Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் போர் - உலகப்போர் 2 - பகுதி 8

Featured Replies

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegஇரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான யுத்தம் என்பது ஆகாய கடல் வெளியிலேயே பெரும்பாலும் நடைபெற்றது.  பிரிட்டன் றோயல் விமானப்படைக்கும், Luftwaffe  க்கும் இடையிலான தொழில் நுட்ப போராகவே அது அமைந்தது. Operation Sealion என்ற பெயரில் ஜேர்மனியால் நடத்தபட்ட பிரிட்டனுக்கு எதிரான யுத்த்தில் இருந்து அன்று பிரிட்டனிடம் இருந்த ராடார் தொழில் நுட்பம் பிரிட்டனை காப்பாற்றியது எனலாம். ஜுலை 10, 1940 ல் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கபட்ட யுத்தம் தாக்குதல் திட்டம் வெற்றியளிக்காததால் ஒக்ரோபர் மாதம் ஹிட்லரால் ஒத்திவைக்கபட்டது. ஜேர்மனி ஏறத்தாள 1900 விமானங்களையும் பிரிட்டன் 1700 விமானங்களையும் இந்த யுத்தத்தில் இழந்தன.

ஜுன் 18, 1940 அன்று சேர்ச்சில் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பிரான்ஸ் யுத்தம் முடிந்துவிட்டது. பிரிட்டன் யுத்தம் தொடங்கப்போகிறது.

பிரிட்டனுடன் போரிடுவதற்கான அவசியமே ஏற்படாது என்று ஹிட்லர் நினைத்தார். பிரான்ஸே இல்லை என்னும் போது இனி பிரிட்டன் என்ன செய்யும். தனியாக என்ன செய்ய முடியும். பிரிட்டன் எம்மை தொடர்பு கொள்ளப்போகிறது. இனி எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. தயவு செய்து எங்கள் மீது போர் தொடுக்கவேண்டாம். நீங்கள் காட்டும் இடத்தில் கையெழுத்து போட்டுத்தருகிறோம், என்று பிரிட்டன் கேட்கும் என்றே ஹிட்லர் எதிர்பார்த்தார்.

ஜேர்மனியின் திட்டத்தில் அடுத்து பிரிட்டன் இருந்தது என்றாலும் அதன் மீது போர் தொடுக்கும் விருப்பம் ஹிட்லருக்கு இல்லை. விரிவாக்க திட்டங்கள் தீட்டும்போது இல்லை பிரிட்டனை விட்டுவிடுவோமே என்று பலமுறை அவர் சொல்லியிருக்கிறார். பயம் நிச்சயம் காரணமல்ல. பிரிட்டன் மீது அவருக்கு ஒரு பிரியம் இருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையும் பிரிட்டனின் நாகரீகத்தையும்  தனிப்பட்ட முறையில் ஹிட்லர் நேசித்தார். சேர்ச்சிலை பலமுறை கிண்டலடித்திருக்கிறார். போர் கிரிமினல் என்று சேர்ச்சிலையும் அவர் அமைச்சர்களையும் விமர்சித்திருக்கிறார். கண்டித்திருக்கிறார். ஆனாலும் பிரிட்டன் பிடிக்கும். கோயபல்ஸிடம் பிரிட்டன் பற்றி உயர்வாக பேசியிருக்கிறார்.

பிரிட்டிஷ் மக்களும் போருக்கு தயாராக இல்லை. நமக்குத் தேவை அமைதி. போர் பற்றி யோசிக்க முடியாது. அதுவும் ஹிட்லரோடு போர் என்றால் வேண்டவே வேண்டாம். உட்கார்ந்து பேசி ஒரு ஓர் உடன்படிக்கை செய்துகொள்வோம். அயலுறவுத்துறை அமைச்சர் லோர்ட் ஹாலிபாஃக்ஸின் கருத்தும் இது தான். ஆனால் சேர்ச்சில் மறுத்துவிட்டார். ஹிட்லரோடு சரிக்குச் சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்து போட்டுக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. போர் தான் ஓரே முடிவு என்றால் அதை சந்தித்து விடலாம்.

