து ராயா பெரிய வீட்டில் மனைவியோடு இருக்கும். மனைவிக்கு சந்தேகமே வராமல் இந்த ஹன்ந்து ராயா பார்த்துக்கொள்ளும் (அவ்வளவு எஜமான விசுவாசம்!). இதற்காகவே நிறைய பணக்கார முதலாளிகள் ஹன்ந்து ராயாவை வளர்த்து வந்திருக்கிறார்கள்.

ராயா என்றால் பெரியது என அர்த்தம். பல காரியங்கள் செய்வதற்குப் பயன்படுவதால் இதை ஹன்ந்து ராயா என அழைக்கிறார்கள். நவீன மருத்துவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பிறந்த குழந்தைகள் இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்த உடனேயே சில நாட்களுக்குள் இறந்து விட்டாலோ அதற்கு முழுமுதற்காரணமாக இந்த ஹன்ந்து ராயாவை தான் சுட்டிக்காட்டுவார்கள். இரவானதும் வீட்டின் கதவுகளை மூன்று முறை தட்டித் தட்டி பார்க்கும் இந்த ஹன்ந்து ராயா. அதாவது முதலில் மூன்று முறை ‘டொக் டொக் டொக்’ என தட்டும். பிறகு சத்தமே இருக்காது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மீட்டும் இரண்டு தடவை அதே நேர இடைவெளியோடு அப்படியே தட்டும். ஏமாந்துபோய் கதவைத் திறந்து விட்டால் நாம் நம்மை மறந்து விடுவோம். என்ன நடந்தது என்றே தெரியாது. பின்னர் நம்மோடு அந்த ஹன்ந்து ராயாவும் ஒரு பகுதியாகிவிடும்.

ஹன்ந்து ராயாவுக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியம். அதுவும் நேரா நேரத்துக்கு சரியாக சாப்பாடு கொடுத்து விட வேண்டும். அதன் சாப்பாடு பூலூட் கூனிங் எனப்படும் மஞ்சள் நிற கவுனி இனிப்பு சாதம், முட்டை, பொரித்த கோழி, கொஞ்சம் அவல் அதோடு ஒரு பொம்மை. முடிந்தால் பூலூட்டையே பொம்மை போல செய்து வைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்த சாப்பாட்டைப் போட வேண்டும். இல்லையென்றால் இந்தப் பேயால் பல அவதிகள் நேரிடும். இதற்காகவே யாரெல்லாம் இதை வளர்க்கிறார்களோ அவர்கள் மிகவும் கவனமாகச் செயல்படுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஜாங்ஙான் பண்டாங் பெலாக்காங்’ (Jangan Pandang Belakang) என்று ஒரு மலாய் திரைப்படம் வந்திருந்தது. அந்தத் திரைப்படத்தில் ஹன்ந்து ராயா பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.

சரி இவ்வளவு நேரம் கெட்ட பேய்களைப் பற்றி பார்த்தோம். இப்போது நல்ல பேய்களைப் பற்றி பார்ப்போம். ஆரம்பத்தில் நல்ல பேய்கள் என நேனேக் கெபாயான், பூனியான் மற்றும் பாரி-பாரி என சொல்லியிருந்தேன் அல்லவா. அதில் இப்போது பூனியான் பற்றி சற்று ஆழமாகப் பார்க்கலாம்.

பூனியான்

novah 07

இவர்கள் மனிதர்கள் அல்லர். மிருகமும் அல்லர். மனிதர்கள் மண்ணிலிருந்து உருவாக்கபட்டவர்கள். மிருகமும் அப்படியே. ஆனால் பூனியான்கள்ஒளியிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள். இவர்கள் எப்படி உருவானார்கள் என்பதைப் பற்றி மூன்று கருத்துகள் உள்ளன. முதலாவது கருத்து: மனிதன், தேவத்தூதர்கள் மற்றும் பேய் ஜின் வகைகளில் கடவுளால் உருவாக்கப்பட்ட கெடுதல் செய்யாத ஜின் வம்சாவளிகள். இரண்டாம் கருத்து: பூனியான்கள் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் ஏற்பட்ட உறவினால் பிறந்தவர்கள். மூன்றாவது கருத்து: கடவுளே இவர்களை ஒளிமிக்க ஜின்களாகப் படைத்திருக்கிறார். ஆக கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு ஒளிமிக்கவர்கள் இந்த பூனியான்கள். மிகுந்த அழகு படைத்தவர்களான இவர்களில் இன்னும் மூன்று ரகம் உள்ளன. பறக்ககூடியவர்கள், கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தியுடையவர்கள் மற்றும் கால்கள் தரைமேல் படாமல் நடக்கக்கூடியவர்கள். பறக்கக்கூடியவர்களைப் பாரி-பாரி (தேவதைகள்) என்றும் கூடுவிட்டுக் கூடு பாய்பவர்களை ஓராங் ஹாலிமுனான் என்றும் கால் தரை மேல் படாமல் நடப்பவர்களை ஓராங் பூனியான் கயாங்ஙான் என்றும் அழைப்பார்கள். இவர்கள் உண்பதில்லை, உறங்குவதில்லை, ஓய்வுவெடுப்பதுமில்லை. ஆனால் பூனியான்களில் நம்மைப் போல ஆண் பெண் பேதமுண்டு. நம்மைப் போலவே திருமணம் குடும்பம் பிள்ளை குட்டி உற்றார் உறவினரோடு ஊராக வாழ்பவர்கள். இவர்கள் எல்லாருமே இஸ்லாத்தைத் சேர்ந்தவர்கள்.

இவர்கள் எல்லாருமே பனிமூட்டம் போல வெள்ளையாக வெளிச்சமாக மாசற்ற முகதெளிவோடு தெய்வ பக்தியுடையவர்களாக இருப்பார்கள். கயாங்ஙான் என சொல்லப்படும் அலாம் சாரா என்பது தான் இவர்கள் இருக்கும் இடம். மேகத்துக்கு அப்பால் வானத்துக்குக் கீழே பூமிக்கு மேலே என சொல்லப்படும் மிக மிக வெளிச்சமான இடத்தில்தான் அவர்கள் இருப்பார்கள். அந்த வெளிச்சமே அவர்களால் தான் உண்டாகிறது. அதோடு மனிதன் வாசம் செய்யாத மாசு படாத இடங்கள் இயற்கை அழகு ஒளிர்ந்து காணப்படும் இடங்களும் இவர்களுடையது தான். இவர்கள் எல்லாருமே வெள்ளை நிறத்திலான உடைகளை மட்டுமே அணிவார்கள். இவர்களின் தலைவன் மட்டுமே தங்க ஜரிகையுடைய கருப்பு உடை அணிவார்.