சேர்ச்சில் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்தார். அமைதி உடன்படிக்கை பற்றி யோசிக்கும் ஒரு பிரிவினரை அப்படியே விட்டால் கிருமி போல் இந்தக் கருத்து பிரிட்டன் முழுவதும் பரவிவிடும். பிரிட்டிஷ் பேரரசு அடிபணியாது என்பதை அவர்களுக்கு உணர்த்தியாகவேண்டும். பிரான்ஸுக்கு நடந்த கதி நமக்கு நேராது என்பதை புரியவைக்கவேண்டும்.

அதுவும் ஹிட்லர் போன்ற இனவெறுப்பு வெறியை கொண்ட ஒரு நபரை தேசபக்தி என்ற பெயரில் மற்றய இனங்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு ஆபத்தான நபரை ஐரோப்பாவின் பெரும் சக்தியாக ஆளுமையாக அங்கீகரிப்பது என்பது எதிர்காலத்தில் விரும்பதகாத பல விளைவுகளை ஏற்படுத்தும்.

ஜுலை 16,1940 அன்று ஹிட்லர் பேர்லினில் போர் அறிவிப்பை வெளியிட்டார். நம் கனவு நனவாகிக் கொண்டே வருகிறது. அதன் நீட்சியாக இப்போது பிரிட்டனுடன் மோதப்போகிறோம். பயப்படவேண்டாம். நீங்கள் நினைக்கும் பிரிட்டன் அல்ல இது. குழப்பத்திலும் அச்சத்திலும் கட்டுண்டு கிடக்கும் நோஞ்சானாக அது மாறிவிட்டது. அடித்து வீழ்த்துவோம் வாருங்கள்.

large.609452304_BattleofBritain1.jpg.d5f32159aa8cc429c7069d0f5f14f8c1.jpg

அட்மிரல் ரீடர் ஹிட்லரிடம் வந்தார். ஃப்யூரர், போர் தொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. ஆனால் இது எம்மாதிரியான போர் என்பதில் நாம் தெளிவடையவேண்டும். நோர்வே யுத்தத்தின் போது நமது கப்பல் படை (Kriegsmarinne) குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளது. நிறைய போர்க்கப்பல்கள் மூழ்கிவிட்டன. ஆனால் பிரிட்டன் ராயல் நேவியிடம் 50 டெஸ்ட்ராயர்கள், 21 க்ருஸர்கள் 8 போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த பின்னணியில் பிரிட்டன் கப்பல்படையை நம்மால் எதிர்கொள்ளமுடியாது.

நிஜத்தில், பிரிட்டன் ராயல் நேவியிடம் அப்போது 21 டெஸ்ராயர்கள் தான் எஞ்சியிருந்தன. டுன்க்ரிக்கில் நடந்த மோதல்களில் பிரிட்டன் பெரும்பாலான டெஸ்ட்ராயர்களை இழந்து விட்டது தான் உண்மை. ஆனால், இது ஜேர்மனிக்கு தெரியாது. ஆனாலும் அட்மிரல் ரீடர் சொன்னது போல் 21 டெஸ்ராயர்கள் என்பதும் கூட ஜேர்மனியோடு ஒப்பிடும் போது அதிகம் தான். ஆகவே, அவரது பயம் நியாயமானது.

large.929082095_BattleofBritain2.jpg.cdf344a8ef85550e831544a63a41e40f.jpgநீர் மார்க்கம் வேண்டாம் என்பதால் ஆகாய மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தது ஜேர்மனி. மீண்டும் Luftwaffe.  நன்றி ஃபயூர்ர் என்று ரீடர் விடைபெற்றுக்கொண்ட பிறகு ஹிட்லர் பிற ஜெனரல்களை அழைத்தார். ரீடர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்றாலும் நாம் கடல் மார்க்கத்தையும் தரை மார்க்கத்தையும் உதாசீனம் செய்யக்கூடாது. விமானப்படையை போல மற்ற பிரிவுகளும் தயார்நிலையில் இருக்கவேண்டும். எபோதும் எதுவும் தேவைப்படலாம்.