இவர்களில் பெண்கள் ரொம்பவும் அழகு. இந்தப் பூனியான் பெண்களுக்கு மனித ஆண்கள் மேல் ஈர்ப்பு அதிகம். அதுவும் சாதாரண திருமணமான ஆண்கள் இல்லை. கன்னித்தன்மையுடைய ஆண்கள் மட்டுமே இவர்களின் தேர்வாகிறது. இங்கே சரவாக்கில் நிறைய மலைகள் உண்டு அல்லவா. இங்கே இப்படிக் காணாமல் போன கன்னி ஆண்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அப்படிக் காணாமல் போனவர்களின் உடலோ உடையோ எதுவுமே அகப்படாது. காணாமல் போன ஆண்கள் அவர்களைக் கவர்ந்த பூனியான் பெண்களைக் கல்யாணம் செய்து பூலோகம் பற்றிய நினைவே இல்லாமல் இருப்பார்கள். பூலோகம் பற்றி நினைவே வராதவாறு பூனியான் குடும்பத்தார்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள். அதோடு பூனியான் ஊரே மிகவும் மகிழ்ச்சி தரும். கோபம் சண்டை சச்சரவு எதுவுமின்றி அவ்வளவு அமைதியாக இருக்கும். அப்போது எப்படி இங்கே திரும்ப மனம் வரும்? நியாயம் தானே. ஆண்கள் மட்டுமின்றி சில நேரங்களில் பெண்களும் காணாமல் போவதுண்டு. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் பெண்கள் காணாமல் போனால் கிடைத்து விடுவார்கள். ஆனால் காலத்துக்கும் திருமணம் நடக்காது. இங்கே தேர்ந்தெடுத்த பெண்கள் அப்படி இருந்ததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தன் பூனியான் கணவன் தன்னோடு இருப்பதாக, தன்னோடு உறவு கொள்வதாக, உறவின் போது ஏற்படும் சில காயங்களைக் காட்டியும் பின்னர் தான் பூனியான் குழந்தையைக் கருவுற்றிருப்பதாக சில பெண்கள் சொல்லி இப்படி எவ்வளவோ நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பூனியான்கள் ஆண்களை மட்டும் கவர்ந்து போவதில்லை. மாதவிடாய் ஆகாமல் இருக்கும் சிறுமிகளையும் பிறந்த குழந்தைகளையும் தங்கள் உலகுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில் சிறுவர்களும் குழந்தைகளும் இன்னும் மாசு இல்லாத ஆத்மாக்கள். முன்பு சொன்னது போல காடுகளில் காணாமல் போகும் மனிதர்கள் மீட்புப் படையினர் தேடும் போது அங்கேயே தான் இருப்பார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். கடந்த ஆண்டு இருபத்தோரு வயது இளைஞன் சிங்காய் மலையடிவாரத்தில் காணாமல் போய் பரபரப்பாகப் பேசப்பட்டான். அவன் கிடைத்தது ஏழாவது நாளில். அதாவது காணாமல் போன அன்றே கிடைத்து விட வேண்டும். இல்லையென்றால் மூன்றாவது நாளில், இல்லையென்றால் ஐந்தாம் நாள் அதுவும் இல்லையா ஏழாவது நாள். அப்படி ஏழாம் நாளில் கிடைக்கவில்லையென்றால் எப்போதுமே கிடைக்க மாட்டார்கள். என்னடா நடந்தது என அந்தப் பையனிடம் கேட்க. அவன் ஒரு பெண் தான் என்னை இங்கு கூட்டி வந்து விட்டாள் என சொல்லி இருக்கிறான்.

அதோடு பூனியான் உலகத்தில் நம் உலகம் போல நேரம் கிடையாது. இரவும் இல்லை பகலும் இல்லை. வயதும் ஆகாது. எப்போதோ எங்கேயோ பூனியான்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தவர்கள் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் குடும்பத்தினர் ஞாபகம் வந்ததும் பூலோகத்துக்குத் திரும்பினால், அவர்களின் குடும்பத்தினர் வயதானவர்களாய் சிலர் இறந்தவர்களாய் இருப்பார்கள். ஆனால் இவர்கள் காணாமல் போனபோது எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இருப்பார்கள்.

பூனியான் வாசம் செய்யும் இடம் நீர்வீழ்ச்சிகள் பெரிய பாறைகளில் பட்டுத் தெறித்தபடி பல வண்ண மலர்கள் பூத்துக் குலுக்கும். நறுமணம் வீசும். பல வண்ண பூச்சிகளும் பறவைகளும் இனிமையான ஒலியெழுப்பிய படி ஒருவித பனிமூட்டம் ததும்பி கொண்டே இருக்கும். பார்ப்பதற்கே சொர்க்கம் போல ஆனந்தமாக இருக்கும். அவர்களின் குரல் மனதுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாரா ஒரு சந்தர்ப்பத்தில் அப்படிப்பட்ட ஒரு பெண்குரலை சந்துபோங் மலையுச்சியில் எனக்குக் கேட்க ஒரு வாய்ப்புக் கிடைத்து. மெய்சிலிர்க்குமப்படி ஒரு குரல்.  பூனியான்களை காணவேண்டும் என்றால் மட்ட மத்தியானத்தில் குறிப்பிட்ட ஒரு குர் ஆன் வாக்கியத்தை ஜெபித்த படி குனிந்து இரு கால்களை அகட்டி தலை கீழாகக் கால்களுக்கு நடுவில் பார்த்தால் பூனியான்களின் கால்கள் தரையில் படாமல் பனித்துளிகள் போல தவழ்ந்து வருவதைப் பார்க்கலாம். (தயவு செய்து யாரும் இந்த விஷ பரிட்சையில் இறங்க வேண்டாம்).