Sealion என்று இந்த ஒப்பரேசனுக்கு பெயர் சூட்டப்பட்டது. பிரிட்டனின் தெற்கு கரைப்பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தப்படவேண்டும். செப்ரெம்பர் மத்தியில் தொடங்கலாம்.

இந்த யுத்தத்தில் ஜேர்மனி பயன்படுத்த நினைத்த இரு முக்கிய போர்விமானங்கள் Messerschmitt Bf  மற்றும் 109E Bf 110C,  இரண்டுமே வலிமையானவை. துல்லியமாகத் தாக்கக்கூடியவை. தம்முடைய விமான பலத்தின் மீது ஜேர்மனிக்கு சிறிதளவும் சந்தேகம் இருக்கவில்லை. பிரிட்டனின் Hurricane Mk I ரக விமானங்களை எதிர்கொள்ள இவை நிச்சயம் உதவும். அவர்களுடைய ஹரிக்கேனை விட நம்முடைய Bf 109E பல மடங்கு வேகமானது, செயற்திறன் கொண்டது. என்ன  பெரிய புடலங்காய் ராயல் நேவி?  நம் விமானங்கள் முன்னால் நிற்க முடியுமா அவர்களால்?

Luftwaffe நான்கு முக்கிய விமான ரகங்களைக் கொண்டிருந்தது. Heinkel He 111, Dornier Do 17, Junkers Ju 88, Junkers Ju 87 Stuka.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தாக்குதலுக்கு பயன்படும். டைவிங் தாக்குதல், நேருக்கு நேர் தாக்குதல், விசேஷ தாக்குதல், இன்னபிற. பிரிட்டனின் தெற்கு பகுதியை Luftwaffe முதலில் வீழ்த்தி வெற்றிபெறவேண்டும். இது முடிந்தால், கடல் மற்றும் தரைப்படைகள் தெற்குப் பகுதிக்குள் நுழைந்துவிடும். பிரிட்டனின் விமானப் படைக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தவேண்டும். திக்கற்று திண்டாட வேண்டும் பிரிட்டன்.

போர் தொடங்கப்போகிறது என்று சேர்ச்சில் அறிவித்த அதே நாள், பிரான்ஸில் இருந்து கடைசி போர் விமானங்கள் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தன. பிரிட்டனை பலப்படுத்தவேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கமாக இருந்தது. மேற்குப்பகுதியை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. மேற்கு பகுதியில் இருந்த துறைமுகங்கள், தொழில் நகரங்கள், பிறகு மேற்கு எல்லை.

ஜுலை 10 ம் திகதி ஜேர்மனி போரை ஆரம்பித்தது.  ஸ்ருகா டைவ் விமானங்கள் பிரிட்டனின் ஆங்கிலக்கால்வாயில் தாக்குதலை ஆரம்பித்தது. பறவைகள் போல பறந்து வந்து குண்டுகள் வீசின. எண்ணிக்கையில் ஜேர்மனின் விமானங்கள் பிரிட்டனை விட அதிகமாக இருந்ததால், ஜேர்மனி அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருந்தது. பிரிட்டன் நடத்திய எதிர்த்தாக்குல் ஜேர்மனியை பின்னுக்கு தள்ளவில்லை. இரு தரப்பினரும் தத்தம் போர் விமானங்களை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது.

ஹிட்லரின் உத்தரவு தெளிவானது. பலம் குறைந்த எல்லைப்புறங்களில், துறைமுகங்களில் தொழிற்சாலைகளில் குண்டுகள் தூவலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் லண்டன் போன்ற நகரங்களை தாக்கக்கூடாது. ஓகஸ்ட் தொடங்கி பல்வேறு முக்கிய துறைமுகங்கள் தாக்கப்பட்டாலும் நகர அமைதியை கெடுக்காதவாறு பார்த்துக்கொண்டது விமானப்படை. ஓகஸ்ட் 23 இரவு ஏதோ கவனப்பிசகு ஏற்பட்டுவிட்டது. தவறிப்போய் லண்டன் புறநகர் பகுதியில் (ஹேரோ)  குண்டுகள் வீசப்பட்டுவிட்டன. இதே தடுமாற்றத்தோடு அபர்தீன், ப்ரிஸ்டாஸ், தெற்கு வேல்ஸ் என்று நகரங்கள்  மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது. விமானத்தளங்களை அழிப்பதற்காக புறப்பட்ட விமானங்கள் போர்ட்ஸ்மவுத்தை இலக்கு என்று நினைத்து குண்டு வீசியதில் 100 பேர் கொல்லபட்டனர். பதிலடி கொடுக்க முடிவு செய்த பிரிட்டன் ஓகஸ்ட் 25 ம் திகதி 81 விமானங்களை பேர்லினுக்கு ஏவிவிட்டது. வர்த்தக மற்றும் தொழில் நகரங்கள் மீதும் தாக்குதல் தொடுப்பதற்காக.

ஜேர்மனி இங்கே ஒரு தவறு செய்தது. அதாவது தோல்வியை நோக்கி ஒரு பிரதான அடியை எடுத்துவைத்தது. ஜேர்மனி பிரிட்டனை குறைத்து மதிப்பிட்டிருந்தது. பிரிட்டனின் புதிய ராடர் சாதனங்கள் பற்றி ஜேர்மனி அறித்திருக்கவில்லை.

பிரிட்டன் எல்லாவற்றையும் விட தன் ராடரை அதிகம் நம்பியது. போருக்கு முன்பு பல நாடுகளும் ராடர் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கி விட்டன என்றாலும் முழுமையாகவும் உருப்படியாகவும் வெற்றிகொண்ட ஒரு நாடு பிரிட்டன். அதிநவீனமாகவும் செயற்திறன் கொண்டதாகவும் இந்த ராடர் அமைந்தது. வான்வழித் தாக்குதல் குறித்த அச்சம் அப்போது ஐரோப்பாவில் எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. போர் விமானங்களைப் பலரும் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு சூழலில், எப்போது தாக்குவார்களோ என்னும் அச்சதில் ராடர் போன்ற கருவிகளின் தேவை அதிமுக்கியமானதாக கருதப்பட்டது.

தெற்குப் பகுதி முழுவதும் வரிசையாக ராடர் நிலையங்கள் அமைக்கபட்டன. இது செயின் ஹோம் என்று அழைக்கபட்டது. பிரிட்டிஷ் ராணுவத்துடன் இணக்கமான முறையில் இது செயற்பட்டது. எதிரிகளின் விமான ரீங்காரங்களை செவிமடுப்பது கிடைக்கும் சிக்னல்களைக் கொண்டு அது எந்த வகையான போர்விமானம் என்பதைக் கண்டறிந்து சொல்லுவது. இது தான் ராடர் நிலையத்தின் பணி. இலக்கை நிர்ணயித்து குண்டுகள் ஏவப்படும் போது சில ரேடியோ கதிர்கள் வெளிப்படும். இந்தக் கதிர்களை மோப்பம் பிடித்து தடுத்து விட்டால் முயற்சி வெற்றி பெறாது. அதற்கு ராடரின் துணை தேவைப்பட்டது.

போரின் ஒரு கட்டத்தில் ராடர் இதை சாதித்தது. ஜேர்மன் ரேடியோ கதிர்களை இனம் கண்ட ராடர் கருவி அந்த கதிர்களை கலைத்துப் போட்டது. சுதாகரித்து கொண்ட ஜேர்மனி பிரிட்டிஷ் ராடரை செயலிழக்கச் செய்யும் கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது. பிரிட்டன் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஜேர்மனிய ஜாமிங் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும்படியான நவீன சாதனங்களைக் கண்டறிந்து பயன்படுத்த ஆரம்பித்தது. அந்த வகையில் ஜேர்மனிக்கும் பிரிட்டனுக்கும் நடைபெற்ற ஆகாய மோதலை தொழில்நுட்ப போர் என்று அழைக்கமுடியும்.