மற்றப்படி பூனியான்கள் நல்லவர்கள். மனிதனைப் போலல்லாமல் இயற்கையை நேசித்து இயற்கையாகவே வாழக்கூடியவர்கள். மிகுந்த சக்தி படைத்தவர்கள். அதோடு இவர்களிடமிருந்து சக்தியைப் பெற இன்றும் மலையுச்சிகளிலும் குகைகளிலும் சிலர் நீண்ட தவத்தை மேற்கொள்கிறார்கள்.

இப்படியாகப் பேய்கள் பற்றிய கதைகள் கடவுள் பற்றிய கதைகள் தொடங்கிய காலத்திலேயே தோன்றிவிட்டன. வெள்ளையென்றால் கருப்பும் ஒளி என்றால் இருளும் உருவாகிக்கொண்டிருப்பதுதான் இயல்பு. பேய் குறித்த ஏராளமான கட்டுரைகள், ஆய்வுகள் என தொடர்ந்துகொண்டே உள்ளன. அறிவியல் ரீதியாக இவற்றுக்கு நிரூபனம் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் மக்கள் பேய்களை நம்புகிறார்கள். பேய்கள் இல்லாத வாழ்க்கை சுவாரசியம் அற்றது. அவை நமது இருள் வாழ்வை விழிப்படைய வைக்கின்றன. கடவுளுக்கு நிகராகப் பலரது வயிற்றுப்பாட்டுக்குப் பேய் நம்பிக்கை அளவுக்கு வேறொன்றும் உதவுவதில்லை. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் எது மிகை என ஆராயச்சொல்லி வள்ளுவரே கூறியுள்ளார். அப்படியானால் பேய்களால் கெட்டது நடக்கிறதோ இல்லையோ ஆனால் மனிதர்களுக்கு நன்மைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கின்றன. ஆக, பேய்கள் வாழ்க.

http://vallinam.com.my/version2/?p=6983

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சனா , சந்திரமுகி என்று இருக்கும் என்று பார்த்தால் எல்லாம் மலேசியப் பேய்களாய் இருக்கு........!   👻

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, suvy said:

காஞ்சனா , சந்திரமுகி என்று இருக்கும் என்று பார்த்தால் எல்லாம் மலேசியப் பேய்களாய் இருக்கு........!   👻

காஞ்சனா, சந்திரமுகி எல்லாம் முழியை மட்டும் உருட்டுபவை. பயம் யாருக்கு வரும்?

மலேசியப் பெண்பேய் லங்சுயீர் சுவாரசியமான ஒன்று👻

  • கருத்துக்கள உறவுகள்

, நேற்று பின்னேரம் இந்தக்கதைகள் படித்து அட முஸ்லீம் பேய்களும் இருக்கு இந்த உலகத்தில் என்று நக்கலாய் யோசித்து விட்டு இந்த நடுசாமத்தில் புத்தகம் ஒன்று நாலு பக்கமாவது படிக்காமல் நித்திரை வராது புதுசா கராசினுள்   போய்  தேட உண்மையிலே லைட் சுட அவ்வளவு பேயும் அந்த இருட்டில்  எண்ணெய் சுத்தி நிண்டு கொண்டன டாக்டர் ஆபிரகாம் கோவூர் சொன்னது போல் என் மனது அவ்வளவு பேய்களையும்  உருவாக்கியது.லைட் அணைந்தது கண்டு மனிசி டோச் லைட் உடன் புறு புறத்தபடி வர அனைத்து பேய்களும் துண்டை  கானம் துணியை கானம் என்று ஓடிவிட்டன . 😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.