ஜேர்மனிய தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து கேட்பதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளையும் பிரிட்டன் வளர்த்தெடுத்தது. Enigma Enigma Cipher machines என்னும் கருவிகள் பிரிட்டனில் புழங்க ஆரம்பித்தன. பொதுவாக, ராணுவ தகவல்கள் நேரடியாக அல்லாமல் சில குறிப்பிட்ட சமிக்ஞைகள் மூலமாக பரிமாறிக் கொள்ளப்படும். அனுப்புவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் மட்டுமே அதன் மொழி புரியும். எதிரிகள் இடைமறித்து கேட்கலாம் என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாட்டை ராணுவங்கள் செய்துகொண்டிருந்தன. ஒவ்வொரு ராணுவமும் ஒவ்வொரு விதமான கோடிங் டிகோடிங் முறையை பயன்படுத்தியது.

ஜேர்மானியர்களின் கோடிங்கை உடைத்துப் பார்க்க விரும்பியது பிரிட்டன். தகவல்களை எப்படியெல்லாம் திருகலாக்க முடியும்? மொழிகளை பயன்படுத்தி, இந்த மூன்றையும் உடைக்க, மொழியியல் வல்லுனர்கள், கணிதவியலாளர்கள், செஸ் விளையாட்டு வீரர்கள் மூவரையும் திரட்டி ஆய்வுப்பணி மேற்கொள்ளச் செய்தது பிரிட்டன். அவர்களில் ஒருவர் (Alan Turing) ஆலன் டுரிங். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணிதவியலாளர். இவருடைய கண்டுபிடிப்புகள் எலெக்ரோனிக் கம்பியுட்டர் உருவாவதற்கு உதவின.

இந்த ரகசிய ஆய்வு நிறுவனத்திற்கு அல்ற்ரா (Ultra) என்று பெயர். அல்ராவின் வெற்றியால் ஜேர்மனியின் போர் திட்டம், வியூகம், நடமாட்டம், ஆயுதங்கள் பற்றிய பல்வேறு முக்கிய துப்புகள் பிரிட்டனுக்கு கிடைத்தன. Luftwaffe ரேடியோ சிக்னல்களை மே 1940 தொடங்கி தொடர்ச்சியாக இடைமறித்ததில், ஜேர்மனியின் விமான பலம் பற்றியும் அவர்களிடம் இருந்த விமானங்களின் தன்மை குறித்தும் பிரிட்டன் அறிந்து கொண்டது. அல்ற்ராவின் செயல்பாடுகள் ரகசியமானவை. அவர்கள் கண்டறிந்து சொல்லும் தகவல்கள் குறிப்பிட்ட மேல்மட்ட நபர்களுக்கு மட்டுமே செல்லும். அந்தக் குறிப்புகளின் துணைகொண்டு போர் வியூகங்கள் மாற்றியமைக்கபட்டன. ராணுவத்திலேயே பலருக்கு அல்ற்ரா பற்றி தெரியாது. மேலிடத்தில் இருந்து ஏதோ துப்பு வந்திருக்கிறதாம் என்ற அளவில்தான் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அதென்ன மேலிடம் என்று தோண்டி துருவியபோது, அது வேறொன்றுமில்லை ரகசிய பிரிட்டிஷ் ஏஜென்ட் ஒருவர் இருக்கிறார், அவர்தான் தகவல்கள் தருகிறார் என்று பதிலளிக்கபட்டது.

ஓகஸ்ட் 31 முதல் செப்ரெம்பர் 6 வரை, பிரிட்டன் 151 போர்விமானங்களை இழந்தது. விமானிகளின் பலம் பத்து சதவீதம் குறைந்தது. இந்த ஒரு கணக்கில், ஜேர்மனி கிட்டத்தட்ட வெற்றியை தரிசித்துவிட்டது. பிரிட்டன் வான்படைக்கு இது பலத்த அடி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஜேர்மனி பிரிட்டனின் தள்ளாட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள தவறியது. தவறாக இலக்கை நிர்ணயித்துக்கொண்டது. மிக முக்கியமாக, பிரிட்டனின் ராடர் நிலையங்கள் மீது ஜேர்மனி தாக்குதல் தொடுக்கவில்லை. இது ஜேர்மன் உளவு நிறுவனத்தின் தோல்வி. ஜேர்மனியின் தகவல் பரிமாற்றங்களை பிரிட்டன் ஒட்டுக் கேட்க ஆரம்பித்துவிட்டது என்பதை  புரிந்துகொண்ட மறுகணமே, ராடர் நிலையத்தை  தனது இலக்காக ஜேர்மனி கருதியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை.

மாறாக, அடடா பிரிட்டன் தள்ளாடிவிட்டதே என்னும் குதூகலத்தில் சற்றே முடங்கி போனது. சரி சுலபமாக முடித்து விடலாம் என்று கொஞ்சம் அசிரத்தையோடு போரைத் தொடர்ந்தது. விமானப் படை தளங்களை, நிலையங்களை தாக்குவதை நிறுத்திவிட்டு, திடீரென்று மின் நிலையங்கள், கிடங்குகள் என்று திசைமாறினார்கள்.

இந்த தடுமாற்றம் அல்லது திசை மாற்றம் பிரிட்டனை சுதாகரிக்கச் செய்தது. தன் போர் முறையை மாற்றியது பிரிட்டன். ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி, ஜேர்மன் வான்படையை எதிர்கொண்டார்கள். ஒரே வாரத்தில் 175 ஜேர்மனிய விமானங்கள் வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டன. செப்ரெம்பர் 15 ம் திகதி 56 விமானங்களை இழந்த போது, ஹிட்லருக்கு தெரிந்துவிட்டது. தாக்குதல் திட்டத்தை தள்ளிப்போட்டார். அக்ரோபர் இறுதியில் பிரிட்டன் 1594 ஜேர்மன் விமானங்களை வீழ்த்தியிருந்தது. ஜேர்மன் 788 பிரிட்டிஷ் விமானங்களை தாக்கி அழித்திருந்தது.

ஜேர்மனி வீழ்த்த வீழ்த்த பிரிட்டன் புதிய விமானங்களை தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்தது. அழிக்கும் வேகத்தை விட உற்பத்தி செய்யும் வேகம் அதிகமோ என்னும் அளவுக்கு இழப்புகள் உடனுக்குடன் சரிக்கட்டப்பட்டன. பிரிட்டனின் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம். 1940ல் மட்டும் பிரிட்டன் 15000 விமானங்களை (பல்வேறு ரகங்களில்) உற்பத்தி செய்திருந்தது.

லண்டன் மீதான ஜேர்மனியில் தாக்குதல் விட்டுவிட்டு தொடர்ந்து கொண்டேயிருந்தது. லண்டன், பிர்மிங்ஹாம், ஷெஃபீல்ட், பிரிஸ்டர், சவுதேம்டன், கோவெண்ட்ரி ஆகிய பகுதிகள் தாக்குலுக்கு உள்ளாயின. பாத், காண்டர்பரி, யோர்க் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. ஆக்ஸ்ஃபோர்ட் மீது நகக்கீறல் கூட இல்லை. அங்கு வேண்டாம், பிரிட்டன் நம் வசமானால் ஆக்ஸ்ஃபோர்டை தலைநகரம் ஆக்கிவிடலாம் என்று சொல்லியிருந்தார் ஹிட்லர்,

காமன்ஸ் சபை சேதமடைந்தது. போர் முடிவடையும் வரை லோட்ஸ் சபையில் தான் சந்தித்துக் கொண்டார்கள். கோவெண்ட்ரியில் இருந்த பழங்கால தேவாலயம் இடிந்துபோனது. மக்கள் இந்தப் போரினால் அலைக்கழிக்கபட்டது உண்மை. ஆனால் பிரிட்டன் சீக்கிரத்தில் சுதாகரித்துக்கொண்டது. அமெரிக்காவின் உதவியும் ஒரு காரணம்.

செப்ரெம்பர் 1940 ல் அமெரிக்கா 50 டெஸ்ட்ராயர் போர்க்கப்பலைகளை பிரிட்டனுக்கு அளித்தது. பதிலுக்கு, பிரிட்டிஷ் பகுதிகளில் தளங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டது. இது பிரிட்டனைப் பலப்படுத்தியது. ராணுவ ரீதியில் மட்டுமல்ல, உளவியல் ரீதியிலும். 1940 இறுதியில், பிரிட்டனின் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சற்று மேலே வந்து சேர்ந்தபோது, நிதி உதவியையும் அமெரிக்காவிடம் இருந்து பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1940 ல் ஸ்ரேலிங்கின் மதிப்பு 3.275 டொலர். போருக்கு முன்னால் 4.687 டொலர். சந்தேகமில்லாமல் வீழ்ச்சி. தயக்கமோ கூச்சமோ இல்லாமல் அமெரிக்கவிடம் வாய்விட்டு கேட்டது பிரிட்டன். ஆம், எங்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. எங்களுக்கு பணம் தேவை. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும்போது, பிரிட்டனும் பிரிட்டனைச் சார்ந்த நாடுகளும் 42 பில்லியன் டோலரை அமெரிக்காவிடம் இருந்து பெற்றிருந்தன. கடனாக ராணுவச் செலவுக்கு. உணவுக்கு, எண்ணைக்கு எல்லாவற்றிற்கும் அமெரிக்கப் பணம்.

பிரிட்டன் அமெரிக்காவை சார்ந்திருப்பதை கண்டுகொண்ட ஜேர்மனி இன்னொரு முறை முயற்சி செய்தது. பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்குமான சப்ளை லைனை தாக்கியழித்தால் என்ன? செய்து பார்த்தார்கள் 1940 – 41  ஆண்டுகளில், ஜேர்மனி பிரிட்டனின் போர்கப்பல்களை குறிபார்த்து வீழ்த்தியது. ஆனாலும், வெற்றி பெற முடியவில்லை. பிரிட்டன் அல்ற்லாவின் உதவியால் சுதாகரித்துக்கொண்டது.large.1673378057_BattleofBritain3.jpg.07baca2fa51736ca04adb9e4591d4130.jpg

இந்தப் போரில் இரு தரப்பினரும் தங்கள் சேதம் பற்றிய சரியான விவரங்களை அளிக்கவில்லை. அதிகம் இல்லை கொஞ்சம் தான் என்பது போல் சொல்லிக்கொண்டார்கள். பிரிட்டனும் ஜேர்மனியும் மட்டுமல்ல, போரில் ஈடுபட்ட அனைத்து நாடுகளுக்கும் இது பொது விதியாகவே இருந்தது. இத்தனை போர்விமானங்களை இழந்துவிட்டோம், இத்தனை கப்பல்கள் சேதமடைந்து விட்டன, எங்கள் தற்போதைய பலம் இது தான் என்று எந்தவொரு நாடும் போர்க் காலத்தில் அறிவிக்கவில்லை. முடிந்தவரை, குறைத்தே சொன்னார்கள். எங்கள் பலத்தோடு ஒப்பிடுகையில் சேதத்தின் அளவு குறைவு தான் என்றும் சமாளித்துக்கொண்டார்கள்.

 

(தொடரும்)

நூல் இரண்டாம் உலகப்போர்

எழுதியவர் மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்   மே 2009

 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.